உமருக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
அவன் பெற்றோரிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செல்லப்பிராணி ஒன்று வாங்கிக் கேட்பதில் தவறுவதே இல்லை.
“அம்மா, அம்மா, எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கித் தரீங்களா?” என்று அவன் கேட்காத நாளே இல்லை எனலாம்.
ஆனால், அவன் பெற்றோரோ, “நாய்க்குட்டிலாம் வேணாம், உமர். செல்லப்பிராணிகளைப் பாதுகாத்து வளக்குற அளவுக்கு நமக்கு எங்க நேரம் இருக்கு? அதுவும் நாய்க்குட்டி வளக்குறது எல்லாம் ரொம்ப சிரமம். அதுக்குத் தினமும் சாப்பாடு கொடுக்கணும், வெளிய நடக்கக் கூட்டிட்டுப் போகணும், குழந்தையாக அந்த நாய்க்குட்டியைப் பத்திரமாகப் பாதுகாக்கணும். அதெல்லாம் நம்மால நிச்சயமா முடியாது” என்று கூறிவிட்டனர்.
“சரி, அப்போ பூனைக்குட்டி வளர்க்கலாமா?” என்றான் உமர்.
“பூனைக்கும் அதெல்லாம் பண்ணணுமே? அது மட்டுமில்லாமல் பூனையோட முடி வீடெல்லாம் கொட்டும். அதையும் சேர்த்து நாங்கள்தான் சுத்தம் பண்ண வேண்டும்” என்று சொல்லி, அதற்கும் மறுப்புத் தெரிவித்தனர்.
“சரி, அப்போ ஒரு முயல்குட்டி வளர்க்கலாமா?” என்று கேட்டான் உமர்.
“முயல்குட்டி மேய்வதற்குப் பெரிய தோட்டம் வேண்டும். அதுவும் நம்மிடம் இல்லை, உமர்” என்று கூறினர்.
“அப்போ ஒரு ஒட்டகச் சிவிங்கி…” என்று உமர் சொல்லத் தொடங்கினான்.
“வேணாம், உமர்! வேறு எதுவும் கேட்டுடாதே. இப்போதைக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது நம்மால் முடியாத காரியம்” என்று அவன் அம்மா உறுதியாகக் கூறிவிட்டார்.
ஆனால், அவனுக்கு விருப்பமான ஒரே தேவை செல்லப்பிராணியாகத்தான் இருந்தது. ஒரு போதும் அதை அவன் மனம் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
உமர் ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங்கச் செல்லும் முன் வரை, குறைந்தது பத்து முறையாவது செல்லப்பிராணிகள் குறித்து அவன் பெற்றோரிடம் பேசுவான்.
ஒரு நாள், அவன் சற்றும் எதிர்பாராமல், அவன் அப்பா அவனுக்கு ஒரு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்தார்.
“உமர், இங்கே வா! உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன், பாரு!” என்று சொல்லி அவனை அழைத்தார் உமரின் அப்பா.
அந்தப் பரிசுப் பொருள் நீல நிறக் காகிதத்தில் மடிக்கப்பட்டிருந்தது. அதனைச் சுற்றி ஒரு சிறிய சணல் கயிறும் கட்டப்பட்டிருந்தது.
“என்ன அப்பா, இது? இந்தப் பொட்டலத்துல என்ன இருக்கு?” என்று ஆர்வமாகக் கேட்டான் உமர்.
“திறந்துபார், உமர். உனக்காகத்தான் வாங்கி வந்தேன். நீயே திற” என்று சொல்லிக் காகிதப் பொட்டலத்தை உமரிடம் நீட்டினார் உமரின் அப்பா.
உமர் அதைக் கையில் வாங்கி, காகிதத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கயிற்றை மெல்ல அவிழ்த்தான். மிகவும் ஆர்வமாக உள்ளே என்ன பொருள் உள்ளது என்று தெரிந்து கொள்ள அவன் ஆசைப்பட்டான்.
ஆனால், உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
அவன் சற்றும் எதிர்பாராத ஒரு பொருள். அது ஒரு உருளைக்கிழங்கு.
“நீ ரொம்ப நாளா ஒரு செல்லப்பிராணி வாங்கிக் கேட்டியே? அதனால, உனக்கு ஒரு செல்லப்பிராணி வாங்கிக் கொண்டு வந்திருக்கேன். உனக்குப் பிடிச்சிருக்கா, உமர்?” என்று இயல்பாகக் கேட்டார் உமரின் அப்பா.
“போங்கப்பா! நான் செல்லப்பிராணி வாங்கிக் கேட்டேன், நீங்க இந்த உருளைக்கிழங்கைப் போய் வாங்கிட்டு வந்திருக்கீங்க. இது செல்ல பிராணிலாம் ஒன்னும் இல்லை!”
“இல்லை, உமர்! இதுவும் ஒரு செல்லப்பிராணிதான். இதுக்குப் பேரு கூட நான் வெச்சுட்டேன். என்ன தெரியுமா? உருளைக்கிழங்கு செல்லக்குட்டி! பெயரிலேயே ‘செல்லம்’ இருக்கு, பாத்தியா?
அப்ப அது செல்லப்பிராணிதானே?”
“போங்கப்பா! கோவம் வரமாதிரி காமெடி பண்ணாதீங்க! நான் போறேன்!” என்று புலம்பியபடி, உருளைக்கிழங்கைப் பக்கத்தில் உள்ள மேசைமீது வைத்துவிட்டு, வேகமாக மாடியில் இருக்கும் அவன் அறைக்குச் சென்றான்.
அறைக்கு வந்ததும், அவன் விளையாடி முடித்த பொம்மைகளை எல்லாம் எடுத்து அந்தந்தப் பெட்டியில் வைத்துக்கொண்டிருந்தான். அப்போதும் அவன் உருளைக்கிழங்கைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான்.
“உருளைக்கிழங்கை இப்படிக் கீழே தனியா விட்டுட்டு வந்துட்டோமே? ஒருவேளை தனியா இருப்பதனால் உருளைக்கிழங்கு பயப்படுமோ? இல்லையென்றால் சோகமாக இருந்திருக்குமோ?” என்று அதை நினைத்துக் கவலைப்பட்டான் உமர்.
உடனே வேகமாகக் கீழே சென்று, மேசைமேல் வைத்த உருளைக்கிழங்கு செல்லக்குட்டியைத் தூக்கிக்கொண்டு அவனுடைய அறைக்கு வந்தான்.
பின்னர், அவன் விளையாடும் எல்லா விளையாட்டிலும் உருளைக்கிழங்கு செல்லக்குட்டியும் சேர்ந்து கொண்டது.
உமர் இரயில் தண்டவாளங்களை அடுக்கிப் பொம்மை ரயிலை அதன் மீது ஓட வைத்தான். அப்போது, உருளைக்கிழங்கு செல்லக்குட்டியும் ஒரு ரயில் பெட்டியில் அமர்ந்து ஒய்யாரமாக வலம் வந்தது. பின்பு, அட்டைப் பெட்டிகளை அடுக்கிக் கோபுரம் செய்தான். அந்தக் கோபுரத்தின் மேற்கூரையில் உருளைக்கிழங்கு செல்லக்குட்டி ஒய்யாரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்தது.
வீட்டில் மட்டுமல்ல, உமர் பூங்காவிற்குச் செல்லும் போதும் உருளைக்கிழங்கு செல்லக்குட்டியைத் தூக்கிச் சென்றான். அங்கு, உமருடன் சேர்ந்து உருளைக்கிழங்கு செல்லக்குட்டி ஊஞ்சல் ஆடியது, ராட்டினம் சுற்றியது, பின் சறுக்குமரத்திலும் விளையாடியது.
அப்போது, பூங்காவிற்கு வந்தான் உமரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விக்ரம்.
“டேய், உமர்! என்ன, உருளைக்கிழங்கைக் கையில் வச்சிட்டுச் சுத்துற? நல்ல பெரிசா உருண்டையா இருக்கு இந்தக் கிழங்கு! இங்கே குடு, நாம ரெண்டு பேரும் இத வச்சுக் கால்பந்து விளையாடலாம்!” என்றான்.
“ஐயையோ! நான் தரமாட்டேன்! நீ காலால் எட்டி உதைச்சு விளையாட, இது என்ன கால்பந்தா? இது என்னோட உருளைக்கிழங்கு செல்லக்குட்டி! பாவம், என்னோட செல்லக்குட்டி!” என்றான் உமர்.
அன்று முதல், அவன் எங்கு சென்றாலும் உருளைக்கிழங்கு செல்லக்குட்டியையும் உடன் அழைத்துச் சென்றான். நீச்சல் குளத்திற்கும் கொண்டு சென்றான். ஆனால், நீச்சல் பயிற்சியாளர் உருளைக்கிழங்கு செல்லக்குட்டியை நீச்சல் குளத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.
அதனால், வெளியில் காத்திருந்த தன் அம்மாவிடம் உருளைக்கிழங்கு செல்லகுட்டியை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு நீச்சல் அடிக்க வந்தான்.
அங்கு மட்டும் அல்ல உமர் புத்தகம் வாசிக்க நூலகம் சென்றாலும் உருளைக்கிழங்கு செல்லக்குட்டியை உடன் அழைத்துச் சென்றான். தான் வாசித்த கதைகளை எல்லாம் உருளைக்கிழங்கு செல்லக்குட்டிக்குச் சொல்லி மகிழ்ந்தான்.
உமர் இரவு தூங்கப் போகும் நேரத்திலும் கூட, உருளைக்கிழங்கு செல்லக்குட்டி அவன் அருகிலேயே இருந்தது.
இப்படியே சில நாட்கள் சென்றன. அன்று ஞாயிற்றுக் கிழமை. காலையில் உமர் கண் விழித்துப் பார்த்தபோது, அவன் அருகில் இருந்த உருளைக்கிழங்கு செல்லக்குட்டியைக் காணவில்லை.
உமர் கட்டிலுக்கு அடியில், பொம்மைகள் இருக்கும் பெட்டியில், வராந்தாவில், மேசைமேல், திண்ணையில், அடுக்களையில் என எல்லா இடங்களிலும் உருளைக்கிழங்கு செல்லக்குட்டியைத் தேடினான். அவன் வழக்கமாக வைக்கும் எந்த இடத்திலும் அதைக் காணவில்லை.
உடனே அம்மாவிடம் ஓடிவந்து, மூச்சு வாங்க,
“அம்மா, அம்மா! என்னோட செல்லக்குட்டியை எங்கேயும் காணல! எங்கயாச்சும் பாத்தீங்களா?” என்று பதட்டமாகக் கேட்டான்.
“இல்லடா, நீ எங்கயாச்சும் மறந்து போய் வெச்சிருப்ப பொறுமையா தேடு, கிடைக்கும்” என்று பதில் கூறினார்.
உமரும் வீட்டில் ஒரு இடம் விடாமல் எங்கும் தன் உருளைக்கிழங்கு செல்லக்குட்டியைத் தேடி அலைந்தான். ஆனால், அவனுக்கு அது கிடைக்கவே இல்லை.
கடைசியாக, குப்பைத் தொட்டியில் உருளைக்கிழங்கு செல்லக்குட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.
“உமர், அதை எடுக்காதே! அது அழுகிப் போற நிலைமையில் இருக்கு. அதான் குப்பைத் தொட்டியில் போட்டேன்” என்றார் உமரின் அப்பா.
“ஓ… ஆனா, நீங்கதானே என்னோடு விளையாட அந்தச் செல்லப்பிராணியை வாங்கிக் கொடுத்தீங்க? இப்போ அதைக் குப்பையில் தூக்கிப் போட்டுட்டீங்க!” என்று கண்கள் கலங்கியபடி, கம்மிய குரலில் கேட்டான்.
“நான்தான் வாங்கிக் கொடுத்தேன். ஆனால், இப்போது நாளாகி அது அழுகிப் போற நிலைமைல இருக்கே. என்ன பண்றது? நாம வேற ஒரு செல்லக்குட்டி வாங்கிக்கலாம்” என்றார் உமரின் அப்பா.
“ஒரு நாய்க்குட்டியோ, பூனைக்குட்டியோ, இல்லன்னா ஒரு முயல்குட்டியோ வாங்கிக்கலாம்” என்று கூறி அவனைச் சமாதானப்படுத்தினார் உமரின் அம்மா.
“அதெல்லாம் முடியாது! எனக்கு என்னோட செல்லக்குட்டிதான் வேண்டும்!” என்று அம்மாவிடம் உறுதியாகக் கூறினான் உமர்.
“சரி, உமர்! நீ வருத்தப்படாதே. நாம் வேணும்னா, இந்தக் கிழங்கை நம்ம வீட்டுப் புழக்கடையில் புதைச்சு வைக்கலாம்” என்றார் உமரின் அம்மா. “அப்போ, அது எப்போதும் உன்னோடேயே இருக்கும்” என்றார்.
சிறிது நேர தயக்கத்திற்குப் பின், உமரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தான். மூவரும் சேர்ந்து புழக்கடையில் ஒரு ஆழமான குழி தோண்டி, உருளைக்கிழங்கு செல்லக்குட்டியை அதில் புதைத்தனர்.
ஒரு பத்து நாட்களுக்குப் பின், உருளைக்கிழங்கைப் புதைத்த இடத்தில் ஒரு சிறிய துளிர் எட்டிப் பார்த்தது. அதைப் பார்த்ததும், உமர் பெருமகிழ்ச்சி அடைந்தான்.
அன்றிலிருந்து, தினமும் அங்கு நீர் ஊற்றி, அந்தச் செடியைப் பத்திரமாகப் பாதுகாத்து வளர்த்தான். ஒவ்வொரு நாளும் இலைகள் அதிகமாகி, அந்தச் செடி வளர்ந்து வருவதைப் பார்க்க அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சில வாரங்கள் கழித்து, அதில் பூக்கள் பூத்தன.
உமரின் அப்பா அவனிடம் ஒரு மண்வெட்டியைக் கொடுத்து, அந்தச் செடியைப் பத்திரமாக வெட்டி எடுக்கச் சொன்னார். அவனும் மெல்லச் செடியின் அடிப்பாகம் வரை தோண்டி, அதனை வெட்டி எடுத்தான்.
அப்போது அவன் கண்ட காட்சி அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ஒற்றைச் செடியின் வேரிலிருந்து பல உருளைக்கிழங்குகள் முளைத்திருந்தன!
மண்ணில் புதைத்து வைத்த அவனுடைய உருளைக்கிழங்கு செல்லக்குட்டி, பல செல்லக்குட்டிகளை அவனுக்குப் பரிசளித்தது. உமர் அந்தச் செல்லக்குட்டிகளை எல்லாம் தான் மட்டும் வைத்துக்கொள்ளாமல், தன் சுற்றத்தார் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தான்.
(The Pet Potato by Josh Lacey – கதைக்கருவை எடுத்துக்கொண்டு எழுதப்பட்டது)
– தீபா சிந்தன்
எனக்கு மிகவும் நெருக்கமானக் கதையாக உருளைக்கிழங்கு செல்லக்குட்டி மாறி நிற்கிறது.இந்தக் கதையின் சில சொற்கள்தான் என்னைக் கதையோடு பிணைத்திருக்கிறது என்பதை உணர்கிறேன். ஒரு டவுட் உமர் அப்பா, உருளைக்கிழங்கை புதைத்தால் மண்ணில் காய்க்குமா? உருளைக்கிழங்கு என் பால்யவாழ்வில் இல்லாததால் இந்த சந்தேகம் வருகிறது. வாழ்த்துகள் தீபா& மாற்று இணையதளம்
நன்றி. “முழுக்க அழுகாத நிலையில் இருக்கும் உருளைக்கிழங்கைப் புதைத்தால் முளைத்துச் செடியாகும்” என்கிறார் உமர் அப்பா.