சன்னலுக்கு வெளியே விரைந்து கடக்கிற மரங்களையும் வயல்களையும் ஊர்களையும் மனிதர்களையும் மற்ற விலங்குகளையும் பார்த்துக்கொண்டே பயணிப்பது எனக்குப் பிடித்தமானதொரு பழக்கம். காட்சிகள் அலுப்பூட்டினால் பையில் வைத்திருக்கும் புத்தகத்தை எடுத்து விரித்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். பக்கத்திலும் எதிரிலும் உட்கார்ந்திருக்கிற பயணிகள் பேசிக்கொள்வதைக் கேட்கவும் செய்வேன். மற்றவர்கள் பேசுவதைக் கேட்கலாமா என்ற நாசூக்கு விதியெல்லாம் பத்திரிகையாளர் தொழிலுக்கு ஆகாது. என்ன, நாம் கேட்டுக்கொண்டிருப்பதை அவர்கள் கவனித்துவிடாமல் கேட்க வேண்டும், கவனித்துவிட்டால் பேச்சை நிறுத்திவிடுவார்கள். அவர்கள் கவனிக்காதபடி நாம் கவனிப்பதற்கும் கூட மடியில் உள்ள புத்தகம் உதவும். அவர்களுடைய பேச்சில் சுவையான தகவல்கள், சூடான செய்திகள், உணர்ச்சிகரமான நிகழ்வுகள் கிடைக்கும். உடனடியாகவோ, ஊறப்போட்டோ எழுதுவதற்கு உதவும்.
ஒருமுறை, அன்றைய வேலை முடிந்து இரவில் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் புறநநர் ரயிலில், நாங்கள் குடியிருந்த செவ்வாப்பேட்டைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர் இருக்கைப் பயணிகள் இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பேச்சில் வெளிப்பட்ட கலக்கம் என்னைக் கவனிக்க வைத்தது.
…. “டிபார்ட்மென்ட்டையே மூடுறாங்கன்னா நம்மளையும் வீட்டுக்கு அனுப்பிடுவாங்கதானே?”
“இல்லப்பா, சீனியர் ஸ்டாஃப் மேல கை வைக்க மாட்டாங்க, புதுசா வந்தவங்களை மட்டும் அனுப்பிடுவாங்கன்னுதான் சொல்றாங்க…”
“இந்த வேலையை நம்பித்தான் மகள் கல்யாண ஏற்பாடெல்லாம் செஞ்சிக்கிட்டு இருக்கேன்…”
யாரெனக் காட்டிக்கொள்ளாமல், சும்மா தெரிந்துகொள்ளக் கேட்பது போல இயல்பாகப் பேச்சுக் கொடுத்தேன் (பத்திரிகையாளர் என்றால், பின்னர் பிரச்சினை வரலாம் என்று அவர்கள் தகவல்களைச் சொல்லத் தயங்கக்கூடும்). இருவரும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஊழியர்கள் என்று தெரிந்துகொள்ள முடிந்தது. அரசுத்துறை, தனியார்துறை இரண்டையுமே சார்ந்த தொழிலாளர் குடும்பங்களின் பெண்களுக்குத் தையல் உள்ளிட்ட கைத்தொழில் பயிற்சிகளை வழங்குவது, குழந்தைகளுக்குக் காப்பகங்களை நடத்துவது என்று பயனுள்ள பணிகளைச் செய்து வந்த வாரியம் அது. திடீரென, யாரோ ஒரு பொருளாதார வல்லுநரின் ஆலோசனைப்படி அரசின் செலவினங்களைக் குறைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, அதில் அந்தத் துறையும் சேர்க்கப்பட்டு ஒரேயடியாக மூடிவிட முடிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் கேட்டறிவதற்குள் அவர்களுடைய நிலையம் வந்துவிட இறங்கிக்கொண்டார்கள்.
மறுநாள் ‘தீக்கதிர்’ அலுவலகத்திற்கு வருவதற்கு முன் நேராக வாரிய அலுவலகத்திற்குச் சென்று ஊழியர் சங்கப் பொறுப்பாளர்களுடனும், சில அதிகாரிகளுடனும் பேசி தகவலை உறுதிப்படுத்திக்கொண்டேன். மூடுவிழா வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருந்த நிலையில், கேட்டறிந்த விவரங்களைக் கொண்டு வேகமாக ஒரு புலனாய்வுக் கட்டுரையை எழுதினேன். அடுத்தநாள் பதிப்பில் முதல் பக்கக் கட்டுரையாகவே வெளியிடப்பட்டது. மற்ற பத்திரிகைகளிலிருந்து தொடர்பு கொண்டு தகவல்கள் கேட்டார்கள். அவர்களும் நேரடியாகச் சென்று விசாரித்தார்கள். அந்த ஏடுகளிலும் பயனுள்ளதொரு துறை மூடப்படுவது பற்றியும், தொழிலாளர் குடும்பத்துப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைத்துவந்த பலன்கள் பறிக்கப்படுவது பற்றியும் செய்திகள் வந்தன. தொழிற்சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின.
அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடுங்கோபம் அடைந்தார், இது எப்படி பத்திரிகைகளுக்குக் கசிந்தது என்று அதிகாரிகளைக் குடைந்தார் என்று கேள்விப்பட்டோம். ரகசியமாக வைத்திருந்த நடவடிக்கை அம்பலமாகிவிட, அந்த முடிவு கைவிடப்பட்டது. துறை காப்பாற்றப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு துறைத் தொழிலாளர்கள் பத்துப் பதினைந்து பேர் குழுவாக அலுவலகத்திற்கு வந்து, இனிப்புகள் வழங்கி, நன்றி தெரிவித்தார்கள். அவர்களில் ஒருவர், எங்கேயோ கண்ட முகமாக இருக்கிறதே என நினைப்பது போல என்னைக் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார்!
துறையை மூடிவிடவில்லை என்றாலும், ஆண்டுகளின் ஓட்டத்தில் மூத்த ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுச் செல்லச் செல்ல, மாநிலம் முழுதுமிருந்த மற்ற ஊழியர்கள் படிப்படியாகச் சில மையங்களுக்கு மாற்றப்பட்டார்கள். முந்தைய பல சேவைகள் நிறுத்தப்பட்டன. தொழிலாளர்களுக்கான மருத்துவ உதவி, குழந்தைகளின் கல்விக்குப் பண உதவி உள்ளிட்ட பணிகள் தொடர்கின்றன.
ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் இப்படித் தங்களைச் சுற்றி நடப்பதை உற்றுக் கவனிப்பது ஒரு அடிப்படைத் தகுதி. அப்படிக் கவனித்துத் திரட்டிய உண்மைகளைக் கொண்டு பல பத்திரிகைகளில் வெளியான செய்திகளும் புலனாய்வுக் கட்டுரைகளும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. நாகரிகம் பார்த்துக் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டால் அப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் எழுத்தைத் தர இயலாது. இந்த அடிப்படையான கவனிப்புத் தகுதி, ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல, கதை. கட்டுரை எழுத முற்படுவோருக்கும் பொருந்தும்.
மக்கள் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி தனது கிராமத்தில் கோயில் மண்டபத்திலும் கண்மாய்க் கரையிலும் கடைகளுக்கு முனபாகவும் கூடுகிற மக்கள் பேசிக்கொள்வதைக் கவனிப்பதில் கதைகளுக்கான உயிர்க்கருக்கள் நிறையக் கிடைத்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார். குழாயடியில் பேசிக்கொண்டிருக்கும் பெண்கள், அவர் அந்த வழியாக வருவதைப் பார்த்ததும், “பேச்சை நிறுத்துங்கடி. இந்த ஆளு கதையா எழுதிடப் போறாரு,” என்று கூறிச் சிரிப்பார்களாம்.
கவனித்தல் என்பதில் வாசித்தலும் அடங்கும். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் என்று வாசிக்க வாசிக்க இரண்டு விளைவுகள் ஏற்படும். ஒன்று, படித்ததில் பிடித்துக்கொண்ட செய்திகள் மனதில் ஊன்றி ஊறத் தொடங்கும். இரண்டு, பலவகை எழுத்தாக்கங்களின் மொழியழகும் சித்தரிப்பு நடையும் உள்ளிறங்கி நம்மை இட்டுச் செல்லும்.
“மற்ற புத்தகங்களைப் படிக்கிறபோது அந்தப் படைப்பாளிகளுடைய எழுத்து நடை நமக்கும் வந்துவிடுகிறதே? அவர்களை நகலெடுப்பது போல எழுதுவது சரியா?” –எழுத விரும்புகிற பலரும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கான பதில், “இருக்கட்டும். தொடக்கத்தில் நம்மை ஈர்க்கிற எழுத்தாளர்களைப் படியெடுப்பது போல எழுதலாம், தவறில்லை.”
19ம் நூற்றாண்டின் உலகப் புகழ்பெற்ற உரைநடை எழுத்தாளரான ஆர்.எல். ஸ்டீவன்சன் (பிரிட்டன்) இது பற்றியே எழுதியிருக்கிறார். அவருடைய ‘எ காலேஜ் மேகசின்’ (ஒரு கல்லூரி ஏடு) என்ற கட்டுரையில் அவர் எழுதியிருப்பது வருமாறு:
“விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எழுதக் கற்றுக்கொள்வதற்கான வழி அதுதான். அதில் நான் பயனடைந்தேனோ இல்லையோ அதுவே வழி. கீட்ஸ் அந்த வழியில்தான் கற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பான இலக்கிய மனநிலை கொண்டவர் வேறு யாருமில்லை என்ற இடத்திற்கு வந்தார். நாம் தேடிப் பார்த்தோமானால், எல்லோருமே அப்படித்தான் கற்றுக்கொண்டார்கள். ஷேக்ஸ்பியர் அப்படித்தான் கற்றார். நாடகாசிரியர்களின் மன்னர் என்று அவருக்கு முத்திரை பதித்த எழுத்து நடையைப் பெற்றார். யாரேனும் “இது இன்னாருடைய நடை போல இருக்கிறது” என்று சொல்லக்கூடும். வேறு யாரேனும் “இது இன்னாருடைய நடை போல இருக்கிறது என்று சொல்லக்கூடும். இறுதியாக அவர்கள் இது உங்கள் நடையிலேயே இருக்கிறது என்று சொல்வார்கள்.”
சுற்றுமுற்றும் உற்றுக் கவனியுங்கள். உலகம் பேசுவதைக் கேளுங்கள். தயக்கத்தை உடைத்து மற்றவர்களோடு பேசுங்கள். பலவகைப் படைப்புகளையும் வாசியுங்கள். எதைப் பற்றியும் எழுதத் தொடங்குங்கள்.
சரி, பார்த்ததையும் கேட்டதையும் வைத்துச் செந்தமிழில் எழுதுவதா, பேச்சு நடையில் எழுதுவதா?
தொடர்வோம்.