மற்றவர்களின் எழுத்தாக்கங்களைப் படிக்கிறபோது இயல்பாகவே நாமும் எழுத வேண்டும் என்ற விருப்பம் ஏற்படும். ஆனால் எழுத நினைக்கிறபோது எதைப் பற்றி எழுதுவது என்ற கேள்விக்குறி பெரிதாக உருவெடுத்து முன்னால் வந்து நிற்கும்.
எழுத்துலகம் மிகப் பரந்தது. பூமியின் கடல்களையும் கண்டங்களையும் தீவுகளையும் மலைகளையும் காடுகளையும் பாலைகளையும் போல எழுத்துலகத்தில் பலவகைப் பரப்புகள் இருக்கின்றன. கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என அடிப்படையான மூன்று பரப்புகளாகப் பிரிக்கலாம்.
ஒரே விரிவான கடல். அதை அட்லாண்டிக், பசிபிக், இந்திய, ஆர்டிக், அண்டார்டிக் என ஐந்து பெருங்கடல்களாக அடையாளப்படுத்தியிருக்கிறோம். இந்தப் பெருங்கடல்களுக்குள்ளேயே வங்கக் கடல், அரபிக் கடல், கருங்கடல் உள்பட, அந்தந்த நிலப்பரப்பையொட்டிய பகுதிகளுக்குப் பெயர் சூட்டியிருக்கிறோம். அதே போலத்தான், கதை என்று எடுத்துக்கொண்டால் அதில் நாவல், சிறுகதை, குறுங்கதை, காப்பியம், காவியம், நாடகம் என்ற வகைகள் இருக்கின்றன. கவிதையில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, குறுங்கவிதை, வெண்பா, குறட்பா, துளிப்பா என்றெல்லாம் இருக்கின்றன. கட்டுரையில் செய்திக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, அறிவியல் கட்டுரை, ஆய்வுக் கட்டுரை, வரலாற்றுக் கட்டுரை, பயணக் கட்டுரை எனப் பல வகைகள் இருக்கின்றன.
விளக்கம் புதிது
அண்மையில் இணையவழியில் ஒரு புத்தகத் திறனாய்வு நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன் எழுதிய ‘வைகறை வாசகன் பதிவுகள்’ என்ற புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது. திருக்குறள், திரைப்படம், சென்று வந்த இடங்கள், சந்தித்த மனிதர்கள் எனப் பல்வேறு உள்ளடக்கங்களில் 100 கட்டுரைகள் அதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. திறனாய்வு செய்த எழுத்தாளரும் பதிப்பாளருமான ஒளிவண்ணன், அதிலிருந்து சில கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, தனது அனுபவங்களையும் கருத்துகளையும் கலந்து கொடுத்தார். அது, எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்துக்கொண்டே எதைப்பற்றியும் எழுதாமல் இருப்பவர்களுக்கு சன்னலைத் திறந்து காட்டுவதாக இருந்தது.
அன்றாட வாழ்க்கையில் நாமும் பார்க்கிற மனிதர்கள்தான். நாமும் போய் வருகிற இடங்கள்தான். நாமும் சந்திக்கிற அனுபவங்கள்தான். நாமும் படிக்கிற நூல்கள்தான். நாமும் சுவைக்கிற உணவுகள்தான். எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு, உடன் இருப்பவர்களுடன் பேசுவது போல எழுதத் தொடங்கியிருக்கிறார்.
எடுத்துக்காட்டாக-
“தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”
-என்ற (திருக்குறள், வாழ்க்கைத் துணைநலம்) குறட்பாவுக்கு இது வரையில், “தன்னுடைய கற்பைப் பாதுகாத்துக்கொண்டு, தன் கணவனைப் பராமரித்து, குடும்பப் பெருமையை உயர்திப் பிடித்துச் சோர்வடையாமல் இருப்பவளே பெண்,” என்றுதான் பதவுரை – பொழிப்புரை தரப்பட்டு வந்திருக்கிறது. “கற்பு” எனும் கற்பிதத்தில் உடன்பாடின்றி நூலாசிரியர் இதைக் கொஞ்சம் மாற்றி யோசிக்கிறார். “தன் சுயமரியாதையைக் காத்து, உற்றார் உறவினரைப் பேணி, பெருமைக்குரிய சொற்களோடு சுறுசுறுப்பாக உழைக்கிறாள் பெண்,” என்ற புதிய விளக்கத்துடன் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார். காலத்தின் வளர்ச்சிக்குப் பொருந்தாத சில குறட்பாக்களைத் தவிர்த்து மற்றவற்றைப் பற்றி இப்படி மாற்றி யோசிக்கலாமே என்றார்
முன்னொரு முறை, இலக்கிய நண்பர்கள் கூடி உரையாடிக்கொண்டிருந்தோம். “இந்தக் குறளை நாம் ஏன் இப்படி மாற்றிப் பொருள்கொள்ளக் கூடாது? கற்பு உள்ளிட்ட கற்பிதங்களின் தாக்குதல்களாலும் கட்டுப்பாடுகளாலும் வீழ்ந்துவிடாமல் தன்னையும் காத்துக்கொண்டு, குடும்பம் சுற்றம் சமூகம் எனத் தன்னைச் சார்ந்துள்ளவர்களுக்குத் துணையாக நின்று, பக்குவமாகவும் நிதானமாகவும் பேசி, உறுதியாக நிற்பவள் பெண் என்ற புதிய விளக்கம் அளிக்கலாமே. வள்ளுவர் இருந்தால் இன்றைய வளர்ச்சிக்கு ஏற்ப இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வார்,” என்றேன். உடன்பட்டும், மறுத்துமாக உரையாடல் சுவையாகவும் நலமாகவும் அமைந்தது.
சொந்த அனுபவச் சுவை
ஒரு புத்தக அறிமுகத்தையும், நண்பர்களுடனான உரையாடலையும் வைத்து இந்தக் கட்டுரை உருவாகியுள்ளது. நம் வாழ்க்கைப் பயணத்தில் கடக்கிற எவ்வகை அனுபவத்தையும், அதைச் சார்ந்த சிந்தனையையும் எழுத்தாக மாற்றலாம். அதைக் கதையாக வார்ப்பதா, கவிதையாக வடிப்பதா, கட்டுரையாகச் செதுக்குவதா என அவரவர் ஈடுபாட்டையும் பயிற்சியையும் வாய்ப்பையும் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம்.
இந்தத் தொடரின் அறிமுகக் கட்டுரையில், சொந்த அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து, அதற்கான காரணத்தை அடுத்த கட்டுரையில் சொல்வதாகத் தெரிவித்திருந்தேன். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டுமே சொந்த அனுபவங்கள்தான். எழுதுகிறவர்கள் இப்படிச் சொந்த அனுபவங்களைப் பொருத்தமாக இணைக்கிறபோது படிக்கிறவர்களுக்குத் தங்களுடைய சொந்த அனுபவங்களும் நினைவுக்கு வந்து, ஒரு நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும்.
பணிச் சூழலும் அதற்கான தேவைகளும் சார்ந்து நான் பெருமளவுக்குக் கட்டுரைகள்தான் எழுதியிருக்கிறேன். சிறுகதைகளும் கவிதைகளும் ஏதோ கொஞ்சம் தொட்டுப் பார்த்திருக்கிறேன். ஆகவே, கட்டுரை எழுதுவது தொடர்பான கருத்துகளை அனுபவம் கலந்து பகிர்ந்துகொள்வது (எனக்கு) எளிதாக இருக்கும்.
பொருளும் நடையும்
கட்டுரை இலக்கியம் படைப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? கட்டுரையாக்கத்தில் சிறந்து விளங்கும் பல எழுத்தாளர்களின் வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று – கட்டுரைக்குத் தேர்ந்தெடுக்கும் கருப்பொருள். இன்னொன்று – இடையூறின்றி, சுவைத்து வாசிக்க வைக்கும் எழுத்து நடை.
முதலாவதாகிய கருப்பொருள் அவரவர் கொண்டுள்ள கோட்பாடு, கொள்கை, சமூகப் பார்வை, அரசியல் அக்கறை ஆகியவை சார்ந்தது. உதாரணமாக, சாதியமும் தீண்டாமையும் ஒரு சமுதாயக் குற்றம் என்ற பார்வை ஒருவருக்கு இருக்கலாம், அது பற்றிய ஆவேச உணர்வோடு அவர் எழுதலாம். சாதிப் பாகுபாட்டிலும் குல உயர்ச்சி-தாழ்ச்சியிலும் தவறு இல்லை என்ற பார்வை இன்னொருவருக்கு இருக்கலாம். அதைப்பற்றிய உறுத்தல் உணர்வு இல்லாமல் அவர் எழுதலாம்.
இரண்டாவதாகிய எழுத்து நடைதான், எந்தக் கண்ணோட்டத்தில் எழுதினாலும் அதைப் படிக்க வைக்கும். அது எப்படிக் கைவரும்? கவிதையும் கதையும் போலவே கட்டுரையும் நிறையப் படிக்கப் படிக்கத்தான் சொந்தப் படைப்பாக எழுதுகிற நேர்த்தி வசப்படும்.
கட்டுரை எழுதுவது என்பதைப் பொறுத்தவரையில், சில எளிய வழிகளை, அனுபவ அடிப்படையில், காட்டலாம் என்று கருதுகிறேன். இவ்வாறு வழிகாட்டுவது என்பது இதில் நான் ஒரு வல்லுநர் என்று நினைத்துக்கொண்டு எடுத்த முடிவல்ல. மாறாக, பல கட்டுரைகளைப் படிக்கிற அனுபவத்திலிருந்தேயாகும். அந்த அனுபவம் என்பது ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகளைப் படித்தும், பத்திரிகையில் வெளியிடக் கேட்டுக்கொண்டு வருகிற பல கட்டுரைகளிலிருந்து தேர்வு செய்கிற பணியிலிருந்தும் கிடைத்ததாகும். அருமையான உள்ளடக்கங்கள் இருந்தாலும், எளிமையான சில அடிப்படைகளைக் கூட அறியாமல், அறிந்துகொள்ள முயலாமல் எழுதப்படுவதைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது. அதையெல்லாம் சரிப்படுத்துவது என்பதிலேயே வெகுநேரம் விழுங்கப்படுகிறது.
எடுத்த எடுப்பில், எடுத்துக்காட்டாக ஒன்று: மேலே உள்ள பத்தியில் பார்த்தீர்களானால், “என்பது” என்ற சொல் நான்கு இடங்களில் வருகிறது. எதற்கெடுத்தாலும் இப்படி “என்பது” என்று சொல்ல வேண்டியதில்லை. “கட்டுரை எழுதுவது என்பதைப் பொறுத்தவரையில்….” என்று எழுதாமல், “கட்டுரை எழுதுவதைப் பொறுத்தவரையில்…” என்று எழுதுகிறபோது சொல் குறையும், சுவை கூடும். அந்தப் பத்தியில் உள்ள மற்ற என்பதுகளை எப்படிக் கழற்றிவிடலாம் என்று யோசித்து எழுதிப் பாருங்கள். தேவையான இடத்தில் மட்டும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி, மற்ற இடங்களில் அதைத் தவிர்ப்பதில் உள்ள அழகு புரிபடும். ஆற்றலுடன் கட்டுரை படைக்கிற தோழமைகள் நிறையப்பேர் தேவைப்படுகிறார்கள் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!
மறுபடி சந்திப்போம்.
– அ.குமரேசன்