இலக்கியம்தொடர்கள்

வெளிநாட்டுப் பெயர்களுடன் வேற்றுமை (உருபு) பாராட்டலாமா? (சுவையாக எழுதுவது சுகம் – 17) – அ.குமரேசன்

549

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க

கையில் பழைய டெடி பேருடன் ஓடிவந்த குட்டிப் பெண் லில்லியைப் பார்த்து இலைகளை ஆட்டி வரவேற்றது ஓக் மரம். அந்த மரத்தடிதான் லில்லியும் அவளுடைய கற்பனை நண்பனான பார்னபியும் ரகசியமாகச் சந்தித்துக்கொள்ளும் இடம். இன்னொரு கையில் பிடித்திருந்த துணிப் பையில் அவள் குட்டிக் குட்டி வண்ண வண்ணக் கூழாங்கற்களையும் ஒரு நீல நிற இறகையும் வைத்திருந்தாள். அவற்றைப் போன்ற இயற்கையின் பரிசுகளை அவள் அடிக்கடி எடுத்து வருவாள், யாருக்கும் காட்டவோ கொடுக்கவோ மாட்டாள். கற்பனை விளையாட்டில் பார்னபிக்கு மட்டும் எடுத்துக் காட்டிவிட்டு மறுபடியும் பையில் போட்டுக்கொள்வாள். பார்னபியே, “இதை நீயே பத்திரமா வச்சிரு லில்லி,” என்று சொல்வதாகக் கற்பனை செய்துகொள்வாள். ஒரு சாகசக் கதையைக் கற்பனை செய்த லில்லி அதில் பார்னபியை துணிச்சல்காரனான காஃப்ரியோடு குதிரையில் ஏற்றிப் பயணம் செய்ய வைத்தாள். பார்னபிக்கும் காஃப்ரிக்கும் எப்போதும் அவளுடைய இதயத்தில் பாதுகாப்பான இடம் இருந்தது. இப்படிக் கனவுலகத்தில் மிதந்துகொண்டிருந்த அவள் அங்கே வந்த சின்னப் பையன் பெரேக்ரியைக் கவனிக்கவே இல்லை. தன்னுடைய நாய்க்குட்டி பிப்கின்னின் சங்கிலியைப் பிடித்து இழுத்துக்கொண்டு பெரேக்ரியும் ஓடி ஓடி, அங்கே செடிகளின் இலைகளில் மறைந்திருந்த அழகழகான வண்டுகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்தான். அந்த நேரத்தில் இன்னொரு மரத்திற்குப் பின்னாலிருந்து வந்த கிரெஸ்ஸிடாவுக்கு லில்லியுடன் விளையாடுவதா, இல்லை பெரேக்ரியோடு போய் வண்டுகளைப் பார்ப்பதா என்று சில நொடிகள் குழப்பமாக இருந்தது. இரண்டு பேரையும் தொந்தரவு செய்ய முடியாது என்று உணர்ந்த கிரெஸ்ஸிடாவின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. பேசாமல் அட்வுட்டோடு போய் விளையாடலாம் என்ற முடிவுடன் மரங்களுக்குப் பின்னாலிருந்த வால்ட்டுடைய குடிசையை நோக்கிப் போனாள்.

இது, கூகுள் தேடல் தளத்தின் செயற்கை நுண்ணறிவுக் கருவியான ‘ஜெமினி’ ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொடுத்த ஒரு குட்டிக் கதை. சில வெளிநாட்டுப் பெயர்களுடன் நான்கைந்து வாக்கியங்கள் கொண்ட ஒரு பத்தியைத் தயாரித்துத் தருமாறு கேட்டதும் குழந்தைகளுக்கான ஒரு குட்டிக் கதையாகவே உருவாக்கிக் கொடுத்துவிட்டது அந்த ஏஐ. அந்தப் பெயர்களுடன் வேற்றுமை உருபுகள் இருக்க வேண்டும் என்றும் கேட்டிருந்ததால் அதற்கேற்றபடி வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சில மாற்றங்கள் செய்து திரும்பவும் உள்ளீடு செய்து, தமிழில் மொழிபெயர்க்கச் சொன்னேன். அதுதான் மேலே உள்ள ஒரு பத்திக் கதை.

Vetrumai 1

ஒட்டுகள்

கதையில் வருகிற டெடி பேருடன், லில்லியை, வில்லியும், பார்னபியும், பார்னபிக்கு, பார்னபியே, பார்னபியை, காஃப்ரியோடு, பார்னபிக்கும், காஃப்ரிக்கும், பெரேக்ரியை, பிப்கின்னின், பெரேக்ரியும், கிரெஸ்ஸிடாவுக்கு, லில்லியுடன், பெரேக்ரியோடு, கிரெஸ்ஸிடாவின், அட்வுட்டோடு, வால்ட்டுடைய ஆகிய பெயர்களைக் கவனிப்போம். அந்தப் பெயர்களுக்குப் பின்னால் பேர்+உடன், லில்லி+ஐ, லில்லி+உம், பார்னபி+உக்கு, பார்னபி+ஏ, பார்னபி+ஐ, காஃப்ரி+ஓடு, பார்னபி+உக்கும், காஃப்ரி+உக்கும், பெரேக்ரி+ஐ, பிப்கின்+இன், பெரேக்ரி+உம், கிரெஸ்ஸிடா+உக்கு, லில்லி+உடன், பெரேக்ரி+ஓடு, கிரெஸ்ஸிடா+இன், அட்வுட்+ஓடு, வால்ட்+உடைய என வேற்றுமை உருபுகளும், இடைச்சொற்களும், பிரிநிலை இடைச்சொல்லும் ஒட்டியிருக்கின்றன (பள்ளிக்கூடத் தமிழ்த் தேர்வில் மதிப்பெண் குறையுமே என்று கவலைப்படாமல் கைவிட்ட வேற்றுமை உருபு, இடைச்சொல், பிரிநிலை இடைச்சொல் உள்ளிட்ட ஒட்டுச் சொற்களை இப்போது நினைவுக்குக் கொண்டு வரலாம்!)

மொழிபெயர்த்து எழுதும்போது தமிழில் அதிகமாகப் புழங்காத மேற்கத்தியப் பெயர்கள் வருமானால், எடுத்த எடுப்பிலேயே வேற்றுமை உருபுகளையும் இடைச்சொற்களையும் ஒட்டுவதைத் தவிர்த்து, அந்தப் பெயர்களை முழுமையாகத் தனித்துக் காட்டுவது நல்லது. அது அந்தப் பெயர்களை மனதில் வாங்கிக்கொள்ள உதவும். எடுத்துக்காட்டாக இந்தத் துணுக்குக் கதையில் வரும் பேருடன் என்ற சொல் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். தமிழில் பேர், பேருடன் என்றால் ஆட்களின் எண்ணிக்கை அளவைக் குறிப்பிடுகின்றன என்று புரிந்துகொள்கிறோம். “அவன் கூட்டத்திற்குப் பத்து பேருடன் வந்தான்” என்று கூறுகிறோம் அல்லவா?

இங்கே லில்லி கையில் டெடி பேர் பொம்மையை வைத்திருக்கிறாள். கரடியைக் குறிப்பிடும் பேர் என்ற சொல் முதன் முதலில் குறிப்பிடப்படும்போது, பேருடன் என்று உடன் என்ற மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்காமல், டெடி பேர் என்று முழுப் பெயரும் புரிவது போல் எழுதுவது வாசகர்களுக்கு இணக்கமாக்கும். அதே போல, முதன் முதலில் லில்லி வருகிறபோது லில்லியை என்று என்ற இரண்டாம் வேற்றுமை உருபை ஒட்டாமல் லில்லி என்று தனித்துக் காட்டலாம். அதே சொற்கள் மறுபடியும் வருகிறபோது ஒட்டுகளைச் சேர்க்கலாம். ஆகவே “கையில் பழைய டெடி பேருடன் ஓடிவந்த குட்டிப் பெண் லில்லியைப் பார்த்து இலைகளை ஆட்டி வரவேற்றது ஓக் மரம்” எனும் அந்த வரியைக் கொஞ்சம் மாற்றலாம். “கையில் பழைய டெடி பேர் வைத்திருந்த குட்டிப் பெண் லில்லி ஓடி வந்ததைப் பார்த்து இலைகளை ஆட்டி வரவேற்றது ஓக் மரம்,” என்று அமைக்கலாம்.

“அந்த மரத்தடிதான் லில்லியும் அவளுடைய கற்பனை நண்பனான பார்னபியும் ரகசியமாகச் சந்தித்துக்கொள்ளும் இடம்” என்ற வாக்கியத்தில் லில்லி இரண்டாவது முறையாக வருகிறாள், ஆனால் பார்னபி முதல் முறையாகத்தான் வருகிறான். ஆகவே அதை, “அந்த மரத்தடிதான் லில்லி, அவளுடைய கற்பனை நண்பனான பார்னபி இருவரும் ரகசியமாகச் சந்தித்துக்கொள்ளும் இடம்,” என்று அமைக்கலாம். 

அடுத்து வரும் வரிகளில் பார்னபிக்கு, பார்னபியே, பார்னபியை என வருகிற இடங்களில் சிக்கலில்லை – ஏனெனில் நமக்கு பார்னபி ஏற்கெனவே அறிமுகமாவிட்டான் இல்லையா? ஆனால் காஃப்ரி முதல் தடவையாக வருகிறபோது, ஓடு என்ற மூன்றாம் வேற்றுமை உருபைக் கொஞ்சம் தள்ளியிருக்கச் சொல்லலாம். “பார்னபியை துணிச்சல்காரனான காஃப்ரி ஓட்டி வந்த குதிரையில் ஏற்றி” என்று மாற்றலாம். இப்போது பார்னபி, காஃப்ரி இருவருமே அறிமுகமாகிவிட்டதால், அடுத்த வரியில் “பார்னபிக்கும் காஃப்ரிக்கும்” என்று உக்கும் என்ற நான்காம் வேற்றுமை உருபு சேர்த்து எழுதும்போது அது சரளமாகிவிடும்.

இதே போல, அந்தச் சின்னப் பையன் பெரேக்ரி முதல் தடவையாக வருகிறபோது பெரேக்ரியைக் கவனிக்கவில்லை என்று எழுதுவதைத் தவிர்த்து, “பெரேக்ரி வந்ததைக் கவனிக்கவில்லை” என்று எழுதலாம் என்பது இப்போது பிடிபட்டிருக்கும். நாய்க்குட்டி பிப்கின் முதலில் வரும்போது பிப்கின்+இன் என்று ஐந்தாம் வேற்றுமை உருபைச் சேர்க்காமல் “பிப்கின் ஓடிவிடாமல் கழுத்துச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு” என்றும், கிரெஸ்ஸிடா முதல் முறையாக வருகிற இடத்தில் கிரெஸ்ஸிடா+உக்கு என்று நான்காம் வேற்றுமை உருபுடன் குறிப்பிடாமல், “இன்னொரு மரத்திற்குப் பின்னாலிருந்து வந்த கிரெஸ்ஸிடா, லில்லியுடன் விளையாடுவதா, இல்லை பெரேக்ரியோடு போய் வண்டுகளைப் பார்ப்பதா என்று சில நொடிகள் குழம்பினாள்” என்று மாற்றியமைக்கலாம்.

திருத்தங்களுடன்

இந்த மாற்றங்களோடு அந்தக் குட்டிக் கதையை மறுபடி பார்ப்போம்:

கையில் பழைய டெடி பேர் வைத்துக்கொண்டு குட்டிப் பெண் லில்லி ஓடி வந்ததைப் பார்த்து இலைகளை ஆட்டி வரவேற்றது ஓக் மரம். அந்த மரத்தடிதான் லில்லி, அவளுடைய கற்பனை நண்பனான பார்னபி இருவரும் ரகசியமாகச் சந்தித்துக்கொள்ளும் இடம். இன்னொரு கையில் பிடித்திருந்த துணிப் பையில் அவள் குட்டிக் குட்டி வண்ண வண்ணக் கூழாங்கற்களையும் ஒரு நீல நிற இறகையும் வைத்திருந்தாள். அவற்றைப் போன்ற இயற்கையின் பரிசுகளை அவள் அடிக்கடி எடுத்து வருவாள், யாருக்கும் காட்டவோ கொடுக்கவோ மாட்டாள். கற்பனை விளையாட்டில் பார்னபிக்கு மட்டும் எடுத்துக் காட்டிவிட்டு மறுபடியும் பையில் போட்டுக்கொள்வாள். பார்னபியே, “இதை நீயே பத்திரமா வச்சிரு லில்லி,” என்று சொல்வதாகக் கற்பனை செய்துகொள்வாள். ஒரு சாகசக் கதையைக் கற்பனை செய்த லில்லி அதில் பார்னபியை துணிச்சல்காரனான காஃப்ரி ஓட்டி வந்த குதிரையில் ஏற்றிப் பயணம் செய்ய வைத்தாள். பார்னபிக்கும் காஃப்ரிக்கும் எப்போதும் அவளுடைய இதயத்தில் பாதுகாப்பான இடம் இருந்தது. இப்படிக் கனவுலகத்தில் மிதந்துகொண்டிருந்த அவள் அங்கே வந்த சின்னப் பையன் பெரேக்ரி வந்ததைக் கவனிக்கவே இல்லை. தன்னுடைய நாய்க்குட்டி பிப்கின் ஓடிவிடாமல் கழுத்துச் சங்கிலியைப் பிடித்து இழுத்துக்கொண்டு பெரேக்ரியும் ஓடி ஓடி, அங்கே செடிகளின் இலைகளில் மறைந்திருந்த அழகழகான வண்டுகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்தான். அந்த நேரத்தில் இன்னொரு மரத்திற்குப் பின்னாலிருந்து வந்த கிரெஸ்ஸிடாவுக்கு லில்லியுடன் விளையாடுவதா, இல்லை பெரேக்ரியோடு போய் வண்டுகளைப் பார்ப்பதா என்று சில நொடிகள் குழப்பமாக இருந்தது. இரண்டு பேரையும் தொந்தரவு செய்ய முடியாது என்று உணர்ந்த கிரெஸ்ஸிடாவின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. பேசாமல் அட்வுட்டோடு போய் விளையாடலாம் என்ற முடிவுடன் மரங்களுக்குப் பின்னாலிருந்த வால்ட்டுடைய குடிசையை நோக்கிப் போனாள்.

மொழிபெயர்க்கிறபோது மட்டுமல்லாமல், நேரடியாகத் தமிழில் எழுதும் கட்டுரைகளிலும் வெளிநாட்டு மனிதர்களின் பெயர்கள், பொருட்களின் பெயர்கள் என முதல் முறையாக வருகிற இடங்களில் வேற்றுமை உருபுகளையும் இடைச்சொற்களையும் சேர்ப்பது, “எங்கே எளிதாக வாசித்துவிடுவாயா பார்க்கலாம்” என்று கேட்பது போன்ற செயல்தான். இப்போது பார்த்த வழிமுறையை எழுதுகிறவர் பின்பற்றுகிறபோது, வாசிக்கிறவரும் வசதியாக அந்தப் பெயர்களைப் பின்தொடர்வார். “சிந்தாமணி காரின் இண்டிகேட்டரை இயக்கியபோது ஸ்டீயரிங்கின் மீது சாய்ந்தார்” என்ற வாக்கியத்தை இப்போது எப்படி மாற்றலாம்? “சிந்தாமணி கார் இண்டிகேட்டர் விளக்கை இயக்கியபோது ஸ்டீயரிங் மீது சாய்ந்தார்,” என்று எழுதலாம் என்று நீங்கள் நினைத்தது மெத்தச் சரி. 

Using the steering wheel 1920

8 வகை

தமிழில் எட்டு வகையான வேற்றுமைகள் உள்ளன. முதல் வேற்றுமையாகிய எழுவாய் வேற்றுமைக்கு உருபு கிடையாது. “மல்லிகா மகிழ்ச்சியடைந்தாள்” என்று நேராக வந்துவிடும். இரண்டாம் வேற்றுமை உருபாகிய செயல்படும் பொருளைக் குறிக்கும், “மல்லிகா தமிழாசிரியரைச் சந்தித்தாள்” என்று வரும். மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகியவை ஒட்டிக்கொண்டு, “தமிழாசிரியரால் அவள் பாராட்டப்பட்டாள்” என்று அமையும். கு என்ற, கொடை வேற்றுமை எனப்படும் நான்காம் வேற்றுமை உருபு, “தமிழாசிரியருக்கு மல்லிகா தன் நன்றியைத் தெரிவித்தாள்” என்று சேரும். நீங்கல் வேற்றுமை எனப்படும் ஐந்தாம் வேற்றுமை உருபுகளாகிய இல், இன் இணைந்து “தமிழாசிரியரின் ஆதரவு கிடைத்ததில் மல்லிகாவின் குடும்பத்தில் நம்பிக்கை ஏற்பட்டது,” என்றாகும். உடைமை வேற்றுமையாகிய அது, உடைய ஆகிய ஆறாம் வேற்றுமை உருபுகள், “தமிழாசிரியரது ஆய்வு நூல்கள் இப்போது மல்லிகாவுடைய மேசையில் இருக்கின்றன,” என்று தெரிவிக்கும். இடத்தையும் காலத்தையும் குறிக்கிற பொருள்களில் வரும் இட வேற்றுமை எனப்படும் ஏழாம் வேற்றுமை உருபு வகைகளாகிய கண், இடம், மேல், கீழ், கடை, இடை, தலை, கால், வாய், திசை, வயின், முன், சார், வலம், புடை, முதல், பின், பாடு, அளை, தேம், உழை, வழி, உழி, உளி, உள், அகம், புறம், பக்கல், பாங்கர், பால், மட்டும், மாட்டு ஆகியவை உள்ளன. இவற்றுடன் பொருத்தமாக இணைந்து, “ஊரின் கண் தமிழாசிரியர் அமைத்த நூலகம் இருக்கிறது. அதற்குள் சென்ற மல்லிகா சில மணித்துளிகளில் அந்தப் புத்தகங்களின் காகித நெடியை மல்லிகை மணம் போல முகர்ந்து கிறங்கிப் போனாள்,” என்பது போன்ற வரிகள் உருவெடுக்கும். ஒருவரை அழைப்பதற்கான விளி வேற்றுமை எனப்படும் எட்டாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது. ஆகவே, “தமிழாசிரியர் பெருமிதத்துடன், “மல்லிகா நாளைக்கே ஆய்வுப் பணியைத் தொடங்கிவிடு,“ என்று அழைப்பு விடுத்தார்,” என முடியும். – இதையெல்லாம் நம் தமிழாசிரியர்கள் வகுப்பில் சொன்னது இப்போது நினைவுக்கு வருகின்றனவா? விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். 

Vetrumai 3

இந்தக் கட்டுரையில் எடுத்துக் காட்டுகள் பல தரப்பட்டுள்ளன. கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட வாதத்தைக் கட்டுரையாக்குகிறபோது நேரடியாகப் பேசினால் போதாதா? அதிலேயும் எடுத்துக்காட்டுகள் தேவையா?

– அ.குமரேசன்

தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க