இலக்கியம்புத்தக அறிமுகம்

தெருக்கூத்தும், ஊதுவத்தி வாழ்க்கையும் – ம. பரிமளா தேவி

உச்சநீ 20250527 221449 0000

வட தமிழகம்தான் தெருக்கூத்துக் கலையின் பிறப்பிடமாக இருந்திருக்கின்றது. ஆனால், சில தெருக்கூத்துக் குழுக்களும் கூத்துக் கலைப் பயிற்சி மன்றங்களும் மட்டுமே இன்று இயங்கி வருகின்றன. தெருக்கூத்துக் கலையின் மீது மக்களுக்கு இருந்துவந்த பற்று இன்று குறைந்துவிட்டது. தெருக்கூத்தின் இடத்தை ஆடல் பாடல் நிகழ்ச்சி பிடித்துவிட்டது. சினிமாவுக்கான அடித்தளமாக இருந்ததுவும் தெருக்கூத்துதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொண்டை மண்டலத்தின் பல கூத்துக் கலைஞர்களும் மேடை நாடகக் கலைஞர்களும் மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பிறகு, அவர்களின் நினைவுகளைப் புனைவாக்கி நாவலில் பதிவு செய்திருக்கின்றார் கவிப்பித்தன்.

கங்காதரன்: கூத்தின் மீதான தணியாத தாகம்

வசூர் கிராமத்தில் இரண்டு தலைமுறைகளாகத் தெருக்கூத்தில் வேடம் கட்டி ஆடும் குடும்பம். கடிகாசலத்திற்கு வன இலாகாவில் காவல் உதவியாளர் வேலை. கடிகாசலத்திற்கும் பூச்சிக்கும் பிறந்த பையன் கங்காதரன். அப்பாவைப் போல் சிறு வயதில் இருந்தே கூத்தின் மீது ஆர்வமாக இருக்கின்றான் கங்காதரன். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லாமல் ஊரில் சுற்றிக் கொண்டிருக்கும் போதே கங்காதரன் வேடம் கட்டத்  தொடங்கி விட்டான். அவன் அப்படி ஆடுவதற்குக் காரணம் அவனுடைய அப்பா கடிகாசலம்தான். அவனுடைய அப்பா வேடம் கட்டி ஆடியவர். அதனால், அவன் எண்ணம் முழுவதும் கூத்தாகவே இருக்கின்றது.

வாழ்க்கைப் போராட்டங்களும் வேலைத் தேடலும்

நண்பர்களின் வற்புறுத்தலால் இராணுவ வேலைக்கு விண்ணப்பிக்கின்றான். அவனுடைய நண்பர்களுக்கு வேலை கிடைக்கவில்லை; ஆனால், அவனுக்குக் கிடைக்கின்றது. வேண்டாவெறுப்பாக நண்பர்கள் மற்றும் அம்மாவின் பிடிவாதத்தால் இராணுவத்திற்கு வேலைக்குச் செல்கிறான். அங்கு அவனால் நிம்மதியாக வேலைசெய்ய முடியவில்லை. எப்போதும் தெருக்கூத்து நினைவாகவே இருக்கின்றான். ஓராண்டு முடித்து விடுமுறையில் ஊருக்கு  வந்தபோதும் கூத்துப்பார்க்கவும், கூத்தாடவும் அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.

அடுத்த விடுமுறையில் அவனுக்குத் திருமணத்திற்குப் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். வள்ளியைத் திருமணம் முடித்ததும் அவன் பொறுப்பாக வேலைக்குச் செல்வான் என நினைத்திருந்தாள் அவனுடைய அம்மா பூச்சி. ஆனால், வள்ளிக்குக் குழந்தை பிறந்ததும் அதையே காரணம் காட்டி, ‘இராவணத்திற்கு மீண்டும் செல்ல மாட்டேன்’ என்கிறான். ஊர் ஊராகத் தெருக்கூத்தில் நடித்து மிகப்பெரிய பெயரை எடுத்திருந்தான். தெருக்கூத்து நடக்கும் இடங்களுக்குப் போவது, அங்கே நாடகத்தைப் பார்ப்பது, பார்த்த நாடகத்தை ஊரில் மற்றவர்களுக்குச் சொல்லித் தருவது அவனின் வேலையாக இருந்தது. தெருக்கூத்து நாடகத்திலிருந்து மேடை நாடகத்தின் வடிவத்தையும் எடுத்து அரங்கேற்றம் செய்தான். அவன் மனைவிக்கும் அவனை ஒரு கலைஞனாகப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.

ஏழாண்டுகள் இராணுவத்தில் பணி செய்த பிறகு, ‘குழந்தையையும் தெருக்கூத்தையும் விட்டு இருக்க முடியாது’ என்று அனைவரிடம் சொல்லிவிட்டு வேலையிலிருந்து விலகிவிட்டான். எழு ஆண்டுகள் மட்டுமே வேலை செய்ததால் ஓய்வூதியமும் கிடைக்கவில்லை. பின்னாளில், வேலூரில் காவலர் பணிக்கு ஆளெடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, நண்பர்கள் கங்காதரனை அனுப்பி வைக்கின்றனர். காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்ததும் வீட்டில் உள்ள அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. ஆனால், வேலையில் சேர்ந்த ஓராண்டில் அந்தப் பணியையும் விட்டுவிடுகின்றான்.

இரண்டாவது குழந்தை பிறந்தது. பிறகு, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள நாடகக் கம்பெனியில் வேலைக்குச் சேர்கின்றான். அதில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே அவனுக்கு வேலை கிடைத்தது. உடன் நடிப்பவர்கள், “இரண்டு அரசாங்க வேலையை விட்டுவிட்டுத் தெருக்கூத்து நடிக்க வந்துவிட்டான்” என்று அவமானப்படுத்தியது அவனுக்குப் பிடிக்கவில்லை.

சமூகத்தின் பார்வையும் கங்காதரனின் மனநிலையும்

”மிலிட்டிரிக்காரரு… போலீஸ்காரரு… அதெல்லாம் உட்டுட்டா இங்க கூத்தாட வந்துட்டான்… சரியான மெண்டலு போல கீதே…” என இவன் காதுபடவே ஆட்டம் பார்க்க வந்த மக்கள் பேசிக்கொண்டனர் (ப. 121).

“மிலிட்டரியில் ஏழு வருஷம், போலீஸில் ஒரு வருஷம் என எங்கேயும் குப்பை கொட்ட முடியாமல் வந்திருக்கிறான்” என்று போகிற ஊர்களிலெல்லாம் இவன் கதை தெரிந்துவிட்டது. ஒருபுறம் அது பெருமையாகவும், பல நேரங்களில் அவனுக்கு மானக்கேடாகவும் இருந்தது.

நாடகக் கம்பெனியில் கூத்தாடுவதை விட்டுவிட்டு, இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலையில் வேலையில் சேர்கின்றான். ஆனால், அங்கு அவனைவிட வயதில் சிறியவன் ஏவலாளைப் போல் நடத்தியது அவனுக்குப் பிடிக்காமல்போக, முதல் நாளிலேயே வேலையை விட்டு நின்றுவிடுகின்றான்.

”வேலைவெட்டிக்குப் போறதெல்லாம் உன்னை மாதிரி ஆளுங்க செய்யுறது மச்சான்… எனுக்கு தினிக்கும் அந்த தாளத்தயும், மோளத்தையும் கேட்டுகினே கீணம்டா… எப்பவும் ஆடிகினும் பாடிகினும் கீலாம்னு உள்ளுக்குள்ள துட்ச்சிகினே கீதுடா…” (ப. 74) என்று நண்பனிடம் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்.

“கெவுருமென்ட்ல பெருக்கற வேல கெட்ச்சாக்கூட போதும்.. நாங்கல்லாம் இந்த ஆட்டக் கம்பனியே மூட்ட கட்டி வெச்சிட்டு கம்னு போயி சேர்ந்துடுவம் தெரிமா? வேற வயி இல்லாமதாங் அர்த்தளத்த பூசி ஆடிகினு கீறம்… வேசம் கட்டி அதுல கஞ்சி குடிக்கற்து ரொம்ப கஸ்டம்பா” எனச் சக ஆட்டக்காரா்கள் சொல்லும் போது எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருப்பான் கங்காதரன்.

வத்தி மாவு: வாழ்வாதாரமும் நோயும்

ஊரில் மழையில்லை. பயிர் வேலையும் பாதியாகக் குறைந்து விட்டது. அடித்துப் பிடித்து ஏரி நிரம்பினாலும் ஒரு போகம்தான் விளையும். வீட்டுக்கு வீடு ஊதுவத்தி வேலைதான் நடக்கிறது. அதுதான் இப்போது ஊருக்கே கஞ்சி ஊற்றுகிறது. ஆண்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து வத்தி உருட்டுகிற வேலையைச் செய்யாமல் ஆடு மாடுகளை மேய்க்கச் செல்கின்றனர்.

வாராவாரம் ஞாயிற்றுக் கிழமையானால் வள்ளிமலையில் இருந்து ஊதுவத்தி வேன் வரும். குச்சிக் கட்டுகளும் கருப்பு வத்திமாவும் அதில் கலக்கிற பழுப்பு நிற ஜிகிட்டி மாவும் கொடுத்து விட்டுப் போவார்கள். ஊர்ப் பெண்கள் அவற்றை வாங்கி, ஊதுவத்தி உருட்டி, ஆயிரம் வத்திகளாக எண்ணிக் கட்டுக் கட்டாகக் கட்டிவைப்பார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஊதுபத்தி வண்டி வரும். உருட்டிய வத்திகளை வாங்கிக்கொண்டு கணக்குப் போட்டுப் பணம் தருவார்கள். அப்போதே அடுத்த வாரத்துக்கான குச்சிக் கட்டுகளும் மாவும் ஜிகிட்டியும் கொடுத்துவிட்டுப் போவார்கள்.

போதிய மழையில்லை. ஏரியிலும் தண்ணீர் இல்லை. தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்ய மழையும் பணமும் இல்லாத காரணத்தினால் கரம்பாக வைத்திருந்தான். அந்த நிலத்தை விற்றுத்தான் ஊதுவத்தித் தொழிலைத் தொடங்கினான். ஏழு ஆண்டுகள் ஊதுவத்தித் தொழில் செய்தும் அவனுடைய வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. வத்தித் தொழில் செய்யும் போது அந்த மாவினால் ஏற்பட்ட ஒவ்வாமையால் உடல்நிலை மிகவும் மோசமானது. பெங்களூர் முதலாளி தன்னை முழுவதுமாக ஏமாற்றியதை நினைத்து வருந்துகின்றான். உடல்நிலை மிக மோசமாகி இறந்துவிடுகின்றான்.

கங்காதரனுக்குப் பின் குடும்பத்தின் நிலை

கங்காதரன் இறந்தபின், அவன் அம்மா பூச்சிக்கிழவி, மனைவி ராணி, மகன் சங்கரன், மகள் ஆதிலட்சுமி ஆகியோர் இணைந்து கடனை அடைப்பதற்காக வத்தி உருட்டுவதைத் தொழிலாகச் செய்கின்றனர். அவர்களுக்குக் கிடைக்கும் பணம் வட்டிகட்டவே சரியாக இருந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மகன் சங்கரன், அப்பாவின் தொழிலைச் செய்யத் தொடங்குகின்றான். ஒருநாள் லாரியில் அடிபட்டு அவனும் இறந்துவிடுகின்றான். அவனுடைய மருத்துவச் செலவுக்கும் இறுதிச் சடங்குக்கும் மீண்டும் வள்ளி கடன் வாங்குகிறாள். வள்ளி தன் கணவனையும் மகனையும் அடுத்தடுத்து இழந்த காரணத்தால், ஒடித்தழையை அரைத்துக் குடும்பத்தோடு இறந்துவிடலாம் என நினைக்கிறாள். ஆனால், கிழவி பூச்சியம்மா பேத்தி ஆதிலட்சுமியை நினைத்து மிகவும் வருந்துகிறாள். அவள் வயதையொத்த பெண்களுக்குத் திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது. ஆனால் குடும்பத்தில் உள்ள வறுமையால் எதையும் செய்ய முடியாமல் இருப்பதை நினைத்து வருந்துகின்றாள். இறுதியில், ஆதிலட்சுமிக்கு இரண்டாவது தாரமாகத் திருமணம் செய்துவைக்கின்றனர். தன் கணவனைப் போல ஊதுவத்தி மாவு மூக்கின் வழியாக உடல் முழுதும் பரவியதால் அடிக்கடி இருமல் மற்றும் இரத்த வாந்தி எடுக்கின்றாள் ராணி. தன்னுடைய நோய் முற்றிய நிலையில், தான் இறந்து விட்டால் கிழவியை யார் பார்த்துக்கொள்வார்கள் எனப் பயப்படுகிறாள். திருப்பதிக்குப் போய்த் தற்கொலை செய்துகொள்ளலாமென நினைத்துக் கிழவிக்குத் தெரியாமல் அவளை அழைத்துச் செல்வதாக நாவல் விரிகின்றது.

நாவல் குறித்த பார்வை

வடாற்காடு மாவட்டத்தின் வட்டார மொழியில் எழுதப்பட்டுள்ள நாவல் இது. வடாற்காடு மாவட்டத்தின் நிலவியலை முழுவதுமாக நாவலில் கொண்டுவந்துள்ளார். சுதந்திரம் பெற்ற ஏழாண்டுகள் என்று நாவலில் குறிப்பு வருகின்றது. இராணிப்பேட்டையில் சிப்காட் தொழிற்சாலை தொடங்கப்பட்டு, அப்பகுதி மக்கள் வேலைக்குச் செல்கின்றனர் என்ற கால வளர்ச்சியையும் புனைவில் பதிவு செய்திருக்கின்றார். நாவலின் மூலம் வடாற்காடு மக்களின் வாழ்க்கையையும் தொழிலையும் தெரிந்துகொள்ள முடிகிறது. ஊதுவத்தித் தொழிலை அவ்வூரிலுள்ள அனைவரும் செய்தாலும், நாவல் கங்காதரன் குடும்பத்தைச் சுற்றியதாக மட்டுமே கதை நிகழ்கிறது. கூடுதலான விவரிப்புகளை நூலாசிரியர் சில இடங்களில் தவிர்த்திருக்கலாம். தெருக்கூத்தில் பித்துப்பிடித்த ஒருவனை, விரும்பிய வாழ்க்கையை வாழ விடாமல், வாழ்வானது  அலைக்கழித்துக் கொண்டே இருந்ததைப் பார்க்க முடிகின்றது. ஊதுவத்தி மணமுள்ளதாக இருந்தாலும், ஊதுவத்தி உருட்டியவர்களின் வாழ்க்கை செழிப்பாக இல்லை. அவர்கள் வறுமையில் வாடியதைப் பார்க்க முடிந்தது. ஊதுவத்தி மாவை உருட்டுபவர்களுக்கு நோய் வரலாம் என்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் நாவல் அமைந்துள்ளது.

‘ஜகிட்டி’ என்று நாவலிற்குப் பெயர் வைத்தற்கான காரணமும் பொருத்தமாக இருக்கின்றது. ஜிகிட்டி என்பது ஊதுபத்தித் தொழிலில் கரிமாவுடன் கலக்கப்படும், தாவரங்களிலிருந்து பெறப்படும் ஒட்டுத்தன்மையுள்ள சிகப்பு நிற மாவு ஆகும்.

நாவல்: ஜிகிட்டி

ஆசிரியர்: கவிப்பித்தன்

பதிப்பகம்: தடாகம்

விலை: 380 ரூபாய்

– ம. பரிமளா தேவி, முதுகலைத் தமிழாசிரியர், திருப்பத்தூர்.