4. TRIPS முதல் COVID வரை: மருந்து, காப்புரிமை, மக்களின் சுகாதார உரிமை
இந்தியா, உலக வர்த்தக நிறுவனத்துடன் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைக்கான சர்வதேச ஒப்பந்தத்தில் (TRIPS – TRADE RELATED ASPECTS OF INTELLECTUAL PROPERTY) கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் ஜனவரி 1, 1995 முதல் அமலுக்கு வந்தது. ஆனால், இந்தியாவில் இதனை முழுமையாக அமல்படுத்த 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதுவரை தனது உள்நாட்டுச் சந்தைக்காக மருந்துகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய இந்தியாவுக்கு அனுமதி இருந்தது. இந்தியச் செயல்பாட்டாளர்கள், உலகளாவிய சுகாதாரச் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தில் மருந்து உற்பத்தி வசதி இல்லாத நாடுகளுக்கு இந்தியாவின் ஜெனரிக் மருந்துகளை எவ்வாறு வழங்குவது என்று ஆராய்ந்தனர்.
அது என்ன ஜெனரிக் மருந்து?
ஜெனரிக் மருந்து என்பது காப்புரிமை பெற்ற பிராண்டட் மருந்தின் அதே மூலப்பொருள், வீரியம், தரம், பாதுகாப்பு மற்றும் சிகிச்சைப் பலன்களைக் கொண்ட மாற்று மருந்தாகும். அதே நேரத்தில், அது மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இந்த மருந்துகள் பிராண்டட் மருந்துகளுக்கு நிகரான தரத்தில், அரசின் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து பணியாற்றியபோது சில முக்கியமான கேள்விகளை அவர்கள் எதிர்கொண்டனர்:
- TRIPS ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா ஆப்பிரிக்காவிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடியுமா?
- உலகின் பிற பகுதிகளில் என்ன நிலை? அல்லது
- WTO வர்த்தக விதிகள் இதனைத் தடை செய்கின்றனவா?
- இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், உலக வர்த்தக அமைப்பு 2001-ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் தோஹா நகரத்தில் ஏற்பாடு செய்த சர்வதேச மாநாட்டில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை என்னவெனில்:
எச்.ஐ.வி/எய்ட்ஸ், மலேரியா, காசநோய் மற்றும் பிற தொற்றுநோய்களுக்கான மருந்துகள் தேவைப்படும்போது, அவை காப்புரிமை பெற்ற மருந்துகளாக இருந்தாலும், காப்புரிமைதாரரின் அனுமதியின்றித் கட்டாய உரிமத்தின் (compulsory license) கீழ் தயாரிக்கவும், இறக்குமதி செய்யவும் வளரும் நாடுகளுக்கு உரிமை உண்டு என்பதற்கு இந்த மாநாடு வழிவகுத்தது.
இதன் மூலம், இந்திய ஜெனரிக் மருந்துத் துறை உலகில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருந்துகளில் சுமார் 80% அளவுக்கு உற்பத்தி செய்து, அவற்றை உலகளவில் விநியோகிக்க முடிந்தது. எய்ட்ஸ் தொற்றுநோய், பொதுச் சுகாதார அவசரநிலைகளைக் கையாள்வதில் TRIPS ஒப்பந்தத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தியது. அதேபோல், கோவிட்-19 அதைவிட ஆழமான ஒரு பிரச்சனையை வெளிக்கொணர்ந்தது. குறிப்பாக, முன்னேறிய நாடுகளின் சுகாதார அமைப்புகளின் பலவீனங்கள் குறித்து அது கேள்விகளை எழுப்பியது. மிகவும் மேம்பட்ட சுகாதார வசதிகளையும் வலுவான பொருளாதார வளர்ச்சியையும் கொண்ட நாடுகள் ஏன் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறின? அதே நேரத்தில், சீனா, தென் கொரியா அல்லது வியட்நாம் போன்ற நாடுகள் எப்படிச் சிறப்பாகக் கட்டுப்படுத்தின? பீட்டர் ஹோட்ஸ் தனது ‘Forgotten People, Forgotten Diseases’ என்ற நூலில், உலகில் சுமார் இரண்டு பில்லியன் மக்கள் இன்னும் தொற்றுநோய்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். இந்த மக்களுக்கான புதிய மருந்துகளை உருவாக்குவதில் பெரிய மருந்து நிறுவனங்களுக்கு ஆர்வம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அமெரிக்கா உருவாக்கிய மலேரியா மருந்துகள், வியட்நாம் மக்களுக்கு எதிரான போரில் பாதிக்கப்பட்ட தனது படையினருக்காகவே உருவாக்கப்பட்டவை. தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் காசநோய் மருந்துகள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. இந்த நோய்கள் இன்றுவரை எங்கும் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. பீட்டர் ஹோட்ஸ் குறிப்பிட்ட “மறக்கப்பட்ட நோய்கள்” என்ற பட்டியலில் காசநோய், மலேரியா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றையும் சேர்த்தால், இந்நோய்களின் அச்சுறுத்தலுடன் ஐந்து பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் என்கிறார். எனவே, இந்நோய்கள் ஒருபோதும் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை என்பது தெளிவாகிறது.
1890 முதல் 1950 வரை நீடித்த மூன்றாவது பிளேக் தொற்று அலை, பணக்கார நாடுகளில் குறைவான உயிரிழப்புகளையே ஏற்படுத்தியது. இதனால், தொற்றுநோய்கள் இனி ஏழை நாடுகளில் உள்ள மக்களை மட்டுமே பாதிக்கும் என்ற தவறான எண்ணம் உருவானது. அத்தகைய மக்களையும் அவர்களது நோய்களையும் தங்களது நாட்டின் எல்லைகளுக்கு வெளியே வைத்திருந்தால் போதும் என்ற எண்ணமும் பணக்கார நாடுகளில் நிலவியது. ஆனால், எய்ட்ஸ் போலவே கொரோனாத் தொற்றுநோயும் சில உண்மைகளை மீண்டும் நிரூபித்தது. நோய்கள் மீண்டும் தாக்கும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. புதிதாக உருவாகக்கூடிய ஒரு தொற்றுநோயிலிருந்து நம்மைப் பிரிப்பது, ஒரு மரபணு மாற்றம் நிகழ்வதற்கு எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகக்கூட இருக்கலாம். எனவே, தொற்றுநோய் ஆபத்திலிருந்து நாம் முற்றிலுமாக வெளியேறிவிடவில்லை.
இந்தச் சூழலில் பணக்கார நாடுகளின் தோல்வி மேலும் வெளிப்படையாகத் தெரிந்தது. கொரோனாத் தொற்று ஆரம்பத்தில் சீனாவில் பரவியபோது, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் என்ற அமெரிக்கப் பல்கலைக்கழகமும் NUCLEAR THREAT INITIATIVE என்ற சர்வதேச அமைப்பும் இணைந்து ஒரு குறியீட்டை வெளியிட்டன. எந்த நாடுகள் தொற்றுநோயைச் சமாளிப்பதற்குச் சிறந்த முறையில் தயாராக உள்ளன என்பதை மதிப்பிடுவதே அதன் நோக்கமாக இருந்தது. அந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. அதற்கு அடுத்த இடங்களில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் இருந்தன. சீனா, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகள் அந்தப் பட்டியலில் மிகவும் பின்னால் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், உண்மையில் என்ன நடந்தது? இந்த மதிப்பீடு முற்றிலும் தவறானது என்பது பின்னர் தெரியவந்தது.
எய்ட்ஸ் தொற்றுப் பரவல் இருந்த காலத்தில், அமெரிக்காவில் புதிய தொற்றுநோய்கள் குறித்த அச்சம் பொதுமக்களின் சிந்தனையில் பெரிய இடத்தைப் பெறவில்லை. ஆனால், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் மக்கள் தொடர்ந்து பிளேக், காலரா, சின்னம்மை, போலியோ போன்ற தொற்றுநோய்களை எதிர்கொண்டனர். இதனால், தொற்றுநோய்களின் போது தேவையான பொதுச் சுகாதார நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தனர். சமீபத்தில் சார்ஸ் மற்றும் H5N1 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா போன்ற ஆபத்தான தொற்றுநோய்களை எதிர்கொண்ட கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், கொரோனாத் தொற்றைச் சமாளிப்பதில் சிறப்பாகச் செயல்பட்டன. இதற்கு அவர்கள் ஏற்கனவே பெற்றிருந்த அனுபவம்தான் காரணமா என்ற கேள்வியும் எழுகிறது.
சோசலிசக் கூட்டமைப்பு சரிந்தபின், மேற்கத்திய நாடுகளில் ஒரு மோசமான சிந்தனை உருவானது. இனி உலகத்தை உலகளாவிய மூலதனத்தின் நலன்களுக்கு ஏற்ப மறுசீரமைக்கலாம் என்ற நம்பிக்கை உருவானது. இந்தக் கொள்கை பல துறைகளைக் குறிவைத்தது. அவற்றில் ஒன்று பொதுச் சுகாதார அமைப்பு அல்லது “சோசலிச மருத்துவம்” எனக் கருதப்பட்ட அமைப்பாகும். சுகாதாரச் சேவைகளைத் தனியார்மயமாக்கும் செயல்முறை தொடங்கியது. அரசு நிதியுடன் மேற்கொள்ளப்படும் மருந்து ஆராய்ச்சிகளையும் தனியார்மயமாக்கும் புதிய போக்கு உருவானது. இதனை உலக வங்கி (World Bank) மற்றும் உலகம் முழுவதும் தோன்றிய பல சிந்தனைக் குழுக்கள் (think tanks) ஊக்குவித்தன. இது மூலதனத்தின் “நவதாராளவாத” கட்டமாக இருந்தது. இதில்:
- சுகாதாரம்,
- நகராட்சி சேவைகள்,
- மின்சாரம்,
- தொலைத்தொடர்பு, ரயில்வே
போன்ற பொதுத் துறைகள் எதுவும் விடுபடவில்லை.
மூலதனத்தின் பேராசை இந்தத் துறைகளில் நுழைந்தால் என்ன நடக்கும்?
- சுகாதாரச் செலவுகள் என்ன ஆகும்?
- காப்புரிமை கொண்ட உயிர் காக்கும் மருந்துகளின் நிலை என்ன ஆகும்?
இந்தக் கேள்விகளை இடதுசாரி சுகாதாரச் செயல்பாட்டாளரான அமித் சென்குப்தா, 2018-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற மக்களுக்கான சுகாதாரப் பேரவையில் (People’s Health Assembly) எழுப்பினார். மேலும், ஒரு வைரஸ் பரவலுடன் இந்த மூலதனப் பேராசை இணைந்தால் என்ன ஆகும்? தொற்றுநோய்கள் கடந்த காலத்தின் விவகாரம் என்று நினைத்த நாடுகளுக்குள் அந்த வைரஸ் புகுந்தால் என்ன ஆகும்? எய்ட்ஸ் நோய்க்கான உலகளாவிய போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரச் செயல்பாட்டாளர்கள் ஒரு சர்வதேச சுகாதார இயக்கத்தை உருவாக்கினார்கள். இந்த இயக்கம் ஒரு முக்கியமான அரசியல் முடிவை எடுத்தது. இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்குலக நாடுகளில் இந்த இயக்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வடக்குலக நாடுகளைச் சேர்ந்த அரசு சாரா அமைப்புகள் இதனை வழிநடத்தக் கூடாது என்பதே அந்த முக்கிய முடிவாகும்.
ஜப்ருல்லா சவுத்ரி, அமித் சென்குப்தா மற்றும் பிறர் ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந்தனர். இந்த இயக்கத்திற்குள் ஏற்கனவே உள்ள ஆதிக்க அமைப்புகளை மீண்டும் உருவாக்கக் கூடாது என்பதே அது. இதனால்தான் 2000-ஆம் ஆண்டு டாக்காவில் மக்களுக்கான சுகாதாரப் பேரவை (People’s Health Assembly) தொடங்கப்பட்டது. அதன் மூலம் உலகளாவிய People’s Health Movement (PHM) உருவானது. இந்தியாவில் ஜன சுவஸ்திய அபியான் (Jana Swasthya Abhiyan – JSA) என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. பொதுச் சுகாதாரப் பிரச்சனைகளைத் தொடர்ந்து உலக அரங்கில் முன்னிலைப்படுத்தும் வகையில், சுகாதாரச் செயல்பாட்டாளர்களின் ஒரு வலையமைப்பை இது உருவாக்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் மீது அமெரிக்காவின் தலையீடும் பெரிய தனியார் முதலாளிகளின் தாக்கமும் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். சுகாதாரம் மேலும் தனியார்மயமாகும் போக்கையும் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். தனியார் முதலாளிகளின் தலையீடு என்பது, சுகாதாரத்தை ஒரு பொதுச் சொத்தாகக் கருதும் அணுகுமுறையிலிருந்து பின்வாங்குவதாகும்.
இந்த விரிவான செயல்பாட்டின் ஒரு பகுதியாக, மக்கள் சுகாதார இயக்கத்தைச் சார்ந்த தன்னார்வலர்களால் ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு உலக சுகாதார அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்று, அங்கு நடைபெறும் விவாதங்களைப் பின்தொடர்கிறது. மேலும், பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, நிர்வாகக் குழுவிற்குக் கருத்துகளையும் முன்வைக்கிறது. தனியார்மயமான சுகாதாரத்தின் சந்தை சார்ந்த பிரச்சனைகள் முதல் காப்புரிமை தொடர்பான போராட்டங்கள் வரை பல உலகளாவிய சிக்கல்களை இந்தச் செயல்பாடு உள்ளடக்கியது. உலக சுகாதார அமைப்புடன் இருந்த தொடர்பு, அமித் சென்குப்தா அவர்களை மீண்டும் “அறிவுசார் சொத்துரிமை” என்ற விஷயத்தில் கவனம் செலுத்தச் செய்தது. குறிப்பாக, புதிதாக உருவாகி வந்த “biologics” துறையில் அவர் கவனம் செலுத்தினார். Biologics என்பது புற்றுநோய் முதல் ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் போன்ற அழற்சி நோய்கள் வரை பல நோய்களுக்குப் பயன்படும் நவீன மற்றும் மேம்பட்ட மருந்துகளாகும். இவை வைரஸ் எதிர்ப்பு மருந்துகளிலும் பயன்படத் தொடங்கியுள்ளன. ஆனால், இந்த உயிரியல் மருந்துகள் மிகவும் உயர்ந்த விலையில் இருந்ததால், வளர்ந்து வரும் நாடுகளில் மிகப்பெரிய பணக்காரர்களைத் தவிர மற்றவர்களால் அவற்றை அணுகுவது சாத்தியமற்றதாக இருந்தது. உதாரணமாக, நெக்சாவர் என்ற புற்றுநோய் மருந்தை Bayer நிறுவனம் ஓர் ஆண்டுக்கான சிகிச்சைக்கு 65,000 டாலர் விலையில் விற்றது. இதற்குப் பதிலாக, இந்தியா ஒரு கட்டாய உரிமத்தை (compulsory license) வழங்கி, நாட்கோ பார்மா (Natco Pharma) நிறுவனத்திற்கு அதே மருந்தை இந்தியாவில் தயாரிக்க அனுமதி அளித்தது. பேயர் நிறுவனத்தின் இயக்குநர் மார்ஜின் டெக்கர்ஸ் இதனை “திருட்டு” என்று கூறினார். மேலும், அவர் வெளிப்படையாகக் கூறியது: “இந்த மருந்தை நாங்கள் இந்தியர்களுக்காக உருவாக்கவில்லை… அதை வாங்கக்கூடிய மேற்கத்திய நாடுகளில் உள்ள நோயாளிகளுக்காகவே உருவாக்கினோம்.”
கொரோனாத் தொற்றுநோய் பரவியதால், பொதுச் சுகாதாரம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து மீண்டும் உலகளவில் பெரும் விவாதம் நடைபெற்றது. தொற்றுநோய்கள் ஓர் அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட காலம் வரை, பொதுச் சுகாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த அச்சம் “மறக்கப்பட்டதும்”, பணக்கார நாடுகளில் பொதுச் சுகாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன. தனியார் மருத்துவமனைகளில் லாபமே முக்கிய நோக்கமாக மாறியது. அதே மூலதன அடிப்படையிலான அணுகுமுறைகள், “திறன்” என்ற பெயரில் அரசு மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் சுகாதாரச் சேவைகள் ஒரு சமூக உரிமை என்ற நிலையிலிருந்து ஒரு சந்தைப் பொருளாக மாறத் தொடங்கின.
மூலதனத்தின் “அதிகபட்சத் திறன்” என்ற கொள்கை, மருத்துவமனைப் படுக்கைகள், உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை வலியுறுத்தியது. தொடர்ந்து எழும் மற்றொரு முக்கியப் பிரச்சனை அறிவுசார் சொத்துரிமைகள் அல்லது காப்புரிமைகள் (patents) பற்றியதாகும். கோவிட்-19 மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான அவசரத் தேவை ஏற்பட்டதால், இந்தப் பிரச்சனை மீண்டும் உலகளவில் முக்கிய விவாதமாக மாறியது. வளர்ந்து வரும் நாடுகள் பயன்படுத்தி வந்த கட்டாய உரிமம் பெறும் நடைமுறையை கோவிட்-19 காலத்திலும் பயன்படுத்த முடியும். எந்த நாடும் இந்த விதியைப் பயன்படுத்தி, ஒரு மருந்து அல்லது தடுப்பூசியின் மீது தனியார் நிறுவனங்கள் வைத்திருக்கும் ஆதிக்கத்தை உடைக்க முடியும். இந்த உரிமை 2001-ஆம் ஆண்டு தோஹா பிரகடனத்தின் மூலம் ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கப்பட்டது. மக்களின் சுகாதாரம் மற்றும் மருந்துகளைப் பெறுவதற்கான உரிமைக்கும், முதலாளிகளின் லாபத்திற்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிட்-19 அதன் இன்னொரு வடிவமாக வெளிப்பட்டுள்ளது.
LEFT WORD பதிப்பகம் வெளியிட்ட “KNOWLEDGE AS COMMONS” என்ற புத்தகத்தில் பிரபீர் புர்கயஸ்தா அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.
– பிரபீர் புர்கயஸ்தா
தமிழில்: மோசஸ் பிரபு







