அறிவியல்

இந்திய அறிவியல் துறை வளர்ச்சியில் மறைக்கப்பட்ட இடதுசாரிகளின் பங்களிப்பு – 3

S3

பகுதி 3. ஆதிக்கம் இல்லாத சுதந்திரமான உலகிற்காகப் போராடியவர்கள்:

இந்தியா போன்ற நாடுகளில் மருந்துத் துறை சார்ந்த போராட்டம், மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல; அது இந்தியா சுயசார்பு நிலையை அடைவதற்கான போராட்டமாகவும் இருந்தது. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு மேற்கத்திய நாடுகள் அல்லாத பிற நாடுகள் சுயசார்பை அடைய முயன்றதை, மேற்கத்திய நாடுகள் கம்யூனிசத்துடன் தொடர்புடைய செயலாகவே பார்த்தன. இதேபோல், எந்த வல்லரசுக் கூட்டணியுடனும் இணையாத அணிசேராக் கொள்கையையும் (non-alignment) அவ்வாறே புரிந்துகொண்டன. அறிவியல் அறிவின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை எதிர்ப்பது, கம்யூனிசச் சித்தாந்தவாதிகளுடன் இணைந்த ஒரு நடைமுறை உத்தி சார்ந்த நடவடிக்கையாகக் கருதப்பட்டது. அதே நேரத்தில், மருந்து நிறுவனங்கள் இதைத் தங்களுக்கிடையிலான பனிப்போரின் ஒரு பகுதியாகவே கருதின.

மெர்க் & கோ (Merck & Co) நிறுவனத்தின் தலைவர் ஜே.டி. கானர் (J.T. Connor), மருந்துத் துறையைப் பற்றிய கெஃபாவர் (Kefauver) குழுவின் நாடாளுமன்ற விசாரணையில் சாட்சியம் அளித்தார். அப்போது, “கடந்த ஆண்டு இந்தியாவில் சோவியத் ஒன்றியத்துடன் நடந்த ஆரம்பக்கால வணிகப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம்” என்று கூறினார். சோவியத் அரசாங்கமும் மெர்க் (Merck) நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி நிலையம் அமைக்கும் உரிமைக்காகப் போட்டியிட்ட சம்பவத்தையே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உலக சுகாதார நிறுவனம், யூனிசெப் மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியாவுக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத் தொழில்நுட்பத்தைக் கொண்டுவரச் சாகிப் சிங் சோக்கே மேற்கொண்ட முயற்சிகளுடன் இந்தச் சம்பவம் தொடர்புடையதாக இருந்தது. “எங்கள் மருந்துத் தொழில் முக்கியமான தேசியச் சொத்தாக வளர்ந்துள்ளது. நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் எங்களின் பங்களிப்புகளும், எதிர்காலத்திற்கான திறன்களும் நன்கு அறியப்பட்டவையாக உள்ளன” என்று ஜே.டி. கானர் கூறினார்.

உலகளாவிய கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தில் நாமும் சில பங்களிப்புகளைச் செய்திருக்கிறோம் என்பது இப்போதுதான் தெளிவாகத் தெரிகிறது. மெர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, வலுவான காப்புரிமை அமைப்பைப் பாதுகாப்பதற்கான பெரிய மருந்து நிறுவனங்களின் போராட்டத்தை, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவே சுட்டிக்காட்டினார். சராசரியான தொழில்துறை அடித்தளத்தைக் கொண்ட எந்த நாடும் மருந்துகளையும் மருந்துத் தயாரிப்புகளையும் உருவாக்க முடியும் என்பது பெரிய மருந்து நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனவே, புதிய மருந்துகளுக்கான காப்புரிமைகள் அவர்களின் உலகளாவிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த மிகவும் அவசியமாக இருந்தன. அதனால், அவற்றை அவர்கள் தீவிரமாக ஆதரித்து வந்தனர். இந்தியாவோ ஒரு சாதாரண சந்தையாக மட்டும் இருக்கவில்லை. அது தனது அறிவியல் நிறுவனங்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டிருந்தது. அக்காலத்தின் சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்புத் துறையிலும் இந்தியா திறன் பெற்றிருந்தது. மேலும், இந்தியாவுக்குப் பெரிய அளவிலான உள்நாட்டுச் சந்தையும் இருந்தது. இதனால், இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் இந்தியாவைத் தாண்டியும் எதிரொலித்தது. அதனால்தான் இந்தியா தனது காப்புரிமைச் சட்டங்களை மாற்றுவதற்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாமதமானது. இந்தியாவில் ஏற்பட்ட இந்த மாற்றம் உலகளாவிய மூலதனத்திற்கு ஒரு கடும் எச்சரிக்கையாக இருந்தது; அவர்களின் உலகச் சந்தை உண்மையிலேயே பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியிருந்தது.

1961-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கெஃபாவர் குழுவின் (Kefauver Committee) அறிக்கை, அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தங்களின் உற்பத்திச் செலவுகளைவிட 7,000% வரை அதிக விலையில் மருந்துகளை விற்றதாகச் சுட்டிக்காட்டியது. உலகிலேயே மிக உயர்ந்த விலையை யார் செலுத்தினார்கள்? இந்தியாவின் மிக ஏழை மக்கள்தான். இந்தத் தகவல் இந்தியாவில் பெரிய செய்தியாகப் பரவியது. இதனால், இந்தியாவின் காப்புரிமைச் சட்டங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுப்பெற்றது.

கெஃபாவர் அறிக்கை, பொருள் உற்பத்தியாளரின் காப்புரிமை ஆதிக்கத்தை மூன்று ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும், ஐயங்கார் குழு கூறியதைப் போலவே, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ் போன்ற முன்னேறிய ஐரோப்பிய நாடுகள் பொருள் உற்பத்திக்கான காப்புரிமைகளை வழங்கவில்லை என்பதையும் குறிப்பிட்டது. அந்த நாடுகள் செயல்முறை காப்புரிமைகளை மட்டுமே வழங்கின என்பதையும் சுட்டிக்காட்டியது.

அந்த அறிக்கைகள் மேலும் சில பரிந்துரைகளை முன்வைத்தன. ஒரு புதிய மருந்திற்குக் காப்புரிமை வழங்கப்பட வேண்டுமெனில், அது வேறுபட்ட மூலக்கூறு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், குறிப்பிடத்தக்க அளவில் அதிகமான சிகிச்சைப் பலன்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இது இந்தியாவின் 2005-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட காப்புரிமைச் சட்டத்தில் இடம்பெற்ற அணுகுமுறைக்கு இணையானதாகும். 1970-ஆம் ஆண்டின் புதிய காப்புரிமைச் சட்டத்துடன் சேர்ந்து, உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதில் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணைகளும் ஹாத்தி குழு அறிக்கையும் முக்கியப் பங்காற்றின. இதன் விளைவுகள் தெளிவாகக் காணப்பட்டன. 1970-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்திய மருந்துச் சந்தையில் சுமார் 85 சதவீதப் பங்கைக் கொண்டிருந்த பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் பங்கு, 1999-ஆம் ஆண்டளவில் 40 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது.

இந்தியா தனது மருந்துத் தேவைகளில் ஒரு முக்கியப் பகுதியைச் சுயமாகவே உற்பத்தி செய்யத் தொடங்கியது. குறிப்பாக, ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. மேலும், பெரும்பாலான மருந்துகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உற்பத்தியிலும் முன்னேறியது. இந்த உற்பத்தி மாற்றம் சாத்தியமானதற்கு இந்தியா பெற்றிருந்த அறிவியல் அறிவு முக்கியக் காரணமாக இருந்தது. தேவையான தொழில்துறை அனுபவம் கொண்ட நிபுணர்களும் இதில் முக்கியப் பங்காற்றினர். மேலும், மாற்று உற்பத்தி முறைகளை உருவாக்க உதவிய சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களும் இந்த மாற்றத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தன.

1990-களில், இந்தியா ஜெனரிக் மருந்துகள் மற்றும் API உற்பத்தியில் உலகளவில் ஒரு முக்கியமான நாடாக உருவெடுத்தது. தற்போது, இந்திய மருந்துத் துறை உலகின் மிகப்பெரிய ஜெனரிக் மருந்து விநியோகஸ்தராக உள்ளது. உலகளவில் ஜெனரிக் மருந்துகளை விநியோகிக்கும் சந்தையில் சுமார் 20 சதவீதப் பங்கை இந்தியா கொண்டுள்ளது. இதுவே பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் அஞ்சியிருந்த விஷயம். புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகள், காலனித்துவ காலத்தில் இருந்த காப்புரிமைச் சட்டங்களை பலவீனப்படுத்தினால், உலகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் கட்டுப்பாடும் பலவீனமாகும் என்பதே அவர்களின் அச்சமாக இருந்தது. முன்னாள் காலனித்துவ நாடுகளில் தங்களது சந்தையை இழப்பது மட்டும் அவர்களின் கவலையாக இருக்கவில்லை. அந்த நாடுகளின் மருந்துத் தொழில் வளர்ச்சி, அவர்களது சொந்த உள்நாட்டுச் சந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்ற நிலையும் உருவானது. இந்திய மருந்துத் துறை முதலில் இந்தியாவிலும், பின்னர் உலகளாவிய அளவிலும் வளர்ச்சியடைவதற்குக் காப்புரிமைச் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் அவசியமாக இருந்தன.

இந்திய மருந்துத் துறையின் வரலாற்றில் அடிக்கடி மறக்கப்படும் ஒரு முக்கிய அம்சம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பாகும். Indian Drugs and Pharmaceuticals Ltd. மற்றும் Hindustan Antibiotics Ltd. ஆகிய நிறுவனங்கள், தடுப்பூசிகள், சீரம் மற்றும் பல்வேறு மருந்துகளின் தயாரிப்பில் ஹாஃப்கின் நிறுவனம் பெற்றிருந்த அனுபவத்தின் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்தன. அதேபோல், இந்தியத் தனியார் துறையும் பொதுத்துறையிடமிருந்து மனித வளத்தையும் அறிவையும் ‘கடன்’ பெற்றது. இன்று பொதுத்துறை பலவீனமடைந்திருக்கலாம். ஆனால், மருந்துத் துறையில் இந்தியா அடைந்த வெற்றிகளில் அதன் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பி.எம். பார்கவா அவர்களின் தலைமையில் ஹைதராபாத்தில் உள்ள உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் (Centre for Cellular and Molecular Biology – CCMB) மேற்கொள்ளப்பட்ட பணிகள், இந்தியாவின் மருந்தியல் புரட்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன. இவ்வாறு இந்திய விஞ்ஞானிகள் அமைத்த அடித்தளத்தினால்தான் இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜெனரிக் மருந்துகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. 1980-களில் பல சுகாதாரச் செயல்பாட்டாளர்களுக்கு முக்கியமான போராட்டம்:

  • நியாயமான மருத்துவ சிகிச்சை (rational drug therapy),
  • அத்தியாவசிய மருந்துப் பட்டியல் உருவாக்கம், மற்றும்
  • அந்த மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவையாக இருந்தன.

உலகம் முழுவதும் பலரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை நம்பிக்கை என்னவெனில், தொற்றுநோய்கள் ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன என்பதாகும். அவற்றைச் சமாளிப்பதற்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவில் பயன்பாட்டில் இருந்தன என்றும் கருதப்பட்டது. இதன் அடிப்படையில் மற்றொரு வாதமும் முன்வைக்கப்பட்டது. காப்புரிமைப் பாதுகாப்பில் உள்ள புதிய மருந்துகளை, அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் உள்ள பழைய மருந்துகளால் எளிதில் மாற்றிக்கொள்ளலாம்; ஆகவே, புதிய மருந்துகள் ஏழை நாடுகளுக்கு அவசியமில்லை என்பதே அந்த வாதமாகும்.

உலக சுகாதார நிறுவனம் ஓர் அத்தியாவசிய மருந்துப் பட்டியலைத் தயாரித்தது. மேலும், சில சுகாதார இயக்கங்கள் சந்தையில் உள்ள தேவையற்ற மருந்துகள் மற்றும் மருந்துச் சேர்மங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகப் போராடின. அறிவியல் சுயசார்புக்கான போராட்டத்தில் இருந்த நாங்கள், சந்தையில் உள்ள முறையற்ற மருந்துச் சேர்மங்களை எதிர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தோம். ஆனால், அதே சமயம் ஏழை நாடுகளுக்கும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட (latest) மருந்துகள் தேவை என்பதையும் நாங்கள் உணர்ந்தோம். ஒரு நோயாளிக்குத் தேவையான மருந்து, அவரது நோயின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். அந்த நோயாளியின் பணம் செலுத்தி மருந்தை வாங்கும் திறன் அல்லது அவர் வாழும் நாட்டின் செல்வம் அல்லது வறுமை ஆகியவற்றின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்படக் கூடாது. சில அத்தியாவசிய மருந்துகளை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் என்ற வாதம் இந்தியா போன்ற நாட்டிற்கு இன்னும் பொருத்தமற்றதாக இருந்தது. ஏனெனில், இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடிய, வளர்ந்து வரும் மருந்துத் தொழில் இருந்தது.

எய்ட்ஸ் தொற்றுநோயின் பரவல், சுகாதாரச் செயல்பாட்டாளர்களையும் அறிவியல் செயல்பாட்டாளர்களையும் ஒன்றிணைத்தது. தொற்றுநோய்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியானது என்பதை எய்ட்ஸ் பரவல் தெளிவாகக் காட்டியது. இத்தகைய நோய்களுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டது என்று நினைப்பது ஒரு தவறான மாயையாகும். நோய்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் அல்லது மீண்டும் பரவலாம். எனவே, புதிய மருந்துகள் தொடர்ந்து தேவையாக இருக்கின்றன. இதனை மீண்டும் நாம் COVID-19 (SARS-CoV-2) பரவலின்போது கண்டோம்.

எய்ட்ஸ் தொற்றுநோய், பெரிய மருந்து நிறுவனங்களின் கடுமையான மனிதாபிமானமற்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்தியது. லாபத்திற்காக எண்ணற்ற மனித உயிர்களை இழக்கத் தயங்காத மனநிலையை அது வெளிக்கொண்டு வந்தது. எய்ட்ஸ் மருந்துகளுக்குப் பெரிய மருந்து நிறுவனங்கள் நிர்ணயித்த விலை ஆண்டுக்கு 10,000–15,000 டாலராக இருந்தது. இதே சமயம், இந்தியாவில் அந்த மருந்துகளின் விலை 350 டாலர் மட்டுமே. அந்தக் காலத்தில் இருந்த சுமார் 25 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகளில் 99% பேருக்கு இந்த அதிக விலையைக் கொடுத்து மருந்துகளை வாங்கும் திறன் இல்லை. 2021 இறுதியில் உலகளவில் 38 மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்கள் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டிருந்தனர். “தள்ளுபடி” விலையாக வழங்கப்பட்ட 4,000 டாலர் கூட, இந்திய நிறுவனமான சிப்ளா வழங்கிய 350 டாலர் விலையைவிட 12 மடங்கு அதிகமாக இருந்தது. இதனுடன், பெரிய மருந்து நிறுவனங்கள் காப்புரிமைச் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டி வழக்குகளையும் தொடர்ந்தன. தென்னாப்பிரிக்கா இந்தியாவிலிருந்து ஜெனரிக் எய்ட்ஸ் மருந்துகளை இறக்குமதி செய்ய முயன்றதை எதிர்த்து, அவை 41 வழக்குகளைத் தாக்கல் செய்தன.

– பிரபீர் புர்கயஸ்தா
தமிழில்: மோசஸ் பிரபு

தொடரும்…

Leave a Reply