– அ. குமரேசன்
அம்மாவும் அப்பாவும் பலகாரங்களை உணவு மேசையில் வைத்துக்கொண்டிருந்தபோது பக்கத்தில் போய் நின்ற செல்வி டக்கென்று சுட்டு வைத்திருக்கிற வடையை எடுத்துக் கடித்தாள். –இந்த வாக்கியத்தில் இருக்கிற ஒரு வேடிக்கை இருப்பதாகக் கூறியிருந்தேன். அதைக் கண்டுபிடித்துப் புன்னகை செய்திருப்பீர்கள். ஆம், நீங்கள் ஊகித்தது சரிதான். செல்வி டக்கென்று சுட்டுவைத்திருககிற வடையை எடுத்துக் கடித்தாள் என்றால், அவள் டக்கென்று வடையை எடுத்தாளா அல்லது வடை டக்கென்று சுடப்பட்டதா? பழக்கத்தின் காரணமாக எல்லோரும் இந்த வாக்கியத்தைச் சரியாகப் புரிந்துகொள்வார்கள் என்றாலும், நாம் இன்னும் சரியாக எழுதுவது சிறப்பல்லவா?
இந்த வாக்கியம் அம்மாவும் அப்பாவும் பலகாரங்களை உணவு மேசையில் வைத்துக்கொண்டிருந்தபோது பக்கத்தில் போய் நின்ற செல்வி, சுட்டு வைத்திருக்கிற வடையை டக்கென்று எடுத்துக் கடித்தாள் என்று இருக்குமானால் மேலும் சரியாகிவிடும்.
இது போன்ற பல வேடிக்கைகளைப் பார்க்க முடியும். மாதிரிக்காக இன்னொன்று: சூடான பசுவின் பால் கொண்டுவரச் சொன்னான். பால் வந்தது, ஆனால் ஆறிப் போயிருந்தது. ஏன் தெரிகிறதா? சூடான பசுவின் பால் என்றால், உடல் சூடாக இருந்த பசுமாட்டிடமிருந்து கறக்கப்பட்ட பால் என்ற பொருள் வருகிறது. அந்தப் பாலின் சூடு எவ்வளவு நேரத்திற்கு இருக்கும்? இதையே அவன் சூடான பசும்பால் கொண்டுவரச் சொல்லியிருந்தால், பாலைக் கொதிக்கவைத்து சுடச்சுடக் கொண்டுவந்திருப்பார்கள்!
அரசியல் சட்டம்
சரியாகக் கையாளப்படாத இன்னொரு சொற்றொடர் அரசியல் அமைப்புச் சட்டம். ஆங்கிலத்தின் கான்ஸ்டிடியூசன் (constitution) என்ற சொல் தமிழில் வெகு காலமாக இப்படித்தான் சொல்லப்பட்டு வருகிறது. அரசியலில் ஈடுபடுகிறவர்கள் முதல் பள்ளிப் பாட நூல் எழுதுகிறவர்கள் வரையில் கான்ஸ்டிடியூசனை அரசியலமைப்புச் சட்டம் என்றே எழுதுகிறார்கள். சில அகராதிகளிலும் கூட இப்படியே இருக்கிறது. அரசியல் சட்டம் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சொற்றொடர்கள் பொருள் புரிந்துகொள்ளத் தக்கவையாகவே இருக்கின்றன என்றாலும் சரியான பொருளைத் தரவில்லை.
ஏனென்றால், கான்ஸ்டிடியூசன் ஒரு நாட்டின் அரசு, அதன் லட்சியங்கள், அதற்கான அமைப்பு முறை, அதற்குரிய சட்டங்களுக்கான அடிப்படைகள் ஆகியவற்றைக் கொண்ட, ஏற்கப்பட்ட தொகுப்பாகும். அரசும் நாடாளுமன்றமும் நீதிமன்றமும் அதைச் சார்ந்தே இயங்குகின்றன, அப்படித்தான் இயங்க வேண்டும். அரசு கொண்டுவருகிற ஒரு புதிய சட்டம், அந்த அடிப்படை நோக்கங்களுக்கு முரணாக இருக்குமென்றால், நீதிமன்றம் தனது தீர்ப்பில் அது செல்லாது என்று தள்ளுபடி செய்திருக்கிற செய்திகளைப் படித்திருப்பீர்கள். அந்த நோக்கங்களுக்கு உட்பட்டதாகவே புதிய சட்டம் இருக்கிறது என்று நீதிமன்றம் கருதுமானால் அதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துவிடும். அரசின் நடவடிக்கையோ, அதை அங்கீகரிக்கும் ஒரு தீர்ப்போ கான்ஸ்டிடியூசன் லட்சியங்களுக்கு எதிராக இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுவதையும், எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெறுவதையும் பார்க்கிறோம்.
அந்த அடிப்படைத் தொகுப்பு குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானது. அரசு, அதன் அறிவிக்கப்பட்ட இலக்குகள், நாடாளுமன்ற முறை, தேர்தல் ஆகியவற்றை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். அவர்களும் அரசியல் இயக்கங்களாக, அரசியல் கொள்கைகளோடு இயங்குகிறவர்கள்தான். ஆகவே அரசியல் அமைப்புச் சட்டம் என்று கூறுவது பொருத்தமில்லை அல்லவா?
அப்படியானால் சரியான சொல்லாக்கம் என்ன? இது அரசு அமைப்புக்கும் சட்டங்களுக்குமான அடிப்படைத் தொகுப்பு. ஆகவே, அரசியல் அமைப்புச் சட்டம் என்றோ அரசியல் சட்டம் என்றோ கூறுவதற்கு மாறாக, அரசமைப்பு சாசனம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற மனித உரிமைகள் பயிலரங்கம் ஒன்றில், அரசமைப்பு சட்ட சாசனம் என்று இருந்ததைப் பார்த்தேன். அப்போதிருந்து, அதைச் சுருக்கி, அரசமைப்பு சாசனம் என்று பயன்படுத்தி வருகிறேன்.
இறையாவது ஆண்மையாவது!
அரசமைப்போடு தொடர்புள்ள இன்னொன்று –, சாவரின்ட்டி (sovereignty) என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல். முன்பு இது சுயாதிபத்தியம் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது இறையாண்மை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருள் மட்டுமின்றி, உயர்வான, பெருமைக்குரிய, தலைமை என்ற பொருள்களும் இருக்கின்றன. ஆண்மை என்ற சொல்லுக்கு ஆண் தன்மை என்ற பாலினம் சார்ந்த பொருள் மட்டுமின்றி ஆளுமை, திட்டமிட்டு செயல்படுத்துதல் என்ற பொருள்களும் இருக்கின்றன. ஆகவேதான், விடுதலையடைந்த ஒரு நாடு உயர்வான தன்னாளுமைத் தகுதியோடு இயங்குகிறது என்ற பொருளில் இறையையும் ஆண்மையையும் இணைத்து இறையாண்மை என்ற சொல் உருவாக்கப்பட்டது என்று தமிழறிஞர்கள் பலரும் தெரிவிக்கிறார்கள். அது உண்மைதான்.
ஆயினும், ஆகப் பெரும்பாலான தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இறை என்றால் கடவுளைக் குறிக்கிற சொல்தான். ஆண்மை என்றால் ஆண் தன்மையைக் குறிக்கிற சொல்தான். பொருளறிந்து பேசுவோரையும் எழுதுவோரையும் தவிர்த்துப் பலரிடமும் இது விசாரித்திருக்கிறேன். அவர்களுக்கு இறையாண்மையின் பொருள் தெரியவில்லை. ஒருவர் நீண்ட நேரம் யோசித்துவிட்டு, இறைவனைப் போல புனிதமான நாடு என்று விளக்கமளித்தார். இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சமமான அடிப்படை உரிமைககளை உறுதிப்படுத்தியிருக்கிற நாடல்லவா நம்முடையது? ஆகவே, இறையும் வேண்டாம், ஆண்மையும் வேண்டாம் என்று, “உயர்தன்னாளுமை” என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறேன். ஆர்வத்தோடு முயன்று, இதைவிடப் பொருத்தமான சொல்லை யாரேனும் உருவாக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்.
சொல்லரசியல் பேசுவோம்
இது வெறும் சொல்லாராய்ச்சி அல்ல. சொல்லரசியல். சொற்களின் அரசியல் குறித்தே விரிவாகப் பேச முடியும். பேச வேண்டும். அரசியல் சொற்கள் என இருக்கின்றன. பொதுவுடைமை, ஜனநாயகம், சமூக ஜனநாயகம், மக்களாட்சி, முடியாட்சி, சர்வாதிகாரம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், பாசிசம், சமத்துவம், மதச்சார்பின்மை, கூட்டணி, பண்ணைத்துவம், கூட்டாட்சி, இடதுசாரி, வலது சாரி, மையவாதம், மிதவாதம், தீவிரவாதம் என அரசியல் கொள்கை சார்ந்த பல சொற்கள் இருக்கின்றன.
இங்கே நாம் பேசுவது சொற்களின் அரசியல். பலவகையான சொற்களை அரசியல், பண்பாட்டு லட்சியங்களுக்கு ஏற்பப் பயன்படுத்துவதுதான் சொல்லரசியல். எடுத்துக்காட்டாக செங்கொடி இயக்க மேடைகளில் பாடப்படும் புகழ்பெற்ற “மனுசங்கடா, நாங்க மனுசங்கடா” பாடலைப் பார்ப்போமே. கவிஞர் இன்குலாப் எழுதிய அந்தப் பாடலில் வருகிற, “நாங்க எரியும்போது எவம் மசுற புடுங்கப் போனீங்க” என்ற வரி, கேட்டுக்கொண்டிருக்கிற அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்து எழுச்சியூட்டும். பொதுவாக “மசுறு” என்ற சொல்லைப் பொதுவெளியில் பயன்படுத்த மாட்டோம். ஆனால், இந்தப் பாடலில் அதற்கு அரசியல் ஆழம் ஒன்று அமைகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா எழுதிய “மீசை என்பது வெறும் மயிர்” என்ற புதுமையான நாவல் முக்கியமான அரசியல் – பண்பாட்டுத்தளக் கருத்துகளை முன்வைக்கிறது. மயிர் சார்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் வேறு சில நூல்களும் வந்திருக்கின்றன.
பாலின அரசியல் ஒன்று இருக்கிறது. அதற்கான சொற்களும் இருக்கின்றன. “பிற்போக்குத்தன இடிபாடுகளிலிருந்து விடுபட்டு எழுந்தான் மனிதன்,” “அறிவால் மனிதன் அகிலத்தை அளந்தான்,” என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். இங்கே மனிதன் என்ற சொல் ஒரு தனி ஆளைக் குறிக்கவில்லை, மனித குலத்தையே குறிக்கிறது. ஆனால், மனிதன் என ஆண்பால் சொல்லாக ஏன் பயன்படுத்த வேண்டும்? பிற்போக்குத்தனங்களிலிருந்து விடுபட்டு எழுந்த மனிதி இருந்திருக்க மாட்டாளா? ஆணாதிக்கக் கருத்தியல்களை உதறிவிட்டாலும் கூட, இந்தச் சொல் ஒட்டிக்கொண்டுடவிட்டது. எனது எழுத்திலும் பேச்சிலும் மனிதர், மனிதர்கள் என்றே பயன்படுத்துகிறேன். அவ்வாறே பயன்படுத்த வேண்டுகோளும் விடுக்கிறேன்.
ஆசிரியர் ஒரு பொதுவான சொல். ஆனால் அது ஆணைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் ஒரு பெண்ணென்றால் ஆசிரியை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆசிரியன் என்று எழுதுவதற்கான இடம் கட்டுரையில் இருக்குமென்றால் மட்டுமே ஆசிரியை எனக் குறிப்பிட வேண்டும். இல்லையென்றால், குறிப்பிடப்படுகிற ஒருவரது பாலின அடையாளம் முக்கியமல்ல என்றால், ஆசிரியர் என்றே எழுதலாம். அல்லது, பெயரைக் குறிப்பிடுவதன் மூலம், வாசகர்கள் அந்த ஆசிரியர் பெண்ணா, ஆணா என்று புரிந்துகொள்ளச் செய்யலாம். “பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் மீனா இலக்கணத்தை எளிமையாகக் கற்றுக்கொடுப்பதில் ஒரு வல்லுநர்,” என்று எழுதினால், ஆசிரியர் என்ற பொதுச் சொல்லைப் பயன்படுத்தியதாகவும் இருக்கும், அவர் ஒரு பெண் என்று தெரிவித்ததாகவும் இருக்கும். “கல்லூரி ஆசிரியர் வில்லியம் சிறப்புரையாற்றுகிறார்,” என்கிறபோதும் அந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறுகின்றன.
மாணவன், மாணவி, மாணவர், தலைவி, தலைவன், தலைவர் என்ற சொற்களின் பயன்பாட்டையும் இதே போன்று கொண்டுவரலாம்
இதே போலத்தான், குடும்ப உறவுகளை எழுதுகிறபோதும் ஆணை முன்னிலைப்படுத்தும் பாலின அரசியல் நம்மையறியாமல் இணைந்துகொள்கிறது. “அப்பா வீட்டுக்குள் வேகமாக வந்துகொண்டிருந்தார். அப்போது அம்மா சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள்,” என்று எழுதிவிடுகிறோம். பேசிவிடுகிறோம். அம்மாவிடம் கூடுதல் உரிமையும் நெருக்கமும் இருக்கலாம். அதற்காகப் பொது வெளியில் அம்மாவை மரியாதைக் குறைவாகக் குறிப்பிடலாமா? இதிலிருந்து மாறுபட்டு, “தீவிர யோசனையில் இருந்தார் அப்பா. பொறுமையாகக் காத்திருந்தார் அம்மா,” என்று சிலர் எழுதுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதலாளி, பண்ணையார், மேலதிகாரி உள்ளிட்டோரை அவர் என்று குறிப்பிடுகிறோம், தொழிலாளி, பண்ணையாள், ஊழியர் உள்ளிட்டோரை அவன் அல்லது அவள் என்று குறிப்பிடுகிறோம். இதிலெல்லாம் மாற்றம் ஏற்படுவது முற்போக்கான பாதையில் முன்னேறுவதன் அடையாளமாக இருக்கும்.
இவ்வளவு சொல்லியும் மாற்றிக்கொள்ள மறுக்கும் நபர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால்….
– அ. குமரேசன்