– அ. குமரேசன்
எழுதுவதன் உள்ளடக்கம் சார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்து வந்திருக்கிறோம், இனி. சொல்லாடல்கள், வாக்கிய அமைப்புகள் தொடர்பாக உரையாடலாம் என்று முந்தைய கட்டுரையின் முடிவில் கூறியிருந்தேன். ஒற்றுப் பிழைகள், சந்தித் தகராறு, ஒருமை – பன்மை குழப்பம், அடையாளக்குறி சிக்கல், நீண்டு போகும் வாக்கியம், தமிழ்ச்சொல்லிலேயே சரியான தமிழ்ச்சொல் என்று நிறைய இருக்கின்றன. எழுத முற்படுவோரின் பக்கத்தில் நின்றுகொண்டு இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு “எழுதிவிடுவாயா பார்க்கலாம்” என்பது போலப் பார்த்தபடி கெக்கலிக்கின்றன.
அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக, இவற்றைப் பற்றிப் பார்த்துவிடலாமே என்று இரண்டு வினாக்கள் வந்திருக்கின்றன. புத்தகத் திறனாய்வும் திரைப்பட விமர்சனமும் எழுதுகிறபோது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன? தொடரைப் படித்துவரும் தோழர்களில் பலருக்கு இந்த இரண்டு வகை எழுத்தாக்கங்களிலும் ஆர்வம் இருக்கக்கூடும். ஆகவே இப்போது இவை குறித்துப் பேசிவிடுவோம்.
இருவகை அத்துமீறல்
அரங்கக் கூடுகையாகவும், இணையத்தின் வழியாகவும் நடத்தப்படும் புத்தகத் திறனாய்வு நிகழ்வுகளில் நீங்கள் இருவகை அத்துமீறல்களைக் காணலாம். ஒன்று – ஒதுக்கப்பட்ட கால அளவை விடக் கூடுதலாக நேரம் எடுத்துக்கொள்வார்கள். இதை நானும் செய்திருக்கிறேன், பின்னர் உரிய கால அளவுக்குள் திறனாய்வைச் செய்து முடிக்கப் பழகிக்கொண்டேன். எல்லோருமே இதைப் பழகிக்கொள்ள முடியும். ஆகவே இது கூடப் பெரும் பிழையல்ல.
ஆனால், சிலர், தாங்கள் எடுத்துக்கொண்ட புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறார்களா அல்லது புத்தகத்தை அப்படியே பக்கம் பக்கமாக வாசிக்கிறார்களா என்ற ஐயத்தை ஏற்படுத்திவிடுவார்கள். அந்த அளவுக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரையில் எல்லா அத்தியாயங்களையும் ஒரு தகவலைக்கூட விட்டுவிடாமல் சொல்லிக்கொண்டே போவார்கள். அவையில் கூடியிருக்கிறவர்களில் கொஞ்சம் பேராவது அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்குமானால் இப்படிச் செய்ய மாட்டார்கள். புத்தகத்தின் எல்லாத் தகவல்களும் எல்லாக் கருத்துகளும் தெரியவந்த பிறகு எத்தனை பேருக்கு அதைப் படிக்க வேண்டும் என்ற ஈடுபாடு ஏற்படும்?
அதிலும், நாவல் அல்லது சிறுகதைத் தொகுப்புகளைத் திறனாய்வு செய்வது என்ற பெயரில் முழுக்கதையையும் சொல்வதை விட அந்தப் புத்தகத்திற்குச் செய்கிற பெருங்கேடு வேறெதுவும் இருக்க முடியாது. புத்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்டால் கூட அதை ரகசியமாகப் படித்துவிட வேண்டும் என்ற ஆவலாவது ஏற்படும். முழுக்கதையையும் சொல்வதோ அந்த ஆவலில் அமிலத்தை ஊற்றிவிடும். போதாக்குறைக்கு, “புத்தகத்தை முழுசாப் படிச்ச திருப்தியை உங்க பேச்சு கொடுத்துச்சு,” என்று சிலர் கைகுலுக்குவார்கள்; அடுத்தொரு திறனாய்வு நிகழ்விலும் இதே தவறைச் செய்வதற்குத் தூண்டிவிடுவார்கள்.
புத்தகத்திற்குப் பேருதவி
அப்படிப்பட்ட புகழ்ச்சிகளில் மயங்கிவிடாமல், நூலின் சாறெடுத்துக் கொடுக்க வேண்டும். இந்தச் சிறிய உரையைக் கேட்டதிலேயே இவ்வளவு செய்திகளும் சிந்தனைகளும் கிடைக்குமானால், முழுப் புத்தகத்தையும் படித்தால் எவ்வளவு விரிவான பதிவுகளும் கருத்துகளும் கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே வெற்றிகரமான திறனாய்வு. அதுதான் புத்தகத்தை எழுதியவருக்கும் வெளியிட்டவருக்கும் செய்யக்கூடிய பேருதவி. அவர்களுக்கு மட்டுமல்ல, புத்தகத்திற்கே செய்கிற பேருதவியும் அதுதான்.
இதே பேருதவியைத்தான், திறனாய்வுக் கட்டுரை எழுதுகிறபோதும் செய்ய வேண்டும். விரிவாக எழுதினாலும் சரி, சுருக்கமாக எழுதினாலும் சரி இதையொரு நெறியாகவே பின்பற்ற வேண்டும். திறனாய்வுப் பதிவில் கிடைக்கிற அறிமுகமும், சிந்தனையும் வாசகருக்குப் புத்தகத்தை நாடி வாசிக்கிற விருப்பத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். “இந்தத் திறனாய்விலிருந்து இவ்வளவு தெரிந்துகொண்டதே போதும்,” என்று போகிறவர்கள் இருப்பார்கள். அவர்கள் போய்க்கொண்டே இருக்கட்டும். அறிமுகமான புத்தகத்துடன் தாங்களே இணைந்து பயணிக்க வருகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வந்துகொண்டே இருக்கச் செய்வதாகத் திறனாய்வை எழுத வேண்டும்.
பாராட்டி வரவேற்க வேண்டிய புத்தகத்திற்கு மட்டுமல்ல, கடுமையான எதிர்ப்புக்கும் கண்டனத்துக்கும் உரிய புத்தகத்திற்கும் இதே அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்படிப்பட்ட புத்தகமானாலும், அது சமுதாயத்திற்குத் தேவையான நல்ல புத்தகமா, அல்லது சமூக வாழ்வுக்குத் தீங்கு செய்யக்கூடிய புத்தகமா என்று, அதைப் படித்துத் தாங்களே முடிவுக்கு வருகிற உரிமையை வாசகர்களிடமிருந்து திறனாய்வாளர் பறித்துவிடக்கூடாது.
ஒரு நல்ல திறனாய்வில் இருக்க வேண்டிய அடிப்படைக் கூறுகளைத் தெரிந்துகொள்வோமா?
உள்ளடக்கமும் உருவமும்
முதலில் புத்தகத்தை அறிமுகப்படுத்த வேண்டும். தலைப்பு, எழுத்தாளர், பதிப்பகம், பக்கங்கள், விலை போன்ற தகவல்களுடன், புத்தகம் எதைப் பற்றிப் பேசுகிறது என்ற சுருக்கமான முன்னுரையை வழங்கலாம். இதற்கு இரண்டு அல்லது மூன்று பத்திகள் (பாராக்கள்) எடுத்துக்கொள்ளலாம். அதையடுத்து, புத்தகத்தின் மையமான கருத்துகளைச் சுருக்கித் தர வேண்டும். குறிப்பிட்ட பிரச்சினை பற்றிய புத்தகம் என்றால் அதைத் தெரிவித்து, அது தொடர்பாக உள்ள முக்கியமான தகவல்களையும், முன்வைக்கப்படும் வாதங்களையும், உருவாக்கப்படும் கருத்தாக்கங்களையும் எடுத்துக்காட்ட வேண்டும். நாவல் என்றால், படிக்கிற ஆர்வத்தைக் கெடுத்துவிடாமல், கதைக் கருவை விவரிக்கலாம்.
புத்தகத்தைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதன் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் உள்ள சிறப்புகள், வலிமை என்று நாம் கருதுவதை எழுத வேண்டும். போதாமை அல்லது பலவீனம் என்று கருதுவதையும் நேர்மையாகச் சுட்டிக்காட்டலாம். மிகவும் தேவையான புத்தகம், எழுத்தாளரிடமிருந்து மேலும் சிறப்பாக எதிர்பார்க்கலாம் என்ற நிலையில், அவரைக் காயப்படுத்திவிடாமல், வாசகர்களுக்குப் புத்தகம் பற்றிய எதிர்மறைக் கருத்தை ஏற்படுத்திவிடாமல் அந்தக் குறைபாடுகளைக் கூற வேண்டும். பூனை எலியைக் கவ்வுவதற்கும் தன் குட்டியைக் கவ்வுவதற்குமான வேறுபாடு என்ற உலகப் பொது உவமையை மனதில் வைத்துக்கொண்டு இதைச் செய்ய வேண்டும்.
“அதையெல்லாம் சொன்ன நூலாசிரியர் இதைச் சொல்லத் தவறிவிட்டார்,” என்று குறையாகச் சொல்லாமல், “இதைச் சொல்லாமல் விட்டது ஏன்,” என்று கேட்டுக் கிழிக்காமல், “இதைச் சொல்லியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்,” என்று பக்குவமாக எழுதலாம். ஆனால், திட்டமிட்ட உள்நோக்கத்துடன், வேண்டுமென்றே சில வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தச் சித்து வேலைகளை ஈவிரக்கமில்லாமல் அடித்துத் துவைத்துக் காயப்போ‘ட்டுவிடலாம். நம் வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆதாரங்களைக் குறிப்பிட வேண்டும். அந்த ஆதாரம் நாம் படித்த செய்தியாக இருக்கலாம், வேறோர் ஆவணத்தில் கண்ட தகவலாக இருக்கலாம்.
அடுத்து, நூலாசிரியரின் எழுத்து நடை, கருத்துகளை அடுக்கிக்கொண்டு போகும் ஓட்டம், கதைக் கருவின் கட்டமைப்பு, கதாபாத்திரங்களின் குண இயல்புகள் உணர்த்தப்படும் விதம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இவற்றை எழுதுகிறபோது, புத்தகத்திலிருந்து பொருத்தமான வரிகளை மேற்கோள் காட்ட வேண்டும்.
நாவல், சிறுகதை, கவிதை ஆகியவையும், கட்டுரைத் தொகுப்பும்
கூட, அவற்றின் உள்ளடக்கம் எந்த அளவுக்கு அடிப்படையானதோ, அதே அளவுக்கு அவை வெளிப்படுத்தப்பட்டுள்ள படைப்பாக்கத் திறனும் இன்றியமையாதது. புத்தகப் பத்திகளில் இருக்கும் அந்த அழகியல் கூறுகளை, சுவையான உவமைகளை நம் திறனாய்வில் எடுத்துக் கொடுக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாகப் புத்தகம் ஏற்படுத்துகிற தாக்கம், அதைப் பற்றிய நமது சொந்தக் கருத்து ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். புத்தகத்தின் செய்தியோடு தொடர்புள்ளதாக நமக்குச் சொந்த அனுபவம் ஏதேனும் இருக்கக்கூடும், அல்லது வேறு யாருக்கோ நிகழ்ந்ததாகவும் இருக்கலாம். படித்துத் தெரிந்துகொண்ட தகவலாகவும் இருக்கும். ஏதோவொரு வகையில் நம் சொந்த அனுபவத்தோடு இணைகிற அந்த இடங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். மொத்த நூலையும் ரசித்துப் படிக்க முடிகிறது என்றால் அதற்கான எடுத்துக்காட்டாகச் சில இடங்கள், ரசிக்க முடியவில்லை என்றால் அதற்கான காரணங்கள் ஆகியவற்றை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்.
களத்தில் நிற்போருக்காக
பொதுவாக அனைவருக்குமான புத்தகமாகவும் இருக்கும், அல்லது குறிப்பாக ஒரு களம் சார்ந்தவர்களுக்கான புத்தகமாக இருக்கும். அதைக் குறிப்பிட்டுச் சொல்வது அவர்களிடம் புத்தகம் சென்றடைய உதவும். பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆய்வு நூல் அல்லது நாவல் என்றால் அது பெண் விடுதலை இயக்கக் களச் செயல்பாட்டாளர்களுக்குத் துணையாகச் சேரும். அதைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். இதே போலத் தொழிலாளர் சட்டம், கல்வி உரிமை நியாயம், குழந்தை உரிமைகள், மதவெறிக்கு எதிரான மக்கள் நல்லிணக்கம், சாதியப் பாகுபாட்டு ஒழிப்பு ஆகிய உள்ளடக்கங்களோடு வருகிற புத்தகங்கள் அந்தந்தக் களப் போராளிகளுக்குத் தோள்கொடுக்கும். அதை அவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் எழுத வேண்டும்.
ஒரு நல்ல புத்தகத்தைப் பற்றி எழுதுகிறபோது அதே போன்ற மற்றொரு புத்தகத்தால் விளைந்த நன்மையை நினைவுகூரலாம், அதற்கு எதிரான புத்தகம் என்ன கைங்கரியத்தைச் செய்தது என்றும் சுட்டிக்காட்டலாம். ஒரு மோசமான புத்தகத்திற்கான கண்டனத்தை வெளிப்படுத்தி எழுதுகிறபோது, அதே போன்ற மற்றொரு புத்தகத்தின் விளைவைக் குறிப்பிட்டு எச்சரிக்கலாம், அதற்கு மாற்றாக வந்திருக்கக்கூடிய புத்தகத்தின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கலாம். பாராட்டுவது, சாடுவது இரண்டுமே அளவாக, மிகைப்படுத்தப்படாமல் இருப்பது நம் திறனாய்வு நேர்மையின் மீது மரியாதையை ஏற்படுத்தும். புத்தகத் திறனாய்வுக்கென்றே அச்சுப் பதிப்பாகவும், இணையத்திலும் பல ஏடுகள் வருகின்றன. நாளேடுகளிலும் பருவ இதழ்களிலும் புத்தக அறிமுகங்கள் இடம் பெறுகின்றன. அவற்றைப் படிப்பது, நூல்களைத் தேர்வு செய்யவும் உதவும், நூல் திறனாய்வுப் பயிற்சியாகவும் அமையும்.
திரைப்பட விமர்சனம் எழுதுவதிலும் இதே நெறிகள் தேவை என்று தனியாக விளக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். திரையரங்கில் படம் பார்க்கிறபோது, அருகில் அமர்ந்துகொண்டு அடுத்த காட்சியில் என்ன நடக்கப் போகிறது என்றோ, கதையின் முடிவையோ சொல்லிவிடுகிற திருப்பிறவிகள் இருப்பார்கள். அந்தக் குற்றத்தை நாம் நமது விமர்சன எழுத்தில் செய்துவிடக்கூடாது.
‘தீக்கதிர்’ நாளேட்டின் ‘வண்ணக்கதிர்’ பகுதியில் திரைப்பட விமர்சனங்கள் எழுதுவதன் மூலமாகவே நான் அறிமுகமானேன். அதிலே எனக்குக் கொஞ்சம் செருக்கு கூட இருந்தது. ஒரு பொதுநிகழ்வுக்காகச் சென்றிருந்த இடத்தில் அன்போடு உரையாடிய தோழர்கள், “உங்கள் விமர்சனத்தைப் படிச்சா படத்தைப் பார்க்கிற மாதிரியே இருக்கும். எங்க ஃபேமிலியே அதைப் படிச்சுடுவோம்,” என்று கூறினார்கள். என்னைப் பாராட்டும் வகையிலேயே அப்படிச் சொன்னார்கள் என்றாலும் செருக்கு சரிந்தது. விமர்சனத்தில் கிட்டத்தட்ட முழுக்கதையையும் சொல்லிவிடுகிற, இப்போதும் பல ஊடகர்கள் கூச்சமில்லாமல் செய்துகொண்டிருக்கிற, குற்றத்தைத் தொடர்வதில்லை என்று அப்போது எனக்கொரு விதி செய்தேன், இந்நாளும் அதைக் காத்து வருகிறேன்.
– அ. குமரேசன்