இலக்கியம்தொடர்கள்

ஒருமை – பன்மை தகராறும், அல்லது – மற்றும் அலப்பறையும் – அ.குமரேசன்

549

இப்படிப்பட்ட பல பயனுள்ள தகவல்களை இந்தப் புத்தகம் கொண்டிருக்கின்றன. –இந்த வாக்கியம் சரியா?

ஒரு நாளேட்டின் அலுவலகத்தில் உணவு நேரத்து உரையாடலில் இந்த வினா வந்தது. மூத்த  துணையாசிரியர், “இல்லை, இந்த வாக்கியம் தவறு,” என்றார்.

“அதெப்படி? ‘தகவல்களை’ என்ற பன்மைச் சொல் வருகிறபோது, ‘கொண்டிருக்கின்றன’ என்ற பன்மைச் சொல்லில் முடிவதுதானே சரி? ஒரு பொருளைக் குறிக்கிற ஒருமைச் சொல் வருகிறபோது அதைத் தொடர்கிற சொல்லும் ஒருமையில்தான் வர வேண்டும், பல பொருள்களைக் குறிக்கும் பன்மைச் சொல் வருமானால் அதன் தொடர்ச்சியாக வருவதும் பன்மையில்தான் இருக்க வேண்டும் என்று தமிழ் வகுப்பில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களே,” என்று கேட்டார் இளம் துணையாசிரியர். 

“பள்ளியில் தமிழ் வகுப்பில் கேட்டதை நினைவில் வைத்திருக்கிறீர்கள், மகிழ்ச்சி. ஒரு பொருளைக் குறிப்பிடுவது ஒருமை, ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் குறிப்பிடுவது பன்மை  என்று மறக்காமல் இருப்பதும் மகிழ்ச்சி. ஆனால், தமிழாசிரியர் கூறியதை நீங்கள் முழுமையாகக் கேட்கவில்லை என்று தெரிகிறது.” இவ்வாறு கூறிவிட்டுத் தொடர்ந்து அவருடன் ஒருமை, பன்மை தகராறு பற்றிப் பேசினார் மூத்தவர்.தொடர்ந்து அவர் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் பற்றிச் சுருக்கமாக விளக்கினார்.

வாக்கியத்தின் மூன்று கூறுகள்

ஒரு வாக்கியத்தில் பொதுவாக எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்று கூறுகள் இருக்கும். “ஆசிரியர் பாடம் நடத்தினார்” என்ற வாக்கியத்தில் ஆசிரியர் எழுவாய், பாடம் செயப்படுபொருள், நடத்தினார் பயனிலை. யார் அல்லது எது என்று தொடங்குகிற வாக்கியம், யாரை அல்லது எதை  என்று தொடர்ந்து, என்ன செய்தார் அல்லது என்ன செய்தது என முடிவடையும்.  எடுத்துக்காட்டாக இங்கே உள்ள வாக்கியத்தில் ஆசிரியர் (யார்) என்று எழுவாய் வருகிறது. பாடம் (எதை) என்று செயப்படுபொருள் வருகிறது. நடத்தினார் (என்ன செய்தார்) என்று பயனிலையில் முடிகிறது. சொற்றொடரின் நயத்திற்காக, “ஆசிரியர் நடத்தினார் பாடம்“ என்றோ, “பாடம் நடத்தினார் ஆசிரியர்”  என்றோ எழுதிக்கொள்ளலாம்.

ஆசிரியர் ஒருவர்தான் – ஆகவே அது ஒருமைச் சொல். அவர்தான் பாடத்தை நடத்தியவர் என்பதால், கடைசியில் நடத்தினார் என்று ஒருமைச் சொல்லாகவே வருகிறது. ஆசிரியர் நிறையப் பாடங்களை நடத்தியதாகச் சொல்ல வேண்டியிருக்கிறதா? அப்போதும், ஆசிரியர் என்ன செய்தார் என்றுதான் முடிவடையும், அதுவும் “ ஒருமைச் சொல்லாகவே இருக்கும். ஆசிரியர் (ஒருமை) பல பாடங்களை நடத்தியிருந்தாலும், அவரது செயலைக் குறிப்பிடுகிற கடைசிச் சொல் நடத்தினார் (ஒருமை) என்றுதான் இருக்க வேண்டும். அந்த வாக்கியம் இவ்வாறு அமையும்: “ஆசிரியர் நிறையப் பாடங்களை நடத்தினார்”.

பல ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பாடத்தை நடத்தியதாக வைத்துக்கொள்வோம். அப்போது வாக்கியம் “ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்கள்” என்று அமையும். இந்த இரண்டு வாக்கியங்களிலுமே செயப்படுபொருளாக (எதை) வருவது பாடம். அது பாடம் என்று ஒருமையில் இருந்தாலும் சரி, பாடங்கள் என்று பன்மையில் இருந்தாலும் சரி, பயனிலைச் சொல்லாக ஆசிரியர் செய்ததைத்தான் குறிக்கிறது என்பதால் நடத்தினார் என்றே முடியும்.  ஆசிரியர்கள் என்று எழுவாய்ச் சொல் பன்மையில் இருந்தால், பயனிலைச் சொல்லும் அதற்கேற்பப் பன்மையைக் குறிப்பதாக நடத்தினார்கள் என்று அமையும்.

“ஆசிரியரின் மேசையில் பாடநூல்கள் இருந்தன.” –இந்தச் சொற்றொடரில், “பாடநூல்கள்”  எழுவாயாகிவிடுகிறது. அப்போது அதன் பயனிலையாக “இருந்தன” என்று என்று முடிவடையும். “ஆசிரியரால் பாடங்கள் நடத்தப்பட்டன” என்ற செயப்பாட்டு வினை வாக்கியத்திலும், பாடங்கள்தான் எழுவாய், ஆகவே அதற்கான பயனிலை “நடத்தப்பட்டன” என்றுதான் அமையும்.

புத்தகங்கள் திறந்திருந்தன, ஆசிரியர் புத்தகங்களைத் திறந்தார், பாடங்கள் சுவையாக இருந்தன, ஆசிரியர் பாடங்களைச் சுவையாக நடத்தினார், ஆசிரியர்கள் பாடத்தைச் சுவையாக நடத்தினார்கள… இந்த வாக்கியங்களின் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை அமைப்புகளில் உள்ள ஒருமை, பன்மைச் சொற்களைக் கவனத்தில் கொள்ளலாம்.

இதே போன்று நான், நாங்கள், நீ, நீங்கள், அவள், அவர்கள், இவன், இவர்கள், அது, அவை என்ற எழுவாய்களுக்கு ஏற்ப வந்தேன், வந்தோம், வந்தாய், வந்தீர்கள், வந்தாள், வந்தார்கள், வந்தான், வந்தார்கள், வந்தது, வந்தன என்று பயனிலைகள் அமையும்.

பலர், “அவைகளை ஏற்க முடியாது”  என்று எழுதுகிறார்கள். நானும் அப்படி எழுதி வந்திருக்கிறேன். அவை  என்றாலே பன்மைதான், பிறகு எதற்காக அதனுடன் களை  என்று, பயிருக்கு அருகில் வளர்ந்த களையாக,  மேலும் ஒரு பன்மை அடையாளம் தருகிற எழுத்துகளைச் சேர்க்க வேண்டும்? ஆகவே இங்கே  “அவற்றை ஏற்க முடியாது” என்று எழுதினால் அதை ஏற்கலாம்.

அளவோடு அல்லது…

ஒருமை பன்மை விவகாரத்தை முடிந்த அளவுக்குக் குழப்பியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இனி இதே போன்ற, எழுத்து நடையில் ஏற்படுகிற மற்ற சில தகராறுகள் அல்லது சிக்கல்கள் பற்றி இப்போது பார்க்கலாம். இந்த வாக்கியத்தில் இருக்கிற “தகராறுகள் அல்லது சிக்கல்கள்” என்ற  சொற்றொடரில் பிழையேதும் இல்லை. ஆனால், முன்பு வாக்கியங்களில் தேவையில்லாமல் செயப்பாட்டு வினையைப் பயன்படுத்துவது வாசிப்பு வேகத்திற்குத் தடைபோடும் என்று பார்த்தோம் அல்லவா? அதே போல, அல்லது என்ற சொல்லையும் அளவோடு பயன்படுத்தினால் சுவை குன்றாமல் இருக்கும்.

காதலியுடன்  ரயிலில் அல்லது விமானத்தில் பயணிக்கும் சுகத்தை அவன் கற்பனை செய்தான்.”  முதலில் சொன்னது போல இந்த வாக்கிய அமைப்பில் பிழை இல்லை. ஆயினும், இதே வாக்கியம், “காதலியுடன் ரயிலிலோ விமானத்திலோ பயணிக்கும் சுகத்தை அவன் கற்பனை செய்தான்,” என்று இருக்குமானால் இடையூறின்றிப் படிக்கும் சுகத்தை அனுபவிக்கலாம்.

காதலியுடன் அவன்  ரயிலில் வந்துகொண்டிருக்கலாம், அல்லது விமானத்தில் வரக்கூடும்,” என்று அவன் எதிலே வருகிறான் என உறுதியாகத் தெரியாமல், இரண்டு வாக்கியங்களாகப் பிரித்து எழுதும்போது “அல்லது” என்று குறிப்பிடலாம். (இந்த வாக்கியத்தை மேலும் நேர்த்தியாக்கி, “காதலியுடன் அவன் ரயிலில் வந்துகொண்டிருக்கலாம், ஒருவேளை விமானத்தில் வரக்கூடும்,” என்றும் எழுதலாம்.)

அவர் அல்லது இவர் என்று எழுதுவதற்கு மாற்றாக அவரோ இவரோ என்று எழுதினால் ஒரு வார்த்தை குறையும்,  வேகமாகப் படிக்கவும் துணையாகும்.

மற்றும் சில

அல்லது போலவே தாராளமாகப்  பயன்படுத்தப்படுகிற  ஒரு சொல் “மற்றும்”. பின்வரும் வாக்கியத்தைப் போன்ற பல வாக்கியங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், பேசியிருப்பீர்கள், எழுதியுமிருப்பீர்கள்.  “நாங்கள் ரயில் மற்றும் விமானத்தில் வந்து சேர்ந்தோம்.’

இலக்கணப்படி இது பிழையான வாக்கியமா என்றால் இல்லைதான். ஆனால் தமிழுக்கான இயல்புப்படி இது  நேர்த்தியான வாக்கியமும் அல்ல. ஆங்கிலத்தில் அடிக்கடி  “and” என்ற சொல் அந்த மொழியின் இயல்புப்படி அடிக்கடி வரும். அந்தச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் ’மற்றும்’. ஆங்கில வாக்கியம் ஒன்றை மொழிபெயர்க்கிறபோது, அந்த  “and” வருகிற இடங்களிலெல்லாம் மற்றும் என்று போட்டுவிடுகிறார்கள்.

அலுவலகத்தில் கவிதா மற்றும் இலக்கியா இருந்தார்கள். அவர்களுடைய மேசைகளில் தட்டச்சு செய்ய வேண்டிய கடிதங்கள் மற்றும் கோப்புகளில் சேர்க்க வேண்டிய ஆவணங்கள் குவிந்திருந்தன.” இந்த வாக்கியங்களைச் சற்று மாற்றியமைத்து, “அலுவலகத்தில் கவிதாவும் இலக்கியாவும் இருந்தார்கள். அவர்களுடைய மேசைகளில் தட்டச்சு செய்ய வேண்டிய கடிதங்களும், கோப்புகளில் சேர்க்க வேண்டிய ஆவணங்களும் குவிந்திருந்தன,” என்று எழுதுவது தமிழ் இயல்புக்கேற்ப இருக்கும். தமிழில் இந்த “உம்” என்ற சொல்லின் பயன்பாட்டிற்கு உம்மைத்தொகை என்ற பெயரே இருக்கிறது.

ஆங்கிலத்தில் “You and I are invited to the function” என்ற ஒரு வாக்கியம் இருக்கிறது என்றால், அதைத் தமிழில் “நீ மற்றும் நான் விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்” என்று எழுதிப் பாருங்கள், உங்களுக்கே சிரிப்பு  வரும். “நீயும் நானும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்,” என்று எழுதினால் அதை ஏற்றுப் புன்னகைப்பீர்கள். ஏற்கெனவே பார்த்த செய்வினை–செயப்பாட்டுவினை பயன்பாட்டோடு இணைத்து, இதே வாக்கியத்தை, “உன்னையும் என்னையும் விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள்,” என்று எழுதினால், புன்னகைத்துக்கொண்டே என்னோடு புறப்பட்டுவிடுவீர்கள்.

வேறு எங்கேதான் “மற்றும்” என்ற சொல்லைப் போடுவது? ஒரு நிறுவனத்தின் பெயரில் அல்லது ஒரு திட்டத்தின் தலைப்பில்  “and” வருமானால் அங்கே மற்றும் பயன்படுத்தத்தான் வேண்டும்.  “Mannaar And Company| என்ற நிறுவனத்தின் பெயரை மன்னாரும் குழுமமும் என்று மொழிபெயர்க்காமல் “மன்னார் மற்றும் குழுமம்” என்று தமிழில் சொல்லலாம். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும்போது மட்டுமல்லாமல், தமிழில் நேரடியாக எழுதுகிற நேரங்களிலும் இந்த மற்றும் என்ற வார்த்தையை  மட்டுப்படுத்திப் பயன்படுத்துவது இனிது.

குழந்தையா காய்கறியா?

அப்புறம், “குழந்தை அழுகுகிறது”, “தலைவர் இருக்குகிறார்”  என்றெல்லாம் எழுதுகிற வேடிக்கைகள் இருக்கின்றன. “குழந்தை அழுகிறது” என்றுதானே எழுத வேண்டும்? “குழந்தை அழுகுகிறது” என்று  எழுதினால் அது என்ன காய்கறியா அழுகிப் போவதற்கு? “தலைவர் இருக்கிறார்” என்று எழுதினாலே மரியாதைதான். “இருக்குகிறார்” என்று இரட்டிப்பு மரியாதையெல்லாம் தேவையில்லை. ”தலைவர் இறுக்குகிறார்” என்றாலாவது, எதையோ இறுக்கிப் பிடிக்கிறார், கடுமையான நடவடிக்கை எடுக்கிறார் என்ற பொருள் கிடைக்கும். “இருக்குகிறார்” என்றால் மொழியின் முகச்சுழிப்புதான் கிடைக்கும்.

அம்மாவும் அப்பாவும் பலகாரங்களை  உணவு மேசையில் வைத்துக்கொண்டிருந்தபோது பக்கத்தில் போய் நின்ற செல்வி  டக்கென்று சுட்டு வைத்திருக்கிற வடையை எடுத்துக் கடித்தாள். –இந்த வாக்கியத்திலும் ஒரு வேடிக்கை இருக்கிறது. அடுத்த சந்திப்பில் அதை விசாரிப்போம்.

– அ.குமரேசன்

Leave a Reply