இலக்கியம்புத்தக அறிமுகம்

உரையாடலே ஆரோக்கியமான சமூக முன்னேற்றத்தின் முதல்படி – ‘கயிறு’ நூல்

549

– முத்துராணி

உலகில் தினமும் நடக்கிற வன்முறைகளுக்கு ஆயிரம் காரணங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது.  அனைத்திற்கும் வேராக இருப்பது  அதிகாரமும் ஆதிக்கமும்தான். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் வன்முறைகள் சமூகத்தில் நடக்கின்றன. சமூகத்தில் இருக்கும் இந்த வன்முறைகள் கல்வி நிறுவனங்களிலும் எதிரொலித்து வருவதைப் பார்க்கமுடிகிறது.‌ குறிப்பாக வகுப்பறையிலும் அது காணப்படுகிறது. இந்த வன்முறை யார் மீது செலுத்தப்படும்‌ தெரியுமா? பலம் குன்றியவர்கள் மீதும், ஒடுக்கப்பட்டோர் பட்டவர்கள் மீதும் தான். உலக அளவில்  பல வன்முறைகள் நிகழ்ந்து கொண்டு  இருக்கின்றன. சமத்துவமற்ற உலகில் உடல் நலனையும் மன நலன்களையும் பாதுகாப்பதென்பது மிகப்பெரிய சாவல்களைக் கொண்ட ஒரு செயல்பாடாகும்.  

சரி, எது குறித்துப் பேசுகிறோம் என்கிற விசயத்திற்கு நேரடியாக வருவோம்.

இந்திய நிலப்பரப்பில் இருக்கும் ஒரு மாநிலமான தமிழ்நாடும் சாதிய மேலாதிக்கம் நிறைந்த சமூகம்தான். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று‌ விதிவிலக்கு ஏதுமில்லாமல், பலரிடமும் சாதிய‌ மனநிலை ஓங்கி இருக்கிறது. இந்த‌ ஆதிக்க குணத்தால், அதனைத் தக்கவைக்க எதைச்செய்யவும் தயாராகி விடுகிறார்கள். தீண்டாமையில் இருந்து, இன்றைக்கு நவீன தீண்டாமையாக அது பல வடிவங்களெடுத்து பரவி இருக்கிறது.‌ சாதிய மனோநிலை மனிதர்களை‌ பாகுபடுத்தி பார்ப்பது மட்டுமல்லாமல், தள்ளி வைப்பது, பேசாமால் இருப்பது, நட்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பது, உணவு பரிமாறிக் கொள்வதைத் தவிர்ப்பது எனத் துவங்கி, உயிரை எடுக்கும் அளவிற்கு அதன் உட்சபட்ச நிலையை அடைந்து மோசமான வன்முறையை செய்யத் துணியும் சாதிய மேலாதிக்க நிலைக்குச் சென்றிருக்கிறது.

இந்த நிலை மாற‌ வேண்டும் என்று பல தலைவர் போராடினார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொடங்கி, அயோத்தி தாசர், அம்பேத்கர், பெரியார் என்று இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சாதிக்கு எதிராக வாழ்நாள்‌ முழுக்க போராடிய தலைவர்கள் இருந்தார்கள். இன்றும்‌ அவர்களைப் போன்று பலரும் போராடி வருகிறார்கள். அவர்கள் போராடிய‌தன் விளைவாக இன்றைக்கு இந்த அளவிலாவது சமூக நீதி இருக்கிறது.

மற்ற‌ நாடுகளில் வர்க்க சுரண்டல் இருப்பதைப் போல, இந்தியாவில் வர்க்கம் மற்றும் சாதிய சுரண்டல்கள் கலந்தும் தனித்தும் மக்களை ஒடுக்கிவருகின்றன என்று மார்க்சியமும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

இதையெல்லாம் தாண்டிய ஒரு புதிய பண்பாட்டை உருவாக்குவதற்கு முதன்மையான‌ வழியே உரையாடல் நிகழ்த்துவதுதான். இத்தாலியின் புகழ் பெற்ற பாவ்லோ பிரையர் “உரையாடல் என்பது சிறந்த பண்பாடு‌” என்பார். உரையாடி‌ உரையாடியே பல விசயங்களை நாம்‌ மாற்ற‌‌ முடியும்.  கதை சொல்வதும் ஒருவிதமான உரையாடல் தானே. 

கடந்த சில வருடங்களாக கல்வி நிறுவனங்களிலுமே ஆசிரியர்களாகட்டும் பேராசிரியர்களாகட்டும் சாதியைச் சொல்லி மிக வெளிப்படையாகவே பாகுபடுத்துவதையும், மாணவர்களை ஒதுக்குவதையும், பிரிவினையை ஏற்படுத்துவதையும் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் நாம் பார்த்து வருகிறோம்.

ஒருபுறம்‌, உயர் தொழில் நுட்பத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் நாம்தான், இன்னும் சாதியைச் சொல்லி மறுபுறம் பாகுபடுத்தி சகமனிதர்களை ஒடுக்கி வருகிறோம். ரோபாடிக் சைனஸ் வந்த பின் கூட, சரிசமமாக பெஞ்சில் அமர்ந்து டீ குடித்த காரணத்திற்காக ஒடுக்கப்பட்ட சாதியினரை பிற தாக்கி ஆதிக்க சாதியினர் வன்முறையில் ஈடுபட்டுவரும் சம்பவமும் நிகழ்வதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையை ஒழிக்க பல ஆண்டுகளாக ஏராளமான சமூக செயல்பாட்டாளர்கள் போராடியும், செயலாற்றியும் வருகிறார்கள். சாதியப் பாகுபாடுகள் நிறைந்த சமூகத்தில் எல்லா விதக் கொடுமைகளையும் எதிர்கொண்டு, கல்வியால் மட்டுமே வென்று இந்திய நாட்டிற்கே அரசியல் சாசனம் எழுதிச் சென்றது அண்ணல் அம்பேத்கருடைய பேனாவின் வலிமை. இன்னும் பிறக்காத குழந்தைகளுக்கும் சேர்த்தே சமூக மாற்றத்திற்கான வழிமுறைகளை அவரது ஆழ்ந்த‌ அறிவால் அளித்து விட்டுச் சென்றார் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர்.

இது போன்ற சமூக மாற்றத்திற்கான கருத்துகளை‌ குழந்தைகள் மத்தியில் எப்படிப் பேச‌ முடியும் என்று குழப்பமாக இருக்கிறதா? அதற்குத்தான் உரையாடல் அவசியம் என்கிறோம். அறிவுரையாக பெரியவர்கள் மட்டுமே பேசுவதை விடவும் குழந்தைகளுடன் உடையாடல் நிகழ்த்த வேண்டும். வீட்டிலே உரையாடுவது   நல்லதொரு பண்பாடாகும் இதையே பா

தமிழக சூழலில் நிலவும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சாதியாகும். சாதியப் பாகுபாடுகள் என்பது மிகப்பெரிய ஒடுக்குமுறையாக இருந்துவருகிறது. அதையே மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு, ‘கயிறு’ என்கிற நூலை எழுதியுள்ளார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன். சாதியைப் பற்றி குழந்தைகளிடம் உரையாடல் நிகழ்த்துவது முக்கியத்துமான பணியாகும். ஒரு பள்ளி சிறுவனுக்கு அவன் அறிமுகமான யாரோ ஒருவர் சாதிக்கேற்ற நிறத்தில் பயன்படுத்தப்படும் சாதிக்கயிறைக் கட்டிவிடுகிறார். அது என்னவென்று தெரியாமல் அச்சிறுவனும் கையில் கட்டிக் கொள்கிறான். அக்கயிறைப் பார்த்து பதட்டமடையாமல், நிதானமாக அச்சிறுவனும் அவனுடைய அம்மா உரையாடுகிறார். தனது அம்மாவின் துணையோடு தனக்குக் கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் ஆபத்தை உணர்ந்துக் கொள்கிறான் அச்சிறுவன். அந்தக் கயிறு தன்னையும் தனது நெருங்கிய நண்பனையும் பிரிக்க முயற்சி செய்யும் ஒரு பொருள் என்பதை அவன் புரிந்து கொள்கிறான்.

எவ்வித அறிவுரையும் சொல்லாமல், தனது மகனுடன் உரையாடல் மட்டுமே செய்து, எப்படியாக பிரச்சனையின் வீரியத்தை அவனுடைய அம்மா அவனுக்குப் புரிய வைக்கிறார் என்பதே நூலின் கதை. தனக்கு கட்டப்பட்ட கயிறு தன் நண்பனுக்கு கட்டப்படாததை நினைத்து, அவனுக்குள் ஒரு கோபம் வருகிறது.‌ அவனுடைய அந்த கோபம் அனைவருக்கும் வரவேண்டிய கோபம் என்பதை இங்கு ஆசிரியர் நமக்குச் சொல்கிறார். தான் சொல்ல வந்த மையக் கருத்தை எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும்படி சொல்வது இந்த நூலின் சிறப்பாகும். எவ்வகையிலும் தன் கருத்தை எங்கேயும் அவர் வலிந்தோ திணித்தோ எழுதவே இல்லை. கதை ஓட்டத்துடனேயே சொல்ல வந்த மையக்கருத்தை எடுத்துக்கூறியுள்ளார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தை வைத்து சமூகத்தில் உரையாடலை ஏற்படுத்தி‌ அனைவரிடமும் கொண்டு சொல்ல வேண்டும். பாவ்லோ பிரையர் சொல்வது போல, ஒரு சமூகம் மேம்பட்டதாக மாறுவதற்கு முக்கியமான பங்கு வகிப்பது உரையாடல்தான். அந்த உரையாடலைக் குழந்தைகளிடம் நடத்துவதற்கு இன்றைக்கு நம் கைகளில் கிடைத்திருக்கும் வலிமையான ஆயுதம்தான் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ‘கயிறு’ என்கிற இந்நூல்.

பின்குறிப்பு: தற்போது மக்கள் பதிப்பாக ‘கயிறு’ நூல் ஒரு ரூபாய்க்கு வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவசியம் வாங்கி, வாசித்து, பகிரவேண்டிய நூல் ‘கயிறு’.

– முத்துராணி