வாசிக்கக் கூடிய வயது: 8+
பெரியவர் வாசித்துக்காட்டினால் புரியக்கூடிய வயது: 6+
நாளை பொங்கல் பண்டிகை. அதற்குத் தேவையான பொருட்களை வாங்க அதியனும் அவனுடைய அப்பாவும் கடைவீதிக்குச் சென்றார்கள். காய்கறி, பழம், கரும்பு எல்லாம் வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது ரொம்பவும் நேரமாகிவிட்டது.
“அதியா, ரொம்ப இருட்டிடிச்சி. சீக்கிரம் வீட்டுக்குப் போகனும். நீ சைக்கிளில் பின்னாடி உக்காந்துக்கோ. என்னை நல்லா கெட்டியா பிடிச்சிக்கோ. நாம வேகமா வீட்டுக்குப் போயிடலாம்”
என்று அப்பா சொன்னார்.
வீட்டுக்கு வந்ததும் அப்பாவும் அதியனும் இரவு உணவு சாப்பிட்டார்கள். பின்னர் கடையில் வாங்கிவந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார்கள். அப்படியே பேசிக்கொண்டே இருந்தார்கள்.
“நாம இப்பதான் போன வருச பொங்கல் கொண்டாடின மாதிரி இருக்கு. அதுக்குள்ள ஒரு வருசம் முடிஞ்சிருச்சி. இப்ப அடுத்த பொங்கலே வந்துருச்சி. நேரம் எவ்வளவு வேகமா பறந்துபோகுது பாத்தியா அதியா?”
என்று அப்பா அதியனிடம் கூறினார்.
அப்படியே வீட்டு வேலையெல்லாம் செய்து முடித்துவிட்டு இருவரும் தூங்கச் சென்றார்கள்.
ஆனால் அதியனுக்கு மட்டும் தூக்கமே வரவில்லை. அப்பா சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தான்.
‘நேரம் வேகமா பறக்குது என்று அப்பா சொன்னாரே. அப்படின்னா நமக்கு நேரமே இல்லாமப் போயிருமோ. நேரம் காலி ஆயிடுமோ’
என்று அவன் கவலைப்பட்டான்.
எப்படியாவது நேரத்தைப் பறக்காமல் தடுக்க வேண்டும் என்று யோசித்தான்.
அன்று இரவு 12 மணிக்கு எல்லோரும் தூங்கியதும், படுக்கையில் இருந்து எழுந்தான். ஒரு அட்டைப்பெட்டியைக் கையில் எடுத்தான். கடிகாரம் மாட்டி இருக்கும் சுவரின் அருகில் வந்து நின்றான். அந்த அட்டைப்பெட்டியை திறந்து, கடிகாரத்திற்கு பக்கத்தில் கொண்டு சென்றான். இப்போது கடிகாரத்தில் இருந்து பறக்கிற நேரத்தை அப்படியே அட்டைப்பெட்டியில் பிடித்து ஒளித்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்தான். அப்படிப் பிடித்துமுடித்ததும், பெட்டியை காற்று போகாமல் நன்றாக மூடிவைத்துவிட்டு தூங்கப்போனான்.
காலையில் எழுந்ததும் அப்பாவிடம் இதை எப்படியாவது சொல்லவேண்டும் என்று நினைத்தான்.
“அப்பா, அப்பா… நான் நேத்து இரவு என்ன பண்ணேன்னு கண்டுபுடிங்க பாக்கலாம்?”
என்று கேட்டான் அதியன்.
“அதியா, இன்னும் கொஞ்ச நேரத்துல பொங்கல் வைக்கனும். அதுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கேன். எனக்கு இப்ப உன்னோட விளையாட நேரமே இல்ல. எனக்கு நிறைய வேலை இருக்கு. என்னை தொந்தரவு பண்ணாம அமைதியா இரு”
என்று சொல்லிவிட்டு வேலை செய்துகொண்டு இருந்தார் அப்பா.
‘எனக்கு நேரமில்லை’ என்று அப்பா சொன்னது மட்டும்தான் அதியனின் காதில் விழுந்தது. வேறு எதுவுமே அவன் காதில் விழவில்லை.
‘நேரம்தான் என்னோட அட்டைப்பெட்டில பத்திரமா இருக்கே’ என்று நினைத்துக்கொண்டான். அட்டைப்பெட்டியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.
“அப்பா, நான் ஆயிஷா வீட்டுக்குப் போயிட்டு வரேன்பா”
என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியேபோனான் அதியன்.
அவன் ஆயிஷா வீட்டிற்குள் செல்லும்போது அங்கே பொங்கல் பொங்கியது. எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதியனைப் பார்த்ததும் ஆயிஷா ஓடிவந்தாள். அவனை வீட்டுக்கு உள்ளே அழைத்துக்கொண்டு போனாள்.
“ஆயிஷா, நேத்து இரவு நான் வீட்ல என்ன பண்ணேன் தெரியுமா?” என்று ஆயிஷாவின் காதில் மெதுவாகக் கேட்டான் அதியன்.
“என்ன செஞ்ச அதியா?” என்று அதியனிடம் ஆர்வமாகக் கேட்டாள் ஆயிஷா.
“ஆயிஷா” என்று அதற்குள் அவளது அம்மா அழைத்தார்.
“என்னம்மா” என்று கேட்டு கொண்டே ஆயிஷாவும் அம்மாவிடம் சென்றாள்.
“இந்த பொங்கல காக்காக்கு வச்சிட்டு வா” என்றார் ஆயிஷாவின் அம்மா.
ஆயிஷாவும் ஓடிப்போய், வடை, பொங்கல், பாயாசம் எல்லாம் ஒரு இலையில் வைத்து காக்காவிற்கு வைத்தாள். பின்னர் திரும்பிவந்தாள்.
“அதியா, நீ என்னமோ இராத்திரி செஞ்சேன்னு சொன்னியே. அது என்னன்னு சீக்கிரமா சொல்லு. எனக்கு நேரமில்ல”
என்று அதியனிடம் சொன்னாள் ஆயிஷா.
“என்னது, உனக்கும் நேரமில்லையா?” என்று கேட்டபடியே, “நீ என்னோட வீட்டுக்கு வரியா? நான் உனக்கு சொல்றேன்”
என்றான் அதியன்.
ஆயிஷாவும் அவளது அம்மாவிடம் அனுமதி பெற்றுவிட்டு இருவரும் சேர்ந்து அதியன் வீட்டுக்குப் போனார்கள்.
வீட்டிற்கு சென்றதும் தன்கையில் வைத்திருந்த அட்டைப்பெட்டியை ஆயிஷாவிடம் காட்டினான் அதியன்.
“இந்த அட்டைப்பெட்டிக்கு உள்ள என்ன இருக்குன்னு சொல்லு பாப்போம்”
என்று கேட்டான் அதியன்.
“தெரிலயே. அப்படி என்னதான் இருக்கு இந்த அட்டைப்பெட்டிக்குள்ள? நீ இன்னைக்கு ஒரே புதிராவே போடுறியே. ஒன்னுமே புரியல எனக்கு. சீக்கிரமா சொல்லு. நேரமாகுது. அம்மா தேடுவாங்க.”
என்றாள் ஆயிஷா.
“இரு. அவசரப்படாத ஆயிஷா. நேரம் எங்கயும் போகல. நான் தான் நேரத்தை புடிச்சி இந்த அட்டைப்பெட்டியில ஒளிச்சி வச்சிருக்கேன்”
என்றான் அதியன்.
ஆயிஷா திகைத்துப் போய் நின்றாள்.
“அதியா என்ன சொல்ற நீ? நேரத்தைப் புடிச்சி இந்த பெட்டிக்குள்ள அடைச்சு வைச்சிருக்கியா?” என்று ஆயிஷா அதிர்ச்சியாகக் கேட்டாள்.
“ஆமா. நேரம் ரொம்ப வேகமா பறக்குது இல்ல. அதான் நான் நேரத்தை இந்த அட்டைப்பெட்டிக்குள்ள அடைச்சு வைச்சிருக்கேன்”
என்றான் அதியன்.
“அப்படியே இருக்கட்டும். ஆனா நீ அதை அடைச்சு வைக்கிறதுனால யாருக்கு என்ன இலாபம்? நேரம் தொடர்ந்து ஓடிட்டே இருந்தா தான அடுத்துடுத்து நாட்கள் நகரும்? நாமளும் வளர்ந்து பெருசாக முடியும்?”
என்று கேட்டாள் ஆயிஷா.
“ஆமால்ல. நீ சொல்றதும் சரிதான். இதை நான் யோசிக்கலயே. நேரத்தை அடைச்சு வச்சா யாருக்கும் எந்த இலாபமும் இல்ல தான். சரி இப்போ என்ன பண்ணலாம்?”
என்று அதியன் ஆயிஷாவிடம் கேட்டான்.
என்ன செய்யலாம் என்று இருவரும் சேர்ந்து யோசித்தார்கள்.
“அதியா, நாம வேணும்ணா மொட்டை மாடிக்குப் போய் இந்த அட்டைப்பெட்டியைத் திறந்து நேரத்தைப் பறக்கவிட்ரலாமா?”
என்று ஆயிஷா கேட்டாள்.
அந்த யோசனைக்கு அதியனும் சம்மதித்தான்.
உடனே இருவரும் மாடிக்குச் சென்றார்கள். அட்டைப்பெட்டியைத் திறந்தான். அதியன் ஒளித்து வைத்திருந்த நேரத்தை இருவரும் காற்றில் பறக்கவிட்டார்கள். நேரம் காற்றில் கலந்து பறந்ததை பார்த்தார்கள். பின்னர் மகிழ்ச்சிமாக இருவரும் கீழே இறங்கி வந்தார்கள்.
அதியனின் அப்பா அதற்குள் பொங்கல் செய்து முடித்திருந்தார்.
அவர்களைப் பார்த்ததும்,
“அதியா, காலையில் இருந்தே அட்டைப்பெட்டியுடன் சுத்திட்டு இருக்கியே. அப்படி என்னதான் அந்த அட்டைப்பெட்டியில் இருக்கு?”
என்று கேட்டார்.
அதியனும் ஆயிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தார்கள்.
“அதில் ஒன்னும் இல்லப்பா. காலி பெட்டி தான்ப்பா”
என்று அப்பாவிடம் சொன்னான்.
“சரி. நீங்க ரெண்டு பேரும் வந்து ரொம்ப நேரம் ஆகுதுல்ல. உங்களுக்குப் பசிக்கும். இதோ இந்த பொங்கலை எடுத்துக்குங்க. கொஞ்சம் சூடா இருக்கு. பாத்து சாப்பிடுங்க” என்றார் அப்பா.
“இப்ப எங்களுக்கு நிறைய நேரம் இருக்குப்பா. நாங்க பொறுமையா பொங்கல் ஆறினதுமே சாப்பிட்றோம்” என்று ஆயிஷாவும் அதியனும் ஒரேமாதிரியாக பதில் சொன்னார்கள்.
(Guus heeft tijd என்கிற டச்சு மொழிக் கதையின் கருவைப் பயன்படுத்தி எழுதியவர் தீபா சிந்தன்)