நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பின் மூலம், ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971’-இல் திருத்தம் செய்த புதிய சட்டத்தை 2026 ஜூலை இறுதியில் அவசர அவசரமாக ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் ”வந்தே மாதரம்” பாடலைப் பாடவிடாமல் தடுத்தாலோ அல்லது அவமதித்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று இச்சட்டம் சொல்கிறது. தற்போது இச்சட்டம் முழுமையாக அமலுக்கு வர குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்பே இது முழுமையாக நடைமுறைக்கு வரும். இதன் மூலம் பிரதமர் மோடி அவர்களும், அவரது அரசும் தேசியப் பாடலுக்குக் கௌரவம் தரப் போராடுவது போலவும், ஆனால் எதிர்க்கட்சிகள் அதைத் தடுப்பது போலவும் ஒரு போலி தேசப்பற்று அரசியல் இதன் ஊடாகக் கட்டமைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடங்கி, விலைவாசி உயர்வு, வேலையின்மை, நாடு முழுக்க நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம் வரை முக்கியத்துவம் வாய்ந்த விவாதப் பொருட்கள் இருக்கும்போது, வந்தே மாதரம் பாடல் குறித்துக் கடும் எதிர்ப்பையும் மீறி அவசர அவசரமாக இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இதுவும் இவர்களின் வழக்கமான திசைதிருப்பும் அரசியலா?
”வந்தே மாதரம்” வந்த கதை
1857 சிப்பாய் புரட்சிக்குப் பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் இருந்த இந்தியாவை, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1858 முதல் தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதன் பின்னர் இந்திய அதிகாரிகள் சிலரும் நியமிக்கப்பட்டார்கள். அவர்களில் பிரிட்டன் இராணியால் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் ”பங்கிம் சந்திர சாட்டர்ஜி” ஆவார். இவர் 1891-ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை பிரிட்டிஷ் அரசு அதிகாரியாக இருந்தார். அதன் பின் 1894-இல் இவர் காலமானார். இவருக்குப் பிரிட்டிஷ் அரசிற்குச் சேவை செய்ததற்காக வழங்கப்படும் ‘ராவ் பகதூர்’ உள்ளிட்ட சில பட்டங்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டுள்ளன. 1870-இல், இந்தியாவை ஆளத் தொடங்கியிருந்த ஆங்கிலேயர்கள், “God Save the Queen” என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலைக் கட்டாயமாக்கினர். ஒரு அரசு அதிகாரியாக இருந்த பங்கிம் சந்திரர், இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப இப்பாடலைத் தனக்குத் தெரிந்த வங்காளம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில், 1876-இல் எழுதினார். அதுதான் ”வந்தே மாதரம்” எனும் பாடல் ஆகும். எனினும் இப்பாடல், 1882-இல் பங்கிம் சந்திரர் எழுதி வெளியிட்ட ”ஆனந்தமடம்” என்ற நாவலில்தான் முதன்முதலில் அச்சிற்கு வந்தது. ஜாதுநாத் பட்டாச்சார்யா தொடங்கித் தாகூர் வரை பலர் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்கள். இந்தப் பாடலில் வரும் அனைத்துச் சின்னங்கள் மற்றும் காட்சிகளும் வங்க நிலத்துடன் தொடர்புடையவை மட்டுமே. அதில் அவர் பாடும் 7 கோடி மக்கள் என்பது அன்றைய வங்க மாகாணத்தின் (பங்களாதேஷ், மேற்குவங்கம், ஒடிசா, பீகார்) மொத்த மக்கள் தொகையாகும். அரவிந்தர் கோஷ் அதை மொழிபெயர்த்தபோது ‘வங்கத்தின் தேசிய கீதம்’ என்று சொன்னாரே தவிர, அதை ஒருநாளும் மொத்த இந்திய நிலப்பரப்பிற்குமானது என்று அவர் உட்பட யாரும் சொல்லவில்லை.
”தேசிய அரசியலில்” நுழைந்த வந்தே மாதரம்
1905-இல் வங்கத்தைக் கிழக்கு மற்றும் மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கும் வேலையைக் காலனி ஆட்சியாளர்கள் முன்னெடுத்தனர். அதற்கு எதிராக ‘ஒருங்கிணைந்த வங்கம்’ கோரிய வங்க மக்களும், வங்கத்தின் விடுதலைப் போராட்ட வீரர்களும், ஒருங்கிணைந்த வங்க நிலத்தைப் போற்றும் வந்தே மாதரம் பாடலைப் பாடினார்கள். இது வங்க மக்கள் மத்தியில் உணர்ச்சியைத் தூண்டியது. அதோடு இது ஆளும் ஆங்கிலேயர்களைக் கோபப்படுத்தியது. அதைக் கண்ட அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் பாடலை அவரவர் மாநிலத்திற்குக் கொண்டு சென்றார்கள். திலகர் மராத்திய மாநிலத்திற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வ.உ.சி. போன்றோர் தமிழ்நாட்டிற்கும் இப்பாடலைக் கொண்டு வந்தார்கள். வ.உ.சி-யுடன் இருந்த, வங்க மொழி அறிந்திருந்த பாரதி இப்பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
ஆனாலும் முழுப் பாடலும் பாடப்படுவதை விட, ”வந்தே மாதரம்” என்னும் முழக்கமே மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டிருந்தது. அதனால்தான் ”வந்தே மாதரம்” என்போம் என்று வங்க மொழியின் முதல் வரியைச் சொல்லி, அடுத்த வரியில் அதன் மொழிபெயர்ப்பாக ”எங்கள் மாநிலத் தாயை வணங்குது மென்போம்” என்று பாரதி தான் எழுதிய தமிழ்ப் பாடலிலும் அந்த முழக்கத்தை மொழிபெயர்ப்போடு கையாண்டு பார்த்தார். ஆகவே இந்தப் பாடல் தேசிய அரசியலுக்கு வந்தது வங்கப்பிரிவினைக்கு எதிராகத்தானே தவிர, ஒட்டுமொத்த இந்திய விடுதலைக்கான தேசிய கீதமாக அப்போதுதான் அது மெல்ல உருப்பெறத் தொடங்கியது.
சாரே ஜகான் சே அச்சா
இதற்கிடையில் லாகூர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய 27 வயது இளைஞர் முகமது இக்பால் அவர்கள் 1904-இல் “சாரே ஜகான் சே அச்சா” எனும் உருதுப் பாடலை எழுதிப் பாடினார். அப்போது முதல் தேசிய அரசியலில் அப்பாடல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
”இந்த உயரமான மலை, வானத்தின் நிழல் – கூர்மையானது.
இது எங்கள் காவலாளி, இது எங்கள் காவலாளர்
இதன் மடியில் ஆயிரக்கணக்கான ஆறுகள் உலாவிக் கொண்டிருக்கின்றன,
இவற்றின் உயிர்ச்சக்தி நம் தோட்டத்தைச் சொர்க்கத்தின் பொறாமையாக ஆக்குகிறது.”
போன்ற வரிகளால் இந்தப் பாடல் முதன்முதலில் ஒட்டுமொத்த இந்திய நிலத்தையும் போற்றும் பாடலாக அமைந்தது. அதோடு இந்தப் பாடல் மத ஒற்றுமையை வலியுறுத்தும் பாடலாகவும் இருந்தது. 1932-இல் எரவாடா சிறையில் இருந்த காந்தியடிகள் இப்பாடலை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பாடியிருக்கிறார். நேரு, நேதாஜி உட்படப் பல அரசியல் தலைவர்கள் இந்தப் பாடலை நேசித்தார்கள். இதை எழுதிய கவிஞர் இக்பால் 1938-இல் காலமானார். இந்தப் பாடலும் தேசிய இயக்கத்தின் பாடலாகத் தொடர்ந்தது.
ஜனகனமன பாடல்
1911 டிசம்பர் 27-ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தாகூர் எழுதிய வங்காள மொழிக் கவிதையின் தொடக்க வரிகளான ஜனகனமன வரிகளை, தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி பாடினார். இந்தக் கவிதை வரிகள் ஒட்டுமொத்த இந்திய நிலத்தைப் பாடக்கூடிய அதே வேளையில், சமயச் சார்பற்ற பாடலாக இருந்தது. அதன் பின் இந்திய தேசிய அரசியலில் இந்தப் பாடலும் முக்கியத்துவம் பெற்றது.
வந்தே மாதரம் சர்ச்சையும் முடிவும்
1937-ஆம் ஆண்டில் ஃபைசாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் “இந்திய தேசியப் பாடல்” குறித்த முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டன. காங்கிரஸுக்குள் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த இக்பால் எழுதிய பாடல் என்பதால் ‘சாரே ஜகான் சே அச்சா’ எனும் உருதுப் பாடல் பெரும்பான்மை பெற வாய்ப்புக் குறைவாகவே இருந்தது. ”வந்தே மாதரம்” பாடல் இந்திய தேசியத்தைத் குறிப்பிட்ட மதத்தின் பார்வையில் வரையறுப்பதாக முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்லாமல், சீக்கிய, சமண, கிறித்தவ, புத்த அமைப்புகளும் இப்பாடலுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை போன்ற அமைப்புகள் மட்டும் முழுப் பாடலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் சண்டையிட்டன. காந்தியடிகள், நேரு, அபுல் கலாம் ஆசாத் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை உள்ளடக்கிய குழு அது குறித்துப் பரிசீலித்தது; முடிவில் எந்தவொரு மத ரீதியிலான பார்வையும் இல்லாத முதல் இரண்டு சரணங்களை மட்டுமே கொண்ட வந்தே மாதரம் பாடலை ஏற்றது. ஜனகனமன பாடல் இதில் எந்தச் சர்ச்சையிலும் இல்லாத பாடலாக இருந்தது.
தேசிய கீதம் – தேசியப் பாடல் – அணிவகுப்புப் பாடல்
இவ்வாறு நடைபெற்ற தீவிர விவாதங்கள் ஒருபுறமிருக்க 1947-இல் இந்தியா விடுதலை பெற்றது. 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவு நடைபெற்ற இந்திய அரசியல் நிர்ணய சபை அமர்வின் இறுதியில், சுசேதா கிருபாளானி “சாரே ஜகான் சே அச்சா” பாடலின் முதல் சில வரிகளையும், “ஜன கண மன” பாடலின் முதல் சரணத்தையும் பாடினார். சுதந்திர விழா நிகழ்ச்சிக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது ஜவஹர்லால் நேரு, “வந்தே மாதரம்”, “சாரே ஜஹான் சே அச்சா”, “ஜன கண மன” ஆகிய மூன்று பாடல்களும் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். அதன் அடிப்படையில் 1947 ஆகஸ்ட் 15-இல் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்ட உடன் இந்த மூன்று பாடல்களும் இசைக்கப்பட்டன.
அதன் பின் கூடிய அரசியல் நிர்ணய சபை இந்த மூன்று பாடல்களையும், அவை மக்களிடம் கொண்டுள்ள செல்வாக்கையும் கணக்கில் கொண்டு, மதச்சார்பற்ற ”ஜனகனமன” பாடலைத் தேசிய கீதமாகவும், ”வந்தே மாதரம்” பாடலின் மதச்சார்பற்ற முதல் இரண்டு பத்திகளைத் தேசியப் பாடலாகவும், ”சாரே ஜகான் சே அச்சா” பாடலை இராணுவ அணிவகுப்பிற்கான பாடலாகவும் இறுதி செய்தது.’
ஆர்.எஸ்.எஸ். கனவுக்குப் பலிகொடுக்கப்படும் இந்திய அரசியல் சாசனம்
இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற நாடு, குடிமக்களிடம் மத வேறுபாடுகள் பார்க்கக்கூடாது என்கிறது இந்திய அரசியல் சட்டம். ஆனால் மதம் சார்ந்த செய்திகளை அரசியல் உரையாடலாக மாற்றி, அதன் மூலம் வாக்கு அரசியலைக் கடந்த பல ஆண்டுகளாகச் செய்து வரும் தற்போதைய ஒன்றிய அரசு, ”வந்தே மாதரம்” பாடலை வைத்து அப்படி ஒரு விளையாட்டைச் சட்டப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுப் பின்புலங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், 2016-ஆம் ஆண்டு வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி அவர்கள், “1937-ஆம் ஆண்டில் ஃபைசாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்துக்கு முன்பாக அப்பாடலின் முக்கியப் பகுதிகளைக் காங்கிரஸ் நீக்கிவிட்டது. வந்தே மாதரம் பாடலின் ஆன்மாவின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. இதன் மூலம் வந்தே மாதரம் பிளக்கப்பட்டது. இதுதான் பிரிவினைக்கான விதைகளை விதைத்தது,” என்ற ஆர்.எஸ்.எஸ். சதிக் கோட்பாட்டை அரசு விழாவில் பேசினார். இதன் மூலம் வந்தே மாதரம் பாடலை அரசு விழாக்களில் கட்டாயமாக்கினார்கள். ஆனால் தற்போது அரசியல் நிர்ணய சபை நீக்கிய வரிகளையும் இணைத்து அதற்குச் சட்ட வடிவம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். இது ஆர்.எஸ்.எஸ். கனவை நனவாக்க இந்திய அரசியல் சட்டத்தைச் சிதைக்கும் வேலையாகவே உள்ளது.
வந்தே மாதரம் கட்டாயமா?
இந்தச் சட்டத்தை வைத்து “வந்தே மாதரத்தின் மதச்சார்புள்ள முழுப் பாடலைக் கட்டாயமாக்க இயலுமா?” என்ற கேள்விக்கு நீதியரசர் ஹரி பரந்தாமன் அவர்கள், “முதலில் வந்தே மாதரம் முழுப் பாடலைச் சட்டம் எங்கும் சொல்லவே இல்லை. அதோடு ஏற்கனவே உள்ள வந்தே மாதரம் பாடலும் எந்த விழாவிலும் கட்டாயமில்லை என்றே உள்ளது” என்று சொல்கிறார். மேலும் “வந்தே மாதரம் பாடல் விழாக்களில் பாடப்படும்போது அவமதிக்கவோ, தடுக்கவோ கூடாது என்றே சட்டம் சொல்கிறது” என்றும் கூறுகிறார். ஆகவே இச்சட்டத்தைக் கண்டு முதலில் அச்சப்படத் தேவையில்லை. அதோடு “மாநில சட்டமன்றங்கள் இதில் தங்களுக்கான நிலைப்பாடுகளை உருவாக்கிக் கொள்ள இயலும்” என்றும் சொல்கிறார்கள். தற்போதைய ஒன்றிய அரசின் நோக்கம் இந்தச் சட்டத்திருத்தத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் மதச்சார்புள்ள வந்தே மாதரம் முழுப் பாடலையும் தேசிய கீதமாக்குவதே ஆகும். “ஒட்டகம் கூடாரத்தில் நுழைவது போல்” உள்ள அதன் நோக்கத்தைத் தொடக்கத்திலேயே நாம் தடுத்தாக வேண்டும். அதில் தமிழ்நாடு அரசு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தற்போது தமிழ்நாடு அரசு “தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மையான இடம் வழங்கப்பட வேண்டும்” என்கிற தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனால் அதிலும் “வந்தே மாதரம்” பாடல் தவிர்க்கப்பட வேண்டும் என்ற எந்தக் குறிப்பும் இல்லாமல் உள்ளது. வந்தே மாதரம் பாடலுக்குச் சட்டப்படியான எந்தக் கட்டாயமும் இல்லாத சூழலில் அதையும் சட்டமன்றத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். வந்தே மாதரம் பாடல் மூலம் மத அடிப்படைவாதிகள் செய்யும் இந்தச் சூழ்ச்சியைத் தடுக்கத் துணிச்சல் மிக்க நடவடிக்கைகள் மட்டுமே தேவை. தமிழ்நாடு அரசு வந்தே மாதரம் பாடல் பாடப்படுவது குறித்த தனது மௌனத்தை உடனே கலைக்க வேண்டும். அதைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க இயலாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.






