1895 ஆம் ஆண்டில் முதன் முதலாக பிரான்சில் லூமியர் சகோதரர்கள் தயாரித்து இயக்கிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. அதில் ஒரு காட்சியில் இரயில் வருவதைப் பார்த்து, பார்வையாளர்கள் அஞ்சி நடுங்கியதாக சொல்லப்படுகிறது. மற்றொரு காட்சியில் ஒரு தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதைக் காட்டியபோது, அவர்கள் திரையைத் தாண்டி வந்துவிடுவார்களோ என்று ஒருவிதக் குழப்பத்துடனே பார்த்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே காலகட்டத்தில் மார்கோனி வானொலியைக் கண்டுபிடித்து ஒலிபரப்பத் தொடங்கியபோது, யாரோ நேரடியாகக் காற்று வழியாகத் தங்களுடன் பேசுவதாக மக்கள் நினைத்தனர். அந்த நாளிலிருந்தே, ஊடகங்கள் வழியாக வரும் செய்திகள் எல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை மக்களின் மனதில் ஆழமாகப் பதியத்தான் செய்கிறது. தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் இந்தப் போக்கு தொடர்ந்தது. “ரேடியோலயே சொல்லிட்டாங்க”, “நேற்று டிவி செய்தியில் பார்த்தேன்” போன்ற வாக்கியங்கள் மக்களிடையே இயல்பாகப் பரவலாயின.
இன்று கணினி, இணையம், செல்போன், 4ஜி, 5ஜி, சமூக ஊடகங்கள் என தொழில்நுட்பம் உச்சத்தைத் தொடும் காலத்திலும், ஊடகங்கள் உண்மையைச் சொல்கின்றன என்கிற நம்பிக்கை மக்களிடையே நிலைத்திருக்கிறது. அதனால்தான், பொய்ச் செய்திகள், திரித்த தகவல்கள், தவறான மீம்கள் போன்றவை தினமும் கோடிக்கணக்கில் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால் உண்மை என்ன?
ஊடகங்கள் எப்போதும் அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டே இயங்கி வருகின்றன என்கிற உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது.
- அதிகாரத்தில் இருப்பவர்களின் கொள்கையை மக்களின் மூளையில் திணிப்பதையும்,
- பொய்களை உண்மைகளைப் போல மக்களுக்குக் கொடுத்து அதன் புள்ளியிலேயே சமூக உரையாடலைத் தீர்மானிப்பதையும்,
- இந்த எல்லைகளைத் தாண்டிய எவ்வித சுதந்திரக் கருத்துகளையும் பேசவிடாமல் தடுக்கிற கட்டமைப்பை உருவாக்குவதையும்,
- இதையெல்லாம் எதிர்த்துநின்று உண்மைகளைப் பேசும் ஊடகங்களோ ஊடகவியலாளர்களோ தலையெடுத்து வந்தால் அவர்களை அடையாளம் தெரியாமல் உருக்குலைப்பதையுமே அதிகாரத்தில் இருப்பவர்கள் காலங்காலமாக செய்துவருகிறார்கள்.
ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிகள் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது (1933 முதல் 1945 வரை), சுமார் 1,097 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில் எந்த ஒரு படமும் ஹிட்லரை விமர்சிக்கவில்லை அல்லது நாஜிக் கருத்துகள் தவறு எனக் காட்டவில்லை. இவற்றில் சுமார் 200 படங்கள் நேரடியாக நாஜி பிரச்சாரப் படங்களாகவே உருவாக்கப்பட்டு, மக்களின் மனதில் விஷக்கருத்துகளைப் பதித்தன.
நாஜிக் கருத்துகளை வெளிப்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிக்க விரும்புவோர் ஹிட்லரின் திரைப்படத் துறை அலுவலகத்திற்குச் சென்றால், நிதி உதவி வாரி வழங்கப்பட்டது. ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில், நாஜி படைகள் மட்டுமல்லாது எளிய ஜெர்மானியர்களில் பலரும் இனவெறியர்களாக மாறியதற்கு இத்தகைய படங்கள் முக்கியப் பங்கு வகித்தன. பெரும்பான்மையான மக்களின் ஆதரவின்றி எந்த இனப்படுகொலையையும் நடத்த முடியாது என்பதை நாஜிகள் நன்கு அறிந்திருந்ததால், ஊடகங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். முன்னர் குறிப்பிட்ட நான்கு முறைகளையும் ஹிட்லர் கால நாஜிகள் முழுமையாகப் பின்பற்றினர்.
அதேபோல், இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினியின் ஆட்சிக் காலத்தில் (1922 முதல் 1943 வரை) சுமார் 700 முதல் 800 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. முதலில் ‘இஸ்டிடுடோ லூசே’ (Istituto Luce) என்ற அமைப்பு தொடங்கப்பட்டு, பாசிஸ்ட் கருத்துகளை ஊடகங்கள் மூலம் பரப்புவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டது. பின்னர் 1934இல், திரைப்படத் துறைக்கென தனியாக ‘இத்தாலிய தேசிய திரைப்பட நிறுவனம்’ (Ente Nazionale Industrie Cinematografiche) தொடங்கப்பட்டது. இந்தப் படங்கள் அனைத்தும் பாசிசக் கருத்துகள் சரியானவை என்பதை மக்களிடம் ஒரு பொதுக்கருத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டன. பாசிசத்தை எதிர்க்கும் எந்தக் கருத்தும் திரைப்படங்கள் மூலமாகவோ அல்லது வேறு எந்த ஊடகம் மூலமாகவோ வெளிவராமல், இந்த இரு அமைப்புகளும் உறுதியாகத் தடுத்தன.
இவ்வாறு ஊடகங்களைக் கட்டுப்படுத்தி, முன்பு குறிப்பிட்ட நான்கு முறைகளையும் ஜெர்மனியின் நாஜிகளும் இத்தாலியின் பாசிஸ்டுகளும் மட்டுமல்ல, வரலாறு முழுவதும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளனர். ஆப்பிரிக்காவின் காங்கோவை 80 ஆண்டுகளுக்கும் மேலாக பெல்ஜியம் ஆட்சி செய்தது. அப்போது பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட், காங்கோ மக்கள் “அறிவற்றவர்கள்” என்றும், அவர்களுக்கு “நாகரிகம் கற்பிக்கவே” தாம் ஆட்சி செய்வதாகவும் பிரச்சாரம் செய்தார். இதற்காக சுமார் 600 திரைப்படங்களும் ஆவணப்படங்களும் பெல்ஜிய அரசு நிதியில் தயாரிக்கப்பட்டு, பெல்ஜியம் மற்றும் காங்கோவில் திரையிடப்பட்டன. இந்தப் படங்கள் பெல்ஜிய மக்களுக்கு தங்கள் மன்னர் காங்கோ மக்களுக்கு “நாகரிகம்” கற்பிப்பதாகவும், காங்கோ மக்களுக்கு தாங்கள் தங்களை ஆளும் தகுதியற்றவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன.
1965-1966 காலகட்டத்தில் இந்தோனேசியாவில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன், சுகர்னோவின் மக்கள் ஆதரவு அரசு பின்வாசல் வழியாகக் கவிழ்க்கப்பட்டது. சுகர்தோ என்கிற இராணுவ அதிகாரி அதிகாரத்தைக் கைப்பற்றினார். இந்த நிகழ்வுகளின் போது, சீனா மற்றும் சோவியத்திற்கு அடுத்ததாக உலகின் மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்த இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PKI) உறுப்பினர்கள் குறிவைக்கப்பட்டனர். அந்த இரண்டாண்டுகளில் மட்டும் சுமார் பத்து இலட்சம் (1 மில்லியன்) முற்போக்கு சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வகையில், ‘பெங்கியானான் ஜி30எஸ்/பி.கே.ஐ’ (Pengkhianatan G30S/PKI) என்ற பிரச்சாரத் திரைப்படம் இந்தோனேசிய இராணுவ அரசால் தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் கம்யூனிஸ்டுகளைக் கெட்டவர்களாகவும், தேசத்துரோகிகளாகவும் சித்தரிக்கும் கற்பனைக் கதையைக் கொண்டிருந்தது. இந்தோனேசிய அரசு இதை “வரலாற்று உண்மை” என்று காட்டி, பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரையும் கட்டாயமாக இதைப் பார்க்க வைத்தது.
இன்றும் இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலைக்கு இந்தப் பிரச்சாரப் படமே முக்கியக் காரணம் எனலாம். பல தலைமுறைகளாக மக்களின் மனதில் தவறான கருத்துக்களை விதைத்து வந்ததால், இந்தத் தடைக்கு எதிர்ப்பு எழவில்லை.
இவை அனைத்தும் கடந்த காலத்தில் நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகள் என்று மட்டும் நாம் எண்ணிவிட முடியாது. இவற்றின் தொடர்ச்சியாக, இன்றும் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களின் கொள்கைப் பரப்பு கருவியாகவே பல ஊடகங்கள் செயல்படுவதை நாம் கவனிக்காமல் இருந்தால், அது நமக்கே பெரும் இழப்பாக முடியும்.
தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் ஜனநாயக வளர்ச்சி பற்றி இன்று பலர் பேசினாலும், ஊடகங்களின் அடிப்படைத் தன்மை மாறவில்லை. ஓடிடி (OTT) தளங்களின் வருகையுடன், திரையரங்குகளுக்கு அடுத்தபடியாக இவை நம் திரைப்படப் பார்வையை வடிவமைக்கின்றன. “ஒரே கட்டணத்தில் எல்லா படங்களும்” என்பது போன்ற மாயத் தோற்றத்தை இந்தப் புதிய ஊடகம் உருவாக்கியுள்ளது.
ஆனால் இந்த ஓடிடி தளங்கள் அனைத்தும் ஆட்சியதிகாரங்களின் அரசியல் நோக்குகளுக்கு ஏற்பவே திரைப்படங்களை வழங்குகின்றன. உதாரணமாக, நெட்ஃப்ளிக்ஸில் ஏராளமான இஸ்ரேலிய ஆதரவு படங்கள் உள்ளன. ஆனால் பாலஸ்தீனியர்களின் நியாயங்களைச் சொல்லும் படங்கள் மிகக் குறைவு. 2023 அக்டோபரில் காசா போர் தொடங்கியபோது, நெட்ஃப்ளிக்ஸ் தனது 32 பாலஸ்தீனியத் தரப்பு நியாயங்களைப் பேசுகிற படங்களில் 19ஐ நீக்கியது. தற்போது ‘பாலஸ்தீனக் கதைகள்’ பிரிவில் ஒரே ஒரு படம் மட்டுமே நெட்ஃப்ளிக்சில் உள்ளது. ஆனால் அதேவேளையில் இஸ்ரேலிய ஆதரவுப் படங்கள் எதுவும் நீக்கப்படவில்லை.
திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், தொலைக்காட்சி விவாதங்கள், ஊடக மேலாண்மை மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கத் தவறுதல் ஆகிய அனைத்திலும் ஆட்சியாளர்களின் அரசியல் தாக்கம் உள்ளது. இதை நாம் அந்தந்த காலத்திலேயே உணராமல் இருந்தால், ஹிட்லரின் ஜெர்மனி, முசோலினியின் இத்தாலி, சுகர்தோவின் இந்தோனேசியா அல்லது லியோபோல்ட்டின் காங்கோ உள்ளிட்ட பல நாடுகளில் நடந்ததைப் போன்ற இனப்படுகொலைகளைத் தடுக்க முடியாமல் போகும். பின்னர் “எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்” என்று வரலாற்று எண்களை மட்டுமே படிக்க நேரிடும்.
இதைத் தடுக்க, ஊடகங்கள் மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வலுவான எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். அதன் முக்கியத்துவத்தையே தோழர் அருண்கண்ணன் அவர்களின் இந்த நூல் வலியுறுத்துகிறது.
நாம் வாழும் இந்த சமகாலத்தில், காஷ்மீர் மக்கள் பற்றி பரப்பப்படும் அவதூறுகளையும் வன்மக் கருத்துகளையும் முறியடிக்கும் முயற்சியாக ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை விரிவாக அலசி, பல முக்கியமான உண்மைகளை இந்நூலின் முதல் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி செய்தி சேனல்களில் எந்த வகையான செய்திகள் வெளியிடப்பட வேண்டும், எவ்வாறான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும், யாரை விமர்சிக்கலாம், யாரை விமர்சிக்கக் கூடாது என்பவற்றை நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்ட முதலாளிகள் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அந்த சானல்களெல்லாம் எவ்வளவு தூரம் அதிகார வர்க்கத்தின் குரலை மட்டுமே பிரதிபலிக்கின்றன என்பதையும் இரண்டாவது கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளார்.
அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறைகளையும், ஊடகங்களை கட்டுப்படுத்தி நடத்தப்படும் பொய்ப்பிரச்சாரங்களையும் மீறி, மக்களுடன் நின்று உண்மைகளை உரக்கச் சொன்ன ஒரு புகைப்படக் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை மூன்றாவது கட்டுரையில் உணர்ச்சிபூர்வமாக விவரித்துள்ளார். 1948இல் பாலஸ்தீனம் என்னும் நாட்டை அழித்து, அங்கு இஸ்ரேல் என்னும் புதிய நாட்டை உருவாக்கிய போது நடந்த இனப்படுகொலையையும், இன்றுவரை அதைச் சுற்றி பரப்பப்படும் பொய்மைகளையும் ‘தந்துரா’ ஆவணப்படத்தின் அடிப்படையில் நான்காவது கட்டுரையில் ஆராய்ந்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் மண்டேலாவை நாம் அறிவோம். ஆனால் பாலஸ்தீனத்திலும் ஒரு மண்டேலா வாழ்கிறார் என்பதையும், அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார், அவரை இஸ்ரேலும் உலகமும் எவ்வாறு நடத்துகின்றன என்பதையும் ஐந்தாவது கட்டுரையில் விரிவாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரைகள் அனைத்தையும் படித்து முடிக்கும் போது, தொலைக்காட்சி சேனல்களோ, பத்திரிகைகளோ, அல்லது வேறு எந்த வகையான ஊடகமாகவோ இருந்தாலும், அவை ஆட்சியாளர்களின் கருவிகளாக மாற்றப்படுவதையும், அதை எதிர்க்கும் குரல்களும் இந்தக் காலத்தில் உள்ளன என்பதையும் நாம் உணர முடிகிறது. அதற்காக, ஊடகங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஊடகங்களை மக்களுக்கானவையாக மாற்றும் இலக்கை நோக்கி நாம் நமது சிறிய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தவே இந்த நூல் எழுதப்பட்டுள்ளதாக நான் புரிந்துகொள்கிறேன். இந்நூலைப் படிப்பவர்களுக்கும் அக்கருத்து ஏற்புடையதாக மாறும் என்ற நம்பிக்கையுடன் இந்நூலை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.
– இ.பா. சிந்தன்
நூல்: விலக மறுக்கும் உண்மைகள்
ஆசிரியர்: அ.ப.அருண்கண்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
விலை: 70 ரூபாய்