வரலாறு

கீழடி குறித்த ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை ஏன் அவசியம்? – களப்பிரன்

உச்சநீ

அறிக்கை தாமதமும் அரசியல் அழுத்தங்களும்

2014-ல் இந்தியத் தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட கீழடி முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வின் ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வலியுறுத்தி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளின் இயக்கங்களும், பெரும்பாலான அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. அந்த ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் இராமகிருஷ்ணன், 2023-ல் அந்த அறிக்கையைத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்துவிட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளாக அவ்வறிக்கையை வெளியிடாமல் காலம் தாழ்த்தினார்கள். 

நாடாளுமன்றத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “அவ்வறிக்கையை எப்போது வெளியிடுவீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அத்துறை அமைச்சர், “விரைவில் வெளியிடுவோம்” என்று உறுதியளித்தார். ஆண்டுக்கொருமுறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கான பணிகள் முடிவடைந்துவிட்டனவா அல்லது என்ன நிலையில் உள்ளன என்பது குறித்த தகவல்களை எல்லாத் துறை சார்ந்த அதிகாரிகளும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எம்.பி-க்களுக்கு விளக்க வேண்டும். அப்படி, இந்த ஆண்டின் தமிழ்நாட்டிற்கான கூட்டம் கடந்த மே 27 முதல் 29 வரை உதகையில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளாக அவ்வறிக்கை குறித்து எந்த சந்தேகமும் கேட்காத ஒன்றிய அரசு, உதகைக் கூட்டத்தில் சு. வெங்கடேசன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக, அக்கூட்டத்திற்கு ஒரு வாரம் முன்பாக, “கீழடி அறிக்கையில் மேலும் அறிவியல் ஆதாரம் வேண்டும். ஆகவே, அறிக்கையைத் திருத்தித் தாருங்கள்” என்று கூறி, அறிக்கை வெளியீட்டை மேலும் காலம் தாழ்த்தியது. ஆனால், அமர்நாத் இராமகிருஷ்ணன் அவ்வறிக்கையைத் திருத்துவதற்கு தேவையில்லை என்று கூறிவிட்டார்.

இதுவரையான தொல்லியல் துறை வரலாற்றில், அகழாய்வு செய்தவர் அளித்த அறிக்கையை அப்படியே வெளியிடுவதுதான் மரபு. அதில் விமர்சனக் கருத்துக்கள் இருந்தால், அது வெளிவந்த பின்பு கருத்து சொல்வார்களே தவிர, திருத்தம் கோரி வெளியிட மறுக்கும் போக்கு இருந்ததில்லை. ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் இதிலும் தலையிடுவது ஏன்? அதற்கு நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது. அவ்வரலாறு உண்மை  வரலாற்றை மறுக்கும் வரலாறு ஆகும்.

மறக்கப்பட்ட இந்திய வரலாறு

இந்திய மன்னர்களில் மரம் நட்டவர் யார்? சாலை போட்டவர் யார்? என்று கேட்டால், நாம் எல்லோரும் ஒரே குரலில் சொல்வோம், மாமன்னர் அசோகர் என்று. ஆனால், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இந்திய மக்களிடம் அசோகர் யார் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. காரணம், மௌரிய அரசர்கள் குறித்தோ, நந்த வம்சம் குறித்தோ, குப்தர்கள் குறித்தோ யாரிடமும் அப்போது வரலாறு கிடையாது. ஏனெனில், நம்மிடம் முறைப்படியான வரலாற்றுப் பாடம் கிடையாது. இது வட இந்தியாவில் மட்டுமல்ல. 1895 வரை தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியது யார் என்று அந்தக் கோவில் அருகில் குடியிருந்த மக்களுக்குக்கூடத் தெரியாது. யாரோ ”காடுவெட்டிச் சோழன்” கட்டியதாகவே சொல்லிக்கொண்டிருந்தார்கள். காரணம், தமிழ்நாட்டிலும் முறையான வரலாற்றுப் பாடமுறை கிடையாது.

தஞ்சைப் பெரிய கோவிலின் வரலாறு, அதே கோவிலின் சுவர்களில் கல்வெட்டுகளாக உள்ளது. 10-ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட அக்கல்வெட்டுகளின் எழுத்துக்களைக் கூட படிக்கின்ற அளவு நம்மிடம் மொழியியல் பாடமுறை கிடையாது. ஜெர்மனியிலிருந்து வந்த கல்வெட்டு ஆய்வாளர்கள்தான் அக்கல்வெட்டுகளைப் படியெடுத்துக்கொண்டு போய் ஆய்வுசெய்து, முடிவாக இக்கோவிலின் வரலாற்றையும், அதைக் கட்டிய இராஜராஜன் குறித்தான தகவல்களையும் நமக்குச் சொன்னார்கள். இன்றைக்குச் சதய விழாவில், “இராஜராஜன் எங்கள் சாதிக்காரர்” என்று சுவரொட்டிகள் ஒட்டும் ஒருவர் கூட இப்பணியை நூறாண்டுகளுக்கு முன்பு செய்யவில்லை. இதுதான் நம்மிடம் இருந்த வரலாற்று அறிவு.

வரலாற்றை எழுதும் தொடக்க கால முயற்சிகள்

இந்தியாவில் வங்காளத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட கிழக்கிந்திய கம்பெனி அரசு, 18-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவின் பெரும் பகுதியைத் தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது. அக்காலத்தில், தங்கள் நிர்வாக வசதிக்காக இந்தியாவின் வரலாற்றை எழுத வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. இந்தியர்கள் யார், இங்கிருந்த பூர்வகுடிகள் யார், இந்தியக் கலாச்சாரம் எங்கிருந்து தோன்றியது என்று எழுத வேண்டியிருந்தது. அதற்காக, அப்போது கொல்கத்தாவில் அவர்களின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் மொழியியல் அறிஞராகவும் இருந்த வில்லியம் ஜோன்சிடம் இந்திய வரலாற்றை எழுதச் சொன்னார்கள். அப்போது அவருக்குக் கிடைத்த இந்தியாவின் பழமையான எழுத்துப் பிரதி, நான்கு ஆரிய வேதங்கள் ஆகும். அதை வைத்துக்கொண்டு, இந்தியாவின் பண்பாடு வேதப் பண்பாடு என்றும், இங்கு தோன்றிய நாகரிகம் வேதகால நாகரிகம் என்றும் அவர் முடிவுக்கு வந்துவிட்டார். அந்தக் காலத்தில் அகழாய்வு உள்ளிட்ட எந்த அறிவியல் சார்ந்த ஆய்வுகளும் நடைபெறவில்லை. இது 19-ஆம் நூற்றாண்டு வரை அப்படியே தொடர்ந்தது.

அதன் பின், 19-ஆம் நூற்றாண்டில் ஆய்வு செய்த வெள்ளையின அதிகாரிகள், இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளான யுவான் சுவாங், பாகியான் போன்ற பயணிகளின் பயணக்குறிப்புகளை வைத்துக் கொண்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த நகரங்களைக் கண்டுபிடித்து, இந்தியாவில் பௌத்தப் பண்பாடும் நாகரிகமும் இருந்துள்ளது என்ற முடிவுக்கு வந்தார்கள். அப்போதும் இந்தியாவில் தொல்லியல் ஆய்வுகள் ஏதும் நடைபெறவில்லை. அதேபோல், இந்தப் பௌத்த இடங்களை ஆய்வு செய்து பிராமி எழுத்து வடிவங்களை வாசித்ததன் மூலமும், வெளிநாட்டவர் பயணக்குறிப்புகளின் மூலமும் அன்றைய ஆய்வாளர்கள் அசோகரைக் கண்டுபிடித்தார்கள்.

அப்போது பிராமி எழுத்து என்றால் அது அசோகர் காலத்துப் பாலி மொழியிலான பிராமி என்று நம்பிக்கொண்டிருக்கையில், 19-ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே அவர்களுக்குத் தமிழ் பிராமி எழுத்துக்கள் இருக்கின்றன என்ற உண்மை தெரிகிறது. அதே காலகட்டத்தில், கால்டுவெல் எழுதிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூல் மூலம், சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் என்ற ஒரு மொழி இருப்பதும், அதன் தனித்து இயங்கும் தன்மையும், சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட அதன் பண்பாடும் தெரியவந்தன.

சிந்துவெளி நாகரிகமும் புதிய திறப்புகளும்

இந்தக் காலத்தில், 1861-ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தலைமையில் இந்தியத் தொல்லியல் துறை தொடங்கப்பட்டது. அதை ஒட்டித்தான் அகழாய்வுப் பணிகள் நடைபெறத் தொடங்கின. அந்த அகழாய்வுகளும் ஏற்கெனவே உள்ள பௌத்த நகரங்களை அகழாய்வு செய்யும் பணிகளாகவே இருந்தன. 1924-ல் சிந்துவெளித் தளம் கண்டுபிடிக்கப்பட்டாலும், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே சிந்துவெளி இருந்த இடத்தை ஆய்வு செய்தவர்கள், அதன் மேட்டில் இருந்த பௌத்த விகாரங்களை வைத்துக்கொண்டு, இது மௌரிய அரசுக்கு முந்தைய நாகரிகமாக இருக்கலாம் என்றே சொல்லி வந்தார்கள். பௌத்தத்தை விட வேதகாலம் பழமையானது என்ற உரையாடல்களின் மூலம், வேதகாலமே இந்தியாவின் பழமையான பண்பாடு என்று 1924 வரை இந்தியா குறித்தான ஆய்வாளர்கள் நம்பி வந்தார்கள்.

1924-ல் ஜான் மார்ஷல் தலைமையிலான குழு, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்துவெளிப் பகுதியைக் கண்டறிந்து, ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்து, ஒரு புதிய உண்மையை உலகிற்கு அறிவித்தது. அந்த அறிவிப்பு, சிந்துவெளிப் பண்பாடு வேதகாலப் பண்பாட்டிற்கு முற்பட்டது என்றும், அது ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்பே செழித்திருந்தது என்றும் கூறியது. அது அந்த இடத்தில் மட்டும் இல்லாமல், வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் 13 லட்சம் சதுர கிலோமீட்டருக்குப் பரவி இருக்கும் என்றும், இந்தியாவின் பழமையான நாகரிகம் வேத நாகரிகம் அல்ல, அதற்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகம் என்றும் அவர்கள் முடிவுக்கு வந்தார்கள். ஆனால், அம்மக்களின் வாரிசுகள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு அவர்கள் அப்போது வரவில்லை. காரணம், அங்கு கிடைத்த எழுத்துக்களை வாசிக்க முடியவில்லை. இருந்தபோதும், கிடைத்த தரவுகளை வைத்துக்கொண்டு பெரும்பாலான ஆய்வாளர்கள், தென்னிந்தியாவில் உள்ள திராவிடப் பண்பாட்டோடு சிந்துவெளிப் பண்பாடு ஒத்துப்போகிறது என்றே சொல்லி வந்தார்கள். ஜவகர்லால் நேரு தன் மகள் இந்திராவிற்கு 1931-ல் சிறையிலிருந்து எழுதிய கடிதத்திலும் இதையே குறிப்பிடுகிறார்.

கீழடியின் முக்கியத்துவமும் ஒன்றிய அரசின் எதிர்வினையும்

இந்தச் சூழலில், 1947-ல் இந்தியா சுதந்திரம் பெறுகிறது. பழமையான நாகரிகம் என்று சொல்லப்பட்ட பெரும் பகுதி ஆய்வு நிலங்கள் பாகிஸ்தானுக்குள் சென்றன. அதன் பின், இந்தியத் தொல்லியல் துறை மண்டல அலுவலகங்கள் 5 இடங்களில் இந்தியாவில் தொடங்கப்படுகின்றன. 2000-ஆம் ஆண்டு வரை அதில் ஒரு அலுவலகம் கூடத் தென்னிந்தியாவில் இல்லை. அதனால், 60 ஆண்டுகளாகத் தென்னிந்தியாவில் இந்தியத் தொல்லியல் துறையால் குறிப்பிடத்தக்க அகழாய்வுப் பணிகளே நடக்கவில்லை. அதன் பிறகே மைசூரில் ஒரு மண்டல அலுவலகம் உருவாகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அமர்நாத் இராமகிருஷ்ணன் ஒரு இளைஞராக ஹரப்பா நாகரிகம் என்று சொல்லப்படுகின்ற வட இந்தியாவில் உள்ள சிந்துவெளி நகரத்தில் 1996 முதல் பணியாற்றுகிறார். தென்னிந்தியாவில் தொல்லியல் துறையின் மண்டல அலுவலகம் வந்த பிறகு, அவர் தன் மாநிலத்தில் அகழாய்வுக்காக வைகை நதிக்கரையில் சில நகரங்களைத் தேடுகிறார். அவ்வாறு அவர் தேடிக் கண்டுபிடித்து, 2014-ஆம் ஆண்டு ஆய்வைத் தொடங்கிய இடம்தான் கீழடி. அதில் கிடைத்த தரவுகளை வைத்துக்கொண்டு, “தென்னிந்தியாவில் ஒரு ஹரப்பா நகரம்” என்று ஒரு கட்டுரையை ஆங்கில இதழ் ஒன்றில் எழுதுகிறார். அதன் பின், தனது ஆய்வின் மூலம் கிடைத்த பொருட்களை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல் நிறுவனங்களுக்கு அனுப்பி, அதன் காலத்தைக் கணக்கிட்டு, சுமார் கி.மு. 8-ஆம் நூற்றாண்டு என்ற முடிவுக்கு வருகிறார்.

இப்படி ஆய்வு செய்துகொண்டிருக்கும் போதே ஒன்றிய ஆட்சியாளர்களுக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. அமர்நாத் அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டு, அவர் இடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்கிறது ஒன்றிய அரசு. அமர்நாத் அவர்களின் இரண்டு கட்ட அகழாய்விலேயே 5300-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. ஆனால், அதற்குப் பின்பு வந்தவர், கீழடியில் மேற்கொண்டு ஆய்வு செய்ய ஒன்றுமில்லை என்று கூறி அந்த ஆய்வை மூடிவிட்டார்.

கீழடியின் முக்கியத்துவமும் வரலாற்று இணைப்பும்

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு மக்கள் இயக்கங்களின் விளைவாக, தமிழ்நாடு தொல்லியல் துறை அதற்குப் பிறகு பத்துக் கட்ட ஆய்வுகளைக் கீழடியில் நடத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதோடு, அதில் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டு கீழடியில் ஒரு பெரும் அருங்காட்சியகமே எழுப்பியுள்ளது. கீழடியில் கிடைத்த எழுத்துக்கள், இதுவரை படிக்கப்படாத சிந்துவெளி எழுத்துக்களோடு பல வகைகளில் ஒத்துப் போகின்றன.

இது ஒருபுறமிருக்க, நமது தமிழ் இலக்கியங்களான பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி உள்ளிட்டவை நகர நாகரிகத்தைப் பேசுகின்றன. ஆனால், அதை வைத்துக்கொண்டு மட்டும் தமிழரின் நகர்மயக் காலத்தைக் கணக்கிட முடியாது என்று உலகின் பல்வேறு தொல்லியல் அறிஞர்கள் மறுத்து வந்தார்கள். பழமையான தொல்லியல் நகரம் கிடைத்தால் தான் ஏற்றுக்கொள்வோம் என்று பல வட இந்திய ஆய்வாளர்களும் சொல்லி வந்தார்கள். தமிழர்கள் ஒரு அரைப் பழங்குடியின சமூகம் என்றே தங்கள் ஆய்விதழ்களில் எழுதி வந்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள பல பழமையான நகரங்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நகரமாகவே பயன்பாட்டில் உள்ளன. மக்கள் பயன்பாட்டில் உள்ள நகரங்களில் தொல்லியல் ஆய்வு செய்ய இயலாது. ஆனால், கீழடி தற்போது மக்கள் பயன்பாடு இல்லாமல் மண்மூடிய நகரமாக நமக்குக் கிடைத்துள்ளது. இந்த உண்மை, சிந்துவெளி நாகரிகத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறது.

சித்தாந்தப் போராட்டமும் அறிக்கையின் தேவையும்

இந்தியாவின் பழம்பெரும் நாகரிகம் திராவிட நாகரிகம்; அது ஆரியப் பண்பாட்டிற்கு முற்பட்டது; அதுவே இந்தியா முழுவதும் பரவி இருந்தது என்கிற கருத்திற்கு வலுசேர்க்கின்றன கீழடியில் கிடைக்கும் தரவுகள். இதைத் தமிழக அரசு தனது தொல்லியல் துறை மூலம் உறுதி செய்து, ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே வருகிறது. அத்தனையும் பெருமித அடிப்படையில் அல்லாமல், அறிவியல் பூர்வமாக வைக்கிறது. அதை உலகின் பல நாடுகளின் ஆய்வாளர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆனால், இதுவரை இந்தியத் தொல்லியல் துறை இது குறித்துக் கள்ள மௌனம் காக்கிறது. அதோடு, அவர்களே செய்த முதல் இரண்டு கட்ட ஆய்வையும் வெளியிடாமல் காலம் தாழ்த்திக்கொண்டே போகிறது.

“இவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் என்ன, அதான் உலகம் முழுக்க ஏற்கிறார்களே” என்று நம்மில் சிலர் கேட்கக்கூடும். உண்மைதான். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அறிக்கை இந்தியாவிற்கு வெளியே செல்லும். ஆனால், இந்தியாவிற்குள் தமிழகத்தைத் தாண்டி எங்கும் செல்லாது. இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கைதான் இந்திய நாடு முழுவதற்கும் செல்லும் அதிகாரம் படைத்தது. அதற்காகத்தான் நாம் இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கையைக் கேட்கிறோம்.

இதில் நடைபெறுவது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம். அறிவியலுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் நடைபெறும் யுத்தம். இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள், தாங்கள் நம்பும் சித்தாந்தத்தையே ஆய்வுகளின் முடிவாக வெளியிட விரும்புகிறார்கள். அவர்கள் நம்பும் புராணங்களையே அறிவியல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அவர்களுக்கு எதிராக இருக்கிறது. அந்த உண்மை அவர்களைச் சுடவும் செய்கிறது. கீழடி முடிவுகள் வர வர, ஒன்றிய ஆட்சியாளர்கள் இந்தியாவின் 12,000 ஆண்டுகால வரலாற்றை எழுதுவதற்கு அவசர அவசரமாக ஒரு குழுவை அமைத்தார்கள். பலரின் எதிர்ப்பிற்குப் பிறகு அக்குழுவை நிறுத்தி வைத்துள்ளார்கள். அந்தக் குழுவின் நோக்கம், மீண்டும் இந்தியாவின் பழமையான பண்பாடு வேதகாலப் பண்பாடுதான் என்ற அறிவியலுக்கு விரோதமான ஒன்றை நிறுவுவதே ஆகும். கீழடியின் அறிக்கை, அந்தப் போலி வரலாற்றை எழுதத் தடைக்கல்லாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அவர்களுடைய அச்சத்தைப் போக்குவதை விட, இந்த நாட்டுக்குத் தேவையானது உண்மை மட்டுமே. ஆகவே, கீழடி அறிக்கையை வெளியிடக் கோரும் கரங்களில் நமது கரங்களையும் இணைத்துக் கொள்வோம்.

– களப்பிரன்

2 Comments

  • அருமை. தமிழரின் தொன்மையை கீழடியின் உண்மையை மறைக்க முயலும் ஒன்றிய அரசின் நயவஞ்சகச் செயலை முறியடிப்போம். அனைவரும் ஓரணியில் திரள்வோம். உண்மை வரலாற்றை வெளிக்கொணர்வோம்.

  • இந்தியாவை ஆளும் ஒன்றிய அரசுகள் ( பாசக/ காங்கிரசு) வேத காலப் பண்பாட்டையும், வட இந்தியாவில் இருந்து தான் வரலாறு தொடங்குகிறது என்று நிரூபிக்க விழைகிறார்கள். அதேபோல் திராவிடக் கட்சிகள்
    கீழடியைத் தமிழர் நாகரிகம் என்று சொல்ல
    விரும்பாமல் திராவிட நாகரிகம் என்று சொல்லி
    தமிழர் சிறப்பை மறைக்கவே திட்டமிட்டு
    வருகிறார்கள்.
    தமிழர் வரலாற்றை வடக்கில் இருந்து தெற்கே
    வந்ததாக திரு.பாலகிருட்டிணன் புத்தகம் எழுதி
    ஏமாற்றுகிறார்.
    திராவிட மாதிரி அரசும் கீழடியில் 2021 ல் இருந்துஅகழாய்வு செய்த அறிக்கைகளை வெளியிடவில்லை.
    ஆதிச்சநல்லூரில் தொலலியல் ஆய்வு செய்து
    (செர்மானியர் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ) தொல்லியல் பொருட்களைச் கொண்டு
    சென்றனர்.பின்னர் 2000 ஆண்டு தொடக்கத்தில்
    ஆய்வு செய்த தமிழகத் தொல்லியியல் துறை
    அதன் அறிக்கையை வெளியிடவில்லை.
    இதேபோல் அழகன் குளம் அறிக்கை
    வெளிவரவில்லை.
    பூம்புகாரில் கடலாய்வு செய்யாமல்
    ஏமாற்றுகிறார்கள்.
    தமிழ் நாட்டில் நிறைய இடங்களில் தொல் பொருள் ஆய்வுகள் நடைபெற வேண்டி உள்ளன.

    மொத்தத்தில் ஒன்றிய அரசும் மற்றும் திராவிட
    மாதிரி அரசும் திராவிடம் என்று சொல்லித்
    தமிழையும் தமிழர்களையும் ஏமாற்றுகிறது.

    அதன் அறிக்கையை வெளியிடவில்லை.

Comments are closed.