மொழி உரிமைக்காக நூற்றுக்கணக்கானவர்கள் உயிர்நீத்த போராட்டமாகக் கருதப்படும் ‘தமிழக மொழிப்போர்’ வரலாற்றில் பொள்ளாச்சிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் மூன்று முக்கியக் கட்டங்களாக நடைபெற்றன. இன்றும் அந்தத் தியாக வரலாற்றின் உள்ளடக்கம் தமிழக அரசியலில் உயிரோட்டமாக உள்ளது.
தொடக்ககால மொழிப்போராட்டங்கள் (1938 – 1948)
அதில் முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1938-ல் தொடங்கியது. அன்றைய மதராஸ் மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் எனப் பேசினார். அதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்று அரசாணை வெளியிட்டபோது போராட்டம் வெடித்தது. நீதிக்கட்சி மற்றும் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், மாணவர்களின் தொடர் போராட்டத்தால் முடக்கப்பட்டது. குறிப்பாகத் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் சிறை மரணங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தின. இறுதியில் இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் தேர்ந்தெடுப்பட்ட காங்கிரஸ் அரசாங்கங்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்ததைத் தொடர்ந்து, ராஜாஜியும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திட அன்றைய மதராஸ் மாகாண ஆளுநர் ஜான் எர்ஸ்கின் இந்த அரசாணையைத் திரும்பப் பெற்றார்.
இந்தியாவிற்கு 1947 ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் கிடைத்த பிறகு, 1948-ல் மதராஸ் மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பள்ளிக்கூடங்களில் மீண்டும் இந்தி கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கினார். அப்போதைய கடுமையான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தாலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளே ஏற்பட்ட அரசியல் மாற்றங்களாலும் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தன் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அதைத் தொடர்ந்து இந்தி கட்டாயம் எனும் அரசாணை விலக்கிக்கொள்ளப்பட்டு, விருப்பப் பாடமாக மாற்றப்பட்டது. பின்னர் 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி, சி.என். அண்ணாதுரை அவர்களால் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) தொடங்கப்பட்டது.
1965-ன் எழுச்சியும் பொள்ளாச்சி தியாகமும்
1965-ஆம் ஆண்டில் இந்தி தொடர்பான அச்சம் தமிழ்நாட்டில் மீண்டும் உயிர்பெற்றது. இதற்கு அடிப்படையாக அமைந்தது இந்தியாவின் அலுவல் மொழி தொடர்பான விவகாரம். இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு, அரசமைப்புச் சட்டத்தின்படி முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தியும் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 26, 1965-க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற நிலை உருவானது. இந்தியை அலுவல் மொழியாக்குவதை எதிர்த்துப் போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாகின. ஜனவரி 26-ஆம் தேதியைத் துக்க நாளாக அனுசரிப்போம் என்று தி.மு.க-வின் பொதுச் செயலாளர் சி.என். அண்ணாதுரை அறிவித்தார். ஆனால், குடியரசு தினத்தைத் துக்க நாளாக அனுசரிக்க அனுமதிக்க முடியாது என்றார் அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம். ஜனவரி 25-ஆம் தேதியே மாணவர்கள் துக்க நாள் அனுசரிக்க வேண்டும் என “இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர்கள் குழுவின்” சார்பில் அறிக்கை வெளியானது. இதற்கிடையில், ஜனவரி 22-ஆம் தேதியே சி.என். அண்ணாதுரை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மொழிப் போராட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்திருந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் சி. சுப்பிரமணியமும், பெட்ரோலியம் மற்றும் ரசாயனத் துறைக்கான மத்திய இணையமைச்சர் ஓ.வி. அழகேசனும் இந்தித் திணிப்பைக் கண்டித்துத் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், இந்தி எதிர்ப்புக்கான தமிழக மாணவர் போராட்டக் குழு, பிப்ரவரி 12-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இந்த முழு அடைப்புக்குத் தமிழக வரலாற்றில் அதுவரை கண்டிராத மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது.
முழு அடைப்பு தினத்தன்று காலை பத்து மணி அளவில், பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பாகப் பெருமளவிலான மாணவர்களும் பொதுமக்களும் திரண்டிருந்தனர். காவல்துறையும் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ஒரு மாணவர் தபால் நிலையத்தின் பெயர் பலகை மீதிருந்த இந்தி எழுத்துகளை அழிக்க முயன்றார். சிறிது நேரம் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவலர்கள், அவரை இறங்கும்படி எச்சரித்தனர். ஆனால், அவர் இறங்கவில்லை. இதையடுத்து, அவர் உடனடியாக இறங்காவிட்டால் துப்பாக்கியால் சுடப்படுவார் என காவல்துறையினர் மிரட்டினர். அப்போதும் அவர் அஞ்சாமல் இறங்க மறுத்ததால், ஒரு காவலர் அவரைச் சுட்டார். அந்த மாணவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து ராணுவம் 6 லாரிகளில் வரவழைக்கப்பட்டு, வரலாற்றின் மிகக்கொடூரமான அடக்குமுறைகள் அரங்கேறின. தமிழக வரலாற்றில் ஒரு போராட்டத்தை ஒடுக்க இராணுவம் வந்திறங்கியது அதுவே முதல் முறை. கைக்குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் சுடப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவ வீரர் ஒரு குழந்தையை கண்ணீருடன் கையில் ஏந்தினார். இயந்திர துப்பாக்கியால் ஒருவர் சுடப்பட அந்த குண்டு அவரின் வயிற்றைத் துளைத்து, பின்னால் நின்றிருந்த 10 வயது சிறுனின் தலையில் பாய்ந்தது. அன்றைய தினம் பொள்ளாச்சி நகரமே இரத்த வெள்ளத்தில் மிதந்நது. துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதாகப் பத்திரிகைகளில் எழுதப்பட்டாலும், உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 முதல் 100 வரை இருக்கலாம் என்று வரலாற்றுத் தரவுகள் கூறுகின்றன.
1952-ல் நடைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் சென்னை மாகாணத்தில் வென்ற காங்கிரஸ் கட்சி, சி. ராஜகோபாலாச்சாரியை என்கிற ராஜாஜியை முதலமைச்சராக்கியது, அவருக்குப் பிறகு 1954-ல் காமராஜர் பொறுப்பேற்றார். 1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜர், ‘K பிளான்’ எனும் இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் திட்டத்தை முன்வைத்துத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். காமராஜரின் ராஜினாமாவிற்குப் பிறகு எம். பக்தவச்சலம் 1963 முதல் 1967 வரை முதலமைச்சராகப் பதவி வகித்தார். அவரைத்தொடர்ந்து சி.என். அண்ணாதுரை மதராஸ் மாகாணத்தின் கடைசி முதலமைச்சராகவும், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்ட பின் மாநிலத்தின் முதல் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். இந்திய வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு மாநிலக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது அதுவே முதல்முறையாகும். அதற்கு மொழிப்போரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதன் பிறகு இன்று வரையிலும் காங்கிரஸால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சிப்பொறுப்பிற்கு வர முடியவில்லை.
இந்த உணர்ச்சிகரமான வரலாற்றுப் பின்னணியில், இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் “பராசக்தி” திரைப்படத்தை, துணிச்சல் மிகுந்த ஒரு படைப்பு எனலாம்.
1960-களின் தமிழகத்தைத் தத்ரூபமாகப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் உழைப்பு பெரிதும் பாராட்டப்பட வேண்டியது. சிவகார்த்திகேயனின் ‘செழியன்’ கதாபாத்திரம் இதுவரை அவர் செய்திராத அழுத்தமான பாத்திரமாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் ரவி மோகனின் வில்லன் நடிப்பு படத்திற்குப் பெரிய பலமாகவும் அமைந்துள்ளது.
1960-களின் பின்னணியில் தமிழ்நாட்டில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சாமானிய கல்லூரி மாணவன் எவ்வாறு சமூக மாற்றத்திற்கான குரலாக மாறுகிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
திரைப்படக் குழுவினரின் பங்களிப்பு
இப்படம் பல முன்னணி நட்சத்திரங்களின் சங்கமமாக அமைந்துள்ளது. கல்லூரி மாணவனாகவும் மற்றும் போராட்ட வீரனாகவும் ஒரு புதிய பரிமாணத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். “மதராஸி டெல்லி ஆத்தா, ஹிந்தி போலா… ஹிந்திகார் மதுரை ஆத்தா தமிழ் போலா” போன்ற கூர்மையான வசனங்கள் மற்றும் டெல்லி பேருந்துகளில் ‘ஹிந்தி வாழ்க’ எனத் தமிழில் எழுதிப் போக்குவரத்தை முடக்கும் காட்சிகள் திரையரங்கையே அதிர வைக்கின்றன.
இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் ஸ்ரீலீலா. “மொழியை அழிச்சா அடையாளம் அழியும். அடையாளம் இல்லாதவரை அடிமை ஆகிடலாம். இதுதான் மொழி அரசியல்” என அவர் பேசி முடிக்கும்போது நம் கண்களின் ஓரம் ஈரம் கசிவது நிச்சயம்.
மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ரவி மோகனும் அதர்வாவும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரவி மோகன் ஒரு அரசு அதிகாரியாக அழுத்தமான பாத்திரத்தில் நடித்துள்ளார். “நம்ம ஆளுங்க பிரியாணியைப் பார்த்தா தன்மானத்தை விட்டுவிடுவார்கள்” என அவர் வில்லத்தனமாகச் சொல்லும்போது பார்ப்பவர்களுக்குக் கோபம் கொப்பளிக்கிறது. அதர்வா குறும்புக்காரப் புரட்சியாளனாகவும், அண்ணனின் பாசக்காரத் தம்பியாகவும் ஜொலிக்கிறார்.
‘அண்ணா’வாகவே வாழ்ந்து இருக்கிறார் நடிகர் சேத்தன். “இதை யார் செய்து இருந்தாலும் அவன் என் தம்பி” என்று அவர் பேசும் இடங்கள் நெகிழ்ச்சி. ‘கலைஞராக’ நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், “ஒளி வந்தே தீரும்” எனச் சொல்லும் இடங்களில் திரையரங்கில் கைத்தட்டல் பறக்கிறது. ராணா டகுபதி மற்றும் பாஸில் ஜோசப் ஆகியோர் சில நிமிடங்களே வந்தாலும் மனதில் ஆழமாக நிற்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகளுக்குப் பெரும் வலு சேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் காட்சிகள் படத்தின் மற்றொரு பலம். அரசியல் நாடகங்கள் உச்சத்தில் இருக்கும் இன்றைய சூழலில், இத்தகைய கதையைத் தயாரிக்கத் தனித் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சலை வெளிப்படுத்திய டான் பிக்சர்ஸ்க்குப் பாராட்டுக்கள்.
“உன்ன மாதிரி எத்தனை பேர் வந்தாலும் மொழிப்போர் செய்ய என் பேரன் பேத்தி வருவாங்க” என்று சிவகார்த்திகேயன் பேசும் வசனம் உண்மையாக வேண்டும். மொழி என்பது அழகு, அதை விரும்பி கற்க வேண்டும்; ஆனால் அதைத் திணித்தால் “பராசக்தி” மீண்டும் நிகழும் என்பதை இப்படம் உரக்கச் சொல்கிறது.
இன்னமும் அழுத்தமான காட்சிகளை அமைத்திருக்கலாம் என்கிற சிறிய ஏக்கம் இருந்தாலும், மொழிப்போர் வரலாற்றின் பின்னணியில் கற்பனைக் கதாபாத்திரங்கள் வாயிலாக வரலாற்று உண்மைகளை ஓரளவுக்கு நெருக்கமாகச் சித்தரித்துள்ள இந்தப் படைப்பு, அதன் முயற்சிக்காகவே நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதாகும்.
மொழியையும், அதைப் பாதுக்காப்பதன் மூலமாக நம் உரிமைகளையும் காப்பதற்காக தம் உயிரையே தியாகம் செய்து போராடிய நம் முன்னோர்களையும், அவர்களின் தியாகங்களையும் அறிந்துகொள்ள இத்திரைப்படம் உதவுவதோடு மட்டுமல்லாமல், அது குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கான தூண்டுதலையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழங்கியிருக்கிறது. அதற்காகவே இத்திரைப்படக் குழுவினரைப் பாராட்டலாம்.
– நித்யா பிரிசில்லா








மொழி என்பது அழகு, அதை விரும்பி கற்க வேண்டும்; ஆனால் அதைத் திணித்தால் “பராசக்தி” மீண்டும் நிகழும் என்பதை இப்படம் உரக்கச் சொல்கிறது.
இன்னமும் அழுத்தமான காட்சிகளை அமைத்திருக்கலாம் என்கிற சிறிய ஏக்கம் இருந்தாலும், மொழிப்போர் வரலாற்றின் பின்னணியில் கற்பனைக் கதாபாத்திரங்கள் வாயிலாக வரலாற்று உண்மைகளை ஓரளவுக்கு நெருக்கமாகச் சித்தரித்துள்ள இந்தப் படைப்பு, அதன் முயற்சிக்காகவே நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதாகும்.
உண்மை! எழுதியமைக்கு நன்றி.. முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி