இலக்கியம்சிறார் இலக்கியம்

புள்ளி (சிறார் கதை) – தீபா சிந்தன்

புள்ளி 20250214 205228 0000

(பீட்டர் ரெனால்ட்ஸ் என்கிற எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய தி டாட் என்கிற நூலைத் தழுவி எழுதப்பட்டது.)

அமீராவுக்குக் கலைப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளி விடுமுறை நாட்களில் காகிதங்களைப் பல வடிவங்களில் வெட்டுவது, ஓட்டுவது என வீட்டையே காகிதக் கலையரங்கமாக மாற்றி விடுவாள். அவள் அதனைச் செய்து முடித்த பின் வீட்டைச் சரி செய்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

அமீராவின் பெற்றோர் அவளது ஆர்வத்தைத் தடுக்கவில்லை. மாறாக, சரியான வழியில் அமீராவை வழிநடத்த எண்ணினர். அதனால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒரு கலை வகுப்பிற்கு அவளை அனுப்ப முடிவு செய்தனர்.

அமீராவும் மகிழ்ச்சியாக அந்தக் கலை வகுப்பிற்குச் சென்றாள். அன்றுதான் அவளுக்கு முதல் வகுப்பு. வகுப்பில் அவள் வயது குழந்தைகள் நிறைய பேர் இல்லை. அவளைவிட வயதில் மூத்த சில குழந்தைகள் அங்கு இருந்தனர். வகுப்பிலேயே சிறிய குழந்தையாக அவள் இருந்தாள். அதனால் முதல் சில வாரங்கள் அமீரா அவள் விரும்பியதைச் செய்தாள். காகிதங்களை வெட்டினாள். அதை வேறொரு வண்ணக் காகிதத்தில் ஒட்டினாள். அதில் சில வண்ணப் பொடிகளைத் தூவினாள். வீட்டில் விளையாட்டாக செய்ததை அங்கும் செய்தாள். கலை வகுப்பில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் ஆராய்ச்சி செய்தாள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.

ஒவ்வொரு வாரமும் தவறாமல் கலை வகுப்பிற்கு ஆர்வமாகச் செல்வாள். அன்றும் அப்படித்தான் ஆர்வமாகக் கிளம்பிச் சென்றாள். அன்றைக்கு எல்லாக் குழந்தைகளிடமும் ஒரு வெள்ளைக் காகிதத்தைக் கொடுத்தார் சுசி டீச்சர். அதில் படம் வரையச் சொன்னார். எல்லாரும் அவர்களுக்குப் பிடித்த படத்தை வரைந்தனர். வரைந்ததை சுசி டீச்சரிடம் கொடுத்தனர். ஆனால் வகுப்பு முடிந்த பிறகும் அமீரா அந்த வெள்ளைக் காகிதத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள். சுசி டீச்சர் அவள் அருகில் வந்து, “என்ன ஆச்சு, அமீரா?” என்று கேட்டார்.

அமீரா பதில் ஏதும் சொல்லாமல் காகிதத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். சுசி அமீராவிடம், “உன்னோட பேப்பர் பனிமலை மாதிரி வெள்ளையா அழகா இருக்கு, அமீரா” என்றார்.

“பனிமலையா? கேக்க நல்லாத்தான் இருக்கு, மிஸ். ஆனா நான்தான் பேப்பர்ல எதுவும் வரையவே இல்லையே? எனக்கு வரையத் தெரியலேன்னு கிண்டல் பண்றீங்களா, மிஸ்?” என்று சொல்லும்போதே தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள் அமீரா.

“அட! அமிக்குட்டி, இதுக்குப் போய் யாராச்சும் அழுவாங்களா? நான் ஒன்னு சொன்னா செய்வியா?” என்று அமீராவிடம் கேட்டார் சுசி டீச்சர்.

“செய்றேன், மிஸ்” என்றாள் கண்களைத் துடைத்தபடி. ஆர்வமாக, “என்னன்னு சொல்லுங்க, மிஸ்” என்றாள் அமீரா.

“இந்த வெள்ளைப் பேப்பர்ல ஒரு புள்ளி வெச்சுத்தா. அது போதும். அப்புறம் என்ன நடக்குதுனு மட்டும் பாரு” என்று அமீராவின் முதுகில் தட்டிக் கொடுத்தபடி சொன்னார் சுசி டீச்சர்.

அமீரா ஒரு கலர் பென்சிலை எடுத்து அந்த வெள்ளைக் காகிதத்தில் அழுத்தமாக ஒரு புள்ளி வைத்தாள். “ம்ம்மம்” என்ற சத்தத்துடன் அந்தப் புள்ளியைக் காகிதத்தில் அச்சடித்தது போல் பதித்தாள். சுசி டீச்சர் அந்தக் காகிதத்தை அவளிடமிருந்து வாங்கினார். நன்றாக உற்றுப் பார்த்தார்.

“ஹம்மம்…. புள்ளிய ரொம்ப அருமையா வரைஞ்சிருக்கு, அமீரா” என்று அவளிடம் கூறினார். பின்னர் அந்தக் காகிதத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்தார். “இப்போ இந்தப் பேப்பர்ல கீழே உன்னோட பெயரை எழுதித் தா” என்று சொன்னார்.

அமீரா ரொம்பப் பெருமையாகத் தோள்பட்டையைக் குலுக்கியபடி காகிதத்தை வாங்கினாள். “டீச்சர், எனக்கு வரையத் தெரியாது. ஆனா, ‘அமீரா’னு என் பேர நல்லா எழுதத் தெரியும்” என்றாள். அ.. மீ.. ரா.. என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி அவள் பெயரை அந்தக் காகிதத்தில் எழுதி, சுசி டீச்சரிடம் கொடுத்தாள்.

அமீராவின் அப்பா வகுப்பு முடிந்ததும் அவளை அழைத்துச் செல்ல வெளியே காத்திருந்தார். அமீரா சுசி டீச்சருக்கு நன்றி சொல்லிவிட்டு, அப்பாவுடன் வீடு வந்து சேர்ந்தாள்.

அடுத்த வாரம் வகுப்பிற்கு வரும் போது அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவள் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படி அங்கே அவள் என்ன பார்த்தாள் தெரியுமா? அவள் வழக்கமாக அமரும் மேசையின் பின்னால் உள்ள சுவரில், சென்ற வாரம் அவள் வரைந்த ஓவியம் அழகான ஒரு தங்க நிற சட்டத்திற்குள் வைத்து மாட்டப்பட்டு இருந்தது.

முதல் முறையாக அவள் வரைந்த ஓவியம் அது. அந்த ஓவியம் மட்டுமல்ல, அந்தத் தங்க நிற சட்டம் அவள் பெயரையும் சேர்த்துத் தாங்கி நின்றது. அதை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இன்னும் இந்தக் காகிதத்தில் என்னென்ன வரைந்து இருக்கலாம் என்று அவள் யோசிக்கத் துவங்கினாள். இதுவரை அவள் பயன்படுத்தாத தூரிகைகளை வைத்து வண்ணங்கள் தீட்டிப் பார்க்கலாம் என்று நினைத்தாள்.

ஒவ்வொரு வண்ணமாக நீரில் கரைத்தாள். தூரிகையால் தொட்டாள். ஒரு நீல நிறப் புள்ளி, ஒரு சிகப்பு நிறப் புள்ளி, பச்சை நிறப் புள்ளி, மஞ்சள் நிறப் புள்ளி எனக் காகிதத்தில் பல வண்ணங்களில் புள்ளிகள் வைத்தாள்.

அடுத்த வாரம் வகுப்பிற்கு இன்னும் ஆர்வமாகக் கிளம்பினாள். அன்று இரு வண்ணங்களைக் குழைத்துப் புதிதாக ஒரு வண்ணத்தை அவளே உருவாக்கினாள். நீல நிறத்தையும் சிகப்பு நிறத்தையும் சேர்த்துக் குழைத்துப் பார்த்தாள். அப்போது ஊதா நிறம் உருவானது. அப்படி வேறு வேறு நிறங்களைச் சேர்த்துப் புது நிறம் உருவாக்குவது அவளுக்கு உற்சாகமாக இருந்தது.

ஆரம்பத்தில் அவள் காகிதத்தில் சின்னச் சின்னப் புள்ளிகளையே வைத்தாள். நாட்கள் செல்லச் செல்ல, புள்ளிகளின் அளவு மாறுபட்டது. இப்போதெல்லாம் பல வண்ணங்களில் பெரிய பெரிய புள்ளிகள் வைத்தாள். வண்ணங்களைப் பெரிய கோப்பையில் கரைக்க ஆரம்பித்தாள். வெவ்வேறு அளவிலான தூரிகைகளைப் பயன்படுத்தினாள். போகப் போக, காகிதத்தின் அளவும் பெரிதானது. ஒரு புள்ளியில் ஆரம்பித்த அவளது பயணம், இப்போது இந்தப் பேரண்டத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல் கணக்கில்லாத புள்ளிகளாக ஆனது.

இப்படியே ஒரு வருடம் ஓடிப்போனது. அந்தக் கல்வியாண்டின் இறுதி நாளும் வந்தது. மாணவர்கள் அனைவரும் வரைந்த ஓவியங்களைச் சுசி டீச்சர் ஒன்று சேர்த்து வைத்திருந்தார். அந்த ஓவியங்கள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. அமீராவின் ஓவியங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், நண்பர்கள், புதிதாக அங்கு சேர விரும்பும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் எனப் பலரும் அந்த ஓவியக் கண்காட்சியைக் காண வந்திருந்தனர்.

அப்படி ஓவியங்களைக் காண வந்த சிறுவன் ஒருவன், அமீரா வரைந்த நீலப் புள்ளி ஓவியத்தைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான். அந்த ஓவியத்தின் அருகில் நின்றிருந்த அமீராவிடம், “இந்தப் படத்தை நீயா வரைஞ்ச?” என்று கேட்டான் அந்தச் சிறுவன்.

“ஆமா, நான்தான் வரஞ்சேன்” என்றாள் அமீரா.

“எனக்கும் இது மாதிரி வரையனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. ஆனா எனக்குதான் வரையத் தெரியாதே! என்ன பண்றது?” என்று அமீராவிடம் கேட்டான் அந்தச் சிறுவன்.

“உன்னால நல்லா வரைய முடியும்னு தான் நான் நினைக்கிறேன்” என்றாள் அமீரா.

“ஐயோ, நீ வேற காமடி பண்ணிட்டு, என்னாலையா வரைய முடியும்னு சொல்ற. என்னால பேப்பர்ல ஒரு கோடு கூட நேரா போட முடியாது. நானாவது நல்லா வரையிறதாவது!” என்றான் அந்தச் சிறுவன்.

அவன் பேசுவதைக் கேட்டுச் சிரித்த அமீரா, “ஒரு நிமிசம் இங்கேயே இரு. எங்கேயும் போய்டாத. நான் இதோ வந்திட்றேன்” என்று சொல்லி வேகமாகப் பள்ளிக்குள் ஓடினாள். உள்ளே இருந்து ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து வந்தாள்.

“இந்தா…. இந்தப் பேப்பர்ல உனக்குப் பிடிச்ச மாதிரி எதாச்சும் வரைஞ்சு தா” என்றாள் அமீரா. அவனும் ஒரு பென்சிலால் கோணல் மாணலாக இரண்டு கோடுகளைப் போட்டு அவளிடம் கொடுத்தான். கொஞ்ச நேரம் அந்தக் காகிதத்தை வெறித்துப் பார்த்தபடியே நின்றாள் அமீரா.

“சூப்பர்! நீ எவ்ளோ அழகா வரைஞ்சிருக்க தெரியுமா, சூப்பர்…” என்று அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்து தெரிவித்தாள்.

“சரி, இப்போ இந்தப் பேப்பர்ல கீழே உன்னோட பெயரை எழுதித் தா” என்று அந்தச் சிறுவனிடம் கூறினாள். அவனும் அதில் “ஜீவா” என்று அவன் பெயரை எழுதிக் கொடுத்தான்.

அன்று முதல் அந்தச் சிறுவனின் கலைப் பயணமும் ஆரம்பமானது.