இலக்கியம்தொடர்கள்

ஒரு, ஓர் சிக்கல் முதல் மரபு மீறல் சவால்கள் வரையில் (சுவையாக எழுதுவது சுகம் – 8)

549 (1)

அ. குமரேசன்

கட்டுரையாக்கத்தில் எதைப் பற்றி எழுதுவது, உற்றுக் கவனிப்பது, திறனாய்வு செய்வது, மொழியைக் கையாள்வது உள்ளிட்ட உள்ளடக்கம்   சார்ந்த எண்ணங்களை இதுவரை பகிர்ந்துகொண்டோம்.  இனி, சொல்லாடல்கள், வாக்கிய அமைப்புகள் தொடர்பாக உரையாடலாம். சுவையாக எழுதுவது ஒரு சுகம் என்றுதான் இந்தத் தொடரைத் தொடங்கினோம் இல்லையா? அந்தச் சுகமான அனுபவத்துடன் இணைந்ததுதான் பிழைகள் இல்லாமல் எழுதுவது.

தவறுதலாக விடப்படும் எழுத்துப்.பிழைகள், சரியான எழுத்து எதுவெனத் தெரியாமலே செய்யப்படும் பிழைகள் இரண்டுமே உள்ளன. இன்று மேசைக் கணியிலும் மடிக் கணினியிலும் தட்டச்சு செய்வது பரவலான பழக்கமாகிவிட்டது. பலர் தங்களின் கைப்பேசியிலேயே இரண்டு கைகளின் கட்டை விரல்களால் வேகமாகத் தட்டச்சு செய்கிறார்கள். குரல் தட்டச்சு வசதி உள்ள கணினியின் கூகுள் டாக்ஸ், கைப்பேசியின் ஜி போர்டு உள்ளிட்ட செயலிகள்  நாம் சொல்லச் சொல்லத் தட்டச்சு செய்து கொடுத்துவிடுகின்றன. இவ்வாறு கணினிகளிலும் கைப்பேசிகளிலும் தட்டச்சுகிறபோது தவறுதலாக எழுத்துப் பிழைகள் நேர்வதுண்டு. “பிழை” என்ற சொல்லுக்கான எழுத்துப் பொத்தான்களைத் தட்டுகிறபோது ‘பி’ என்ற எழுத்து, ‘ப‘ என்று விழுந்து, “பழை” என்று பதிவாகியிருக்கும். “அம்மா” என்ற சொல் “அமமா” என்று வந்திருக்கும்.

குரல் தட்டச்சில் சொற்களைத் தெளிவாகவும் பொறுமையாகவும் உச்சரிக்க வேண்டும். இல்லாவிட்டால் “குழந்தைகள் குலைகுலையா முந்திரிக்கா என்று சொல்லிக்கொண்டே விளையாடினார்கள்” என்று நீங்கள் சொன்ன வாக்கியம், “குழந்தைகள் கொலைகொலையா மந்திரிக்கா என்று சொல்லிக்கொண்டே விளையாடினார்கள்,” என்று பதிந்துவிடும்.

தட்டச்சிய பிறகு ஒருமுறை நிதானமாக வாசித்துப் பார்த்தால் இப்படிப்பட்ட பிழைகளைக் கண்டுபிடித்துத் திருத்திவிட முடியும். ஒரு வாக்கியத்தை முடித்தபின் ஒருமுறை, ஒரு பத்தியை முடித்ததும் ஒருமுறை, முழுக்கட்டுரையையும் முடித்த கையோடு ஒருமுறை    என்று வாசித்துப் பார்த்தால் பெருமளவுக்கு நாமே பிழைகளைத் தேடிப் பிடித்துச் சரி செய்துவிட முடியும். கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு, அச்சிதழுக்கோ, இணைய ஏட்டிற்கோ கட்டுரையை அனுப்புவதற்கு முன்பாக ஒருமுறை வாசிப்பது நல்லது. ஓர் இடைவேளைக்குப் பிறகு பார்க்கிறபோது, முதலில் கண்ணில் படாமல் தப்பித்துக்கொண்ட பிழைகள் இப்போது சிக்கிவிடும்.

இவ்வாறு திரும்பவும் வாசிப்பதில், பிழைகளைத் திருத்திவிட முடிவதோடு இன்னொரு பயனும் இருக்கிறது. வாசிக்கும்போதே, இந்தச் சொல்லுக்கு மாற்றாக அந்தச் சொல்லைப் போடலாமே, இந்த வாக்கியத்தை இப்படி அழகுபடுத்தலாமே, விட்டுப்போயிருக்கிற தகவலைச் சேர்க்கலாமே என்று தோன்றும். அதைச் செய்கிறபோது மேலும் சீராக அமையும். எழுதி முடித்ததைக் கோப்பில் வைத்திருந்து சில நாட்கள் கடந்த பின் எடுத்துப் படிப்பது மென்மேலும் நேர்த்தியாக்கும். தட்டச்சு செய்யாமல் கையால் எழுதுகிறவர்களும் இதைச் செய்ய வேண்டும். 

இப்படிக் கை தவறி அல்லது நா தவறி ஏற்படும் பிழைகள் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் சரியான எழுத்து எது என்று தெரியாததால் (அதாவது பள்ளியில் படிக்கிற காலத்தில் மனதில் ஊன்றாமல் போனதால்) செய்யப்படும் பிழைகள் இருக்கின்றன.  ஒற்றுப் பிழை, சந்தித் தகராறு, ஒருமை – பன்மை குழப்பம், அடையாளக்குறி சிக்கல், நீண்டு போகும் வாக்கியம் என்று நிறைய இருக்கின்றன.

,

சரியான எழுத்து எது, சரியான சொல் எது என்று தெரியாமல் பிழையாக எழுதுவதை எப்படித் திருத்துவது? வீட்டிலோ, நட்பு வட்டத்திலோ தமிழறிந்தவர்களிடம் கொடுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்வதுதான் வழி. அப்போது நமது எழுத்தாக்கத்தைச் செம்மைப்படுத்தும் ஆலோசனைகளும் அவர்களிடமிருந்து வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஏஐ கருவிகளின் உதவி

தமிழ் எழுத்தாக்கங்களில் பிழைகளைக் கண்டறிவதற்கும் திருத்துவதற்குமான  “ஸ்பெல் செக்” ஏற்பாடுகள் கணினிகளிலும் கைப்பேசிகளிலும் உள்ள இணையத் தொடர்பிகளில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜிமெயில் மின்னஞ்சலில் ஒரு கடிதத்தைத் தட்டச்சுகிறபோது, தவறான சொற்களின் அடியில் சிவப்புக் கோடு தோன்றும். அதைச் சொடுக்கினால் சரியான சொல் வரும், அதைச் சொடுக்கினால் பிழையான சொல்லை அகற்றிவிட்டு அந்தச் சொல் அமர்ந்துவிடும். ஆவணத் தயாரிப்புக்கான கூகுள் டாக்ஸ்,  மைக்ரோசாஃட் வெர்ட் ஆகிய பக்கங்களிலும் இத்தகைய வசதிகள் உள்ளன.

ஆயினும் மொத்தமாக அந்த எந்திரங்கள் சொல்வதெல்லாமே சரிதான் என்ற முடிவுக்குப் போய்விடக்கூடாது. எடுத்துக்காட்டாக, “சொல்வதெல்லாமே” என்ற சொல்லில் தவறு இருப்பதாகக் காட்டும். என்னவென்று பார்த்தால், “சொல்வதெல்லாம்” என்று திருத்தச் சொல்லும். அதே போல, “ஒருமுறை” என்று தட்டச்சினால், “ஒரு முறை” என்று ஒருவையும் முறையையும் பிரித்துக் கொடுக்கும். அதாவது, “சொல்வதெல்லாமே” என்ற சொல்லாக்கம் தமிழில் இருப்பதோ, “ஒருமுறை” என ஒரே சொல்லாகவே எழுத வேண்டும் என்பதோ இன்னும் அந்த அமைப்புகளுக்குத் தெரியவரவில்லை. ஆனால் “பிரித்துக்கொடுக்கும்” என்று ஒரே சொல்லாகச் சேர்த்துத் தட்டப்படும் சொற்களை “பிரித்துக்” என்றும் “கொடுக்கும்” என்றும் சரியாகப் பிரித்துக் கொடுத்துவிடும். இதை நான் தட்டச்சு செய்கிறபோது கூட “கொடுத்துவிடும்” என்ற சரியான ஒரே சொல்லை “கொடுத்து விடும்” என்று பிழையாகப் பிரித்து எழுதச் சொல்கிறது கூகுள் டாக்ஸ்!

சேட்ஜிபிடி, ஜெமினி ஏஐ ஆகிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகளிலும் இதே போன்றுதான். அவற்றை நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும், ஆனால் நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆம், இங்கு நாமதான் கிங்கு!

தமிழில் எழுதும்போது பொதுவாக ஏற்படக்கூடிய  பிழைகளைக் கவனிப்போம். என்னென்ன பிழைகள் ஏற்படுகின்றன என்று எல்லாவற்றையும் இங்கே பார்த்துவிட முடியாது. மாதிரிக்குக் கொஞ்சம்.

ஒருவும் ஓரும்

மிகப் பரவலாகக் காணப்படுவது “ஒரு”, “ஓர்” குழப்பம்.  பலர் அந்த ஓர் என்ற சொல்லைத் தொடுவதே இல்லை. சிலர் எதற்கெடுத்தாலும் ஓர் என்று சேர்ப்பார்கள். “இனிப்பை ஒரு ஈ வட்டமிடுகிறது” என்று எழுதுவார்கள். “இனிப்பை ஓர் ஈ வட்டமிடுகிறது” என்று எழுத வேண்டும் என்று மொழியின் மரபில் அக்கறை உள்ளவர்கள் சொல்வார்கள்.. “ஓர் காட்டில்” என்று எழுதாமல் “ஒரு காட்டில்” என்று எழுத வேண்டும்.

இதை எளிதாகப் புரிந்துகொள்ள அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,  ஓ, ஔ ஆகிய 12 உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களின் முன்னால் ஓர் என்று குறிப்பிட வேண்டும். க, கா, கு, கூ,  ச, தா, தி, தீ, ப, பொ, போ, மெ, மே, ந, நை ஆகியவை உள்ளிட்ட 196 உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் சொற்களின் முன்னால் ஒரு என்று எழுத வேண்டும். ன  வரிசையின் 12 உயிர்மெய் எழுத்துகளும், ண வரிசையில் உள்ள 12 உயிர்மெய் எழுத்துகளும் சொற்களின் முதல் எழுத்தாக வருவதில்லை. ஆகவே அந்த எழுத்துகளைப் பொறுத்தமட்டில் ஒரு போட வேண்டுமா, ஓர் போட வேண்டுமா என்ற சிக்கல் இல்லை. ர, ற வகையறா சொற்களை நேரடியாக அந்த எழுத்துகளிலிருந்து தொடங்குவதில்லை. ரெண்டு என வாய்மொழியாகச் சொன்னாலும், இ சேர்த்து இரண்டு என்று எழுதுகிறோம். றெக்கை என்ற சொல்லுடன் இ சேர்த்து இறக்கை என்று எழுதுகிறோம். இறக்கைக்கு முன்பாக ஓர் வந்துவிடும்.

பாரதியின் புகழ்பெற்ற “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்” பாடலில், “அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்” என்ற வரி வரும். காட்டில் என்ற சொல்லுக்கு முன் ஒரு என்று சரியாக எழுதிய பாரதி பொந்திடை என்ற சொல்லின் முதலெழுத்தாக பொ இருக்கிறபோது அதன் முன் ஒரு என்றுதானே எழுதியிருக்க வேண்டும்? பாரதி இலக்கணப் பிழை செய்தானா? இல்லை. இதைத் தமிழ்ப் புலமையுலகம் கவிதைச் சுதந்திரம் என்று அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறது. “அங்கொரு காட்டிலோர் பொந்திடை” என்று சொல்லிப் பாடும்போது, பாட்டின் ஓசை நயமும் இராக சுகமும் பாதிக்கப்படாமல் ஒலிக்கும்.

பாடலைப் பாடுவதன் ஓசை  நயத்துக்காக என்றில்லாமல், ஓர் பாட்டு, ஒரு இசை என்று எழுதினால் என்ன தப்பு என்று கேட்கலாம். ”தப்பில்லை. சொல்லப்போனால் இந்த ஒரு, ஓர் விதி  இலக்கணத்திலேயே இல்லை. தொடர்ச்சியாகப் பின்பற்றப்படும் ஒரு மரபுதான் அது,” என்கிறார் தமிழாசிரியரும், தமுஎகச தலைவர்களில் ஒருவருமான நா. முத்துநிலவன். ‘தமிழ் இனிது‘, ‘இலக்கணம் இனிது’ எனும் இரண்டு சிறப்பான, எளிமையான, தமிழ் பயில விரும்புவோருக்கு இணக்கத்தோடு இலக்கணம் கற்றுத் தருகிற புத்தகங்களை வழங்கியிருப்பவர் அவர்.

மரபை மீற வேண்டுமானால்

“மரபைப் பின்பற்றுவது எழுத்தின் நயத்திற்கு உதவியாக இருக்கும். எழுதப்பட்ட கட்டுரை வரிகளில் ஓர் அழகு இருக்கும். மற்றபடி கண்டிப்பாக அப்படித்தான் எழுத வேண்டும் என்ற இலக்கணக் கட்டாயம் இல்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட இலக்கணத்தை மீறித்தான் புதிய எழுத்து நடைமுறைகள் வந்தன, பின்னர் அந்தப் புதிய நடைமுறைகளும் இலக்கணமாக மாறின. பின்னொரு காலத்தில், புதிய இலக்கியம் ஒன்று படைக்கப்படுகிறபோது அந்தப் புதிய இலக்கணமும் மீறப்படும். அதிலிருந்து இன்னொரு புதிய இலக்கணம் உருவாகும்,” என்றும் முத்துநிலவன் கூறுகிறார்.

இதுதான் மொழியின் ஆற்றல். இந்த ஆற்றலால்தான் தேங்கி நின்றுவிடாமல் தமிழ் என்றும் சீரிளமைத் திறத்தோடு வளர்கிறது. இதுதான் சாக்கு என்று, இலக்கணத்தைத் தெரிந்துகொள்ளாமலே மீறிக்கொண்டிருக்கக்கூடாது. எல்லை எது என்று தெரிந்தால்தானே அதைத் தாண்ட முடியும்? அதே போல் அடிப்படை இலக்கணத்தை ஓரளவேனும் அறிந்து வைத்திருந்தால்தான் பொருத்தமான இடத்தில் வெற்றிகரமான முறையில் மீற முடியும். “காட்டிலோர் பொந்திடை” போல! புதுக்கவிதையில் வெற்றிச் சிகரம் தொட்ட கவிஞர்கள் பெரும்பாலோர் மரபுக் கவிதை இலக்கணத்தைக் கற்றவர்களே.

இந்தக் கட்டுரையி “தட்டச்சுகிறபோது”, “தட்டச்சிய பிறகு” “தட்டச்சினால்” என்ற சொற்களைக் கையாண்டிருக்கிறேன். “தட்டச்சு செய்கிறபோது”, “தட்டச்சு செய்த பிறகு”, “தட்டச்சு செய்தால்” என்றுதான் மரபுப்படி எழுத வேண்டும். ஆனால், புதுமையும், சொற்களின் சுருக்கமும் கருதி இந்தப் புதிய சொற்களை உருவாக்கியிருக்கிறேன். தமிழ் எழுத்து நடையில் புதுமைகளை முயன்றவரான சுஜாதா தனது சிறுகதை ஒன்றில், “நிழற்படக் கருவியை இயக்கினான்” என்ற பொருளில், வழக்கமாக “கிளிக் செய்தான்” என்று எழுதி வந்ததைக் கடந்து, “கிளிக்கினான்” என்ற புதிய சொல்லைக் கொண்டுவந்திருப்பார். வாசகர்களை அது வெகுவாக ஈர்த்தது. அந்த வழியில் ஒரு முயற்சிதான் இந்தத் தட்டச்சுகிற சொற்களும். “சொல் புதிது” என்று சொல்லிச் சென்றிருக்கிறானே பாரதி!

மேலும் சில சவால்களை அடுத்தடுத்து சந்திப்போம்.

அ. குமரேசன்