பகுதி 2: சுதந்திர இந்தியாவில் இடதுசாரிகளும் அறிவியலும்:
இடதுசாரிகள் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் விரிவாக்கத்திற்குப் பங்களித்ததோடு மட்டுமல்லாமல், இந்தியா அறிவியல் துறையில் சுயசார்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவும் போராடினார்கள். இந்த முயற்சி பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துடனும், காலனித்துவ மனப்பாங்குடன் இருந்த சில விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடனும் கடுமையான மோதலை உருவாக்கியது. இன்றும் இந்தப் போராட்டம் தொடர்கிறது.
இந்திய இடதுசாரிகள் தேசிய அறிவியல் நிறுவனங்களை உருவாக்குவதிலும், அவற்றைச் சுயசார்பு வளர்ச்சிக்கான போராட்டத்துடன் இணைப்பதிலும், மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த முக்கியமான வரலாற்றின் சில அம்சங்களை விளக்குவதற்காக, நான் மருந்துத் தொழில்துறையை உதாரணமாகக் கொள்கிறேன்.
பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகும், மருந்துத் தொழில் பெருமளவில் பிரிட்டிஷ் முதலாளிகளின் கட்டுப்பாட்டிலேயே நீடித்தது. அவர்கள் மருந்து தயாரிப்பிற்கான மூலப்பொருட்களை (API – Active Pharmaceutical Ingredient) இங்கிலாந்தில் தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்தனர். சில சிறிய இந்திய மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டாலும், அவற்றுக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கான போதுமான ஆதரவும் உதவியும் கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தியக் காப்புரிமைச் சட்டத்தையும், அதன் சட்டபூர்வ அதிகாரத்தையும் எதிர்கொள்வதற்கான திட்டம் சிறிய மருந்து நிறுவனங்களிடம் இல்லை. இந்தச் சட்டம் பன்னாட்டு நிறுவனங்களுக்கே பெரும் ஆதரவை வழங்கியது.
இதனால், இந்தப் போராட்டம் இரண்டு தளங்களில் நடைபெற்றது:
- இந்திய மக்களின் நலனுக்கு ஆதரவாகக் காப்புரிமைச் சட்டங்களை மாற்றுவது.
- உள்ளூர் மருந்துத் தொழிலுக்குத் தேவையான அறிவியல் அடித்தளத்தையும் தொழில்நுட்பத் திறனையும் உருவாக்குவது.
சாகிப் சிங் சோக்கே 1932-ஆம் ஆண்டு முதல் ஹாஃப்கின் (Haffkine) நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநராகச் செயல்பட்டார். தடுப்பூசிகளைத் தயாரிக்கும் சிறிய அளவிலான அமைப்பாக இருந்த அதனை, முழுமையான நவீன மருந்து நிறுவனமாக மாற்றினார். அவரது குழுவினர் பின்னர் சோவியத் ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டனர். இந்தியாவின் ஆரம்பகால பொதுத்துறை மருந்து நிறுவனங்களான Hindustan Antibiotics Limited மற்றும் Indian Drugs and Pharmaceuticals Limited ஆகியவை வலுப்பெறவும் அவர்கள் உதவினர். இந்தியா மருந்துத் துறையில் சுயசார்பு நிலையைப் பெற வேண்டுமெனில், காப்புரிமைச் சட்டத்தில் மாற்றம் செய்வது அவசியம் எனச் சோக்கே திட்டவட்டமாகக் கூறினார். சோக்கே அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்தியக் காப்புரிமைச் சட்டம்-1970 (INDIAN PATENTS ACT-1970) அமலுக்கு வரச் சுமார் 20 ஆண்டுகள் ஆனது. இதில் மூன்று முக்கியச் சவால்கள் இருப்பதைச் சோக்கே உணர்ந்திருந்தார்:
- ஏற்கனவே பிற பகுதிகளில் தயாரிக்கப்படுகிற மருந்துகளையும், நவீன புதிய மருந்துகளையும் தயாரிப்பதற்குத் தேவையான அறிவியல் திறனைப் பெற வேண்டும்.
- ஆய்வகத்தில் மட்டுமல்லாமல், தொழிற்சாலை அளவில் அந்த மருந்துகளைத் தயாரிக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- தயாரிக்கப்படும் மருந்துகள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
அந்தக் காலத்தில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே. இன்றைய தலைமுறைக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம். தொற்றுநோய்கள், பெருந்தொற்றுகள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக இருந்தன.
சோக்கே போன்ற முன்னோடிகளுக்கு மேலும் மூன்று முக்கியமான பிரச்சனைகள் உருவாயின:
- இந்தியக் காப்புரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பது.
- மருந்துகளைத் தயாரிக்கப் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவது.
- இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும் ஆராய்ச்சி நிறுவனங்களை வளர்ப்பது.
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் இந்தியாவின் உள்நாட்டு மருந்துத் தொழில்துறைக்குத் தேவையான அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியது. உசைன் ஜாகீர், நித்யா ஆனந்த் — லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் (CDRI) இயக்குநராக இருந்தவர் — மற்றும் தேசிய வேதியியல் ஆய்வகம் போன்றவற்றின் தலைமையில் உருவான இந்த சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு, இந்திய மருந்துத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. குறிப்பாக, மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் வைத்திருந்த கட்டுப்பாட்டைத் தகர்க்க இந்திய மருந்துத் துறைக்கு வழிவகுத்தது.
இந்திய மருந்து நிறுவனங்களின் மாற்றத்திற்குச் சோக்கே தவிர, குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த இன்னொரு நபர் குவாஜா அப்துல் ஹமீது. இவர் 1935-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “சிப்ளா” (CIPLA – CHEMICAL, INDUSTRIAL AND PHARMACEUTICAL LABORATORIES LIMITED) நிறுவனத்தின் நிறுவனர். இவர் காந்தியின் ஆதரவாளராகவும் தீவிர தேசியவாதியாகவும் இருந்தார். சோக்கேயுடன் ஹமீதும் ஒரு சிஎஸ்ஐஆர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
ஹமீதின் மகன் யூசுப் ஹமீது தனது தந்தையின் கொள்கையை அப்படியே பின்பற்றினார். மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க முயற்சித்தார். “மருந்துகளின் ராபின் ஹூட்” என்று அழைக்கப்படும் சிப்ளா, வளர்ந்து வரும் நாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மலிவான மருந்துகளை வழங்கியது. மற்றொரு குறிப்பிடத்தக்க நபர் டாக்டர் நித்யா ஆனந்த். CDRI இயக்குநராக இருந்த அவர், மருந்துகளைச் சந்தைக்குக் கொண்டுவருவதற்கான புதிய தயாரிப்பு முறைகள் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின்னர், 1988-இல் பி.கே. கேய்லா தலைமையில் தேசியக் காப்புரிமைச் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட குழுவில் இடம்பெற்று, எஸ்.பி. சுக்லாவுடன் இணைந்து பணியாற்றினார்.
1978-ஆம் ஆண்டு முதல் டெல்லி அறிவியல் இயக்கத்தில் செயல்பட்ட நாங்கள், நித்யா ஆனந்த், அப்துல் ஹமீது மற்றும் ரான்பாக்ஸி நிறுவனர் பாய் மோகன் சிங் போன்ற “சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த முன்னோடிகள்” பற்றிய தகவல்களை அறிந்திருந்தோம். ஆனால், அதற்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த முன்னோடிகளின் பங்களிப்பை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் காலனித்துவ எதிர்ப்புச் செயல்பாட்டாளர்களாகவும் இருந்தனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு, லாகூர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் பக்ஷி டேக் சந்த் தலைமையில், காப்புரிமைச் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. காலனித்துவ காலத்தில் இருந்த சட்டம் மருந்துகளின் விலையை அதிகமாக வைத்திருப்பதாக இந்தக் குழு குறிப்பிட்டது. ஆனாலும், அதற்கு மாற்றாக ஒரு புதிய சட்ட வடிவமைப்பை முன்வைக்கத் தவறியது. 1950-களில் இந்தியா பொதுத்துறை நிறுவனங்கள் வழியாக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த முயன்றது. இருந்தபோதிலும், இந்தியச் சந்தையில் பெரும்பாலான மருந்துகள் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. 1957-இல், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் ராஜகோபால அய்யங்கார் தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டது. காப்புரிமை தொடர்பாக என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் பரிந்துரைப்பதே அந்தக் குழுவின் நோக்கமாக இருந்தது. தனது அறிக்கையில், சோக்கேயின் நெருங்கிய நண்பர் கே. கணபதி, மருந்துத் தொழிலில் காப்புரிமைகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்காற்றியதை ராஜகோபால அய்யங்கார் குழு ஏற்றுக்கொண்டது. சோக்கே விரும்பியபடி காப்புரிமைச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய ராஜகோபால அய்யங்கார் குழு முன்வரவில்லை.
ஆனால், உணவு, மருந்து மற்றும் ரசாயனத் துறைகளில் “பொருளுக்கான காப்புரிமை” (product patents) நீக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது. அதற்குப் பதிலாக, “பொருளைத் தயாரிப்பதற்கான குறிப்பிட்ட செயல்முறைக்கான காப்புரிமை” (process patents) மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் கால அளவு குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
ராஜகோபால அய்யங்கார் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட மசோதா முதலில்:
- 1965-இல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.
- அந்தக் குழு 1966-இல் தனது முழு அறிக்கையைச் சமர்ப்பித்தது.
- இறுதியாக, 1970-இல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகான காலத்திலும், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் உற்பத்தித் திறனைக் குறைந்த அளவிலேயே வைத்திருந்தன. அதே நேரத்தில், புதிய மருந்துகள் மீது வைத்திருந்த கட்டுப்பாட்டின் மூலம் அதிக லாபங்களைப் பெற்றன. அந்த லாபத்தின் பெரும்பகுதி அவர்களின் சொந்த நாடுகளில் இருந்த நிறுவனங்களுக்கே திரும்பிச் சென்றது.
மருந்துகளின் விலை மிகவும் அதிகமாக இருந்ததால், பெரும்பாலான இந்தியர்களால் அவற்றை வாங்க முடியாத நிலை இருந்தது. 1911-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரிட்டிஷ் இந்தியக் காப்புரிமைச் சட்டம் சுதந்திரத்திற்குப் பிறகு உடனடியாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த மாற்றம் நிகழ இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாமதமானது. பன்னாட்டு நிறுவனங்களின் வலிமையும், இந்தியாவில் இருந்த நவகாலனித்துவ ஆதரவாளர்களின் செல்வாக்கும் இதற்கு முக்கியக் காரணங்களாக இருந்தன. பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமைகளைக் கட்டுப்படுத்தியதால் மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இதன் காரணமாக, பெரும்பாலான இந்தியர்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வாய்ப்பு குறைந்தது.
– பிரபீர் புர்கயஸ்தா
தமிழில்: மோசஸ் பிரபு
தொடரும்…







