இலக்கியம்புத்தக அறிமுகம்

மரணிக்கும் முன்னர் எழுதப்பட்ட கடைசிக் கடிதங்கள் – மரித்தோர் பாடல்கள்

549 (8)

பொதுவாகவே நமக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் நடக்கிற மகிழ்ச்சியான கொண்டாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லமுடியாமல் போனாலும், துக்க நிகழ்வுகளுக்கு நிச்சயமாக சென்றுவிடவேண்டும் என்பது சமூகமாகவே நம் பழக்கமாக இருந்துவருகிறது. அதிலும், ஒருவருடைய கல்யாணத்திற்கு செல்லவேண்டுமென்றால், கல்யாண வீட்டில் உள்ள யாரையோ நமக்கு ஓரளவுக்காவது நன்றாகப் பழக்கமிருக்க வேண்டும். ஆனால், சாவு வீட்டிற்குப் போவதற்கோ அவ்வளவு நெருக்கமெல்லாம் நமக்குத் தேவைப்படாது. தினந்தோறும் பேசிப் பழகிவந்தவர்கள் முதல், எப்போதோ ஒருமுறை வணக்கம் சொல்லிச் சிரித்தவர்கள் வரையிலும் எவர் இறந்தாலும் நிச்சயமாக ஒரு எட்டு போய் பார்த்துவிட்டுத்தான் வருவோம். இறந்த நபர் இனியெப்போதும் திரும்ப வரப்போவதில்லை என்பதாலும், இறுதியாக மண்ணுக்குள்ளோ காற்றுடன் கரைந்தோ போவதற்கு முன்னர் ஒருமுறை அவர் முகத்தைப் பார்க்கும் நோக்கிலும் இறந்தவர் வீட்டுக்கு சென்றுவிடுவோம். 

இறந்தவரின் பிணத்தை வைத்திருக்கும் வீட்டிற்கு செல்லும்போது, அவரது தெருவில் நுழையும்போதே ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள், நம்மை அவரது இறப்பு நிகழ்வுக்குள் மெல்ல இழுக்கும். அவரைப் பற்றிய கடந்தகால நினைவுகள் ஏதும் நமக்கு இருக்கின்றனவா என்று நம்முடைய மூளை, அதன் நினைவுப் பெட்டகத்திற்குச் சென்று தேடத் துவங்கிவிடும். அப்படியே இறந்தவரின் வீட்டை அடைகிறபோது, இறந்தவருக்கான பரிதாப எண்ணம் நம் மனங்களில் பரவியிருக்கும். உடலை வைத்திருக்கும் இடத்தை நோக்கி நகரும்போது அங்கிருக்கும் கூட்டத்தினர் ஒவ்வொருவரும் அவரவர் நினைவுகளை சிறிய கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். அந்தக் கூட்டத்தையெல்லாம் கடந்து மெதுவாக நடந்து உடலை நோக்கி நடந்துகொண்டே இருக்கையில், அங்கிருக்கும் சோகமான மனநிலை நம்மையும் சேர்த்து சோகமாக்கிக் கொண்டிருக்கும். உடலை நோக்கிய நம்முடைய நடையின் வேகமும் கொஞ்சம் மெதுவாகிப் போகும். அடுத்த அடுக்கில் நின்றுகொண்டிருக்கும் மனிதர்களைக் கடக்கையில், கடந்த காலத்தில் இறந்தவர் என்னவெல்லாம் செய்தார், எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்று அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களின் அழுகை கலந்த கதைசொல்லல்கள் நம் காதுகளைத் தாண்டி நம் மனதைத் தொட்டுக் கொண்டிருக்கும். இறந்தவர் குறித்து அவர்கள் சொல்லும் தகவல்களில் தெரிந்தவை சிலவாகவும், தெரியாதவை பலவாகவும் இருக்கையில், இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறாரே என்று நம்மை எண்ண வைக்கும். அந்த அடுக்கின் மக்களையும் தாண்டி, மெதுவாக உடலுக்கு அருகே போகும்போது நம் காதுகளில் கேட்கிற அழுகுரல்கள் நம்மை உலுக்கி எடுக்க ஆரம்பிக்கும். அதிலும், உடலுக்கு மிக அருகில் அமர்ந்திருக்கும் ஒருவர் மட்டும் அழுதுகொண்டே வைக்கும் ஒப்பாரியில் இதுவரை நமக்குத் தெரிந்திருக்காத தகவலை சொல்லிக்கொண்டே அழுவார். இறப்பதற்கு முன்னர் கடைசியாக, இறந்தவர் பேசியவை, செய்தவை, செய்ய நினைத்ததாக சொன்னவை ஆகியவற்றை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே அழுவார். இறந்தவர் எப்படியாக இறந்திருந்தாலும், அதில் நமக்கு எந்தப் பங்கும் இல்லையென்றாலும், அவருடைய கடைசிக் கனவுகளும் ஆசைகளும் பேசிய வார்த்தைகளும் ஏதோவொரு வகையில் நம்மை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கும். இன்னும் அதிகமான நேரத்தை இறப்பதற்கு முன்னரே அவருடன் செலவிட்டிருக்கலாமோ, அவருக்கு ஏதோவொரு வகையில் நாம் உறுதுணையாகவோ உதவியாகவோ இருந்திருக்கலாமோ என்று நமக்குத் தோன்றிக்கொண்டே இருக்கும். ஒரு மனிதர் இல்லாமல் போய்விட்டார் என்பதைவிடவும், இவையெல்லாமும்தான் நம்மை அதிகமாக தொல்லை செய்யும். இறந்தவரின் அருகில் இருப்பவரைத் தொட்டோ அல்லது கட்டியணைத்தோ ஆறுதல் சொல்ல முற்பட்டால், அவருக்கு ஆறுதலைக் கடத்துவதை விடவும், அவரிடம் இருக்கும் சோகமும் அழுகையும் கடமையும் நம்மையும் ஆட்கொண்டுவிடும்.

யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து இறந்தவர் வீட்டைத் தாண்டி வந்துகொண்டிருக்கும்போதே, இறந்தவர் மீதும், அவர் இறுதிவரை கொண்டிருந்த கனவுகளின் மீதும், அவருடைய இறுதி ஆசைகளின் மீதும் நமக்கு நிச்சயமாக ஒரு நெருக்கம் வந்திருக்கும். எந்த வகையிலாவது நம்முடைய வசதிக்கும் எல்லைக்கும் அதிகாரத்திற்கும் இயன்ற உதவிகளை செய்வதற்கு நம்முடைய மனம் தானாகவே ஒப்புதல் வழங்கியிருக்கும்.

மரணங்களுக்கும், மரணத்திற்கு முன்னர் ஒருவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும், இறுதியாக அவர்கள் உதிர்த்துவிட்டுச் சென்ற வார்த்தைகளுக்கும், நிறைவேறாத அவர்களது ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் அப்படியொரு மாபெரும் பலம் இருக்கிறது. 

இதனை மனதில் வைத்தோ என்னவோ, கடந்த ஓராண்டாகவே இஸ்ரேல் என்கிற ஆக்கிரமிப்பு அரசினால் பாலஸ்தீன காஸாவில் நடத்தப்படும் இனப்படுகொலையில் இறந்தவர்களுடைய கடைசி ஆசையையும், கடைசி உரையாடலையும், கடைசிக் கவிதையையும், கடைசி சமூக ஊடகப் பதிவையும், நெருங்கிய உறவினர்களிடம் அவர்கள் பேசிய கடைசி வார்த்தைகளையும் தேடித்தேடித் தொகுத்து ‘மரித்தோர் பாடல்கள்’ என்கிற தலைப்பிலான இந்நூலை நமக்குக் கொடுத்திருக்கிறார் தோழர் அ.சி.விஜிதரன். 

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியன்று எல்லைதாண்டிச் சென்று இஸ்ரேலுடைய இராணுவத் தளவாடங்களைத் தாக்கி, அங்கிருந்து இஸ்ரேலிய இராணுவக் கூலிகள் உள்ளிட்ட சிலரை காஸாவில் இயங்கிவரும் ஹமாஸ் என்கிற பாலஸ்தீன அமைப்பு கடத்திச் சென்றுவிட்டதாக உலகின் குடிமக்களாகிய நமக்கு செய்தி சொல்லப்பட்டது. பாலஸ்தீனப் பிரச்சனை என்பதே வரலாற்றில் அந்த தேதியில் இருந்துதான் துவங்கியதைப் போல, இஸ்ரேலும் அதன் ஆதரவு நாடுகளும் தொடர்ச்சியாக நம்மிடம் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கின்றன. அக்டோபர் 7 ஆம் தேதியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பதிலடி கொடுப்பதாகக் கூறிக்கொண்டு, இஸ்ரேல் துவங்கிய முழுவீச்சிலான அழித்தொழிப்புப் போரில் அதிகாரப்பூர்வமாகவே சுமார் 50000த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இடிந்துகிடக்கிற ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்குள் தேடியெடுக்க முடியாமல் சிதைந்துகிடக்கிற பிணங்களை எண்ணுவதற்கு ஆட்களில்லாத சூழலில், இறந்தோர் எண்ணிக்கை அதைவிடவும் பலமடங்கு அதிகமாகத்தான் இருக்கும் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

இஸ்ரேலும் அதன் ஆதரவு நாடுகளும் சொல்லிவரும் முழுமுதற் பொய்கள் என்னவென்றால், ஒட்டுமொத்த பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு கடவுள் கொடுத்தவை என்றும், இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகத்தான் பாலஸ்தீனர்களை அடக்கி ஒடுக்குவதாகவும், பாலஸ்தீனர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்றும், அக்டோபர் 7இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலால்தான் பொறுத்தது போதுமென்று பொங்கியெழுந்ததாகவும் இஸ்ரேல் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த வாதம் அனைத்துமே பொய்யும் போலியும் புரட்டும் வதந்தியும் வன்மமும் ஆதிக்கமும் நிறைந்தவை என்பது இவற்றைப் படிக்கிற போதே நமக்குத் தெரிந்துவிடும். 

கடவுள் கொடுத்த நிலமென்று ஏதோவொரு காகிதத்தில் எழுதிக்கொண்டு, இன்றைக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் ஐரோப்பாவிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ நாம் கூட்டமாகப் போய் நின்று கேட்டால் நிலத்தை நமக்குத் தந்துவிட்டு அங்கிருந்து வெளியேறுவார்களா? 

ஜனநாயகப் பாதையில் தேர்தலில் பங்கேற்று பெரும்பான்மையான இடங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாலஸ்தீனத்தை ஆட்சியமைக்கும் தகுதிகொண்ட ஒரே கட்சியாக ஹமாஸ் 2006 இல் உருவானபோது, அந்தக் கட்சியின் எம்பிக்களை அந்த நாட்டுக்குத் தொடர்பில்லாத இஸ்ரேலிய அரசு கைதுசெய்து சிறையில் வைத்து, இன்று வரையிலும் ஹமாசை ஆட்சிப்பொறுப்பேற்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது. சொந்த நாடான இஸ்ரேலுக்குள்ளேயே பெரும்பான்மை பெறமுடியாத கட்சிளெல்லாம், ஹமாசைப் பார்த்து ஜனநாயகத்திற்கு எதிரான கட்சியென்று சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

அதேபோல, அக்டோபர் 7 ஆம் தேதியன்றுதான் பாலஸ்தீனப் பிரச்சனையே துவங்கியதுபோல இவர்கள் பரப்பும் பிரச்சாரமெல்லாம் அடிப்படை மனசாட்சிக்கே எதிரானது. 

இஸ்ரேலுக்கு ஐநா சபையினால் பாலஸ்தீனர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஓசியில் வழங்கப்பட்ட 55% நிலத்தை வைத்துக்கொண்டு அமைதியாக வாழாமல் 1948லேயே பாலஸ்தீனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்குள் புகுந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்களை ஆக்கிரமித்து தன்னுடைய எல்லைக்குள் இணைத்துக்கொண்டபோது துவங்காத பிரச்சனையா?

1948 ஆம் ஆண்டில் ஒரே நாளில் 8 இலட்சம் பாலஸ்தீனர்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து அடித்துவிரட்டி இன்று வரையிலும் சொந்த வீட்டிற்குத் திரும்பமுடியாமல் செய்தபோது துவங்காத பிரச்சனையா?

மிச்சமிருந்த நிலங்களின் பெருபகுதியையும் 1967 இல் அதிரடியாக ஆக்கிரமித்து தன்னுடைய நாட்டின் பகுதியென்று இஸ்ரேல் அறிவித்துக்கொண்டபோது துவங்காத பிரச்சனையா?

அதன்பிறகு மேற்குக்கரை முழுவதுமே பாலஸ்தீனர்கள் வாழமுடியாத அளவிற்கு வேலிகளை அமைத்து, சுவர்களை எழுப்பி, சோதனைச் சாவடிகளை உருவாக்கி, இஸ்ரேலியர்களைக் கூட்டங்கூட்டமாகக் குடியமர்த்தி அனுதினமும் பாலஸ்தீனர்களுக்கு எதிராகக் கொடூரங்களை இஸ்ரேல் நிகழ்த்திவரும்போது துவங்காத பிரச்சனையா?

பாலஸ்தீனர்களைக் காரணமின்றி கைதுசெய்து ஆண்டாண்டுகளாக விசாரணையோ நீதியோ நியாயமோ இல்லாமல் சிறையில் வைத்துக் கொன்றும், துன்புறுத்தியும், சித்தரவதை செய்தும், பாலியல் வன்கொடுமை செய்தும் கொண்டிருக்கிற போதெல்லாம் துவங்காத பிரச்சனையா?

இப்படியாக இஸ்ரேல் செய்யும் பிரச்சாரங்கள் அனைத்தையும் வரலாற்றுத் தகவல்களோடும் புள்ளிவிவரங்களோடும் மிகமுக்கியமாக உண்மைகளோடும் உடைத்தெறியலாம். அதனைப் பலரும் செய்துகொண்டே இருக்கிறார்கள். இஸ்ரேலின் முகத்திரையை அப்படியாக கிழித்தெறிய வேண்டியிருக்கிறதுதான்.

அதேவேளையில், காஸாவில் இந்த எல்லாக் கொடூரங்களுக்கு மத்தியிலும் வாழும் மக்களிடம் நெருங்கிச்சென்று, தனிமனிதர்களாகவும் சமூகமாகவும் அவர்கள் வாழும் வாழ்க்கையை நாம் வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், பாலஸ்தீனர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும், எப்போதும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு யாரையாவது கொல்லத் துடித்துக்கொண்டிருப்பவர்கள் என்றும் இஸ்ரேலும் அதன் பிரச்சார ஊடகங்களும் பரப்பும் பிரச்சாரக் கருத்துத் திணிப்புகள் மட்டுமே எப்போதும் நம்மை வந்து சேரும்.

இப்படியான ஒரு பணியைத்தான் இந்நூலில் அ.சி.விஜிதரன் செய்திருக்கிறார். காஸாவில் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், பிணமாகப் போகிறவர்கள் என்ன மனநிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதை இதுவரை நாம் அறிந்திருக்காத ஒரு முறையில் எடுத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர். இந்நூலில் வரும் ஒவ்வொரு மனிதரின் வார்த்தைகளும் ஒரு பக்கத்திற்குள்ளோ அல்லது ஓரிரு வரிகளுக்குள்ளோ முடிந்துவிடுகிறது என்றாலும், அந்த ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குள்ளும் நம்மை அழைத்துச்சென்று அவர்களது நிலைமையை மிக அருகில் காட்டுவது போல எழுதியிருக்கிறார். புனைவிலக்கியத்தால் கூட உருவாக்கிவிடமுடியாத கதைமாந்தர்கள் இந்த நூலில் வந்துபோகிறார்கள். நமக்கு மிக இயல்பாகக் கிடைக்கிற எந்தவொரு அடிப்படை வசதியும் அவர்களுக்கு வாழ்க்கையின் இலட்சியமாக இருப்பதை இந்த நூல் காட்டுகிறது.

நூல் முழுக்க இருக்கும் கட்டுரைகளும் கவிதைகளும் பதிவுகளும் இறந்தவர்களால் இறப்பதற்கு முன்னர் எழுதப்பட்டது என்றாலும், பொதுவாக மூன்று முக்கியமான செய்திகளை அவை கடத்துவதாக நான் புரிந்துகொண்டேன். ஒன்று – மரணம் தனக்கு மிக அருகே இருப்பதை அவர்கள் அனைவரும் உணர்ந்தே இருந்திருக்கிறார்கள், இரண்டு – அதற்காக அழுது புலம்பி ஒரு ஓரமாக சோர்ந்து போய் உட்கார்ந்திருக்காமல் இயங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்கள், மூன்று – வாழ்க்கை மீதும் எதிர்காலம் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இக்கட்டுரையின் துவக்கத்தில் சொன்னதைப் போல, இறந்தவர்களின் கடைசி வாக்குமூலத்தை அவருக்கு நெருக்கமானவர்களின் குரலில் சொல்லக் கேட்டாலே இறந்தவர்களின் கடைசி ஆசைகளுக்காகவும் கனவுகளுக்காகவும் நம்மால் முடிந்த எதையாவது செய்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டும்போது, இறந்தவரே அவரது வார்த்தைகளில் சொல்வதைக் கேட்கமுடிந்தால், அது மிகப்பெரிய மாற்றத்தை நம் மனங்களில் நிச்சயமாக ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன். 

தமிழைத்தாண்டி பல மொழிகளுக்கும் செல்லவேண்டிய நூல் இது. இப்படியொரு நூலை எழுதிய தோழர் அ.சி.விஜிதரனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

உலகின் ஒரு பகுதியில் நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு எதிராக, உலகின் குடிமக்களாகிய நீங்களெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று இந்நூலில் வரும் கதைமாந்தர்கள் அனைவரும் உயிருள்ள பிணங்களாக நம்மிடம் வந்து நேருக்கு நேராகக் கேட்பதைப் போன்று இருக்கிறது இந்நூலைப் படித்து முடிக்கையில்.

இந்நூலை அவசியம் வாசியுங்கள், நீங்கள் அறிந்த அனைவரையும் வாசிக்கச் சொல்லுங்கள். 

– இ.பா.சிந்தன்