அ. குமரேசன்
“இந்த மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமான மழை பெய்யும்.” இது ஓர் இணையவழிச் செய்தி ஊடகத்தின் வானிலைத் தகவல். இதில் என்ன பிழை என்று தெரிகிறதா? வாக்கியத்தில் “மிதமானது முதல்” என்று வரும்போது, அதைத் தொடர்ந்து “கனமானது வரையில்” என்றோ, “கனமானது வரை” என்றோ வந்தாக வேண்டும். ஆனால் இந்தச் செய்தியில் “மிதமானது முதல் கனமான மழை” என்று இருக்கிறது. “கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களின் ஒற்றுமைப் பண்பாட்டைக் காணலாம்,” என்றுதானே சொல்வோம்? கன்னியாகுமரிக்குப் பிறகு “முதல்” என்ற சொல் வருகிறது என்றால், காஷ்மீருக்குப் பிறகு “வரை” அல்லது “வரையில்” என்ற சொற்கள் வந்தாக வேண்டும். அப்படி எழுதாமல், “கன்னியாகுமரி முதல் காஷ்மீரில் மக்களின் ஒற்றுமைப் பண்பாட்டைக் காணலாம்” என்று எழுதினால் அதற்கு என்ன பொருள்? இந்த “முதல்”, “வரை” என்ற சொற்களின் பயன்பாட்டைப் புரிந்துகொண்டு அந்த வானிலைச் செய்தியைத் திருத்தி எழுதிப் பாருங்கள், தகவல் தெளிவாக இருக்கும்.
விபத்தின் காரணமாக ஒரு பெண் உயிரிழந்த துயரமான நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது ஒரு கட்டுரை. “உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் எக்ஸ். தினமும் பேருந்தில் வருகிறவர் அவர். நேற்று காலையில் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது திடீரென்று வண்டி புறப்பட்டதால் கீழே விழுந்துவிட்டார். அப்போது பேருந்தின் பின் சக்கரம் ….,” என்று அந்தக் கட்டுரை போகிறது.
அந்தப் பெண் இறந்துவிட்டார். அவருடைய வாழ்க்கை கடந்த காலமாகிவிட்டது. அப்படியென்றால், “ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்” என்றும், “தினமும் பேருந்தில் வருகிறவர்,” என்றும் நிகழ்காலத்தில் குறிப்பிடுவது எப்படிச் சரியாக இருக்கும்? நிகழ்காலத்தில் குறிப்பிடுகிறபோது அவர் இப்போதும் உயிரோடு வாழ்கிறார் என்றுதானே பொருள்படும்? உயிரோடுதான் இருக்கிறார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றால் இப்படி எழுதலாம். மாறாக, உயிரிழந்துவிட்டார் என்ற நிலையில், “ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்” என்றும், “பேருந்தில் வந்துகொண்டிருந்தவர்” என்றும் எழுதுவதுதானே முறை? (ஆசிரியை என்பதிலேயே ஒரு பஞ்சாயத்து இருக்கிறது, அதைப் பின்னர் பார்க்கலாம்.)
இடமளிக்கும் தமிழ்
இதில் இன்னொரு பக்கத்தைப் பார்ப்போம்.கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் கி.ரா. என்ற கி. ராஜநாராயணன் தமது 97வது வயதில் காலமானார். அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் ஒரு கட்டுரையில், “அவர் கோபல்ல கிராமம், நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்புகளை வழங்கியிருக்கிறார்,” என்று வருகிறது. இங்கே, காலமாகிவிட்ட ஒருவர் “வழங்கியிருக்கிறார்” என நிகழ்கால வினைமுற்று வாக்கியமாக எழுதப்பட்டிருக்கிறது. இது சரிதானா?
சரிதான்! ஏனென்றால், கி.ரா. மறைந்துவிட்டாலும், அவருடைய எழுத்துகள் என்றென்றும் இருக்கும். அந்த எழுத்துகளில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். “அவர் தமது புகழ்பெற்ற படைப்புகளில் இருக்கிறார்,” என்ற பொருளில், “அவர் புகழ்பெற்ற படைப்புகளை வழங்கியிருக்கிறார்,” என்று எழுதுவதில் ஒரு நயம் இருக்கிறது. கறாரான இலக்கணப்படி இது தவறாகக் கூட இருக்கலாம், ஆனால் இத்தகைய உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளுக்கு இளகிக்கொடுத்து இடமளிக்கிறது தமிழ்.
ஆனால், ஏதேனும் ஒரு விழாவில் கி.ரா. பங்கேற்றது பற்றிக் குறிப்பிடும்போது, “நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்“ என்று கடந்தகால வாக்கியமாகவோ, “நிகழ்வுக்கு அவர் வந்திருந்தார்” என்று கடந்தகால வினைமுற்று வாக்கியமாகவோ எழுத வேண்டும்.
செய்வினை–செயப்பாட்டு வினை
வாசிக்கப்படுவதற்கு இடையூறாக எழுதப்படுகிற நடைகளில் ஒன்றுதான் தேவையின்றி செயப்பாட்டு வினையைப் பயன்படுத்துவது. இந்த வாக்கியத்தில் கூட “வாசிக்கப்படுவதற்கு” என்றும் “எழுதப்படுகிற” என்றும் இரண்டு செயப்பாட்டு வினைச் சொற்கள் இருக்கின்றன. இதை, “வாசிப்பதற்கு இடையூறாக எழுதுகிற நடைகளில் ஒன்றுதான் தேவையின்றி செயப்பாட்டு வினையைப் பயன்படுத்துவது” என்று எழுதினால் குறுக்கீடின்றி வாசிக்க முடியும்.
ஆங்கிலத்தில் செயப்பாட்டு வினையாகிய ‘பாசிவ் வாய்ஸ்’ சொல்லாடல்கள் நிறையப் பயன்படுத்தப்படும். The bus was driven by Jacob as the book was being read by Rani என்று ஆங்கிலத்தில் இயல்பாக எழுதிவிடுவார்கள். இதையே தமிழில் “ராணியால் புத்தகம் படிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது பேருந்து ஜேக்கப்பால் ஓட்டப்பட்டது,” என்று எழுதுவது வாசிப்பு சுகத்தைக் கெடுத்துவிடும். தமிழ் வழக்குப்படி, “ராணி புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது ஜேக்கப் பேருந்தை ஓட்டினான்,” என்று செய்வினைச் சொற்களால் எழுதினால் வாசிப்பதற்கு இணக்கமாக இருக்கும்.
சில பொது நிகழ்ச்சிகளில், “கூட்டம் ஆரம்பிக்க இருப்பதால் ஆங்காங்கே நின்றுகொண்டிருப்பவர்களும் அரங்கிற்கு வெளியே இருப்பவர்களும் இருக்கைகளில் அமருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும்போது, அவர்களையெல்லாம் யாரோ கேட்டுக்கொள்கிறார்கள், அறிவிப்பவருக்கும் அந்த வேண்டுகோளுக்கும் தொடர்பில்லை என்ற எண்ணம்தான் ஏற்படும். இதையே, “….. இருக்கைகளில் அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அறிவித்தால், அமைப்பாளர்கள் அழைக்கிறார்கள் என்ற நெருக்கமான எண்ணம் ஏற்படும். எழுதுவதிலும் இந்த நெருக்கத்தை உணரும் வகையில் செய்வினை–செயற்பாட்டு வினையைப் பொருத்தமாகக் கையாள்வது இனிது.
இதுவாவது போகட்டும் என்று விட்டுவிடலாம். சிலர், “எல்லோரும் தயாராக இருக்கும்படி விழாக்குழுவினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”, “அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறோம்” என்றெல்லாம் அறிவிப்பதும், எழுதுவதும் எவ்வளவு சிரிப்புக்குரியது என விளக்க வேண்டியதில்லை. “பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது,” என்று எழுதுவதை விட, “பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்,” என எழுதுவதில் உயிர்ப்பிருப்பதைச் சொல்லிக்காட்ட வேண்டியதில்லை. செயப்பாட்டு வினையில் எழுதவே கூடாதா? எழுதலாம். கூடியவரையில் அப்படி வராமல் பார்த்துக்கொள்வது எழுதும் திறனை வளர்க்கும். மேலே உள்ள பத்தியிலேயே “அறிவிக்கப்படும்”, “அறிவிக்கப்படும்போது” என்ற இரண்டு செயப்பாட்டு வினைச் சொற்கள் இருக்கவே செய்கின்றன.
என்ன என்று…
மேற்கொண்டு பிழையான சொல்லாடல்களுக்குச் செல்வதற்கு முன்பாக, மேலே உள்ள பத்தியில் “என்று”, “என” ஆகிய இரண்டு சொற்கள் வருவது பற்றிப் பார்ப்போம். ”போகட்டும் என்று விட்டுவிடலாம்,” “சிரிப்புக்குரியது என,” ”…திட்டமிடப்பட்டிருக்கிறது என்று,” “திட்டமிட்டிருக்கிறோம் என” – இப்படி வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். “என்று” என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் போடுவது பிழையல்ல. ஆயினும் அது ஒரு வகையான அயர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். “என”, “என்பதாக”, “என்றெல்லாம்”, “இப்படி” என்ற சொற்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது வாக்கியங்களையும் பத்திகளையும் அழகுபடுத்தும். மேலே உள்ள பத்தியிலேயே கடைசி வாக்கியத்தில், “… என எழுதுவதில் உயிர்ப்பிருப்பதைச் சொல்லிக்காட்ட வேண்டியதில்லை,” என்ற வரி இருக்கிறது. இதை, “…..உயிர்ப்பிருக்கிறது என்று சொல்லிக்காட்ட” என்றோ, “உயிர்ப்பிருக்கிறது எனச் சொல்லிக்காட்ட” என்றெல்லாம் எழுதாமல், “… உயிர்ப்பிருப்பதை” என ஒரே சொல்லாக இணைக்கிறபோது சொற்களின் எண்ணிக்கை சுருங்குகிறது, வாக்கியத்தின் சுவை விரிகிறது.
இதையெல்லாம் எப்படி நினைவில் கொள்வது? குறிப்பாகப் பிழையுள்ள எழுத்துகளையும், பிழையற்ற எழுத்துகளையும் எவ்வாறு அறிவது? எடுத்துக்காட்டாக “மன்டபம்”, “மண்டபம்” இந்த இரண்டு சொற்களில் ஒன்றில், இரண்டு சுழி “ன்” வருகிறது, இன்னொன்றில் மூன்று சுழி “ண்” வருகிறது. இவற்றில் எது சரி?
எழுத்து வரிசையின் உதவி
தமிழின் சிறப்புகளில் ஒன்றாக, அதன் எழுத்து வரிசையே பிழையின்றி எழுதுவதற்கு உதவும் வகையில் இருப்பதைத் தெரிவிக்கிறார் தமிழாசிரியர், கவிஞர் நா. முத்துநிலவன். அதனை நேரடியாகப் படித்தறிய அவரது ‘தமிழ் இனிது’ புத்தகத்தை மேசையில் வைத்துக்கொள்ளலாம். க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம என பள்ளியில் படித்த எழுத்து உயிர்மெய் எழுத்து வரிசையை நினைவுக்குக் கொண்டுவந்தால் அவற்றின் மேல் புள்ளி வைக்கும்போது கிடைக்கும் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம் ஆகிய, வல்லின எழுத்துகளை அடுத்து மெல்லின எழுத்துகள் அமைகிற 10 மெய் எழுத்துகளின் வரிசை மனதில் பதிந்துவிடும். ய, ர, ல, வ, ழ, ள ஆகிய இடையின எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும்போது வரும் ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும், எஞ்சிய ற, ன ஆகியவை பொட்டு வைத்துக்கொள்வதால் வரும் ற், ன் ஆகிய இரண்டும் சேர்ந்து மொத்தம் 18 மெய் எழுத்துகள்.
ஒரு சொல்லின் இடையில் வல்லின எழுத்தாகிய ‘க’ வருகிறது, அதற்கு முன் மெல்லின மெய்யெழுத்து வரவேண்டுமானால் அது ‘ங்’ ஆகவே இருக்கும். உதாரணமாக “சங்கம்”. (சிங்கம், தங்கம், பங்கம், மங்களம், நாங்கள், நீங்கள், தாங்கள் என்ற சொற்கள் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்குமே?) இதே போல, சொல்லின் இடையில் ‘ச’ வருகிறதென்றால், அதற்கு முனபாக வரக்கூடிய மெல்லின மெய்யெழுத்து ‘ஞ்‘ ஆகத்தான் இருக்கும். உதாரணமாக “நெஞ்சு” (இப்போது பஞ்சு, அஞ்சான், பஞ்சம், கஞ்சத்தனம்,கெஞ்சுவது, மிஞ்சுவது, ரஞ்சிதமே… இப்படியான சொற்கள் நினைவில் வரிசையாக வந்து நிற்கின்றன அல்லவா?
இதே போன்று ‘ட’–வுக்கு முன் மூன்று சுழி ‘ண்’ வரும் (பண்டம், துண்டு, மண்டபம், மண்டேலா), ‘ற’–வுக்கு முன் இரண்டு சுழி ‘ன்’ வரும் (தென்றல், கன்று, தின்றுவிடு). இவ்வாறே ‘த’–வுக்கு முன் ‘ந்’ (பந்து, வெந்து, சொந்தம்), ‘ப’–வுக்கு முன் ‘ம்’ (அம்பு, பம்பரம், ஆம்பல்) வரும். இதனால்தான் தமிழ் எழுத்து அட்டவனையில் க்–ங், ச்–ஞ், ட்–ண், ற்–ன், த்–ந், ப்–ம் என்ற எழுத்துகள் அடுத்தடுத்து அடுக்கப்பட்டுள்ளன. இந்த வரிசை நுட்பத்தில் தமிழ் மரபு இருக்கிறது. ஆனால், ‘க’–வுக்கு முன் ‘ங்’ வர வேண்டுமென்றால், “நான்கு” என வருவது ஏன்? “நாங்கு” என்றுதானே வர வேண்டும்?, ‘த’–வுக்கு முன் ‘ந்’ வர வேண்டுமானால் “வான்மதி” என்றானது ஏன்? “என்னப்பா”, “கண்ணம்மா” ஆகியவற்றிலும் இவை போன்ற பிற சொற்களிலும் இந்த விதி பொருந்தாதது ஏன்? கல்+கின்று+ஆர் = கற்கின்றார் என்று மாறுகிறது. ஆனால் செல்+கின்று+ஆர் =செல்கின்றார் என மாறுவது எப்படி? செற்கின்றார் என்றுதானே வர வேண்டும்?
இதைப் புரிந்துகொள்ள உறுதியான ஆனால் எளிமையான வழி தொடர் வாசிப்புதான். இவை போன்ற சொற்கள் ஏன் இவ்வாறு மாறுகின்றன என்று இலக்கணத்தை விடவும் நடைமுறை வழக்கத்தின் மூலமே புரிந்துகொள்ள முடியும். தமிழ்ச் சொற்களோடு அதிகம் புழங்கினால் பிழை நேராது என்று முக்கியமான பாதையைக் காட்டுகிறது ‘தமிழ் இனிது’
இப்படிப்பட்ட பல பயனுள்ள தகவல்களை இந்தப் புத்தகம் கொண்டிருக்கின்றன. –இந்த வாக்கியம் சரியா? ஒருமை, பன்மை தகராறை அடுத்து ‘செட்டில்’ பண்ணுவோம்.
– அ. குமரேசன்