வானிலை அறிவியல் துறையில் பெரும் மாற்றத்திற்குக் காரணமானவர் விஞ்ஞானி அன்னா மணி, 1918 ஆம் ஆண்டு முதல் 2001 வரை வாழ்ந்து மறைந்தவர். நாளடைவில் அன்னா மணியின் பங்களிப்புகள் மறைக்கப்பட்டாலும், அவரது ஆய்வுப்பணிகள் எவ்வாறு இந்தியாவிற்குப் பயனுள்ளதாக இருந்தது என்பதை ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான ஆஷா கோபிநாதன் அவர்கள் பத்திரிகையாளர் நந்திதா ஜெயராஜ் அவர்களுக்கு வழங்கிய இந்த நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார்.
ஆஷா கோபிநாதன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர். இந்தியா மற்றும் அமெரிக்காவில் பரிசோதனைமுறை மற்றும் கணக்கீட்டு முறை சார்ந்த நரம்பியல் துறையில் (EXPERIMENTAL AND COMPUTATIONAL NEUROSCIENCE) நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். மேலும் அவரது அறிவியல் ஆய்வுப்பணிகளுடன், பாலினப் பாகுபாடு சார்ந்த பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தியுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறையிலும் அறிவியல் வரலாற்றை அறிந்துகொள்வதிலும் கூடுதல் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளார். அன்னா மணி குறித்து அவர் எழுதிய இந்தப் புத்தகத்திற்குச் சுமார் 10 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.
நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் ஆஷா கோபிநாதன் எழுதிய ANNA MANI: THE UNCUT DIAMOND என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வெளியிட்டது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான வானிலை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான அன்னா மணியின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து நுட்பமாகப் பல தகவல்களை ஆஷா கோபிநாதன் பதிவு செய்துள்ளார். அன்னா மணி அறிவியல் துறைக்குச் செய்த பங்களிப்புகள் வாழும்போது அங்கீகரிக்கப்பட்டாலும் அதன்பின்னர் பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதை ஆஷா கோபிநாதன் தனது நேர்காணலில் பதிவு செய்கிறார்.
கேள்வி-1: முதலில், அன்னா மணியுடன் உங்களுடைய அறிமுகம் மற்றும் இந்தப் புத்தகத்தை எழுத நீங்கள் எப்போது முடிவு செய்தீர்கள் என்பது பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்..?
மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MIT) பணிபுரியும் அபா சுர் என்ற அறிவியல் எழுத்தாளர், 1990களின் பிற்பகுதியில் மெரிடியன்ஸ்(MERIDIANS) என்ற பத்திரிகையில் அன்னா மணி பற்றி எழுதும் வரை நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. அதே காலகட்டத்தில் நான் திருவனந்தபுரத்திற்குக் குடிபெயர்ந்தேன். அன்னா மணி ஏற்கனவே அங்கு குடிபெயர்ந்திருந்தார். அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரை கவனித்துக் கொண்டிருந்த அன்னாவின் சகோதரிக்கு என் அம்மாவை நன்றாகத் தெரியும், எனவே இருவருக்கும் இடையே நல்ல அறிமுகம் இருந்தது. யாரோ ஒரு விஞ்ஞானி இங்கே இருக்கிறார் என்பது மட்டும் எனக்குத் தெரியும், ஆனால் அதைத் தவிர்த்து வேறு எதுவும் தெரியாது.
நான் இங்கே அலையன்ஸ் பிரான்சே (Alliance Française) என்ற அமைப்பில் பணிபுரிந்தேன், நாங்கள் சில அறிவியல் பிரச்சாரப் பயிற்சிப் பட்டறைகளை நடத்திக் கொண்டிருந்தோம். அந்தப் பயிற்சியின்போது ஒருநாள் அறிவியல் துறையில் பணியாற்றும் பெண்களைப் பற்றி, நான் மாணவர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன். விவாதிக்கும்போது முதலில் “உங்களுக்குத் தெரிந்த பெண் விஞ்ஞானிகளின் பெயரைக் குறிப்பிடுங்கள்” என்றேன். எந்தப் பதிலுமின்றி ஒரு அமைதி நிலவியது. பின்னர் ஒருவர் மட்டும், “மேரி கியூரி” என்று சொன்னார். அவரைத் தவிர்த்து வேறு யார் பெயரும் மாணவர்களுக்குத் தெரியவில்லை.
மேலும் இன்னொரு சூழலில் ஓவியத்தில் ஆர்வமுடன் இருந்த மாணவர்களிடம் நீங்கள் அறிந்த விஞ்ஞானிகள் யாரேனும் ஒருவரை வரைந்து கொடுங்கள் என்றேன். சொல்லி வைத்தார் போல் அனைவரும் ஆண் தோற்றத்தில் உள்ள விஞ்ஞானிகளை வரைந்தனர். இந்த நிலை இன்று வரை தொடருகிறது. இங்கே பெண் விஞ்ஞானிகளின் பெயர்கள் மட்டுமல்ல, பெண்களில் விஞ்ஞானிகளும் உள்ளனர் என்பது கூட அறியாமல் வளரும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையை யாராவது ஒருவர் மாற்ற வேண்டுமெனத் தோன்றியது. “ஒருவேளை வருங்காலத்தில் நான் ஒரு புத்தகம் எழுதினால் அதில் பெண் விஞ்ஞானிகளை அறியச் செய்வேன்” என்ற எண்ணம் அப்போது உருவானது. அதுதான் இப்புத்தகம் எழுதுவதற்கான துவக்க காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
கேள்வி-2: வானிலைத்துறை முதல், விண்வெளி அறிவியல் வரை அன்னா மணியின் பங்களிப்புகளைக் குறிப்பிட்டுள்ளதில் உங்கள் புத்தகம் மிகப்பெரிய பணியைச் செய்கிறது. மேலும் அவரது அறிவியல் ஆய்வுப்பணி எவ்வாறு இந்தியாவை உலக அளவில் மதிக்கத்தக்க வகையில் உறுதியாக நிலைநிறுத்தியது என்பதைக் கூறுங்கள்? மற்றும் அன்னா மணி விட்டுச் சென்ற மரபுகள் (legacy) பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் சுருக்கமாகக் கூறுங்கள்? 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அன்னா மணி மறைந்ததிலிருந்து, இந்தியாவில் வானிலை ஆய்வு மையம் அவரின் பங்களிப்புகளில் எதை அதிகம் கவனம் செலுத்தியுள்ளது?
இது கடினமான கேள்வி, ஏனென்றால் அவரின் பங்களிப்புகளில் எது சிறந்தது எனத் தேர்ந்தெடுத்துச் சொல்வது கடினம். அன்னா மணி, சர் சி.வி.ராமனுடன் இணைந்து தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தார். மேலும் வைரங்கள் (DIAMOND) மற்றும் மாணிக்கங்களின் (RUBY) ஒளிர்வை ஆய்வு செய்ய ராமன் நிறமாலையைப் (SPECTROSCOPE) பயன்படுத்தினார். அதன்பிறகு அவர் வானிலை துறையை நோக்கி நகர்ந்தது முற்றிலும் தற்செயலானது. ஏனென்றால் அப்போது கிடைக்கக்கூடிய ஒரே முதுகலை முனைவர் பட்டத்திற்கான வாய்ப்பு இங்கிலாந்தில் வானிலை துறையில் மட்டுமே இருந்தது. இது இந்திய நாட்டிற்கு ஏதோ ஒரு வகையில் நிச்சயம் பயன்படக்கூடும் என்று சிந்தித்து அவர் வானிலை துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
1945 ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, இந்திய அறிவியல் துறை சார்ந்த மாணவர்கள் அனைவரும் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று விரும்பினர். பலரும் நாட்டுப்பற்று உணர்வோடு இருந்தனர், எனவே ஏதாவது ஒரு வகையில் நாட்டு விடுதலைக்குப் பங்களிக்க விரும்பினர். அன்னா மணிக்கு புனேவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலை கிடைத்தது. அன்னா மணியின் வழிகாட்டியான எஸ்.பி. வெங்கடேஸ்வரனும் அவருக்கு முன்பே அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர்கள் அங்கு புதிய அறிவியல் கருவிகளைத் தயாரிக்கும் பயிற்சிப் பட்டறைகளை நடத்திக்கொண்டிருந்தார்கள். பம்பாயிலிருந்து தனியார் துறை நிறுவனங்கள் வந்து பயிற்சிப் பட்டறைகளைப் பயன்படுத்திக்கொள்ளும்.
அதற்கு முன்புவரை இந்தியாவில் எல்லா அறிவியல் ஆய்வுக்கருவிகளும் பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்படும். அன்னா மணி வருகைக்குப் பிறகு எல்லாவற்றையும் மீண்டும் புதிய முறையில் செய்யத் தொடங்கினார். இங்கிலாந்தில் சிறந்த மையங்களில் பயிற்சி பெற்றிருந்தாலும் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் களத்தில் நேரடியாக வேலை செய்வதில் உள்ள சிரமங்கள் என்னவென்பதை அவர் உண்மையில் கற்றுக்கொண்டதாக அவரே கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் ஏற்கனவே இருந்த கருவிகளை அப்படியே நகலெடுத்து அதேபோல் செய்யத் தொடங்கினர், பின்னர் அவர் அந்த மாதிரிகளை மாற்றியமைத்தார், இறுதியாக அவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் உருவாக்கத் தொடங்கினர்.
அன்னா மணி வெறுமனே கருவிகளை உருவாக்கியவர் மட்டுமல்ல, கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தும் ஒரு இயற்பியலாளராகவும் இருந்தார்.
“இதோ இந்தியாவின் இந்த வானிலை பெண்” என்று கூறி சிலர் அடிக்கடி அவரது பங்களிப்புகளைக் கிண்டலடிக்கும் வகையில் பேசுவார்கள். அதைப் பொருட்படுத்தாமல் அவர் வளிமண்டல இயற்பியலைப் பற்றி ஆழமாகப் படித்துக் கொண்டிருந்தார். அவர் புனேவில் வளிமண்டலத்தின் சில அம்சங்களை ஆய்வு செய்ய ரேடாரைப் பயன்படுத்தினார். ஓசோன் ஆய்வில் இவரது பங்களிப்பு மிகவும் மகத்தானது, அதற்காக அவருக்குக் கே.ஆர். ராமநாதன் நினைவுப் பதக்கம் கிடைத்தது.
அன்னா மணியின் மாணவரும் சக பணியாளருமான ஸ்ரீதரன் அவர்கள்தான் வளிமண்டல ஓசோன் படலத்தை ஆய்வு செய்வதற்காக வேறு யாராலும் உருவாக்க முடியாத ஓசோன் மிதவைக்கருவியை (OZONESONDE) உருவாக்கினார். அவரது பங்களிப்பும் சிறப்பானது. பின்னர் ஓய்வு பெற்ற பிறகு, அவர் பெங்களூரில் அறிவியல் கருவிகள் தயாரிப்பது உட்படக் காற்றாலை ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றினார். “இது அன்னா மணியின் மரபு (LEGACY)” என்று மட்டும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவருக்கும் அவரது தலைமுறைக்கும், அறிவியல் துறையில் ஈடுபட விரும்புவது நாட்டிற்காகச் செய்யும் சேவை எனக் கருதுவார்கள்.
உதாரணமாக, டெல்லியில் ஒரு விமான விபத்து ஏற்பட்டது, அன்னா மணி அங்கு ஏதாவது செய்ய விரும்பினார். இந்தக் கருவிகள் மேம்படுத்தப்பட வேண்டும், மற்றொரு செயலிழப்பு இனி ஏற்பட விடக்கூடாது என்று அதற்கான பணிகளைச் செய்ய முயற்சித்தார். இப்போது, இன்று எத்தனை விஞ்ஞானிகள் அதைச் செய்வார்கள் என்று நமக்குத் தெரியாது? யார் ஆய்வகத்திலிருந்து வெளியேறி அவர்களின் திட்ட வழிகாட்டுதல்களின் கீழ் வராத ஒன்றிற்காக முயற்சி எடுப்பார்கள்? கேள்விக்குறிதான்.
கேள்வி-3: இன்று இந்திய வானிலை துறையில் பயன்படுத்தும் கருவிகள் நம் சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது இல்லை, ஆனால் பிறநாடுகளிலிருந்து வரும் கருவிகளைப் பயன்படுத்துவதில் நாம் சிரமமில்லாமல் வசதியாக இருக்கிறோம் என்பதைப் பற்றி நீங்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறீர்கள். இன்று சூழ்நிலைகள் எவ்வாறு மாறின என்பதைப் பற்றி விளக்கிச் சொல்ல முடியுமா?
நான் பல்வேறு ஆய்வகங்களில் அறிவியல் கருவிகளைப் பார்க்கச் சென்ற இடங்களில், அவை கொரிய அல்லது ஜப்பானிய அல்லது ஜெர்மன் அல்லது சீன கருவிகள் என்பதைக் கண்டேன். இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, ஏனென்றால் “நாம் சுயசார்புள்ள நாடாக இருக்க வேண்டும்” என்பதற்கு முன்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த முயற்சியில்தான் ஓசோன் மிதவைக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அது மற்ற நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று மேக் இன் இந்தியா மற்றும் ஸ்டார்ட்-அப் இந்தியா பற்றி நிறையப் பேசப்படுகிறது, ஆனால் அதற்கான செயல்பாட்டில் பின்தங்கியுள்ளோம்.
அன்னாவின் முன்னாள் சகாக்களில் ஒருவரான டாக்டர் ஜி.பி. ஸ்ரீவஸ்தவாவிடம் நான் இதைப்பற்றி விவாதித்தேன். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கட்டமைப்பு மாறிவிட்டதே இதற்குக் முக்கிய காரணம் எனக் கூறினார். தரமான விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு சி.எஸ்.ஐ.ஆர் (CSIR) நிறுவனத்தைப் போல் செயல்படுகிறது. மேலும் மற்ற நிறுவனங்களைப் போலவே அறிவியல் துறையில் பதவி உயர்வுகள் கொடுக்கப்படுகின்றன. ஏனெனில் அவர்கள் நிறைய ஆராய்ச்சி ஆவணங்களை வெளியிடுகிறார்கள். அல்லது சர்வதேச அறிவியல் மாநாடுகளில் கலந்து கொள்கிறார்கள். ஒரு கருவியை உருவாக்கி அதைப்பயன்பாட்டுக்காகச் சோதனை செய்ய ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் செலவிட யாருக்கும் இங்கு நேரம் இல்லை, ஒருவேளை அதிலிருந்து ஒரு ஆய்வறிக்கையை வேண்டுமானால் பெறலாம்.
கேள்வி-4: அறிவியலில் பெண்களைப் பொறுத்தவரை நம் நாட்டில் மிகவும் மோசமான ஒரு சூழல்நிலை நிலவுகிறது என்பதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். மேலும் ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியராக உங்களுக்கு இதை விரிவாக எழுத ஏன் மிகவும் கடினமாக இருந்தது என்பதைக் கூற முடியுமா?
நான் இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கியபோது, என்னிடம் இருந்தது அன்னா மணியின் அறிவியல் ஆவணங்கள் மற்றும் அவரின் இரண்டு நேர்காணல்கள் மட்டுமே. மேலும், நான் ஒரு “அனுபவமிக்க வாழ்க்கை வரலாற்று எழுத்தாளர்” அல்ல என்பதால், ஆரம்பத்தில் யாரை எங்கே பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. எனவே நான் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்றேன். அது உண்மையில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அங்கு நிறைய ஆவணங்கள் இருந்தன, ஆனால் அது ஒரு முறையான ஆவணக் காப்பகம் அல்ல. அவர்கள் பெரிய அட்டைப் பெட்டிகளை எடுப்பார்கள், திடீரென்று அவர்கள் எதையாவது வெளியே கொண்டு வந்து எனக்கு வேண்டுமா என்று கேட்பார்கள், சரியென்று நான் எடுத்துக்கொள்வேன்.
பெங்களூரில் உள்ள அன்னாவின் குடியிருப்புக்கும் சென்றேன். அங்கு அவரது பல கடிதங்கள் இருந்தன. அப்போதுதான் நான் பல தகவல்களைப் பெறத் தொடங்கினேன். கடிதங்கள் வாசித்த பிறகுதான் இந்தப் புத்தகத்தை சிறப்பாக எழுத எளிதாக இருந்தது என்று நினைக்கிறேன். இந்த விவரங்கள் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, பல வாசகர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. நான் இந்தப் பகுதிகளை வெவ்வேறு அத்தியாயங்களாகத் திருத்தினேன். அந்த வழியில், அறிவியலில் நம்பிக்கை இழந்த வாசகர்கள் கூடப் புத்தகத்தின் சில பகுதிகளை ரசித்து வாசிக்க முடியுமென நம்புகிறேன். இப்புத்தகத் தயாரிப்பில் நான் 10 ஆண்டுகள் செலவழித்துள்ளேன்.
கேள்வி-5: உங்கள் புத்தகத்தின் மிகவும் கசப்பான அத்தியாயங்களில் ஒன்று அன்னாவின் குரல் மூலம் நீங்கள் சொல்லத் தேர்ந்தெடுத்த ஒன்று. ஜி.பி. ஸ்ரீவஸ்தவாவுக்கு அவர் எழுதிய கடிதங்களின் வரிசை இது. இந்தக் கடிதங்களை நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள், அன்னா மணி பற்றிய உங்கள் புரிதலுக்கு அவை எவ்வாறு உதவி செய்தன?
டாக்டர் ஜி.பி. ஸ்ரீவஸ்தவா அவரின் இளைய சகப்பணியாளராக இருந்தார். இந்தக் கடிதங்களை நான் வாசிக்க முதலில் தயங்கினேன். ஏனென்றால் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் தயக்கத்துடன் தான் எனக்கு இது வேண்டுமா என்று கேட்டது. நான் அதைப் படிக்கத் தொடங்கியபோது, அது அதற்கு முன்பு நான் நினைத்திருந்த எண்ணத்தை மாற்றியது. இது நிச்சயம் ஒரு நல்ல புத்தகத்தை உருவாக்கும் என நினைத்தேன். அந்த கடிதங்கள் 1960 ஆம் ஆண்டுகள் துவங்கி 1990 ஆம் ஆண்டுகள் வரை இடைப்பட்ட 30 ஆண்டுகாலத்தில் எழுதப்பட்டது.
அந்த காலக்கட்டத்தில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மிகவும் எச்சரிக்கை உணர்வோடு இருந்த ஒரு பெண்ணைப் பற்றி அந்த கடிதம் மூலம் புரிந்துகொள்ளலாம். அவர் இல்லாதபோது கூட அவது துறை எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றி மிகவும் நுணுக்கமாகப் புரிந்துகொண்டிருந்தார். அவர்களிடமிருந்து அவர் அறிக்கைகளை மட்டுமே பெற்றார். அந்த நாட்களில் அவர்களால் மின்னஞ்சல்கள் அல்லது வாட்ஸ்அப் உள்ளிட்ட வேறு ஊடகங்கள் வழியாக எதையும் அனுப்ப வாய்ப்பில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் கடிதங்கள் வழியாகவே தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர்களுக்கு, இது சாதகமானது. ஏனென்றால் யாரேனும் இந்தக் கடிதங்களை நிச்சயம் என்றாவது ஒருநாள் பெற வாய்ப்பு அதிகம். ஆனால் இன்றைய சமகால வாழ்க்கை வரலாற்று எழுத்தாளர்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் உள்ள தகவல்களை மட்டுமே பெற முடியும். சில ஆண்டுகள் கடந்தால் அத்தகவல்கள் அழிந்துபோக வாய்ப்பு அதிகம். இனி வரலாற்று ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அன்னா மணி தனது பயணங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். லெனின்கிராட் போன்ற இடங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அங்கு அவர்கள் எவ்வளவு நன்றாக நடத்தப்பட்டனர் என்பதைப் பாராட்டியிருக்கிறார். எகிப்தைப் பற்றியும் எழுதியுள்ளார், அங்கு சக ஊழியர்கள் அன்னா மணி தங்குவதற்கு இடத்தைக் கண்டுபிடிக்க உதவியதைப் பாராட்டியிருக்கிறார்.
அவர் சிறிய, அன்றாட விஷயங்களைப் பற்றியும் எழுதியுள்ளார். ஒரு கடிதத்தில், ஒரு சோப்பு கூட மிச்சம் வைக்காத அளவுக்குத் தனது வீட்டை நன்றாகச் சுத்தம் செய்த ஒரு பணிப்பெண்ணைப் பற்றி அவள் நகைச்சுவையாகக் கூறுகிறாள். இதனால் மீண்டும் அவள் வெளியே சென்று எல்லாவற்றையும் வாங்க வேண்டியிருந்தது. இந்த சிறிய விவரங்களை வாசிக்கும்போது அவர் மிகவும் மனிதாபிமானமுள்ள நபராக உணர வைக்கின்றன. நான் சந்தித்த பலர் அன்னா மணி ஒரு முதலாளியைப் போல் அதிகார மனப்பான்மையோடு செயல்படுவார் என்று கூறினார்கள். ஆனால் அவளுடைய கடிதங்களும், அவளை நன்கு அறிந்தவர்களும் எனக்கு வேறு ஒரு புரிதலைக் கொடுத்தது. ஒரு சக ஊழியர் சரியாக வேலை செய்யாத அல்லது நேரத்தை விரயம் செய்தவர்களோடோ கண்டிப்பாக இருந்ததாகக் கூறினார்.
மற்றவர்கள் மீது அக்கறை காட்டினார். உதாரணமாக, அவர் டெல்லிக்குச் சென்றபோது, குளிர்காலம் அதிகம் இருந்த நேரத்தில் புனேவிலிருந்து தொழிலாளர்களை வர அனுமதிக்கவில்லை, ஏனெனில் அவர்களிடம் குளிரைத் தாங்கும் ஆடைகள் இல்லை. கொடைக்கானலில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய மலையாள எழுத்தாளர் சி.ராதாகிருஷ்ணன் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் உள்ளது. அவர் புத்தகங்கள் எழுதுவது அவரது சக ஊழியர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால், அவர் புனேவுக்கு அனுப்பப்பட்டார்; புனேவில் அன்னா மணி இருந்தார். அவர் அவரது புத்தகங்களைப் படித்தார், அவரை ஆதரித்தார். மேலும் அவர் தொடர்ந்து எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவரது கோப்பில் கையொப்பமிட்டார். பின்னர், அவர் தனது புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உதவினார். வாழ்க்கையின் இறுதி வரை நட்பில் இருந்தனர்.
கேள்வி-7: யாரோ ஒருவரிடம் கண்டிப்புடன் இருந்த சம்பவத்தை நினைத்து மோசமாக உணர்கிறார் என்பதை அவரது கடிதங்கள் பதிவு செய்கிறது. இந்த சுயவிமர்சனம் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நாம் பார்க்க முடியாது. மற்றும் புத்தகத்தில் உள்ள அறிவியலுக்குள் எவ்வளவு ஆழமாகச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் எவ்வாறு முடிவு செய்தீர்கள்?
முதலில், என்னிடம் இருந்தது அவருடைய ஆவணங்கள் மட்டுமே. எனவே நான் அவை அனைத்தையும் படித்து விரிவான குறிப்புகளை எடுத்தேன். அதனோடு தொடர்புடைய ஆவணங்களைத் தொகுத்து ஓசோன் மற்றும் கதிர்வீச்சு போன்ற கருப்பொருள்களைச் சுற்றிச் சில அத்தியாயங்களை எழுதினேன். அதிகப்படியான வாசகர்களுக்கு இது அந்நியமாகிவிடும் என்று நான் கவலைப்பட்டேன். ஐந்து அத்தியாயங்களை எழுதிய பிறகு, நான் அவற்றை ஐந்து இளம் வாசகர்களுக்குக் கொடுத்துக் கருத்து கேட்டேன். அவர்களில் ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர், அவரது தந்தையும் அதைப் படிக்க முயன்றார்.
அறிவியல் பின்னணி இல்லாத எவருக்கும் இது கடினமாக இருக்கும் என்று அந்த தந்தை கூறினார். மற்றவர்கள் பல கருவிகள் பற்றிய தகவல்கள் சற்று குழப்பமானவையாக உள்ளது என்று கூறினர். புத்தகத்தின் பெரும்பகுதியை மீண்டும் எழுதினேன். அதற்குள், அவரது வாழ்க்கையைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களையும் நான் சேகரித்தேன். இது அறிவியலையும் அவரது வரலாற்றையும் சம அளவில் இடம்பெற வழிவகைச் செய்ய உதவியது. இவை இரண்டையும் பொருத்தமான இடங்களில் இணைத்து எழுதியுள்ளேன். புத்தகம் பற்றிய முதல் விமர்சனம் பத்திரிகையாளர்களால் எழுதப்பட்டன. விஞ்ஞானிகள் யாரும் எழுதவில்லை பத்திரிகையாளர்கள் புத்தகத்தை பாராட்டி நேர்மறையாக எழுதினர்; அப்போதுதான் எனது எழுத்துகள் படிக்கும்படியாக இருப்பதாக நான் உணர்ந்தேன்.
அறிவியலை பற்றி குறிப்பிடாமல் ஒரு விஞ்ஞானியைப் பற்றி எழுத முடியாது என்று நான் நம்புகிறேன். பல சுயசரிதைகள் எல்லா அறிவியலையும் விலக்கி வைத்து எழுதப்படுகிறது, ஆனால் அது எனக்கு விருப்பமில்லை. என் புத்தகத்தை வெளியீட்டவர்கள் அறிவியல் பகுதிகளை அகற்றாததற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.
கேள்வி-8: அன்னா மணியின் ஒரு மேற்கோள், என்னுடன் எப்போதும் நினைவில் இருக்கும்; அபா சுரின் புத்தகத்தில் அது இடம்பெற்றுள்ளது. “அறிவியலில் பெண்களைப் பற்றிய தேவையற்ற சர்ச்சை ஏன் ?” என்று அவர் கேட்டிருக்கிறார். மேலும் அவரது காலத்தில் பெண்கள் அறிவியலில் ஈடுபடுவது அவ்வளவு கடினமாக இல்லை என்றும் கூறியுள்ளார். அவர் வெளிப்படையாகப் பாலின ரீதியாகச் சில தடைகளை எதிர்கொண்டும் ஏன் இவ்வாறு குறிப்பிட்டிருகிறார் என ஆச்சர்யமாக உள்ளது. இந்தக் கூற்றை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்?
நான் அன்னா மணியை ஒருபோதும் சந்தித்ததில்லை, ஆனால் பல சிக்கல்களைப் புறக்கணித்துத் தனது வேலையில் கவனம் செலுத்த அவருக்கு ஒரு வாய்ப்பு இருந்ததாக நான் உணர்கிறேன். அவர் தனது முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆண்டுகளில் பாலின ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டார், ஆனால் இந்தப் பிரச்சினைகள் அப்போது வெளிப்படையாகப் பேசப்படவில்லை. பாலினப் பாகுபாடு சார்ந்த பிரச்சனை 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் பொதுவான பிரச்சனையாகப் பேசப்பட்டது. .
இந்திய வானிலை ஆய்வு மையத்தில் அன்னா மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தார், மற்ற பெண்கள் கடைநிலை பொறுப்புகளில் பணியாற்றினார்கள். அவர்கள் அதிகபட்சமாக மேற்பார்வையாளர் என்ற நிலைக்கு மட்டும்தான் சென்றிருக்க முடியும். இதை அவர் கவனித்திருக்கிறார். தனது வாழ்க்கைப் பற்றி, அபா சுரிடம் பேசிய பிறகு, அவர் இது குறித்து சிந்தத்துள்ளார். .மேலும் அவர் இன்னும் இதை மாற்ற ஏதாவது செய்திருக்க முடியுமா என்று யோசிருக்க வேண்டும். அவருக்கு பெண் விஞ்ஞானிகள் சிலர் நண்பர்களாக இருந்ததால் அடிமட்டங்களில் என்ன நடக்கிறது என்பதை அவர் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.
கேள்வி-9: இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) சி.வி.ராமனின் ஆய்வகத்தில் பணிபுரியும் போது அன்னா மணிக்கு முனைவர் பட்டம் மறுக்கப்பட்டது. இந்தப் பிழையைச் சரிசெய்து அவருக்கும் சுனந்தா பாய்க்கும் மறைந்த பிறகு அதே இந்திய அறிவியல் நிறுவனம் முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்று நீங்கள் கோரிக்கை வைக்கிறீர்கள். இது ஏன் முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அது உண்மையில் நிறைவேற வாய்ப்புள்ளதா..?
சுனந்தா பாய் மற்றும் அன்னா மணி இருவரும் தங்கள் ஆய்வுகளுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்தனர். சுனந்தா பாய் தனியாகவே 10 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார், இவை அனைத்தும் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் இதழ்களில் வெளியிடப்பட்டன. அன்னா மணியும் 6 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார், அவற்றில் ஒன்று மாணிக்கம் (RUBY) பற்றியது; மீதமுள்ள ஐந்து கட்டுரைகள் வைரங்கள் (DIAMOND) பற்றியது. நான் இந்திய அறிவியல் நிறுவனத்தில் உள்ள நூலகத்திற்குச் சென்றிருந்தேன்; மாணிக்கங்கள் குறித்த அன்னா மணியின் முதுகலை ஆய்வறிக்கையை வாசித்தேன். ஆனால் வைரங்கள் குறித்துதான் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை அன்னா மணி சமர்ப்பித்திருந்தார்; அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சுனந்தா பாயின் படைப்புகள் முற்றிலுமே அவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார்.
அன்னா மணிக்கு முதுகலைப் பட்டம் பெறாமல் இருந்ததால் முனைவர் பட்டம் மறுக்கப்பட்டதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது. அவர் இளங்கலை (B.Sc) ஹானர்ஸ் பட்டம் பெற்றிருந்தார். இது திறன் மிக்க மாணவர்களுக்கான படிப்பு. இதன் சிறப்பம்சம் இளங்கலை பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு முதுகலை பட்டம் தானாகவே வழங்கப்படும். கே.ஆர். ராமநாதனுக்கு இப்படித்தான் முதுகலை பட்டம் கிடைத்தது. வாய்ப்பு இவ்வாறு இருக்க, சென்னை பல்கலைக்கழகம் ஏன் அன்னா மணிக்கு முதுகலை பட்டத்தை வழங்கவில்லை என்பது தெரியவில்லை. முதுகலைப் பட்டப்படிப்புக்காக மாணிக்கம் குறித்த அவரது ஆய்வறிக்கை ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்திருந்தார். அது ஏன் போதுமானதாக இல்லை?
ராமனின் ஆய்வகத்தில் பணிபுரிந்த அன்னா மணி, சுனந்தா பாய் ஆகிய இரண்டு திறமைவாய்ந்த ஆராய்ச்சியாளர்களை சி.வி. ராமன் நேரடியாகக் கவனித்துக்கொண்டு இருந்தார். ஆனாலும் அவர் ஏன் முனைவர் பட்டத்திற்கான தடைகளை அகற்ற முயற்சிக்கவில்லை? அவர் அதை மிக எளிதாகச் செய்திருக்க முடியும், ஏனெனில் அவர் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட இயற்பியலாளர்களில் ஒருவர். அப்படியிருந்தும் அவர் அதைச் செய்யவில்லை. ஆனாலும் முனைவர் பட்டம் இல்லாதது அன்னா மணியின் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். இதுபோல் இன்று நடந்திருந்தால், அதன் பிறகு நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தொடர முடியாது. ஏனென்றால் சில அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாதாரணப் பணியாளர்கள் கூட “முனைவர் பட்டம் இல்லையா? அவ்வளவுதான் முடிந்தது உங்கள் வாழ்க்கை” என்றும் சொல்லும் நிலை உள்ளது.
அன்னா மணி ராமனின் ஆய்வகத்திலிருந்து வெளியே வந்தார், இந்த ஆய்வு அறிக்கைகள் அனைத்தும் அவரிடம் இருந்தன. அதன் மூலம் ஒரு முதுகலை முனைவர் பட்டத்தைப் பெற்றார். பின்னர் வாழ்க்கை நகர்ந்தது. மேலும், அந்த நாட்களில் இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு வந்தவர்களில் பலருக்கும் முனைவர் பட்டம் இல்லை. ஆனாலும் அவர்கள் உள்ளே வந்தார்கள், வேலை செய்தார்கள், பிறகு அன்னா முனைவர் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். டாக்டர் ஸ்ரீதரன் ஓசோன் மிதவைக்கருவிகள் தயாரித்தற்கான முனைவர் பட்டம் பெற்றார். டாக்டர் ஜி.பி. ஸ்ரீவஸ்தவா நிறைய வேலைகளைச் செய்தார். அவர் அதைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று வற்புறுத்தினார்.
வரலாற்றில் நிகழ்ந்த ஒரு தவறைச் சரி செய்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இது தவறு. அன்னா தனது ஆய்வகத்தில் செய்த வேலையால் ராமன் மிகவும் ஈர்க்கப்பட்டார். தனது ஆய்வகத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர் செய்து கொண்டிருந்த வேலைகளையும் அவர் மிகவும் பாராட்டினார். வரலாற்றில் தாமதமாக முனைவர் பட்டம் கொடுத்த முன்னுதாரணமும் உள்ளது. இது இதற்கு முன்பு இங்கிலாந்தில் நடந்துள்ளது, அங்கு இந்தப் பெண்கள் மருத்துவம் படிக்கச் சென்றனர், 1870 களில் அல்லது அதற்குப் பிறகு ஸ்காட்லாந்தில் என்று நினைக்கிறேன். அந்த நாட்களில் அவர்கள் வகுப்புகளுக்குச் செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை, அவர்களுக்கு ஒருபோதும் பட்டங்கள் வழங்கப்படவில்லை. இறுதியாக, 150 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தவறைச் சரி செய்யும்விதமாக அவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இங்கும் இதேபோன்ற ஏதாவது நடக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அறிவியல் நிறுவனம் தங்கள் கடந்தகால தவறைச் சரி செய்வதில் வெளிப்படையாக இருக்கத் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை அனுப்பும் என்று நம்புகிறேன்.
நந்தித்தா :
நாம் நேரத்தைக் கடந்துவிட்டோம் என நினைக்கிறேன், இத்தோடு நேர்காணலை நிறைவு செய்யலாம். என் கேள்விக்கான உங்கள் பதில்கள் கேட்பவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். மிக்க நன்றி.
ஆஷா கோபிநாத்:
புத்தகங்கள் பற்றி அறிந்துகொள்ள ஒரு பிரத்யேகமான ஒரு வலைத்தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம், இதில் புத்தகத்தில் இருக்கும் தகவல்களோடு கூடுதல் தகவல்களையும் காணலாம். எனவே புத்தகத்தை வாங்கியவர்களும் வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
-நந்திதா ஜெயராஜ், ஒரு அறிவியல் எழுத்தாளர் மற்றும் பெண்ணிய அறிவியல் ஊடக தளமான TheLifeofScience.com இன் இணை நிறுவனர். இவர் Lab Hopping: A Journey to find India’s Women in Science என்ற நூலின் இணை ஆசிரியராகவும் இருந்தார்.
தமிழில்: மோசஸ் பிரபு
ப்ரண்ட்லைன் இதழுக்காக ஜனவரி-31 அன்று கொடுக்கப்பட்ட நேர்காணல்







