இலக்கியம்தொடர்கள்

சுவையாக எழுதுவது ஒரு சுகம் (பகுதி-1) – அ.குமரேசன்

549

அ. குமரேசன்

ஆதியில் அம்மைகளும் அப்பன்களும் தாங்கள் பார்த்ததை, கேட்டதை, தெரிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். தகவல் தொடர்பு என இன்று சொல்கிறோமே அந்தச் செயல்பாட்டின் தொடக்கம் மனித நாகரிகப் பயிர் முளைவிடக் காரணமாக அமைந்தது. பொது அறிவு முதல் செயற்கை நுண்ணறிவு வரையில் இன்றைக்குப் பகிர்ந்துகொள்வதற்கான தகவல்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன. அன்றைக்கு அறிவியலோ அரசியலோ தொழில்களோ தொழில்நுட்பங்களோ எதுவும் பரிணமித்திருக்காத வாழ்க்கையில் அந்த மக்கள் எந்தத் தகவல்களைப் பரிமாறியிருப்பார்கள்?

நிச்சயம் உணவு எங்கே கிடைக்கிறது, ஆபத்துகளிலிருநது எப்படித் தப்புவது என்பன போன்ற தகவல்களைத்தான் பகிர்ந்திருப்பார்கள். பசியோடு வெகுதொலைவு நடந்த பிறகு ஓரிடத்தில் மரக்கறியோ மாமிசக்கறியோ இருப்பதைப் பார்த்தவர் அதை மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லியிருப்பார்? பேரொளியும் வெப்பமுமாக எரியும் காட்டு நெருப்புக்குள் நுழைந்தால் என்ன ஆகும் என்ற முன்னனுபவம் இல்லாத நிலையில், முன்னால் வந்த ஒருவர் அதனுள் நுழைந்ததும் அவருக்கு என்ன நடந்தது என்று தன் கண்ணால் கண்ட ஒருவர், தனக்குப் பின்னால் வந்தவரை எப்படித் தடுத்திருப்பார்?  மொழி உருவாகியிராத அந்தக் காலத்தில் எப்படி இந்தத் தகவல்களைத் தெரிவித்திருப்பார்கள்? ஆம், எல்லா மொழிகளுக்கும் மூத்த முதல் மொழியான சைகையில்தான். அத்துடன் ஆ, ஊ என்ற ஒலிகளும் இணைந்திருக்கும்.

மழை பெய்தால் குகைக்குள் ஒதுங்க வேண்டும், விலங்குகள் தாக்கினால் துணிந்து எதிர்க்க வேண்டும் என்ற அனுபவ அறிவுறுத்தல்களைப் பாறைகளில் கூரிய கற்களால் கீறிப் பதிவு செய்த உருவங்களால் சக மனிதர்களுக்குக் கடத்தினார்கள்.

மொழியின் பிறப்பு

ஒலிக்குறிகள் பையப்பையக் குறிப்பிட்ட பொருளுக்கு குறிப்பிட்ட ஒலி என்று சொற்களாகப் பரிணமித்தன. கீறல்கள் பையப்பையக் குறிப்பிட்ட ஒலிக்குக் குறிப்பிட்ட வடிவம் என்று எழுத்துகளாக உருவெடுத்தன. மொழி பிறந்தது. மொழியின் பிறப்பு மனிதர்களின் தகவல் தொடர்பை இலகுவாக்கியது. மனிதர்களை அடையாளப்படுத்தியது. இலக்கியம் செழித்தது. அறிவியல் வேகம் பிடித்தது.

முதுகுத்தண்டு நிமிர்ந்த நவீன மனிதர்கள் பரிணமித்து  3 லட்சம் ஆண்டுகள் வரை கடந்துவிட்டன என்றாலும், கட்டமைக்கப்பட்ட எழுத்து வடிவம் தோன்றி கிட்டத்தட்ட 5,200 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் அதற்குப் பிறகு மனித சமுதாயத்தின் வளர்ச்சி முந்தைய லட்சமாண்டுகளையும் விஞ்சிவிட்டது. மனிதர்கள் தேடித் திரட்டிய அறிவுச் செல்வத்தை எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைகளுக்கு வழங்கிச் செல்வது வழக்கமாகியது.

நாம் நினைப்பதை எழுதுவது பிறருக்கான ஒரு கருத்துப் பதிவு மட்டுமல்ல, நமக்கான ஒரு வெளிப்பாட்டுத் துடிப்புமாகும். இலக்கியப் புனைவாக, ஆராய்ச்சிப் பதிவாக, ஆவணத் தொகுப்பாக  எழுத்து பன்முகப் பரிமாணம் கொண்டிருக்கிறது. உள்ளூர் நிகழ்வுகள் பற்றிய அறிக்கை முதல் உலகத்தை மாற்றியமைக்கும் மார்க்சிய சித்தாந்தம் வரையில் எழுத்து வடிவில்தான் வந்திருக்கின்றன. எழுத்தைக் கையாள்வதில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் தனித்துவமான அடையாளம் பெறுகிறார்கள். சக மனிதர்களுக்காக எழுதுவோர் சமூக மாற்றத்திற்குப் பங்களிக்கிறார்கள். களப் போராளிகளுக்குத் தகவல்களைத் தருகிறார்கள், வரலாற்றைப் புரிய வைக்கிறார்கள், புதிய வரலாற்றைப் படைக்கத் தூண்டுகிறார்கள்.

மிரட்டும் சவால்

தனது சொந்த மன நிறைவுக்காக எழுதினாலும் சரி, சமுதாயத்தின் நிறைவான வாழ்க்கைக்காக எழுதினாலும் சரி, அழகாக, தெளிவாக, ஈர்க்கும் வகையில் எழுத வேண்டும் என்று அதற்காக மெனக்கிடுகிறவர்கள் இருக்கிறார்கள். எழுத்தில் ஈடுபடுத்திக்கொள்கிறவர்களுக்கு, குறிப்பாகப் புதிதாக எழுத முற்படுகிறவர்களுக்கு மிரட்டலாக இருப்பது பிழைகள் இல்லாமல் எழுதுவது எப்படி என்ற சவால்தான்.

“பள்ளிக்கூடத்திற்குப் போன காலத்திலேயே ஒழுங்காகப்  படித்திருக்க வேண்டும், இப்போது போய் இலக்கணம் படித்துக்கொண்டிருக்க முடியுமா,” என்று பலரும் சோர்வடைவதுண்டு. எழுதியதை யாரிடமாவது கொடுத்துப் பிழைகளைத் திருத்தி, வாக்கியங்களை சரியாக அமைத்துத் தருமாறு கேட்டுகொள்வதுமுண்டு.

இந்த இடத்தில் ஒரு சொந்த அனுபவத்தைச் செருகிக்கொள்கிறேன். பள்ளியில் தமிழ்ப் புத்தகத்தில் உள்ள பாடங்களை, வரிசைப்படி ஆசிரியர் வருவதற்கு முன்பே படித்துவிடும் ஆர்வம் எனக்கு இருந்தது. அந்தப் பாடங்களிலிருந்து ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லிப் பாராட்டைப் பெற்றுவிடுவேன். ஆனாலும் தமிழ் இலக்கணம் மட்டும் எனக்குக் கணிதத்தின் அல்ஜீப்ரா போலவே கண்ணாமூச்சி காட்டியது. கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு (ஆம், படிப்பை  முடித்துக்கொண்டவனேயன்றி, படித்து முடித்தவனல்ல) ஊர்சுற்றிய நாட்களில் கணபதி என்ற தமிழாசிரியரிடம் சென்று இலக்கணம் படிக்க விரும்புவதாகத் தெரிவித்தேன். “தேர்வுக்குச் செல்லும் நோக்கம் இல்லை ஐயா, அடிப்படை இலக்கணத்தைத் தெரிந்துகொள்வதற்காகவே வந்திருக்கிறேன்,” என்று கூறினேன். அதைச் சொன்னதும் என்னை அவர் அணைத்துக்கொண்டார். கூடுதல் அன்புடன் பாடங்களைச் சொல்லித் தந்தார். தவிர்க்கவியலாத சூழலில் சில மாதங்களுக்கு மேல் தமிழ்ப் பயிற்சியைத் தொடர முடியாமல் போனது.

அப்போது கற்றுக்கொண்ட அந்த அளவிலேயே கூட தமிழ் என் எழுத்துக்குத் துணை வந்தது. முழுமையாகப் பயின்றிருந்தால் சிறப்பாக எழுதலாமே என்ற எண்ணமும் ஏக்கமும் இப்போதும் உண்டு. சரி, இந்தச் சொந்தக் கதையை இங்கே எதற்காகச் சொல்ல வேண்டும்? இந்தக் கட்டுரைக்கும் அதற்கும் தொடர்பு இருக்கிறது, அதை அடுத்த கட்டுரையில் குறிப்பிடுகிறேன், சரியா?

எளிமையாக இலக்கணம் கற்றுத்தரும் நூல்கள் வந்திருக்கின்றன. இணையத்தில் தேடினாலும் இலக்கண ஆலோசனைகள் கிடைக்கின்றன. பிழை திருத்தக்கூடிய செயலிகள் இருக்கின்றன. இனிமேல் இலக்கணம் படிப்பதாவது என்ற சோர்வுக்கு இடமளிக்காமல், பிறரின் உதவியையும் நாடாமல் தங்களின் முயற்சியிலேயே நன்றாக எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு வார்த்தை:  அந்த விருப்பம் ஒரு கருப்பு, நீங்கள் வெற்றி பெறும் வரையில் அது உங்களை விடாது. கனமான இலக்கணப் பாடமாக இல்லாமல், சுவைபடவும் எழுதுவது தொடர்பான அனுபவப் பகிர்வுகளைப் பயிற்சியாக்குகிற, சொல்லப்போனால் அதிலிருந்து நானும் பயில்கிற எளிய முயற்சியே இது.

– தொடரும்

1 Comment

  • மிக அருமையான, தேவையான கட்டுரை ஐயா
    பகிர்ந்தமைக்கு நன்றி..

    தொடரட்டும் 🙏🏻

Comments are closed.