இந்தத் தொடரைத் தொடங்கிய பின் எழுதுதல் தொடர்பாகத் தங்களுக்கு இருக்கும் வினாக்களையும் ஐயங்களையும் வாசகத் தோழமைகள் அவ்வப்போது பகிர்ந்து வந்திருக்கிறார்கள். கட்டுரைகள் வளர்வதற்கு அவை முக்கியமானதொரு காரணம். சென்ற கட்டுரை பலரையும் கூடுதலாகக் கவனிக்க வைத்திருப்பது, கூடுதலான கேள்விகள் வந்திருப்பதிலிருந்து தெரிகிறது. குறிப்பாக, எழுத்தாக்கத்தில் செய்யக்கூடாத ‘பத்துக் குற்றங்கள்’ என 12ஆம் நூற்றாண்டுப் புலவரும் சமணத் துறவியுமான பவணந்தி முனிவர் எழுதியிருப்பது பற்றிய தகவல் வியப்பைத் தருகிறது எனக் கூறியுள்ள சில அன்பர்கள் ஒரு பெருமித உணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பள்ளியில் படித்தபோது இதைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டது வருத்தமளிக்கிறது என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள். அது அவர்களுடைய புரியாமையின் தவறு மட்டுமல்ல, ஆர்வத்தை ஏற்படுத்தும் எளிய பாடமுறைகள், சுவையாகப் புரியவைக்கிற பயிற்சி அக்கறைகள் இரண்டும் இல்லாமல் போனதன் விளைவுமாகும். இலக்கணப் பாடத்தை ஒரு கசப்பு அனுபவமாக உணர்ந்து ஓட வைத்தது எது? மாணவர்களுக்கு ஆங்காங்கே ஒரு நல்வாய்ப்பாகக் கிடைத்த சில ஆசிரியர்களைத் தவிர்த்து எத்தனை பேர் தாங்களும் இலக்கணத்தைச் சுவைத்து, சுவைக்கவும் வைத்தார்கள்? என்னவென்றே தெரியாமல் சும்மா தேமா, புளிமா என்று மனப்பாடம் செய்ய வைத்த பாடத்திட்டம் வகுக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு? மொழியின் மீது உணர்ச்சி கிளர்த்தப்பட்ட அளவுக்கு அறிவியல்பூர்வமான புரிதல் வளர்க்கப்படாமல் போனதற்கு யாரைக் குற்றம் சொல்வது? எழுத்தாக்கத்தில் பலருக்கு ஈர்ப்பும் ஈடுபாடும் பற்றாக்குறையாக இருப்பதற்கு இப்படிப்பட்ட பின்னணிகளும் இருக்கின்றன. கல்வி உரிமைக் களம் தொடர்பான, இனியேனும் முற்றிலுமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இவை.
இப்போது நாம் பவணந்தியாரிடம் வருவோம். நானே கூட கொஞ்சமாவது தமிழ் இலக்கணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற சொந்த ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கிய பிறகுதான் அவரையும் அறிந்துகொண்டேன். அதுவரையில், அவ்வப்போது சில கட்டுரைகளில் படித்த “கூறியது கூறல் குற்றம்” என்ற சொற்றொடர்தான் நினைவில் இருந்ததேயன்றி, அதைச் சொன்னது யார், எதற்காகச் சொன்னார் என்றெல்லாம் தெரியாதவனாகவே இருந்தேன். தெரிந்துகொண்ட பிறகு, எங்கேயோ தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தவர், இந்தத் தொடரை எழுதும்போது அவராகவே பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு கவனிக்கிறார்!

நூல் எழுதும்போது தவிர்க்க வேண்டியவற்றை மட்டும்தான் பவணந்தி முனிவர் எழுதியிருக்கிறாரா, கடைப்பிடிக்க வேண்டியவற்றைப் பற்றியும் சொல்லியிருக்கிறாரா என்று அன்பர்கள் விசாரித்திருக்கிறார்கள். நிச்சயமாகச் சொல்லியிருக்கிறார். அக்காலத்தில் அவதானித்த போக்குகளையும் உள்வாங்கிக்கொண்ட சிந்தனைகளையும் சார்ந்து அவர், ஒரு நூலைச் சிறப்புற எழுதுவதற்குப் பத்து அழகுகள் பற்றியும் கூறியிருக்கிறார்.
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே.
முன்னோர் கூறயவற்றையெல்லாம் அப்படியப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை, இன்றைய மாறுபட்ட பார்வைகளோடும் அணுகலாம். இந்தப் புரிதலோடு அந்தப் பத்து அழகுகளையும் பார்ப்போம்.
சுருக்கத்தின் அழகு
எடுத்த எடுப்பிலேயே “சுருங்கச் சொல்லல்” ஒரு அழகு என்கிறார் பவணந்தி. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்ற இந்தச் சொற்பதம் பற்றி வளவளவென்று விளக்க வேண்டுமா என்ன? சுருக்கமாக எழுதுகிறபோது எதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றால் அது விளங்கிக்கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும். ஆகவேதான் அதற்கடுத்த அன்புரையாக “விளங்க வைத்தல்” என்று கூறுகிறார்.
சுருக்கமாக எழுதுவதிலேயே ஆழமான கருத்துகளைச் சொல்ல முடியும் என்பதற்கு வள்ளுவரின் ‘திருக்குறள்’ வரிகளை விட வேறு சான்று வேண்டுமா என்ன? ஐந்தாறு சொற்களிலேயே விரிவான காட்சிளைக் காண வைக்க முடியும் என்று இன்றைய ஹைகூ, சென்ரியூ கவிதைகள் அட்டகாசமாகக் காட்டுகின்றனவே! கவிதைக்குப் பொருந்துவது கட்டுரைக்கும் இணக்கமாக இணையும்.

அப்படியானால் எதையும் வர்ணித்து அழகாக அடுக்கிச் சித்தரிக்கக் கூடாதா? அப்படியெல்லாம் இல்லை, வர்ணனைச் சுவைக்காக, சுருக்கமாக எழுதுவதை விரித்தும் எழுதலாம். வர்ணிப்பின் சுகத்தை, வளவளப்பின் சோர்வு கவ்விவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.
அடுத்த வரியில் “நவின்றோர்க் கினிமை“ என்றும் “நன்மொழி புணர்த்தல்” என்றும் இரண்டு அழகுகளைக் கூறுகிறார். அதாவது, யாருக்காக எழுதுகிறோமோ அவர்களுக்கு நமது எழுத்து இனிமையான வாசிப்பு அனுபவத்தைத் தர வேண்டும். எளிய மக்களுக்காக எழுதுகிறேன் என்று அறிவித்துவிட்டு, அவர்கள் “அய்யோ ஆளைவிடு” என்று தொடர்ந்து படிக்காமல் மூடுகிற அளவுக்கு எழுதக்கூடாது. இது பற்றியே உரையாடல் ஒன்று நிகழ்ந்தது.
சினிமாப் பாட்டு லயமும் நயமும்
“எளிய மக்களுக்கு இனிமையாக எழுத வேண்டும் என்றால், அவர்கள் சினிமாப் பாட்டைத்தான் ரசிக்கிறார்கள், என்ன செய்வது,” என்று கேட்டார் உரையாடலில் பங்கேற்ற ஒருவர். சினிமாப் பாட்டின் எளிய சந்த லயம், இனிய கற்பனை நயம் ஆகியவற்றைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதைப் போன்ற சொல்லாடல்கள் நம் வயம் இருக்குமாறு எழுத்துப் பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல சொற்களையே சொல்வது ஒரு அழகு என்ற பொருளில் “நன்மொழி புணர்த்தல்” என்கிறது ‘நன்னூல்’. புண்படுத்துகிற, அருவருப்பை ஏற்படுத்துகிற சொற்களைத் தவிர்த்து, ஏற்கத்தக்க பதமான முறையில் எழுதச் சொல்கிறார் முனிவர் புரிந்துகொள்ளலாம். பொதுவாக இது எல்லா இடங்களுக்கும் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதுதான். ஆனால், நன்மொழி, நல்ல பதம் என்ற சொற்களுக்கான பொருள் காலத்திற்குக் காலம் மாறி வந்திருக்கிறது, இன்று பெருமளவுக்கு மாறியிருக்கிறது.
ஏற்கெனவே நாம் “கெட்ட வார்த்தை”பயன்படுத்துவது பற்றிப் பேசியிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, “மயிர்” என்ற சொல், இன்று நாம் “முடி” என்று சொல்வது போல வெகு இயல்பாகப் புழங்கிய காலம் இருந்தது. அந்தக் காலத் தமிழ் இலக்கியத்தில் வந்திருக்கிறது. பிறகு எப்படியோ, யாராலோ அது கெட்டவார்த்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. மேட்டுக்குடிப் புத்தியுடன் இருந்தவர்கள்தான் அதை மயிரைக் கீழே இறக்கி, முடியை மேலே ஏற்றி முடிசூட்டியிருப்பார்கள் என்று ஊகிக்கலாம். இப்போது, மக்களின் வலிகளையும் சீற்றங்களையும் மக்கள் மொழியிலேயே சொல்கிறபோது இப்படிப்பட்ட சொற்களை உணர்வுப்பூர்வமாகப் பயன்படுத்தலாம். பழகப் பழக, இயல்பான பேச்சில் கூட மயிரும் மற்ற “சோ கால்டு” கெட்ட வார்த்தைகளும் புழக்கத்திற்கு வந்துவிடும். புதிய பவணந்திகள் முகம் சுளிக்க மாட்டார்கள்.
அயர்ச்சியைத் தவிர்த்தால் வளர்ச்சி
“ஓசையுடைமை யாழமுடைத்தாதல்” ஆகியவற்றை ஐந்தாவது ஆறாவது அழகுகளாக ‘நன்னூல்’ முன்வைக்கிறது. ஓசையுடைமை என சந்த நயம், அலை போன்ற ஏற்ற இறக்கம் ஆகியவற்றைத்தான்சொல்கிறது . கவிதைக்கும் செய்யுளுக்கும் மட்டுமல்லாமல் பிறவகை எழுத்தாக்கங்களிலும் இந்த ஓசையுடைமை அழகு சேர்க்கும். இந்தக் கட்டுரையிலேயே கூட ஒரு பத்தியில் லயம், நயம், வயம் என்ற ஓசையுடைமைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.
ஒரு வரி “நோக்கம் நிறைவேறத் தேவைப்படுவது முயற்சி,” என முடிகிறதென்றால், அடுத்த வரியை “அதனால் காணலாம் வளர்ச்சி,” என முடிக்கலாம். “ஒரு நோக்கத்திற்காகத் தொடர்ந்து முயன்றுகொண்டே இருப்பதன் மூலம் அதில் வளர்ச்சியைக் காண முடியும்,” எழுதுவதை விட, இப்படி முயற்சி, வளர்ச்சி என ஓசை நயத்துடன் எழுதுவது சிறப்பு. அதனால் வாசகருக்குத் தவிர்க்கப்படும் அயர்ச்சி.
“யாழமுடைத்தாதல்” – என்னவோ ஏதோவென மிரண்டுவிட வேண்டாம். “ஆழமான உள்ளடக்கம், சிந்தனை இருக்க வேண்டும் என்பதையே பவணந்தியார் அன்றைய செய்யுள் நடையில் கூறியிருக்கிறார். கருத்தாழம் இல்லாமல் வெறும் ஜிகினாத் தூவலாக வார்த்தை அலங்காலங்களுடன் எழுதுவது “எதற்காக இந்தக் கட்டுரை” என்று வாசகரையும் கேட்கவைத்துவிடும், நம்மையும் யோசிக்க வைத்துவிடும்.
இங்கொரு முறைவாசல்
ஏழாவதாக “முறையின் வைப்பே” என்றும் எட்டாவதாக “யுலகமலை யாமை” என்றும் அழகுக் குறிப்புகள் தருகிறார் புலவர். “முறையின் வைப்பே” என்றால், முறையாக வரிசைப்படுத்திச் சொல்வதேயாகும். எதிலுமே ஒரு முறைவரிசையைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது அல்லவா? 1, 2, 3, 4, 5 என வரிசைப்படுத்தி 10 வரையில் ஏற்றிக்கொண்டே போவது ஒரு முறைவைப்பு. 10, 9, 8, 7, 6 என வரிசைப்படுத்தி 1 வரையில் இறக்கிக்கொண்டே போவது இன்னொரு முறைவைப்பு. 4, 7, 3, 9, 2, 8, 1, 5, 10, 6 என்று எழுதலாம்தான். அதில் அந்தப் பத்து எண்களும் வந்துவிடும்தான். ஆனால் தாறுமாறாக இருக்கிறது அல்லவா?
தலைமுறை தலைமுறையாக முறையாக வரிசைப்படுத்திய எண்களைச் சொல்லியும் கேட்டும் பழகிவிட்டோம், ஆகவே அது ஒரு பயிற்சியாகிவிட்டது. அந்தப் பயிற்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் அல்லவா? தலைவர் பின்னால் தொண்டர்கள் அணிவகுத்தார்கள் என்று கூறுவது ஒரு முறைவைப்பு. ஆனால் இன்று “அணிவகுத்த தொண்டர்கள் முன்னால் தலைவர் நின்றார்,” என்றும் சொல்கிற முறை மாற்றம் வந்துவிட்டது.
“யுகமலையாமை” எனும் “உலகமலையாமை” ஒரு அழகாம். அதாவது உலகம் மலைத்துப் போய் நிற்கும் வகையில் எழுதாமல் இருப்பது ஒரு அழகு என்று சொல்கிறார். உலகம் என்றால், பொதுவான வெளி உலகம் அல்ல, அந்த உலகம் யார் என்ன எழுதுகிறார்கள் என்று கவனித்துக்கொண்டா இருக்கப் போகிறது? வாசகர் உலகத்தைத்தான் இந்தச் சொல் குறிப்பதாக எடுத்துக்கொள்வோம். படிக்கிறவர்கள், இப்படியெல்லாம் இருக்கிறதா, அப்படியெல்லாம் நடக்குமா, என்ன ஒரேயடியாக ஓட்டுகிறாய் என்று நம்ப முடியாமல் திகைத்துப் படிப்பதை நிறுத்திவிடக்கூடாது.
அதேவேளையில், இதுவரையில் கேள்விப்பட்டிராத ஒன்றைப் புதிதாகக் கேட்கிறபோது மலைப்பு ஏற்படத்தான் செய்யும். எடுத்துக்காட்டாக, பூமியும், பூமியில் வாழும் உயிர்களும், மற்ற மற்ற கோள்களும், கோடி கோடி நட்சத்திரங்களும், பால்வெளி மண்டலங்களும், அண்டங்களும், பேரண்டமும் மகத்தான கடவுளால் படைக்கப்பட்டவை என்று குழந்தைப் பருவத்திலிருந்தே கேட்டு வளர்ந்து அதை முற்றுலுமாக நம்புகிற ஒருவர் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் என்ன சொன்னார் என்று படிப்பதாக வைத்துக்கொள்வோம். “ஈர்ப்பு விசை போன்றதொரு விதி இருப்பதால், பேரண்டம் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியும், உருவாக்கிக்கொள்ளும். தன்னிச்சையான உருவாக்கம்தான் ஏதுமற்ற நிலைக்கு மாறாக ஏதோவொன்று இருக்கிறது என்பதற்கும், பேரண்டம் ஏன் இருக்கிறது, நாம் ஏன் இருக்கிறோம் என்பதற்குமான காரணம். விசையை மூட்டி சங்கிலித்தொடராகப் பேரண்டத்தை இயங்கச் செய்வதற்கெனக் கடவுள் வரத் தேவையில்லை,” என்று அவர் சொன்னதைக் கேட்க மலைப்பு ஏற்படத்தானே செய்யும்? மேற்கொண்டு படித்துத் தெரிந்துகொள்ள வைக்கும் என்றால் உலகத்திற்கு அந்த மலைப்பு தேவைதானே? கற்பனைச் சரடுகளால் மலைத்து நிற்பதை விட, இயற்கை உண்மைகளால் மலைத்துப் போவது சாலவும் நன்றுதானே!

விழுமியமும் விளங்குமுதாரணமும்
பத்து அழகுகளில் கடைசி இரண்டாக “விழுமியது பயத்தல்”, “விளங்குதாரணத்ததாகுதல்” ஆகிய வழிகாட்டல்களைச் செய்கிறார் நன்னூலாசிரியர். “விழுமியது பயத்தல்“ என்ற வழிகாட்டலை, சிறப்பானவற்றைச் சொல்ல வேண்டும் என சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம். மிகவும் பயனுள்ள கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்று விரிவாகவும் எடுத்துக்கொள்ளலாம். இதில் குழப்பமே இல்லை. நல்ல மாற்றங்களையும் சிறந்த முன்னேற்றங்களையும் விளைவிக்கிற வகையில் எழுத வேண்டும்.
எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது, சமுதாயம் இப்படியே இருக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஜனநாயக அரசியல், மதச்சார்பற்ற அரசு, சாதியற்ற சமுதாயம், பெண்ணின் சுயம் உள்ளிட்ட மாற்றங்களை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சம் நகர்ந்திருக்கிற நிலையில், அவையெல்லாம் மேற்கத்திய கருத்தாக்கங்களே, அவற்றிலிருந்து பாரம்பரியக் கலாச்சாரத்திற்குத் திரும்பிச் செல்லும் மாற்றமே உண்மையான முன்னேற்றம் என்று பேசுகிறார்கள், நேரடியாக இல்லாமல் சுற்றி வளைத்து எழுதுகிறார்கள். இதைத் தள்ளுபடி செய்து மெய்யான, அனைவருக்குமான விழுமியங்களை எழுதிக்கொண்டே இருப்போம். ஒரு வணிகச் சரக்குக்கான விளம்பரத்தில் கூட அதன் சிறப்புகளை மையப்படுத்துகிறார்கள் என்கிறபோது, சமுதாய விடுதலைக்கான எழுத்தில் அதன் தேவைகளையும் மாண்புகளையும முன்னிலைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்தானே.
“விளங்குதாரணத்ததாகுதல்” என்று ஒரே சொல் போலச் சொல்லப்பட்டிருப்பதை “விளங்கு உதாரணத்து ஆகுதல்” என்று பிரித்துப் பார்த்தால் “விளங்கிக்கொள்ள உதவும் உதாரணங்களுடன் எழுதுக” என்ற வழிகாட்டலை விளங்கிக்கொள்ளலாம். இவ்வாறு பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் எழுதுவது பற்றித்தான் நாம் ஏற்கெனவே எடுத்துக்காட்டுகளுடனேயே பார்த்திருக்கிறோமே.
இந்தப் பத்தும் நல்ல நூலுக்கு அழகு என்று முடிகிறது ‘நன்னூல்’ தொகுப்பின் இந்த 13ஆவது நூற்பா. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழியைப் புதுமொழியாக்கி, விசைப்பலகை வேகமும் தட்டச்சுப் பழக்கம் எனலாம். கைப்பேசியிலேயே கூட விசைப்பலகையைத் தட்டத் தட்ட அதி வேகமாகத் தகவல்களை ஏற்ற முடிகிறது. எழுத எழுத அழகுகள் அணி சேரும்.
எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டியவற்றைப் பற்றியும் பவணந்தி சொல்லியிருக்கிறாரா என்று கேட்ட நண்பர்களுக்காக இந்த நூற்பாவை எடுத்துக்கூற முயன்றதில், “பேசும்போது சைகை, முகபாவம் உள்பட உடல்மொழியோடும் கருத்தைப் புரிய வைக்கிறோம். அந்த உணர்வை எழுத்தில் கொண்டுவர முடியுமா,” என்ற விசாரிப்பை இங்கே எடுத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. விசாரணை அடுத்த அமர்வுக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.
– அ.குமரேசன்