இலக்கியம்தொடர்கள்

புதிர் போட்டு முடிப்பதா, உடைத்துச் சொல்லிவிடுவதா (பகுதி-6) – அ.குமரேசன்

549 (2)

“கட்டுரைத் தொடர் எழுதுகிறபோது ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சுவாரசிய முடிச்சுடன், புதிருடன் முடியவேண்டுமா? ஒரு கேள்வியைப் போட்டு, அடுத்த கட்டுரையில் அதற்கான பதிலைப் பாப்போம் என்று முடிக்கலாமா?” 

இப்படியொரு கேள்வி வாட்ஸ்ஆப் வழியாக வந்திருக்கிறது.  தொடரைத் தொடர்ந்து வாசிக்க வைப்பதற்கும் அடுத்த கட்டுரையை எதிர்பார்க்க வைப்பதற்கும் இப்படி முடிப்பது உதவியாக இருக்கும். எழுதுகிறவருக்குமே கூட, அடுத்த கட்டுரையை எங்கிருந்து தொடங்குவது என்ற “ஸ்டார்ட்டிங் டிரபுள்” தவிர்க்கப்பட்டுவிடும்!

ஒவ்வொரு வாரமும் ஒரு மர்மத்தைக் கொண்டுவந்து, அடுத்த வாரத்திற்கான எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் முடிப்பது பத்திரிகைகளின் தொடர்கதை வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. பள்ளி நாட்களில், வீட்டுக்கு வரும் வார ஏடுகளில் படித்து வந்த தொடர்கதை சென்ற வாரம் ஒரு மர்ம முடிச்சுடன் “தொடரும்” போட்டிருக்க, இந்த வாரம் அந்த ஏடுகள் வந்ததும் அம்மாவுக்கும் எனக்கும் இடையே ஒரு ஏடிழுப்புப் போட்டியே நடக்கும்! 

கட்டுரைகளைப் பொறுத்தவரையில், ஆய்வு சார்ந்த தொடர்களிலும், அனுபவப் பகிர்வுத் தொடர்களிலும் இந்த உத்தி கையாளப்படுவதுண்டு. அறிவியல் தொடரில் ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி விவரித்துவிட்டு, “இந்தக் கண்டுபிடிப்பால் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. அது  என்ன தெரியுமா,” என அப்போதைய கட்டுரையை முடித்திருப்பார் எழுத்தாளர். பயணத் தொடரில், “அந்த ஊரில் போய் இறங்கியதும் நாங்கள் கண்ட காட்சி அதிர வைத்தது,” என்று குறிப்பிட்ட கட்டுரையை அந்தப் பயணி முடித்திருப்பார். அந்த முக்கியமான மாற்றம் என்ன, அந்த ஊரில் கண்ட காட்சி என்ன என்று தெரிந்துகொள்கிற ஆர்வம் நம்மைத் தொற்றிக்கொள்ளும்.

தொடர்கதையாக எழுதப்படாமல் முழு நாவல் வடிவில் கொண்டுவரப்படும் புத்தகங்களில், இப்படிப்பட்ட முடிச்சுகள் இல்லாமலே அத்தியாயங்கள் நகர்த்தப்பட்டிருக்கும்.  குறிப்பிட்ட அத்தியாயம் அதில் சித்தரிக்கப்படுகிற நிகழ்வுகளைப் பொறுத்து மர்மம் ஏதுமில்லாமல் பத்துப் பதினைந்து பக்கங்கள் வரையில் கூடப் போகும். இன்னோர் அத்தியாயம் இரண்டே பக்கங்களில், புதிரான முடிச்சுடனோ அப்படிப்பட்ட முடிச்சு இல்லாமலோ முடிந்திருக்கும்.

தொடர் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் இரண்டிலுமே இதைப் போன்ற முடிப்புகளைப் பார்க்கலாம். நாம் உரையாடிக்கொண்டிருக்கிற இந்தத்  தொடரில் கூட, முந்தைய கட்டுரைக்கும் அடுத்த கட்டுரைக்கும் ஒரு தொடர்ச்சி இருப்பதையும் காணலாம், அந்தந்தக் கட்டுரையே ஒரு முடிவான செய்தியோடு அமைந்திருப்பதையும் காணலாம்.

ஆகவே, இப்படித்தான் முடிக்க வேண்டுமென்பதும் இல்லை, இப்படி முடிக்கக்கூடாது என்பதுமில்லை. தேவையைப் பொறுத்து அதை முடிவு செய்துகொள்ளலாம் என்று இதில் ஒரு முடிவுக்கு வருவோம்.

படைப்பாளி படிப்பாளி பங்காளி

இதனுடன் தொடர்புள்ளதாக இன்னொரு கேள்வியும் வந்திருக்கிறது. “கதை எழுதுகிறபோது கதையின் முடிவை நாம் சொல்லாமல் வாசகரே ஊகித்துக்கொள்வது போல விடலாமா? இப்படியாக முடிந்தது என்று பழைய பாணியில் இல்லாமல் புதிராக முடிப்பது கதையை சுவாரசியமாக்கும் என்று இலக்கியக் கலந்துரையாடல்களில் சொல்கிறார்கள். முடிவு புதிராக இல்லாவிட்டால் கதை சுவாரசியமாக அமையாதா?” 

சுவாரசியமான கேள்விதான்.  கதைப் புனைவு தொடர்பான கேள்வி என்றாலும், இதற்கான பதிலைத் தேடுவது கட்டுரையாக்கத்திற்கும் உதவியாக இருக்கும்.

ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் தாங்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்டதையும் தொடக்கத்தில் நடிப்பும் கூச்சலுமான சைகை மொழியிலும், படிப்படியாகச் சொல்லும் எழுத்துமான பேச்சுமொழியிலும் சக மனிதர்களுக்குப் பகிர்ந்தார்கள் என ஏற்கெனவே பார்த்தோம். அப்படிப் பகிர்ந்தவை தகவல்களாக மட்டுமல்லாமல், கதைகளாகவும் வெளிப்பட்டன. கதை சொல்வதன் மூலமாக வரலாற்றையும் பண்பாட்டையும் தலைமுறைகளுக்குக் கடத்தினார்கள். அந்தக் கதைகளில் செய்தி இருந்தது, நோக்கம் இருந்தது. ஆகவே கதைகளுக்கு முடிவு இருந்தது. அப்படியான இலக்கை நோக்கி இயக்குகிற இயல்பினாலேயே இலக்கியம் என்ற சொல்லும் தமிழில் பரிணமித்தது.

உலக மொழிகளில் இலக்கியம் தனித்ததொரு பண்பாட்டுச் செயலாக அடையாளம் பெற்று வளர வளர, அதில் மனிதர்களுக்கே உரிய தன்மையுடன், படைப்பாளிகளுக்கே உரிய புத்தாக்கத்துடன் புதுப்புது வடிவங்கள் புறப்பட்டன. இயற்கை, வாழ்க்கை, காதல், நட்பு, அறிவு, நம்பிக்கை, பரபரப்பு, களிப்பு, நகைச்சுவை, சோகம், வீரம், படிப்பினை என்று பல்வேறு உள்ளடக்கங்கள் இலக்கியப் படகில் ஏறிக்கொண்டன. கதைகளை முடிக்கும் உத்தியிலும் திட்டவட்டம், மர்மம், தெளிவு, புதிர் எனப் பல வகை உத்திகள் தாங்களும் ஏறிக்கொண்டு உடன் பயணிக்கத் தொடங்கின.

கதையின்     செய்தி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அதன் உத்தியும் முக்கியத்துவம் பெற்றது. உலகெங்கும் இலக்கியவாதிகளின் வட்டாரங்களில் “உள்ளடக்கமா உருவமா” என்ற வாதம் முன்னுக்கு வந்தது. இரண்டும் பிரிக்க முடியாதவை என்ற புரிதலும் ஏற்பட்டது.

அக்கறையோடு எழுதப்பட்டு ஒரு புதிராக முடிக்கப்படுகிற கதை புரியாமலே போய்விடுவதில்லை. சொல்லப்படாத முடிவை யோசித்து ஊகிக்கிறபோது ஏற்படும் மகிழ்ச்சி, கதையை எழுதுகிறபோது படைப்பாளிக்கு ஏற்படுகிற மனநிறைவுக்கு நிகரானது. இதன் மூலம் படைப்பில் ஒரு படிப்பாளியாக மட்டுமல்லாமல், பங்காளியாகவும் வாசகர்  பங்கேற்கிறார். புரியவில்லையே என்று விட்டுவிடாமல், கதை நிகழ்வுகளை யோசிப்பது, ஒப்பிடுவது என்ற மனப்பயிற்சியில் ஈடுபட்டால் புதிர் விலகிவிடும். வாழ்க்கையிலும் அப்படித்தானே, புரியாத புதிர்களைக் கண்டு பின்வாங்கிவிடாமல், தீர்வு காண முயன்றால் வெற்றியும் முன்னேற்றமும் உறுதியாகின்றன அல்லவா?

வாசகர்கள் சோர்ந்து பின்வாங்கிவிடாமல் புதிருக்கு விடைகாணத் தூண்டும் வகையில் படைப்பாளியும் எழுத வேண்டும். படைப்பாளி ஒரு கண்ணோட்டத்தில் எழுதியிருக்க, வாசகர் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வாரானால் படைப்பின் நோக்கம் என்ன ஆகும்?

எடுத்துக்காட்டாக, ஒரு கதையில் வருகிற கிராமத்துக் காதலர்கள் சாதி ஆணவக்காரர்களின் அச்சுறுத்தல்களையும் கொலைவெறியையும் மீறி சுதந்திரமான, பாதுகாப்பான இடத்திற்கு ஓடிப்போகிறார்கள் என்று எழுத்தாளர் சொல்ல வருவதாக வைத்துக்கொள்வோம். நேரடியாக அதைச் சொல்லாமல் புதிர் நடையில் முடித்திருக்கிறார் என்றால், சரியாக ஊகிப்பதற்கான முடிச்சுகளைக் கதையில் வைத்திருக்கிறார் என்றால்  அது வாசகர் மனதில் ரசனை வித்தைகளைச் செய்யும், கருத்து விதைகளை ஊன்றும். மாறாக, அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து காதலர்கள் பிரிந்துவிடுகிறார்கள் என்று வாசகர் புரிந்துகொள்வாரானால்? வேறொரு வாசகர், கொலைவெறியிலிருந்து தப்பிக்க முடியாமல் காதலர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று புரிந்துகொள்வாரானால்?

அவரவர் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்கிற சுதந்திரத்தை வழங்குவதாகக்  கவர்ச்சிகரமான இலக்கிய வார்த்தைகளில் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் உண்மையில் அங்கே படைப்பின் நோக்கம் அடிபட்டுப் போகிறது, படைப்பாளி தோற்றுப் போகிறார். தன்னை ஒரு பீடத்தில் வைத்துக்கொண்டு, வாசிக்கிறவர்களைக் கீழ்த்தட்டுகளில் நிறுத்துகிற மனநிலை இது. வாசகர் படைப்பின் பங்காளியாகவும் மாறுகிறார் என்று சொல்லிவிட்டு, அவரைப் பங்கேற்கவே விடாமல் ஒதுக்குவது எழுத்துச் சமுதாயத்தின் சாதியமாகிவிடும். ஆக, இது எழுத்தாளரின் படைப்பாற்றல் தொடர்பானதாக மட்டுமல்லாமல் அவரது சமூகப் பொறுப்பு சார்ந்ததாகவும இருக்கிறது.

இந்தப் பத்திகளில் இருக்கிற “கதை” என்ற சொல்லை அகற்றிவிட்டு, “கட்டுரை”  என்றும் போட்டுக்கொள்ளலாம்.

சுவையாக எழுதுவதன் கருத்துகள் சார்ந்த எண்ணங்களை இது வரையில் பகிர்ந்துகொண்டோம. சொல்லாடல்கள், வாக்கிய அமைப்புகள் தொடர்பாக இனி உரையாடுவோம்.

அ. குமரேசன்