இலக்கியம்தொடர்கள்

செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது? (பகுதி-4) – அ. குமரேசன்

549 (3)

எழுத்துப் பயணத்தைத் தொடங்குகிற தமிழ் முனைவோர் பலருக்கும் இந்தக் குழப்பம் ஏற்படக்கூடும். கலப்பற்ற தூய தமிழில் எழுதுவதா, இல்லை பிறமொழிச் சொற்களும் கலந்த மணிப்பிரவாள நடையைக் கையாளுவதா? அச்சுப் பதிப்பாகவும் இணையவழியிலும் வருகிற ஏடுகளில் வருகிற பெரும்பாலான எழுத்தாக்கங்கள் கலப்பு நடையில் இருப்பதைக் காணலாம். சில தலைவர்கள், அறிஞர்கள், இலக்கியவாதிகள், ஆய்வாளர்களின் எழுத்தாக்கங்கள் செந்தமிழில் இருப்பதையும் காணலாம். முற்றிலும் பேச்சு நடையிலேயே வழங்கப்படும் எழுத்துகளையும் காணலாம். இந்த மூன்று எழுத்து வகைகளுமே வாசிக்கும் சுகத்தைத் தருகின்றன. நாம் எதைத் தேர்ந்தெடுப்பது?

நமது வாழ்க்கையிலேயே நடைமுறையில் பிறமொழிச் சொற்கள், குறிப்பாக ஆங்கிலச் சொற்கள் வெகுவாகக் கலந்துவிட்டன. தமிழ்ச் சொற்கள்தான் என்று நினைக்கிற அளவுக்கு அவை பல தலைமுறைகளாக நம் நாவிலும் கையிலும் புழங்குகின்றன.  குழந்தைகளுக்குச் சூட்டப்படும் பெயர்கள் உட்பட , பல்வேறு அடையாளங்களிலும் செயல்பாடுகளிலும் பிற மொழிச் சொற்கள் பிணைந்து பரவலாகிவிட்டன.

இதெல்லாம் இங்கிலீஷில்!

முப்பது ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தோழர்கள் சென்னையில் ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். கடல் சார்ந்து வாழ்கிற மக்கள் குடியிருக்கும் ஒரு குப்பத்தில் அவர்களோடு, குறிப்பாகப் பெண்களோடு உரையாடுகிற ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகிற ஆங்கிலச் சொற்களைப் பட்டியலிட்டார்கள். அந்த நிகழ்ச்சியிலேயே கூட , “மீட்டிங் எப்ப ஸ்டார்ட்டாகும், டயத்துக்குள்ள முடிஞ்சிடும்ல,  சேரை எடுத்துப் போடு, டேபிளை இந்தப் பக்கமா வை, புழுக்கமா இருக்கறதால  ஃபேன் கொண்டாந்து கனெக்சன் கொடுக்கச் சொல்லட்டுமா, தாகமா இருக்கும் கூல் டிரிங்க்ஸ் சாப்பிடுறீங்களா, டேய் ஃபாஸ்ட்டா போயிட்டு ஃபாஸ்ட்டா திரும்பி வந்துடுங்க, இல்லைன்னா எல்லா வேலையும் லேட்டாயிடும், மத்தியானம் லஞ்ச்  அரேஞ்ச் பண்ணட்டுமா, மைக்குல வாய்ஸ் கிளியராவே இல்லை, ஸ்பீக்கர்ல ஒரே டிஸ்டர்பா இருக்கு, பசங்களா இவங்க சொல்றதையெல்லாம் நோட்புக்குல எழுதிக்கிட்டீங்கல்ல….” என்றெல்லாம் பேசப்பட்டதைத் தொகுத்துச் சொன்னார்கள்.

அந்த வாக்கியங்களில் இருக்கும் மீட்டிங், ஸ்டார்ட், டயம், சேர், டேபிள், ஃபேன், கனெக்சன்,  கூல் டிரிங்க்ஸ், ஃபாஸ்ட், லேட், லஞ்ச், அரேஞ்ச், மைக், வாய்ஸ், கிளியர், ஸ்பீக்கர், டிஸ்டர்ப், நோட்புக் ஆகிய ஆங்கிலச் சொற்களை எடுத்துக் காட்டினார்கள். இதைக் கேட்ட அந்தப் பெண்கள், “அட, இந்த வார்த்தையெல்லாம் இங்கிலீஸ்லயும் இருக்குதாம்ல,” என்று வியப்பைப் பரிமாறிக்கொண்டார்கள்! இந்த அனுபவத்தைத் தோழர்கள் பகிர்ந்துகொண்டபோது, எந்த அளவுக்கு ஆங்கிலம் இங்கே கலந்துவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது புகுந்து கலந்துவிட்ட இந்தச் சொற்கள் தமிழாகத்தான் கருதப்படுகின்றன என்றால், அதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாக நுழைந்து படர்ந்துவிட்ட சனம், பிரியம், விஷயம், வித்தியாசம், அஸ்திவாரம், கிரகப்பிரவேசம், போஜனம், சந்தோஷம், மத்தியம், நமஸ்காரம், அமலாக்கம், இலாகா, தாலுகா, கம்மி, நகல், மசோதா உள்ளிட்ட ஏராளமான சொற்கள் எவ்வாறு கருதப்படும்? ஆங்கிலச் சொற்கள் பரவியதன் பின்னணியில் உள்ள அரசியலும் ஆதிக்கமும் போலவே, இதர பிற மொழிச் சொற்கள் சேர்ந்துகொண்டதன் பின்னணியில் உள்ள அரசியலும் ஆதிக்கமும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், பிரித்துப் பார்க்க  முடியாத அளவுக்கு இயல்பு வாழ்க்கையோடு பிற மொழிச் சொற்கள் இணைந்திருப்பது உண்மை.. அவற்றை முற்றிலுமாக உதறிவிட்டு எழுதுவது எளிதல்ல. வேறு மொழிகளின் மீது வெறுப்புக்கொள்ளாமல், தாய்மொழியின் மீதான பற்றும்,  அக்கறையும், ஈடுபாடும் சார்ந்து கலப்பின்றி எழுதுவது ஓர் இனிமையான அனுபவம்.  ஆனாலும்  அது கட்டாயமல்ல.

உள்ளடக்கமும் வாசகரும்

தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதிலேயே கூட, இலக்கணத் தமிழில் எழுதுவதா, கொச்சை நடை எனப்படும் பேச்சுத் தமிழில் எழுதுவதா,  இரண்டையுமே கலந்து எழுதுவதா என்ற வினாவும் தொடர்கிறது.  இந்த வினாவுக்கான விடை – எழுதப்படும் கட்டுரையின் நோக்கத்தையும், அதன்  உள்ளடக்கத்தையும், சென்றடையும் வாசகர்களையும் பொறுத்து இதை முடிவு செய்ய வேண்டும். இங்கே வினா–விடை என்று சொல்கிறபோது அதில் கலப்பைத் தவிர்த்த தமிழும் இருக்கிறது, ஓசை நயமும் இருக்கிறது. இதையே கேள்வி–பதில் என்று எழுதலாமா? கேட்பது என்ற தமிழ்ச் சொல்தான் கேள்வியின் மூலம். ஆனால், பத்லா  என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது பதில். பத்லா  என்றால் ஒரு பொருளுக்கு ஈடாக அல்லது மாற்றாகத் தரப்படுவது என்றே பொருள். ஆயினும் தமிழில் அது வினாவுக்கான விடை என்ற பொருளில் பண்பாட்டோடு ஊறிவிட்டது. வினாவுக்கு விடை என்று சொல்வது போல, கேள்விக்கு பதில் என்று சொல்வது பொருந்திவிட்டது.

கல்வி, ஆராய்ச்சி, தொழில்முறை சார்ந்த அறிக்கைகளை இலக்கணத் தமிழில்  எழுதுவது பொருத்தமாக இருக்கும். அவையறிந்து பேசுவது போல, வாசகத் தளமறிந்து எழுதலாம். மொழிப் புலமை உள்ளவர்கள், அறிஞர்கள், வல்லுநர்கள் வாசகர்களென்றால் இலக்கணத் தமிழில் எழுதுவதை அவர்கள் வரவேற்பார்கள். எதையேனும் ஆவணப்படுத்தி எழுதுகிறோம் என்றால், இலக்கணத் தமிழை நாடுவது அந்த ஆவணம் நீண்ட காலம் நிலைப்பதற்கும், வட்டார வழக்குக் குழப்பமின்றிப் புரிந்துகொள்ளப்படுவதற்கும் உதவியாக இருக்கும். எளிமையாகச் சொல்வதென்றால் – ஒரே செயல் சென்னைத் தமிழிலும், மதுரைத் தமிழிலும், நெல்லைத் தமிழிலும், கோவைத் தமிழிலும் வெவ்வேறு சொற்களில் குறிப்பிடப்படுவதை அறிவோம். சென்னைத் தமிழில் எழுதப்படுகிற ஒரு கட்டுரை, நெல்லையில் புரிந்துகொள்ளப்படாமல் போகக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

ஆய்வு சார்ந்த கட்டுரைகளை இலக்கணத் தமிழில் எழுதுகிறபோது எல்லாப் வட்டாரங்களிலும் ஒரே மாதிரியாகப் புரிந்துகொள்ளப்படும். பத்திரிகைத் தமிழ் என்ற பொதுவான எழுத்துநடை அப்படித்தான் உருவானது. தூய தமிழைப் பிடித்துக்கொள்கிறபோது அந்த எழுத்தாக்கத்திற்கு ஒரு வகை ஆளுமையும் கிடைத்துவிடுகிறது.

கட்டுரையோ கதையோ வேறு எழுத்தாக்கமோ கூடியவரையில் கலப்பற்ற எளிய தமிழில் எழுதுவது அனுபவிக்க வேண்டிய ஒரு பரவசம். அந்தப் பரவசம் வாசகரையும் அணைத்துக்கொள்ளும். தவிர்க்கவே முடியாத இடத்தில், அதை எழுதினால்தான் பொருள் புரியும் என்று கருதுகிற இடத்தில், வாக்கியத்தில் அழகு சேர்க்கவும் பயன்படும் என்று நம்புகிற இடத்தில் பேச்சு நடையையும், பிறமொழிச் சொற்களையும் கையாளலாம்.

வெற்றிகரமான பல எழுத்தாளர்கள் இந்த அணுகுமுறையைத் தொடர்ச்சியான பழக்கமாக வைத்துக்கொண்டதால், இதையே தங்களின் இயல்பான வழக்கமாக ஆக்கியிருக்கிறார்கள். நாம் படிக்கிற புத்தகங்களிலும் கட்டுரைகளிலும் இதைக் கண்டுபிடித்து மகிழலாம். ஒரு கொள்கை உறுதியோடு இலக்கணத் தமிழில் எழுதுவது வேறு. அது போற்றத்தக்கது.

பிணைப்பு அனுபவம்

அதே வேளையில், பொதுவான வாசகர்களுக்காக எழுதுகிறபோது முழுக்க முழுக்க இலக்கணம் சார்ந்த தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் அது படிப்பதற்குக் கடினமாகிவிடக்கூடும். எழுதியவரின் தமிழ்ப் பற்றைப் பாராட்டுவதற்கு மாறாக அவருக்குப் பழமைவாதி என்ற வில்லையை மாட்டிவிடக்கூடும். அத்துடன், சித்தரிக்கப்படுகிற ஒரு நிகழ்வை வாசிக்கிறபோது கிடைக்க வேண்டிய உணர்வுப்பூர்வமான பிணைப்பு தடைப்பட்டுவிடக்கூடும்.

எளிய நடையை விரும்புகிற வாசகர்களுக்காகவும், வெகுமக்களிடம் சென்றடையும் நோக்கத்துடனும் உடனடி அரசியல்/சமூக  உள்ளடக்கங்களோடும் எழுதுகிறபோது பேச்சுத் தமிழ் கைகொடுக்கும். பேச்சு வழக்கில் உள்ள பிறமொழிச் சொற்களும் துணையாக வரும். விவரிக்கப்படுகிற நிகழ்வோடு வாசகருக்கு ஒரு பிணைப்பு அனுபவம் கிட்டும். மாற்றங்களை  ஏற்படுத்துவதற்கென, போராட்ட உணர்வைத் தூண்டுவதற்கென எழுதப்படும் ஒரு கட்டுரையில், வாசகர்களுக்கு அந்தப் பிணைப்பு அனுபவம் கிடைப்பது மிக முக்கியம். தங்களுடைய குரல், தங்களுக்கான குரல் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுமானால் அது எழுத்தின் வெற்றி.

இரு தரப்பு வாசகர்களையும் சென்றடைய, செந்தமிழ்ச் சொற்கள்,  பேச்சு நடைச் சொற்கள், கலப்புச் சொற்கள் மூன்றையும் சரியான அளவில் மாலையாகக் கோர்த்துக் கொடுப்பது பலன் தரும். வெகுமக்கள் தளத்திற்கான கருத்து வெளிப்பாடுகள், விவாதங்கள், விமர்சனங்கள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களுக்கு இந்த மாலை ஏற்றதாக இருக்கும். மொழியின் தனித்துவத்தைக் கெடுத்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழாத வகையில் எழுத வேண்டும். அப்படி எழுதுவது எப்படி? எழுத உட்காருங்கள், அந்த வித்தை அகப்பட்டுவிடும்.

இது தொடர்பான ஒரு கேள்விக்குப் பதிலளித்த பாரதி, “எழுதுகோலுக்கு முன்பாக எண்ணங்கள் வருவது அவசியம்; எண்ணங்கள் வரவேண்டும், எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டு வர வேண்டும்,” என்று கூறினார். “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்,” என்று அவர் சொன்னதும் இதே கருத்தில்தான். ஆங்கில நாவல் எழுத்தாளரும் நாடகாசிரியருமான சோமர்செட் மாம்  “எது சிறந்த எழுத்து நடை என்றால், நீங்கள் கவனிக்க வேண்டியிராத நடைதான்,” என்று கூறினார். கருத்தில் தெளிவும், இயல்பான ஓட்டமும் சிறந்த எழுத்து நடை என்ற பொருளில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்தத் தெளிவும், உண்மையொளியும், இயல்பான ஓட்டமும் எப்படி வாய்க்கும்? “எழுத்தென்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பு; வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் எழுத்தாளராக முடியாது,” என்றார் ஜெயகாந்தன். அரசியல், பொருளாதாரம், வர்க்கம், சாதியம், மதவாதம் உள்ளிட்ட சமூக நிலைகளோ, மாற்றத்திற்கான அறிவியலோ எதை எழுதினாலும் அதைப் புரிந்துகொண்டு எழுதுவதே எழுதுகோலுக்கு (இன்றைய வளர்ச்சியில்) கணினியின் விசைப்பலகைக்கு அழகு.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் ஒரு வழிகாட்டல் உருவாக்கப்பட்டது. “பழகு தமிழில் எழுதுவோம்” எனும் அந்தப் பாதை எழில் மிக்கது, எவரையும் நெருங்க வைப்பது.

பேசுவோம், எழுதுவோம்.

– அ.குமரேசன்