இலக்கியம்சிறார் இலக்கியம்

டிராகனின் சாகசங்கள் (சிறார் கதை) – தீபா சிந்தன்

549 (1)

காலையில் பள்ளிக்குச் செல்ல நேரமாகிக் கொண்டு இருந்தது. அம்மா வேக வேகமாக வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். 

“அருண் ஸ்கூலுக்கு லேட் ஆச்சு பாரு.. எழுந்திரு…”

என்று அம்மாவின் குரல் அடுக்களையில் இருந்து ஒலித்தது. அருண் அவன் வீட்டுக்கு அருகில் இருந்த அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். அவன் அம்மா அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார். 

“அருண்! எவ்ளோ நேரமா கூப்பிட்றேன். இன்னும் எழுந்திருக்காம, என்னடா பண்ற?”

என்று கேட்டுக்கொண்டே படுக்கை அறைக்குள் நுழைந்தார் அம்மா. 

அம்மாவின் சத்தம் மிகஅருகில் கேட்பதை உணர்ந்த அருண் மெல்ல கண் விழித்தான். கண்விழித்ததும் “ஐயோ! அம்மா” என்று அலறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான் அருண். 

“அம்மா எனக்கு வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. நான் இன்னிக்கி ஸ்கூலுக்கு போகல மா. வீட்லயே இருந்துக்கிறேன். பிளீஸ் மா… பிளீஸ் மா. இன்னிக்கி ஒருநாள் மட்டும் மா பிளீஸ் மா”

என்று அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான் அருண். அம்மாவிற்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆனால் அருணுக்கு பள்ளிக்குச் செல்ல சுத்தமாக விருப்பமில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார் .

“சரி, உனக்கு உடம்பு சரி ஆகட்டும். நாளைக்குப் பள்ளிக்கு போகலாம். இன்றைக்கு வீட்டில் இருந்து ஓய்வெடு”

என்று சொல்லியபடியே, அருணுக்கு காலை சிற்றுண்டி கொடுத்து விட்டு வேலைக்கு புறப்பட்டார் அருணின் அம்மா. 

“பத்திரமாக இருந்துக்கோ அருண். ஏதாச்சும் உடம்புக்கு முடியலைனா பக்கத்தில இருக்கிற பாக்கியாச்சி வீட்டுக்கு போயிடு. நானும் அவங்க கிட்ட சொல்லிட்டு போறேன்”

என்று அருணிடம் சொல்லிவிட்டுச் பள்ளிக்கு சென்றார் அம்மா.. 

அருணுக்கு பாக்கியாச்சி வீட்டிற்கு செல்வதை விட அவன் வீட்டில் இருந்தபடியே  தோட்டத்திற்கு வரும் வெவ்வேறு பறவைகளை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடிக்கும். அம்மா இன்றைக்கு பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று அனுமதி அளித்ததால் தோட்டத்திற்கு சென்று பறவைகளைப் பார்க்க விரும்பினான் அருண்.

தென்னை மரம், வேப்பமரம், கொய்யாமரம் என ஒவ்வொரு மரமாக சென்று அங்கு கூடு கட்டி இருக்கும் பறவைகளை ஆசையாகப் பார்த்தான். கிளி, மைனா, தூக்கனாங்குருவி என பலவிதமான பறவைகள் அவனது தோட்டத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. பறவைகளின்  சத்தம் அருணுக்கு இனிமையான இசையாகக் கேட்டது.

அப்போது அங்கிருந்த புளியமரத்தில் புதிதாக ஒரு பறவைக் கூடு இருப்பதை அருண் கவனித்தான். அது என்ன பறவையாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் புளியமரத்தில் ஏறி அந்த பறவைக்கூட்டை எட்டிப்பார்த்தான். பறவைக் கூட்டில் இராட்சச அளவிலான பெரிய முட்டை ஒன்று இருந்தது. அதனைப் பார்த்ததும் அவன் மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். 

அது எந்த பறவையின் முட்டையாக இருக்கும் என்று அறிந்துகொள்ள தோட்டத்தை சுற்றிமுற்றி பார்த்தான். புதிதாக எந்தப் பறவையும் அவன் கண்ணில் தென்படவில்லை. ஆனால், அந்த முட்டையின் பாரம் தாங்காமல் புளியமரக்கிளை அங்கும் இங்கும் அசைந்தது. அச்சச்சோ முட்டை கீழே விழுந்து உடைந்துவிடுமோ என்ற பயத்தில், அதனைப் பாதுகாக்க எண்ணினான் அருண். 

மிகவும் கவனமாக கூட்டில் இருந்து முட்டையை எடுத்து, அந்த முட்டையை பத்திரமாக வீட்டுக்குள் கொண்டுவர  முயன்றான். ஆனால், அவ்வளவு பெரிய முட்டையை அவனால் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை . சிறிது தூரம் நடந்து சென்று, பின்வாசல் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைகையில் வாசல்படியில் கால் தடுக்கி அவன் கீழே விழுந்தான். 

மறுவினாடியே அவன் கையில் இருந்து தவறி தரையில் விழுந்தது இராட்சச முட்டை. கீழே விழுந்த வேகத்தில் முட்டையில் சிறு விரிசல் ஒன்று ஏற்பட்டது.

பின்னர், ‘கிரீச்’ என்ற சத்தத்துடன் முட்டையின் விரிசல் மேலும் பெரிதானது. முட்டை இப்போது மெல்ல உருண்டோடியதால் விரிசல் மேலும் பெரிதானது. அதன்பின், அந்த முட்டையின் உள்ளிருந்து கை கால்கள் படபடக்க முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு ஒரு உயிரினம் வெளியே வந்தது. 

அதன் உடல்  பச்சை நிறத்தில் இருந்தது. பார்க்க விலங்கு போல் இருந்தாலும், அதன் முன்னங்கைகள் அருகில் இருபுறமும் விசிறி போன்ற இறக்கைகள் இருந்தது. அதன் முதுகில் இளஞ்சிவப்பு நிறத்தில் நான்கு அல்லது ஐந்து கூரிய கூம்புகள் இருந்தன. கண்கள் மஞ்சள் நிறத்திலும், அதனுள் இருந்த கருவிழிகள் தீக்கங்கு போன்று அடர் சிகப்பு நிறத்திலும் காணப்பட்டது. பின்னங்கால்களிலும் கூரிய நகங்கள் இருந்தன. அதன் வாலும் உடல் அளவுக்கு நீண்டு கூர்மையான மஞ்சள்நிற செதில்களுடன் இருந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த டிராகன் பெருமூச்சு விடும்போது, அதன் வாயில் இருந்து நெருப்பு பொறி வெளியே வந்தது. 

இவ்வாறு அந்த உயிரினத்தின் ஒவ்வொரு பகுதியாக கூர்ந்து கவனித்து ஆய்வு செய்தபின், அந்த முட்டையில் இருந்து வெளியே வந்தது ஒரு பச்சைநிற (பறக்கும்நாகம்) டிராகன் என்று அருணுக்கு புரிந்தது. 

அருண் அதைப் பார்த்ததும் சிறிதும் பயமின்றி, “ஹையா டிராகன், டிராகன்” என்று  மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். தனியாக வீட்டில் இருந்தவனுக்கு தன்னுடன் சேர்ந்து விளையாட ஒரு நட்பு கிடைத்ததில் அவனுக்கு தலை கால் புரியவில்லை. மகிழ்ச்சியில் திளைத்த அந்த சிறுவனைப் பார்த்ததும் புதிதாகப் பிறந்த அந்த டிரகனுக்கும் அருணை மிகவும் பிடித்துப்போனது. அவர்கள் இருவரும் பார்த்த கணமே நண்பர்களாகினர் .

“ஹாய்! என்னோட பேரு அருண்” என்று அந்த பறக்கும் நாகத்திடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான் அருண். 

“நீ இப்போ தான பிறந்து இருக்க. உனக்கு இன்னும் பேரு வைக்கலல. உன்னை எப்படி கூப்பிடுறதுனே எனக்குப் தெரியல.”

அருண் அந்த டிராகனை எவ்வாறு அழைப்பது  என்று யோசித்தான். சிறிது நேர யோசனைக்குப் பின்,

“உன்ன நான் அரணியானு கூப்பிடுறேன். உனக்கு இந்த பெயர் பிடிச்சிருக்கா?” என்று  அந்த டிராகனிடம் கேட்டான். மெல்லிய புன்னகையுடன் ஆம் என்பது போல தலை அசைத்தது அந்த டிராகன். 

அதன்பின், அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடத் துவங்கினர். முதலில்  அவர்கள்  கண்ணாமூச்சி விளையாடலாம் என்று முடிவு செய்தனர். அருண் அவன் கண்களை மூடி “1,2,3…..” என எண்ண ஆரம்பித்தான். 

அப்போது அரணியா படுக்கையறை திரைச்சீலையின் பின்னால் ஒளிந்து நின்றாள். கண்களை மூடி எண்ணிக்கொண்டிருந்த அருணுக்கு ஏதோ கருகும் வாசனை வந்தது . 

என்ன “ஏதோ கருகுற வாசனை வருது” என்று யோசித்தபடியே கண்களைத் திறந்து பார்த்தான். அப்போது, அரணியா மறைந்து நின்ற படுக்கையறை  திரைச்சீலை பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சியுற்றான். உடனே தண்ணீரை ஊற்றி அதனை அணைத்தான். 

“இந்த விளையாட்டு ரொம்ப விபரீதமா இருக்கே.  நம்ம வேற விளையாட்டு விளையாடலாம் அரணியா” என்றான் அருண். 

அதன் பின், அருணும் அரணியாவும் ‘ராஜா ராணி’ விளையாட்டு விளையாட முடிவு செய்தனர். அருண் சிப்பாய் போல் உடை அணிந்து கொண்டான். ராணியாக அரணியா அலங்காரம் செய்ய, அவன்  அம்மாவின் அழகிய உடை ஒன்றை எடுத்துக்கொடுத்தான் அருண். அரணியா அந்த உடையை அணியும் போது அதன் முதுகில் இருந்த கூரிய கூம்புகளால் அம்மாவின் உடை கோணல் மாணலாகக் கிழிந்தது. 

‘அச்சச்சோ அம்மாவோட அழகான ட்ரெஸ் இப்படி கந்தலாக கிழிந்து விட்டதே. நாம இப்போ என்ன பண்றது‘ என்று தெரியாமல் இருவரும் முழித்தனர்.. ஒருவழியாக அரைகுறையாக அரணியா அணிந்து இருந்த உடையை மெல்ல கழட்டி, கட்டிலில் வைத்தான் அருண். இனிமேலும் அம்மாவின் உடைகளைக் கிழிக்க மணமில்லாததால் ‘இந்த ராஜா ராணி விளையாட்டு வேணாம்’ என அரணியாவும், அருணும் சேர்ந்து முடிவு செய்தனர். 

இந்த விளையாட்டும் விபரீதமாக முடியவே, அவர்கள் வேறு என்ன  விளையாட்டு விளையாடுவது  என யோசித்தனர். சரி, நம்ம இரண்டுபேரும்  பச்சைகுதிரை விளையாட்டு விளையாடலாம் என அவர்கள் முடிவு செய்தனர். அருண் குனிந்து நிற்க அரணியா அவன் மேல் ஏறி தாண்டினாள். அடுத்ததாக அருணின் முறை. இப்பொழுது அரணியா குனிந்து நிற்க, அதன் முதுகில் கைவைத்து அருணும் அதேபோல் தாண்ட வேண்டும். அவன் தன் கைகளை அரணியாவின் முதுகில் ஊன்றி தாண்ட தயாரானான். ஆனால் அரணியாவின் முதுகில் இருந்த கூறிய கூம்புகளால் அருணின் கைகளில் கீறல் ஏற்பட்டது. எதிர்பாராமல் கைகள் ரணமானதால் அருணும் சரிவர தாண்ட முடியாமல்  நிலைத்தடுமாறி  கீழே விழுந்தான். அரணியாவும் அருகில் இருந்த புத்தக அலமாரி மீது சாய்ந்து விழுந்தாள் .

அரணியா சாய, அலமாரி கவிழ்ந்தது. புத்தக அலமாரியில் இருந்த புத்தகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையில் சிதறியது. “அச்சச்சோ புத்தகங்கள் எல்லாம் கீழே விழுந்தது விட்டதே, இப்ப என்ன செய்றது என்று அப்பாவியாகக் கேட்டாள்” அரணியா. சரி, இனிமேல் இந்த விளையாட்டும் வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்தனர். 

அதன் பின், அவர்கள் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடலாம் என  முடிவு செய்தனர்.

அறையைச் சுற்றி இருந்த மேசை, நாற்காலிகளை சுற்றிச்சுற்றி ஓடி விளையாடினர். அருண் அரணியாவை தொட நெருங்கி வந்தபோது, அரணியா மேலே பறந்து தப்பிக்க முயன்றாள். அவள்தான் பறக்கும் டிராகன் ஆயிற்றே, ஆதனால் சிறகடித்து பறக்க முயன்றாள். ஆனால், அறையின் கூரையில்  மாட்டப்பட்டு இருந்த அலங்கார மின்விளக்கில் மோதி  கீழே  விழுந்ததாள் அரணியா. 

அப்போது, வரவேற்பரையில் இருந்த குக்கூ கடிகாரத்தில் மாலை மணி நான்கு அடித்தது. அருணின் அம்மா வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்குள் நுழைந்ததும் அதிர்ந்து போனார் அம்மா. 

வரவேற்பறையில் நாற்காலிகள் இங்கும், அங்குமாக ஒழுங்கற்றுக் கிடந்தன. புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்கள் வீடெங்கும் சிதறிக் கிடந்தன. படுக்கையறையில் திரைச்சீலை தீப்பற்றி கருகி இருந்தது. தரை முழுவதும் நீர் அங்கும், இங்கும் தேங்கிக் கிடந்தது. கட்டிலில் அவரது  உடை கிழிந்துகிடந்தது. 

‘ஒரு நாள் உடம்பு சரி இல்லையே வீட்டில ரெஸ்ட் எடுக்கட்டும்னு நினைச்சு, விட்டுட்டுப்போனா வீட்டையே அலங்கோலமாக ஆக்கி வெச்சிருக்கானே….’ என்று மனதிற்குள் திட்டியபடி “அருணண்ண்ண்ண்…..” என்று அம்மா கோபமாக அழைத்தார். “என்னடா இது?  வீட்டை இப்படி தலைகீழா மாத்தி வெச்சி இருக்க?” என்று  கோபத்தோடு கேட்டார் அம்மா.

அம்மாவின் கோபத்திற்கு பயந்து அரணியாவை கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருக்க சொல்லிவிட்டு வரவேற்பறை நோக்கி ஓடினான் அருண்.

“என்னடா இதெல்லாம் …” என்று கேட்ட அம்மாவிடம்

“அம்மா அது நான் இல்ல. இதெல்லாம் என்னோட தப்பும் இல்ல”

“அது… அது…. வந்து அரணியா தான் மா…”  என்று கம்மிய குரலில் பதிலளித்தான் அருண் . 

அருண் பயந்து நடுங்கி நிற்பதைப் பார்த்ததும், அம்மா தன் கோவத்தை குறைத்துக் கொண்டு சாந்தமாக பேசினார். 

“என்னடா சொல்ற? அரணியாவா? யாரு அது? உன்னோட புது தோழியா?” என்று அமைதியாகக் கேட்டார் அம்மா. 

“ஆமாம்மா. அவ என்னோட புதுதோழி மட்டுமில்ல, இப்போ நெருங்கின தோழியும்  தான் ..” என்றான் அருண்.

“நீ தான் இன்னைக்கு உடம்பு சரியில்லைன்னு பள்ளிக்கூடத்துக்கே வரலையே,  வீட்ல தான இருந்த? அப்புறம் எங்க இருந்து வந்தா இந்த புது தோழி?” என்று கேட்டார் அம்மா.

“அதுவா மா, காலையில பள்ளிக்கு வராதனால, தோட்டத்திற்கு பறவைகளைப் பார்க்க போனேன். அப்போ அங்க புளியமரத்தில புதுசா ஒரு பறவைகக்கூட்ட பாத்தேன். அதுல ராட்சச வடிவில ஒரு முட்டை இருதிச்சி. அத வீட்டுக்குள்ள எடுத்துட்டு வரும்போது அந்த முட்டை உடஞ்ச்சிடுச்சி. அதிலிருந்து ஒரு டிராகன் வெளியே வந்தது.” அந்த டிராகன் தான் என் புது தோழி.  என்னோட புதுத் தோழிக்கு பெயர் கூட நான் தான் வெச்சேன்” என்றான் அருண்.

“அப்படியா அருண் என்ன பெயர் வெச்ச உன்னோட தோழிக்கு?” என்ற அம்மாவிடம். “‘அரணியா’ என்று பெயர் வைத்தேன்” என்றான் அருண். 

“அரணியா இந்த பெயர் ரொம்ப அழகா இருக்கு அருண். சரி நீயும் உன் தோழியும் இன்னிக்கி  வேற என்னவெல்லாம் செய்ஞ்சீங்க .. “

“அதுவா நாங்க ஒன்னா சேர்ந்து கண்ணாம்பூச்சி, பச்சைகுதிரை, ராஜா ராணி விளையாட்டு , என  நெறைய விளையாட்டு விளையாடினோம் மா. அப்புறம் கடைசியா நாங்க ஓடிப்புடிச்சி விளையாடும் போது தான் நீங்க வந்தீங்க..” என்றான் அருண்.

“ஓ… அரணியாவுக்கு வேற என்ன என்ன பிடிக்கும் அருண்.” என்று கேட்டார் அம்மா.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு,

“எனக்குப் பிடிக்கிறது எல்லாம் அரணியாவுக்கும் பிடிக்கும் என்றான். அதோட, அரணியாவுக்கு கதை கேட்கிறது   ரொம்ப பிடிக்கும் மா.” என்றான் .

“அப்படியா!  உன்னோட தோழிக்கு கதைனா அவ்ளோ பிடிக்குமா?” ன்னு அம்மாவும் அருண் கிட்ட கேட்டாங்க.

“ஆமா அம்மா, அரணியாவுக்கும் என்ன மாதிரி கதைகள் கேக்குறதும், கதை சொல்றதும் ரொம்பவே  பிடிக்கும்” என்றான் அருண். 

அம்மா வீட்டை சரி செய்து கொண்டே அருணிடம் நடந்தவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தார். அருணும் அம்மாவிற்கு சில உதவிகள் செய்தான். 

பின்னர், அவர்கள் இருவரும் இரவு உணவை சாப்பிட்டு முடித்தபின், 

“புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கலாமா அருண்?”  என்று  கேட்டார் அம்மா. 

“இருங்க மா. நான் அரணியாவையும் கூட்டிட்டு வரேன்” என்று வேகமாக ஓடி, கட்டிலுக்கு அடியில் இருந்த பெரிய டிராகன் பொம்மையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தான். அருணும், அரணியாவும் உடனே கதை கேட்க அம்மாவின் மடியில் வந்து அமர்ந்தனர். 

அம்மா ‘ட்ராகனின் சாகசங்கள்’ என்ற புத்தகத்தை எடுத்து கதை சொல்லத் துவங்கினார். டிராகனும், ஒரு சிறுவனும் செய்யும் அட்டகாசங்கள் தான் அந்தக் கதை. இருவரும் சுவாரசியமாக முழுக் கதையையும் கேட்டனர். 

கதை  வாசித்து முடித்த பின்னர், அருண் அம்மாவிடம் “அம்மா இப்போ எனக்கு வயிறு வலி இல்லமா. சரி ஆகிடுச்சுனு நெனைக்கிறேன்” என்றான்.

“அம்மா, நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?” என்றான்.

“என்ன அருண் சொல்லு” என்றார் அம்மா.

“நான் நாளைக்கு ஸ்கூலுக்கு போகும் போது அரணியாவையும் கூட்டிட்டுப் போலாமா? ப்ளீஸ்…” என்று பாவமாகக் கேட்டான் . 

“நிச்சயமா டா.. செல்லக்குட்டி.. உன்னோட நெருங்கிய தோழியைப் பள்ளிக்கு  நீ கொண்டு போலாம்” என்றார் அம்மா… 

– தீபா சிந்தன்