இலக்கியம்

என்ன நடக்கிறது இந்திய எல்லைகளில்? – செல்வராஜ்

549 (1)

– செல்வராஜ்

(மாநில இணைச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்)

இந்தியாவை அதன் எல்லைகள் வழியாகப் புரிந்து கொள்ள முயன்ற ஒரு இளம் பெண்ணின் கண்ணில்பட்டது, கட்டுப்பாடற்ற இராணுவத்தால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், சுதந்திரத்திற்காக ஏங்கும் மக்களின் குமுறல்களும்தான். ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மார், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. நேபாள், பூடான் மற்றும் கடல் வழி அண்டை நாடான இலங்கை போன்ற நாடுகளும் உள்ளன. ஒவ்வொரு நாட்டுடனும் இந்தியாவிற்கு ஒரே மாதிரியான அணுகுமுறை இல்லை. இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்கள் வெளியுறவுக் கொள்கையில் எடுக்கும் முடிவுகள், எல்லை மாநிலங்களில் வாழும் இந்திய மக்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் மக்களைப் போல, எல்லைக் கிராமங்களில் வாழும் மக்கள் இயல்பாக வாழ முடியவில்லை என்பதை உறுதியாகக் கூறலாம். ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மறுப்பதோடு, அவற்றை ஒடுக்கும் செயல்களையும் மேற்கொள்கின்றனர். ஆசிரியர் சுசித்ரா விஜயன், 8 ஆண்டுகளாக 9000 மைல்கள் பயணம் செய்து, அவர்களின் மனவோட்டத்தை இந்தப் நூலில் பதிவு செய்துள்ளார்.

போலித் தேசபக்தர்களின் அராஜகம்:

பாஜக ஆட்சிக் காலத்தில், தேசப் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது. 2016 நவம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு, திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார். ஒருபுறம், “புதிய இந்தியா பிறக்கிறது” என்று நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட வலதுசாரி ஆதரவாளர்கள் இதை வரவேற்றனர். மறுபுறம், வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை எடுக்க வரிசையில் நின்ற இந்திய குடிமக்கள் இறந்து கொண்டிருந்தனர். அப்போதும், வலதுசாரிகள், “இராணுவ வீரர்கள் நம் நாட்டைப் பாதுகாக்க எல்லையில் நின்று கொண்டிருக்கிறார்கள்; நம்மால் நாட்டுக்காக சில மணி நேரம் வங்கியில் நிற்க முடியாதா?” என்று சாதாரண குடிமக்களின் தேசிய உணர்வைக் கேள்விக்குள்ளாக்கினர். இப்படி, போலித் தேசபக்தர்கள் தினந்தோறும் நடத்தும் நாடகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், உண்மையில் இந்திய எல்லையில் என்ன நடக்கிறது? எல்லையில் வாழும் இந்திய மக்கள், இந்திய அரசு குறித்து என்ன நினைக்கிறார்கள்?  

1947 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒன்றுபட்ட இந்தியா, இந்தியா-பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிய, அவசரகதியில் வரையப்பட்ட ராட்க்ளிஃப் எல்லைக் கோடுகள், இலட்சக்கணக்கான உயிர்களைப் பலியாக்கின. அது மட்டுமா? இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றுவரை அந்த நிலை தொடர்கிறது. இதைப் பற்றிப் பேச இந்திய அரசு தயாராக இல்லை. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்; ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை, தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) என்ன செய்யும்?

2009 ஆம் ஆண்டு டிசம்பர் 16 முதல், அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஆமிர் ஹக்கீம். மியான்மார் நாட்டிலிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவுக்குத் தப்பி வந்த ரோஹிங்கியா இஸ்லாமிய இளைஞனுக்கு, இன்றுவரை விடுதலை கிடைக்கவில்லை என நூலில் ஆசிரியர் பதிவு செய்கிறார். இவரைப் போல, இன்னும் பலர் தடுப்பு முகாம்களில், இந்திய நாட்டின் கருணைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், 2019 ஆம் ஆண்டு, குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், பலரின் குடியுரிமைக் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது பாஜக அரசு. 11 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலே, ஜாதி, மதம், இனம் கடந்து இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று 1955 குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் இஸ்லாமியர் அல்லாத இந்து, கிறிஸ்தவ, பார்சி, புத்தர், ஜைன, சீக்கியர்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறையை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியர்களும், இலங்கையைச் சேர்ந்த தமிழர்களும், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தியக் குடியுரிமை பெற முடியாது என்பது, மீண்டும் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் மற்றும் மியான்மர் ரோஹிங்கியா மக்களை நாடற்றவர்களாக மாற்றும் பேராபத்தை உருவாக்கியுள்ளது.  

அதுமட்டுமல்லாமல், 1982 ஆம் ஆண்டு மியான்மாரில் கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டம், ஏறக்குறைய பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றியதைப் போல, அசாமில் கொண்டு வரப்பட்ட தேசிய மக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), ஏறக்குறைய 20 லட்சம் மக்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதேபோல், இந்தியாவில் 15 சதவீதத்திற்கும் மேல் உள்ள இஸ்லாமிய மக்களின் குடியுரிமையும் கேள்விக்குறியாகும் வாய்ப்பு உள்ளது என்பதை ஆசிரியர் எச்சரிக்கிறார்.

காஷ்மீர் மக்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் பாஜக

ஹிலால் அஹமத் தர், தனது சொந்த ஊரான அலூசாவிலிருந்து 3 மணி நேரப் பயணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். தனது திருமண ஏற்பாட்டுக்காக 3 நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்தார். 24 ஜூலை 2012 மாலை 5.15 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், இரவு 11.45 மணிக்கு ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவினரால் (27 ஆர்.ஆர்) நடத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். ஹிலாலைத் தீவிரவாதி என்று கூறிய இராணுவம், பின்னர் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. தீவிரவாதி என்று முத்திரை குத்தி, ஒருவரை எளிதாகப் போலி என்கவுண்டர் செய்வது, காஷ்மீரில் இயல்பாக நடக்கிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான், ஆசிரியர் புத்தகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஹிலால் அஹமத் தரின் படுகொலை. ஏறக்குறைய 80 லட்சம் காஷ்மீர் மக்களை, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொண்டு அடக்கி வைத்திருக்கிறது பாஜக அரசு. காஷ்மீர் மக்களுக்கு, அவர்கள் விரும்பும் உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என முழக்கமிடக் கூட உரிமையில்லாதவர்களாக இருக்கிறார்கள்.  

2025 மார்ச் 5 ஆம் தேதி, லண்டனில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், ஒரு பத்திரிகையாளர் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு, “பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் (பி.ஒ.கே) பகுதியை இந்தியா மீட்டால், பிரச்சினை முடிந்துவிடும்” என்று பதிலளித்தார். அதற்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மார்ச் 7 ஆம் தேதி சட்டமன்றத்தில், “பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பற்றி மட்டும் பேசும் நீங்கள், ஏன் சீனா கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பற்றிப் பேச மறுக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். உமர் அப்துல்லாவின் கேள்வியை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். என்றைக்காவது நாமும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பற்றிப் பேசியிருப்போமா? காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால், காஷ்மீர் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டிருப்போமா?  

இந்தப் புத்தகம், தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் பாஜக மேற்கொள்ளும் அரசியல் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

எல்லைப் பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அந்த மக்களோடு முடியப் போவதில்லை. நாளை நமக்கும் இதே நிலை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்திய மக்களின் வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப, பாஜக அரசு எல்லைப் பிரச்சினையைப் பயன்படுத்துகிறது. அவர்களின் தேர்தல் வெற்றிக்காக, அப்பாவி மக்களைப் பலியாக்குகிறது. எல்லையில் இருள் படிந்துள்ள மக்களின் வாழ்க்கையை, நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் ஆசிரியர் சுசித்ரா விஜயன்.  

2021 ஆம் ஆண்டு, “Midnight’s Borders: A People’s History of Modern India” என்று ஆங்கிலத்தில் வெளிவந்து பலரால் வரவேற்கப்பட்ட இந்த நூலை, தமிழ் மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, நல்ல வடிவமைப்புடன் தமிழில் பதிப்பித்த சீர்மை பதிப்பகத்தையும், ஆங்கிலத்தில் உணர்வுபூர்வமாகச் சொன்ன நிகழ்வுகளை அதே உணர்வோடு மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் ஞான.வித்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட கதைகளைப் போல, ஓராயிரம் கதைகள் இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கின்றன. “என்ன செய்யப் போகிறோம் நாம்?” என்ற கேள்வியை, இந்தப் புத்தகம் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தும்.  

நூலின் பெயர்: நடுநிசி எல்லைகள் – நவீன இந்தியாவின் மக்கள் வரலாறு  

ஆசிரியர்: சுசித்ரா விஜயன்  

தமிழில்: ஞான. வித்யா  

வெளியீடு: சீர்மை பதிப்பகம்  

விலை: ரூபாய் 460  

தொடர்புக்கு: 8072123326 

– செல்வராஜ்

(மாநில இணைச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்)

1 Comment

Leave a Reply