இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை, நாட்டின் “வளர்ச்சிக் கதையின்” முன்னணிச் சின்னமாகக் காட்டப்படுகிறது. “இந்தியாவின் அறிவுசார் சக்தி”, “உலகின் டிஜிட்டல் மையம்”, “இளம் இந்தியாவின் கனவு” என்று ஐ.டி. நிறுவனங்கள் தங்களைப் பற்றிப் பெருமை பேசுகின்றன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாயாகவும், பங்குச் சந்தையில் அதிகப்படியான லாபம் ஈட்டுபவையாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் துறையாகவும் தோற்றமளிக்கிறது.
இவையனைத்தும் ஒரு பக்கம் இருக்க, இந்த வருவாயை உருவாக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலையும், அவர்கள் உருவாக்கிய செல்வம் பகிரப்படும் முறையும் வேறுவிதமான உண்மைகளை நமக்கு வெளிச்சம் காட்டுகின்றன. இந்தியாவின் முதல் ஐந்து நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை ஆதாரங்களாக வைத்துக்கொண்டு அந்த உண்மைகளை இக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
லாபம் பங்குதாரர்களுக்கு; ஊதியக் குறைப்பு தொழிலாளர்களுக்கு!
நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் நிதி நிலவரத்தைப் பார்க்கும்போது, லாபத்தில் பெரும் பகுதி பங்குதாரர்களுக்கே சென்றிருப்பது தெரிகிறது. டி.சி.எஸ். நிறுவனத்தின் 2,55,324 கோடி ரூபாய் வருவாயில், 64,479 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதில் 46,857 கோடி ரூபாய் அளவிற்கு பங்குதாரர்களுக்கே சென்றுள்ளது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் ஓராண்டு லாபத்தில் கிட்டத்தட்ட 73 சதவீதம் ஆகும்.
அதேபோல, எச்.சி.எல். நிறுவனத்தின் 1,30,144 கோடி ரூபாய் வருவாயில் 21,250 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்க, அதில் 14,618 கோடி ரூபாய் பங்குதாரர்களுக்குச் சென்றுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் 92,620 கோடி ரூபாய் வருவாயில் 17,342 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்க, 11,521 கோடி ரூபாய் பங்குதாரர்களுக்குப் போயுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 1,78,650 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்க, அதிலிருந்து 37,500 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்டமான தொகை பங்குதாரர்கள் மற்றும் இணைப்புகளுக்குச் சென்றுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் 56,815 கோடி ரூபாய் வருவாயில் 6,492 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்க, ₹4,950 கோடி பங்குதாரர்களுக்குச் சென்றுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இப்படியாக பெரும்பாலான நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் சுமார் 65 முதல் 76 சதவீதம் வரையிலும் பங்குதாரர்களுக்கே சென்று சேர்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
சிஇஓ எனப்படுகிற தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதிய உயர்வுக்கும், சாதாரண ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கும் இடையேயான இடைவெளியும் அதிகரித்து வருகிறது. டி.சி.எஸ். நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 6.2% ஊதிய உயர்வு வழங்கப்பட்டு, அது 28.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அதே டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஒரு சராசரி ஊழியரின் ஊதியத்தை விடவும் சுமார் 332 மடங்கு அதிகமாகும். ஒரு சாதாரண ஊழியருக்கு வழங்கப்பட்ட உயர்வென்பது, வெறும் -1.1% மட்டுமே.
எச்.சி.எல். நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 175 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. இது, அங்கே பணிபுரியும் ஒரு சராசரி ஊழியரை விட 292 மடங்கு அதிகம். பெரும்பாலான ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு எந்த ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
விப்ரோ நிறுவனத்தில் இந்த இடைவெளி இன்னும் அதிகமாக, தலைமை நிர்வாக அதிகாரியின் ஊதியம், சராசரி ஊழியரை விட 548 மடங்கு அதிகமாக உள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 82.6 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது சராசரி ஊழியரை விட 744 மடங்கு அதிகம்.
எல்லாவற்றையும் விஞ்சும் வகையில், டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியின் ஊதியம் சராசரி ஊழியரை விட 1,085 மடங்கு அதிகமாக உள்ள அதே நேரத்தில், சராசரி ஊழியரின் ஊதியமோ -4.89% என குறைந்துள்ளது.
இவ்வாறு, ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிபுரியும் நிர்வாக மேலதிகாரிகளின் ஊதியம் கணிசமாக உயரும் அதே வேளையில், சாதாரண ஊழியர்களின் ஊதிய உயர்வு மிகக் குறைவாகவோ, அல்லது சிலநேரம் எந்த உயர்வும் இல்லாமலோ, இருப்பது கவனிக்கத்தக்கது.
உழைப்புச் சுரண்டலும் உபரி மதிப்பும்
மார்க்ஸ் சுட்டிக்காட்டியது போல, முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒரு தொழிலாளி தன்னுடைய உழைப்பை செலுத்து, அந்த நிறுவனத்திற்குத் தன் உழைப்பாற்றலை விற்கிறார். அவருடைய உழைப்பினால் உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பையும், அவருக்கு வழங்கப்படும் ஊதியத்தையும் கணக்கிட்டால், அவருடைய ஊதியம் எப்போதுமே மிகக்குறைவாகவெ இருக்கும்.
அவர் உருவாக்கிய பொருளினால் கிடைத்த இலாபத்தின் மிகச்சிறிய பங்கினை ஊதியமாகக் கொடுத்துவிட்டு, மீதள்ள பெரும்பங்கினை ஒருசிலரே எடுத்துக்கொள்கிறார்கள். அந்த மிகப்பெரிய வித்தியாசம்தான் — உபரி மதிப்பு எனப்படுகிறது. அதுதான் மூலதனமாக ஓரிடத்தில் குவிகிறது.
இன்று அது தலைமை நிர்வாக அதிகாரிகளின் வரம்பற்ற ஊதியமாகவும், பிரதான பங்குதாரர்களின் ஈவுத்தொகையாகவும், பன்னாட்டு முதலீட்டாளர்களின் ஈவுத்தொகையாகவும் உருமாறி, உழைப்பைக் கொடுத்த உண்மையான உரிமையாளர்களான ஊழியர்களிடமிருந்து திருடப்படுகின்றது.
மேலே சுட்டிக்காட்டப்பட்ட எண்கள், இந்த நியதியைத்தான் புள்ளிவிவரமாக நிரூபிக்கின்றன. ஒரு ஊழியரின் உண்மையான உற்பத்தித்திறன் அதிகரிக்கும்போது, நிறுவனங்களின் வருவாயும் லாபமும் ஆண்டுதோறும் உயர்வது இதற்குச் சான்றாகும்.
அந்த அதிகரிப்பின் பலன் யாருக்குச் செல்கிறது? ஊழியர்களுக்கு அல்ல. பெரும்பாலும் ஊழியர்களுக்கு 1% ஊதிய உயர்வும், சில நிறுவனங்களில் எதிர்மறை உயர்வும் இதற்குச் சாட்சி. மாறாக, அந்தப் பலன் பெருமுதலாளிக்கும், தலைமை நிர்வாகிகளுக்கும், நிதிச் சந்தையின் ஊகவணிகர்களுக்கும் செல்கிறது.
தலைமை நிர்வாக அதிகாரிகளின் இந்த வானளாவிய ஊதியத்தை நியாயப்படுத்த, “உலகளாவிய திறமைச் சந்தை” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதே “சந்தை தர்க்கம்”, லட்சக்கணக்கான தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்குப் பொருந்துவதில்லை.
அவர்கள் பெரும்பாலும் அதிகப்படியான திறன்வாய்ந்த பணிசெய்பவர்களாக இருந்தும், உள்நாட்டுப் பணவீக்கத்தைக்கூட ஈடுகட்டாத உயர்வுதான் கிடைக்கிறது. இதுவே திறமை என்ற போர்வையில் திருடும் கூட்டத்தின் திட்டத்தை ஆண்டறிக்கையில் அறியலாம்.
தொழிற்சங்க ஒற்றுமையே சுரண்டலுக்கு எதிரான ஆயுதம்!
இந்த எண்கள் தாமாக வெளிச்சத்திற்கு வரவில்லை. நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளின் நுணுக்கமான பக்கங்களில் புதைந்திருந்த இந்தத் தரவுகளைத் தோண்டி எடுத்து, தலைமை நிர்வாக அதிகாரி ஊதியத்திற்கும் சராசரி ஊழியர் ஊதியத்திற்குமான இடைவெளியைப் பொதுவெளிக்குக் கொண்டு வருவதற்கும், அமைப்பாய் திரண்ட ஊழியர்கள் திட்டமிட்டு இந்தத் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்த எடுத்த கூட்டு ஆய்வே காரணம்.
அரசோ, ஊடகங்களோ அதிகம் கவனிக்காத இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வை ஊழியர்களே அமைப்பாக ஒன்றிணைந்து கேள்வி கேட்கும்போதுதான் இது தேசிய உரையாடலின் பகுதியாக மாறுகிறது.
இதுவே தொழிற்சங்கமாக அமைப்பாய் திரண்டு ஊதிய பேரம் பேசுவது மட்டுமல்ல, மூலதனம் மறைக்க விரும்பும் உண்மைகளை வெளிக்கொணர்வது ஊழியர்களின் அரசியலாக மாறுகின்றது.
வரலாற்று ரீதியாக, ஊதிய உயர்வும் வேலை நிலைமைகளும் மேலிருந்து இரக்கத்தால் வழங்கப்பட்டதில்லை. கூட்டு பேரம் பேசும் சக்தியால் வென்றெடுக்கப்பட்டவையே. தகவல் தொழில்நுட்பத் துறை, “தொழிற்சங்கத்திற்கு இடமில்லாத துறை” என்ற பிம்பத்தை உடைத்து எறிய வேண்டும்.
இறுதியில், இந்த எண்கள் நமக்கு நினைவூட்டுவது, பொருளாதார வளர்ச்சி என்பது, அதை உருவாக்குபவர்களுக்கே பலனளிக்காத வரை, ஒரு புள்ளிவிவரக் கண்கவர்ச்சி மட்டுமே.
இந்த வர்க்க இடைவெளியைப் பேசாமல், தொழிலாளர் அமைப்பு உரிமையைப் பேசாமல், நாட்டின் மேம்பாட்டைப் பற்றிய உண்மையான உரையாடல் முழுமையடையாது.
– சந்திர சேகர் ஆசாத்







