The Magic of Reality – இளையோருக்கான அறிவியல்
இந்தியச் சமூகம் இன்றைக்கு மதங்களாலும் மூடநம்பிக்கையாலும் பீடிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகவே இதுதான் நிலை என்றாலும் இன்றைக்கு அனைத்தும் நவீனமாகியிருக்கும் வேளையில் நமது சிந்தனை மட்டும் பின்னோக்கி வளர்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதற்குப் பின்னான அரசியல் காரணங்களை நாம் விளக்கத் தேவையில்லை.
இன்றைய சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் பகுத்தறிவு கருத்துக்களின் பரவல் குறைந்து மதம், ஜாதி சார்ந்த கருத்துக்கள் வலுவூன்றி நிற்கின்றன. இந்தக் கருத்துக்கள் அறிவியல் வேஷத்தோடு உள்ளே நுழைகின்றன என்பதுதான் இன்னும் மோசம்.
கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் கல்லூரி ஒன்றில் திரைப்படங்கள் பற்றி உரையாடும் வாய்ப்பு கிட்டியது. உரையாடலின் ஒரு பகுதியாக பரிணாம மாற்றம் குறித்து பேச்சு வந்தது. சில மாணவர்கள் எழுந்து அந்தக் கோட்பாட்டை டார்வீனுக்கு முன்னமே நம்முடைய மூதாதையர்கள் கண்டுபிடித்துவிட்டனர் என்கிற குண்டைப் போட்டார். எப்படி என்று வினவியபோது மகா விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் பரிணாம மாற்றத்தை விளக்குவதாக விளக்கம் கொடுத்தனர்.
முதலில் மீனவதாரம், பிறகு ஆமை, அடுத்தது பன்றி (பாலூட்டி), நரசிம்ம அவதாரம் (முழுமையடையாத மனிதன்) இப்படியாக சென்று மனித பரிணாமத்தின் உச்சம் வரும் ஆண்டுகளில் வெளிப்படும் என்று திகைக்க வைத்தனர்.
இதேபோல இன்னொரு உதாரணம் இருக்கிறது. சமீபத்தில் தோழர் ஒருவருடன் உரையாடி வந்தேன். கல்லூரி படிக்கிறார். அறிவியலை விரும்புபவர். கடவுள் மறுப்பாளர். ஆனால் The Secret, Law of Attraction போன்ற பல போலி அறிவியல் புத்தகங்களைப் படித்துவிட்டு இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்கிற பல போலி விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதியாக ஜோதிடம் குறித்த உரையாடல் வந்தது. தான் மற்ற மூடநம்பிக்கைகளை வெறுப்பதாகவும் ஜோதிடம் மட்டும் மூடநம்பிக்கை கிடையாது எனவும் வாதிட்டார்.
காரணம் கேட்டதற்கு நாம் பிறக்கும்போது கோள்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதற்கு ஏற்றாற்போல் நம் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கும். பிறகு அவற்றின் இயக்கத்திற்கு ஏற்றாற்போல் உடல்கூறுகளில் மாற்றம் ஏற்படும். பெளர்ணமி அன்று நாம் பிறந்திருந்தால் அமாவாசை அன்று நமக்கு உடல்நலக்கோளாறு ஏற்படும், அமாவாசை அன்று பிறந்திருந்தால் பெளர்ணமிக்கு உடல்நலம் குன்றும். நாம் பிறக்கும்போது இருந்த நிலையில் என்றைக்கு கோள்கள் மீண்டும் கூடுகின்றனவோ அந்த ஆண்டுகளில்தான் நாம் முழு உத்வேகத்துடன் செயல்படுவோம். அதைத்தான் நாம் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்கிற மக்களுக்கு புரியும் எளிய மொழியில் விளக்குகிறோம் என்றார். எப்படி இருக்கிறது?
மேல்கூறிய நிகழ்வுகளுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவதற்குக் காரணம் இன்றைய இளம் தலைமுறைக்கு அறிவியலில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எது அறிவியல் கருத்து, எது மதவாத பிற்போக்குத்தன்மை வாய்ந்த கருத்து என்ற தெளிவில் குழப்பம் நீடிக்கிறது. இந்தக் குழப்பத்தை நிவர்த்தி செய்ய மாணவர்களிடம் நிஜமான அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அத்தகைய ஒரு அரும்பணியை செய்கிறது ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The Magic of Reality.
ரிச்சர்ட் டாக்கின்ஸ் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். பிரிட்டனை சேர்ந்த உயிரியலாளர். அறிவியல் எழுத்தாளர். குறிப்பாக டார்வீனிய கருத்துக்களை, பரிணாமம் பற்றிய கோட்பாடுகளை மிக எளிமையாக வாசகருக்கு கொண்டு செல்வதில் தேர்ந்தவர்.
கடவுள், மத அமைப்புகளின் போலித்தனத்தை தோலுறிக்கும் அவரது நூலான ‘The God Delusion’ மிகவும் பிரபலமான புத்தகம். அதேபோல் அவரது The Blind Watch Maker, The Greatest Show on earth போன்ற புத்தகங்களும் மத அடிப்படைவாதத்துக்கு எதிரான அறிவியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்பவை. அந்தப் புத்தகங்கள் பெரியவர்களுக்கானது என்றால் The Magic of Reality சிறார்களுக்கானது. இளைஞர்களுக்கானது. இதுதான் வித்தியாசம்.
இந்தப் புத்தகத்தின் பெயர் The Magic of Reality. யதார்த்ததின் மாயாஜாலம் என தோராயமாக தமிழில் மொழிபெயர்க்கலாம். அது என்ன மாயாஜாலம்? யோசித்துப் பார்த்தால் இந்த அண்டமே ஒரு மாயாஜாலம். அதில் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயங்கள் நிகழ்கின்றன. மழை பெய்வது ஒரு அதிசயம். வெயில் அடிப்பது ஓர் அதிசயம். உயிர்கள் தோன்றியது ஓர் அதிசயம். அவை மனிதனாகவும் வேறு விலங்குகளாகவும் பரிணமித்தது ஓர் அதிசயம். இப்படிப் பல்வேறு மாயாஜாலங்களை நாம் அவதானிக்கிறோம். ஆனால் அவற்றை எப்படி நாம் விளக்கிக்கொள்கிறோம்? அர்த்தப்படுத்துகிறோம்? அதில்தான் பிரச்னையே இருக்கிறது என்கிறார் டாக்கின்ஸ்.
ஒரு நிகழ்வை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? எப்படி ஆராய வேண்டும்? அதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என ஒவ்வொன்றாக சென்று ஒரு நிகழ்வுக்குப் பின்னான உண்மையை உணர்வதற்கு மதம் எனும் கண்ணாடியை அணிய வேண்டுமா? அறிவியல் கண்ணாடியை அணிய வேண்டுமா என்று தொடங்குகிறார் டாக்கின்ஸ்.
அறிவியல் எப்படி ஓர் விஷயத்தை ஆராய்கிறது. அறிவியல் இயங்கும்விதம் என்ன, அதன் எல்லைகள் என்ன என்பதாகச் சென்று அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஆழமான தலைப்புகளுக்குள் செல்கிறார்.
யார் பூமியில் தோன்றிய முதல் மனிதன்? ஏன் உலகில் பல்வேறு விலங்குகள் உள்ளன? இந்தப் பூமி எதனால் உருவானது? நமக்கு ஏன் இரவு, பகல், கோடைக்காலம், குளிர்காலம் போன்றவை வருகின்றன? சூரியன் என்றால் என்ன? வானவில் எப்படித் தோன்றுகிறது? இவை எல்லாம் எங்கிருந்து எப்படித் தொடங்கின? நாம் இந்த அண்டத்தில் தனியாக இருக்கிறோமா? ஏன் கெட்ட விஷயங்கள் நிகழ்கின்றன? அதிசயங்கள் என்ற ஒன்று உண்டா? இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கு ஒவ்வொரு அத்தியாயமாக எளிய மொழியில், தேர்ந்த உதாரணங்களுடன் விடை அளிக்கிறார்.
ஆனால் இவை வெறும் அறிவியல் பதில்களாக மட்டும் இல்லை என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. உதாரணமாக யார் முதல் மனிதன் எனும் அத்தியாயத்தை எடுத்துக்கொள்வோம். முதலில் இந்தக் கேள்விக்கான பதில்களை மதங்களில் தேடுகிறார். ஒவ்வொரு மதங்களும் என்ன சொல்கின்றன? என்னென்ன கருத்துக்களை முன்வைக்கின்றன என்பதாகத் தொடங்கி அவற்றை உடைத்து எரிந்துவிட்டு உண்மையில் முதல் மனிதன் என்பவன் கிடையவே கிடையாது. அப்படி ஒரு பதிலே உண்மையாக இருக்க முடியாது. காரணம் பரிணாம மாற்றம் என டார்வீனிய கோட்பாடுக்குச் செல்கிறார். இப்படித்தான் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு குறிப்பிட்ட அறிவியல் கருத்து குறித்து மதங்கள் என்ன கூறுகின்றன என்பதை விவரித்துவிட்டு பின் அறிவியல் விளக்கத்திற்கு நகர்கிறது. சரவெடியாக வெடிக்கிறது.
இதில் இடம்பெறும் முக்கியமான ஒரு அத்தியாயம் வானவில் எப்படி தோன்றுகிறது என்பது பற்றியது. ஒளியின் விந்தையை அறிந்துகொள்ளும் மிக அற்புதமான அத்தியாயம்.
முதலில் வானவில் எப்படித் தோன்றுகிறது என்பதை விவரித்துவிட்டு, வானவில்லை முதன் முதலில் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாம் ஒளியின் தன்மையை பற்றி என்னென்ன தெரிந்துகொண்டோம், அவை எப்படி அண்டம் பற்றிய நம் புரிதலைய மேம்படுத்துகிறது என விளக்குகிறார்.
ஒளி என்றால் என்ன? ஒளியை நமது கண் எப்படி உள்வாங்கி அதற்கு உருவம் தருகிறது? அப்படியென்றால் நாம் பார்ப்பது எல்லாம் உண்மையா? ஒளியின் தன்மையை அறிந்துகொண்டதன் மூலம் நம்மால் எப்படி நம்மால் வேறு கோள்களில் உயிர்கள் உள்ளதா என்பது வரை கண்டுபிடிக்க முடியும், அதைவிட அண்டத்தின் தோற்றத்தையே ஒளிக்கு பின்னால் இருக்கும் அறிவியலைக் கொண்டு நம்மால் எப்படித் தெரிந்துகொள்ள முடியும் என ஆச்சரியங்களால் மூழ்கடிக்கிறார்.
கல்லூரி படிக்கும் தோழரிடம் விவாதித்தபோது அவர் கூறிய ஜோதிடம் குறித்த கருத்துக்கு எதிரான பதிலை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த உதாரணங்களை வைத்தே விளக்கினேன். கோள்கள், நட்சத்திரங்கள் பற்றி ஜோதிடம் கொண்டிருக்கும் அடிப்படை புரிதலே தவறு வாதிட்டேன்.
உதாரணமாக ஜோதிடத்தில் திருவாதிரை நட்சத்திரம் கேள்விப்பட்டிருப்போம். ஆங்கிலத்தில் Betelgeuse எனும் பெயரில் அறியப்படும் ஒரு நட்சத்திரம். உண்மையில் மிருகசீரிஷம் (Orion) என்று தமிழில் அறியப்படும் உடுக்கூட்டத்தில் (உடு என்றால் விண்மீன் என்று பொருள்) இடம் பெற்றுள்ள ஒரு நட்சத்திரம்தான் இந்த திருவாதிரை. ஆனால் நாம் மிருகசீரிஷத்தையே தனி நட்சத்திரம் என்போம்.
இந்த திருவாதிரை நட்சத்திரம் தமது பிரகாசத்தை இழந்து வருவதாகவும், சில ஆயிரம் ஆண்டுகளில் வெடித்துவிடலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது உண்மை எனும் பட்சத்தில் அதன்பின் பிறக்கப்போகும் தலைமுறைக்கு ஜோதிடத்தில் இந்த நட்சத்திரத்தை வைத்து அவர்கள் எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா? அப்படி நட்சத்திரம் அழிந்தால் அப்போது அந்த நட்சத்திரத்தை தன் ஜாதகத்தில் கொண்டிருப்பவர்களுக்கு என்ன ஆகும்? இப்படிக் கேள்விகள் கேட்பதன் மூலமே நாம் மூடநம்பிக்கையை உடைத்துவிடலாம்.
அதுமட்டுமில்லாமல் அந்த நட்சத்திரம் ஒருவேளை அழிந்தால் அந்த விஷயம் நமக்கு தெரியவரவே பல ஆண்டுகள் ஆகும். காரணம் ஒளி விண்வெளியில் பயணம் செய்து எப்போது நம்மை அடைகிறதோ அப்போதுதான் நம்மால் அதைப் பார்க்க முடியும்.
சூரிய ஒளி பூமியை அடைய 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. ஒருவேளை சூரியன் வெடித்துச் சிதறிவிட்டால் அது எட்டு நிமிடங்களுக்கு பிறகுதான் நமக்குத் தெரியவரும். அழிந்துபோன சூரியனை 8 நிமிடங்கள் வரை நாம் இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருப்போம். இப்படிப் பார்க்கும்போது இன்றைக்கு நாம் திருவாதிரை நட்சத்திரம் பற்றி காணும் விஷயங்கள் எல்லாம் 724 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை. அந்த நட்சத்திரத்தின் ஒளி நம்மை அடைய 724 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. அதாவது வட இந்தியாவில் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சி நிலைபெற்றபோது திருவாதிரையில் நடந்த மாற்றத்தைதான் இப்போது நாம் காண்கிறோம்.
யதார்த்தம் இப்படிப் பல குழப்பங்களுடன் இருக்க, அவை பற்றி மதங்கள் கூறும் விளக்கங்களை நம்பாமல் அறிவியல் துணை கொண்டு அவற்றை ஆராய்வது மட்டுமே பயன் தரும்.
மேற்கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படி நம் அறிவைத் தெளிய வைக்கும் பல அறிவியல் கருத்துக்கள் இந்த நூலில் இருக்கின்றன.
குறிப்பாக நமக்கு ஏன் கெட்ட விஷயங்கள் நிகழ்கின்றன? அதிசயம் என்ற ஒன்று இருக்கிறதா என்பதுபோன்ற கேள்விகளுக்கு அளிக்கப்படும் அறிவியல் பதில்கள் நம்மை மோசமான நிகழ்வின்போது கடவுளைத் துணைக்குத் தேடாமல் அறிவியலை ஆயுதமாக வைத்து தன்னம்பிக்கையுடன் போராட உதவும்.
இந்தப் புத்தகம் இரு வடிவங்களில் வருகிறது. ஒருவடிவத்தில் படங்கள் கிடையாது. இன்னொரு வடிவத்தில் தெளிவான விளக்கப் படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதுபோல ஆசிரியர்களுக்கும் கொண்டு சேர்ப்பதும் அவசியம். இந்த நூல் ஆங்கிலத்தில் மட்டுமே வாசிக்க கிடைப்பதால் தமிழில் இந்த நூலைக் கொண்டுவர முடிந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
– நன்மாறன் திருநாவுக்கரசு
அனுபவங்களுடன் கலந்த தங்கள் நூல் அறிமுகம் மிகவும் அருமை. ஏற்கெனவே தி காட் டெலூசன் புத்தகம் வாசித்திருக்கிறேன். இதையும் வாசித்துவிடுகிறேன். மிக்க நன்றி