இலக்கியம்சிறார் இலக்கியம்மற்றவை

என் உயிர்த் தோழன் கரடி (சிறார் கதை) – தீபா சிந்தன்

549

ஒரு நாள் நூலக வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனா. அப்போது, குட்டிக்கரடி ஒன்று நூலகத்திற்குள் போவதை அவள் பார்த்தாள். 

அந்தக் கரடியை பின்தொடர்ந்து நூலகத்திற்கு உள்ளே சென்றாள் மீனா. உள்ளே சென்ற குட்டிக்கரடி ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து புரட்டிப் புரட்டி பார்த்துக்கொண்டு இருந்தது. கரடி செய்வதையே உற்று கவனித்தாள் மீனா. கரடியின் அருகே சென்றாள்.

“ஹலோ கரடி, என் பெயர் மீனா. உன் பேரு என்ன கரடி? நீ ஏன் நூலகத்துக்கு வந்திருக்க?” என்று கரடியிடம் கேட்டாள் மீனா. 

சற்று நேரம் யோசித்தது கரடி. 

“நான் கரடி தான். ஆனா எனக்கு பேரு எதுவும் இல்லை. நான் எந்த வகை கரடின்னு எனக்கே தெரியல. அதனால, இங்க இருக்கிற புத்தகத்தை படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்னு நூலகத்திற்கு வந்து இருக்கேன்” என்றது கரடி.

“ஓஹோ ! அப்படியா ரொம்ப நல்லது” என்றாள் மீனா. 

“எனக்கும் கரடி பத்தி எதுவும் தெரியாது. உனக்கு நீ எந்த வகை கரடினு தெரிஞ்சா, எனக்கும் சொல்லு. நானும் தெரிஞ்சுக்கிறேன்” என்று கரடியிடம் கேட்டுக்கொண்டாள் மீனா.

“ஆனா, இந்த புத்தகத்துல சொல்லி இருக்கிற விஷயங்கள் எல்லாம் பெரியவர்களுக்கு புரியுற மாதிரி தான் இருக்கு. நான் வேற ஏதாவது வழியில கண்டுபிடிக்க முடியுமானு முயற்சி பண்றேன்” என்று மீனாவிடம் சொன்னது கரடி. 

அதன்பின், மீனாவிடம் விடைபெற்றுக் கொண்டு நூலகத்தில் இருந்து வெளியே சென்றது கரடி. அன்று முதல் கரடி, தான் யார் என்பதைத் தேடும் பயணத்தைத் துவங்கியது.

கரடி முதலில் மேற்குத் திசைநோக்கி சென்றது. அங்கே ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு வந்தடைந்தது. அந்த அடர்ந்த காட்டுக்கு நடுவே பருத்த காப்பிநிறக் கரடி ஒன்றைக் கண்டது.  

அதன் அருகில் சென்று 

“ஏ கரடி , நீ எந்த வகை கரடி?” எனக் கேட்டது.

சற்றும் யோசிக்காமல், “நான் கொடுங்கரடி” என்றது அந்த காப்பிநிறக்கரடி. 

தான் எந்த வகை கரடி என்பதை தெரிந்து கொள்ளவே பயணம் வந்ததாக கொடுங்கரடியிடம் சொன்னது நம் கரடி. 

“ஓஹோ! என்னுடைய குணாதிசயங்கள் உனக்கும் இருந்தால் நீயும் என் வகைக் கரடியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, எனக்கு நாள் முழுக்க தூங்குவது மிகவும் பிடிக்கும்” என்றது கொடுங்கரடி. 

“எனக்கும் தான் தூங்குவது மிகவும் பிடிக்கும்.” என்றது நம் கரடி.

“சரி வா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கலாம்” என்றது கொடுங்கரடி.

“எனக்கும் தூங்குறதுனா ரொம்பப் பிடிக்கும்ல, ஒருவேளை நானும் கொடுங்கரடி வகையை சேர்ந்தவனா இருப்பேனோ?” என்று நினைத்தது நம் கரடி.

சரி சரி ! நான் தூங்குறேன் என்ன ஒரு ஆறு மாசம் கழிச்சு எழுப்பு” என்றது கொடுங்கரடி. 

“என்ன சொன்ன நீ? ஆறுமாசம் தூங்குவியா? என்ன கொடுங்கரடி, நீ இவ்ளோ சோம்பேறியா இருக்க? நான் அவ்ளோ மாசம்லாம் தூங்க மாட்டேன்பா” என்று கொடுங்கரடியிடம் சொன்னது கரடி. 

“ஓகோ! அப்படினா எனக்கென்னவோ நீ கொடுங்கரடியா இருக்க மாட்டேன்னு தான் தோணுது.

அதென்ன உன் வயித்துல ஏதோ தையல் போட்டிருக்காங்க. எங்க வயித்துலலாம் தையல் எதுவும் இல்லையே” என்றது கொடுங்கரடி.

“அப்போ நான் கொடுங்கரடி வகையை சேர்ந்தவன் இல்லையா? சரி நான் போய்ட்டு வரேன்” என்று சொல்லி சோகமாக அங்கிருந்து கிளம்பியது கரடி.

அடுத்ததாக வடக்குதிசை நோக்கி பயணித்தது. அங்கும் ஒரு வெள்ளைக் கரடியை சந்தித்தது. 

“ஏ கரடி? நீ எந்த வகை கரடி?” என்று அந்த வெள்ளைக் கரடியிடம் கேட்டது.

“நான் பனிக்கரடி” என்றது அந்த வெள்ளைக்கரடி.

தான் எந்த வகை கரடி என்பதை தெரிந்து கொள்ளவே பயணம்  வந்ததாக பனிக்கரடியிடம் சொன்னது நம் கரடி.

“சரி, உனக்கு இருக்கும் சிறப்பான குணாதிசயங்கள் என்னன்னு சொல்றியா? அது தெரிஞ்சா நான் எந்த வகை கரடினு தெரிஞ்சுக்க உதவியா இருக்கும்” என்று பனிக்கரடியிடம் கேட்டது நம் கரடி. 

“எனக்கு பனியில் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்” என்றது அந்த வெள்ளைநிறப் பனிக்கரடி.

“பனில விளையாடுறது யாருக்கு தான் பிடிக்காது. எனக்கும் அது ரொம்ப பிடிக்கும்” என்றது நம் கரடி.

உடனே, அவர்கள் இருவரும் பனியில் உருண்டு, பிரண்டு, சறுக்கி விளையாடினார்கள். “ஒருவேளை நான் பனிக்கரடியாக இருப்பேனோ” என்று தனக்கு தானே நினைத்துகொண்டது நம் கரடி.

ஆனால், சற்று நேரத்தில் குளிரால் நடுநடுங்கியது நம் கரடி. 

“இங்க ரொம்ப குளிருது. நம்ம வேணா உன் வீட்டுக்கு உள்ள போலாமா?” என்று பனிக்கரடியிடம் கேட்டது நம் கரடி . 

“என் வீடா? அதோ தெரியிதுல அந்த பனிக்குகை. அதான் என்னோட வீடு. இங்க விட அங்க இன்னும் அதிகமா குளிரும்” என்று சொன்னது பனிக்கரடி.

“ஐயயோ, நீ என்ன சொல்ற பனிக்கரடி? பனிகுகை தான் உன்னோட வீடா?”

“ஆமா, ஆனா நான் வீட்டுக்குலாம் போகமாட்டேன். இந்த பனில இருக்கத்தான் எனக்குப் பிடிக்கும்” என்றது பனிக்கரடி.

“அப்படினா நான் பனிக்கரடி வகையைச் சேர்ந்தவன் இல்ல போல” என்று கை, கால்கள் நடுங்க வெள்ளைகரடியிடம்  சொன்னது நம் கரடி. 

“ஆமா கரடி, நீ பனிக்கரடி இல்ல. ஏனென்றால், உன் முதுகுல இருக்கிற வெள்ளை சீட்டு என்ன மாதிரி பனிக்கரடிக்குலாம் இருக்காது” என்றது வெள்ளைப் பனிக்கரடி.

“சரி, நான் எங்கயாச்சும் வெப்பமான இடத்துக்கு போயிடுறேன்” என்றது நம் கரடி.

“சரி உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என பனிக்கரடியிடம் விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டது நம் கரடி. 

தான் எந்த வகை கரடி என்பதைத் தெரிந்து கொள்ள வெப்பமான இடத்தை நோக்கி கரடியின் பயணம் தொடர்ந்தது.

அடுத்ததாக, தெற்குப் பகுதியை வந்து அடைந்தது கரடி. இங்கு கூர்மையான நகங்களைக் கொண்ட கருப்புநிறக் கரடியை கண்டது . 

வழக்கம் போலவே, “ஏ கரடி? நீ எந்த வகைக் கரடி?” என அதனிடம் கேட்டது நம் கரடி. 

“நான் ஆசிய கருப்புக்கரடி” என்று சொன்னது அதக் கருப்புக்கரடி. 

சரி, “உனக்கு இருக்கும் சிறப்பான குணாதிசயங்கள் என்ன என்னன்னு சொல்றியா? அது தெரிஞ்சா, நான் எந்த வகைக் கரடினு தெரிஞ்சுக்க உதவியா இருக்கும்” என்று கறுப்புக்கரடியிடம் கேட்டது கரடி.

“எனக்கு மரம் ஏறுவது மிகவும் பிடிக்கும். எனது கூரிய நகங்கள் அதற்கு உதவியாக இருக்கும்” என்றது கருப்பு கரடி.

“எனக்கும் தான் மரம் ஏறி விளையாடப் பிடிக்கும், மரம் மட்டும் இல்ல, நான்  கட்டில் மேலலாம் கூட ஏறி விளையாடுவேன்” என்றது நம் கரடி.

சரி வா, “அப்போ என் பின்னால வந்து இந்த மரத்து மேல ஏறு” என்றது கருப்பு கரடி. 

கவனமாக  கருப்புக் கரடியின் பின்னால் தாவியபடியே மரத்தின் மீது ஏறியது கரடி. ஆங்காங்கே சில சருக்கல்களுடன் உச்சி கிளைக்கு வந்தது கரடி. அதன்பின் மேலிருந்து காட்டின் அழகை ரசித்தது நம் கரடி. திடீரென கீழே பார்த்ததும், கரடிக்கு தலைசுற்றி மயக்கம் வந்தது. தடுமாறி மரத்தின் மேலிருந்து உருண்டு கீழே விழும்போது, ஒருநிமிடம் சுதாரித்து பல்டியடித்து  உயிர் தப்பியது நம் கரடி. 

ஐயயோ, “நல்ல வேளை என் உயிர் தப்பியது. எனக்கு இவ்ளோ உயரத்தை பார்த்தாலே பயமா இருக்குப்பா.  நான் உன்னை மாதிரி கருப்புக்கரடி வகையை சேர்ந்தவன் இல்லனு நினைக்கிறன்” என்று பயம் கலந்த குரலில் கூறியது கரடி. 

“ஆமா கரடி, கருப்புக்கரடிங்களால உன்னை மாதிரி பல்டிலாம் அடிக்க முடியாது. அப்பறம், உனக்கு எங்கள மாதிரி கூர்மையான நகங்கள் இல்லை. அதனால, உன்னால மரத்தை கெட்டியா புடிச்சுக்கிட்டு நிக்க முடியல. எனக்கென்னமோ, நீ எங்க வகைக் கரடியைச் சேர்ந்தவன் இல்லனு தோணுது” என்றது கருப்புக்கரடி.

அதன்பின் கிழக்கு நோக்கி பயணமானது கரடி. அங்கு ஒரு அடர்ந்த வனத்தில் அன்பான கரடி ஒன்றைச் சந்தித்தது கரடி .

“ஏ கரடி ? நீ எந்த வகைக் கரடி?” என அதனிடம் கேட்டது. 

“நான் தேன் கரடி” என்றது அந்தக் கரடி.

“என்னது, தேன் கரடியா?” என ஆச்சரியமாகக் கேட்டது நம் கரடி.

“ஆமா, எனக்கு தேன் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும்.. அதான் எனக்கு அந்த பெயர்” என்று நம் கரடியிடம் சொன்னது தேன்கரடி.

“அப்படியா! தேன் யாருக்குத் தான் பிடிக்காது, எனக்கும் தான் தேன் மிகவும் பிடிக்கும்” என்று அதற்கு பதில் சொன்னது கரடி.

“நான் கூட எந்த பூங்காவிற்கு சுற்றுலா சென்றாலும் தேனோடு தான் செல்வேன்” என்றது கரடி.

“சரி, தேன் உனக்கு எப்படிக் கிடைக்கும்?” என்று தேன் கரடியிடம் கேட்டது நம் கரடி.

“அதுவா, அதோ அந்த மரத்துல தெரியுதுல அந்த தேன் கூடு. அங்கேயிருந்து தான் கிடைக்கும்” என்றது தேன்கரடி.

“அதுசரி நீ ஒரு நாளைக்கு எவ்ளோ தேன் சாப்பிடுவ?” என்று மீண்டும் விசாரித்தது நம் கரடி.

“அதுவா, இரு சொல்றேன். தேனைப் பார்த்ததும் நாக்குல எச்சி ஊறுது கரடி. வா என்பின்னால” என்று கரடியிடம் பேசிக்கொண்டே மரத்தில் இருந்த தேனடையை எடுத்தது தேன்கரடி. தேனடையில் இருந்த தேனீக்கள் அவர்களைத் துரத்தியது. உடனே இரண்டு கரடிகளும் ஒரே ஓட்டமாக ஓடினார்கள். தேனீக்கள் துரத்த, கரடிகள் ஓட, கடைசியில் அருகில் இருந்த ஓடையில் இருவரும் குதித்து தப்பித்தனர்.

“அப்பாடா, தப்பிச்சோம்” என்று பெருமூச்சு வாங்கியது நம் கரடி. 

‘தேன் எங்கிருந்து எடுப்பனு கேட்டது குத்தமாடா? அதுக்குப் போய் என்ன இப்படி ஓட விட்டுட்டியே’ என்று மனதுக்குள் நினைத்தது நம் கரடி.

‘நான் எந்த வகைக் கரடினு தெரிஞ்சுக்கத் தான் இங்க வந்தேன். ஆனா இங்க நடக்குறதெல்லாம் பாத்தா, ஒழுங்கா ஊரு போய் சேர மாட்டேன் போல’ என்று மனதிற்குள் புலம்பியது நம் கரடி.

“இங்க பாரு தேன்கரடி, என்னால இந்த தேனீகிட்டலாம் கொட்டு வாங்க முடியாது. நீ பாட்டுக்கு தண்ணில குதிச்சிட்ட, எனக்கு நீச்சல் தெரியுமானு கேட்டியா? நல்ல வேளை இந்த ஓடை ரொம்ப ஆழமா இல்ல. அதனால நான் தப்பிச்சேன்” என்றது நம் கரடி.

“இந்த தேன்கூட்டில தேன் எடுக்கிறது, தேனீகிட்ட கொட்டு வாங்குறது, ஓடையில குதிச்சு உடம்பெல்லாம் நசநசனு ஈரமாக்கிக்குறது, இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் கண்டிப்பா தேன்கரடி இல்லப்பா” என்று புலம்பிய படியே அங்கிருந்தும் சென்றது நம் கரடி.

நான்கு திசைகளிலும் சுற்றித் திரிந்தும், தான் எந்த வகைக் கரடி என்று அறிய முடியாததை எண்ணி வருத்தமடைந்தது கரடி. சென்ற வேலை முடியாத சோகத்தில் பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்தது. 

கரடிக்காக இப்போது தினமும் நூலகத்திற்கு வருகிறாள் மீனா. நூலகத்தில் பொழுது போவதற்காக புத்தகங்களையும் வாசிக்கத் துவங்கினாள். 

அப்போது ஒருநாள் சோர்ந்து போய், மீண்டும் நூலகம் திரும்பியது கரடி.  மீனாவைப் பார்த்ததும் தான் சிறிது குதூகலமானது. 

கரடிக்காகக் காத்திருந்த மீனாவும், ‘அது எந்த வகை கரடி’ என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தாள்.

மீனாவிடம் நடந்தவற்றை விவரித்தது கரடி. 

“எனக்குத் தூங்குறது பிடிக்கும். ஆனா, அதுக்காக கொடுங்கரடி மாதிரி ஆறுமாசம் தூங்கப் பிடிக்கலை. 

பனியில் சறுக்குமரம் விளையாடப் பிடிக்கும், ஆனா, பனிக்கரடி மாதிரி பனியிலேயே  வாழ்றது பிடிக்கலை.

கட்டில் மேல ஏறி தூங்குறது பிடிக்கும். ஆனா கருங்கரடி போல உயரமான மரத்தில் ஏறி வேடிக்கை பார்ப்பது பிடிக்கல.

கடைசியாக, தேன் சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனா தேன்கரடி போல தேனீயிடம் கொட்டு வாங்குறது பிடிக்கல.

நான் சந்தித்த எந்தக் கரடியின் சிறப்பு அம்சமும் என்னிடம் இல்லை. இப்போது நான் எந்த வகைக் கரடி என்றே எனக்குத் தெரியவில்லை” 

என்று மீனாவிடம் சொல்லி வருத்தப்பட்டது கரடி. 

“நான் எதற்கும் உதவாத, எந்த வகையையும் சாராத முட்டாள் கரடி” என்று மீனாவிடம் மனம் வருந்தி அழுதது கரடி.

“அட இதுக்கு போயா வருத்தபடுற. இங்கபாரு கரடி, உன்னோட வயித்துல தெரியிற இந்த தையல் தான் உனக்கு அழகே.

உன் முதுகுல எந்தக் கரடிக்கிட்டயும் இல்லாத சிறப்பான வெள்ளை பின்னட்டை கூட இருக்கு பாரு.

அது மட்டுமில்ல, இதோ கழுத்து சுத்தி நீ கட்டி இருக்கிற இந்த நீலரிப்பன் இருக்கே. அது வேற எந்தக் கரடிக்கிட்டயும் நீ பாக்கலை தானே. இது தான் உன்னோட சிறப்பம்சம்” என்று கரடிக்கு ஆறுதல் சொன்னாள் மீனா.

“நிஜமாதான் சொல்றியா மீனா?” என்று கண்களை துடைத்தபடி கேட்டது கரடி.

“ஆமா, நிஜமாவே நீ ரொம்ப சிறப்பான கரடிதான். உனக்கு விருப்பம் இருந்தா, நீ என்னோட கரடியா என் கூடவே இருக்கலாம்” என்றாள் மீனா.. 

அதைக் கேட்டதும் கரடி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. 

“நான் உன்னோட கரடியாவே இருந்துக்கிறேன் மீனா” என்று மீனாவிடம்  சொன்னது கரடி. 

கரடியின் ஒப்புதல் கிடைத்ததும் மீனாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். 

கரடியின் பின்னிருந்த வெள்ளை அட்டையில் மீனா கருப்பு பேனாவால், “மீனாவின் டெடி என்று எழுதி அதனை உறுதி செய்தாள்.

மீனாவின் டெடியாக இருப்பதில் கரடிக்கும், இரட்டிப்பு மகிழ்ச்சி.

அன்று முதல், மீனாவும், டெடியும் தினமும் அவர்களை ஒன்று சேர்த்த நூலகத்திற்கு வந்து புத்தகங்கள் வாசிப்பதை  வழக்கமாக்கிக் கொண்டனர்.

– தீபா சிந்தன்

1 Comment

Comments are closed.