இலக்கியம்சிறார் இலக்கியம்

அமைதி… அமைதி… (சிறார்கதை) – தீபா சிந்தன்

549 (1)

வாசிக்கக் கூடிய வயது: 6+

பெரியவர் வாசித்துக்காட்டினால் புரியக்கூடிய வயது: எந்த வயதும்

காட்டுப்பூர் என்று ஒரு அழகான காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு குட்டி நரி வாழ்ந்தது. அந்த நரி தன்னைச் சுற்றி நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்களையும் உன்னிப்பாக கவனிக்கும். எறும்பு ஊர்ந்து போனாலும் கவனிக்கும். யானை அசைந்து போனாலும் பொறுமையாக வேடிக்கை பார்க்கும். தான் வேடிக்கை பார்க்கும் அனைத்தையும் கதையாக சொல்வதும், எழுதுவதும் தான் நரிக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.

அந்தக் காட்டில் நரி மட்டும் இல்லை. நரியுடன் சேர்ந்து வேறு நிறைய விலங்குகளும் வாழ்ந்து வந்தன.

ஒருநாள் எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியாக ஆடி, பாடி, சிரித்து விளையாடின. ஆனால் நம் குட்டி நரி மட்டும் கையில் ஒரு புத்தகத்துடன் சோகமாக ஒரு ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்தது.

“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா ப்ளீஸ்… நான் இந்த புத்தகத்தைப் படிக்கணும்” 

என்று தன்னுடைய கீச்சுக் குரலால் சத்தமாகக் கூறியது நரி. ஆனால் மற்ற விலங்குகள் போடும் சத்தத்தால் நரியின் கீச்சுக் குரல் யாருக்குமே கேட்கவில்லை. 

‘யாருமே கேக்கமாட்றாங்களே’ என்று நரி  சோகமாக தன்னுடைய மரத்தடியிலேயே போய் உட்கார்ந்துவிட்டது.

நரி ரொம்ப நேரம் அப்படியே அங்கேயே அமைதியாக  இருந்தது. அப்போது தான் குட்டி நரி சோகமாக இருப்பதை ஒரு அணில் பார்த்தது. 

“நரியே, நீ ஏன் சோகமா இருக்க?” என்று நரியிடம் அணில் கேட்டது.

 நரி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாவே  இருந்தது.

“நாங்க எல்லாம் மகிழ்ச்சியா விளையாடுறோம்ல. நீயும் எங்களோட கண்ணாம்பூச்சி, திருடன் போலீஸ், ஓடிபிடிச்சி விளையாடுறது, தாயம் ஆடுறது, ஊஞ்சல் ஆடுறதுனு ஏதாச்சும்  சேர்ந்து விளையாடலாம்ல. இப்படி மரத்தடியில் சோகமா உக்காந்திருக்கியே. என்ன பிரச்சனை உனக்கு?”

என்று கேட்டது அணில். 

அப்போதும் நரி அமைதியாகவே இருந்தது.

“நான் உன் அண்ணன்தானே. என்கிட்ட தைரியமா சொல்லு. எந்த பிரச்சனையா இருந்தாலும் சொல்லு. அதை நான் சரி பண்ணிட்றேன். என்னன்னு சொல்லு.. சொல்லு…”

என்று மிகவும் அக்கறையாக நரியிடம் விசாரித்தது அணில்.

நரி தயங்கித் தயங்கி,

“அது.. அது.. அது ….வந்து இதோ நான் கையில வெச்சிருக்கேன்ல. இந்த புத்தகத்த படிக்க ரொம்ப நேரமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஆனா நீங்க எல்லாரும் போடுற கூச்சல்ல என்னால ஒரு வரி கூட ஒழுங்காவே படிக்க முடியல” 

“அமைதி அமைதி… ன்னு நான் கத்துறதும் உங்க யாருக்கும் கேக்கவே இல்ல” என்றது நரி.

“ஓகோ… அவ்ளோதானா விஷயம். இப்போ பாரு…என்றது அணில்.

“அமைதி அமைதி…”

“எல்லாரும் ஒரு நிமிசம் இங்க கவனிங்க” என்று அணில் உரக்க சொன்னது. 

மறுநிமிடமே விலங்குகள் எல்லாம் அமைதியாகின. அணில் சொல்வதைக் கேட்கத் தயாராகின.

“அதாவது நான் சொல்ல வரது என்னன்னா… நம்ம குட்டிநரி இருக்குல்ல குட்டிநரி. அது ஒரு கதை படிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுது. ஆனா நம்ம போடுற சத்தத்தால, அதால படிக்கவே முடியலயாம். அதனால நாம எல்லாரும் கொஞ்சம் அமைதியா விளையாடலாம். அப்போ நரியும் நிம்மதியா கதைய படிக்க முடியும்.”

என்று பொறுமையாக பிரச்சனையை விளக்கியது அணில்.

“நான் சொல்றது எல்லாருக்கும் புரியுதா? நம்ம எல்லாரும் அமைதியா விளையாடலாமா?”

என்று அணில் மீண்டும் கேட்டது. 

“சரி” என்று சொல்லிக்கொண்டே எல்லா விலங்குகளும் தலை அசைத்தன.

அப்போது, 

“எனக்கும் கூட கதை படிக்க ரொம்ப பிடிக்கும்…” என்று ஆந்தை சொன்னது.

“எனக்கும்… எனக்கும்…” என மற்ற எல்லா விலங்குகளும் சொல்லின. 

“ஆனா நம்மகிட்ட ஒரு புத்தகம் தானே இருக்கு. எல்லாரும் எப்படி படிக்கிறது?” என்று அவர்களுக்குள் கேள்வி எழுந்தது.

“நான் இந்தக் கதைய படிக்கிறேன். நீங்க எல்லாரும் நான் படிக்கிறத கேளுங்க” என்று சொல்லியது குட்டிநரி.

நரியின் யோசனைக்கு எல்லா விலங்குகளும் ஒத்துக்கொண்டன. நரி உட்கார்ந்திருந்த மரத்தடியில் எல்லா விலங்குகளும் அமைதியாக உட்கார்ந்தன. நரியும் கதை சொல்ல ரொம்ப ஆர்வமாக இருந்தது. 

மெதுவாக நரி புத்தகத்தைத் திறந்தது.  

கதை படிக்க தயாராக குரலெல்லாம் ஹம்மமம்…ஹம்மமம்……….என  சரிசெய்து கதையை சத்தமாக எல்லாருக்கும் கேட்கும்படி  படிக்கத் துவங்கியது.. 

“ஒரு ஊருல ஒரு கரடி இருந்துச்சாம்…” என்று நரி முதல் வரியைப் படித்தது.

உடனே, 

“ஐ… எனக்கு  கரடின்னா ரொம்பப் பிடிக்கும்” என்று ஆந்தை உற்சாகத்தில் கத்தியது.

“ஆமா, எனக்கும்தான்” என்று முயலும் சேர்ந்து கத்தியது.

“எனக்கு கரடிய மட்டுமில்ல, கரடி பாட்டுகூட பிடிக்கும். பாடவா?

கரடி மாமா, கரடி மாமா, எங்க போறீங்க?”

என்று  குயில் தன் இனிமையான குரலில் பாடத் துவங்கியது.

“நான் கூடத் தான் கரடி மாதிரி மிமிக்ரிலாம் பண்ணுவேன். பிருயூயூயூயூ…” என்று கீரிப்பிள்ளை உறுமியது.

கீரிப்பிள்ளை கரடி போல் உறுமியதும் மற்ற எல்லா விலங்குகளும் கரடி போல் உறுமிக்கொண்டே  அதன்பின் ஓடின.

“இருங்க… இருங்க… கதையக் கேளுங்க“ என்று நரி கூறியதை யாருமே காதில் வாங்கவில்லை. எல்லா விலங்குகளும் காட்டுக்குள் உறுமிக்கொண்டே ஓடின. 

“நான் இன்னும் கதை சொல்லவே ஆரம்பிக்கல. ஆனா அதுக்குள்ள இவங்க எல்லாரும் குட்டையைக் குழப்பிட்டு போய்ட்டாங்களே” என யோசித்துக்கொண்டே  நரியும் அவர்கள்  பின் ஓடியது.

போகிற வழி எல்லாம் கரடி மாதிரி உறுமியபடி ஆடி, பாடி, குதித்து எல்லா விலங்குகளும் விளையாடின. ஆறு, மலை எல்லாம் தாண்டி காட்டின் அடர்ந்த பகுதிக்கு வந்து சேர்ந்தன.

அப்போது, அங்கே சில பெரிய கால் தடங்கள் இருப்பதை நரி பார்த்தது. 

‘என்ன இது, வித்தியாசமா இருக்கே’ என  நினைத்தபடியே தன்னுடைய நண்பர்களை அழைத்தது. 

“இங்க பாத்தீங்களா, இங்க பாத்தீங்களா…” என்று நரி ஒவ்வொருவரையாக அழைத்தது. ஆனால், வழக்கம்போல்  அவர்கள் போடும் கூச்சலால் நரி பேசுவது யாருக்குமே கேட்கவில்லை.

“ஹே ஃப்ரெண்ட்ஸ், இங்க ரொம்ப பெருசா ஒரு விலங்கோட கால் தடம் இருக்கு” ன்னு சத்தமாக நரி கத்தியது. 

ஆனால் இப்போதும் யாரும் நரி பேசுவதை கவனிக்கவில்லை.

அப்போது உண்மையாகவே ஒரு கரடி உறுமுவது போல் சத்தம் கேட்டது. உறுமல் சத்தம் கேட்கும் திசை நோக்கி தன் காதுகளைத் தீட்டி கூர்மையாகக் கேட்டது நரி. 

அப்போதும், கீரிப்பிள்ளை என்ன செய்தது தெரியுமா ?

“கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க? 

காட்டு பக்கம் வீடு இருக்கு அங்க போறேங்க”

என்று மகிழ்ச்சையாக பாடிக்கொண்டே குதித்து குதித்து விளையாடியது.

ஆந்தையும், அணிலும் கும்பலாக கீரிப்பிள்ளையுடன் சேர்ந்து பாடின.

“ஹே ஃப்ரெண்ட்ஸ்.. இங்க ஒரு கரடி உறுமுற சத்தம் கேக்குது, கொஞ்சம் அமைதியா இருங்க”

ன்னு நரி மீண்டும் சொல்லியது. 

இப்போது எல்லாரும் நரியைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“ஆனா அமைதியா இருக்கத் தான் எங்களுக்கு வராதே” என்று சிரித்துக்கொண்டே சொன்னது அணில். 

“குட்டி நரியே, ஏன் இப்படி பயப்படுற. கரடி மாதிரி கத்துனதே நான்தான். என்னோட மிமிக்கரி எப்படி இருக்கு பாத்தியா? உண்மையான கரடி கத்துற மாதிரியே இருந்திச்சில்ல?” 

என்று கீரிப்பிள்ளை “பிருயூயூயூயு” ன்னு மீண்டும் உறுமிக் காட்டியது.

கீரிப்பிள்ளை அப்படிக் கத்தி முடிப்பதற்குள், அருகில் இருந்த புதருக்குள் இருந்து உண்மையான ஒரு பெரிய கரடி பயங்கரமாக உறுமிக் கொண்டே வெளியே பாய்ந்து வந்தது. 

அவ்வளவு பெரிய நிஜகரடியைப் பார்த்ததும், “ஐயோ! அம்மா!” என்று அலறியபடி எல்லா விலங்குகளும் ஓடிப் போய், ஒரு மரப் பொந்துக்குள் ஒளிந்துகொண்டன.

ஆனால், அத்தனை பேர் ஒளிந்துகொள்ள அந்த குட்டி மரப்பொந்தில் இடம் போதவில்லை. 

“ஐயோ! எனக்கு மூச்சு முட்டுது” என்று அணில் மெல்லமாக கிசுகிசுத்தது.

ரொம்ப நேரம் இந்த பொந்துக்குள் நம்மால் ஒளிந்திருக்க முடியாது என்பதை புரிந்துகொண்டது நரி. அப்போது அங்கே யாரோ ஒருவர் தேம்பித் தேம்பி அழும் சத்தம் நரிக்கு கேட்டது. தன்னை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் நரிதான் உன்னிப்பாக கவனிக்குமே. அதனால், அந்த அழுகுரலும் நரிக்குதான் முதலில் கேட்டது. 

மெல்ல தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கரடியிடம் பேசிப் பார்க்கலாம் என முடிவெடுத்தது நரி. மரப்பொந்தில் இருந்து வெளியே வந்தது. அப்போது நரிக்கு ஒரே ஆச்சரியம். புதருக்குள் இருந்து வந்த அதே மிகப்பெரிய கரடிதான் ஒரு பொம்மையைக் கட்டிபிடித்தபடி அழுதுகொண்டு இருந்தது.

“என்னாச்சி கரடி உனக்கு? உன்னப் பாத்துதான் நாங்க பயப்பட்றோம். ஆனால், நீ இப்படி பரிதாபமா அழுத்துக்கிட்டு இருக்கியே. என்ன நடந்திச்சின்னு எங்ககிட்ட சொல்லு. இப்படி அழாத. ஏன் இவ்வளவு துக்கம் உனக்கு?”

என்று ஆதரவாகக் கரடியிடம் விசாரித்தது நரி.

கலங்கிய கண்களோடும், கம்மிய குரலோடும்,

“துக்கம்லாம் இல்ல நரி, தூக்கம்தான் இல்லாமப் போச்சி”

என்றது கரடி.

“என்ன கரடி துக்கம், தூக்கம்னு ஏதோ குழப்புறா. கொஞ்சம் புரியுற மாதிரி தெளிவாத்தான் சொல்லேன்” என்று நரி கேட்டது.

“நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்போ தான் அசந்து தூங்கினேன். ஆனா நீங்க எல்லாரும் போட்ட சத்ததுனால இப்போ என்னோட தூக்கம் கலைஞ்சிபோய் எழுந்திட்டேன். இனிமேல் எனக்கு எப்போ தூக்கம் வரும்னே தெரியல. அதை நினைச்சி தான் அழுதிட்டு இருக்கேன்” என்றது கரடி.

“உனக்கு தூக்கம் கலைஞ்சதுதான் பிரச்சனையா. இப்பப் புரியுது எனக்கு” என்று நரி சொன்னதும், ஓவென்று இன்னும் சத்தமாக அழுதது கரடி.

கரடி அழுது கொண்டே பேசியதைக் கேட்டதும் மரத்தின் பொந்திலிருந்து ஒவ்வொரு விலங்காக  வெளிய வந்தது.

“அட கரடி, இதுக்குப் போயா அழுவுற? நாங்க சத்தம் போட்டு உன்ன எழுப்புனது எங்க தப்பு தான். அதுக்காக நீ அழாதே..  அந்த தப்ப சரி பண்ண என்கிட்ட ஒரு யோசனை இருக்கு” என்றது  ஆந்தை.

கரடி மட்டுமில்லாமல், மற்ற விலங்குகளும் ஆந்தையைத் திரும்பி பார்த்தன.

“அது என்னன்னா….” என்று கொஞ்சம் இடைவெளி விட்டது ஆந்தை. 

எல்லா விலங்குகளும் ஆந்தையையே மேலும் உற்றுப் பார்த்தன.

“இதோ இந்த நரி இருக்குல்ல. அது ரொம்ப அழகா கதை சொல்லும். நாங்க கூட அது சொல்ற கதையை மெய் மறந்து கேட்டோம். ஆனா  நடுவுல கொஞ்சம் விளையாட்டுத்தனமா இருந்துட்டோம். அதான் இங்க வந்து , உன்னோட தூக்கத்தையும் கெடுத்துட்டோம்” என்றது ஆந்தை. 

உடனே குறுக்கிட்ட நரி, 

“நடுவுலன்னு சொல்லாத ஆந்தை. ஆரம்பத்தில இருந்தே விளையாட்டுத்தனமாத்தான் இருந்தீங்க” என்றது.

“சரி சரி, விடு நரி. இப்போ நீ கதை சொல்லு. நாங்க எல்லாரும் நல்ல பிள்ளைங்களா கேக்குறோம்” னு கீரிப்பிள்ளையும் வாக்குக் கொடுத்தது. 

இப்போது கதை சொல்லத் தயாரானது நம்ம குட்டி நரி. 

“கதை எப்படி தொடங்கும்?” என்று நரி சத்தமாகக் கேட்டது.

“ஒரு ஊர்ல ஒரு கரடி இருந்துச்சாம்” என்று எல்லா விலங்குகளும் ஒன்றாக சொன்னார்கள்.
“அது தான் இல்லை” என்று பதிலளித்தது நரி.

கரடி கதை இல்லை என்றால், வேற என்ன கதையை நரி சொல்லி இருக்கும் என்று யோசிக்கிறீங்களா.

நரி சொன்ன கதை என்ன தெரியுமா? 

ஒரு ஊர்ல ரொம்ப அமைதியான நரி ஒன்னு இருந்துச்சாம். அந்த நரி தன்னை சுத்தி நடக்குற சின்னச் சின்ன விசயங்களையும் உன்னிப்பா கவனிக்குமாம். நரியோட அந்தத் திறமையால அந்த நரிக்கு புதுசா ஒரு கரடி நண்பன் கிடைச்சிதாம்…

என்று நரி கதையை சொல்லத் துவங்கியது.

நரி சொன்ன கதையை அணில், ஆந்தை, முயல், கீரியுடன் சேர்ந்து கரடியும் அமைதியாகக் கேட்டது. 

கதை சொல்லும்போது நகைச்சுவையாக நரி ஏதாவது சொன்னால், உடனே எல்லோரும் சிரித்தார்கள். பயமுறுத்தும் காட்சிகளை நரி சொன்னால், எல்லோரும் பயந்து நடுங்கினார்கள். அழுகை வரும் காட்சியை நரி சொன்னால், எல்லோரும் அழுதார்கள். அப்படியே கதையை அமைதியாக கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

“இதோட கதை முடிஞ்சிருச்சி” என்று நரி சொல்லவும், மற்ற விலங்குகள் கொட்டாவி விடவும் சரியாக  இருந்தது.

இறுதியாகக் கதை கேட்டு முடித்ததும் எல்லா விலங்குகளும் சுகமாகத் தூங்கிவிட்டன. ‘தூக்கமே வராது’ என  அழுத கரடிதான் முதலில் தூங்கியது. 

அமைதியாகக் கதைபடிக்க ஆசைப்பட்ட நரி, கடைசியாக தன்னுடைய கதை சொல்லும்  திறமையால் காட்டுப்பூரையே அமைதியாகக் கதைகேட்க வைத்தது. 

– தீபா சிந்தன்