“தவறைத் தவறு என்று உங்களால் சொல்ல முடியாவிட்டால், நீங்கள் அடிமைத்தனத்தின் மிகக் கீழான நிலையில் இருக்கிறீர்கள்” என்றார் சே குவேரா. குடும்ப அமைப்புகூட தவறுகளை வெளிப்படையாகச் சொல்ல முடியாத, அடிமைப்படுத்தப்படும் கட்டமைப்பைக் கொண்டதாகத்தான் இருக்கிறது.
சமீபத்தில் இயல்பாக வரக்கூடிய செய்திகளில் ஒன்று பாலியல் வன்முறை. சிறு பிள்ளைகள் தொடங்கி வயதானவர்கள் வரை, ஆண், பெண் எனப் பாரபட்சமின்றி பாலியல் வன்முறைகள் நடந்தேறிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். 2026 மே 28ஆம் தேதி ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் வந்த செய்தி ஒன்றில் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை நடந்தேறிய வழக்கில், வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிய 35 வயது நிரம்பிய வேலப்பன் என்பவரே குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் துயர நிகழ்வாக இருந்தது.
கிருஷ்ணகிரியில் இரண்டு வயது சிறுமி மற்றும் 70 வயது மூதாட்டியும், நாமக்கலில் 7 வயது சிறுமியும் என நாளுக்கு நாள் தொலைக்காட்சிகளில் வரும் செய்திகள் அனைவரும் அறிந்தவையே!
இவை மட்டுமன்றி நம் சமூகத்தில் நாம் அறிந்திடாத பாலியல் குற்ற நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன.
நெருங்கிய உறவுகளிலும் அதிகார அமைப்புகளிலும் நிகழும் வன்முறைகள்
வறுமையின் காரணமாக அப்பா, அம்மா இல்லாத இளம்பெண் ஒருவர் தனது ஒன்றுவிட்ட பெரியப்பா வீட்டில் தங்கிப் படிக்கச் செல்கிறாள். அங்கு தனது பெரியப்பாவால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள். அதைப் பெரியம்மாவிடம் சொன்னால் அவர்களுக்குள் ஏதேனும் பிரிவினை வந்துவிடுமோ என்று எண்ணி, பெரியப்பா மகன், அதாவது நண்பனைப் போல் பழகிய அண்ணன் முறையில் உள்ள உறவிடம் சொல்கிறாள். ஆனால், அதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த அண்ணனும் அவளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபடுகிறார். என்ன செய்வது என்றும் தெரியாமல், படிப்பையும் பாதியில் நிறுத்த முடியாமல் அங்கேயே தங்கவும் முடியாமல் ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வந்து, இறுதியில் அங்கிருந்து ஓடி சென்றுள்ளார் அந்தப் பெண். .
தனது அக்கா வீட்டிற்குச் சென்றுள்ள கல்லூரி மாணவி ஒருவர், இரவில் உறங்கிக் கொண்டிருக்கும்போது தனது அருகில் வேண்டுமென்றே அக்காவின் கணவர் உறங்க வருவதையும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதையும் அக்காவிடம் சொல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் அவர்களது வீட்டிற்குத் தனியாகச் செல்வதையே நிறுத்திக் கொண்டுள்ளார் அந்தக் கல்லூரி மாணவி.
ஆய்வுப் படிப்பில் பயிலும் ஏழை மாணவியை, அந்தப் படிப்பைக் காரணம் காட்டியே மிரட்டி, வழிகாட்டி ஆசிரியரே பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியுள்ளார்.
நன்கு படித்து அரசுப் பணிக்குச் சென்றுள்ளார் திருமணமாகாத ஒரு பெண். அவளுடைய மேலதிகாரியே தொடர்ந்து அவளைப் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவளாகக் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரும் கொடுத்துவிட்டாள்.விசாரணை என்ற பெயரில் அந்தப் பெண் அடிக்கடி காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தாள். தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதாலும், திருமணமாகி இரண்டு பிள்ளைகள் பெற்ற அந்த மேலதிகாரி, ஓரளவிற்கு செல்வாக்கும் படைத்தவர் என்பதாலும் மற்ற ஊழியர்கள் இந்தப் பெண்ணிடம், “இதை விட்டுவிடு, புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு பணி மாறுதல் வாங்கிக்கொண்டு சென்றுவிடு. இன்னும் திருமணமாகாதவள் நீ, உனக்குத்தான் கெட்ட பெயர்” என்று மூளைச்சலவை செய்துள்ளனர். மேலும், “அவரால் வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுவிடலாம். இப்பொழுதுதான் படித்து வேலைக்கு வந்திருக்கிறாய்” எனப் பயமுறுத்தியதாலும் , கட்டாயத்தின் பேரில் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மாறுதல் வாங்கிச் சென்றுவிட்டாள் அவள்.
இதையெல்லாம் படிக்கும்போது எல்லோருக்கும் ஒரு கேள்வி எழலாம்! பெண்கள் எல்லோரும் ஒழுங்கா? பெண்கள் மட்டும்தான் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்களா? என்று.
ஆணோ, பெண்ணோ, திருநரோ, எந்தப் பாலினமாக இருந்தாலும் பாலியல் வன்முறை என்பது பொதுவானதுதான். ஆனால், பாலியல் வன்முறையால் அதிகளவில் பாதிக்கப்படுவது ஆண்களைவிடப் பெண்களும் திருநர் மக்களும்தான்.
குடும்ப உறவுகளுக்குள் மறைக்கப்படும் வன்முறை
சமூகத்தில் நடைபெறும் பாலியல் வன்முறையைக்கூட வெளிப்படையாகச் சொல்லிவிட முடியும். ஆனால், குடும்ப அமைப்பில், குடும்ப உறவுகளால் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்முறைகளைச் சொல்ல முடியாமல் பொறுத்துக்கொண்டு வாழக்கூடிய சூழல்தான் பல பெண்களுக்கு உள்ளது. அதிலும் சில பெண்களுக்குத் தாங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது அப்படியான துன்புறுத்தல் என்பதுகூடத் தெரிவதில்லை என்பதே மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது.
குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டமாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் ஆண், பெண் இருவருக்குமான பொதுவான குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்று எதுவும் இல்லை. அப்படியானால், குடும்பத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு மட்டும்தான் காலங்காலமாக வன்முறைகள் நடந்துகொண்டிருக்கின்றனவா? ஆண்களுக்கு அப்படியொரு சட்டம் தேவைப்படவில்லையா? ஆண்களுக்கு எப்படி இப்படியான ஒரு சட்டம் தேவைப்படாமல் இருக்கிறதோ, அதைப்போலப் பெண்களுக்கும் தேவைப்படாத ஒரு காலம் உருவாக வேண்டியது அவசியம் அல்லவா! என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
வன்முறை என்பது உடல், மனம் சார்ந்த எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஒரு பெண்ணால் வெளிப்படையாகச் சொல்ல முடியாத வன்முறைகளில் ஒன்று பாலியல் வன்முறை. குடும்பம் தொடங்கி சமூகம் வரை மறைக்கப்பட்டே வருகின்ற வன்முறைகளில் இதுவும் ஒன்று.
ஆணும் பெண்ணும் யாராக இருந்தாலும், ஒருவரின் விருப்பம் இல்லாமல் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்துதல் என்பது வன்முறைதான். திருமண பந்தத்தில் சில பெண்கள் இத்தகைய பாலியல் வன்முறையைப் பொறுத்துக்கொண்டே வாழ்கிறார்கள். காரணம், திருமண உறவு நீடித்து நிலைத்திருக்க “பொறுத்துக் கொள்ளுதல்” என்பது முதன்மையாகி விடுகிறது.
“திருமண வாழ்வு என்றாலே அப்படித்தான் இருக்கும். பெண்கள்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் குடும்பம் இருக்காது” என்று நம்ப வைத்தே பல பெண்கள் பாலியல் வன்முறையைக்கூட ‘வன்முறை’ என்றே அறியாமல், பொறுத்துப் போவதையே அதைத் தனது கடமையாக, காதலாக, உறவின் அடித்தளமாகத் தங்களைத் தாங்களே நம்ப வைத்துக்கொள்கிறார்கள்.
ஒரு ஆண் தனது உடலின் தேவைகளை வெளிப்படையாகத் தெரியப்படுத்துவதைப் போல், பெண்களால் கணவனிடத்தில்கூட வெளிப்படுத்த முடியாத சூழல்தான் உள்ளது. நம் சமூகத்தைப் பொறுத்தவரை, அப்படியாக எதையும் வெளிப்படுத்திவிடாத பெண்கள்தான் ஒழுக்கமுள்ள பெண்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
பெண்களுக்கு தங்களது சுய மதிப்பு பற்றி சரியாக விளங்கிக்கொள்ள சிறுவயது முதலே கற்றுகொடுக்க வேண்டும். சுய மதிப்புள்ள பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும், வேண்டாம், பிடிக்கும், பிடிக்காது என்பதை புரிந்துகொள்வதுடன் அவற்றை சரியாக எடுத்துரைக்கவும் கூடும். இவ்வாறான புரிந்துணர்வு இல்லாத பெண்களால் தங்களது கணவர் என்று வரும் போது அவரிடத்தில் எவ்வாறு எல்லைகள் நிர்ணயிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டே வாழ்கின்றனர்.
திருமண உறவு என்பது மற்ற உறவுகளைக் காட்டிலும் வேறுப்பட்ட உறவு. என்னதான் அன்பு என்பது அடிப்படையாகக் கொண்டதாக எல்லா உறவுகளும் அமைந்தாலுமே, கணவன் மனைவி என்பது தனித்துவமான தாம்பத்திய வாழ்க்கையையும் முன்னிறுத்தி இருப்பதாக அமைகிறது. அதுவும் பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணத்தில், பெரும்பாலான குடும்பங்களில் பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பும் பின்பும் கூட கருத்து என்பது இருக்க அனுமதிப்பதில்லை. அவ்வாறிருக்க, தாம்பத்திய உறவில் ஒருவருக்கொருவர் எது பிடிக்கும், எது பிடிக்காது, எது வேண்டும், எது வேண்டாம் என்பதை பேசித் தெளிவுப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு மிக மிக அரிதானது. இருந்தாலும், இதனால் அதிகம் பாதிப்படைவது என்பது பெண்கள்தான். ஆண்களுக்குப் பேச, பழக, கற்றுக்கொள்ள, தெளிவுப்படுத்திக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகள், மேடைகள், இடங்கள் என்பது ஏராளம். ஏனென்றால் இது ஆணுக்கான உலகமாகவே இருக்கிறது. இதுவே ஒரு பெண்ணுக்கு, தன் தாயிடம் இருந்துக் கூட அடங்கி நடப்பதையன்றி கற்றுக்கொள்ள வேறு எதையும் கிடைக்கப்பெறாதவளாகவே ஒரு பெண் வளர்கிறாள். நாம் பார்க்கும் திரைப்படங்களிலும், ஆண் மையக் கண்ணோட்டத்தில் இருந்துதான் பெண் பார்வையாளர்களும் சகப் பெண்களை, பெண் திரைப்படக் கலைஞர்களை பார்த்துப் பழகுகின்றனர். திருமண நாள் வரை, ஒரு ஆணை இரசனையுடன் காட்டும் திரைப்படங்களைக் கூட பார்த்திராத பெண்கள், திருமணம் முடிந்த முதலிரவில் இருந்தே கணவனை திருப்தி படுத்தும் வகையில் நடந்துக்கொள்ளும் செயல்களில் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.
எந்த உறவாக இருந்தாலும் ஒருவருக்கு பிடிக்காத ஒன்றை வற்புறுத்தித் திணிக்கும் போது, அந்த உறவினால் துன்பம்தான் மேலோங்கும் என்பது அடிப்படை. ஆனால், மனைவி என்பவளே பொறுத்துக் கொண்டு திருமணத்தை காப்பாற்ற வேண்டிய இடத்தில் இருக்கும் போது, அவள் ஒரு எல்லையை வகுப்பது, பிடிக்காததை எடுத்து சொல்லுவது என்பதெல்லாம் கண்ணுக்கு எட்டாத கனவாகவே இருக்கிறது நமது சமூகத்தில்.
ஒரு பெண்ணின் பகிர்வு
சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பெண், தனது மனக்குமுறல்களை யாரிடம் கொட்டுவது எனத் தெரியாமல், நான் ஏதாவது தீர்வு சொல்வேன் என்றும், இப்படியான நிகழ்வுகள் நம் சமூகத்தில் உள்ளன என்பதை உன் எழுத்தின் மூலம் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்து என்றும் பகிர்ந்துகொண்ட ஒன்று, மனித இனத்தின் மீதே எனக்கு வெறுப்பை உண்டாக்கியது.
அவளை நான் பார்த்த நாட்களில், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ திரைப்படத்தில் வரும் ஒரு துறுதுறுப்பான பெண்ணைப் போல, தன்னைத்தானே ரசித்துக்கொள்ளக்கூடியவளாக இருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து, மூன்று பெண் பிள்ளைகளில் இரண்டாவதாகப் பிறந்தவள். ஒரு வசதியான குடும்பத்திற்குத் திருமணமாகிச் சென்ற பின், சிறுவயதிலிருந்து, தான் பார்த்திராத, அனுபவித்திராத வசதிகளைக் கணவன் வீட்டில் அனுபவிக்கிறாள். கணவன் வெளிநாட்டில் வேலை செய்பவர். வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை தாயகம் வந்து செல்வார். கணவர் வரும் ஒவ்வொரு முறையும் அவள் அனுபவிப்பது பாலியல் வன்முறை என்பது தெரியாமலேயே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.
ஒரு ஆணின் விந்தணுக்கள் எதற்காக? பெண்ணின் கருமுட்டையுடன் சேர்ந்து புதிய ஓர் உயிர் உருவாகுவதற்காக இயற்கை உருவாக்கியது அது! ஆனால், அந்த ஆண் அவளிடம் விந்துவை குடிக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். “என் மீது உண்மையாக அன்பிருந்தால், என்னைப் பிடிக்கும் என்றால் குடி” என்றும், “நீ மிகவும் ஒல்லியாக இருக்கிறாய்; இதைக் குடித்தால் உனக்கு உடல் எடை கூடும்” என்றும் வற்புறுத்தி விழுங்கச் செய்துள்ளார். “திருமண வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்குமா?” என்று என்னிடம் கேட்கிறாள் அப்பாவியாக…
இதைக் கேட்டபோது, இப்படியும்கூடவா மனிதர்கள் இருக்கிறார்கள் எனக் கோபத்துடன், “படித்தவள்தானே நீ? ஆணின் விந்துவைக் குடித்தால் உடல் எடை கூடுமா? அவர் செய்யச் சொன்னால் உனக்கு எங்கே போகிறது அறிவு? நீ ஏன் ஒப்புக்கொள்கிறாய்? நீ ஓர் உயிருள்ள நபராக, மனிதராகக்கூடவா உன் கணவருக்குத் தோன்றவில்லை?” என்று கேட்டேன்.
“உன் கணவர் செய்யச் சொன்னால் எதை வேண்டுமானாலும் செய்வாயா? உன் கணவரிடம் ‘வேண்டாம், முடியாது’ என்று சொல்ல வேண்டியதுதானே… உனக்குப் பிடித்துத்தான் இதையெல்லாம் செய்கிறாயா?” என்று கேட்டேன்.
அதற்கு, “எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வயிறு பிரட்டிக்கொண்டு வாந்தி எடுத்தேன். யாருக்கும் தெரியாமல் கழிவறையில் அழுதேன். பிடிக்கவில்லை என்று சொன்னால், ‘அப்போ என்னை உனக்குப் பிடிக்கவில்லையா?’ என்று கேட்கிறார்” என்றாள்.
“மேலும், ஒவ்வொரு முறை அவர் வரும்போதும் எனக்குக் குழந்தை தங்கிவிடுகிறது. வெளிநாட்டில்தானே இருக்கிறார் என்று குடும்பக் கட்டுப்பாடு செய்யாமல் விட்டுவிட்டேன். இப்போது செய்தால் என்னைப் பார்த்துக்கொள்ளக்கூட யாரும் கிடையாது. அதனால் நானாகவே மருந்தகத்தில் மாத்திரை வாங்கி விழுங்கி, இரண்டு முறை பெரும் பிரச்சினையாகிவிட்டது. தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு, நீண்ட நாட்கள் கழித்துத்தான் சரியானது. சிறுநீரில் தொற்று ஏற்பட்டு ரத்தம் வெளியேறி, அதுவும் பெரும் பிரச்சினையாகிவிட்டது. என் கணவர் வெளிநாட்டிலிருந்து வரும் ஒவ்வொரு முறையும் பயமாக இருக்கிறது” என்றாள்.
“இதெல்லாம் பெரும் குற்றம். உனக்குப் பிடிக்கவில்லை என்றால் சட்டப்படி புகார் செய்யலாம். இதுபோன்ற துன்புறுத்தலோடு உன்னால் தொடர்ந்து வாழ முடியுமா?” என்றபோது, “என் கணவரை எனக்கு மிகவும் பிடிக்கும். வருடத்தில் ஓரிருமுறைதான் வருகிறார். அதனால் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்” என்றாள்.
அதற்கு மேல் அவளிடம் அதைப் பற்றிப் பேச எனக்கு விருப்பமில்லை. அவள் படித்த பெண்ணாக இருந்தாலும்கூட வசதியான வாழ்க்கை, குடும்பம், பிள்ளைகள், சமூகம் போன்றவற்றைச் சிந்தித்து அதை ஏற்றுக்கொள்கிறாள். மேலும், ‘கணவன்-மனைவி உறவு என்பதே இப்படியானதாகத்தான் இருக்கும்’ என நம்பிக்கொண்டிருக்கிறாள். விலங்குகள்கூடச் சிந்திக்காததை மனிதனால் எப்படித்தான் செய்ய முடிகிறதோ… அதற்குத்தான் ஆறறிவு உள்ளதா?
சட்டப் பாதுகாப்பும் சம்மதத்தின் உரிமையும்
‘ஒருவரின் விருப்பமில்லாமல் செய்யத் தூண்டும் அனைத்தும் வன்முறை’ என்று இன்னும் பல பெண்களுக்குத் தெரிவதே இல்லை. அது உடல், மனம், பொருளாதாரம், பாலியல் என எதன் அடிப்படையில் இருந்தாலும் அது வன்முறையே. இந்தியாவில் பாலியல் வன்முறையைத் தடுக்கவும், அதிலிருந்து பாதுகாக்கவும் பல சட்டங்கள் உள்ளன.
அவற்றில் ஒன்றான, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 (Protection of Women from Domestic Violence Act, 2005), உடல், மன, பாலியல், பொருளாதார மற்றும் வாய்மொழித் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறைகளிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. இதுவே 18 வயதிற்குக் குறைவான குழந்தைகள் என்றால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம், 2012 (POCSO Act, 2012) உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களுக்கு எதிராக எத்தனை சட்டங்கள் இருந்தாலும், பெரும்பாலான பெண்களுக்கு அவையெல்லாம் தெரியாமல்தான் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கற்பிக்காமல் ஒரு சமூகத்தை வைத்திருப்பதுமே ஒருவிதமான திட்டமிட்ட ஆதிக்கமாகத்தான் தெரிகிறது. அதையும் தாண்டி, அச்சட்டங்களைப் பற்றிச் சில பெண்களுக்குத் தெரிந்திருந்தாலும், தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் அப்பெண்கள் தயங்குகிறார்கள். அவ்வளவு ஏன், நன்கு படித்த, விவரம் தெரிந்த பெண்கள்கூட தயங்கத்தான் செய்கிறார்கள்.
இதில் இன்னொரு வேதனையான முரண்பாடு இந்தியச் சட்டத்திலேயே உள்ளது. இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன் பிரிவு 63, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு எதிராகவோ அல்லது அவரது சம்மதமின்றியோ மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட பாலியல் செயல்களை வன்புணர்வாக வரையறுக்கிறது. ஆனால், அதே பிரிவின் விதிவிலக்கு 2, மனைவி 18 வயதிற்குக் குறைவானவர் அல்லாத நிலையில், ஒரு ஆண் தனது மனைவியுடன் மேற்கொள்ளும் பாலியல் செயல்களை வன்புணர்வாகக் கருதுவதிலிருந்து விலக்கு அளிக்கிறது. அதே நேரத்தில், பிரிந்து வாழும் மனைவியின் சம்மதமின்றி கணவன் பாலியல் உறவு கொள்வதைப் பிரிவு 67 தனியாகக் குற்றமாக்குகிறது. அதாவது, திருமணம் ஆகாத ஒரு பெண்ணின் “சம்மதமின்மை” வன்புணர்வுச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் நிலையில், கணவனுடன் சேர்ந்து வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியின் அதே “சம்மதமின்மை” வன்புணர்வு என்ற சட்ட வரையறைக்குள் அதே விதத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை. திருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணின் உடல் மீதான அவளது சம்மதத்திற்கு சட்டத்தின் பாதுகாப்பில் இத்தகைய வேறுபாடு ஏற்படுவது எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்? மனைவி என்பவள் கணவனின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காகத் தனது உடல் மீதான உரிமையையோ, “வேண்டாம்” என்று சொல்லும் உரிமையையோ திருமணத்தின்போது ஒப்படைத்துவிடுவதில்லை. சம்மதமின்றி நிகழும் பாலியல் செயல் ஏற்படுத்தும் உடல் வலியும், மன உளைச்சலும், அவமானமும், அச்சமும், அதைச் செய்பவர் கணவன் என்பதால் இல்லாமல் போய்விடுவதில்லை. திருமணம் ஒரு பெண்ணின் சம்மதத்தை நிரந்தரமாகப் பெற்றுக்கொண்டதற்கான உரிமமாக இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதரின் உடல் மீதான உரிமையும் அவரவருக்கே உரியது.
நமது அன்புக்குரியவராக இருந்தாலும், குடும்ப உறுப்பினராக இருந்தாலும், பிடிக்காத ஒன்றைச் செய்யும்படி வற்புறுத்துவது வன்முறைதான். திருமணம் என்ற போர்வையால், கணவன் என்ற உறவால், வன்முறை என்று தெரியாமல் பாலியல் சார்ந்த துயரங்களைப் பல பெண்கள் பொறுத்துக்கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அந்த வன்முறையை எதிர்த்துப் போராடி, சுயமரியாதையை மீட்டெடுப்பதற்காக, உறவு உட்பட எதை இழக்க நேர்ந்தாலும் பெண்கள் தயங்கக் கூடாது. இதில், பெண்களுக்காக அமைப்புகளும், அரசும், அரசுக் கட்டமைப்புகளும் ஒட்டுமொத்தமாகத் துணை நிற்க வேண்டியதும் அவசியமாகும்.
சில ஆண்களும், திருமணத்தால் தனக்கு ஒருத்தி அடிமையாகக் கிடைத்துவிட்டாள் என எண்ணாமல், இணையரை ஒரு சக மனிதராகப் பார்க்கப் பழக வேண்டும். மேலும், ஆணோ பெண்ணோ, ஒருவரின் உணர்வுகளை மற்றவர் மதிப்பது குடும்ப அமைப்பை மதிப்புள்ளதாக மாற்றும்.
– தீபா ராஜ்மோகன்







