சமூகம்

சம வேலைக்கு சம ஊதியம்: இடைநிலை ஆசிரியர்களின் அறப்போராட்டம்

Cover

ஆசிரியர்கள் தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறார்கள்! ஆசிரியை ஒருவருக்குக் கை உடைந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது. 19 நாட்களாகக் குடும்பத்தைப் பிரிந்து, அழுக்கு ஆடையுடன் நாறிக்கொண்டிருக்கிறது ஆசிரிய இனம். அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் தலைநகர் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரையாண்டு விடுமுறை முடிந்து 9 நாட்கள் ஆகியும் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டம் தொடர்கிறது. அப்படி அவர்கள் எதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களுடைய ஒற்றைக் கோரிக்கை என்ன? அவர்கள் கேட்பது “சம வேலைக்கு சம ஊதியம்” வேண்டும் என்பதே! ஒரே வேலைக்கு ஒரே ஊதியம்தான் இருக்க வேண்டும். அப்படி ஒரு கோரிக்கை வைக்கிறார்கள் என்றால் “ஊதியத்தில் முரண்பாடு” இருக்கிறது என்பது புரிகிறது.

ஊதியக் கட்டமைப்பு மற்றும் அடிப்படை ஊதியம்:

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியம் என்பது அரசு நிர்ணயிக்கும் ஊதிய விகிதத்தின்படி வழங்கப்படும் ஊதியத்தின் முக்கியப் பகுதியாகும். இது தர ஊதியம் (Grade Pay) மற்றும் அடிப்படை ஊதியம் (Basic Pay) எனப் பிரிக்கப்படுகிறது. இதில் தர ஊதியம் என்பதில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை அடங்கும். மேலும் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) போன்றவையும் அவற்றில் சேர்க்கப்பட்டு மொத்தச் சம்பளம் கணக்கிடப்படுகிறது.

ஆனால் அடிப்படை ஊதியம் என்பது ஆசிரியர்களின் பதவி மற்றும் தகுதிக்கேற்ப அரசு வழங்கும் சம்பளத்தின் அடித்தளமாகும். தர ஊதியம், படிகள் (DA, HRA) போன்றவை இவற்றோடு சேர்த்துதான் மொத்தமாகக் கணக்கிடப்படும். அடிப்படை ஊதியத்தைக் கொண்டுதான் மற்றவை கணக்கிடப்பட்டு மொத்தச் சம்பளம் (Gross Salary) வழங்கப்படும்.

ஊதிய முரண்பாட்டின் பின்னணி:

அடிப்படை ஊதியத்தில் ஏற்படும் மாற்றம் மொத்த ஊதியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால், அரசுப் பணியில் நியமனமாகும் தேதியைப் பொறுத்து ஒரே பணியில் இருப்பவர்களுக்குக் கூட அடிப்படை ஊதியத்தில் வேறுபாடு வரும். அவை மொத்த ஊதியத்திலும், ஓய்வூதியத்திலும் முரண்பாட்டை ஏற்படுத்தும். இது “ஊதிய முரண்பாடு” எனச் சொல்லப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் ஆண்டு வாரியாக:

1986 – ரூ. 1200
1996 – ரூ. 4500
2006 – ரூ. 8370
2009 – ரூ. 5200

ஊதியம் என்பது வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க உயர வேண்டும்; அல்லது அதே நிலையிலாவது இருந்திட வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட தொகையிலிருந்து குறைவது நியாயமானதா? முன்பை விட விலைவாசி, அத்தியாவசியப் பொருட்களின் விலை கூடியுள்ளதா? குறைந்துள்ளதா? அப்படி இருக்கையில் ஊதியம் உயர்வது சரியா? குறைவது சரியா? எந்த அரசுத் துறையிலும், பணியிலும் இத்தகைய ஊதிய முரண்பாடு கிடையாது. ஆனால், ஆசிரியர் பணியில் ஏற்கனவே குறைவான ஊதியம் பெறக்கூடிய கடைநிலை ஊழியர்களான இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தைக் குறைப்பது எப்படி நியாயமாகும்? ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மற்றும் படிகள் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி மாற்றப்பட்டது. அந்தத் தேதிக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 8370. அதே தேதிக்குப் பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 5200. இதன் மூலம் 2009-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் அமர்த்தப்பட்ட 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ரூ. 25,000 வரை தங்களுடைய மாத ஊதியத்தில் இழக்கின்றனர்.

நீளும் போராட்டமும் புறக்கணிக்கப்படும் கோரிக்கைகளும்

தங்களுடைய ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பதற்காக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 16 வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகக் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு போன்ற தொடர் விடுமுறை நாட்களையே போராட்டத்திற்குத் தேர்ந்தெடுத்துப் போராடி வருகிறார்கள். பள்ளி புறக்கணிப்பு, காலவரையற்ற உண்ணாவிரதம் என ஒவ்வொரு வருடமும் போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதேபோல் கடந்த ஆண்டு (2024/2025 காலகட்டம்) ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் போராட்டங்கள் நடைபெற்ற பொழுது, “இதற்காகக் குழு அமைத்து விரைவில் தீர்வு வழங்கப்படும்” என்ற வாக்குறுதியை நம்பி போராட்டம் முடிவுக்கு வந்தது. நம்புவதும், ஏமாறுவதும் தொடர்கதையாகிப் போனதால் இம்முறை போராட்டம் தீவிரமானது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை (DPI) வளாகம் முன்பாகத் தொடங்கிய போராட்டம் சென்னையின் பல்வேறு இடங்களில் மிகத் தீவிரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதியும் தற்போதைய நிலையும்

இந்த ஊதிய முரணைச் சரி செய்யக் கோரி 2018-ஆம் ஆண்டு போராட்டம் நடந்தது. அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் அவர்கள் போராட்டக் களத்திற்கு நேரடியாகச் சென்று இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையை அளித்து “தேர்தல் வாக்குறுதி எண் 311”-இல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

“ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது” என்பதைப் போல, எதிர்க்கட்சியாக இருந்தபோது போராட்டத்திற்கு நேரடியாகச் சென்று கோரிக்கையைக் கேட்டறிந்த முதல்வர், அவருடைய ஆட்சிக்காலமான இந்த நான்கரை வருடப் போராட்டத்தில் ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்லை என்பது பேரதிர்ச்சியாக உள்ளது. பார்க்க முடியாவிட்டாலும் ஆசிரியர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலும், கண்டும் காணாமல் இருப்பதும் தீர்வாகுமா?

கடந்த நாட்களில் ஆசிரியர்களின் நிலையைப் பார்க்கும் பொழுது நம் மாநிலம் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” போல் தெரியவில்லை. அறப்பணி செய்யும் ஆசிரியர்களுக்கே தமிழகத்தில் இந்த நிலைமையா? எனத் தோன்றும் அளவிற்கு அரசு நடந்துகொள்கிறது. அதிலும் காவலர்கள் பெண் ஆசிரியர்களைத் துன்புறுத்தும் காணொளிகளைப் பார்க்கும் பொழுது அரசின் மீது நம்பிக்கையற்றுப் போகிறது.

இரு நாட்களுக்கு முன்பு மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் அவர்கள் கூறுகிறார், அனைவரும் பள்ளிக்குத் திரும்புங்கள்; பள்ளி முடிந்தவுடன் மாலை 5 மணி வரை அவரவர் பள்ளிக்கூடத்திலேயே போராட்டம் செய்யுங்கள் என்று. தலைநகரில் பத்தாயிரம் ஆசிரியர்கள், 19 நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கும்போதே கண்டுகொள்ளாதவர்கள், வகுப்பிற்குள் மாலை 4 அல்லது 5 மணிக்கு மேல் போராடினால் கண்டுகொள்ளப் போகிறார்களா?

ஆசிரியர்கள் கேட்டது தீர்வு, கிடைப்பது தண்டனை

16 ஆண்டு காலமாக ஒரு போராட்டம் நடக்கிறது என்றால் அதில் இருக்கக்கூடிய நன்மை தீமைகளை ஆராய்ந்து அதற்கான சரியான தீர்வை வழங்க வேண்டியது நல்ல தலைமைப் பண்புக்கு அழகு. ஆனால் பிரச்சனைக்குத் தீர்வு காண முயலாமல்:

  • ஆசிரியர்களைத் துன்புறுத்திக் கைது செய்வது
  • பேருந்தில் ஏற்றிக்கொண்டு மாவட்டம் விட்டு மாவட்டம் தெரியாத இடத்தில் இறக்கி விடுவது
  • போராட்டத் தலைவரைக் கைது செய்து இரண்டு நாட்களுக்கு மேலாகியும் மறைத்து வைத்திருப்பது
  • தினசரி ஊதியத்தைப் பிடித்தம் செய்வது

போன்றவை தீர்வாகுமா?

“கற்பி! ஒன்றுசேர்! புரட்சி செய்!” என்ற புரட்சியாளர் பி. ஆர். அம்பேத்கரின் வரிகளை ஆசிரியர் இனமே மறந்து விட்டது போல் தெரிகிறது இந்தப் போராட்டத்தைப் பார்க்கும் பொழுது! மனித இனம் இன்று அடைந்துள்ள அத்தனை வளர்ச்சியும் ஒடுக்குமுறைக்காகவும், சுரண்டலுக்கு எதிராகவும், தங்களுடைய உரிமைக்காகவும் எழுந்த புரட்சியின் விளைவே! தன்னினம் சார்ந்த ஒருவன் போராடிக் கொண்டிருக்கையில் மற்றவர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எத்தகைய போக்கு?

“மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?” என்ற பாரதியின் வரிகளை ஆசிரியர் இனமே நினைவூட்டிக்கொள்ளுங்கள். 19 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கையில் பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் எல்லாம் ஆதரவு கூடத் தெரிவிக்காமல் இருப்பது சரியா? தன் தட்டு நிறைந்தால் போதும் என்று ஒதுங்கி இருந்தால், நாளை நம் தட்டில் இருக்கும் உணவும் பறிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சங்கங்கள் என்பது தொழிலாளர்களுக்கு ஏதேனும் இடர்கள், பிரச்சனைகள் எழும் பொழுது அதனைச் சரி செய்வதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், ஜாக்டோ ஜியோ போன்ற பல சங்கங்கள் இருந்தும் சக ஆசிரியர்கள் படும் துயரங்களைக் கண்டும் காணாமல் இருப்பது, அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்காமல் இருப்பது தீர்வை நோக்கி நகர்த்தாது.

– தீபா ராஜ்மோகன்

1 Comment

  • சம வேலைக்கு சம ஊதியம் கேட்டுப் போராடும் ஆசிரியர்களின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்.

Comments are closed.