உலக சினிமாசினிமா

ஆஸ்கர் விருதுகளின் இருண்ட பக்கங்கள் – 1

புள்ளி (3)

கலை என்பது மானுடத்தின் பொதுமொழி, ஆனால் அதற்கான அங்கீகாரங்கள் பல நேரங்களில் அதிகார மையங்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு படைப்பின் உயரிய கௌரவமாகக் கருதப்படும் விருதுகளுக்குப் பின்னால், நுணுக்கமான உலக அரசியலும், வணிக உத்திகளும், சில நேரங்களில் இனப் பாகுபாடுகளும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. திரையில் மின்னும் ஒளியைத் தாண்டி, அந்த மேடைகளின் நிழலில் மறைந்துள்ள கசப்பான உண்மைகளை நாம் உரையாட வேண்டியது அவசியமாகிறது. ஆஸ்கார் விருதுகளை வழங்கும் AMPAS (Academy of Motion Picture Arts and Sciences) அமைப்பை உருவாக்கியவர் புகழ்பெற்ற MGM (Metro-Goldwyn-Mayer) ஸ்டுடியோவின் தலைவரான லூயிஸ் பி. மேயர் (Louis B. Mayer) ஆவார். 1927-ஆம் ஆண்டு அவர்தான் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார்.

அவர் இதை உருவாக்கியதற்கான உண்மையான காரணங்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை. அந்தக் காலத்தில் ஹாலிவுட் சினிமா தொழிலாளர்கள் (நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள்) தங்களுக்கு முறையான ஊதியம் மற்றும் உரிமைகள் கேட்டுச் சங்கம் (Union) அமைக்க முயன்றனர். இது ஸ்டுடியோ உரிமையாளர்களுக்குப் பிடிக்கவில்லை. தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதைத் தடுக்க, லூயிஸ் பி. மேயர் ஒரு “அகாடமி” என்ற போர்வையில் இந்த அமைப்பை உருவாக்கினார். இதைக் குறித்து அவர் பின்னாளில் மிக வெளிப்படையாகக் கூறுகையில், “நான் இந்த அகாடமியை எதற்கு உருவாக்கினேன் தெரியுமா? சினிமா கலைஞர்களுக்குக் கழுத்தில் ஒரு பதக்கத்தைத் (Medal) தொங்கவிட்டால், அவர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதை விட்டுவிட்டு, அந்தப் பதக்கத்திற்காக ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாவார்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார்.

அதுமட்டுமில்லாமல், ஆரம்பகால ஹாலிவுட்டில் பல பாலியல் புகார்களும் போதைப்பொருள் சர்ச்சைகளும் வெடித்தன. சினிமா என்பது ஒரு கெட்ட விஷயம் என்ற பிம்பம் மக்களிடம் இருந்தது. இதை மாற்றி, சினிமா என்பது ஒரு “கௌரவமான கலை” என்று காட்டுவதற்காக இந்த விருது விழாவை ஒரு ஆடம்பரமான நிகழ்வாக அவர் மாற்றினார். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. தொடக்க காலத்தில், ஸ்டுடியோ உரிமையாளர்கள் யாருக்கு விருது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்கே விருது வழங்கப்பட்டது. இது ஒரு ‘உள்வீட்டுத் திருவிழா’ போலவே நடந்தது.

இனவாதப் பாகுபாட்டின் தொடக்கம்

இந்த பாகுபாடுகளின் வேர் என்பது இன்று நேற்றல்ல, அமெரிக்க சினிமா உருவான காலத்திலிருந்தே திட்டமிட்டு விதைக்கப்பட்டது. இது எங்கே, யாரால், ஏன் தொடங்கப்பட்டது என்பதை மூன்று முக்கியக் காரணிகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக, எங்கே ஆரம்பித்தது என்பதைப் பார்த்தால், சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு வலிமையான அரசியல் கருவி என்பதை அமெரிக்கா ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தது. 1915-இல் டி.டபிள்யூ. கிரிஃபித் (D.W. Griffith) இயக்கிய ‘The Birth of a Nation’ என்ற படம்தான் இந்த இனவாதப் பாகுபாட்டிற்கு மிக முக்கியமான தொடக்கம். இந்தப் படம் கருப்பின மக்களை வன்முறையாளர்களாகவும், வெள்ளை இனப் பெண்களைத் துன்புறுத்துபவர்களாகவும் காட்டியது. அதே சமயம், கருப்பின மக்களைக் கொன்று குவித்த “Ku Klux Klan” (KKK) என்ற இனவாத அமைப்பை “ஹீரோக்களாகச்” சித்தரித்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் (Woodrow Wilson) இந்தப் படத்தை வெள்ளை மாளிகையில் திரையிட்டுப் பாராட்டினார். இதுவே ஹாலிவுட்டில் “வெள்ளை இன மேலாதிக்கத்தை” (White Supremacy) நிலைநிறுத்தியது.

கறுப்புப் பட்டியல் (The Blacklist) காலம்

இரண்டாவதாக, 1940-50களில் நிலவிய “The Blacklist” காலம் ஆகும். அமெரிக்க அரசாங்கமும் ஆஸ்கார் அமைப்பும் இணைந்து நடத்திய ஒரு மிகப்பெரிய ஒடுக்குமுறை இது. கம்யூனிசக் கொள்கை கொண்டவர்கள் அல்லது அமெரிக்க அரசை விமர்சிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட பல திறமையான கலைஞர்கள் (இயக்குநர்கள், எழுத்தாளர்கள்) சினிமாவில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டனர். சிறந்த எழுத்தாளரான டால்டன் ட்ரம்போ (Dalton Trumbo) கருப்புப் பட்டியலில் இருந்ததால், தனது சொந்தப் பெயரில் படம் எழுத முடியவில்லை. போலிப் பெயரில் அவர் எழுதிய கதைகளுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது, ஆனால் அதை வாங்க அவர் மேடைக்கு வர முடியாத நிலை இருந்தது. இது அமெரிக்க “ஜனநாயகத்தின்” மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது.

முதல் கருப்பின வெற்றியாளர் சந்தித்த அவமானம்

மூன்றாவதாக, முதல் கருப்பின வெற்றியாளரான ஹேட்டி மெக்டானியல் (Hattie McDaniel) சந்தித்த அவமானத்தைக் கூறலாம். 1939-இல் ‘Gone with the Wind’ படத்திற்காகச் சிறந்த துணை நடிகை விருது பெற்றவர் ஹேட்டி. ஆஸ்கார் வென்ற முதல் கருப்பினத்தவர் இவர்தான். விருது வழங்கும் விழா நடந்த ஹோட்டலில் கருப்பினத்தவருக்கு அனுமதி இல்லை. தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் மற்ற வெள்ளை இன நடிகர்களுடன் அமர அனுமதிக்கப்படவில்லை. அறையின் ஒரு மூலையில், சுவற்றுக்கு அருகில் அவருக்குத் தனியாக ஒரு மேஜை ஒதுக்கப்பட்டது. அவர் இறந்த பிறகு, தனது ஆஸ்கார் விருதை ஹோவர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உயில் எழுதினார். ஆனால் இன்றுவரை அந்த விருது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை; அது திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

“Blaxploitation” மற்றும் ‘ஸ்டீரியோடைப்பிங்’ (Stereotyping) காரணமாகப் பல காலம் வரை, கருப்பின மக்கள் என்றால் போதைப்பொருள் விற்பவர்கள், திருடர்கள் அல்லது அடிமைகள் என்பதாகவே காட்டப்பட வேண்டும் என்பதில் ஹாலிவுட் பிடிவாதமாக இருந்தது. செவ்விந்தியர்களை எப்போதும் வெள்ளை இனத்தவரைக் கொல்ல வரும் காட்டுமிராண்டிகளாகவும், அவர்களை ஒரு வெள்ளை வீரன் கொல்வதையும் ஹாலிவுட் பெருமையாகக் காட்டியது. இது அமெரிக்கா செய்த “இனப்படுகொலையை” (Genocide) நியாயப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு பெரிய முயற்சி. 2020-இல் நடந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) மரணம் மற்றும் ‘Black Lives Matter’ போராட்டம் ஆஸ்காரை ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. இனிமேல் “பன்முகத்தன்மை” (Diversity) இல்லையென்றால் அந்தப் படம் சிறந்த படப் பிரிவிற்குத் தகுதி பெறாது என்ற புதிய விதிகளைக் கொண்டு வந்தனர். ஆஸ்கார் என்பது திறமைக்கான அங்கீகாரம் என்பதைத் தாண்டி, அமெரிக்கா தன்னை ஒரு “நாகரீகமான நாடு” என்று காட்டிக்கொள்ளப் பயன்படுத்தும் ஒரு “மென்-ஆயுதம்” (Soft Power) ஆகும். ஆனால், உண்மையான கலைஞர்கள் எப்போதும் இந்த விருதுகளையும் தாண்டி அதிகாரத்திற்கு எதிரான தங்களின் குரலைத் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்கிறார்கள்.

திரைமறைவுச் சதிகளும் விருது வேட்டையும்

ஆஸ்கார் வரலாற்றில் நடந்த சில அதிரடியான மற்றும் அதிர்ச்சிகரமான “சதி” சம்பவங்கள், திருட்டுத்தனங்கள் மற்றும் திரைமறைவு வேலைகளைப் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம். ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) செய்த “விருது வேட்டை” ஆஸ்கார் வரலாற்றிலேயே ஒரு மோசமான கருப்பு அத்தியாயம். இவர் வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல, ஆஸ்காரை எப்படி “விலைக்கு வாங்கலாம்” என்று உலகுக்குக் காட்டியவர். 1998-ஆம் ஆண்டு ‘Shakespeare in Love’ படத்திற்காக, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘Saving Private Ryan’ தான் சிறந்த படத்திற்கான விருதை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஹார்வி பல மில்லியன் டாலர்களைச் செலவழித்து, ஆஸ்கார் உறுப்பினர்களுக்கு விருந்து வைத்து, அவர்களை மூளைச்சலவை செய்து, ஒரு சாதாரண காதல் படமான ‘Shakespeare in Love’ திரைப்படத்திற்குச் சிறந்த படத்திற்கான விருதை வாங்கிக் கொடுத்தார். இது ஆஸ்கார் வரலாற்றிலேயே ஒரு மாபெரும் திருட்டாக இன்றும் கருதப்படுகிறது. இவரைத் தொடர்ந்துதான் “ஆஸ்கார் கேம்பெய்ன்” (Campaign) என்ற பெயரில் கோடிக்கணக்கான பணம் விளையாடத் தொடங்கியது.

மேலும் 1985-இல் ‘The Color Purple’ படத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி பெரியது. கருப்பினப் பெண்களின் வலியைப் பேசிய இந்தப் படம் 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஒரேயொரு விருது கூட வழங்கப்படவில்லை. இதன் பின்னணியில் இருந்த சதி என்னவென்றால், அப்போதைய ஆஸ்கார் உறுப்பினர்கள் பலருக்கு ஒரு “யூத இயக்குநர்” (ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்) கருப்பின மக்களின் வலியைப் படமாக எடுத்தது பிடிக்கவில்லை. ஒரு இயக்குநருக்கும் அவர் எடுக்கும் கதைக்கும் இருக்கும் ‘இன’ வேறுபாட்டை வைத்து விருதுகளை ஒட்டுமொத்தமாகப் பறித்த ஒரு மோசமான சம்பவம் இது. அனிமேஷன் துறையில் நடந்த ‘The Overlook’ எனும் சதி குறித்த தகவல் உங்களுக்குத் தெரியுமா? பல ஆண்டுகளாக ஆஸ்கார் உறுப்பினர்களில் பலர் அனிமேஷன் படங்களை முழுமையாகப் பார்ப்பதே இல்லை. “இது குழந்தைகளுக்குப் பார்க்கும் கார்ட்டூன் தானே” என்று அலட்சியமாக நினைத்து, தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் எந்தப் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்களோ, அதற்கே வாக்களிப்பதாகப் பல உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால்தான் பல சிறந்த சர்வதேச அனிமேஷன் படங்கள் தோற்கடிக்கப்பட்டு, டிஸ்னி (Disney) போன்ற பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து விருதுகளை வெல்ல முடிந்தது.

விருதுகள் காணாமல் போன மர்மங்களும் ஸ்டுடியோ அரசியலும்

மார்லன் பிராண்டோவின் விருது காணாமல் போன மர்மமும் இதில் அடங்கும். 1954-இல் ‘On the Waterfront’ படத்திற்காக மார்லன் பிராண்டோ ஆஸ்கார் வென்றார். ஆனால் அந்தச் சிலை அவரிடமிருந்து திருடப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அது ஒரு ஏலத்தில் விற்கப்பட்டபோதுதான் தெரியவந்தது. ஆஸ்கார் விருதுகள் ஒரு கௌரவம் என்று சொல்லப்பட்டாலும், பல கலைஞர்கள் அதைத் தங்களின் தனிப்பட்ட வன்மத்தைக் காட்டத் திருடுவதும், மறைப்பதும் தொடர்கதையாகவே இருந்தது. 1954-இல் வார்னர் பிரதர்ஸ் தயாரித்த ‘A Star Is Born’ படத்தில் நடிகை ஜூடி கார்லண்ட் (Judy Garland) அந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதை வெல்வார் என்று ஒட்டுமொத்த உலகமே காத்திருந்தது. அவர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக இருந்ததால், கேமராக்கள் அவர் அறையிலேயே வைக்கப்பட்டன. ஆனால், விருது கிரேஸ் கெல்லிக்கு (Grace Kelly) வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் பெரிய ஸ்டுடியோக்களுக்கு இடையிலான “ஓட்டு வேட்டை” அரசியல் இருந்ததாகப் பிறகு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இது ஜூடி கார்லண்டைத் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு மன அழுத்தத்திற்குள் தள்ளியது.

தொடரும்…

-முத்துவேல்

Leave a Reply