ஆயிரம் படங்களுக்கு மேல் பல்லாயிரம் திரைப்பாடல்கள் வழியாக இளையராஜா நம் சமூகத்தில் நிறைந்திருக்கிறார். அவரின் இசை இல்லாமல் நம் பலரின் இரவுகள் கழிவதே இல்லை. காதல், சோகம், தாலாட்டு, கொண்டாட்டம் என்று எந்த மனநிலைக்கும் இசையால் வருடிக்கொடுக்கும் விரல்களோடு இளையராஜா இப்போதும் நம்மோடு வாழ்கிறார். இளையராஜாவை மேஸ்ட்ரோ என்றும், சிம்பொனியை இசைத்தவர் என்றும் 90கள் தொடங்கி நாம் கொண்டாடி வருகிறோம். மேஸ்ட்ரோ என்றால் மேதை அல்லது இசை நடத்துனரை குறிக்கும். சிம்பொனி என்றால் என்ன? அவர் இதுவரை இசைத்த பலநூறு திரை இசைப்பாடல்களைப் போன்றது தானே இதுவும். இதில் என்ன புதிதாக இருக்கிறது. ஒருவேளை வெள்ளைக்கார ஆர்க்கஸ்ட்ராவை வைத்து வாசிப்பது தான் சிம்பொனியோ? அல்லது வெளிநாட்டில் சென்று பதிவு செய்வதோ? நம்முடைய கர்நாடக இசையையும், நாட்டுப்புற இசையையும் மேலைநாட்டு ஆர்கஸ்ட்ராவில் வாசிப்பது தான் புதிய சிம்பொனியோ? நமக்கு பல ஆண்டுகளாக தெரியும் இளையராஜாவை இப்போது தான் இவர்களுக்கு தெரிகிறது போல? என்று பல யூகங்களோடு நம்மில் பலரும் சிம்பொனி குறித்து உரையாடியிருப்போம். இப்படி பல குழப்பத்தில் இருக்கும் நமக்கு குறைந்த சொற்களால் புரியவைக்கும் முயற்சி தான் இந்தக்கட்டுரை.
இயக்குனரும் நடிகருமான நாசர் அவர்கள் தன் திரைப்படத்திற்கு இளையராஜா அவர்களிடம் பாடல் வாங்கிய கதையை ஒருமுறை சொன்னார். “அதிகாலையே இளையராஜா அவர்களின் அலுவலகத்திற்கு சென்றுவிட்டோம். அவரிடம் கதையை சொன்னோம். காட்சிகளை கேட்டுவிட்டு எங்களிடம் பேசாமல் ஏதோ எழுத ஆரம்பித்துவிட்டார். நீண்ட நேரம் எழுதிக்கொண்டே இருந்தார். அந்த அறையில் யாரும் எந்த சத்தமும் எழுப்பாமல் மௌனமாக அமர்ந்திருந்தோம். நிமிடங்கள், சில மணி நேரங்கள் ஆகின. எல்லோரும் பொறுமை இழந்து ஏதும் கேட்க முடியாமல் இருந்த போது, எங்களை நிமிர்ந்து பார்த்த அவர் “போகலாமா” என்று கேட்டார். நாங்கள், “அய்யா படத்திற்கு பாட்டு” என்று கேட்டோம். ”அதைத்தான் இப்போ எழுதி முடித்தேன்” என்று சொன்னார். நாங்கள் எந்தப் பாடலின் ஒலியையும் அதுவரை அந்த அறையில் கேட்கவில்லை. நேராக பாடல் பதிவு செய்யும் கூடத்திற்கு அழைத்துச் சென்றார். பாடல் பதிவு தொடங்கியது. அந்தப் பாடல் தான் நம் எந்நாளும் விருப்பத்திற்குரிய ”தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ” என்பதாகும்.
இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் முதலாவதாக ஒரு பாடலுக்குரிய ”தத்தகரத்தை” சொல்லியே நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நாசர் சொல்லும் போது ”இளையராஜா இசையை எழுதிக் கொண்டிருந்தார்” என்று சொன்னார். இசையை கேட்கத்தானே முடியும். ஒலி உச்சரிப்பு ஒலிக்கப்படாமலேயே எழுத முடியுமா? என்றால், எழுத முடியும். அப்படி எந்த ஒலியையும் கேட்காமலேயே இசையை எழுதத்திறன் கொண்ட ஒருவரால் தான் சிம்பொனி போன்ற கடினமான இசையை அமைக்க முடியும். அதற்கு சிறந்த உதாரணம் லுட்விக் வான் பீத்தோவன். சிம்பொனி இசை மேதைகளில் ஒருவரான பீத்தோவன் தன் 20வயது முதல் காது கேட்கும் திறனை இழக்கத்தொடங்கி, 45ஆவது வயதில் முற்றிலும் காது கேளாதவராக மாறினார். இசைக்கு ஒலியை கேட்கும் திறன் அவசியம் என்று நமக்குத் தெரியும். ஆனால் கேட்கும் திறனே இல்லாத சூழலில் தான் பீத்தோவன் தனது சிறந்த இசைக் குறிப்புகளை இவ்வுலகிற்கு படைத்தார் என்பது தெரியுமா? அப்படி எந்த இசையையும் கேட்காமல் போனால் தான் சிம்பொனி அமைக்க முடியுமா என்று கேட்டுவிடக்கூடாது.
இசை என்றால் ஒரு கலை, அதை இசைக்கலாம் கேட்கலாம் என்று புரிந்துவைத்திருக்கும் நமக்கு அதுவும் ஒரு கணிதம் என்பது தெரியாது. அது தெரிந்ததால் தான் இளையராஜாவால் சிம்பொனியை இசைக்க முடிந்தது. அது தெரியாததால் தான் நம் வீடுகளில் நாம், ”நல்ல இசை என்பது பரம்பரையாக வரவேண்டும். அது குழந்தை பருவத்திலிருந்தே கற்று வளர வேண்டும். நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு இசை வராது. இசைக்குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் அது வரும்” என்று பேசி இசை கற்றலிலிருந்து ஒதுங்கிவிடுகிறோம். ஆனால் இந்த வாய்ப்புகள் ஏதும் பெறாதவர் தான் இளையராஜா. இசை மட்டுமல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி உட்பட சமூகத்தின் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழ்ந்தவர். அவரின் 30வயதுக்கு மேல் தான் அவர் இசை பயிற்சியை முறையாக பெருகிறார். திரைத்துறையில் இசையமைக்கும் வரை அவருக்கு இசையின் அடிப்படை சுவரங்களை கூட எழுதத்தெரியாத அளவிற்குத் தான் இசை அறிவு இருந்தது. பின் எப்படி அவர் 50வயதிற்குள் சிம்பொனியை அமைக்கும் அளவிற்கு இசை மேதையாக வளர்ந்தார். அதை தெரிந்துகொள்ள பல ஆயிரம் ஆண்டுகள் நாம் பயணிக்க வேண்டும்.
மனிதகுல வரலாற்றில் பேச்சு, மொழி, ஓவியம் என்ற பல கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் இசை. இந்த எல்லா கண்டுபிடிப்புகளுமே எப்போது நிகழ்ந்தது என்றால், கூட்டாக மனிதன் வாழத்தொடங்கிய போது தான். அதுவும் கூட்டாக தங்களுக்குள் உழைப்பை செலுத்திய போது தான். அப்படி கூட்டமாக வாழும் மனிதன் தங்களுக்குள் கூட்டமாக பேசும்போது மொழி பிறந்தது. தன் கூட்டத்திற்கு தன் அனுபவத்தை சொல்ல நினைக்கும் போது ஓவியம் பிறந்தது. அவ்வாறு கூட்டத்தில் இருக்கும் பலரும் எழுப்பும் வெவ்வேறு ஒலிகளை ஒரு நேர் கோட்டில் கொண்டுவரும் போது இசை பிறந்தது. அதனால் தான் இன்றைக்கும் கூட உலகில் உள்ள எல்லா நாட்டுப்புற இசைகளும் கூட்டாக இசைக்கப்படுகிறது. பெரும்பாலும் அந்த இசைகள் அவர்களின் உழைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. வயலில் பாடப்படும் பாடல் தொடங்கி, மீனவர்கள் பாடும் பாடல்கள் வரை எல்லாம் கூட்டாக உழைப்போடு பாடப்படுகிறது. ஆனால் வரலாற்றில் பேரரசுகள் உருவான பிறகு எளிய மக்களின் சொத்துக்களாக இருந்த கலைகள் யாவும் அரசினால் கையகப்படுத்தப்பட்டது. மக்களின் கலைகள் அனைத்தும் அரண்மனைக் கலைகளாக உருமாற்றம் பெற்றன. அதுவரை கூட்டாக மக்கள் மத்தியில் இருந்த கலை வடிவங்கள் ஒரு அரங்கத்தில் உயர் குடிகள் தங்களுக்குள் அனுபவிக்கும் அனுபவமாக மாறியது. உயர்குடி மக்கள் அனுபவிக்கும் கலை என்பதால் அவைகள் உயர்வானவை. எளிய மக்களிடம் உள்ள நாட்டுப்புறக் கலைகள் தாழ்வானமை என்று மாறியது. அப்படித்தான் இசையும் அரண்மனை மற்றும் அரசர்களின் சொத்தாக ஆனது. நாட்டுப்புற இசையில் எந்த இராகத்தையும் யார் வேண்டுமானாலும் பாடலாம், அதுவும் ஒரே நேரத்தில் பல இராகத்தை பாடலாம் என்கிற ஜனநாயக மரபில் இருந்தது. அதற்கு மாறாக, அரண்மனைக்குள் இராகங்கள் உயர்குடியினரின் விருப்பத்திற்கு இசைக்கப்பட்டது. நம்மூரில் இருப்பது போல அதிகாலையில் பாடுவது பூபாளம், மகிழ்ச்சியில் பாடுவது ஆனந்த பைரவி, சோகத்தில் பாடுவது முகாரி என்று இசை முழுக்க ஒரு சட்டகத்திற்குள் சுருக்கப்பட்டது. அரண்மனை சொத்துக்கள் எல்லாமே ஆண்டவன் சொத்துக்கள் என்பதால், அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழிபாட்டுத்தலங்களுக்குள் சென்று புனிதம் கொண்டதாக மேலும் சுருங்கத்தொடங்கியது.
இப்படி மனிதனின் எல்லாம் சுருக்கப்பட்ட காலத்தில் பேரரசுகளின் அதிகாரமும், மத பீடங்களின் அதிகாரமும் உலகம் முழுக்க ஒவ்வொரு காலத்தில் இருந்தது. அப்படித்தான் ஐரோப்பாவிலும் அந்தக்கலை வடிவம் தேவாலயங்களில் சிக்கிக் கிடந்தது. மதபீடங்களுக்கு எதிராகவும், மன்னராட்சி முறைக்கு எதிராகவும் 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்காலத்தில் நிகழ்ந்த புரட்சிகர சிந்தனைகளின் விளைவாக ஒவ்வொரு கலையாக விடுதலை பெற்று மக்கள் மத்தியில் அரங்கேற்றப்படும் கலைகளாக உருமாறின. அப்படி மன்னராட்சிக்கு எதிராக சுதந்திர கலையாக உருவான இசை வடிவம் தான் சிம்பொனி. சிம்பொனி என்பது ஹார்மோனியிலிருந்து உருவாக்கப்படுகிறது. ஹார்மோனி என்பது மெலடிக்கு நேர் எதிரானது. நம் கர்நாடக இசை வடிவம் மெலடி வடிவம். அதில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இராகத்தில் பாடவியலாது. ஒரே பாடலில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்றும் வேறு வேறு இராகத்தில் பாடலாம். அதன் பெயர் இராகமாளிகா. ஆனால் ஒரு இராகம் பாடும்போது இன்னொரு இராகத்தை அதே நேரத்தில் இன்னொருவர் இசைக்கவியலாது. கர்நாடக சங்கீதம் பாடும் பாடகர் ஒருவருக்கு, அருகில் இருக்கும் இசைக்கலைஞர்கள் எல்லோருமே “பக்க வாத்தியம்” தான். காரணம் முதன்மை இசை ஒலி எழுப்பும் இராகத்திற்கு மட்டுமே அவர்கள் ஒத்திசைவாக வாசிக்க முடியும். ஆனால் ஹார்மொனியில் அவ்வாறு இல்லை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இராகங்கள் அங்கே இசைக்கப்படும். நான்கு வெவ்வேறு இசைக்கருவிகள் கொண்ட கலைஞர்கள் குழு ஒரே நேரத்தில் வெவ்வேறு ஒலிகளை வாசித்து ஒரு புதிய இசையை உருவாக்குவது தான் ஹார்மொனி. நமக்கு புரியும்படி சொல்வதானால் நம்முடைய கர்நாடக சங்கீதம் ஒருவகையில் தனியுடைமை, ஹார்மொனி சமத்துவத் தன்மையோடு ஒரே நேரத்தில் அவரவர் இசையை அவரவர் வாசிக்க அனுமதிப்பதாகும்.
இளையராஜா எப்படி சிம்பொனி இசைத்தார் என்பதற்கு இந்தக் கதை சுருக்கத்தோடு அவரின் சொந்த வாழ்க்கை சுருக்கமும் முக்கியம் என்றே கருதுகிறேன். இளையராஜா இளம் வயது முதலே பிடிவாத குணம் கொண்டவர். அவர் குறித்து சோதிடர் ஒருவர் ”இவன் 8ஆம் வகுப்பை தாண்ட மாட்டான் ” என்று சொல்லிவிட்டார். அவர் வீடு இருந்த சூழலில் 8ஆம் வகுப்பை தாண்டுவது கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும், அப்போது நடைபெற்ற வைகை அணை கட்டுமானப்பணிகளில் கூலியாக வேலை செய்து 9ஆம் வகுப்பை பணம் கட்டி தொடர்ந்தார். அதன் பின் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் அவர் அண்ணன் பாவலர் வரதராஜனோடு இணைந்து ஆயிரக்கணக்கான மேடைகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தனது ஆரம்பகால இசையை கற்றுக்கொண்டார். அவ்வாறு அவர் முதலில் கற்றுக்கொண்டது மக்களிசையே. அதன் பின் சென்னைக்கு வருகிறார். அப்போதும் கர்நாடக சங்கீதமோ, மேற்கத்திய இசையோ அவருக்குத் தெரியாது. இசையை கற்றுக்கொள்ள முற்படுகிறார். 1948ல் வெளிவந்த சந்திரலேகா படம் தொட்டு மேற்கத்திய இசையை வாசித்து வந்த தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையை கற்றுக் கொள்கிறார். அவர் மூலமாக இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக பணியில் சேருகிறார். அப்போது தான் திரையிசையின் மொழி அவருக்கு புலப்படுகிறது. அப்போதும் இசைச் சுவரங்கள் எழுத்த்தெரியாது அவருக்கு. நாளடைவில் அவரே திரை இசைகளை கேட்டுக்கேட்டு சுவரங்களை எழுத பயிற்சி பெறுகிறார். அதன் பின் ”அன்னக்கிளி” பட வாய்ப்பு கிடைத்தது, அந்த வாய்ப்பின் விளைவாக இசையமைப்பாளராக உயர்கிறார். ”அதான் இசையமைப்பாளர் ஆகிவிட்டோமே” என்று அவர் ஓயவில்லை. அதன் பின்னும் மேற்கத்திய இசையோடு, கர்நாடக இசையையும் ஒரு பள்ளிச்சிறுவன் டூஷன் போவது போல இசையை கற்றுக்கொண்டே திரைப்படங்களுக்கு இசை அமைக்கிறார்.
இசை பயிற்சி, இசையமைப்பு என்று ஓய்வில்லாமல் 80களின் தொடக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார். ஒரே நாளில் நான்கு படங்களை நாம் பார்த்தாலே நமக்கு அயர்ச்சியாகிவிடும். ஆனால் ஒரே நாளில் நான்கு படங்களுக்கு பின்னணி இசைக் கோர்ப்பை மேற்கொள்ளும் அளவிற்கு திரையிசை அவரின் இயல்பாக ஒரு கட்டத்தில் மாறிவிடுகிறது. அதையும் தாண்டி என்ன செய்வது. மேலை நாடுகளில் உள்ள மேற்கத்திய இசை மேதைகளை அவர்கள் வாழ்ந்த இடங்களை போய் பார்க்கிறார். தான் கற்றுக்கொண்ட செல்வியல் இசையையும், மேற்கத்திய இசையையும் ஒன்றோடு ஒன்று உரையாட வைக்க முற்படுகிறார். ”ஹவ் டு நேம் இட்” “நத்திங் பட் விங்” என்கிற தனி இசைக்கோர்ப்புகளை உருவாக்குகிறார். அதில் சிம்பொனி மேதை பாக்கும், தியாராஜரும் உரையாடுகிறார்கள். அதுவும் போதுமானதாக இல்லை. 1993ல் இந்தியர் ஒருவர் முதன் முதலாக லண்டன் இராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவில் சிம்பொனி அமைத்த நபராக அரங்கேறுகிறார். அந்த சிம்பொனியும் ஒரு மாதத்தில் எழுதப்பட்டது. ஆனால் அந்த சிம்பொனி முழுமையான ஒன்றல்ல என்கிற எண்ணம் அவருக்கு தோன்றவே அதை வெளியிடாமல் இருக்கிறார். அதன் பின் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிம்பொனி வடிவத்தில் இசையை கொடுத்திருக்கிறார். 2005ல் அவர் வெளியிட்ட “திருவாசகம்” கூட சிம்பொனி முயற்சிகளில் ஒன்று தான். இப்படி முழுமைபெற்ற இசையை தேடி ஓடிக்கொண்டிருந்த இளையராஜா, இப்போது தனது 81ஆவது வயதில் 34 நாளில் எழுதிய “வேலியண்ட்” எனும் முழுமையான சிம்பொனியை மார்ச் 8ல் அரங்கேற்றியிருக்கிறார். உலக அளவில் முழுமையான சிம்பொனியை அமைத்தவர்களில், இந்தியாவிலிருந்து வந்த ஒரே நபர் இளையராஜா தான்.
இந்தியாவில் எத்தனையோ இசை மாமணிகளும், மாமேதைகளும் இருக்கும் போது இளையராஜாவால் மட்டுமே ஏன் சிம்பொனியை அமைக்க முடிந்தது என்ற கேள்வி எழும். அதற்கு விடையும் இளையராஜாக்களாலேயே சிம்பொனியை அமைக்க முடியும் என்பதாகும். காரணம் மத்தியக்காலத்தில் இசை உள்ளிட்ட கலைகள் உலகம் முழுக்க ஜனநாயகமானது போல் இன்று வரை நம் மண்ணில் ஆகவில்லை. இங்கு கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்ட அளவிற்கு கூட இசை எல்லோருக்குமானதாக மாறவில்லை. ஆனால் இதே மண்ணில் சிலப்பதிகார காலத்தில் மக்களுக்கு எழுத்தறிவு இருந்தது போல், இசையறிவும் அதே அளவிற்கு இருந்தது. அப்படி இருந்த இசை அறிவு உலகம் முழுக்க நிகழ்ந்தது போல் இந்த மண்ணிலும் கோவில்களுக்குள்ளும், அரண்மனைக்குள்ளும் பேரரசுகளால் சிக்குண்டு தனியுடைமையானது. அதன் பின் இந்திய சாதியச்சூழல் இசையை குறிப்பிட்ட சாதிக்குரியதாக்கி, மற்றவர்கள் அன்றாட வாழ்விலிருந்து இசையின் தன்னியல்பை ஆழமாக பிரித்துவிட்டது. சிலப்பதிகார காலத்தில் இருந்த மக்களின் இசை இடையில் மறைந்து போனது. அதே சிலப்பதிகாரம் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து மீண்டும் அச்சில் ஏறிய போது வாழ்ந்த தமிழாசிரியரும், இசை ஆர்வளரும், மேற்கத்திய இசையின் ஹார்மொனியும் அறிந்தவருமான ஆபிரகாம் பண்டிதர் அதை மீண்டும் வாசிக்கிறார். அவருக்கு மட்டுமே சிலப்பதிகாரத்தில் அறுபட்ட நம்மண்ணின் மக்களிசை தொடர்ச்சியை கண்டடைய முடிகிறது. எல்லோரும் இசையை “பரம்பரையாக வருவது” என்று சொன்னபோது அது ஒரு கணிதம், அதை உரிய பயிற்சியின் மூலம் எல்லோருமே கண்டடையலாம் என்கிற “இராகபுடமிடுமுறையை” கண்டுபிடிக்கிறார். அதை “கருணாமிருத சாகரம்” என்னும் நூலாக படைக்கிறார். அவர் வழி வந்த இசைக்கலைஞர் தான் தன்ராஜ் மாஸ்டர். அவர் மூலமாக ஒரு இளைஞனுக்கு சிலப்பதிகார காலத்தில் அறுபட்ட இம்மண்ணின் மக்களிசை கொண்டு சேர்க்கப்படுகிறது. இசையின் கணித மொழி அவருக்கு சொல்லித்தரப் படுகிறது.
அந்த இளைஞன் தன் வாழ்நாள் முழுக்க சமத்துவம் மறுக்கப்பட்டவர். வாத்தியத்தை தொட வாய்ப்பற்ற போது கம்யூனிஸ்ட் மேடையால் அந்த வாய்பை பெற்றார். பெரும் சங்கீத சபாக்கள் இவரை மறுத்த போது ஜனநாயக வடிவமான திரையிசை சபையில் அவரே ஏறினார். “அன்னக்கிளி” வெளியான போது நாட்டுப்புற இசை தான் இவருக்கு தெரியும் என்றார்கள். அதை மறுத்து தான் கற்றுக்கொண்ட வெஸ்டர் இசையை திரை மொழியில் அரங்கேற்றினார். கர்நாடக இசை குறித்து இவருக்கு தெரியுமா என்றார்கள். அதிலும் இசைத்த போது தேசிய விருது இவரை தேடிவந்தது. இப்படி எதையெல்லாம் இவருக்கு தெரியாது தெரியாது என்றார்களோ, அதுவாகவே ஒரு கட்டத்தில் உருமாறினார். அப்படி உருமாறி எல்லோருக்குமான கலையை கொடுக்களானார். சமூகச்சூழல் தான் இவரை வேறுபடுத்தி புறக்கணித்தது. ஆனால் இவர் இராமராஜனுக்கு,, கமலஹாசனுக்கும் ஒரே மெட்டுக்களை தான் அமைத்தார். பாலுமகேந்திராவுக்கும், பாக்கியராஜுக்கும் ஒரே இசையை தான் கொடுத்தார். திருவாசகத்திற்கும், தந்தை பெரியாருக்கும் ஒரே சமத்துவமான சங்கீதத்தை ஒலித்து, எல்லோருக்கும் பெய்யும் மழையாகவே வாழ்ந்தார். இப்படி வேறுபாடின்றி வாழும் ஒரு கலைஞனால் தான் சமத்துவத் தன்மை கொண்ட சிம்பொனியை இசைக்க முடியும். தன்னை இந்த சமூகம் சமத்துவமாக நடத்தாத போது, அதன் வலி உணர்ந்த ஒருவரால் தான் முழுமையான சமத்துவத்தை இந்த சமூகத்திற்கு வழங்க முடியும். அதனால் தான் இளையராஜா சமத்துவத்தை தனக்குத் தெரிந்த இசை மூலம் நம் சமூகம் முழுக்க கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவர் உதடுகள் பேசும் இறை நம்பிக்கை, அரசியலற்ற தத்துவங்கள் எல்லாமே சமூகம் தன்னை தாக்காமல் இருக்க அவரே பூசிக்கொண்ட மேல் பூச்சுகளே. ஆனால் அவரது உண்மையான அரசியல் ஆன்மீகம் என்பது சமத்துவமான இசை. சிம்பொனி இசை சமத்துவத்தின் குரல் என்றால், இளையராஜா நம் சமூகத்திற்கான சமத்துவம் பாடும் கலைஞன்.
– களப்பிரன்