எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் கழுகுமலையில் 1960 இல் பிறந்தவர். பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் கரிசல் மண் பூமியான கோவில்பட்டியில் முடித்தார். எழுத்தாளர்கள் உதயசங்கர், சாரதி, அப்பணசாமி, மாரிஸ் ஆகியோர் அவரது பள்ளித் தோழர்கள். கல்லூரிக் காலங்களில் இவர்களுடன் இணைந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்திய அனுபவம் அவருக்கு உண்டு.
அவரது குறிப்பிடத்தக்க நூல்கள்:
- கனவில் உதிர்ந்த பூ
- ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்
- கண்முன்னே விரியும் கடல்
- ஒரு தொழிற்சங்கப் போராளியின் டைரிக் குறிப்பு
- ஸ்டேட் பேங்க் ஊழியரின் டைரி
- தட்டச்சுக் காலக் கனவுகள்
- யானைச் சொப்பனம்
- வேனுவன மனிதர்கள்
- மரத்துப்போன சொற்கள்
- திருநெல்வேலி நீர்நிலம் மனிதர்கள்
‘பிரேமாவின் புத்தகங்கள்’ என்கிற சிறார் நூலும் கடந்த ஆண்டு வெளியாகி, அவரது நூல்களின் பட்டியலில் இணைந்துகொண்டது. மேலும், ‘கனவில் உதிர்ந்த பூ’ என்கிற அவர சிறுகதையானது, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது..
“55 ஆண்டுகளில் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்து இருக்கிறேன். எத்தனையோ விதமான உணர்வுகள், அனுபவங்கள்… தீராத ஆசையோடு அனைத்தையும் எழுத வேண்டும். புத்தகமாக்க வேண்டும். மனுஷன் கெதியாய் இருக்கும்போதே எழுதிவிட வேண்டும். ‘பின்னால் பின்னால்’ என்று எதையும் தள்ளிப்போடக் கூடாது. இந்த நேரத்தில் இந்த தீர்மானத்தைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது…” என்று தன்னுடைய ‘இலை உதிர்வதைப் போல’ என்கிற நூலின் முன்னுரையில் எழுதி இருக்கிறார்.

ஒரு மனிதன் இந்த மண்ணில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல மனிதர்களின் வாழ்வை வாழமுடிவதும், அவர்களின் அனுபவங்களை நம் வாழ்வில் பொருத்திக் கொள்வதும் வாசிப்பின் மூலமே சாத்தியமாகிறது. அப்படி நான் சமீபத்தில் வாசித்த நூல்களில் என்னை மிகவும் ஈர்த்தது எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் ‘திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள்’ எனும் நூல்.
ஊர் நினைவு என்பது கள்ளுண்ட போதை போல என்கிறார் எழுத்தாளர் புதுமைப்பித்தன். திருநெல்வேலி அல்வா, அருவா ஆகியவற்றுக்கு மட்டுமல்ல; அந்த ஊரின் ஒவ்வொரு நூறு அடியும் ஒரு வரலாற்றுக் கதையைத் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. அந்த வரலாற்றை நாறும்பூநாதன் பதிவு செய்துள்ளார்.
ஊர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல – ரத்தமும் சதையுமாய் வாழ்ந்த மனிதர்கள், அவர்களின் நினைவுகள், வாழ்வியல், கலாச்சாரம், பண்பாடு, உணவுப் பழக்கவழக்கங்கள், புராதன அடையாளங்கள் என்று கூறிக்கொண்டே போகலாம். இவ்வாறு ஏராளமானவற்றை உள்ளடக்கிய ஊரின் வரலாற்றை மட்டுமே அவர் கூறவில்லை.
தனது சிறுகதைத் தொகுப்பின் வழியாக, தன்னோடு பயணித்த மனிதர்களின் கதைகளை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.
அவர் ஒரு சிறந்த களச் செயல்பாட்டாளர் மட்டுமல்ல; எழுத்தாளர் மட்டுமல்ல; மிகச் சிறந்த கதைசொல்லியும் கூட. கொரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த நேரத்தில், பெரும்பாலானவர்கள் கேட்டது கதைகளே. அந்த நேரத்தில் ஒரு கதை சொல்லியாக முகநூல் வழியாக தினமும் கதைகளைக் கூறிக் கொண்டிருந்தார். இதில் சிறார் கதைகளும் அடங்கும்.
முடங்கிக் கிடந்த கதைகளைத் தூசுதட்டி எழுப்பினார். தனக்கே உரித்தான நெல்லைத் தமிழில் அவர் கதைகளைக் கூறிய விதம், வாசிப்பின் வாசம் அறியாதவர்களைக் கூட வாசிப்பிற்குள் இழுத்து விடும்.
நான் முதன்முதலாக, கொரோனா காலகட்டத்தில், அவரது முகநூல் பக்கத்தில் அவர் கூறிய புஸ்மி புல்யூ’ என்ற கதையைக் கேட்டேன். அருமையான கதையை மிக அழகாகச் சொன்னார். பின்னர் இதைப் பற்றி எழுத்தாளர் உதயசங்கரிடம் பகிர்ந்தபோது, “அவன் என் ஆருயிர் நண்பன்” என்றார். அவரிடம் தொடர்பு எண் வாங்கி, “கதை சொல்லும் முறை அருமை!” என்று கூறினேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதன் பிறகு, அவரோடு நட்பு தொடர்ந்தது. அவரை நான் எப்போதுமே “என் சைக்ளோபீடியா” என்றே அழைப்பேன். அவ்வளவு தகவல்கள் அவரிடம் உண்டு. அவரோடு பேசும்போது, இலக்கியம், கதைகள், ஆளுமைகள் என, அவர் என்னிடம் பகிராத விஷயங்களே இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ‘கதை கதையாம்’ என்ற குழுவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோழமைகளோடு இணைந்து உருவாக்கினேன். அந்தக் குழுவில் நாங்கள் மொத்தம் ஆறு பேர் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தோம்.
‘கதை கதையாம்’ குழுவை வழிநடத்தியவர்கள் எழுத்தாளர் உதயசங்கரும், எழுத்தாளர் நாறும்பூநாதனும் ஆவர். “எப்படியான கதைகளைச் சொல்லலாம்? எதைத் தவிர்க்க வேண்டும்? குழந்தைகளுக்கு என்ன கதைகளைக் கொண்டு செல்ல வேண்டும்?” என்று எங்களை தொடர்ந்து வழிநடத்தினார்கள்.
அந்தக் குழுவில் அவர்களும் கதைகள் சொன்னார்கள். ஒரு குழந்தை, அவரது பெயரை உச்சரிப்பதில் சிரமப்பட்டு, “பூ தாத்தா என்று அழைக்கலாமா?” என்று கேட்டது. அன்றிலிருந்து, “பூ தாத்தா கதை சொல்ல வருகிறேன்!” என்று தொடங்குவார்.
“நான் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அங்கு எத்தனையோ பேர் வந்து என்னுடைய கதைகளை பற்றியும் என்னுடைய செயல்பாடுகளைப் பற்றியும் கட்டுரைகளைப் பற்றியும் சிலாகித்துப் பேசி இருக்கிறார்கள். ஆனால், குழந்தைகள் வந்து ‘பூதாத்தா கதை அருமையாக சொல்கிறீர்கள்!’ என்று கூறிய போது அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்” என்று என்னிடம் ஒருமுறை உரையாடிக் கொண்டிருக்கும்போது கூறினார்.
“இவ்வளவு அருமையாக கதை கூறுகிறீர்களே ஏன் குழந்தைகளுக்கு நீங்கள் எழுதுவதில்லை? எழுதுங்கள்” என்று நான் கூறினேன். (நான் சொன்னதால் அவர் எழுதினார் என்று கூறவில்லை!) ஏப்ரல் 2024ல் ஒரு நாள், என்னை அழைத்துப் பேசிவிட்டு, “மெயிலில் ஒரு கதை அனுப்பியுள்ளேன். வாசித்து பாருடா” என்றார்.
‘காட்டுக்குள் ஒரு காடு’ என்ற கதையை அனுப்பியிருந்தார். வாசித்து, அவரை அழைத்துப் பேசினேன். மிகவும் மகிழ்ச்சியடைந்து, “இனிமேல் தொடர்ந்து எழுதுவேன்!” என்றார். அவர் கூறியபடியே 2024 இல் ஏழு கதைகளோடு புத்தகம் வெளிவந்தது.
இன்றைய சமூகம் குழந்தைகளை எண்களின் பின்னே துரத்துகிறது. இலக்கியம், தனித்திறமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது மிகக் குறைவு. எந்தத் துறையிலும் படைப்பாற்றல் முக்கியம். அந்தப் படைப்பாற்றல், குழந்தைப் பருவத்தில் கதைகள் வழியாக குழந்தைகளுக்கு மேம்படுகிறது. சமீப காலமாக ஏராளமான சிறார் எழுத்தாளர்கள் புதிதாக எழுத வந்து கொண்டிருக்கிறார்கள். மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.
புதிது புதிதான சிந்தனைகள் கதைகள் வழியாக குழந்தைகளுக்குச் சென்றடைய இது ஏதுவாக இருக்கும். “குழந்தைகளுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்லாமல் விட்டாலும் தவறில்லை. ஆனால், எதைச் சொல்லக் கூடாதோ, அதை ஒருபோதும் சொல்லிவிடவே கூடாது!” என்பது என் தீர்க்கமான எண்ணம்.
என்னைப் பொறுத்தவரை, அறிவியல் பூர்வமான உண்மைகள் இல்லாத, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பேய்-பிசாசு, முனிவர்கள் பற்றியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, சொல்லக்கூடியதைச் சொல்லியும், சொல்லக் கூடாததைத் தவிர்த்தும் வந்த கதைத் தொகுப்புகளில் ஒன்று, எழுத்தாளர் நாறும்பூநாதனின் ‘பிரேமாவின் புத்தகங்கள்’. புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தபோது, மலையாளத்தில் வெளிவந்த ‘வீட்டைத் தொலைத்த புத்தகம்’ ஞாபகத்திற்கு வந்தது.
பிரேமாவின் புத்தகங்கள்
குழந்தைகள் உலகில், பேசாத பொருள்கள் பேசும்; குழந்தைகளோடு விளையாடும்; குழந்தைகளுக்குக் கதைகள் கூறும். அப்படியே இந்தக் கதையில் புத்தகங்களும் தங்களுக்குள் உரையாடிக் கொள்கின்றன.

புத்தக வாசனை பிரேமாவுக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு புத்தகமும் தனித்துவமான வாசனையைத் தருவதாக, ஒவ்வொரு புத்தகத்தையும் நுகரும்போது நினைத்துக் கொள்வாள். அன்று பள்ளி திறந்த முதல் நாள். அனைத்துப் புத்தகங்களும் வழங்கப்பட்டுவிட்டன. அப்புத்தகங்களுக்கு அட்டை போடுவதற்காக காகித அட்டைகளை வாங்கி வைத்திருந்தாள். சற்று நேரம் விளையாடிவிட்டு வெளியே செல்லும் வேளையில்தான், புத்தகங்கள் உரையாடத் தொடங்கின.
ஒவ்வொரு புத்தகமும் தன் சிறப்புகளைக் கூறிக்கொண்டது. “இதனால் என்னைத்தான் பிரேமா முதலில் எடுத்து அட்டை போடுவாள்!” என்று சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது தமிழ்ப் புத்தகம் மட்டும் எதுவுமே பேசாமல் இருந்தது.
பின்னர் என்ன நடந்தது? பிரேமா வந்து எந்தப் புத்தகத்தை முதலில் எடுத்து அட்டை போட்டாள்? அதற்கு என்ன காரணம் கூறினாள்? இதுதான் கதை.
மாடசாமி உண்மையிலேயே மக்குதானா?
மாடசாமி அந்த வகுப்பில் படிக்கும் மாணவர்களிலேயே கடைசி ராங்க் வகித்தான். கணக்கு ஆசிரியர் எப்போதும் அவனை “மக்கு மாடசாமி” என்றே அழைப்பார். அதனால் அவன் எல்லோருக்கும் “மக்கு மாடசாமி”யாகிவிட்டான்.
பள்ளிக்குப் புதிதாக வந்த ஜோதி டீச்சர் எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்வார். “மக்கு மாடசாமி” என்று அழைக்கப்படுவது ஜோதி டீச்சருக்கு வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் அரிசி பற்றிப் பாடம் நடத்தும்போது, எல்லா மாணவர்களிடமும் கேட்டார். யாருக்குமே அரிசி எப்படி விளைகிறது என்று தெரியவில்லை. ஆனால் மாடசாமி மட்டும் தெளிவாக விளக்கிக் கூறினான். அதன் பிறகு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் இக்கதையின் மிக முக்கியமான பகுதியாகும்.
ஆறறிவு
டிட்டு என்ற சிட்டுக்குருவி வழியாக:
ஐந்து அறிவு என்றால் என்ன?
ஆறறிவு என்றால் என்ன?
மனிதர்களுக்கு ஏன் ஆறறிவு என்று கூறுகிறார்கள்?
பகுத்தறிவு என்றால் என்ன?
என்பவற்றுக்கு விளக்கங்கள் தரப்படுகின்றன. மேலும் “ஜாதி என்றால் என்ன?” என்ற கேள்வியையும் எழுப்புகிறது. “மனிதர்கள் ஏன் நிறம் பார்க்கிறார்கள்? ஜாதி பார்க்கிறார்கள்? நாங்களெல்லாம் நிறம், ஜாதி பார்ப்பதில்லையே” என்று கேட்கிறது டிட்டு. இறுதியில் தன் நண்பர்களுடன் சேர்ந்து மனிதர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. அப்படி என்னதான் எழுதுகிறது?
மனிதருள் வேறுபாடு உண்டோ?
செல்வாவும் மணியும் நெருங்கிய நண்பர்கள். மணி மிகச் சிறந்த கதை சொல்லி. அதனாலேயே எல்லோருக்கும் அவனை மிகவும் பிடிக்கும். ஒரு நாள் மணியின் வீட்டிற்குச் சென்ற செல்வா அங்கு அவர்கள் அம்மா கொடுத்த திண்படங்களைச் சாப்பிட்டு விடுகிறான். வீட்டிற்கு வந்து தன் பாட்டியிடம் கூறியபோது, “அவங்க வீட்டில் ஏன் சாப்பிட்டாய்?என்று திட்டுகிறார்.
அன்று இரவு முழுக்க செல்வவிற்கு தூக்கம் வரவே இல்லை. பாட்டி ஏன் அப்படி கூறினார் என்று நினைத்துக் கொண்டே இருந்தான்.
ஒரு வாரம் கழித்து செல்வாவின் அப்பாவிற்கு ஒரு விபத்து நடந்து விடுகிறது. அப்பொழுது இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. நண்பர்களிடம் சொந்தங்களிடம் கேட்டுப் பார்த்தாகிவிட்டது ஆனால் யாரும் ரத்தம் கொடுக்கவில்லை. மணியின் அப்பா மட்டும் ரத்தம் கொடுக்க முன்வந்தார். செல்வாவின் அப்பா ரத்தத்தைப் பெற்றுக்கொண்டாரா? பிறகு என்ன நடந்தது? என்பதே கதை.
காட்டுக்குள் தெரிந்த இன்னொரு காடு
டிங்கு என்ற குரங்கு ஏதோவொன்றை வாயில் கவ்விக்கொண்டு வந்தது. முதலில் அது ஏதோ ஒரு உணவுப்பொருள் என்று நினைத்தது. வனத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் மூட்டு பகுதியில் அப்பொருளைச் சாய்த்து வைத்து, காலால் புரட்டியபோது, விரல்கள் பட்டதும் அப்பொருள் ஒளிர்ந்தது. அதனுள் சிறுத்தை, புலி பாய்வதைப் போலத் தோன்றியதும் பயந்து ஓடியது.
பிறகு மெதுவாக அதன் அருகில் சென்று பார்த்தது. தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்துவந்து காட்டியது. எல்லோரும் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அதை பார்ப்பது அவர்களுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அது என்னவென்று புங்கை மர கிளையில் அமர்ந்திருந்த குயில் கூறியது. “இது நம்மை சோம்பேறி ஆக்கி விடும். எடுத்த இடத்திலேயே கொண்டு போய் போட்டுவிட்டு வந்துவிடு” என்று சிங்க ராஜா கூறியதை கேட்டு, குரங்கு என்ன செய்தது? அது என்ன பொருள்?
கணக்கு எனக்குப் பிடிக்கும்
குமாருக்குக் கணக்கு அவ்வளவாக வராது. எப்போதும் கணக்குப் பாடத் தேர்வில் தோல்வியடைவான். அப்பாவிடம் அடி வாங்குவான். அதனால் ஒருநாள் கோபத்தில் கணக்குப் புத்தகத்தைத் தூக்கி எறிந்து உதைத்தான். கணக்குப் புத்தகம் ‘அழுதது’. அதன் அட்டை கழன்று விழுந்தது.
சற்று நேரம் கழித்து கணக்குப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு தொட்டுக் கும்பிட்டான். உதைத்தது தவறு என்று உணர்ந்தான். அப்போது கணக்குப் புத்தகம் அவனோடு உரையாடத் தொடங்கியது.
“ஏன் உனக்குக் கணக்குப் பிடிக்கவில்லை?” என்று கேட்டது.
குமார் நீண்டநேரம் யோசித்தான். ஆனால் பதில் தெரியவில்லை. கடைசியில், “ஆசிரியரைப் பார்த்தால் பயமா?” என்று கேட்டது. இதை யோசித்தபோது அது சரியான காரணமாக அவனுக்குத் தோன்றியது.
பிறகு என்ன நடந்தது? அந்த ஆண்டு முடிவில் குமார் கணிதத்தில் 78 மதிப்பெண்கள் பெற்றான். எப்படி?
பார்வதி அத்தையின் பொங்கல்
கோபாலும் கோமதியும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர். கடந்த ஒரு மாதமாகப் பள்ளியில் காலை உணவு கிடைப்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சி. ஏனென்றால், முன்பு பெரும்பாலும் பசியுடனேயே பள்ளிக்கு வருவார்கள். ரவா கிச்சடி பொங்கல், சாம்பார் சேமியா கிச்சடி என்று வகை வகையாய் தினமும் காலையில் பள்ளியில் கிடைப்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. தினமும் காலையில் பள்ளிக்கு வரும் வழியே “இன்று என்ன உணவு கிடைக்கும்?” என்று கோபால் எண்ணிக்கொண்டே வருவான்.
அன்று கோமதி, “இன்று நாம் பள்ளியில் சாப்பிடக்கூடாது” என்று கூறிவிட்டாள்.
“ஏன்?” என்று கேட்ட கோபாலுக்கு, “சாப்பிடக்கூடாது என்றால் சாப்பிடக்கூடாது தான்” என்று கூறிவிட்டுப் பள்ளிக்குள் சென்றுவிட்டாள் கோமதி.
பள்ளியில் சிலர் வந்திருந்தார்கள். சமையல் செய்து பரிமாறிய பார்வதி அத்தையைத் திட்டிக்கொண்டிருந்தார்கள். “இனிமேல் எங்கள் குழந்தைகள் இங்கு சாப்பிட வேண்டும் என்றால் பார்வதி இங்கே இருக்கக் கூடாது” என்று கூறினார்கள்.
‘ஏன்?’ என்று அறியாத கோபாலு, திரு திரு திருவென்று விழித்துக் கொண்டிருக்கிறான்.
இதைப் பார்த்து அழுது கொண்டிருந்த அத்தையிடம், “அழாதீங்க” என்று கூறினான்.
“மனுசங்க குழந்தையாகவே கடைசி வரை இருந்துட்டா எவ்ளோ நல்லா இருக்கும்” என்று எண்ணினார் பார்வதி. கோபாலு அத்தையின் கைகளை வாஞ்சனையுடன் பற்றிக் கொண்டான்.
என்ன நடந்தது எதனால் பார்வதியை சமைக்க வைக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
சிறார் கதைகளின் வழியாக சமூகப் பிரச்சினைகளைக் கூறலாமா? சமூகத்தில் சமீபமாக நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை கதைகளுக்குள் வைக்கலாமா? குழந்தைகளுக்கு இது தேவையா? இதையெல்லாம் விவாதங்களுக்குள் கொண்டு செல்லாமல், இந்தக் கதைகளை வாசித்துப் பார்த்தால் குழந்தைகளின் சமூகம் சார்ந்த மனநிலையையும் பள்ளிக்கூடம் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய மனநிலையையும் உணர்ந்து கொள்ள முடியும்.
சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், சாதிய வேறுபாடுகள் போன்றவற்றைக் கதைகள் மூலமாகக் கூறலாம் என்பதை முன்வைத்து எழுதியிருக்கும் இந்தத் தொகுப்பு குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, ஒவ்வொரு பெற்றோருக்குமானது, ஆசிரியருக்குமானது என்றே கூறலாம்.
சமீப காலமாக சிறார் இலக்கியத்திலும் அவர் தன்னுடைய செயல்பாடுகளை தொடர்ந்து முனைப்போடு மேற்கொண்டு வந்தார். சிறார் எழுத்தாளர்களையும் அவர் தொடர்ந்து ஊக்குவித்து வந்தார். திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறார்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து, அதை வெற்றிகரமாக நடத்தியும் இருக்கிறார்.
அவர் எழுதிய ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒரு இடத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இனிமேலும் இருப்பார். காற்றில் கலந்த பூ தாத்தாவின் கதைகளை வாசிப்போம். பரவலான வாசகர்களிடமும் கொண்டு சேர்ப்போம். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் இதயப்பூர்வமான அஞ்சலி.
சரிதா ஜோ
எழுத்தாளர், கதைசொல்லி
ஈரோடு
26/3/2025