இலக்கியம்

தேநீர்க்கடை (சிறுகதை) – முத்துராணி

549 20250421 232417 0000

ஒரு மாலைப் பொழுதொன்றில், தெருவிளக்கின் வெளிச்சமும் இருளும் கலந்திருந்தது.

ஒரு சிலர் அமர்ந்தது தேநீர் அருந்திவிட்டு கிளம்பி விடுவார்கள். சிலர் நீண்ட நேரம் இருப்பார்கள். நண்பர்களுடன் உரையாடுவார்கள். இது வழக்கமாக என் கடையிலும், என் நண்பர்களின் கடைகளிலும் நடப்பதுதான்.

கடையில் ஒரிரு நாற்காலிகளை எடுத்து, தேநீர் விரும்பிகள் தங்களுக்குப் பிடித்த இடங்களில் எடுத்துப் போட்டு உட்கார்ந்தார்கள். எப்போதும் போல, மின் விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தேன் நான். என் ஊழியர்கள் அன்போடும் நட்போடும் ஆர்டர் எடுத்துக்கொண்டும், பில் போட்டும், பணத்தை சரியாக வாங்கிக்கொண்டும் இருந்தனர்.

அந்த நேரத்தில், யாரோ ஒரு புதிய முகம் என் கடைக்கு வந்தது. என்னுடைய வரலாற்றில் எத்தனையோ முகங்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் தான் இருக்கும். இருப்பினும், ஒரு சில முகங்களை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது. அப்படி ஒரு முகமாக, சமீபத்தில் எனக்கு அமைந்த முகம் தான் அது.

அந்த முகம் அத்தனை சிறப்பு மிக்கதாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது.

அவள் வந்தாள். மிக இயல்பாக இருந்தாள். ஓரிரு வினாடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எங்களிடம் வந்து டீ வேண்டுமென்று கேட்டாள்.

டீ குடித்துவிட்டு, மீண்டும் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள். ‘சரி, தேநீர் குடித்துவிட்டுக் கிளம்பிவிடுவாள்’ என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில், அவளுக்கு எதிரே இன்னொரு புதிய முகம் வந்து அமர்ந்தது. அவளே வந்து தேநீர் சொல்லி, அந்த புதிய முகத்தின் கைகளில் கொடுத்தாள். எனக்கு ஒன்று புரியவில்லை. இவர்கள் இருவரும் சொல்லிவைத்துத்தான் இங்கு வந்திருக்கிறார்களா? அல்லது இயல்பாகலோ தற்செயலாகவோ வந்தார்களா? என்று எனக்குக் குழப்பமாக இருந்தது. ஏனெனில், இவள் முகத்தில் ‘யாரோ ஒருவர் வரப்போகிறார்’ என்கிற எதிர்பார்ப்பு கலந்த காத்திருப்போ, அல்லது வந்தவர் முகத்தில் தாமதமாக வந்ததை சமாளிப்பதற்காக எந்தவொரு அசட்டுச் சிரிப்புமோ இல்லவே இல்லை. இருவரும் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களின் அந்த உரையாடல் ஏனோ என் கவனத்தை ஈர்த்தது. இதுவரை யாரிடமும் காணாத ஒரு உரையாடலாக எனக்கு அது தோன்றியது. அந்த உரையாடலின் போது, மிகப்பெரிய வாக்குவாதங்களோ, பொய்ச் சிரிப்போ, பொய்க் கோபமோ, அந்தப் பொய்க் கோபத்தைச் சமாதானப்படுத்துவது போன்ற ஒரு மாயத் தோற்றமோ எதுவும் இல்லை. அதனால், அதை நான் இரசித்துக்கொண்டே இருந்தேன்.

சில நிமிடங்களில், இருவரும் ஒரே நேரத்தில் எழுந்தார்கள். வேறு வேறு திசைகளில் செல்கிறார்களா? ஒன்றாகச் செல்கிறார்களா? என்று பார்க்க ஆவலாக இருந்தேன். அதற்குள், தேநீர் குடிப்பதற்காக என் வாசலருகே ஐந்து அல்லது ஆறு பேர் ஒரே நேரத்தில் கூட்டமாக வந்தார்கள். இவர்கள் அந்த இருவரையும் மறைத்துவிட்டனர். அந்த இருவரும் எந்தத் திசையில் மறைந்தார்கள் என்பதும் தெரியாமலே போய்விட்டது.

அடுத்தடுத்து நண்பர்கள் வந்துகொண்டிருந்தனர்.

இந்த இடத்திற்கு தேநீர்க் கடையாகிய நான் இப்போதுதான் மாறி வந்திருக்கிறேன். இதற்கு முன், இங்கே வேறு ஒரு கட்டிடம் இருந்தது. என்னை இங்கே கட்டுவதை வெளியூரில் இருந்து ஒருவர் வந்து மேற்பார்வையிட்டார். அவர்தான் எனக்கு எந்த நிறத்தில் பெயின்ட் அடிக்க வேண்டும் என்பதைக்கூட ஆலோசனை கூறியவர். என்னைக் கட்டி முடித்து, எனக்குத் திறப்பு விழா நடக்கும் வரை அவர் இங்கேயே இருந்தார்.

இப்படித்தான் நான் இங்கே கட்டப்பட்டேன். நாட்கள் கழிந்தன. மீண்டும் அந்த முகம் இன்று வந்தது. முன்பு வந்தபோது அமர்ந்த அதே இருக்கை அவளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது போல, அவள் வந்து அமர்ந்தாள். அதேபோல், சில நிமிடங்கள் கைப்பேசியைப் பார்த்தாள். மிக இயல்பாக வலது பக்கம் திரும்பி வாகனங்களைப் பார்த்தாள். தேநீர் வேண்டும் என்று கேட்டாள். அவளுக்குக் கொடுக்கப்பட்ட தேநீரைக் குடிக்கத் தொடங்கும் முன்னர், தன்னுடைய கைப்பேசியைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டாள்.

தேநீரைச் சுவைத்துக்கொண்டே, மனதில் எதையோ அசைப்போட்டுக்கொண்டே அமர்ந்திருந்தாள். சில நிமிடங்களில், அதே நபர் வந்தார். அவள் முகம் இயல்பாக இருந்தது. அந்த இயல்புதான், இவர்கள் யாரென்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது. ஒரே கம்பெனியில் பணிபுரிகிறார்களா? பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்களா? இல்லை, ஏதேனும் பொருள் வாங்குவதற்காக இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார்களா? இல்லை, இவர்கள் இருவரும் சேர்ந்து வேறு யாரையும் இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்கும் புள்ளியாக இந்த இடத்திற்கு வருகிறார்களா என்று என் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

இன்றும் அவர் தாமதமாகத்தான் வந்தார். அவள் கோபப்படவும் இல்லை; அவனும் அசட்டையாகச் சிரிக்கவும் இல்லை. அவனுடைய முகம் மிக இயல்பாக இருந்தது. அவனே இன்று வந்து டீ சொன்னான்.‌ காசைக் கொடுத்தான். அவள் மீண்டும் கொஞ்சம் சூடான ஒரு தேநீர் வேண்டும் என்றும், முதலில் கொடுத்த தேநீரில் சூடு இல்லை என்றும், “மிகச் சூடாகத் தாருங்களேன்” என்றும் கேட்டு அமர்ந்தாள்.

அவர்கள் உரையாடல் தொடங்கியது. பொதுவாக, சிலர் உரையாடலுக்கு இடையே தன்னைச் சுற்றி இருப்பவர்களைக் கொஞ்சம் பார்ப்பார்கள். நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? மற்றவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்? நம்மை யாரும் கவனிக்கிறார்களா? என்றெல்லாம் பார்ப்பார்கள். இவர்கள் இருவருமோ அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. இயல்பாகவே பேசினார்கள். சில நேரம், அவனுடைய முகத்திலோ அல்லது அவளுடைய முகத்திலோ சின்னச் சின்ன மாறுதல்கள் ஏற்படும். அவற்றில் அக்கறை கலந்து இருக்கும். அடுத்த சில வினாடிகளுக்குள், அவர்களாகவே அவர்களது இயல்புக்கு வந்துவிடுவார்கள். விடைபெறும் போதும் கூட, அவர்கள் முகத்தில் சோகமோ பரிதவிப்போ இருந்ததே இல்லை. வந்து அமர்ந்தபோது இருந்த அதே இயல்பு, கிளம்பும் போதும் இருக்கும்.

அதனால், இவர்கள் யாரென்று என்னால் யூகிக்க முடியவில்லை என்றாலும்கூட, அவர்கள் என் மனம் கவர்ந்தவர்கள். அவர்களைப் பார்ப்பதில் எனக்கு மட்டுமல்ல, நான் சுமந்து நிற்கும் நாற்காலிக்கும் கூட ஆவலையும் வியப்பையும் சிறு புன்முறுவலையும் தரும்.

அவர்கள் இருவருக்கும் இடையில் மலர்க்கொத்து எதுவும் இல்லை. ஆனால், இருவருக்கும் இடையில் நடக்கும் மலரின் நறுமணத்தோடு கூடிய அந்த உரையாடல், சாலை ஓரக் காற்றோடு கலந்து, தழுவிக்கொண்டிருக்கும்.

முதல் முறையாக, இவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே வானத்தைப் பார்த்தேன். அத்தனை நட்சத்திரங்களும் மின்னிக்கொண்டிருந்தன. அவர்கள் வந்து பல தினங்கள் ஆகிவிட்டன. அதனால், அநேகமாக இன்று வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டே, அடுத்தடுத்து வரும் நண்பர்களையும் அவர்கள் தேநீர் அருந்துவதையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

– முத்துராணி

Leave a Reply