மழையின் நறுமணம் வீசும் மண்ணில், மரபின் இசை மெல்லிசையாக ஒலிக்கும்… மரக்கிளையில் பறவைப்போல் சுதந்திரமாய் வாழ்கின்ற இவர்கள் இயற்கையின் மகிமை!
காளை மீது குதிப்பது ஆண்மையின் வீரத்திற்கும், புன்னகையுடன் பாடுவது பெண் குலத்தின் பெருமைக்கும் அடையாளமாக விளங்குகிறது. அவர்களின் அலங்காரங்களிலே கதை சொல்லும் காயாத பூக்கள், வாழ்க்கையை வட்டமிடும் அழகிய கோலங்களாக மிளிர்கின்றன.
ஆப்பிரிக்காவின் தென்மேற்கு எத்தியோப்பியாவில் அமைந்துள்ள ஓமோ பள்ளத்தாக்கில் வாழும் ஒரு தனித்துவமான பழங்குடியினர்தான் ஹேமர் மக்கள். 2007 ஆம் ஆண்டு எத்தியோப்பிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இவர்களின் எண்ணிக்கை சுமார் 46,532 ஆகும். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறை, வனப்பூக்களைப் போன்ற வண்ணமயமான உடை அலங்காரம், மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த பழக்கவழக்கங்கள் ஆகியவை இவர்களின் அடையாளமாகத் திகழ்கின்றன.
வரலாறு
ஹேமர் பழங்குடியினர், இன்றைய எத்தியோப்பியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓமோ பள்ளத்தாக்கில் வாழும், ஆப்பிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் குஷிடிக் கிளையைச் சேர்ந்த மொழியைப் பேசும் பழங்குடி மக்கள் ஆவர். அவர்களின் வரலாறு கிமு 1000-க்கும் முற்பட்டது என மானிடவியல் மற்றும் மொழி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தொலைதூர நைல் சமவெளிப் பகுதிகளிலிருந்து (இன்றைய சூடான் பகுதி) தெற்கே வேரூன்றிய இந்த குடிகள், காலப்போக்கில் தனித்துவமிக்க கலாச்சாரமும் மொழியுடன் “ஹேமர்” என்ற தனி இன அடையாளமாக வளர்ந்தனர். அவர்கள் குடியேறிய இடமான ஓமோ பள்ளத்தாக்கு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி இயற்கை வளங்கள் நிறைந்ததும், மழைக்கால ஆறுகள், பசுமை நிலங்கள், மற்றும் காடுகள் கொண்டதும் ஆகும்.
சமூக கட்டமைப்பு
குடும்பமே சமூகத்தின் அடித்தளம்:
ஹேமர் சமூகத்தில் “விரிவான குடும்பம்” (Extended Family) என்பது மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஒரு குடும்பத்தில் பல தலைமுறையினர் ஒன்றாக வாழ்வது இயல்பு. குடும்பத் தலைவர் ஒவ்வொரு நடவடிக்கையையும் நிர்வகிக்கிறார். பெண்கள் வீட்டுப் பணிகளிலும், விவசாயத்திலும் ஈடுபடுகிறார்கள்; பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு “குலம்” (Clan) உருவாகின்றது, இது ஒரு இனக்குழுவைப் போலச் செயல்படுகிறது.
குல அமைப்பு (Clan System):
இம்மக்கள் பல குலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குலமும் ஒரு தனி அடையாளம், மரபு வழக்கங்கள், மற்றும் வழிபாட்டு முறைகளைக் கொண்டிருக்கின்றன. குலத்தின் தலைவர் (Clan Elder) சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் ஒருவராவார். திருமணம் செய்யும்போது ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர்த்து, பிற குலங்களில் இருந்துதான் துணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஒரு முக்கியக் கோட்பாடு. இது “குலத்திற்கு வெளியே திருமணம்” (Clan Exogamy) செய்யும் முறை என்று அழைக்கப்படுகிறது.
ஆணாதிக்க சமூக அமைப்பு:
இச்சமூகத்தில் ஆண்கள் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முதன்மை பெறுகிறார்கள். முடிவெடுக்கும் அதிகாரம் பெரும்பாலும் ஆண்களிடமே இருக்கும். சமூகத்தில் மூத்த ஆண்கள் அடங்கிய ஆலோசனைக் குழு (Council of Elders) அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கிறது. பெண்கள் சமூகத்தில் முக்கியப் பங்கு வகித்தாலும், அவர்களது அதிகாரம் முடிவெடுக்கும் நிலையில் பொதுவாக இருப்பதில்லை.
மூத்தோர் அமைப்பு (Council of Elders):
“முகாஜி” (Mugaji) எனப்படும் மூத்தோர், கிராமக் கூட்டங்களை நடத்தி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். சமூகப் பிரச்சினைகள், நிலத் தகராறுகள், திருமண ஒப்புதல், குற்றங்களுக்கான தண்டனைகள் ஆகியவை இவர்களால் தீர்க்கப்படும். இது ஒரு முறையான நீதிமன்றம் அல்ல என்றாலும், சமுதாயம் முழுவதும் அதன் தீர்ப்புகளை மதித்து நடக்கிறது.
வீடுகளும் சமூக ஒழுங்கும்
இயற்கையோடு ஒன்றாகவே வாழும் இவர்களின் வீடுகள், வெறும் அடைக்கலம் அல்ல; அவை இயற்கையின் ஒரு அங்கமாகவும், மரபுப் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவும் அமைகின்றன. சுற்றுச்சூழலுக்கு இயைந்து கட்டப்படும் இந்த வீடுகள், இந்த மக்களின் வாழ்க்கை முறைக்கும், நம்பிக்கைக்கும் சாட்சியாய் நிற்கின்றன.
இம்மக்கள் பொதுவாகக் குழுக்களாக வாழ்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கான வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறிய வாயில்கள், கால்நடைக் கொட்டகைகள் ஆகியவை ஒரு வட்ட வடிவத்தில் அமைக்கப்படுகின்றன. வீடுகள் பொதுவாக மண், வைக்கோல், மரக்கிளைகள் மற்றும் கால்நடைச் சாணம் ஆகியவற்றின் கலவையால் கட்டப்படும். இது குடும்பத்தின் தனிப்பட்ட மரபுவழி எல்லையையும், சுற்றுச்சூழலை மதிக்கும் வாழ்வியலையும் பிரதிபலிக்கின்றது.
வீடுகளின் கட்டுமானம்:

அடித்தளம் மற்றும் சுவர்:
மண், வேர்கள், மற்றும் சூரியனில் உலர்த்தப்பட்ட புற்கள் ஆகியவற்றின் கலவையால் சுவர் கட்டப்படும். சில இடங்களில் கல் அடித்தளத்தை அமைக்கும் வழக்கமும் உள்ளது.
கூரை:
புல் மற்றும் ஓலைகள் கொண்டு கூரை அமைக்கப்படுகிறது. கூம்பு வடிவிலான இந்தக் கூரை, கோடையில் குளிர்ச்சியையும், மழைக்காலத்தில் பாதுகாப்பையும் அளிக்கிறது.
வேலிகள் மற்றும் கொட்டகைகள்:
வீட்டுக்கு அருகில் மாடுகள் மற்றும் ஆடுகளை அடைக்க, முள்மரக் கிளைகளையும் கம்புகளையும் கொண்டு அடர்த்தியாக வேலிகள் அமைக்கின்றனர். கால்நடைகள் வீட்டருகே பாதுகாக்கப்படுவது, அவர்களின் வாழ்வாதாரத்தின் பாதுகாப்பைக் குறிக்கிறது.
வீட்டு உள்ளமைப்பு எளிமையின் அழகு:
வீடு மிகவும் எளிமையானது, பொதுவாக ஒரே ஒரு அறையைக் கொண்டது. உள்ளே மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு, இரவில் இளம் கால்நடைகளைக் கட்டி வைக்கும் இடம் போன்றவை காணப்படும். படுக்கை என்பது வெறும் மண்ணின் மேல் அல்லது மரப்பட்டையின் மேல் விரிக்கப்பட்ட தோல் பாய்களாகவே இருக்கும். நவீன வசதிகளான மின்சாரம், குழாய் நீர் போன்றவை இன்றும் அவர்களைச் சென்றடையவில்லை.
வீட்டின் சமூக மற்றும் ஆன்மிகப் பங்கு:
வீடு என்பது இம்மக்களுக்கு ஒரு ஆன்மிகப் புனித இடமாகும்; சில வீடுகளில் மூலைவாசலில் இயற்கை வழிபாட்டிற்கான சிறு தெய்வப் பதிவுகள் காணப்படும். பண்டிகை நாட்களில், வீட்டில் சிறப்புப் பாசி மணிகளால் அலங்கரிப்பதும், வண்ணப் பூச்சுகள் பூசுவதும், மாடுகளைச் சுற்றி அலங்காரம் செய்வதும் வழக்கமாகும்.
பெண்களே வீட்டின் பாதுகாவலர்கள்:
இச்சமூகத்தில் வீட்டுப் பராமரிப்பு பெண்களின் முழுப் பொறுப்பாக இருக்கிறது. அவர்கள் வீடு கட்டுவதிலும் கூட ஈடுபடுவார்கள். வீடு ஒரு பெண்ணின் “அடையாள இடம்” என்று கருதப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்கள் கணவருடன் தனி வீடு அமைத்து வாழ்கின்றனர்.
திருமணப் பழக்கங்கள்
திருமணம் என்பது வெறும் இருவர் இணையும் நிகழ்வாக இல்லாமல், சமூகத்தின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பையும், மரபுகளையும் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதன் மூலம் ஒரு இளைஞன் வயது வந்த ஆணாகவும், ஒரு பெண் சமூகத்தின் பொறுப்புமிக்க அங்கமாகவும் மாறுகிறாள்.
திருமணத்திற்கு முன்னோடியான சோதனை – காளை தாவல் (Ukuli Bula):
ஹேமர் திருமணத்தில் மிக முக்கியமான முன்னோடி நிகழ்வுதான் ‘காளை தாவல் விழா’. மணமகன், நிர்வாண நிலையில், வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் சுமார் 8 முதல் 15 காளைகளின் மீது நிலைதடுமாறாமல் ஓடித் தாண்ட வேண்டும். இது ஓர் ஆண்மகனின் வீரத்தையும் முதிர்ச்சியையும் சோதிக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. இந்தச் சடங்கை வெற்றிகரமாகக் கடந்துவிட்டால், அந்த இளைஞன் திருமணம் செய்யத் தகுதியான ஆணாகக் கருதப்படுவார். தோல்வியடைந்தால், அவர் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். இந்த நிகழ்வின்போது, மணமகனின் பெண் உறவினர்கள், தங்கள் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்த, fouli எனப்படும் சாட்டையால் தங்களை அடித்துக் கொள்ளுமாறு கேட்பார்கள். அந்தத் தழும்புகளை அவர்கள் பெருமையின் சின்னமாக வாழ்நாள் முழுவதும் சுமப்பார்கள்.
திருமண ஒப்புதல்:
திருமணங்கள் பொதுவாக குலங்கள் (Clans) மற்றும் குடும்பங்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. ஒரே குலத்திற்குள் திருமணம் செய்ய அனுமதி இல்லை என்பதை நாம் முன்பே அறிந்தோம். மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சந்தித்து விவாதித்து முடிவெடுக்கின்றனர். அப்போது குடிப்பெருமை, நற்குணம், செல்வம் போன்றவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.
மணப்பெண் விலை (Bride Price):
மணமகன், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மணமகளின் குடும்பத்திற்குப் பரிசாக மாடுகள், ஆடுகள், மற்றும் சில சமயங்களில் துப்பாக்கிகள், தேன் போன்றவற்றை வழங்குவார். பொதுவாக 20 முதல் 40 மாடுகள் வரை அளிக்கப்படலாம். இது பெண்ணுக்கு அளிக்கப்படும் மதிப்பையும், திருமண உறவின் பெருமையையும் குறிக்கும். சில சமயங்களில் இதன் மதிப்பு பணமாகவும் கணக்கிடப்படுகிறது. பிறகு திருமண நாள் ஒரு பெரிய சமூக நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.
மணமகள், பசு வெண்ணெய் மற்றும் செம்மண் கலவையால் தன் தலைமுடியை அலங்கரிக்கிறார். மணமகன் பச்சை இலைகளால் தலையில் கிரீடம் சூடுவார். இசை, பாடல்கள், மற்றும் இரவு முழுவதும் நீடிக்கும் “எவங்காடி” (Evangadi) நடனம் ஆகியவை நடைபெறும்.. இது மட்டுமா? மணமகளின் வீட்டிலிருந்து மணமகன் வீட்டிற்கு கால்நடைகளை அழைத்துச் செல்லும்போது, வீதியெங்கும் மரபு வழிக் கூத்துக்களும் பாடல்களும் ஒலிக்கும்.
திருமணமானதும், மணமகள் தனது கணவருடன் தனியான வீடு அமைத்துக் கொண்டு வாழ்கிறார். திருமணமான முதல் மனைவியின் கழுத்தில் ‘பிக்னெரே’ (Bignere) எனப்படும் கனமான உலோக வளையம் அணிவிக்கப்படுவது கட்டாயமாகும். இது நமது ‘தாலி’ போன்ற ஒரு மரபுச் சின்னமாகும். இது சமூகத்தில் அவர் திருமணமானவர் என்பதற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.
உடை மற்றும் அலங்காரம்
ஆண்கள் அணியும் உடைகள்:
ஆண்கள் பொதுவாக எளிமையான உடைகளையே அணிகிறார்கள், ஆனால் அவை மிகுந்த மரபு மற்றும் அடையாளப் பின்னணியுடன் கூடியவை. அவர்கள் முழங்காலுக்கு மேல் வரும் ஆட்டுத் தோல் துணிகள் அல்லது வண்ணமயமான துணிகளை அணிகின்றனர். தங்கள் தலைமுடியை வெண்ணெய் மற்றும் செம்மண் (Butter and Red Ochre) கொண்டு பிசைந்து, ஒரு சிற்பம் போல வடிவமைத்து, அதில் இறகுகளைச் செருகி அழகுபடுத்துகின்றனர். கழுத்தில் விலங்குகளின் பற்கள், எலும்புகள் அல்லது கொம்புகளால் செய்யப்பட்ட மணிகளையும், சிலர் வீரத்தின் அடையாளமாக ஈட்டி அல்லது ஒரு சிறிய மர ஆசனத்தையும் கையில் வைத்திருப்பார்கள்.
பெண்கள் அணியும் உடைகள்:
இப்பெண்களின் உடை மற்றும் அலங்காரம் மிகவும் கலைநயமானதாகவும், அடையாளப்பூர்வமானதும் ஆகும். அவர்களது உடைகள் மட்டுமல்ல, அலங்காரங்களும் அவர்களின் சமூக நிலையையும், வயது மற்றும் திருமண நிலையையும் வெளிப்படுத்துகின்றன.
உடைகள்:
ஆட்டுத் தோலால் செய்யப்பட்ட நீளமான ஆடைகளை (goat-skin dresses) அணிகின்றனர். ஒவ்வொன்றும் அழகான சோழிகள் (cowrie shells), மணிகள், மற்றும் உலோகத் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உடையின் முன்பக்கத்தில் பசுமைநிற பஞ்சு, மணிகள் மற்றும் பழைய நாணயங்கள் போன்றவை கைவேலைப்பாடுகளுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
முடி அலங்காரம்:
பெண்கள் தங்கள் தலைமுடியைச் சிறு பின்னல்களாகப் பிரித்து, அதில் வெண்ணெய் மற்றும் செம்மண் கலவையைப் பூசி அழகு செய்வார்கள். “ஓக்ரே கூந்தல்” (Ochre dreadlocks) எனப்படும் இந்த அலங்காரம், அவர்களின் அழகையும், திருமணமான நிலையை அடையாளம் காட்டவும் பயன்படுகிறது.
அணிகலன்கள்:
திருமணமான முதல் மனைவி ‘பிக்னெரே’ எனப்படும் கனமான உலோக வளையத்தை கழுத்தில் அணிவார். இதுவே அவரது உயர்நிலைக்கு அடையாளம். கைவளையல்கள், கால் வளையல்கள் ஆகியவை வெண்கலம் அல்லது செம்பினால் செய்யப்பட்டிருக்கும். மார்பில் அணியும் நாணயங்கள், இறகுகள், செம்புத் தகடுகள் ஆகியவை சமூக மற்றும் பண்பாட்டு அடையாளங்களாகக் காணப்படுகின்றன. இதோடு மட்டுமின்றி, தாய்மை அடைந்த பெண்கள் ‘அயர்ன் டார்க்’ (Iron torque) எனப்படும் சிறப்பு உலோக வளையத்தை அணிவது மற்றுமொரு சிறப்பாகும்.
குழந்தைகள் மற்றும் இளையோர் அலங்காரம்:
சிறு குழந்தைகள் பெரும்பாலும் உடைகள் இல்லாமலேயே காணப்படுகிறார்கள். ஆனால் அவர்களும் சிறிய அளவிலான மணிகள் அல்லது வெண்கல வளையல்களை அணிந்திருப்பார்கள். சில இளைஞர்கள் தங்கள் தந்தையின் அணிகலன்களைப் போன்றவற்றை அணிந்து கொள்கிறார்கள்.
பொருளாதாரம்
இவர்களின் பொருளாதாரத்தின் முதன்மை ஆதாரம் கால்நடை வளர்ப்பே ஆகும். பசுக்கள், ஆடுகள், கழுதைகள் ஆகியவை முக்கிய வாழ்வாதாரங்களாக உள்ளன. ஒரு குடும்பத்தின் செல்வம், அவர்களிடம் உள்ள பசுக்களின் எண்ணிக்கையால் அளக்கப்படுகிறது. திருமணப் பரிசாகவும், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் பசுக்களே வழங்கப்படுகின்றன. பசுவின் பால், இறைச்சி, தோல், மற்றும் சாணம் ஆகியவை அவர்களின் தன்னிறைவு வாழ்க்கைக்கு அடித்தளமிடுகின்றன.
பசுக்களை மையமாகக் கொண்ட பண்டமாற்றுப் பொருளாதாரம்:
நவீனப் பணத்தின் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. வாராந்திரச் சந்தைகளில் பசுவின் பால், தோல், ஆடு ஆகியவை மற்ற பொருட்களுடன் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, ஒரு குடம் பாலுக்குப் பதிலாக உப்பு, தானியங்கள் போன்றவை பெறப்படுகின்றன. பெண் உறுப்பினர்கள் சந்தைப் பரிமாற்றங்களில் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நில உரிமையும் விவசாயப் பாரம்பரியமும்:
நிலம் தனிநபருக்குச் சொந்தமானதல்ல; அது மரபு வழியில் குலத்திற்கே உரிமையானது (Communal Ownership). சோளம், சிறுதானியங்கள், பீன்ஸ் போன்றவை குறைந்த அளவில் பயிரிடப்படுகின்றன. விவசாயம் முற்றிலும் இயற்கையான மழைப்பொழிவைச் சார்ந்துள்ளதே தவிர, நவீன நீர்ப்பாசன வசதிகள் இல்லை.
உழைப்பின் வடிவம்:
இவர்களுக்குத் தனிப்பட்ட ‘தொழில்’ என்று எதுவும் இல்லை; ஆனால் வாழ்வியல் சார்ந்த ‘வேலை’ உண்டு. மாடுகள் மேய்ப்பது, பசுமை தேடி அலைவது, வீட்டையும் சமூகத்தையும் பராமரிப்பது போன்ற இயற்கையை ஒட்டிய செயல்களே அவை. சொல்லப்போனால், இயற்கையை ஒரு தெய்வமாக மதித்து நடத்தப்படும் ஒரு “தன்னிறைவுப் பொருளாதாரம்” (Self-sustained Economy) இவர்களுடையது. ஒரு ஆணின் சமூக மதிப்பு, அவனிடம் உள்ள மாடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமைகிறது. அதிக மாடுகளைக் கொண்ட குடும்பம், சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பையும் பெறும்.
கல்வி நிலையும் அதற்கான சவால்களும்
இம்மக்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகள் மிகக் குறைவாகவே உள்ளன. அரசுத் தொடக்கப் பள்ளிகள் சில கிராமங்களில் மட்டுமே அமைந்துள்ளன, இதனால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. இதற்குக் பல காரணங்கள் உண்டு.
புவியியல் தடை:
ஹேமர் மக்கள் வாழும் பகுதிகள் பரந்த, வறண்ட நிலப்பரப்புகளாகும். பள்ளிகள் பல நேரங்களில் 10–15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால், மாணவர்கள் கால்நடையாகவே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பொருளாதாரத் தடை:
பல பெற்றோர்கள் கல்வியின் உடனடி அவசியத்தை உணர்வதில்லை. குழந்தைகள் வீட்டு வேலைகளிலும், கால்நடைகளை மேய்க்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அன்றாட வாழ்விற்கே போராடும் குடும்பங்களால், கல்விக்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலையும் உள்ளது. “பிள்ளை பள்ளிக்குச் சென்றால், பசுக்களை யார் பார்த்துக்கொள்வது?” என்ற பாரம்பரிய நம்பிக்கையும் மேலோங்கி நிற்கிறது. கல்வி என்பது “வெளி உலகிற்கு உரியது” என இம்மக்கள் கருதுகின்றனர். பெண்களுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுவதால், அவர்கள் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போகிறது.
அரசாங்க மற்றும் தொண்டு முயற்சிகள்:
எத்தியோப்பிய அரசு, காடுகளை விவசாய நிலங்களாக மாற்றி, அரசுப் பள்ளிகளை அமைக்க முயற்சிக்கிறது. ஆனால், ஹேமர் மக்கள் தங்கள் மேய்ச்சல் நிலம் பறிக்கப்படுவதாகக் கருதி, சில சமயங்களில் பள்ளி கட்டிடங்களை எதிர்க்கிறார்கள். சில தொண்டு நிறுவனங்கள், நடமாடும் பள்ளிகள் (Mobile Schools), ஊக்கப் பரிசுகள், மற்றும் உணவுடன் கூடிய பள்ளிகள் போன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
கல்வியை எதிர்க்கும் சமூக மனப்பான்மை:
கல்வி பெறும் ஹேமர் இளைஞர்கள் சிலர், தங்கள் மரபுப் பண்பாட்டிலிருந்து விலகிச் செல்வதாகக் கருதி, சமூகம் அவர்களை ஒதுக்குகிறது. “பள்ளிக்குச் சென்றவன் மரபை மறந்துவிடுவான்” என்பது ஒரு பொதுவான கவலையாக உள்ளது. இளைஞர்கள் நகரங்களுக்கு வேலைக்குச் செல்லும்போது, கூட்டு வாழ்க்கை, மாட்டு வழிபாடு, குல மரபுகள் ஆகியவை மறக்கப்படுகின்றன என்று மூத்தோர்கள் வருந்துகின்றனர். இதன் விளைவாக, ஹேமர் மக்களில் 70%க்கும் மேற்பட்டவர்கள் எழுத்தறிவற்றவர்கள் என யுனிசெஃப் (UNICEF) மற்றும் எத்தியோப்பிய அரசின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
சட்டங்களும் வழக்குகளின் ஒளியும் நிழலும்
“மண்ணில் பிறந்த உரிமை, சட்டத்தில் மறந்த நிலை!”
எத்தியோப்பியாவின் நில உரிமைச் சட்டம் (Land Proclamation Act – 1975 & 1995):
1975-ஆம் ஆண்டு முதல், எத்தியோப்பியாவில் நிலம் என்பது தனிநபருக்குச் சொந்தமானதல்ல, அது அரசுக்கே சொந்தம் என்ற அதிகாரப்பூர்வ நிலைப்பாடு உள்ளது. இதனை 1995-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட எத்தியோப்பிய அரசியலமைப்புச் சட்டம் (FDRE Constitution) உறுதி செய்தது: “All land is the property of the state and the peoples of Ethiopia.”
இதன் விளைவாக, இம்மக்கள் தங்கள் மரபு வழியில் நெடுங்காலமாகப் பயன்படுத்தி வந்த நிலங்கள், சட்டப்படி அரசின் உரிமையிலேயே உள்ளன. அவர்கள் கால்நடைகளின் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தும் நிலங்களுக்கு ஆவணப்பூர்வமான உரிமை இல்லாததால், அரசு அந்த நிலங்களை வளர்ச்சித் திட்டங்களுக்காக எளிதாகக் கையகப்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றது.
கிராமமயமாக்கல் திட்டம் (Villagization Program, 2010–2013):
பழங்குடியின மக்களை ஓரிடத்தில் குடியமர்த்தி, அவர்களுக்குக் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என அரசாங்கம் ஒரு திட்டத்தை அறிவித்தது. ஆனால், அதற்காகப் பல பழங்குடி மக்கள் தங்கள் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்டனர். அரசியல் நிர்ப்பந்தத்தால் அவர்கள் கால்நடைகளுடன் வாழ்ந்த பூர்வீக நிலங்களை இழந்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் ஹேமர் மக்களின் மரபுவழி வாழ்வியல் முறைகள் சிதைக்கப்படத் தொடங்கின. இன அடிப்படையிலான இடம்பெயர்வு, வாழ்வுரிமை மீறல், மற்றும் வாழ்வாதார அழிப்பு எனப் பலத்த ஆட்சேபனைகள் எழுந்தன.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் (International Human Rights Laws):
ILO Convention No. 169 (எத்தியோப்பியா கையெழுத்திடவில்லை):
பூர்வீக மற்றும் பழங்குடி மக்களின் மரபுவழி நிலங்களைப் பாதுகாக்கும் இந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கையில் எத்தியோப்பியா கையெழுத்திடவில்லை. அதனால், அதன்கீழ் கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு ஹேமர் மக்களுக்குக் கிடைக்கவில்லை.
UNDRIP – ஐக்கிய நாடுகளின் பூர்வீக மக்களின் உரிமைகள் மீதான பிரகடனம் (2007):
பழங்குடியின மக்களுக்குத் தங்கள் நிலம், கலாச்சாரம், மரபு, மற்றும் கல்வி ஆகியவற்றைப் பாதுகாக்கும் உரிமையை இந்தப் பிரகடனம் வலியுறுத்தியது. ஆனால், இது சட்டப்பூர்வமான கட்டாயம் அல்ல, வெறும் அறிவுரையாகவே உள்ளது என்பது வருத்தத்திற்குரியது.
முக்கிய வழக்குகள் மற்றும் அறிக்கைகள்:
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை (Human Rights Watch Report, 2012):
“Waiting Here for Death: Forced Villagization in Lower Omo Valley” என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, ஹேமர் மற்றும் பிற பழங்குடியின மக்களை அரசு கட்டாயமாக இடம்பெயர்த்ததையும், மிகப்பெரிய விவசாயத் திட்டங்களுக்காக நிலங்களைப் பறித்ததையும் அம்பலப்படுத்தியது. இதனால் அவர்கள் வாழ்வாதாரமின்றித் தள்ளப்பட்டதாகக் கூறிய இந்த அறிக்கை, உலகளவில் அரசின் நடவடிக்கைகளை விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.
ஆப்பிரிக்க மனித மற்றும் மக்களின் உரிமைகள் ஆணையத்தில் புகார் (2015):
ஹேமர், கரோ, முர்ஸி போன்ற பழங்குடியினக் குழுக்கள் ஒன்றிணைந்து, அரசு தன்னிச்சையாக நிலங்களைப் பறிப்பதாகவும், உடல்ரீதியான வன்முறைகளைக் கையாள்வதாகவும், உணவுத் தட்டுப்பாட்டையும் கல்வி மறுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இது உலகின் தனித்துவமான சூழலியல் மண்டலங்களில் ஒன்றான ஓமோ பள்ளத்தாக்கு அழியும் அபாயத்தில் இருப்பதை எச்சரித்தது.
இதற்கு என்னதான் தீர்வு?
இருதரப்பிலும் மாற்றம் தேவை என்பதே யதார்த்தமான தீர்வாக அமையும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?
வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன், மக்களிடம் சுதந்திரமான, முன்கூட்டிய, மற்றும் தகவலறிந்த ஒப்புதல் (Free, Prior, and Informed Consent – FPIC) பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மரபுவழி நில உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டங்களை (Customary Land Rights Act) இயற்ற வேண்டும். மரபுகளைச் சிதைக்காமல், அதனுடன் இணைந்த வளர்ச்சியை வடிவமைக்க வேண்டும். உள்ளூர் ஹேமர் பிரதிநிதிகளைத் திட்டக் குழுக்களில் சேர்த்து, அவர்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மக்கள் என்ன செய்ய வேண்டும்?
கல்வியின் மூலமாகத் தங்கள் உரிமைகளையும் சட்டங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். சமூக அமைப்புகள் மூலம் தங்கள் உரிமைகளைச் சட்டப்பூர்வமாகக் கோர வேண்டும். அமைதியான முறையில் தங்கள் உரிமைகளை நிலைநாட்டும் வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஹேமர் பழங்குடியினர், இயற்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் தங்கள் வாழ்க்கை முறையால், உலகில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளனர். நவீன உலகம் மாற்றங்களைத் தூண்டினாலும், அவர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்க்கையை முழுமையாக விட்டு விலக விரும்பவில்லை. பிறப்பின் அடிப்படையில் இவர்களுக்குரிய நில உரிமைகள் உரிய மரியாதையுடன் வழங்கப்படும்போதுதான் அது நீதியாகும்.
இந்தப் பிரச்சினை அன்றாட அரசியல் சிக்கல்களை விட, ஒரு ஆழமான மனநிலை மாற்றம் தேவைப்படும் பிரச்சினை. அரசு ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மரபை அழிக்காமல், மரபுடன் இணைந்த வளர்ச்சியை உள்வாங்க வேண்டும். அதே சமயம், மக்கள் அரசுத் திட்டங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு, தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகளை அடைய வேண்டும்.
அந்த நாள் விரைவில் வர வேண்டும் என்ற நம்பிக்கையோடு… ஆனால் அது ஒரே நாளில் வராது. அது “தொடர்ந்த சமூக மாற்றத்தின் பயணத்தில்” தான் பிறக்கும்.
– தீபா ஜெயபாலன்







