இலக்கியம்சிறார் இலக்கியம்

எதிர்பாராத பிறந்தநாள் பரிசு – தீபா சிந்தன்

புள்ளி

இன்று பொன்னிக்கு பிறந்தநாள். அதுவும் ஆறாவது பிறந்தநாள். இந்த பிறந்தநாள் முடிந்ததும், பொன்னி ஒன்றாம் வகுப்பிற்குப் போவாள்.

இந்தப் பிறந்தநாளை ரொம்ப சிறப்பாகக் கொண்டாட, பொன்னியின் அப்பாவும் அம்மாவும் முடிவு செய்தார்கள். அதனால், அதிகாலையில் எழுந்து, பொன்னியின் அப்பா பொன்னிக்குப் பிடித்த ரெட் வெல்வெட் கேக் செய்தார். பொன்னியின் அம்மாவும் பலூன்கள் ஊதி, தோரணங்கள் கட்டினார். அந்த அறை முழுவதும் வண்ண வண்ணக் காகிதங்கள் ஒட்டி அலங்காரங்கள் செய்தார். பொன்னி கண் விழிக்கும் நேரமும் வந்தது. அவர்கள் வேலைகளை முடிக்கும் நேரத்தில், பொன்னியும் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தாள்.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், மகளே!” என அம்மாவும் அப்பாவும் ஒரே நேரத்தில் பொன்னியை வாழ்த்தினார்கள். அரைத் தூக்கத்தில் இருந்தாள் பொன்னி. அதனால், ஒன்றும் புரியாமல் அவர்கள் இருவரையும் பார்த்தாள். ஒரு சில நிமிடங்கள் கழித்துதான், இன்றைக்கு தன் பிறந்தநாள் என்று அவளுக்கு நினைவு வந்தது.

பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக அமைய, அம்மாவும் அப்பாவும் செய்த பலூன் அலங்காரங்களும், தோரணங்களும், கேக்கும் அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுத்தது. அம்மாவையும் அப்பாவையும் கட்டி அணைத்து, தன் மகிழ்ச்சியை அவள் வெளிப்படுத்தினாள்.

“இது மட்டுமில்லை, பொன்னி. பிறந்தநாள் பரிசாக, உனக்குப் பிடித்த சில பொருட்களையும் நாங்கள் வாங்கி வைத்திருக்கிறோம்,” என்றார் பொன்னியின் அப்பா.

“ஆனால், அதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பொருட்களை எல்லாம் இங்கே நம்ம வீட்டுக்குள்ளேயே ஒளித்து வைத்திருக்கிறோம். நீதான் அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அப்பா சொன்னார். உடனே, வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடி, பரிசுப் பொருட்களைத் தேட ஆரம்பித்தாள் பொன்னி.

அவளுடைய பூனை பாரியும் அவளுடன் சேர்ந்து பரிசுப் பொருட்களைத் தேடியது. வரவேற்பு அறையில் உள்ள சோபாவுக்கு மேலே, வண்ணத் தாளால் ஒரு பெட்டி அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது. அது நிச்சயம் தனக்கான பரிசுப் பொருளாகத்தான் இருக்கும் என்று பொன்னி நினைத்தாள். அதைப் பார்த்ததும் துள்ளிக் குதித்தாள். அவளுடைய கணிப்பு சரியாகத்தான் இருந்தது. அந்தப் பெட்டியில் என்ன இருந்தது தெரியுமா? அவளுடைய சுருள் முடியைச் சீவ அழகான புதிய சீப்பு ஒன்று இருந்தது. பொன்னிக்கு அந்தச் சீப்பு மிகவும் பிடித்திருந்தது.

“பொன்னி, உனக்காக நாங்கள் இன்னொரு பரிசுப் பொருளும் வாங்கி வைத்திருக்கிறோம். அதையும் கண்டுபிடிக்கிறாயா?” என்றார் பொன்னியின் அம்மா. பொன்னி சுற்றி முற்றிப் பார்த்தாள். சாப்பாட்டு மேசையில், அலமாரியின் பின்புறத்தில் என எல்லா இடத்திலும் ஓடி ஓடித் தேடினாள். பின்னர், டிவி மேசைக்கு அடியில் இருந்த இன்னொரு பரிசுப் பொருளையும் தேடி எடுத்தாள். அதில் என்ன இருந்தது தெரியுமா?

புஸ்புஸ்னு ஒரு சிகப்பு நிற பாண்டா பொம்மை.

“என்ன இது? பாண்டா கரடி கறுப்பு வெள்ளையாகத்தானே இருக்கும். இந்தக் கரடி ஏன் சிகப்பு நிறத்தில் இருக்கிறது?” என்று அம்மாவிடம் ஆச்சரியமாகக் கேட்டாள் பொன்னி. அதற்கு பொன்னியின் அம்மா, “இங்கே வா, பொன்னி. அதன் ரகசியம் என்னவென்று நான் உனக்குச் சொல்கிறேன்,” என்று அவளை அருகில் அழைத்தார்.

“சிகப்பு பாண்டா கரடிகள் எல்லாம் ரொம்ப சிறப்பானவை. சிறப்பான மனிதர்களுக்குத்தான் அவை கிடைக்கும். நீ எங்களுக்கு ரொம்ப சிறப்பானவள். அதனால்தான் இந்தச் சிறப்பான பரிசு உனக்கு. இந்தப் பாண்டா உயரமான மலைப் பகுதிகளில் வாழும். இமயமலையிலும் சீனாவின் சில மலைகளிலும் மட்டும்தான் இருக்கும். அப்புறம் மூங்கில்களை உணவாகச் சாப்பிடும்,” என பாண்டா கரடிகள் பற்றிய சில தகவல்களைப் பொன்னியிடம் கூறினார்.

பொன்னியும் அவற்றை எல்லாம் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டாள். ஆனால், பொன்னிக்கு என்னவோ அந்தச் சிகப்பு பாண்டா பொம்மை பார்க்க வினோதமாகத்தான் தெரிந்தது.

சரி, “இந்தப் பரிசுப் பொருட்களை ஆராய்ச்சி செய்தது போதும். போய்க் குளித்துவிட்டு வா. புது ட்ரெஸ் போட்டு, பிறந்தநாள் விழாவிற்குத் தயாராகலாம்,” என்றார் அம்மா. பொன்னியும் குளித்து முடித்து, புத்தாடை அணிந்து, பிறந்தநாள் விழாவிற்குத் தயாராகி வந்தாள். நீல நிற பிறந்தநாள் உடையில், அழகான வானத்துத் தேவதை போல் காட்சி அளித்தாள் பொன்னி.

சற்று நேரத்தில், பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த பொன்னியின் நண்பர்கள் சிலர் அவளது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் பொன்னியின் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த மரவீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். மதிய உணவு தயாரானதும், அம்மா அவர்களை அழைத்து விருந்து பரிமாறினார். பொன்னிக்காக அவள் அப்பா செய்த சுவையான கேக்கை நண்பர்களோடு சேர்ந்து வெட்டி, பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடினாள் பொன்னி.

விழாவும் சிறப்பாக முடிந்தது. நாள் முழுவதும் நண்பர்களுடன் விளையாடியதால், களைத்துப் போய்த் தூங்கச் சென்றாள் பொன்னி.

படுக்கையறைக்குச் சென்ற பின்னர், அப்பா வழக்கம் போல் கதைப் புத்தகம் ஒன்றைப் படிக்க எடுத்து வந்தார். பொன்னியின் அம்மா படுக்கை விரிப்பைத் தயார் செய்து வைத்தார். கதை கேட்டு முடிந்ததும், இரவு விளக்கை அணைத்து, இறுதியாக ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்து கூறினார். பின்னர், கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட், ஸ்வீட் பாண்டா. நிம்மதியாகத் தூங்கு,” என்று கூறிவிட்டுச் சென்றார் அம்மா.

அசதியாக இருந்தாலும், “பாண்டா” என அம்மா சொன்னது தான் பொன்னிக்குத் திரும்பத் திரும்ப நினைவிற்கு வந்தது. புரண்டு புரண்டு படுத்தும் பொன்னிக்கு ஏனோ தூக்கமே வரவில்லை. “எப்படி பாண்டா கரடி சிகப்பு நிறத்தில் இருக்கும்?” என்று யோசித்துக் கொண்டே இருந்தாள். “ஏன் இந்தப் பாண்டா பொம்மை ரொம்ப சிறப்பானது?” என்று அம்மா கூறினார்கள், என பலவித யோசனைகள் அவளைத் தூங்கவிடாமல் செய்தன.

அப்போது, திடீரென கட்டிலுக்கு அருகில் இருந்த அலமாரியில் யாரோ ஒருவர் மரப் பலகையைச் சுரண்டும் சத்தம் கேட்டது. “டேய், பாரி! நீதானா அலமாரியைச் சுரண்டுகிறாய்? அம்மா தான் உன்னை என்னோட படுக்கை அறைக்கு வரக்கூடாதுனு சொல்லி இருக்காங்கல்ல. இங்க ஏன் வந்த?” என்று படுக்கையில் இருந்தபடியே கேட்டாள் பொன்னி.

“ஹம்ம்ம்ம்ம்ம், ஹம்ம்ம்ம்ம்ம்,” என்று பதில் குரல் வந்தது. ஆனால், அந்தக் குரல் பாரியின் இயல்பான மியாவ், மியாவ் என்ற சத்தமாக இல்லாமல், வேறு விதமாக இருந்தது. 

“ஹம்ம்ம்ம்ம்ம், ஹம்ம்ம்ம்ம்ம்,” என்று மீண்டும் பதில் வந்தது.

பொன்னி சற்றே பயந்து, “யாரு? யாரது?” என்று மீண்டும் மீண்டும் கேட்டாள். கட்டிலுக்கு அருகில் இருந்த டார்ச் லைட்டைத் தேடி எடுத்துக்கொண்டாள். அலமாரிக்கு அடியில் குரல் வந்த திசையில் குனிந்து தேடினாள் பொன்னி. ஆனால், அங்கு பாரி இல்லை. வேறு யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை.

‘ஒருவேளை நான் ஏதோ கனவு கண்டுகொண்டிருக்கிறேனோ?’ என்ற குழப்பத்தில், ஒரு கையால் டார்ச் லைட்டை அடித்துக்கொண்டே, மெல்லக் கீழிறங்கி மின்விளக்கைப் போட்டாள். விளக்கு வெளிச்சத்தில், அவளது புதிய சிகப்பு பாண்டா பொம்மை தரையில் இருந்ததைப் பார்த்தாள். ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிப் பயந்து போனாள் பொன்னி.

“என்ன, பொன்னி? பயந்துவிட்டாயா? பாரிதான் என்னை இங்கே கொண்டு வந்து வைத்தான், பொன்னி,” என்று அவளிடம் சொன்னது சிகப்பு பாண்டா. “என்ன, பாண்டா பேசுகிறது?” என்று ஆச்சரியமாக அதையே பார்த்துத் திகைத்துப் போனாள் பொன்னி. 

“நீ… நீயா? நீயா பேசுகிறாய்? உனால் பேச முடியுமா?” என்று பாண்டாவிடம் கேட்டாள் பொன்னி.

“ஆமாம், பொன்னி. என்னால் பேச முடியும்,” என்று உற்சாகத்தில் கத்தியது பாண்டா கரடி. “என்னடா இது? இந்தப் பாண்டா கருப்பு வெள்ளையாக இல்லாமல் சிகப்பாக இருக்கிறதே, நிறம் மட்டும் தான் வேறானது என்று நினைத்தேன். ஆனால், இது மனிதர்கள் மாதிரி பேசுவதும் கூட புதிதாக இருக்கிறது,” என்று நினைத்துக் குழம்பிப் போனாள் பொன்னி. “இப்போது நான் என்ன செய்வது?” என்று புரியாமல், கட்டிலின் மீது ஏறி, மீண்டும் போர்வைக்குள் போய் ஒளிந்து கொண்டாள் பொன்னி.

இப்போது, அந்த அறையில் எரிந்துகொண்டிருந்த மின்விளக்கும் தானாக அணைந்தது. அது அந்த அறையை மேலும் இருட்டாக்கியது. இருட்டு அவளது பயத்தை இன்னும் அதிகரித்தது. பயமும் அழுகையும் ஒன்றாக வந்தது. ஓவெனத் தேம்பித் தேம்பி அழுதாள் பொன்னி.

பேசும் பாண்டா, “என்ன, பொன்னி? அழுகிறாயா? நீ போர்வைக்குள் ஒளிந்துகொண்டிருப்பதால், என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லை. நானும் முன்பு இருட்டைப் பார்த்தால் ரொம்ப பயப்படுவேன். ஆனால், இப்போது எனக்கு அந்தப் பயமெல்லாம் இல்லை. நான்தான் உன்னுடன் இருக்கிறேனே, நீ ஏன் அழுகிறாய்? நான் வேண்டுமானால், உனக்காக ஒரு பாட்டுப் பாடுகிறேன்,” என்று சொல்லிப் பாட ஆரம்பித்தது பாண்டா.

“சின்ன பாப்பா, எங்க செல்ல பாப்பா
சின்ன பாப்பா, எங்க நல்ல பாப்பா
சொல்லும் சொல்லைக் கேட்டு நடப்பாள் செல்ல பாப்பா.
தாத்தா பாட்டி சொல்லும் ……”

என்று பாட்டுப் பாடிக்கொண்டே, மெதுவாக பொன்னியின் கட்டிலின் மீது ஏறி, அவளைச் சமாதானப்படுத்தியது பாண்டா கரடி. கரடியின் கரகர குரலில் பாடிய அந்தப் பாப்பா பாட்டைக் கேட்டதும், பொன்னி தன்னை மறந்து சிரித்தாள். “நாம் நினைத்தது மாதிரி, இந்தப் பாண்டா அவ்வளவு மோசமாக இல்லை. என்னைக் கொஞ்சம் ஓவராகப் பேசுகிறது. கரகரனாகக் கட்டைக் குரலில் பாடுகிறது. மற்றபடி நல்ல பாண்டாதான்,” என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள் பொன்னி.

அதன்பின், அவர்கள் இருவரும் சேர்ந்து வேறொரு புதிய பாட்டுப் பாடினார்கள். பாடி முடித்ததும், அந்தச் சிகப்பு பாண்டாவைக் கையில் அணைத்தபடியே படுக்கையில் படுத்து அசந்து தூங்கிப் போனாள் பொன்னி. அம்மா சொன்னது போல, நிஜமாகவே இந்தப் பாண்டா ரொம்ப சிறப்பானது தான். என் பிறந்தநாளுக்குக் கிடைத்த சிறப்பான பரிசு என்று மனதில் நினைத்துக்கொண்டே ஆழ்ந்து தூங்கினாள் பொன்னி.

– தீபா சிந்தன்

Leave a Reply