இலக்கியம்சிறார் இலக்கியம்

மாதுளை மங்கை (சிறார் கதை) – தீபா சிந்தன்

புள்ளி (1)

சரியாக நான்கு பருவநிலை மாற்றங்களுக்கு முன்பு ஆச்சி எங்கள் வீட்டை விட்டுச் சென்றார். 

ஒருநாள் காலை திடீரென நான் கண்விழித்துப் பார்த்தபோது ஆச்சியை வீட்டில் காணவில்லை. அவருடைய கைத்தடி மட்டும் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்தது. 

ஆச்சியிடம் அதைக் கொடுப்பதற்காக கைத்தடியை எடுத்துக்கொண்டு நான் சென்றேன். 

எப்போதும் அவர் இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கு ஓடிச்சென்று பார்த்தேன். ஆனால் அங்கு அவர் இல்லை. 

பின்னர் வைக்கோல் வைத்திருக்கும் களத்திற்குச் சென்றேன். அங்கும் ஆச்சி இல்லை. 

தண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்று அங்கே இருப்பாரோ என்று நினைத்து குளத்திற்கு ஓடிப்போய் பார்த்தேன். அங்கும் ஆச்சி இல்லை.

மாட்டுச் சாணத்தை கொட்டி வைக்கும் உரக்குண்டுக்கு அருகில் இருப்பார் என்று நினைத்து அங்கும் சென்று பார்த்தேன். அங்கும் ஆச்சி இல்லை.

தோட்டத்தில் இருக்கும் முல்லைச் செடியின் அருகிலோ அல்லது மாதுளை மரத்திற்கு பக்கத்திலோ இருப்பார் என்று நினைத்து அங்கும் சென்று பார்த்தேன். ஆனால் ஆச்சியை எங்கும் காணவில்லை. 

என் கையில் ஆச்சியின் கைத்தடி மட்டும் இருந்தது. ஆச்சி மாட்டுக்கு தண்ணீர் வைக்கவோ, தொழுவத்தில் சாணி அள்ளவோ , செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவோ, உரக்குண்டில் சாணத்தைக் கொண்டுபோய் கொட்டவோ இல்லை. 

எப்போதும் அவர் உட்கார்ந்து இருக்கும் பின்வாசல் கல்லிலும் கூட ஆச்சி இல்லை. 

அப்படி ஆச்சி எங்கே தான் போனார் என்று யோசித்தபடி ஆச்சியைத் தேடி அலைந்தேன். 

ஆச்சியின் கைதடியைத் தாங்கி நின்று தாழ்வாரத்தில் ஆச்சிக்காக வெகுநேரம் காத்திருந்தேன். நாள் முழுவதும் அங்கேயே நின்றிருந்தேன். ஆச்சி மட்டும் வரவேயில்லை. 

முற்றத்தில் இருந்த படிக்கட்டில் ஒரு நூறு முறையாவது ஏறி இறங்கி இருப்பேன். ஆனால் ஆச்சி திரும்பி வரவில்லை. 

ஒருவேளை பறவைகளுக்கு உணவளிக்க ஆச்சி மேற்கூரைக்கு சென்று இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். உடனே மாடிப்படி ஏறி மேற்கூரையில் சென்று பார்த்தேன்.

அங்கு சில புறாக்கள் பறந்துக் கொண்டு இருந்தன. 

வானில் பறந்த புறாக்களிடம் “என்னோட ஆச்சி எங்க இருக்காங்க தெரியுமா?” என்று  கேட்டேன்.

“வானத்தில் பறக்கும் உங்களால் என் ஆச்சியைப் பார்க்க முடியுமா?” என்றும் விசாரித்தேன். 

“தடி இல்லாமல் ஆச்சியால் நடக்க முடியாது. அதனால்தான் நான் ஆச்சியைத் தேடுகிறேன்” என்று புறாக்களிடம் கேட்டுப்பார்த்தேன். 

புறாக்களோ மென்மையான குரலில் “கீச் கீச்” என்று பதிலளித்தன. 

ஆனால் அவைகள் சொன்னது எனக்குப் புரியவில்லை.

அந்த நாள் முழுவதும் நான் ஆச்சியை தேடினேன். ஆனால், எங்கு தேடியும் ஆச்சியை காணவில்லை. நான் சோகத்தில் அம்மாவின் மடியில் தலை சாய்த்து படுத்து  உறங்கிப் போனேன். 

அன்றைய நாளின் ஞாபகங்கள் இன்றும் என் நினைவில் நீங்காமல் இருக்கிறது. 

இப்படியே நாட்கள் பல நகர்ந்தன. பின்னர் நாட்கள் மாதங்கள் ஆகின. மாதங்கள் நகர்ந்து இப்போது ஒரு வருடமே ஆகிவிட்டது. ஆச்சியின் கைதடியுடன் இன்றும் நான் காத்திருக்கிறேன். ஆச்சி இன்னும் வீடு திரும்பவில்லை.

சென்ற வருடம் வசந்த காலத்தில் தான் ஆச்சி தன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தின் போதுதான் எப்போதும் அவர் பயன்படுத்தும் கைத்தடியை முதன்முறையாக எங்கள் வீட்டிலேயே விட்டுத் தனியே சென்றார்.

இடைப்பட்ட இந்த காலத்தில் வசந்த காலம் முடிந்தது. அதன்பின்னர் கோடை காலம் வந்தது. அதுவும் முடிந்தது. பிறகு பனிக்கலாம் தாண்டி, இலையுதிர் காலமும் முடிந்தது. இப்போது மீண்டும் வசந்த காலமே வந்துவிட்டது. 

மாதுளை மரத்தின் கிளைகளில் இலைகள் புதிதாக துளிர்விட்டு வளர ஆரம்பித்தன. ஆனால் ஆச்சி இன்னும் வரவில்லை.

நானும், அம்மாவும் ஆச்சியின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தோம். அவர் வளர்த்த மாதுளை மரத்திற்கு அடியில் பல நாட்கள் அவர் நினைவுகளுடனே உட்கார்ந்து இருந்தோம். இன்றும் அந்த மாதுளை மரத்தில் அவரது வாசம் வீசுகிறது

திடீரென நேற்று இரவு என் கனவில் ஆச்சி தன் கையில் ஒரு பழக்கூடையுடன் வந்தார். அந்த கூடையில் மாதுளம்பழங்கள் நிறைய இருந்தன. 

ஆச்சி “நிலா” என்று மெல்ல காதருகில் வந்து என்னை அழைத்தார். என் தலையைக் கோதியபடி “வசந்த காலம் வந்துடச்சி நிலா. இனிமேல் மாதுளை மரத்தில் நிறைய மாதுளம் பழங்கள் காய்க்கும்” என்றும் கூறினார். 

“ஒவ்வொரு மாதுளம் பழத்திலும் நூற்றுக்கணக்கான மாதுளை முத்துக்கள் இருக்கும்” என்று ஆச்சி என் காதுகளில் மெல்ல கிசு கிசுத்தார். 

“அந்த ஒவ்வொரு மாதுளை முத்திலும் இருந்து புதிய மாதுளைச் செடிகள் வளரும்” என்றும் கூறினார்.

“ஒவ்வொரு மாதுளை முத்துக்குள்ளும் ஆயிரக்கணக்கான விதைகள் வளர்கின்றன” என்று கூறிவிட்டு மறைந்து சென்றார்.

கனவு கலைந்து நான் எழுந்து பார்த்தபோது ஆச்சியைக் காணவில்லை. உடனே, நான் தோட்டத்திற்கு சென்று மாதுளை மரத்தைப் பார்த்தேன். மாதுளை மரம் முழுவதும் தீக்கங்குகள் போல சிகப்பு நிறத்தில் பூக்கள் பூத்து இருந்தது. இரவின் நிலவொளியில் அந்த பூக்கள் பிரகாசமாகத் தெரிந்தன. ஆச்சி கனவில் சொன்னது எனக்கு நினைவிற்கு வந்தது. 

ஆச்சி வீட்டை விட்டு சென்று கிட்டதட்ட ஒரு வருடகாலம் ஆகிவிட்டது. நான்கு பருவநிலைகளும் மாறி மாறி வந்துவிட்டன. 

சில நாட்கள் கழித்து அம்மாவும் நானும் ஒரு பழக்கூடையில் மாதுளம் பழங்களை நிரப்பினோம். அதனை எடுத்துக் கொண்டு ஆச்சி இப்போது ஆழ்ந்து உறங்கி கொண்டிருக்கும் ஓர் இடத்திற்கு சென்றோம். 

அந்த பறந்த வெளியில் காற்று மேகங்களோடு விளையாடிக் கொண்டிருந்தது. சிட்டுக்குருவிகளின் கீச் ஒலி எங்கும் ஒலித்தது. சுற்றிலும் புறாக்கள் பறந்துக் கொண்டு இருந்தன. 

நாங்கள் கொண்டு வந்த மாதுளம் பழங்களை உதிர்த்து மாதுளை முத்துக்களை அந்தப் பறவைகளுக்கு உணவாகப் போட்டோம். 

“ஒரு விதை இங்கே இருக்கிறது நிலா” என்று ஆச்சி என் காதுகளில் கிசுகிசுப்பதை நான் கேட்டேன். 

“ஒவ்வொரு மாதுளை முத்துக்குள்ளும் ஆயிரக்கணக்கான விதைகள் வளர்கின்றன” என்று அவர் சொன்னது மீண்டும் என் நினைவுக்கு வந்தது. 

கனவில் நான் கண்ட ஆச்சியைப் பற்றி அம்மாவிடம் சொன்னேன். நானும் அம்மாவும் மாதுளை முத்துக்களைப் பற்றி யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தோம். எங்கள் மாதுளை மரத்தில் பலநூறு மாதுளம் பழங்கள் காய்த்து குலுங்கின. 

“ஒவ்வொரு மாதுளை முத்திலும் ஆயிரக்கணக்கான விதைகள் வளர்கிறது” என்று ஆச்சி சொன்னது என் நினைவில் அழியாமல் பதிந்தது. 

மேகங்கள் வழியாக சூரியன் எட்டிப் பார்த்தது. கிளைகளில் பழுத்த மாதுளைகள் பிரகாசித்தன. புறாக்கள் கூரையின் மீது கூவின.

ஆச்சியின் கைத்தடியில் அவரின் அருகாமையை நான் உணர்ந்தேன். அவருடைய சிரிப்பொலி வீடு முழுவதும் நிறைந்திருந்தது.

புள்ளி

கைத்தடியை எடுத்துக்கொண்டு நான் தோட்டத்தைச் சுற்றிச்சுற்றி,

“ஆயிரம் மாதுளை  முத்துக்களே !

ஆனந்த கும்மிகள் கொடுங்களேன்

ஆச்சியின் அன்பு தங்கங்களே 

மாதுளை மங்கையின்  தோழிகளே!

 என்று என்னால் முடிந்தவரை சத்தமாகப் பாடினேன். 

எங்கிருந்தாலும் ஆச்சிக்கும் நிச்சயம் நான் பாடிய பாடல் கேட்டிருக்கும். 

– தீபா சிந்தன்