இலக்கியம்புத்தக அறிமுகம்

நாங்கள் வெறும் எண்கள் அல்ல – என்.சிவகுரு 

549

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் இராணுவத்தால் சிதிலமடைந்த ‘காசாவை கையகப்படுத்தப் போகிறேன்’ என்று அறிவித்ததின் பின்னணியில், இந்த நூலை அறிமுகம் செய்கிறேன். இந்த கட்டுரையை வாசிக்கும் மனிதநேயம் கொண்ட மக்கள் அனைவரும் இந்நூலை அவசியம் வாங்கி வாசியுங்கள். நூல் விற்பனை ஆக வேண்டும் என்பதற்காக இவ்வாறு குறிப்பிடவில்லை, மரணிக்கும் தருவாயில் கூட தம் தேசத்தின் நிலை குறித்து பதிவு செய்துள்ள இம்மக்கள், தங்கள் நாட்டை எவ்வாறு நேசித்துள்ளார்கள் என்பது தெரிய வரும்.

மரித்தோர் பாடல்கள், உலுக்கும்… உங்கள் ஆழ் மனதைத் துளையிடும்.


இந்த நூலை மூன்று முறை வாசித்தேன். ஒவ்வொரு முறையும் பக்கங்களை கடக்க முடியவில்லை. கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. 265 பக்கங்கள் கொண்ட இந்த நூல் அவ்வளவு அடர்த்தியானது. நாம் வாழும் இந்த உலகத்தில் இப்படி ஒரு அக்கிரமம் எவ்வளவு பேரை பலி கொண்டுள்ளது என்பதை உணர்த்துகிறது. இந்த ஆதிக்கப் போர் வெறிக்கு எதுவுமே தெரியாது. ஒரு நாட்டின் செல்வத்தையும், கனிம மற்றும் எண்ணெய் வளங்களையும் சூறையாடுவது மட்டுமே நோக்கம்.

தினம் தினம் மரணத்தை எதிர்கொண்டு:


தொடர்ச்சியாக காசாவின் மீது குண்டு மழை பொழிகிறது. அதில் பிறந்து 51 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை இறந்து போகிறது. ராயன் நாடர் சுலைமான் என்பவர் புகைப்படத்தைப் பகிர்ந்து, “அவனது பிறப்புச் சான்றிதழ் வருவதற்குள் இறப்புச் சான்றிதழ் வந்துவிட்டது” என அந்நாட்டுக் கவிஞர் ஒருவர் பதிவிட்டார்.


மற்றொரு குழந்தை, ஷாஹாத் மக்மூத் சர்ஹான், அக்டோபர் 2023 ஆம் ஆண்டு இறந்து போனாள். “அவள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கொல்லப்பட்டாள். அவள் சாப்பிட பயன்படுத்திய கரண்டி, அவளருகில் இரத்தத்தில் தோய்ந்து கிடந்தது.”

இந்த வரிகளைப் படித்த மாத்திரத்தில், என் உணர்வு, “இனிமேல் இந்த நூலை வாசிக்க வேண்டாம், மனம் தாங்காது” எனச் சொல்லியது. ஆனால், “இல்லை, இஸ்ரேலின் கொடுஞ்செயல்களை எல்லோரிடத்திலும் சொல்ல வேண்டும். போரின் கொடுமைகளை விளக்க வேண்டும்” என எண்ணிய பிறகு தொடர்ந்து நூலைப் படித்தேன்.

“எனக்கு 22 வயதாகிறது. நான்கு போர்களை சந்தித்துள்ளேன். குண்டு வெடிப்பு சத்தத்தையும், உடைக்கப்பட்ட கட்டிடச் சிதிலங்களையும், இரத்தத்தையும், பொறுக்க முடியாத கந்தக மணத்தையும், எங்கும் சிதறிக் கிடக்கும் சக மக்களின் உடல் பாகங்களையும் தான் என் நாட்டில் பார்த்தவை. இப்போரில் மரணித்த எம் நண்பர்கள், பலர் என் நினைவிலேயே இருக்கிறார்கள். நானும் இறந்து போவேன். என்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மக்களே” என மஹ்மூத் ஜமால் அல் நக்சா பதிவிட்டார். (குண்டு வீச்சில் மரணித்தார்)

“நாங்கள் வெறும் எண்கள் அல்ல” எனும் இந்த வரிகளின் பின்னால் உள்ள வேதனை, ரணம், காயம், ஆற்றாமை, துயர், ஏமாற்றத்தை எளிதில் கடக்க முடியுமா?
“காசா எனும் பகுதி இருந்தது” என்று சிராஜ் அபு ஹாசிம் இப்படி எழுதுகிறார்.
“காசாவின் மக்களாகிய நாங்கள் வாழ்வை நேசிக்கிறோம். வாழ்வை முழுமையாக வாழ விரும்புகிறோம். ஆனால் அதற்காக மரணத்திற்கு நாங்கள் அஞ்சுகிறோம் என்பதல்ல. மரணத்திற்கு பயந்து நாங்கள் ஓடுபவர்களும் அல்ல. எங்களைப் பொறுத்தவரையில், மரணம் உண்மையான வாழ்வின் ஒரு திறவுகோல்.”

தாங்கள் நிச்சயமாக இந்தப் போரில் இறந்து போவோம் எனத் தெரிந்தே இப்படிப் பதிவிட எப்படி முடிந்தது? வியப்பாக இருக்கிறது. சாவதற்கு அஞ்சாமல் இளம் வயதினரால் கூட இப்படி எழுத முடிகிறது.

விக்கித்துப் போன நிமிடங்கள்:


இந்த நூல் தயாரிப்பின் போதே நானும் தோழர் சிராஜுதீன் (பாரதி புத்தகாலயம்)  அவர்களும் உரையாடிக் கொண்டிருந்தோம். நூலில் வரப்போகிற ஓரிரு பகுதிகளை அப்போது பகிர்ந்தார். வாசித்து உறைந்தே போனேன். மீண்டு வர நேரமானது. இதோ அவற்றில் சில:
ஷோபன் அல்-டோலேயு எனும் இளைஞர், போரில் வீட்டை இழந்து, ஒரு மருத்துவமனைக்குள் இருக்கும் முகாமில் கூடாரம் அமைத்து (மருத்துவமனையில் குண்டு போட மாட்டார்கள் என்பது சர்வதேச போர் ஒப்பந்தம் முடிவுப்படி) தங்கி இருந்தார். காசா பகுதியை நாசமாக்க வேண்டும் எனத் துடிக்கும் போர் வெறிக்கு ஆளான ஒரு ராணுவத்துக்கு, விதிகளை மீறுவதே வேலை. சர்வதேச கண்டனங்கள் பெருமளவு இல்லை. மருத்துவமனையில் உள்ள கூடாரங்கள் மீது குண்டு மழை. கூடாரம் கொழுந்து விட்டு எரிகிறது. அவரும் அவருடைய தாயும் உயிரோடு எரிந்து சாம்பலானார்கள். மரணிப்பதற்கு ஓரிரு நாட்கள் முன், அவர் எழுதுகிறார்:
“எங்கள் மீதான படுகொலையில் தங்களது மவுனம்… எங்களுக்கு நிறைய சொல்கிறது. இந்த உலகில் எத்தகைய விழுமியங்களோடு நீங்கள் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: இனி இது வெறும் பாலஸ்தீனம் சம்பந்தப்பட்டது அல்ல.”

நம்மை நோக்கி எழுப்பப்படும் இந்தக் கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது? ஏகாதிபத்தியத்தின் கொடூர கோரப் பசிக்கு, இந்தியர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? அப்பட்டமான பாசிச வலதுசாரி ஆட்சியாளர்கள் ஆளும் நாட்டில் இருக்கிறோம் என்பதை நாம் மறுக்க இயலாது.

காசாவிலிருந்து பேசுகிறேன்… யாராவது கேட்கிறீர்களா?
இந்த வரிக்குள் எவ்வளவு எதிர்பார்ப்பு… மோஷாப் அசூர் எனும் இளைஞர் இதை எழுதினார். அவரின் இந்தக் கேள்வி உலகத்தைப் பார்த்து கேட்டது.


ஒரு அழகான குடும்பத் தலைவன், அகமத் ஷாத், பொறியாளர். அவர் தன் குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருந்த போது, இஸ்ரேல் ராணுவத்தின் வான் வழித் தாக்குதலில் கார் வெடித்து, குடும்பமே இறந்து போனது. அவரின் முகநூல் பதிவு ஒன்று. படியுங்கள். ஈர நெஞ்சம் கொண்டோர் உருகுவர். நிச்சயமாக. இதோ அந்த வரிகளில் சில:
“நான் யாரால் எப்படிக் கொல்லப்பட்டேன் என்று இந்த உலகிற்கு தயவு செய்து சொல்லுங்கள். எனது கொலைக்கு நான் உங்களிடம் கேட்பது இது மட்டுமே”

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில், குறிப்பாக பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஏன் தெரியுமா? பாலஸ்தீன மக்கள் எல்லாவற்றுக்கும் என்றைக்கும் எக்காலத்திலும் மீண்டு எழுந்து வந்து விடக்கூடாது எனும் இனவெறி பாசிசம்.
மருத்துவர் முஸ்தபா அல் நாஜார் எனும் மருத்துவர், நான்கு முறை கொலை முயற்சியிலிருந்து தப்பித்தவர். ஐந்தாவது முறை சுற்றி வளைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அவரின் இறுதி வரிகள் இதோ:
“பசியால் வாடும் குழந்தைகளிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் நிற்கும் பெற்றோர்கள் தோற்று நிற்கிறார்கள். உலகில் குப்பை கூடைகள் உணவுகளால் நிரம்பி வழியும் போது, நாங்கள் பசியால் கொல்லப்படுகிறோம்.”

இதோ இன்னொரு மனிதநேயத்தின் உச்சமான ஒரு மருத்துவர், ஹமாம் அல்-லோத் அவர்களின் நேர்காணல்:
நிருபர்: “நீங்கள் ஏன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தெற்கு காசாவுக்கு செல்லக்கூடாது?”
மருத்துவர் ஹமாம் பதிலளிக்கிறார்: “நான் அங்கு போனால், எனது நோயாளிகளுக்கு யார் மருத்துவம் பார்ப்பது? மருத்துவ வசதி பெற எங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. எனது மருத்துவ மேற்படிப்பையும் சேர்த்து நான் 14 ஆண்டுகள் படித்தது, என் குடும்பத்தை மட்டும் காப்பாற்றவா? இல்லை. இந்த நோயாளிகளை விட்டு செல்வதற்கா? இல்லவே இல்லை.”
இப்படிப் பேட்டியளித்த இந்த மருத்துவர் மற்றும் அவர் குடும்பத்தை திட்டமிட்டு குறி வைத்துக் கொலை செய்தது.

இதையெல்லாம் படித்துக் கடக்க, விம்மி வந்த அழுகையை நிறுத்த இப்போது எழுதும் போது கூட முடியவில்லை.


ஒரு தலைமுறையையே அழித்துவிட வேண்டும் என திட்டம் உருவாக்கிய இஸ்ரேல், கல்லூரி, பள்ளிக் கூடங்களை முழுமையாக தரைமட்டமாக்கியுள்ளது என அன்றாடம் செய்திகளைப் பார்க்கும் போது தெரிகிறது.


பெருங்கனவுகளோடு மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருந்த பிசான் ஹசன் ஷாபன் ஹலாச, தன் எக்ஸ் தளத்தில் கொல்லப்படுவதற்கு முன்பு செய்த பதிவு:
“நான் சாதிக்க வேண்டிய கனவுகள் இன்னும் இருக்கின்றன. நான் வாழ வேண்டிய வாழ்க்கை இன்னும் மிச்சம் இருக்கிறது. என்னைப் போல… இப்படி எல்லாம் இருக்கும் என் மக்களும் நானும் திறந்த வெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டு வருகிறோம்.”

இப்படி இந்த நூலில் சொல்ல பல நெஞ்சை உருக்கும் பதிவுகள் இருக்கின்றன.


உயில் ஒன்றும் உள்ளது:


இந்த நூலில் நிறைவாக, ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யாஹ்யா இப்ராகிம் சின்வரின் மனம் திறந்த ஒரு உயில் ஒன்று பதிவாகியுள்ளது. ஏன் இந்த போராட்டம்? பாலஸ்தீனத்தின் நியாயங்கள், ஏகாதிபத்திய அநீதிகள், கொலைகார இஸ்ரேல் என முக்கிய தரவுகள் உள்ளது. அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு போராளியின் நேர்மையான பதிவு.

இந்த புத்தகம் வாசித்து விட்டுக் கடக்க வேண்டிய வகை அல்ல. நம் சிந்தனையில் நங்கூரம் போட்டு நிற்க வேண்டிய எழுத்துக்கள். சமத்துவ உலகம் படைக்க வேண்டும் என நமக்கு இவ்வுலகில் ஒரு சோசலிச முகாம் இல்லாமல் போனதின் விளைவுகளை உணர்த்துகிறது.


அருமையான வடிவமைப்பு. அட்டைப்பட ஒவியம் வலியை அப்படியே பிரதிபலிக்கிறது.
மொழியாக்கம் செய்துள்ள அ.சி.விஜிதரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சக மனிதனின் வலியை நினைவில் வைத்துக் கொள்ளும் படி கடத்துகிறது.


இது அவசியம் என உணர்ந்து, காலத்தின் தேவை எனக் கருதி வெளியிட்டுள்ள சிந்தன் புக்ஸ் பதிப்பகத்தாருக்கு கோடானு கோடி நன்றி.

– என்.சிவகுரு