ஒரு பள்ளியில் மாணவர்களுடன் கட்டுரையாக்கம் தொடர்பாக உரையாடியது பற்றிய பகிர்வுடன் முந்தைய கட்டுரையிலிருந்து விடைபெற்றோம். பயிற்சியளிக்கச் சென்றிருந்த குழுவின் பதில்களைப் பாருங்கள். ஒரு பதிலின் முடிவில் “கூறினோம்” என்று இருக்கிறது. மற்றொரு பதில் “சொன்னோம்” என்று முடிகிறது.
பொதுவாகவே கட்டுரை, கதை, கவிதை என எதிலுமே ஒரே சொல் திரும்பத் திரும்ப வருவதைத் தவிர்ப்பது அந்த எழுத்தாக்கம் அலுப்பைத் தருவதைத் தடுக்கும். ஒரே பொருள் தரக்கூடிய வேறு வேறு சொற்களைப் பயன்படுத்துவது ஒரு புத்துணர்ச்சியைச் சேர்க்கும். தமிழில் ஒரே பொருளைத் தரக்கூடிய பல சொற்கள் இருக்கின்றன. மகிழ்ச்சி, ஆனந்தம், களிப்பு ஆகிய நான்கு சொற்களுக்கும் ஒரே பொருள்தான். இந்தச் சொற்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தும்போது படிக்கிறவருக்கு உவகை ஏற்படும்.
“தன் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த வேள்பாரி, அவர்களைக் காப்பதற்காக எதுவும் செய்யத் துணிந்திருந்தான். பரம்புக் குடிகளும் அவன் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார்கள். சு.வெங்கடேசன் எழுதியுள்ள ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலில் இதையெல்லாம் படிக்கிறபோது நமக்கு அந்த மண்ணின் மீது அன்பு பிறக்கிறது.”
மேலே உள்ள பத்தியில் அன்பு என்ற சொல் மூன்று முறை வருகிறது. அதே போல “மீது” என்ற சொல்லும் மூன்று இடங்களில் அமர்ந்திருக்கிறது. இதனை எப்படி மாற்றலாம்?
“தன் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த வேள்பாரி, அவர்களைக் காப்பதற்காக எதுவும் செய்யத் துணிந்திருந்தான். பரம்புக் குடிகளும் அவனிடம் அளவற்ற நேசம் வைத்திருந்தார்கள். இதையெல்லாம் படிக்கிறபோது நமக்கு அந்த மண்ணின் மேல் காதல் பிறக்கிறது.”
இவ்வளவுதான். இது எளிதாகவும் இருக்கிறது, இனிதாகவும் அமைகிறது. இதே புரிதலுடன்தான், முதல் பத்தியில் குறிப்பிட்டிருக்கிறபடி “கூறினோம்”, “சொன்னோம்” என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டுமே “வெளிப்படுத்தினோம்” என்ற பொருளைத்தான் குறிக்கின்றன. இவ்வாறு ஒரு வாக்கியத்திலோ பத்தியிலோ திரும்பத் திரும்ப ஒரே சொல்லைப் போட வேண்டியிருக்குமானால், அதே பொருளைத் தருகிற வேறு சொற்களை நினைவுக்குக் கொண்டு வந்து அவற்றைச் சேர்ப்பது எழுதுவதை சுவையாக்கும், வாசிப்பதை சுகமாக்கும்.
இவ்வாறு ஒரே பொருளைத் தருகிற பல சொற்களைப் பயன்படுத்துவது போலவே, ஒரே சொல்லைப் பல பொருள்களில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பும் அமையும். அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிடக்கூடாது. சிறை என்ற சொல்லுக்கு நாம் வழக்கமாக அறிந்த, காவலில் வைக்கும் இடம் என்பதல்லாமல், இறகு என்ற பொருளும் இருக்கிறது. சாறு என்ற சொல்லுக்கு விழா, கள் என்ற பொருள்களும் இருக்கின்றன. காலுக்கான அணிகலனாக சிலம்பு மாட்டலாம், வீர விளையாட்டில் சிலம்பு சுற்றலாம். மரத்தில் பறவைக் கூட்டம் சித்திரமாக அமர்ந்திருந்தது என்று சொல்கிறபோது அந்தக் காட்சி ஓவியம் போல இருந்தது என்றும் உணர வைக்கும், அழகாக இருந்தது என்றும் புரிந்துகொள்ளச் செய்யும்.
900 ஆண்டுகளுக்கு முன்
இது பற்றி 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் புலவரான ஒரு சமணத் துறவி எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கணத்திற்கு ஒரு புதிய கொடையாக வந்தது பவணந்தி முனிவர் வழங்கிய ஒரு நூல். அழகுற எழுதுவதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று விளக்கும் அந்த நூலில் உள்ள வரிகள் இவை:
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயன் இன்மை
என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே

இது, ஒரு புத்தகம் எழுதும்போது தேவையின்றிச் செய்யக்கூடிய பத்து செயல்கள் பற்றிய ‘நன்னூல்’ செய்யுளாகும். “பத்துக் குற்றங்கள்” என்றே இவற்றை அந்நூல் கூறுகிறது. குறிப்பிட்ட ஒரு பொருளை விளக்குவதற்குத் தேவையான சொற்களை விடக் குறைவாகக் கூறுவது (போதாமை), தேவையான சொற்களைவிட அதிகமாகக் கூறுவது (வளவளப்பு) , சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது (அலுப்பு), ஏற்கெனவே சொன்னதற்கு மாறாகச் சொல்வது (முரண்பாடு), தவறான சொற்களைச் சேர்ப்பது (பக்குவமின்மை), சொல்ல வந்ததை தலைசுற்றும் வகையில் கூறுவது, (கருத்துக் குழப்பம்), பொருளேதுமின்றி சொற்களை அடுக்குவது (இலக்கின்மை), தொடங்கிய செய்தியை அந்தரத்தில் விட்டுவிட்டு நடுவிலேயே வேறொன்றைப் பற்றி எழுதி எங்கேயோ போவது (தடம் மாறுதல்), விரிவாகத் தொடங்கி போகப் போகச் சொற்களும் பொருளும் சுருங்கி முடிப்பது (அரைகுறை), அருமையான சொற்களேயானாலும் பொருளை விளக்க முடியாத வகையில் போடுவது (பயனற்ற ஒப்பனை) – இவையெல்லாம் குற்றமெனக் கூறுகிறார் பவணந்தி முனிவர்.

12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவரான பவணந்தி முனிவர் அப்போதே ஒரு நூலை எழுதுவதில் தவிர்க்க வேண்டியவை குறித்து இவ்வாறு கூறியிருக்கிறார். இவற்றை விலக்கினால் நூல் சிறப்பாக அமையும் என்ற நல்ல நோக்கத்துடன் அன்றைக்கே ‘சுவையாக எழுதுவது ஒரு சுகம்’ தொடர் ஒன்றை அவர் எழுதினார் போல! இன்றைக்கு நாம் இதனைக் கட்டுரையாக்கம் உள்ளிட்ட நமது எழுத்தாக்கங்களிலும் பின்பற்றலாம் அல்லவா?
இந்தப் பத்தியில் கூட, சொல்லாடலின் சுவையோடு தொடர்புள்ள ஒரு செயல் இருக்கிறது. “…. அவர் எழுதினார் போல” என்று வியப்புக் குறியோடு அந்த வாக்கியம் முடிகிறது. “போல” என்ற சொல்லை “மாதிரி” என்ற பொருளில்தான் பொதுவாகப் பயன்படுத்துவோம் இல்லையா?
யார் அவருடைய தோழன்?
“உலகில் எங்கேனும் நடக்கும் அநீதிக்கு எதிராக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே!” –இப்படி எழுதிச் சென்ற சே குவேரா வாழ்க்கையைப் படிக்கிறபோது அவரைப் போல நாமும் வாழ்க்கையை உலகத்திற்காக ஒப்படைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இங்கே “போல” என்ற சொல், குவேராவை முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களுக்காகப் போராட வேண்டும் என்ற பொருளைக் கூறப் பயன்படுகிறது. இதே போல பல மாதிரிகளைச் சொல்லலாம். குயிலைப் போலப் பாடினாள், மயிலைப் போல ஆடினான், பாசிசவாதிகளைப் போலக் கட்டுக்கதைகளைப் பரப்பாதே… இப்படியெல்லாம் வருகிற “போல” என்ற சொல், “மாதிரி” என்ற பொருளைத் தருகிறது. தனது லட்சிய உலகம் உருவாகும் என்ற எதிர்பார்ப்போடு சே அவ்வாறு எழுதினார் போல என்று கூறும்போது, அந்த எதிர்பார்ப்போடுதான் அவர் எழுதினார் என்ற கருத்தையும் அதில் நம் பரவசம் கலந்த ஈடுபட்டு உணர்வையும் வெளிப்படுத்துகிறோம்.

இவ்வாறு தமிழ்க் காட்டுக்குள் நுழைந்தால் வண்ண வண்ண மலர்களாகவும், மாறுபடு சுவைக் கனிகளாகவும், மருத்துவ மூலிகைகளாகவும் ஏராளமான சொல் வளத்தோடு திரும்பி வரலாம். தமிழ்ச் சொல்லறிவை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்று எழுத்தாக்கம் தொடர்பான முகாம்களில் நிச்சயமாகக் கேட்கப்படுகிறது. அகராதி நூலை மேசையில் வைத்துக்கொண்டு, பக்கங்களைப் புரட்டி, ஒரு சொல்லைத் தேடி, அதற்கான மாற்றுச் சொற்களைப் பார்த்து, அவற்றிலிருந்து ஒன்றை எடுத்துப் போட்டால் கூட நிறைய சொல்வளத்தோடு கட்டுரை அமைந்திருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது அந்த அகராதியின் சொல்லறிவுதானேயன்றி நம்முடையதாகாது அல்லவா? மேலும் அது காட்டிக்கொடுத்துவிடும்!
நிச்சய வழி
அந்த முகாம்களில் நிச்சயமாக அளிக்கப்படுகிற பதிலை இங்கே பகிரலாம். நிறையப் படிப்பதுதான் ஒரே நம்பகமான உறுதியான வழி. அனுபவப்பூர்வமான இன்னொரு வழியும் இருக்கிறது – பல்வேறு உரைகளைக் கேட்பது. இந்த இரண்டாவது வழியைக் கொஞ்சம் நீட்டிக்கலாம் – மக்களோடு உரையாடுவது. வாசிக்கிறபோது வளமான சொற்கள் மனதில் பதிந்துவிடும். கேட்கிறபோது மாறுபட்ட சொற்கள் நம்மிடமும் வந்துசேரும். உரையாடுகிறபோது வாழ்க்கை நடைமுறை சார்ந்த சொற்கள் அறிமுகமாகும்.

கம்பன் பற்றிப் பல தலைமுறைகளாகச் சொல்லப்படுகிற ஒரு செய்தி உண்டு. ஒரு நாள் அவர் வயல் வரப்பில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது கிணற்றிலிருந்து ஏற்றத்தில் நீர் இரைத்துப் பாய்ச்சிக்கொண்டிருந்தவர் பாடியதைக் கேட்டாராம். அந்தப் பாட்டின் இடையில் “மூங்கில் இலை மேலே தூங்கும்…” என்ற வரி வருகிறது. ஏற்றக்காரர் அந்த வரியை ஏற்ற இறக்கத்தோடு திரும்பத் திரும்பப் பாட, அடுத்த வரியை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு கம்பர் மெதுவாக நடந்தாராம். ஆனால் அந்த நேரம் பார்த்து உணவுண்ண அழைப்பு வந்ததால் ஏற்றக்காரர் பாட்டை அப்படியே நிறுத்திவிட்டுப் போய்விட்டாராம். கம்பர் நினைத்திருந்தால் அந்த வரியை அவரே வளர்த்துச் சென்றிருக்க முடியும். ஆனால் ஏற்றக்காரரின் கற்பனையில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விரும்பி, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து காத்திருந்தாராம். திரும்பி வந்த ஏற்றக்காரர், விட்ட இடத்திலிருந்து பாட்டைத் தொடர, “தூங்கும் பனி நீரே” என்ற அடுத்த வரியைக் கேட்டு இவர் மயங்கினாராம். அதற்கடுத்த வரியோ ஆளையே அசத்திவிட்டதாம் – “தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே!”
ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை என்ற பழமொழியை நினைத்தபடி ஏற்றக்காரரைப் பாராட்டிவிட்டுச் சென்றாராம் கம்பர். இது உண்மையிலேயே நடந்த செய்தியா, அல்லது காலங்காலமாகப் புழங்கிவருகிற புனைவா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், எழுத்தாளர்கள் சொல் நீர் பாய்ச்சப்படுவதற்காக எங்கேயும் போவார்கள், நனைந்து திரும்புவார்கள் என்று காட்டுவதற்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! எளிய மக்களிடம் இனிய சொல்வளம் இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறதே! இவ்வாறு வாசித்ததாலும் வாங்கிக்கொண்டதாலும், மார்தட்டி மனப்பாடம் செய்யாமலே மனதில் குடியேறி அமைதியாக இருக்கும் சொற்கள், நாம் எழுத உட்காரும்போது, பேச எழும்போது வரிசை கட்டி வந்து நிற்கும். என்னைப் பயன்படுத்திக்கொள், என்னைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டாயா என்று நம்மோடு வாதிட்டுத் தேர்ந்தெடுக்க வைக்கும்.

உள்ளது உள்ளபடி?
“வர்ணனையோடு எழுதுவதும், கற்பனையான மனிதர்களைச் சித்தரிப்பதும் பழைய உத்திகள். நேரடியாக, உண்மையான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி எழுதுவதுதான் இன்றைய வளர்ச்சி என்று ஒருவர் சொன்னார். வர்ணனையும் கற்பனையும் கூடாதா?” புதிதாக எழுதப் புறப்பட்டிருப்பவர்களுடனான ஒரு சந்திப்பில் இந்த வினா வந்தது. இப்படியும் சொல்கிறவர்கள் இன்றைக்கு இருக்கிறார்களா என்ற வியப்பு முதலில் ஏற்பட்டது. சுவையாக எழுதுவது, சுகமாக வாசிப்பது இரண்டிற்குமே வர்ணனைகள் எந்தக் காலத்திலும் பெருந்துணையாக இருந்து வந்திருக்கின்றன, இப்போதும் இருக்கின்றன. வர்ணனையோ கற்பனை நயமோ இல்லாமல் நேரடியாக, உண்மைத் தகவல்களை மட்டும் பதிவு செய்வதென்றால் அது அரசாங்க ஆவணமாகத்தான் இருக்க முடியும். அல்லது ஏதாவது வணிக ஒப்பந்தமாகத்தான் இருக்க முடியும். (அந்த ஆவணங்களிலேயே கூட, கையில் ஊட்டப்பட்ட பணத்திற்கேற்ப பொய்யான தகவல்களைச் சேர்த்துக் கற்பனைமயமாக்கியிருப்பார்கள், அந்த மோசடியால் பலர் தங்களுடைய நிலம் உள்ளிட்ட உடைமைகளை இழந்திருக்கிறார்கள், நுணுக்கமான நிபந்தனைகளால் பலர் தங்களின் உரிமைகளைப் பறிகொடுத்திருக்கிறார்கள்.)
கதை, கவிதை, கட்டுரை என்று வருகிறபோது வர்ணனையும் கற்பனையும் இரத்த ஓட்டம் போலக் கலந்துவிடும். அப்படி யாராவது வர்ணனையோ கற்பனையோ இல்லாமல் நேரடியாக எழுதி வெற்றி பெற்றிருப்பாரானால் அதற்காகப் பாராட்டலாமே தவிர, அதையே பின்பற்ற வேண்டும் என்பதில்லை. கண்டிப்பாக வர்ணனையும் கற்பனைப் பாத்திரங்களும் சேர்த்து எழுதுவதைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதும் இல்லை. நாம் எடுத்துக்கொள்ளும் கருப்பொருளும், அதைப் பரவலாகக் கொண்டுசெல்லும் அக்கறை, யாருக்காக எழுதுகிறோம் என்ற வாசகத் தளம் இவையெல்லாம் இதைத் தீர்மானிக்கும். வேள்பாரி, பவணந்தி, சே குவேரா, கம்பர், ஏற்றக்காரர் என இக்கட்டுரைக்காக வந்திருக்கிற எல்லோருமே வர்ணனையோடும் கற்பனையோடும் எழுதுவதற்குத் துணை செய்திருக்கிறார்கள்தானே?
“பேசும்போது சைகை, முகபாவம் உள்பட உடல்மொழியோடும் கருத்தைப் புரிய வைக்கிறோம். அந்த உணர்வை எழுத்தில் கொண்டுவர முடியுமா?” இப்படியொரு சுவையான விசாரணையும் வந்திருக்கிறது. அதற்கான விடை மனதில் இருக்கிறது. அடுத்த சந்திப்பு அதைப் பகிர்ந்துகொள்ளத்தான்.
– அ.குமரேசன்