இலக்கியம்சிறார் இலக்கியம்

அழுக்குமூட்டை ஆதி (சிறார் கதை) – தீபா சிந்தன்

புள்ளி

இன்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறை நாள். அதனால், ஆதி காலையில் சீக்கிரமாக விழித்துக்கொண்டான். அதிகாலையில் எழுந்து, சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தான்.

“என்ன ஆதி, இன்னிக்கி ஸ்கூல் இல்லாதனால சீக்கிரமாவே எழுந்துட்டியா?” என்று கேட்டார் ஆதியின் அம்மா.

சற்று நேரத்தில், அவனுக்குப் பால் கலந்து கொடுத்தார் ஆதியின் அப்பா.

தினமும் பால் குடிக்க ஒரு மணிநேரம் ஆதியிடம் போராட வேண்டும். இன்று ஒரே மூச்சில் பாலை வேகமாகக் குடித்து முடித்தான். பின்னர், அம்மாவிடம், “நான் அமீரோட விளையாடப் போறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே போனான்.

அவன் தெரு முச்சந்தியில் வந்தபோது, ஆதிக்கு முன்னமே பல சிறுவர்களும் சிறுமிகளும் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் கோலி, பம்பரம் என குழுவாகச் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அமீர் இருக்கும் குழுவில் ஆதி சேர்ந்துகொண்டான். அமீர் கிட்டிப்புள் விளையாட மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தான். இன்னும் சிலர் குச்சிகளைச் சீவி ஒழுங்குபடுத்தினர். ஆதியும் அமீருடன் சேர்ந்து மண்ணைத் தோண்ட உதவி செய்தான்.

கிட்டிப்புள் என்பது மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய கட்டை. கிட்டிக்கோல் என்பதும் மரத்தால் செய்த கட்டைதான். ஆனால், சுமார் 20 சென்டிமீட்டர் அளவுக்கு கிட்டிப்புள் சிறியதாக இருக்கும். கிட்டிக்கோல் சுமார் 50 சென்டிமீட்டர் அளவுக்கு கொஞ்சம் பெரியதாக இருக்கும். கிட்டிப்புள்ளை தரையில் விழாமல் நீண்ட நேரம் கிட்டிக்கோலால் அடித்து விளையாடுவதே விதிமுறை. ஒருவர் பின் ஒருவராகப் புள்ளைக் கோலால் அடித்து ஆடினர். புழுதி பறக்க, கிட்டிப்புள் அந்த வீதி எங்கும் பறந்து திரிந்தது. விளையாட்டு சுவாரசியத்தில் நேரம் போனதே அவர்களுக்குத் தெரியவில்லை. வெயில் சுட்டெரிக்க, வேர்த்துக் களைத்துப் போயினர். பசியும் தாகமும் வந்தது. ஒருவர் பின் ஒருவராக வீடு திரும்பினர். ஆதியும் அமீருக்கு விடை கொடுத்துவிட்டு, வீடு நோக்கி ஓடி வந்தான்.

வீட்டுக்கு வந்ததும், சமையல் அறைக்குச் சென்றான் ஆதி. ஒரு சொம்பு நிறைய நீரைக் குடித்து முடித்தான்.

“ஆதி, வந்துட்டியாடா?” என்று அம்மா குரல் கொடுத்தார்.

“ஆமாம்மா” என்று பதில் சொல்லிவிட்டு, அம்மாவின் குரல் வந்த பக்கமாகச் சென்றான். பின்வாசலில் அம்மா விறகுகளைக் காய வைத்துக்கொண்டிருந்தார்.

“என்னடா ஆதி, இப்படி மண்ணும் புழுதியுமா வந்திருக்க? சட்டை எல்லாம் அழுக்கா இருக்கு பாரு. தலை எல்லாம் மண்ணு. போ, முதல்ல போய் நல்லா சோப்பு தேய்ச்சுக் குளி” என்றார் ஆதியின் அம்மா.

“என்னம்மா, இப்போ போய்க் குளிக்கச் சொல்றீங்க? நான் இப்போதான விளையாடிட்டு வந்திருக்கேன். அதுக்குள்ள இன்னொரு வேலை செய்யணுமா?”

“குளிக்குறதுலாம் ஒரு கஷ்டமான வேலையாடா உனக்கு? உன் உடம்பு, கை, கால், சட்டை எல்லாம் மண்ணா தான இருக்கு. போய்க் குளிச்சா என்ன?”
என்று சொல்லிக்கொண்டே விறகுகளையும் அடுக்கி முடித்தார்.

“போங்கம்மா, நான் இப்போ குளிக்கல. நான் அப்பாகிட்டப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அப்பாவைத் தேடி வந்தான் ஆதி.

அப்பா திண்ணையில் அமர்ந்து மதியச் சாப்பாட்டிற்குத் தேவையான காய்களை நறுக்கிக் கொண்டு இருந்தார். 

“அப்பா, காய் நறுக்கி முடிச்சதும், என் கூட விளையாட வரீங்களா?” என்று அப்பாவிடம் கேட்டான் ஆதி.

ஆனால், ஆதியைப் பார்த்த அப்பா, “என்ன ஆதி, கை கால்லாம் ஒரே அழுக்கா இருக்கு?” என்றார்.

“அது இருக்கட்டும்பா. நீங்க விளையாட வரீங்களா? இல்லையா? அத சொல்லுங்க முதல்ல” என்று கோபமாகக் கேட்டான்.

“நீ பாக்க அழுக்கு முட்டை மாதிரி இருக்க. அழுக்குமூட்டை ஆதியோட நான் விளையாட மாட்டேன்” என்று சிரித்துக்கொண்டே மூக்கை ஒரு கையால் பொத்தியபடி சொன்னார் ஆதியின் அப்பா.

“ஓஹோ! மூக்கைப் பொத்துற அளவுக்கு நான் அழுக்கா இருக்கேனா! சரி, நீங்க என்னோட விளையாட வேணாம். நான் போய் என் சக்திகூட விளையாடுறேன்” என்று சொல்லி, கட்டிலுக்கு அடியில் இருந்து ஒரு மஞ்சள் நிறப் பந்தை எடுத்துக்கொண்டான் ஆதி.

“சக்தி… சக்தி… எங்கடா போன? கூப்பிடுறது கேக்கலியா? எங்க இருக்க?”
என்று சக்தியைத் தேடி முன்வாசல் வந்தான் ஆதி.

ஆதியின் கூக்குரல் கேட்டு “லொள் லொள்” என்று குறைத்துக் கொண்டே வந்தது சக்தி. எப்போதும் ஆதியைப் பார்த்ததும் பாய்ந்து ஓடிவரும் சக்தி. ஆனால், இப்போது அழுக்காக இருக்கும் ஆதியைப் பார்த்தும் அப்படியே நின்றுவிட்டது.

பந்தைச் சக்தியிடம் தூக்கி எறிந்து, “பிடிடா” என்று ஆதி சொன்னா. ஆனால், அசையாமல் அப்படியே நின்றது சக்தி. தூக்கி எறிந்த பந்தை எடுத்து வந்து மீண்டும் சக்தியிடம் வீசினான் ஆதி. இம்முறையும் சக்தி விளையாட விருப்பம் இல்லாமல், முகத்தைச் சுழித்தபடி திரும்பிச் சென்றது.

“ஏன்டா சக்தி, நீயும் என்கூட விளையாட மாட்டியா? சரி, போ. நான் வாணிகூடவோ, இல்லன்னா ராணிகூடவோ விளையாடிக்கிறேன்” என்று சக்தியிடம் கூறினான்.

பின்னர், “மியாவ், மியாவ்” என்று குரல் எழுப்பி வாணியையும் ராணியையும் தேடி, வீட்டைச் சுற்றி அலைந்தான் ஆதி.

ஆனால், வாணியும் ராணியும் அழுக்குமூட்டை ஆதியுடன் விளையாட விருப்பம் இன்றி ஓடி ஒளிந்துகொண்டனர்.

பூனைகளைத் தேடிக் களைத்து, பின் கூண்டில் இருக்கும் கிளியுடன் விளையாடச் சென்றான் ஆதி. ஆனால், கிளியும் அழுக்குமூட்டை ஆதியுடன் விளையாடவில்லை.

கோபமும் சோர்வும் அதிகமானது ஆதிக்கு. மீண்டும் அம்மாவிடம் ஓடினான்.

“அம்மா… அம்மா… எல்லாரும் என்னை ‘அழுக்குமூட்டை ஆதி’, ‘அழுக்குமூட்டை ஆதி’னு சொல்லிக் கிண்டல் பண்றாங்கம்மா. நான் விளையாட கூப்பிட்டா, யாருமே வர மாட்டேங்குறாங்க” என்றான்.

“ஆதி, நான்தான் வெளிய இருந்து வந்ததும் உன்னைக் குளிக்கச் சொன்னேன்ல. நீ என்னடான்னா, ‘விளையாடப் போறேன்மா’ அப்படின்னு சொல்லிட்டுப் போன. இப்பப்பாரு, சக்தியும் வாணியும் ராணியும் கூட உன்னோட விளையாட மாட்டேங்குறாங்க” என்றார் அம்மா.

“ஓஹோ, அதுதான் காரணமா? அழுக்குமூட்டை ஆதியோட தான விளையாட மாட்டாங்க. சரிம்மா, நீங்க சொன்ன மாதிரி முதல்ல நான் போய்க் குளிச்சிட்டு வரேன். அப்புறம், பளபளப்பான ஆதியோட இவங்க எல்லாரும் விளையாட வருவாங்கல்ல” என்றான் ஆதி.

“சமத்துக்குட்டி… வாடா… வா…” என்று அவனைத் தூக்கி வாரி அணைத்தபடி குளியலறைக்குக் கூட்டிச் சென்றார் ஆதியின் அம்மா.

நன்றாக குளித்துமுடித்து துணி மாற்றி வந்தான் ஆதி. வந்ததும் அம்மா சுடச் சுட செய்து வைத்திருந்த இட்லியும் பீஃப் கறியும் சாப்பிட்டு முடித்தான். 

அப்போது வெளியில் இருந்து ஒரு சத்தம் கேட்டது. 

“ஆதி… விளையாட வரியாடா…”

ஆதி இப்போது அம்மாவையும் அப்பாவையும் மாறிமாறி பார்த்தான். சிரித்துக்கொண்டே அம்மா தலை அசைத்தார். உடனே, “தேங்க்ஸ்மா” என்று சொல்லிக் கொண்டே சிட்டாய் விளையாட வெளியில் பறந்தான் ஆதி. 

– தீபா சிந்தன்

Leave a Reply