பகுதி 1 : அறிவியல் வளர்ச்சியின் பின்னணியில் இடதுசாரி சிந்தனையாளர்கள்
நவீன இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி குறித்து விவாதம் எழும்போதெல்லாம், ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பையும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பையும் பலரும் குறிப்பிட்டுப் பாராட்டுவார்கள். குறிப்பாக, இந்தியத் தொழில்மயமாக்கலுக்கு நேருவின் பங்களிப்பு எவ்வாறு பெரிதும் உதவியது என்பது குறித்து அதிகம் பேசுவார்கள். நேரு இதில் முக்கியப் பங்களிப்புச் செய்திருக்கிறார். அதில் நமக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இந்த வளர்ச்சியில் இடதுசாரிச் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட அறிவியலாளர்களுக்கும் முக்கியப் பங்களிப்பு உண்டு. இதை யாரும் பெரிதாகக் கவனத்தில் கொள்வதில்லை. இந்திய அளவில் வங்காளத்தைச் சேர்ந்த வானியற்பியல் அறிஞர் மேக்நாத் சாகா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் சாகிப் சிங் சோக்கே, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வேதியியலாளர் சையது உசைன் ஜாகீர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சர்வதேச அளவில் அயர்லாந்தைச் சேர்ந்த மூலக்கூறு உயிரியலாளர் ஜே.டி. பெர்னால், இங்கிலாந்தைச் சேர்ந்த மரபியல் மற்றும் பரிணாமவியல் அறிஞர் ஜே.பி.எஸ். ஹால்டேன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் இந்திய அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த இடதுசாரிச் சிந்தனையாளர்கள் ஆவார்கள்.
ஒரு நாடு நல்ல வளர்ச்சி நிலையை அடைய வேண்டுமெனில், அந்த நாட்டின் அரசு அறிவியல் மனப்பான்மையோடு செயல்பட வேண்டும் என நேரு குறிப்பிட்டார். அதற்கு அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் அரசின் பங்களிப்பும் திட்டமிட்ட செயல்திட்டமும் அவசியமாகும். அறிவியல் துறையின் வளர்ச்சிக்குப் பிரத்யேகமான திட்டமிடல் தேவை என்பது இன்று அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும். ஆனால், இரண்டாம் உலகப் போருக்கு முன்பு பல நாடுகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 1917-இல் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு அங்கு திட்டமிடப்பட்ட தொழில்துறை வளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது. அறிவியலைப் பயன்படுத்தி ஒரு நவீன நாட்டை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அன்றைய வழக்கமான நடைமுறைகளிலிருந்து மாறுபட்டவையாக இருந்தன.
- 1931-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் வரலாறு குறித்த மாநாட்டில், நிக்கோலை புகாரின் தலைமையிலான சோவியத் ரஷ்ய அறிவியல் அறிஞர்கள், “அறிவியல் மற்றும் சமூகம்” ஆகிய இரண்டிற்கும் இடையிலான தொடர்பைப் பற்றி விரிவான ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜே.டி. பெர்னால், ஜே.பி.எஸ். ஹால்டேன், ஜோசப் நீட்ஹாம், லான்சலாட் ஹோக்பன் ஆகியோருக்கு அந்த அறிக்கை அறிவியலுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு குறித்த ஒரு புதிய பார்வையை வழங்கியது. இந்த மாநாடு பல புதிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதன் பிறகுதான் ஜே.டி. பெர்னால் 1939-ஆம் ஆண்டு ‘THE SOCIAL FUNCTION OF SCIENCE’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
- அறிவியல் அறிஞர்கள் ‘அறிவியல் தொழிலாளர்கள்’ (SCIENTIFIC WORKERS) என அழைக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக அறிவியல் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது உலக அமைதி இயக்கத்தின் முக்கிய அங்கமாகச் செயல்பட்டதுடன், உலக அமைதிக்கான ஆலோசனைக் குழுவுடனும் இணைந்து செயல்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜே.டி. பெர்னாலும் ஜே.பி.எஸ். ஹால்டேனும் இந்திய அறிவியல் துறையுடன் இணைந்து செயல்பட்டனர். ஜோசப் நீட்ஹாம் என்ற அறிவியல் அறிஞர், சீன அறிவியல் அறிஞர்களுடன் இணைந்து “அறிவியல் மற்றும் சீனாவின் நாகரிகம்” என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதினார். முதலில் அது பதினைந்து புத்தகங்களாக வெளியானது. அதற்குப் பின்னரும் தொடர்ந்து எழுதப்பட்டதால், இன்று அது ஏழு தொகுதிகளைக் கொண்ட இருபத்தேழு புத்தகங்களாக விரிவடைந்துள்ளது.
ஜே.டி. பெர்னால், ஜே.பி.எஸ். ஹால்டேன், ஜோசப் நீட்ஹாம் ஆகிய மூன்று விஞ்ஞானிகளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாகவோ அல்லது அதன் நெருக்கமான ஆதரவாளர்களாகவோ செயல்பட்டனர். நீட்ஹாமின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்த மோரிஸ் கோல்ட்ஸ்மித், நீட்ஹாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருந்தார் என்றும், ஆனால் அவர் கட்சியின் உறுப்பினராக இருக்கவில்லை என்றும் பதிவு செய்திருக்கிறார்.
1930-களில் கொல்கத்தா நகரில், விஞ்ஞானி மேக்நாத் சாகா தலைமையிலான இளம் விஞ்ஞானிகள் குழு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சோவியத் யூனியன் மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி ஆராய்ந்தது. சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானபோது, திட்டக்குழுவை அமைக்க அவருக்கு ஆலோசனை வழங்கியது மேக்நாத் சாகாதான். மேக்நாத் சாகாவுக்கு இத்தகைய சிந்தனை உருவாக முக்கியக் காரணமாக இருந்தது சோவியத் யூனியனின் திட்டக்குழுச் செயல்பாடுகள்தான்.
மேக்நாத் சாகாவின் ஆலோசனைப்படி சுபாஷ் சந்திர போஸ் திட்டக்குழுவை அமைத்தார். அந்தக் குழு ஜவஹர்லால் நேருவின் தலைமையில் செயல்பட்டது. இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்குவதற்குமான அடிப்படை வரைமுறைகளை அந்தக் குழு உருவாக்கியது. இந்த முயற்சி சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்தது. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்குத் திட்டக்குழுவின் செயல்பாடுகள் அடித்தளமாக அமைந்தன.
இந்தக் கண்ணோட்டத்தின் விளைவாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான மன்றம் (Council of Scientific and Industrial Research – CSIR) மற்றும் அதன் ஆய்வகங்கள் விரிவடைந்தன. கல்வி நிறுவனங்கள், குறிப்பாக ஐஐடிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்தன. அறிவியல் துறையில் இந்தியா சுயசார்பு அடைய வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டியது.
இந்தியா தொழில்மயமான நாடாக மாற வேண்டுமெனில், பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மட்டும் போதாது. பல அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும் என்பதை ஜவஹர்லால் நேரு நன்கு புரிந்து வைத்திருந்தார். இதன் ஒரு பகுதியாக, அவர் ஜே.டி. பெர்னாலைப் பலமுறை இந்தியாவிற்கு அழைத்து அவருடன் விவாதித்தார்.
மரபியல் அறிஞர் ஜே.பி.எஸ். ஹால்டேன் 1957-ஆம் ஆண்டு முதல் 1964 வரை இந்தியாவில் குடியேறி வாழ்ந்தார். இந்தியக் குடியுரிமையையும் பெற்றார். கொல்கத்தாவில் உள்ள ஐஎஸ்ஐ எனப்படும் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால், இந்தியாவின் அறிவியல் அமைப்புடன் அவரால் தொடர்ந்து இணைந்து பணியாற்ற முடியவில்லை. அவர் நேருவிடம், சிஎஸ்ஐஆர் என்பதை “Centre for Suppression of Independent Research” (சுயாதீன ஆராய்ச்சியை ஒடுக்கும் மையம்) என்று பெயர் மாற்ற வேண்டும் என விமர்சனமாகக் கூறினார்.
இந்தியாவைச் சேர்ந்த மேக்நாத் சாகா, உசைன் ஜாகீர் மற்றும் சாகிப் சிங் சோக்கே போன்ற அறிவியலாளர்கள் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அறிவியல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர்கள். அதே நேரத்தில், அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருந்தவர்கள். அமெரிக்கப் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கும், ஏதேனும் ஒரு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கும் வழங்கப்படும் “Roll of Honour” என்ற பட்டியலில் இவர்களது பெயர்களும் இணைக்கப்பட்டன. மேற்கூறிய அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் “சக பயணிகள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டன. இதன் அர்த்தம், மேற்கூறிய மூன்று விஞ்ஞானிகளும் ஓர் இடதுசாரிச் சித்தாந்தத்தின் ஆதரவாளர்கள் என்பதாகும். “சக பயணிகள்” என்பது மெக்கார்த்தி காலத்தில் கம்யூனிச ஆதரவாளர்களைக் குறிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகும்.
- மேக்நாத் சாகா, ஹோமி பாபாவுடன் இணைந்து இந்தியாவில் அணு இயற்பியலுக்கான அடித்தளத்தை அமைத்தார்.
- உசைன் ஜாகீர், சிஎஸ்ஐஆர் அமைப்பின் இயக்குநராக இருந்து அதனைப் பெரிய அளவில் விரிவுபடுத்தினார்.
சோக்கே, 1932-ஆம் ஆண்டு ஹாஃப்கின் நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதனை ஒரு முன்னணி ஆராய்ச்சி நிறுவனமாக வளர்த்ததோடு, தொழில்துறை அளவில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாகவும் மாற்றினார். அவர் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் கர்னல் பதவியில் இருந்தபோதிலும், 1938-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் அமைத்த திட்டக்குழுவின் சுகாதாரப் பிரிவை வழிநடத்தினார். அந்தக் குழுவின் தலைவராக ஜவஹர்லால் நேரு செயல்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு பல எதிர்ப்புகளைச் சந்தித்தபோதிலும், இந்தியாவின் சுயசார்பு வளர்ச்சிக்கு அடித்தளமாக சோக்கே இரண்டு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். அவை:
- இந்திய மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் நிறுவனம் (Indian Drugs & Pharmaceuticals Ltd) மற்றும்
- இந்துஸ்தான் நுண்ணுயிர் எதிர்ப்பு நிறுவனம் (Hindustan Antibiotics Ltd).
பின்னர் உலக அமைதிக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், அதன்பிறகு இந்திய அறிவியல் தொழிலாளர் சங்கத்தின் (Association of Scientific Workers of India – ASWI) தலைவராகவும் செயல்பட்டார். ASWI என்பது உலக அறிவியல் தொழிலாளர் கூட்டமைப்பின் இந்தியப் பிரிவாகும். 1947-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு ASWI அமைப்பின் முதல் தலைவராக இருந்தார்.
உலக அறிவியல் தொழிலாளர் கூட்டமைப்பு (WFSW) 1946-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் லண்டனில் நிறுவப்பட்டது. அந்த அமைப்பை உருவாக்குவதற்கு ASW முன்முயற்சி எடுத்தது. நோபல் பரிசு பெற்ற அணு இயற்பியலாளர் ஃப்ரெடெரிக் ஜோலியோ-கியூரி அதன் முதல் தலைவராகச் செயல்பட்டார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்ததற்காகவே, 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரான்சின் அணு ஆற்றல் உயர் ஆணையர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் WFSW தன்னை ஒரு தொழிற்சங்கமாக அல்லாமல், “அறிவியல் மற்றும் சமூக” இயக்கமாக வரையறுத்துக்கொண்டது.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், ஹோமி பாபா WFSW-இன் முதல் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார். ஐக்கிய நாடுகள் சபையின் அறிவியல் பிரிவை வழிநடத்திய ஜோசப் நீட்ஹாம், கொரியா மற்றும் சீனாவில் நடத்தப்பட்ட உயிரியல் போர் (Biological warfare) குறித்த உண்மைகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச அறிவியல் ஆணையத்தின் தலைவராக இருந்தார். 1952-ஆம் ஆண்டு அந்த ஆணையத்தின் அறிக்கை வெளியானது; அதில் அமெரிக்கா போர்க்குற்றச் செயலில் ஈடுபட்டது உறுதியானது.
சோக்கே அந்த ஆணையத்தில் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தார். ஆனால், இந்திய அரசு அவரை அதில் பணியாற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டது. கொரியா மற்றும் சீனாவிற்கு எதிராக உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என அமெரிக்கா நீண்டகாலமாக மறுத்து வந்தது. ஆனால், பின்னர் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் வெளியானபோது, நீட்ஹாம் ஆணையம் குறிப்பிட்ட பல நிகழ்வுகள் உண்மை என உறுதி செய்யப்பட்டன. ஜப்பானின் Unit 731 என்ற அமைப்பு, சீன மற்றும் அதன் நேச நாடுகளைச் சேர்ந்த போர்க்கைதிகள் மீது உயிரியல் போர் ஆயுதங்களைப் பயன்படுத்திச் சுமார் 3,000 பேரைக் கொன்றது. அந்த அமைப்பின் தலைவர்கள் தங்களது “ஆராய்ச்சி” தகவல்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்தனர். அதற்குப் பதிலாக, போர்க்குற்றத் தண்டனையிலிருந்து அவர்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கியது. அந்த “ஆராய்ச்சி” தகவல்களே போர்ட் டெட்ரிக் என்ற பிரபல உயிரியல் ஆயுத ஆராய்ச்சி மையம் உருவாக உதவியது. மேலும், கொரியப் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களுக்கு இதுவே அடிப்படையாக அமைந்தது.
– பிரபீர் புர்கயஸ்தா
தமிழில்: மோசஸ் பிரபு
தொடரும்…







