இலக்கியம்தொடர்கள்

உடல்மொழி சார்ந்த பேச்சு போல நடைமொழி சார்ந்த எழுத்து வருமா? (பகுதி – 21) – அ.குமரேசன்

549

“பேச்சிலும் எழுத்திலும் தேர்ச்சியுடன் கையாளப்படும் மொழி தெளிவாகவும் துல்லியமாகவும் உங்களை வெளிப்படுத்துகிறது. உணர்வார்ந்த ஈடுபாட்டையும் நம்பிக்கையையும் மரியாதையையும் ஈட்டித் தருகிறது. உங்களுக்கு மட்டுமல்லாமல் கேட்கிறவர்களின், வாசிக்கிறவர்களின் உருவாக்கத் திறனை உயர்த்துகிறது. பிழைகளைக் களைகிறது, தவறான புரிதல்களைக் குறைக்கிறது.”

யார் சொன்னார்கள், எப்போது எழுதினார்கள் என்றெல்லாம் நினைவில் தங்காமல் சொல்லப்பட்ட கருத்து மட்டும் நிலையாகக் குடியேறிவிடும். ஆங்கிலத்தை அக்கறையுடன் கையாள்வது தொடர்பாக யாரோ சொல்லிக் கேட்ட, அல்லது  எப்போதோ படித்த இந்தக் கருத்தும் அப்படிப்பட்டதுதான். விரும்பி ஏற்றுச் செய்த, செய்கின்ற பணியோடும் தொடர்புள்ளதாகையால் மனதில் பதிந்துவிட்டது. அதைத்தான், “ஆங்கிலம்” என்ற சொல்லை “மொழி” என மாற்றி, இங்கே பகிர்ந்திருக்கிறேன் (இப்படியும் செய்யலாம் என்று சொல்லாமலே சொல்லிவிட்டேன் அல்லவா? இப்படிச் செய்கிறபோது இப்படித்தான் செய்தோம் என்று நேர்மையாகச் சொல்லிவிட வேண்டும், அது நம்முடைய சொந்தக் கருத்து என்ற போலியான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடாது.)

பேசும்போது சைகை, முகபாவம் உள்பட உடல்மொழியோடும் கருத்தைப் புரிய வைக்கிறோம். அந்த உணர்வை எழுத்தில் கொண்டுவர முடியுமா?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முயல்கிறபோது மேற்படி கருத்து நினைவுக்கு வருகிறது. பூமியின் உயிரினங்களில் மனிதர்கள் தகவல் தொடர்புக்காகச் சொற்களையும் உச்சரிப்பையும் இணைத்து உருவாக்கிய பேச்சு, சொற்களையும் சித்திரத்தையும் இணைத்து உருவாக்கிய எழுத்து – இவையிரண்டும் நிகழ்த்திய மாற்றங்களும் வளர்ச்சியும் மெய்சிலிர்க்க வைப்பவை.

Writing 1

எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் பேசிக்கொண்டே இருக்க முடியாது, ஆகவே பேச நினைத்ததைப் பாறைகளிலும்  ஓலைகளிலும் சீலைகளிலும் எழுத்தாகப் பதிவு செய்துவிட்டுப் போனார்கள். பின்னர் தாள்களுக்குப் புலம்பெயர்ந்த எழுத்து இன்று கணினி–கைப்பேசி தட்டச்சு விசைப் பலகைகளுக்குக் குடி வந்திருக்கிறது. பேசப்பேச எழுத்தாக மாறிடும் குரல் தட்டச்சுத் தொழில்நுட்பம் இன்று இயல்பானதாகிவிட்டது. எழுத்தில் இருப்பதைப் பேச்சாக மாற்றிக் காதுகளுக்குக் கொடுப்பதும் நடைமுறையாகிவிட்டது. இனி, ஏஐ யுகத்தில் நினைக்க நினைக்க எழுத்தாவதுதான் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறது. (வெளியே தெரியக்கூடாது என்று மறைக்க வேண்டிய நினைப்புகளும் மூளையில் தோன்றும், அது எழுத்தாகிப் பகிரப்பட்டுவிடாமல், அதற்கான செயலியை மறக்காமல் “ஆஃப்” செய்துவிட வேண்டும்!)

தொடரும் முயற்சி

கவனிக்க வேண்டியது என்னவென்றால், பேச்சை எழுத்தாக்குகிற முயற்சி பாறைக் காலத்திலிருந்து இன்று வரையில் நடந்துகொண்டே இருக்கிறது. உணர்வு கலந்து பேசுகிறோம், பேச்சின் அதே உணர்வோடு எழுத்தாக்க முயல்கிறோம். முக மாறுதல்கள், கை அசைவுகள், உடல் நிலைகள் ஆகியவை பேசும்போது துணை செய்கின்றன. “ஒன்றுபடுவோம் போராடுவோம் வெற்றிபெறுவோம்” என்ற அறைகூவல் முழக்கமாக வரும் பேச்சின் உணர்ச்சியை, ஒளிபெறும் முகம்,  முறுக்கேறும் மேனி, உயரும் கைமுட்டி ஆகிய உடல்மொழி சேர்ந்து உணர்த்துகின்றன அல்லவா? அதே உணர்ச்சியை எழுத்தில் கொண்டுவர முடியுமா? 

Writing 2

சில வகையான முயற்சிகளால் இதைப் பெருமளவுக்கு சாத்தியமாக்க முடியும். கூடியவரையில், பேச்சைப் போலவே எழுத்தையும் அமைக்க வேண்டும். அதற்கேற்ற முறையில் சீராக, கோர்வையாகப் பேசப் பழக வேண்டும், அதற்கேற்பச் சிந்திக்கவும் வேண்டும். சிந்தனையும் பேச்சும் எழுத்தும் ஒருங்கிணைவது அடிப்படையான ஒரு தேவை.

நீயும் நீங்களும்

பேச்சைப் போலவே எழுத்தையும் அமைக்க, இயற்கையாக, நேரடியாக உரையாடும் வழிமுறையைக் கையாளலாம். எடுத்துக்காட்டாக, “பொதுவாகக் குறிப்பிடும்போது “நீங்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். சில நேரங்களில், “நீ” என்று குறிப்பிடும்போது அது நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும்,” என்று நண்பர்களுக்கிடையே நடந்த உரையாடலில் ஒருவர் கூறினார். ஆங்கிலத்தில் நீ, நீங்கள் இரண்டுக்குமே “யூ” என்ற ஒரே சொல்தான். தமிழ் மரபில் (மற்ற பலமொழிகளிலும்), நெருக்கமானவர்களை  “நீ” என்றே சுட்டுகிற வழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகிறது. சிறியவர்கள் பெரியவர்களையும், எளியவர்கள் வலியவர்களையும், ஊழியர்கள் அதிகாரிகளையும் “நீங்கள்” என்று சொல்வார்கள். அவர்களோ இவர்களை “நீ” என்பார்கள். மனைவியைக் கணவன் “நீ” எனக்கூற, அவள் அவனை “நீங்கள்” என்றே சொல்ல வேண்டும்.

இன்றைக்கு இதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காதல் இணையர்கள் இருவருமே ஒருவரையொருவர் “நீ” என்று நெருங்குகிறார்கள். எவ்வளவு உயர்ந்த பதவியில் இருக்கிற அதிகாரியும் ஊழியரை “நீங்கள்” எனக்கூறியாக வேண்டிய சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆக, எந்த இடத்தில், என்ன நோக்கத்துடன் பயன்படுத்துகிறோம் என்ற தெளிவோடு “நீ” என்று உரிமை கலந்தும், “நீங்கள்” என்று மரியாதை கலந்தும் பயன்படுத்தலாம்.

Writing 4

“வெற்றிக்குத் தேவை தெளிவான பேச்சு” என்ற ஒரு கருத்தை எழுத வேண்டியிருப்பதாக வைத்துக்கொள்வோம். அதை அப்படியே எழுதுவது நன்றாகவே இருக்கும். ஆனால் அதைக் கொஞ்சம் வேலைத் திறமையைக் காட்டி, ”நீ எடுத்துக்கொண்ட செயலில் வெற்றி பெற வேண்டுமென்றால் தெளிவாகப் பேசு,” என்று எழுதினால் எப்படி இருக்கும்? வாசிப்பவரை எழுத்தாளரோடு நெருங்கி வர வைப்பதாகவும் இருக்கும், கடினமான சொற்களால் வாக்கியத்தை அந்நியப்படுத்திவிடாமல் தெளிவாகப் பேசுவதன் தேவையை உணரச் செய்வதாகவும் இருக்கும்.

பேசும்போது கூடியவரையில் சிறிய வாக்கியங்களைத்தான் பயன்படுத்துவோம். நீள வாக்கியமாகச் சொல்லிக்கொண்டே போனால், கேட்கிறவர் தன் முகத்தின் அலுப்பால் கையைக் கன்னத்தில் வைத்துக்கொள்வதால் என உடல்மொழி மூலம் “போதுமப்பா” என்று நிறுத்த வைத்துவிடுவார். நமக்கே கூட, நீண்ட வாக்கியமாகப் பேசுகிறபோது, எங்கே தொடங்கினோம், எங்கே இடைவெளி விட்டோம், எங்கே எதற்காக மாதிரிகளைச் சேர்த்தோம் என்று புரியாமல் குழப்பம் ஏற்பட்டுவிடும். எழுத்திலும், மிக நீண்ட வாக்கியமாக அமைகிறபோது அதே போன்ற குழப்பம் இரு தரப்புக்குமே ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

நீள வாக்கியங்கள் எப்போது?

அதேவேளையில், சில சிறிய வாக்கியங்களைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ஒரு செய்தியை அழுத்தமாகக் கூறும் வகையில், கூடுதலான சொற்களைக் கொண்ட நீண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தவே செய்வோம். வெற்றிகரமான பேச்சாளர்கள், “மாற்றம் என்பதே நம் லட்சியமான பிறகு, அதற்காக நம்மை ஒப்படைத்துக்கொள்ளத் தயாராகிவிட்டோம் என்றால், அதற்கு ஆதரவாக மக்களைத் திரட்டுவது அவசியம் என்பதால், முன்னோடித் தலைவர்கள் காட்டிய வழியில், வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இழப்புகளைப் பற்றிய கவலையும் இல்லாமல் களம் இறங்குவோம், தெருத் தெருவாகச் செல்வோம், வீடு வீடாக எடுத்துச் சொல்வோம், உடன் வருவோரை அணைத்துக்கொள்வோம், வர மறுப்போரைப் பகைக்காமல் மறுபடி வருவோம் என்றுரைத்து முன்னேறிக்கொண்டே இருப்போம்….” என்று நீளமான வாக்கியமாகக் கோர்ப்பார்கள். இதில், எங்கே தொடங்கினோம், எங்கே இடைவெளி விட்டோம் என்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய மாறுபட்ட செய்திகள் எதுவும் இல்லை. இதே போன்ற உத்தியை எழுத்தாக்கத்திலும் கையாளலாம். சிறிய வாக்கியங்கள் ஒரு தொடர்பை ஏற்படுத்தும், தொடர் வாக்கியங்கள் ஒரு பயணத்திற்குத் தயார்ப்படுத்தும்.

Shot of two business women discussing over some contract document in office
Shot of two business women discussing over some contract document in office

“அறைக்குள்ளேயே அவன் பயந்து போயிருந்தான்.”  –இதுதான் எழுத வேண்டிய செய்தி. இதை அப்படியே எழுதினால், நாம் எதிர்பார்க்கிற எதிர்வினை நிகழாது. இதில் கொஞ்சம் காரம், புளிப்பு, வேர்க்கடலை, ‘சிக்கன் கிரேவி’ என்று சேர்த்தால்? ”அறைக்குள் அவ்வளவு இடம் இருந்தாலும அவன் மூலையில் சுவரோடு சாய்ந்திருந்தான். முகம் வியர்த்திருந்தது. கைகள் உதறிக்கொண்டிருந்ததைத் தடுக்க முடியாதவனாகத் தவித்தான். சிறிது நேரத்தில் கைநடுக்கம் வேகமான இதயப் படபடப்பாகவும் மாறியது,” என்று எழுதுகிறபோது, அந்த “அவன்” எனப்படுபவன் பயந்து நடுங்கிப் பதுங்கியிருக்கிற காட்சி வாசிப்பவரின் மனத்திரையில் விரியும்.

எழுத்தின் மூலம் இத்தகைய உணர்வுகளை கொண்டுவர மேலும் சில வழிகள் இருக்கின்றன. அதே அறைக்குள் நுழைந்து அதற்குள் பயந்துபோய்ப் பதுங்கியிருப்பவனை மறுபடி பார்ப்போம். “அவனுடைய கூச்சலால் அறை அதிர்ந்தது,” என்று புரிந்துகொள்ளச் செய்வது நம் நோக்கம். அதை இவ்வாறு நேராக இப்படிச் சொல்லாமல், ”அவன் எழுப்பிய கூச்சலில் அறையின் சுவர்களும் கதவுகளும் அதிர்ந்தன,” என்று எழுதலாம்.

கூறியது கூறலாம்!

பேச்சைப் போலவே எழுத்திலும் சில சொற்களைத் திரும்பத் திரும்பப் போடுவது கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்த உதவும். “அச்சம் உதிர்த்து விழித்தெழுந்தாள், அடிமை விலங்குடைக்க விழித்தெழுந்தாள், கனவுகளை நனவாக்க விழித்தெழுந்தாள், வானத்தை வசப்படுத்த விழித்தெழுந்தாள்…” இப்படி அடுக்கும்போது, அப்படி விழித்தெழுந்தவளுக்கு நாமும் கைகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வாசிப்பவருக்கு ஏற்படும். நூல் எழுதுகையில் செய்யக்கூடாத பத்து குற்றங்கள் பற்றி எச்சரித்த பவணந்தி முனிவர், “கூறியது கூறல்” அந்தப் பத்தில் ஒன்றெனக் கூறியிருப்பதை ஏற்கெனவே பார்த்தோம். அதையும் இதையும் போட்டுக் குழம்பத் தேவையில்லை. பொருத்தத்தைப் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம்.

சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதியதைத் தாங்களே வாய் திறந்து வாசிப்பதுண்டு. அது, எழுதப்பட்ட வடிவம் இனிமையாக, இலகுவாக, இறுக்கமின்றி இருக்கிறதா என்று சோதிக்க உதவியாக இருக்கிறது. அத்துடன், உரக்க வாசிக்கிறபோது எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டுவிடும், வெளியீட்டுக்கு அனுப்புவதற்கு முன் திருத்திக்கொள்ள உதவும். எனக்கும் அந்த அனுபவம் உண்டு. எழுதி முடித்த பிறகு நாமே வாசிப்பது ஒரு முக்கியத் தேவை. மௌனமாக வாசிக்கிறபோது பல பிழைகள் கண்களின் முன்னால் வந்து நிற்கும். முணுமுணுப்பாகவோ, சற்று உரக்கவோ வாசிக்கிறபோது (அதாவது பேசிப் பார்க்கிறபோது), மௌன வாசிப்பை விடவும் கூடுதலான பிழைகள் தலையைத் தூக்கி, “என்னை மாற்றிவிடு” என்று சொல்லும்.

இவ்வாறு சிறு சிறு வெளிப்பாடுகளில், பேச்சின் உடல்மொழியால் ஏற்படும் தாக்கத்தை எழுத்தின் நடைமொழியால் ஏற்படுத்தலாம். எழுதுகிறவருக்குக்  குறிப்பிட்ட செய்தி அல்லது சிந்தனையோடு தொடர்புள்ள அனுபவம் ஒன்று எழுதும்போது வாய்க்கும். அது போலவே, வாசிக்கிறபோது  எழுத்தின் செய்தி அல்லது சிந்தனையோடு தொடர்புள்ள அனுபவம் ஒன்று வாசிக்கும்போது வாய்க்கும்.

Writing 5

நீண்டதொரு கட்டுரையில், சிறு சிறு கதைகள், உண்மை நிகழ்வுகள், அவை ஏற்படுத்திய உணர்வுகள் ஆகியவற்றைக்  கொண்டுவருவதும், பேச்சுடன் இணைந்த உடல்மொழியின் பங்கை ஆற்றும்.

வெவ்வேறு தளங்கள்

இதையெல்லாம் முயன்று பார்த்த பிறகும் கூட, முக மாற்றங்களுடனும் கைகளின் சைகைகளுடனும் உடல் அசைவுகளுடனும் வெளிப்படும் பேச்சைப் போல எழுத்தில் முழுமையாக அமையவில்லையே என்ற எண்ணம் ஏற்படுகிறதா? அந்த முயற்சியில் தோல்வியடைந்துவிட்டது போலத் தோன்றுகிறதா? அது ஒரு தோல்வியல்ல.

ஏனெனில் பேச்சும் எழுத்தும் வேறு வேறு செயல் தளங்கள். குறிப்பிட்ட உணர்வை ஏற்படுத்துவது இரண்டுக்கும் பொது நோக்கம். ஆனால், பேச்சின் அதே அனுபவத்தை எழுத்தும் தர வேண்டியதில்லை. அது வேறு வகையான அனுபவத்தைத் தரலாம். நாம் செய்யக்கூடியது முடிந்த அளவுக்கு முயல்வது மட்டுமே. இதே போல, எழுத்து வழங்கக்கூடிய அதே அனுபவத்தைப் பேச்சு வழங்கிவிடுவதில்லை. அப்படி வழங்க வேண்டிய கட்டாயமுமில்லை.

சில நாவல்கள் திரைப்படமாக்கப்படுகிறபோது, நாவலைப் படிக்காதவர்களுக்குப் படம் சிறப்பான படைப்பாகத் தோன்ற, படித்தவர்கள் அந்த உணர்வு படத்தில் கிடைக்கவில்லையே என்று கூறுவதைக் காண முடியும்.

ஆழமான அழகான அருமையானதொரு கவிதையை எழுத்தாக வாசிக்கிறபோது கிடைக்கிற ஒரு சுகமான ரசனை அனுபவம், அதை யாரேனும் உரக்க வாசிக்கக் கேட்கிறபோது கிடைப்பதில்லை. அந்தக் கவிதையைப் படைத்த கவிஞரே வந்து வாசித்துக் காட்டினாலும், எழுத்தாக நம் கண்களின் வழியே நுழைந்து நிகழ்த்தும் வித்தையை, அந்தக் கவிதை நம் காதுகளின் வழியே நுழைந்து நிகழ்த்துவதில்லை. வாய்மொழியாய் வாசித்துக் கேட்பதற்கென்றே புனையப்படும் கவிதைகளுக்கான நுட்பங்கள் வேறு. கவியரங்குகளில் அவையினரின் கைதட்டல்களை வாரிக்கொள்ளும் கவிதைகள் இதற்குச் சான்று.

கட்டுரைத் தலைப்பு நீளமாக இருக்கலாமா? சுருக்கமாகத்தான் இருக்க வேண்டுமா?  துணைத் தலைப்புகள் தேவையா?  கட்டிடமா கட்டடமா? துவக்கமா தொடக்கமா? முயற்சிப்பதா, முயற்சி செய்வதா? –இவையும் இவை போன்ற வேறு சில பொதுவான வினாக்களும் இருக்கின்றன. விடைகளும்தான். அவற்றைப் பார்த்துவிட்டு விடைபெறலாம் என்று கருதுகிறேன்.

– அ. குமரேசன்

Leave a Reply