செழியன் ஒரு செம்மறி ஆடு. செழியனுக்கு நீச்சல் கற்க வேண்டும் என்பது நீண்டநாள் விருப்பமாக இருந்தது.
நீச்சல் உடையும், நீச்சல் கண்ணாடியும் அணிந்து, கால்கள் படபடக்க ஒரு சிறந்த நீச்சல் வீரனைப் போல் நீந்த வேண்டும் என ஆசைப்பட்டான்.
தன் முழு ஆற்றலுடன் தண்ணீரை உதைத்து, கைகளால் தண்ணீரை விலக்கி, மூச்சுக்காற்றால் நீரில் அலைகள் உருவாகும் அளவிற்கு வேகமாக நீந்த வேண்டும் என்றும் செழியனுக்கு ஆசை இருந்தது.
அதனால், செழியன் நாள்முழுக்க குளக்கரையில் தண்ணீரில் கால்களை நனைத்தபடி அமர்ந்து இருப்பான். கைகளால் தண்ணீரை அள்ளி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
மற்ற ஆடுகளோ அந்தக் குளத்தின் அருகில் வருவதேயில்லை. அவர்கள் எல்லாம் குளத்தில் இருந்து வெகுதொலைவு தள்ளி ஒரு புல்வெளியில் மேய்ந்து கொண்டு இருந்தார்கள்.
ஒவ்வொரு நாள் இரவும் செழியன் தண்ணீரில் பட்டாம்பூச்சி வடிவில் நீந்துவது, குப்புறப்படுத்து நீந்துவது, நேராகபடுத்து நீந்துவது என பல்வேறு விதமான நீச்சல் முறைகளைப் பழகுவது பற்றி கனவு கண்டான்.
ஆழ்கடலில் நீந்துவது, நடுக்கடலில் மூழ்கி முத்தெடுப்பது என இரவும் பகலும் நீச்சல் பற்றிய நினைவுகளுடனே வாழ்ந்து வந்தான் செழியன்.
ஆனால் ஒரு செம்மறி ஆடு நீச்சல் கற்பது என்பது எளிதானது இல்லை என்பது செழியனின் அம்மாவிற்குத் தெரியும்.
“டேய் செழியா! வேணாம் டா தண்ணி பக்கத்தில நிக்காதடா. தள்ளி இந்தப் பக்கமா வந்திரு டா, உள்ள விழுந்திறப் போற” என்று குளத்தை நெருங்க விடாமல் செழியனை அம்மா ஆடு அழைப்பார்.
செழியனின் அம்மா மட்டுமல்ல. அதன் அப்பாவும் அதையே தான் சொல்வார்.
“செழியா வேணாம் வா!!!” என்ற கணத்தகுரலுடன் கண்டிப்பாக அவன் கையைப் பிடித்து குளத்தில் இருந்து தூரமாக அழைத்து வந்து விடுவார்.
“இங்க பாரு செழியா, நமக்கு உடம்பு முழுக்க கம்பளி இருக்கு. அதனால நம்மள மாதிரி செம்மறி ஆடுகளால நீச்சல் கத்துக்கவே முடியாது” என்று செழியனிடம் கூறுவார்.
ஆனால் செழியனோ நீச்சல் கற்கும் நாளுக்காகக் காத்திருந்தான்.
செழியன் தினமும் குளத்தில் நீந்தும் சின்னஞ்சிறு மீன்களையும், துள்ளிக் குதிக்கும் தவளைகளையும், குளத்து நீரை அசைக்காமல் மிதந்து செல்லும் வாத்துகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தன் பொழுதைக் கழித்தான். அவற்றைப் பார்க்கும் போது நீச்சல் கற்க வேண்டும் என்ற அவனது ஆசை இன்னும் அதிகமானது.
ஒருநாள் மற்ற எல்லா ஆடுகளும் அருகில் இருந்த புல்வெளியில் தீவிரமாக மேய்ந்து கொண்டிருந்தன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த செழியன், அன்று தைரியமாக ஒரு முடிவு எடுத்தான். ஒரே பாய்ச்சலாக ஓடி வந்து அந்த குளத்திற்குள் குதித்துவிட்டான்.
குதித்த வேகத்தில் “தொப்” என்ற சத்தத்துடன் நடுக்குளத்தில் விழுந்து மிதந்தான். செழியனுக்கு குளத்தின் நீர் குளிர்ச்சியாக இருந்தது. வெயிலுக்கு அது மிகவும் இதமாகவும் இருந்தது. செழியன் திடீரென யாரும் எதிர்பாராமல் குளத்தில் குதித்ததால் அங்கு இருந்த வாத்துகள், மீன்கள், தவளைகள் எல்லாம் பதறிப் போயின.
இப்போது என்ன நடந்தது தெரியுமா?
செழியனின் உடம்பில் இருந்த கம்பளி நீரில் நனைந்து கணமானது. உடல் எடை அதிமானது. இதனால் செழியனால் நீரில் மிதக்க முடியவில்லை. எடை கூடியதால் தண்ணீருக்குள் மூழ்கும் நிலைக்கு வந்தான்.
“ஐயோ!! அம்மா!! என்ன யாராவது காப்பாத்துங்களேன்.. காப்பாத்துங்களேன்…” என்று கத்தினான். உடல் எடை அதிகமானதால் கால்களை மேலே தூக்கி செழியனால் நீந்த முடியவில்லை.
புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மற்ற ஆடுகளுக்கு செழியன் பயத்தில் கத்தும் குரல் கேட்டது. உடனே அவர்கள் எல்லாரும் உதவிக்கு ஓடி வந்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் தண்ணீரில் செழியன் தத்தளித்தான்.
செழியன் மெல்ல போராடி குளக்கரையின் அருகில் வந்தான். ஆனால் நீரில் இருந்து மேலே எழும்பி வெளிவர அவனால் முடியவில்லை.
செழியனுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று மற்ற ஆடுகள் யோசித்தார்கள். அவர்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேர்கோட்டில் நின்றார்கள்.
ஒரு ஆட்டின் வாலை இன்னொரு ஆடு வாயால் கவ்விக் கொண்டது. இப்போது குளக்கரையில் நின்ற ஆடு, தன் வாலை செழியனிடம் நீட்டியது. செழியனும் அந்த வாலை வாயால் கவ்விக்கொண்டான். எல்லா ஆடுகளும் வரிசையாக முழு பலத்துடன் முன்னோக்கி நகர்ந்தார்கள்.
செழியனின் உடலில் இருந்த கம்பளி, நீரில் நனைந்து கனத்துக்கொண்டே போனது. ஆனால் ஆடுகளின் கூட்டுமுயற்சியால் செழியனை அவர்களால் மேலே இழுக்க முடிந்தது. சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு செழியனும் ஒருவழியாக கரை வந்து சேர்ந்தான்.
தொப்பலாக நனைந்து நடுங்கிக் கொண்டே வீடு திரும்பினான் செழியன். செழியனை பார்த்த அம்மா பதறியப் போய் ஓடி வந்தார்.
“என்னாச்சிடா?” என்று கேட்டுக்கொண்டே துண்டை எடுத்து நன்றாகத் துவற்றினார். பின்னர் செழியனுக்கு குடிக்க சூடான பாலும் கொடுத்தார் அம்மா ஆடு. நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னான் செழியன்.
“தண்ணிகிட்ட போகாதேனு சொன்னா கேக்குறியா டா, இப்போ என்ன ஆச்சு பாரு, இனிமேலாச்சும் கவனமா இரு” என்று அதட்டினார். பின்னர் செழியனை படுக்கையில் படுக்க வைத்தார் செழியனின் அம்மா.
அன்று இரவு செழியனுக்கு தூக்கமே வரவில்லை. இதனால் தான் அம்மாவும் அப்பாவும் தன்னை நீச்சல் கற்க அனுமதிக்க வில்லை என்பது செழியனுக்கு இப்போது புரிந்தது. ஆனால், இதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு வழி இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தான் செழியன்.
“எடை அதிகமான காரணத்தால் தான நான் மூழ்குனேன். மிதக்க முடியாம மூழ்குறது தான் பிரச்சனை. அப்போ என்ன பண்ணா மிதக்க முடியும்?” என்று சிந்தித்து கொண்டே படுக்கையில் படுத்திருந்தான்.
அப்போது அறிவியல் வகுப்பில் நிலா டீச்சர் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. “காற்றடைத்த பொருட்கள் நீரில் மூழ்காமல் மிதக்கும்னு சொன்னாங்கல்ல! பந்து, பலூன் எல்லாம் மிதக்கும்னு வகுப்புல செஞ்சிக் காட்டிஙாங்களே. அப்போ அந்த மாதிரி எதாச்சும் செஞ்சா நாமளும் மிதக்க முடியுமோ?” என்று யோசித்தான் செழியன்.
“நானும் அது மாதிரி காத்தடைச்ச பலூனை உடம்புல கட்டுனா என்னாலயும் மிதக்க முடியும்ல” என்று நினைத்து மகிழ்ச்சி ஆனான்.
மறுநாளே நீச்சல் உடை அணிந்து கொண்டு கை கால்களில் பலூனை கட்டிக்கொண்டு குளத்திற்கு வந்தான் செழியன். ஆனால் குளத்தில் குதிக்கும் முன் ‘டமால்’ என்ற சத்தத்துடன் உடலில் கட்டி இருந்த பலூன் வெடித்தது.
எதிர்பாராமல் காதருகே பலூன் வெடித்த சத்தத்தால் பயந்து தடுமாறி கீழே விழுந்தான். விழுந்த செழியனால் திரும்ப எழ முடியவில்லை.
இப்போது செழியனின் நண்பர்கள் சிலர் அவனை தூக்கிக் கொண்டுபோய் வீட்டில் விட்டனர்.
பலூன் முயற்சியும் தோற்றுப் போனதால், சோகமாகிப் போனான் செழியன். உடலும் மனமும் சோர்ந்து போனதால் அசதியில் நன்கு உறங்கிவிட்டான்.
மறுநாள் காலையில் புல்வெளியில் ஆடுகள் அனைத்தும் வரிசையாக நின்றன. ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிவரும் கொம்பன் அண்ணனின் கையில் கூர்மையான ஒரு கத்தி இருந்தது. கத்தியையும், கொம்பனையும் பார்த்து பயந்து போனான் செழியன்.
பின்னர் தன் நண்பர்களிடம் விசாரித்தான்.
‘வருடம் ஒரு முறை ஆடுகளின் கம்பளிகள் வெட்டப்படும்’ என்ற உண்மை அப்போதுதான் செழியனுக்குத் தெரிந்தது.
ஆடுகளின் சுருண்ட கம்பளிகளை கத்தியை வைத்து மழித்துக் கொண்டு இருந்தார் கொம்பன். மற்ற ஆடுகளுடன் செழியனும் வரிசையில் வந்து நின்றான். இப்போது வரிசை நகர்ந்து செழியனின் முறையும் வந்தது.
செழியன் பிறந்த இத்தனை நாட்களில் அவனுக்கு முதல் முறையாக நடக்கும் நிகழ்வு இது. அதனால் அவனுக்கு கொஞ்சம் பதட்டமாகத் தான் இருந்தது.
ஆனால் கொம்பன் அண்ணனோ செழியனின் உடம்பில் சிறு கீரல்கூட விழாமல் அழகாக கம்பளிகளை மழித்து முடித்தார்.
கம்பளிகள் இல்லாத வெற்று உடல் பாரமின்றி இலேசாக இருந்தது. செழியனால் முன்பைவிட இப்போது வேகமாக நடக்க முடிந்தது. அந்த பரந்த புல்வெளியில் எடை குறைவான செழியனால் எளிதாக துள்ளிக் குதித்து ஓடவும் முடிந்தது.
அப்போது செழியனுக்கு ஒரு யோசனை வந்தது. “கம்பளி நனைந்து எடை அதிகமானதால தான என்னால நீரில் மிதக்க முடியாம போச்சு. இப்போதான் கம்பளி இல்லல. உடல் எடை குறைஞ்சிச்சுல, இப்போ என்னால நீந்த முடியும் தான” என்று நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.
தன் நீச்சல் ஆசையை நிறைவேற்ற செழியன் வேக வேகமாக குளத்தை நோக்கி ஓடினான். உடலில் கம்பளியின் கனம் இப்போது இல்லை. அதனால் தன் உடல் இறகைப் போல இலேசாக இருப்பதாக அவன் உணர்ந்தான். இம்முறை மிகவும் கவனமாக குளக்கரையில் நின்று ஒவ்வொரு அடியாக வைத்து குளத்தில் இறங்கினான்.
அதன்பின் தைரியமாக நீருக்குள் மூழ்கி எழுந்தான். ஓரிரு முறை மூழ்கி மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் வெளியிட கற்றுக் கொண்டான்.
இப்போது நீருக்குள் மூழ்கி ஒரு மீனைப் போல் இயல்பாக மேல் எழுந்து வந்தான். ஒவ்வொரு முறையும் மூழ்கி எழுவது அவனுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்தது. மெல்ல கை கால்களை அசைத்து நீந்தத் துவங்கினான்.
அதனால் நீரை மெதுவாகத் தள்ளி அவனால் முன்னேற முடிந்தது. பின்னர் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நீந்தப் பழகினான்.
அதன்பின் செழியன் குளத்தில் பட்டாம்பூச்சி வடிவில் நீந்துவது, குப்புறப்படுத்து நீந்துவது, நேராகப்படுத்து நீந்துவது என பலவிதமான நீச்சல் முறைகளில் நீந்திப் பார்த்தான்.
மற்ற ஆடுகள் எல்லாம் என்ன செய்தது தெரியுமா?
குளத்து நீரில் குதியாட்டம் போடும் செழியனை வாய்பிளந்து வேடிக்கை பார்த்தன.
செழியனோ நீரில் நீந்தியபடியே அந்த ஆட்டு மந்தையைப் பார்த்து பெருமையாக சிரித்தான்.
தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் செழியனுக்கு அத்தனை மகிழ்ச்சி.
– தீபா சிந்தன்