தொடர்கள்வரலாறு

மாசாய் பழங்குடி (பழங்குடிகள் தொடர் – 1) – தீபா ஜெயபாலன்

Featuredimage (2)

வரலாறு எங்கு இருக்கிறது நேற்றைய செய்தியிலா? இன்றைய நிகழ்விலா? காலம் காலமாக வேரோடு ஓடும் நீரை போல வாழும் வாழ்வியலின் வழி தோன்றலாகவும், வலியை தோளில் சுகமாய் சுமந்து கொண்டு உலகத்தில் உலா வந்து கொண்டு உள்ளது. பூலோகத்தின் பல பகுதிகளில் பல இன குழுக்கள் வாழ்ந்து கொண்டு உள்ளது என்றாலும், எந்த இனத்தின் கைகள் இரும்பு கரமும் உறுதியான மன பிடிப்பும் தன்னகத்தே வைத்து உள்ளதோ, அது அதிகாரத்தைத் தனதாக்கி கொள்ளும் என்பதில் ஐயம் இல்லை.. வளம் செழித்து தவழும் ஆப்பிரிக்கப் பூர்வ குடிகளின் வாழ்வும் வரலாறும் தங்க கொடி போல் கருப்பு தேகங்களின் மீது படிந்து உள்ளது…அத்தகையை இன குழுக்களில் ஒன்றுதான் “மாசாய் பழங்குடி”

மாசாய் பழங்குடி ஓர் அறிமுகம்

மாசாய் பழங்குடியினர் வடமேற்கு கென்யா மற்றும் துர்கானா ஏரியின் வடக்கே கீழ் நைல் பள்ளத்தாக்கில் தோன்றியவர்கள்.. அவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் தெற்கே இடம் பெயர தொடங்கிய பிறகு அவர்களின் எல்லைகள் விரிவடைய தொடங்கின. பிரிட்டிஷ் வருகையின் போது, மாசாய் பிரதேசம் வடக்கு கென்யாவிலிருந்து மத்திய தான்சானியா வரை 700 மைல்கள் வடக்கு தெற்காகவும், 400 மைல்கள் கிழக்கு மேற்காகவும் விரிந்து கிடந்தது. இதன் முழுப் பகுதியும் சுமார் 200,000 சதுர மைல் (520,000 சதுர கிமீ) பரப்பளவைக் கொண்டிருந்தது, இது ஃபிரான்ஸ் நாட்டின் பரப்பளவை விட பெரியது. 1880களின் முற்பகுதி வரை, மாசாய்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான தேசமாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டுகளில் மத்திய தான்சானியா மற்றும் கென்யாவின் வடக்கு முழுவதும் பரவி தங்களுக்கான நீண்ட நிலப்பரப்பை அடைந்ததோடு மட்டுமல்லாமல், கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கின் பெரும்பகுதியையும், டோடோமா மற்றும் மவுண்ட் மார்சபிட் பகுதிகளையும் 19 நூற்றாண்டில் மாசாய் பிரதேசம் என்னும் அளவிற்கு அதன் ஆதிகத்தை எட்டி மகுடத்தை சூட்டியது..

மக்கள் தொகை மற்றும் சமூக கட்டமைப்பு

மாசாய் மக்கள் உறுதியான ஆணாதிக்க இயல்பைக் கொண்டவர்கள். மூத்த மாசாய் ஆண்கள் சில சமயங்களில் ஓய்வு பெற்ற பெரியவர்களுடன் சேர்ந்து, மாசாய் பழங்குடியினருக்கான பெரும்பாலான முக்கிய விஷயங்களைத் தீர்மானிக்கிறார்கள்.. மாசாய்கள் சராசரியாக 6 அடி 3 அங்குலம் (190.5 செ.மீ) உயரம் கொண்டவர்கள். துட்சி மக்களுடன் சேர்ந்து, மாசாய்களும் உலகின் மிக உயரமான இனக்குழுக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். ஆண்களின் சராசரி உயரம் 190 செ.மீ என்றாலும், பெண்கள் 175 செ.மீ வரை உயரமாக இருக்கின்றனர் (உலக சுகாதார அமைப்பு தரவு, 2023). மாசாய்களின் உயரமும் உடலின் வளர்ச்சியும் பெரும்பாலும் அவர்களின் உணவின் அடிப்படையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி மாசாய் மக்கள் தொகை சுமார் 900,000 என மதிப்பிடப்பட்டுள்ளது (கென்யா தேசிய புள்ளியியல் துறை). இதில் கென்யா மற்றும் தான்சானியா ஆகிய இரு நாடுகளிலும் வசிப்பவர்களும் அடங்குவர். 2019 ஆம் ஆண்டில் கென்யாவில் மொத்தம் 1,189,522 மாசாய்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி தான்சானியாவில் 900,000 பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது (ஐ.நா. பழங்குடி மக்கள் தொகை அறிக்கை). மக்கள் தொகை கணக்கெடுப்பில் குறிப்பிட்ட இனக்குழு தரவு இல்லாததால் துல்லியமான புள்ளிவிவரங்களைப் பெறுவது கடினம். ஏன் என்றால் இந்த சமூகம் ஒரு பாரம்பரிய அரை நாடோடி வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டு இருப்பதால்தான்..

மாசாய் மக்களின் வாழ்வாதாரம்

மாசாய்களின் சொத்துக்களில் 90 சதவீதம் கால்நடைகளும், பாதி காட்டு இனங்களும்தான் இருக்கிறது. ஒரு சராசரி மாசாய் குடும்பம் 50-100 கால்நடைகளை வைத்திருக்கும், இது அவர்களின் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கிறது (FAO, 2022). பால் சார்ந்த உணவுகளை சார்ந்து வாழும் இவர்கள் மிதமாக இருக்கும் வறட்சியற்ற இடங்களை பெரிதும் விரும்புகிறார்கள். அதற்கு காரணமில்லாமல் இல்லை. மழை பொழிவு அதிகம் உள்ள இடங்களால் பெரியம்மை, நிமோனியா மற்றும் ரிண்டர்பெஸ்ட் போன்ற தொற்றுநோய்களுக்கு 19 ஆம் நூற்றாண்டில் அவர்கள் வசம் இருந்த பெரும்பாலான கால்நடைகள் பலியாகியது தான்…

மாசாய் இனத்தில் ஏராளமான கால்நடைகளும் அதிக குழந்தைகளையும் வைத்து இருந்தால் தான் செல்வந்தர் என போற்றப்படுவார். ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 5-8 குழந்தைகள் உள்ளனர் (யுனைடெட் நேசன்ஸ் ஜனநாயக நிதி, 2021). அதிக கால்நடைகள் இருந்தாலும் அதிக குழந்தைகள் இல்லாத ஒரு மனிதன் ஏழையாகக் கருதப்படுகிறான். இதற்கு காரணம் பூமியில் உள்ள அனைத்து கால்நடைகளையும் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார் என்று ஒரு மாசாய் புராணம் கூறுவதை நம்புவதுதான்.

வாழிடமும் பொழுது போக்கும்

மாசாய்கள் தங்கள் வாழ்விடங்களை உருவாக்க பாரம்பரியமாக எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் மற்றும் பூர்வீக தொழில்நுட்பத்தை நம்பியுள்ளனர். பாரம்பரியமான மாசாய் வீடு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வடிவமைக்கபடுகிறது, இதனால் அவர்களின் வீடுகள் மிகவும் நிலையற்ற தன்மை கொண்டவை. வட்ட வடிவிலோ அல்லது ரொட்டி வடிவிலோ இருக்கும் வீடுகள்., பெண்களால் கட்டமைக்கபட.., மொத்த கிராமமும் ஆண்களால் கட்டப்பட்ட ஒரு வட்ட வடிவ வேலி மூலம் சூழப்பட்டிருக்கும். இந்த வேலிகள் பொதுவாக 2-3 மீட்டர் உயரமும், 100-200 மீட்டர் விட்டமும் கொண்டவை (ஆப்பிரிக்கானான்ரோபாலஜி ஜர்னல், 2020). இது இரவில் அவர்களின் கால்நடைகளை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது..

காவல் காக்கும் வீரர்கள் இரவில் தூங்காமல் இருக்க நடனம் ஆடுவார்கள். அதற்கு “அடுமு” என்று பெயர். இதற்கு நடனத்தின் தொடக்கத்தைக் குறிக்க அவ்வப்போது பயன்படுத்தப்படும் மாசாய் வாழ்த்து “ஐகஸ்” இல் இருந்து வந்தது என்று பொருள். மாசாய் இசையில் பாடகர்கள் ஒரு குழுவாக இணைந்து இசை இசைக்கும் தாளங்கள் வாசிக்க, அதே நேரத்தில் ஒலரண்யானி (பாடல் தலைவர்) மெல்லிசையைப் பாடுவார். பொதுவாக ஒலரண்யானி அந்தப் பாடலை சிறப்பாகப் பாடக்கூடியவர் என்பது அர்த்தம்.. ஒலரண்யானி ஒரு பாடலின் நம்பாவைப் பாடத் தொடங்கும் போது, குழு ஒருமனதாக ஒருமித்த குரலில் பாடி., இருக்கும் இடத்தில் இருந்து உயரமாக குதித்து, தங்கள் வலிமையையும் சுறுசுறுப்பையும் வெளிப்படுத்துவார்கள்..

இறையாண்மையும் கலாச்சாரமும்

மாசாய் பழங்குடியினரின் சடங்குகளும் அவர்களின் கலாச்சார மரபுகளும் இறை நம்பிக்கைகளுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது, பெரும்பாலும் வாழ்க்கையில் மாற்றங்களைக் குறிக்கும் நிகழ்வுகளையும், முன்னோர்களின் ஆவிகளை வணங்கும் முறைகளையும் கடைபிடிக்கிறார்கள்.. அவற்றில் சில சடங்குகள்:

  • என்காங் சடங்கு: இந்த விழா இளம் மாசாய் ஆண்களுக்கு குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்வயதுக்கு மாறுவதைக் குறிக்கிறது. இது ஒவ்வொரு 10-15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், மற்றும் 3000-5000 பேர் ஒரே நேரத்தில் பங்கேற்கின்றனர் (ஆப்பிரிக்கா கலாச்சார ஆய்வுகள், 2019).
  • எமுவாடரே சடங்கு: இந்த சடங்கு பெண் பிறப்புறுப்பு சிதைவை உள்ளடக்கியது, இது வயதுவந்தோருக்கான மாற்றமாகவும் திருமணத்திற்கான தயாரிப்பாகவும் பார்க்கப்படுகிறது. கென்யாவில் 21% மாசாய் பெண்கள் இந்த சடங்குக்கு உட்படுகின்றனர் (யுனிஸெஃப், 2023).
  • தீ சடங்கு: இந்த விழாவின் போது சிறுவர்கள் சூடான நிலக்கரியில் நடப்பதன் மூலம் மன உறுதிக்காக சோதிக்கப்படுகிறார்கள்.
  • யூனோடோ சடங்கு: இந்த விழா பருவமடைந்த கொண்டாட்டமாகும், இது பெரும்பாலும் பத்து நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும்..

பொருளாதாரமும் கல்வியும்

மாசாய் மக்கள் சிறிய அளவிலான விவசாயம், கூலி வேலை, மணி வேலை மற்றும் சுற்றுலா தொடர்பான தொழில்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பெண்கள், கைவினை நகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொருளாதார சுதந்திரத்தைப் பெறுகின்றனர். இருப்பினும், பல மாசாய் பிராந்தியங்களில் வறுமை ஒரு சவலாக உள்ளது, குறிப்பாக கென்யாவின் மாசாய் பிராந்தியங்களில் 60% மக்கள் தினசரி $1.90க்குக் கீழ் வாழ்கின்றனர் (உலக வங்கி, 2023). நகரமயமாக்கல், முறையான கல்வி மற்றும் தொழில்நுட்பத்தின் பரவல் இளைய தலைமுறையினரைப் பெரிதும் பாதித்துள்ளன. பலர் இன்னும் பாரம்பரிய ஷுகாக்கள் (அங்கிகள்) அணிந்து மன்யாட்டாக்களில் (பாரம்பரிய குடிசைகள்) வசிக்கும் அதே வேளையில், மேற்கத்திய உடைகள், மொபைல் போன்கள் மற்றும் நகர்ப்புற வாழ்க்கையை நோக்கி இழுத்து செல்லப்படுகின்றனர்.

பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் இடையேயான மோதல்

பாரம்பரியமாக கால்நடைகளை நம்பியிருக்கும் மாசாய் இன மக்கள், காலநிலை மாற்றம் மற்றும் நில பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர். கென்யாவின் அம்போசெலி மற்றும் மாசாய் மாரா பகுதிகளில் 70% நீர் ஆதாரங்கள் வறண்டுவிட்டன (UNEP, 2020). தனது வாழிடம் பறி போகும் நிலையில் அதனை மீட்டு எடுக்க கையில் எடுக்கப்பட வேண்டிய ஆயுதம் வில்லோ? அம்போ! இல்லை. அது கல்வி என்று புரிந்து கொள்ள தொடங்கி உள்ள மக்கள் இன்று தங்கள் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். இளமைப் பருவ திருமணம் மற்றும் பாலினப் பாத்திரங்கள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கென்யாவில் மாசாய் பிராந்தியங்களில் பெண்களின் கல்வியறிவு 45% (ஆண்கள் 65%), தான்சானியாவில் 35% (ஆண்கள் 55%) (யுனிஸெஃப், 2023).

பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கற்பித்தல், சுகாதாரம், வணிகம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் தொழில்களைத் தொடர மாசாய் இளைஞர்கள் ஒரு பாதையாக கல்வி மாறி வருகிறது. மேலும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் மீள்தன்மை, வேகமாக மாறிவரும் உலகில் பல பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் அரசாங்க மோதல்கள்

இன்றும், மாசாய் பழங்குடித் தலைவர்கள் தங்கள் மரபுகளையும் வாழ்க்கை முறையையும் பாதுகாப்பதற்கான வழியைக் கண்டறிய பல முயற்சிகள் எடுத்தாலும் போதுமான அளவுக்கு முன்னேற்றம் இல்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. மாசாய்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே, மேலே குறிப்பிட்டவாறு நிலத்திற்காக மோதல்கள் நீடித்து வருகின்றன. மாசாய்க்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள பூசல்கள் ஒரு காலத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட இயற்கை எல்லைகள், ஆறுகள், மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகள் கொண்ட ஒரு தனித்துவமான பிரதேசத்தைக் கொண்டிருந்தவர்கள். இறையாண்மை கொண்ட தேசமாக, பழங்காலத்திலிருந்தே தங்கள் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பின்பற்றி வந்தனர்.

ஆனால் 1913 ஆம் ஆண்டில், காலனித்துவ அரசாங்கம் மாசாய் ஒரு பழங்குடியினர் என்றும், அவர்களை ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக மதிக்கக்கூடாது என்றும் அறிவித்ததன் மூலம் மாசாய்களின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால், 1904 மற்றும் 1911 ஆம் ஆண்டுகளின் மாசாய் இனத்தோடு செய்த நிலம் சம்பந்தமான ஒப்பந்தங்கள் இனி அரசாங்கத்தால் மதிக்கப்படாது என்றது. இந்த அறிவிப்பு மாசாய் மக்களின் சமூக மற்றும் அரசியல் நிலப்பரப்புகளை ஒடுக்கியது.

கென்யா மற்றும் தான்சானியாவின் காலனித்துவ மற்றும் சுதந்திர அரசாங்கங்களுடனான அனைத்து அடுத்தடுத்த நடவடிக்கைகளிலும் அவர்கள் இறையாண்மையையும் சுயாட்சியையும் இழந்தனர். கென்யா மற்றும் தான்சானிய அரசாங்கங்கள் சுதந்திரம் அடைந்த பிறகு நவீன வாழ்க்கை முறையை மசாயிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியது. 

நில அபகரிப்பு மற்றும் அதன் விளைவுகள்

அரசாங்கத்தில் மாசாய்களைச் சேர்ப்பது நில உரிமைகளைப் புதுப்பிப்பதில் இருந்து அவர்களைத் திசைதிருப்ப வேண்டுமென்றே ஒரு சூழ்ச்சியாக செயல்பட்டது. 1904 மற்றும் 1911 ஒப்பந்தங்களைக் குறிப்பிடாமல் நிலப் பேச்சுவார்த்தைகளும் அதைத் தொடர்ந்து மறுபகிர்வையும் முடித்தது. முதலில் மாசாய் பழங்குடியினருக்குச் சொந்தமான நிலம் சுதந்திரத்தின் போது அவர்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும் என்று விதித்தன. ஆனால் அபகரிக்கப்பட்ட ஆறு மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எந்தப் பகுதியும் மாசாய் மக்களுக்குத் திருப்பித் தரப்படவில்லை (IWGIA, 2021). இது எத்தகைய நிலச்சுரண்டல் என்பதை உணர்ந்தும் உணராத அரசாங்கம் பிற்காலத்தில் மீண்டும் மாசாய்களின் வாழ்விடங்களை குறி வைத்தது. தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களை உருவாக்க அதிக நிலம் வேண்டும் என்று இந்த மக்களை வெளியேற்றினர். மாசாய் மாரா, சம்பூர், நொகோரோங்கோரோ, அம்போசெலி, நைரோபி தேசிய பூங்கா, செரெங்கெட்டி, நகுரு ஏரி, மன்யாரா மற்றும் தரங்கிரி தான்சானியா போன்ற இடங்கள் வனவிலங்கு பூங்காக்களாக மாற்றப்பட்டன.

நில அபகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் “மாசாய் உரிமைச் சட்டம்” என்ற சட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள மாசாய் மக்கள் தங்கள் உரிமைகள் தொடர்பான தொடர்ச்சியான போராட்டங்களை எதிர்கொண்டுள்ளனர், குறிப்பாக நில உரிமை, கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் அரசியல் பங்கேற்பு தொடர்பான போராட்டங்கள். இந்தப் பிரச்சினைகள் பெரும்பாலும் மாசாய்களுக்காக பிரத்யேகமாக இருக்கும் சட்டத்தை விட, கூடுதலான சட்டங்கள் மற்றும் சர்வதேச அறிவிப்புகள் மூலம் தீர்க்கப்படுகின்றன.

சுற்றுலா, விவசாயம் மற்றும் பிற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நிலம் அபகரிக்கப்படுவதால் மாசாய்கள் தொடர்ந்து தங்கள் சொத்துக்களை இழந்து, வெளியேற்றப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, 2024 ஆம் ஆண்டில், நொகோரோங்கோரோவில் உள்ள வார்டுகள், கிராமங்கள் மற்றும் துணை கிராமங்களை பட்டியலிடாமல் நீக்குவதற்கான தான்சானிய அரசாங்கத்தின் முடிவு, 100,000 க்கும் மேற்பட்ட மாசாய்களுக்கு வாக்காளர் பதிவில் பங்கேற்கும் உரிமை மறுக்கப்படுவதற்கு வழிவகுத்தது (ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், 2024).

இந்த வகையில் வெளியேற்றங்களை அரசாங்கம் செய்தால் அந்த இனத்திற்கு எப்படி நம்பிக்கை வரும்? இது பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் பூர்வீக உரிமைகளுக்கு இடையிலான பதட்டத்தை அல்லவா ஏற்படுத்தும்.

சர்வதேச முயற்சிகள்

சர்வதேசத்தின் பார்வை ஐ.நா. பிரகடனம், மாசாய் உட்பட பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. ஐ.நா. பழங்குடி உரிமைகள் பிரகடனம் (UNDRIP, 2007) இன் கீழ் அர்த்திகல் 26, பழங்குடியினர் தங்கள் நில உரிமைகளைக் கோரலாம் என்று வலியுறுத்துகிறது. பழங்குடி விவகாரங்களுக்கான சர்வதேச பணிக்குழு (IWGIA) மற்றும் சிறுபான்மை உரிமைகள் குழு போன்ற அமைப்புகள் மாசாய்களின் உரிமைகளுக்காக வாதிட்டு மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி வருகின்றன. எட்வர்ட் லூரைப் போன்ற சில மாசாய் தலைவர்கள், சமூக நில உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

மாசாய் மக்களுக்கான தீர்வு அதிகாரம் கையில் இருப்பவர்கள் தங்கள் நலனைக் கருத்தில் கொண்டு மற்றவர்களின் வாழ்வியலை சுரண்டுவதுதான் வளர்ச்சி என்றால் முன்னேற்றம் பிறக்காது. புரட்சிகள்தான் வெடிக்கும். தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க போகிறோமோ? வாழையடி வாழையாய் வரும் கலாச்சாரத்தை மறைய விடாமல் பின்பற்ற முடியாதோ! கடவுளாக மாறிய முன்னோர்களை மறந்து விடாவோமோ? நம் கால்நடைகளை பாதுகாப்பாக வளர்க்க சொந்த நிலத்தில் அகதியாய் கை நீட்டும் அவலம் மாறுமோ! நாங்களும் ஒரு மக்கள் தானே என்று சொல்லும் அளவிற்கு சுரண்டப்பட்ட மாசாய்களின் துக்கவலிகளை இனி வரும் காலங்களில் கென்யா மற்றும் தான்சானியா அரசாங்கம் அறிந்து கொள்ள வேண்டியது அடிப்படையான ஒன்றாக மாறும் போதுதான் இது மாறும் என்பது திண்ணம்.

தொடரு.ம்…

– தீபா ஜெயபாலன்

Leave a Reply