பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதகுக்குப் பின்னர் நடத்தப்படும் புல்டோசர் இடிப்புகளும், காஷ்மீரில் நிகழ்த்தப்படும் அழிவுகளின் நீண்ட வரலாறும் (1990 முதல் இன்று வரையிலும் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் தொகுப்புடன்)
பஹல்காம் தாக்குதலும் அதனைத் தொடர்ந்த அடக்குமுறையும்
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் பஹல்காமுக்கு மேலிருக்கும் பைசரன் பள்ளத்தாக்கில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே ஏற்கனவே பலமுறை பார்த்துப் பழகிய காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஒரு அதிரடியான அடக்குமுறையை இந்திய அதிகாரிகள் கட்டவிழ்த்துவிட்டனர். 2000 பேருக்கும் மேலானவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மக்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. ஏராளமான குடும்பங்கள் அவர்களது வாழிடங்களில் இருந்து விரட்டப்பட்டன. பல கிராமங்களுக்கு புல்டோசர்கள் படையெடுத்தன. வெடிகுண்டுகள் வீசப்பட்டன. ஆக, கடந்த காலத்தில் நடத்தப்பட்ட பல அழிவுகளைப் போன்ற மற்றொரு அழிவை நடத்தி, இதனையும் வரலாற்று ஆவணத்தில் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
பயங்கரவாதத் தாக்குதல் எப்போது, எப்படி, என்ன காலவரிசையில் நடைபெற்றது என்பது குறித்தும் சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. அந்த பயங்கரவாதத் தாக்குதலில் எவ்வளவு பேர் ஈடுபட்டார்கள், அவர்கள் யார், அவர்கள் என்ன வழியில் தப்பித்தார்கள் என்பது உள்பட பலவற்றில் இன்னமும் குழப்பமே மிஞ்சுமிறது. அடில் ஹுசைன் தோகார், ஹசிம் மூசா மற்றும் அலி பாய் ஆகிய மூன்று பேரின் பெயர்களை சந்தேகப்படும் நபர்களாக காவல்துறையினர் வரைந்திருக்கின்றனர். ஆனால், இந்திய ஊடகங்களோ, ஆசிஃப் ஷேக், சுலைமான் ஷா, அபு தால்ஹா உள்ளிட்ட பல பெயர்கள் இந்திய உளவுத்துறை வட்டாரத்தில் குறிப்பிடப்படுவதாக அவர்களாகவே செய்தி பரப்புகிறார்கள். ஒரு சில செய்திகளில் மூன்று பேர் தாக்குதலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. வேறு சில செய்திகளிலோ, நான்கு அல்லது ஐந்து பேர் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக எந்த குற்றப்பத்திரிக்கையிலும் எவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை. எந்த ஆதாரங்களும் அதிகாரப்பூர்வமாக பொதுப் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. எதையும் உறுதிசெய்வதற்கான சுயாதீன ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. உண்மைகள் இல்லாத இந்த வெற்றிடத்தை, பொய்களும் வதந்திகளும் ஊகங்களும் நிரப்பியிருக்கின்றன.
அதிகாரப்பூர்வப் பட்டியலில், சந்தேகத்திற்குரிய நபர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தபோதிலும், “பயங்கரவாதிகள்” என்கிற முத்திரை குத்தப்படத் தயாரிக்கப்படும் பட்டியலோ நீண்டிருக்கிறது. இப்படியான ஊகங்களுக்கு நியாயமாக பதிலளிக்க வேண்டிய அரசின் நிலைப்பாடோ கொடூரமாகத்தான் இருக்கிறது. எந்த விசாரணையும் முறையாகத் தொடங்கப்படுவதற்கு முன்னரே, ஒட்டுமொத்த மக்களின் மீதும் பழிவாங்கல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு ‘தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ (டிஆர்எஃப்) என்கிற இயக்கம் பொறுப்பேற்றிருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், அந்த இயக்கமே அதனைப் பின்னர் பொதுவில் மறுத்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், அந்த இயக்கத்தின் இணையதளத்தை இந்திய உளவுத்துறையின் சைபர் பிரிவுதான் ஹேக்செய்து, அந்த இயக்கம் பொறுப்பேற்றிருப்பதாக வதந்தி பரப்பியது என்கிற குற்றச்சாட்டையும் அந்த இயக்கம் தெரிவித்தது. இப்படியாக, இந்த தாக்குதல் குறித்தான மிகமிக அடிப்படையான தகவல்கள் கூட சரிவர கிடைக்காத சூழலில், ஏஐ தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு படங்களை உருவாக்கி, அவற்றை ஆதாரமென்று பெயர்சூட்டி பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஊடகங்களில் அதற்கேற்ற கதைகளை உருவாக்கி, அழிவை நோக்கிய வெறுப்பை ஊடகவியலாளர்கள் பரப்புகின்றனர். உண்மைகளைச் சொல்லாமல் அதிகாரப்பூர்வ அரசு மையம் அமைதி காப்பதால், கட்டுக்கதைகளால் சூழ்ந்த மேகமாக சூழல் மாறிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, எதுவரக்கூடாதோ அது வந்தது. ஆம், புல்டோசர்கள் வந்துசேர்ந்தன.

(2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று, குற்றவாளியாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வடக்கு காஷ்மீரின் பந்திப்பூரில் இருக்கும் ஜமீல் அகமது கோஜ்ரியின் வீட்டை இந்திய இராணுவப் படைகள் இடித்துத் தள்ளிவிட்டன. இடிக்கப்பட்ட தன்னுடைய வீட்டின் மிச்சசொச்சங்களைப் பார்க்கும் ஒரு சிறுவன்)
கற்காலத்திற்கும் இடிபாடிகளுக்கும் மக்களைக் கொண்டுசேர்க்கும் முயற்சியாக புல்டோசர்கள் முடுக்கிவிடப்பட்டன. நீண்ட நெடிய காலமாக அழிவையே காஷ்மீருக்கு தந்துகொண்டிருக்கும் அதே பாணியிலான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பஹல்காம் அடக்குமுறை: குடிமக்கள் மீதான போர்

(தெற்கு காஷ்மீரின் புல்வோமில் உள்ள முர்ரன் பகுதியில் இடித்துத் தள்ளப்பட்ட ஒரு வீட்டின் பொருட்களுக்கு நடுவே ‘பெரன்’ என்கிற ஒரு காஷ்மீர் ஷால் இருக்கிற படம் இது. இன்னும் ஆறே நாட்களில் திருமணம் நடக்கவிருந்த ஹிலால் அகமது தோகர் என்பவரின் வீட்டைத்தான் இந்திய இராணுவப் படைகள் இடித்துத் தள்ளியிருக்கிறது. அவருடைய வீடு மட்டுமல்லாமல், ஏப்ரல் 25 ஆம் தேதியன்று மேலும் பலரின் வீடுகளும் இடிக்கப்பட்டிருக்கின்றன. அதே முர்ரன் சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமே சுமார் 14 வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். போராட்டக் குழுவில் இணைந்திருப்பதாக கூறப்படும் அக்சன் உல் ஹக்கின் குடும்ப வீட்டை இடிப்பதாக சொல்லிக்கொண்டு, மேலும் பல அருகாமை வீடுகளும் இடிக்கப்பட்டிருக்கின்றன. பட உதவி: சைனாப்)
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதிலுமே இந்திய அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. 2000 த்திற்கும் மேற்பட்ட காஷ்மீர் மக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பதிமூன்று வயதுக் குழந்தைகளும் அடக்கம். அவர்கள் எவர்மீதும் முறையான அதிகாப்பூர்வ குற்றச்சாட்டுகள் ஏதும் பதிவுசெய்யப்படாமல் காவல்நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இடிக்கப்படாத வீடுகளில் இருந்தும் மக்கள் குடும்பங்களாக விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் செய்யாத குற்றத்திற்காக, எந்த ஆதாரமும் இல்லாமல், எங்கேயும் நிரூபிக்கப்படாமல், அடி உதைகளுடன் கூடிய தண்டனைகளைப் பெற்றிருக்கின்றனர். தடுப்புக் காவலில் வைப்பது, சித்தரவதை செய்வது, ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பழிவாங்குவது என அரசின் அடக்குமுறை கொடூர உச்சத்திற்கு சென்றிருக்கிறது.
இதுவரையிலும் ஆறு வீடுகளை இடித்துத் தள்ளியிருப்பதாக இந்திய ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது:
- அஹ்சன் உல் ஹக் – முர்ரன், புல்வாமா
- ஹேரிஸ் அகமது – கச்சிப்போரா, புல்வாமா
- ஆசிஃப் ஷேக் – திரால், புல்வாமா
- அடில் தோகர் – பிபேஹாரா, அனந்த்நாக்
- ஜாகிர் அகமது கனி – மதல்ஹாமா, குல்கம்
- ஷாஹித் அகமது குடி – சோட்டிபோரா, ஷோபியன்
ஆனால், பனிரெண்டுக்கும் மேலான வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. அந்த சுற்றுவட்டாரப் பகுதியே இடிக்கப்பட்ட வீடுகளின் கற்களும் குப்பைகளுமாகத்தான் காட்சியளிக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தங்குவதற்கு வேறு மாற்று இடமில்லாமல் தவிக்கின்றனர்.
அதேவேளையில் சட்டத்திற்கு புறம்பான போலி என்கவுண்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அப்பாவி மக்கள் கடத்தப்பட்டு, காவல் தடுப்பில் வைக்கப்பட்டு, பயங்கரவாதத்தை அவர்கள் ஆதரிப்பதாகக் கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டு எவ்வித விசாரணையுமின்றி அப்படியே கொல்லப்படுகிறார்கள்.
யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தண்டை கொடுப்பது, அவர்களது சொத்துக்களை இடித்து அழிப்பது, சட்டத்திற்குப் புறம்பாக என்கவுண்டர் செய்வது போன்றவை எல்லாம் நான்காம் ஜெனிவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரிவு 33இன் படி சட்டவிரோதமாகும். சர்வதே மனிதவுரிமைச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் இவை.
காஷ்மீரில் தற்போது நடத்தப்படுவதெல்லாமே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல. அதற்கு மாறாக, ஒட்டுமொத்த காஷ்மீரையும் முழுவதுமாக ஆக்கிரமிப்பதற்கான திட்டமிட்ட கூட்டு தண்டனை முறையாகும்.
செய்தி வெளியிடுவது தொடங்கி பழிவாங்குவது வரை: போர்க்குற்றங்களை இயல்பாக்குவதில் ஊடகங்களின் பங்கு
மக்களின் வீடுகள் இடிக்கப்படுவதையும் ஏராளமான மக்களை சிறையில் தடுப்புக் காவலில் அடைத்துவைப்பதையும் ஊடகங்கள் தொடர்ந்து சரியென்று செய்திவெளியிடுவதையும், அரசின் நிலைப்பாட்டையே தன்னுடைய நிலைப்பாடாக எப்போதும் தயக்கமின்றி சொல்லிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.


எவ்வித விசாரணைகளும் செய்யப்படாமலும் எவ்வித ஆதாரங்கள் இல்லாமலும், எவ்விதமான சுயாதீன ஆய்வுகளை மேற்கொள்ளாமலும் தனிநபர்களை “பயங்கரவாதிகள்” என்று கொஞ்சமும் தயக்கமின்றி பிரபல ஊடகங்கள் அவ்வப்போது பட்டம் கட்டிவிடுகின்றன. ஒட்டுமொத்த மக்கள் மீது நடத்தப்படுகிற அடக்குமுறைக்கு “பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை” என்று பெயரும் சூட்டிவிடுகின்றன. மக்களுடைய வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கிறபோது, அதனை “தீர்க்கமான நடவடிக்கை” என்று போற்றுவதையும் பார்க்க முடிகிறது. பயங்கரவாத செயல்பாடுகள் நிறைந்த கட்டிடத்தை இடித்துவிட்டதாக பெருமைபொங்க பொய் சொல்வதும் வழக்கமாகி இருக்கிறது. ‘தண்டனைகள் உறுதிசெய்யப்படாத வரையிலும் எவரொருவரும் நிரபராதியே’ என்கிற சட்டத்தின் அடிப்படையையும் வீடுகளை இடிப்பது போல இடித்துத் தள்ளப்பட்டுவிடுகிறது.
இப்படியாக மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளுவதை சட்டப்பூர்வமான நிலைப்பாட்டையும் தார்மீக மீறல்களையும் கேள்வி கேட்பதற்கு பதிலாக, “தேசிய பாதுகாப்பு” என்கிற கண்ணாடியை அணிந்துகொண்டு, பெரும்பாலான ஊடகங்கள் இவற்றை ஆதரிக்கின்றன.
‘வீடுகளை அழிப்பதும் இடித்துத் தள்ளுவதும் சர்வதேச சட்டங்களின்படி தவறு’ என்று சொல்வதற்கு பதிலாக, ஏதோ அவையெல்லாம் அவசியமானதைப் போலவும், செய்தே தீரவேண்டியதைப் போலவும் செய்திகளாக்கப்படுகின்றன. இப்படியாக செய்தி வெளியிடுவதன் மூலமாக, பாதிக்கப்படும் மக்களுக்கான நியாயங்களை எங்கேயும் வெளிப்படுத்த முடியாத சூழல் உருவாகிவிடுகிறது. அவர்களைக் குற்றவாளிகளாக சித்தரிப்பதன் மூலம், குடிமக்களாக சட்டப்பாதுகாப்பைக் கூடக் கோரமுடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.

புல்டோசர் கொண்டு வீடுகளை இடித்துவிட்டு, அந்த இடிபாட்டுப் படங்களையே குற்றங்களின் ஆதாரத்தைப் போல காட்டுகின்றனர். இதன்மூலம், குற்றஞ்சாட்டப்பட்டவர் என்கிற வார்த்தைக்கும் குற்றமிழைத்தவர் என்கிற வார்த்தைக்கும் இடையிலான வேறுபாடே எரிக்கப்பட்டுவிட்டது.
- ஆதன் ஷாரி – வந்தினா, ஷோபியன் மாவட்டம்
- அமிர் நாசிர் – புல்வாமா மாவட்டம்
- ஜமீல் அகமது ஷெர்கோஜ்ரி – பந்திபோரா மாவட்டம்
- ஷாகிது அகமது குட்டே – சோட்டிபுரா கிராமம், ஷோபியம் மாவட்டம்
- ஜாகிர் அகமது கனி – மதல்ஹாமா, குல்கம் மாவட்டம்
- அஹ்சன் உல் ஹக் ஷேக் – முர்ரன், புல்வாமா மவட்டம்
- பரூக் தீவ்டா – கலரோஸ், குப்வாரா
- அடில் ஹுசைன் தோகர் – பிபேஹரா, அனந்த்வாக் மாவட்டம்
- ஆசிப் ஷேக் – திரல் புல்வாமா மாவட்டம்
- ஹேரிஸ் அகமது – கச்சிபோரா, புல்வாமா மாவட்டம்
ஒவ்வொரு பெயரையும் ஆதாரமில்லாமலே குற்றவாளிகள் என்கிற பட்டத்துடன் வெளியிட்டுவிடுகிறார்கள். உண்மை நிலை என்னவென்று கூட விசாரிக்காமல் அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டதை தேசிய பாதுகாப்பிற்காக இடித்ததாக சொல்லப்பட்டுவிடுகின்றது. எவ்வித மனித உரிமைகளும் பின்பற்றப்படவில்லை. அதனால், போர்க் குற்றத்தையும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மைக்கு இச்செய்திகளை வாசிக்கும் மக்கள் தள்ளப்படுகிறார்கள். எந்தத் தொடர்புமில்லாத அப்பாவி மக்களை பஹல்காமில் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கும், விசாரணையோ ஆதாரமோ இல்லாமல் அப்பாவி காஷ்மீர் மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளியவர்களுக்கும் துளியும் வித்தியாசமில்லாமல் போகிறது.
புல்டோசர்களும் நெருப்பும்: இடிப்புகளின் நீண்ட நெடுங்கால வரலாறு:
“ஒரே நிமிடத்தில் ஒரு வீட்டின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. குடியிருப்பவர்களை வெளியேற்றிவிட்டு ஒரு வீட்டை இடித்துத் தள்ளினாலும், அதுவும் ஒரு கொடூரக் கொலைதான்”
– மஹ்மூத் தர்வீஷ்
காஷ்மீரில் போராட்ட இயக்கங்கள் செயல்படத் தொடங்கிய காலத்தில் இருந்தே, மக்களின் சொத்துக்களை அழித்துத் தள்ளுவதன் மூலமாக அம்மக்களின் குரலை ஒடுக்குவதை இந்திய அரசு எப்போதும் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. பெருமளவிலான வீடுகளை ஒரே நேரத்தில் இடித்துத் தள்ளுவது புதிதில்லை என்றாலுமே, 2014 ஆம் ஆண்டில் மோடி அரசு பதவியேற்றதில் இருந்தே, நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கான எண்ணிக்கையிலும் மிகத்துல்லியமான திட்டமிடலுடனும் செயல்பட்டு இடிப்புகளை நடத்திவருவதைப் பார்க்க முடிகிறது. 1990 முதல் 2000 வரையிலும் மக்களுடைய சொத்துகள் இடிக்கப்பட்ட 1983 நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. அவற்றில், சுமார் 14,306 வீடுகளும், கடைகளும், பள்ளிகளும், மருத்துவமனைகளும், பாலங்களுமாக இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. (ஆதாரம்: ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பு, வாஷிங்க்டன் போஸ்ட் 1990)
கடந்த சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு கட்டிடங்களைத் தேர்ந்தெத்து இடிக்கும் செயல்முறைக்கு அரசு நகர்ந்திருக்கிறது. காஷ்மீர் போராட்டக் குழுவைச் சேர்ந்தவராக சந்தேகப்படும் நபர்களின் வீடுகள், அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்துக் குரல் கொடுப்போரின் வீடுகள், அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அமைதியாக ஆதரிக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வீடுகள் என எதிர்ப்புக் குரலை முழுவதுமாக ஒடுக்குவதற்கு புல்டோசர்களைப் பயன்படுத்திவருகிறது இந்திய ஒன்றிய அரசு.
ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களுக்கும் கூட்டு தண்டனையை வழங்குவதே அரசின் குறிக்கோளாக இருக்கிறது. அதிலும், இந்த தேசத்தில் அங்கமாக இருப்பதையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதையுமே கூட குற்றமாக மாற்றும் திட்டம்.
இன்று, புல்டோசர் கொண்டு வீடுகள் இடிப்பதென்பது இருவகையாக நடத்தப்படுகிறது:
- இராணுவ நடவடிக்கைகள்: ஆயுதந்தாங்கிய இராணுவப் படைகள் தாக்குதல்களை நடத்தும்போது, வீடுகளை குண்டுகள் வைத்து வெடித்துச் சிதறடிப்பது அல்லது கொளுத்தி எரியவிடுவது.
- தண்டனையாக இடிப்புகள்: ஒரு குடும்பத்தில் ஒருவர் மீது அரசுக்கு சந்தேகம் இருந்தாலும், அந்த ஒட்டுமொத்த குடும்பத்தையே தண்டனைக்கு உள்ளாக்கும் விதத்தில் அக்குடும்பத்தின் வீட்டை இடித்து, சட்டத்தையே மீறுவது
ஏறத்தாழ அனைத்து நிகழ்விலும், நீதிமன்றத்தின் மேற்பார்வையோ, இடிப்பிற்கான இழப்பீடோ அல்லது அதற்கான முயற்சியோ கூட எதுவுமே இல்லை என்பதுதான் கவலைக்குரிய உண்மை.
இஸ்ரேலிய வழிமுறையைப் பிரதியெடுத்துப் பின்பற்றப்பட்ட புல்டோசர் இடிப்புகள்:
காஷ்மீரில் மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதென்பது, இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கிற பாலஸ்தீன நிலங்களில் இஸ்ரேல் செய்துவரும் அட்டூழியங்களை ஒத்ததாகவே இருக்கிறது. 1945 முதலே இப்படியாக மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் சொத்துக்களை இடிப்பதையும் ஆங்கிலேயர்களின் பழைய காலனியாதிக்க முறைகளைக் காட்டியே நியாயப்படுத்தி வருகிறது இஸ்ரேல். ஆனால், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும் சர்வதேச நீதிமன்றமான ‘தி ஹேக்’ இன் விதிகளும் கூட்டுத் தண்டனைகளை முழுவதுமாக தடை செய்திருக்கின்றன.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக புல்டோசர் கொண்டு வீடுகளை இடிப்பதை “பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்க” என்கிற காரணம் சொல்லி இஸ்ரேலிய உச்சநீதிமன்றம் முழு அனுமதி கொடுத்திருக்கிறது.
அச்சுறுத்தலைத் தடுப்பதாக இஸ்ரேல் கூறுவதென்பது எவ்வகையிலும் சட்டமாகாது. அது சட்டத்தைத் திரித்துத் தனக்கேற்றவாறு தவறாகப் பயன்படுத்துவதே ஆகும். அப்படிச் செய்து, வீடுகளை இடிப்பது, மக்களின் வாழ்க்கையை அழிப்பது, ஒட்டுமொத்த சமூகத்தையே தண்டிப்பது போன்றவற்றை இயல்பான சட்ட வரைமுறையாகவே மாற்றுவது இதன் நோக்கமாகும்.
‘அச்சுறுத்தலைத் தடுக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டு, ஆதாரமில்லாத சந்தேகத்தைக் கூட குற்றமாகப் பார்ப்பது, அரச வன்முறையை இயல்பான நடைமுறையாக்குவது, யாரைக் காப்பாற்றுவதற்காக இதையெல்லாம் செய்வதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களுக்கே நீதி கிடைக்காதவாறு சட்டத்தை முன்னிறுத்துவதே இறுதி நோக்கமாக இருக்கிறது.
யாரும் கேள்விகேட்கமுடியாத நிலையில் செய்துவரும் வன்முறைகளையும், அப்படிச் செய்தவற்றுக்கு எவ்வித தண்டனையையும் பெறாமலும், இஸ்ரேல் நடந்துகொள்ளும் விதத்தினை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பிரதியெடுக்கத் தொடங்கிவிட்டன.
தண்டனையிலிருந்து விலக்கம் பெறும் இப்படியான வழிமுறையானது, இஸ்ரேலைப் பொறுத்தவரையிலும் மிக இயல்பானதாக மாறத் தொடங்கிவிட்டது. அது அங்கிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு பரவும்போது, அங்கெல்லாமும் வீரியம்கொண்டு இயங்கத் தொடங்கி இருக்கிறது. காஷ்மீரில் இதனை இந்தியா அமல்படுத்தியபிறகு, சட்டத்தை மதிக்காமல் அதற்குப் புறம்பாக தண்டனை வழங்குவதும், பாதுகாப்பு எனச்சொல்லி வீடுகளை இடிப்பதையும், மக்களை சமூகமாகவே வீடற்றவர்களாக மாற்றுவதையும் இயல்பாக மாற்றியிருக்கிறது இந்தியா.
இறுதியாக: இடிபாடிகளுக்குப் பின்னுள்ள கதை
காஷ்மீரில் வீடுகள் மட்டுமல்ல, அதன் வரலாறும் தொடர்ந்து அழிக்கப்பட்டு, அம்மக்களை இடிபாடுகளுக்கும் அழிவுகளுக்கும் இடையிலேயே வாழ வைத்திருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். எப்போதும் குண்டுவீச்சுப் புகைக்கும், உடைந்த கண்ணாடிகளுக்கும் நடுவிலே அவர்களை வாழ வைத்திருக்கிறது. ஒவ்வொரு வீடு இடிக்கப்படும்போதும், ஒவ்வொரு குண்டு வீசப்படும்போதும், கட்டிடங்களை மட்டுமல்லாமல் அங்கு வாழும் மக்களின் கனவுகளையும் நினைவுகளையுமே இடித்து தரைமட்டமாக்குகிறது. புல்டோசரின் ஒவ்வொரு கூர் பல்லும், அந்த நிலத்தில் வாழும் குடும்பத்தின் வாழும் உரிமையைப் பறித்து வீசுகிறது. ஆனால், இதற்கெல்லாம் அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்படும் விளக்கங்கள் மட்டும், “இராணுவத் தேவை” “பதில் நடவடிக்கை”, “பாதுகாப்பு நடவடிக்கை” என்பதாக இருக்கின்றன. அவை எப்போதும் மாறுவதில்லை. ஆனால், உண்மை என்பது இந்த புல்டோசர் இடிப்புகளை எல்லாம் விட பழமையானது. ஒரு இடிப்பென்பது, மக்களின் வாழும் உரிமையைப் பறிப்பதே ஆகும். பாலஸ்தீன காஸா முதல் காஷ்மீர் வரையிலும் உலகெங்கிலும் அதிகார ஆதிக்கத்தின் உத்தியாகவே புல்டோசர் இடிப்புகள் மாறியிருக்கின்றன. சர்வாதிகாரத்தின் நவீன வடிவமாக அது உருவெடுத்திருக்கிறது.
“யார் இந்த வீடுகளை இடித்தார்கள்?” என்கிற கேள்வியைத் தாண்டி, “இப்படியாக இடிப்பதால் யார் பலன் அடைகிறார்கள்?” என்கிற கேள்வியை எழுப்ப காஷ்மீர் நிலைமை நம்மைத் தள்ளியிருக்கிறது.
முடிவுறாத தொடர்கதையாக நடந்துகொண்டிருக்கும் இடிப்புகளும், இடிபாடுகளின் குவியலும்:
இது ஒரு முழுமையான ஆவணம் அல்ல. எரிக்கப்பட்டது, தூள்தூளானது, அல்லது மண்ணில் புதைக்கப்பட்டது குறித்த அனைத்து விவரங்களையும் எந்த காப்பகத்தாலும் சேமித்துவிட முடியாது. இங்கு விவரிக்கப்பட்டவை இடிப்புகளால் உருவான சிதைவுகளின் மிகச்சிறிய துண்டுகள் மட்டும்தான். பஹல்காமுக்கு முன்பே தொடங்கி, இன்றைய புல்டோசர்களுக்குப் பிறகும் நீடிக்கும் அதிகார வன்முறையின் அடையாளங்கள். லால் சோக்கை விழுங்கிய தீயிலிருந்து முர்ரான், புல்வாமாவில் இடிந்துகிடக்கும் கற்கள் வரை, காஷ்மீர் மக்களின் வீடுகளை அழிப்பதற்கு புல்டோசர்களையும் மிஞ்சிய வரலாறு உண்டு. மனித மனங்களின் நினைவுகளை அழிப்பதற்காக நடத்தப்படும் ஒரு சடங்கு இது. கட்டிடங்களின் ஒவ்வொரு கல்லை இடித்துக் கீழே விழ வைப்பதுமே, பழைய நினைவுகளை மறக்க வைக்க எடுக்கப்படுகிற முயற்சிதான். அம்மக்களை அவர்களது நிலங்களில் இருந்து விரட்டியடிப்பது மட்டுமல்லாமல், வரலாற்றிலிருந்தே முற்றிலுமாக நீக்கி அழித்துவிடுவதுதான் இதன் முழுமுதற் நோக்கமாக இருக்கிறது.
இருப்பினும், இடிபாடுகளின் நடுவே ஏதோவொன்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அது, மிகப்பிரம்மாண்டமாக இல்லையென்றாலும் எப்போதும் தொடர்கிற போராட்ட உணர்வாக இருக்கிறது. அது, கட்டிடங்களை இடித்தாலும் நினைவுகளை மறக்க மறுக்கிற உறுதியான மனமாக உயிர்ப்புடன் இருக்கிறது. அந்த மனத்திற்கும், உணர்வுக்கும்தான் இந்தியர்களாகிய நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆதிக்க அதிகார வர்க்கத்துடன் இல்லை என்பதை எப்போதும் நாம் நினைவில் வைப்போமாக.
Sources:
Al Jazeera, ThePrint, Scroll.in, IndiaSpend, JKCCS Reports, Washington Post, Anadolu Agency, Eyewitness Testimonies, Mahmoud Darwish (Memory for Forgetfulness; On This Earth).
கட்டுரை ஆசிரியர்: சுசித்ரா விஜயன் (நடுநிசி எல்லைகள், இன்னும் எத்தனை காலத்திற்கு நிலவை சிறையில் அடைத்து வைக்க முடியும் – ஆகிய நூல்களை எழுதியவர்)
தமிழில்: இ.பா.சிந்தன்
இஸ்ரேல் தொடங்கி இந்தியா வரைக்கும் புல்டோசர் இடிப்பு வரலாறு மிகவும் கொடூரமாக இருக்கிறது. இவர்கள் போகும் போக்கை பார்த்தால் மனிதன் ஆதிகாலத்தில் ஆடையின்றி குகைகளில் வாழ்ந்த வாழ்க்கையை நோக்கி தள்ளுவது போலவே உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஓரிடத்தில் தங்காமல் நாடோடியாகவே வாழ்ந்தவர்களின் சிந்தனை போலவே தெரிகிறது. போர் என்பது பிற நாட்டின் மீது தொடுப்பது. ஆனால் சொந்த மக்களையே அழித்தொழிப்பதற்கு அதை வெளியே சொல்லாமல் மூடி மறைக்கும் கொடூரம் ஹிட்லர் முதல் இஸ்ரேலிய நெதன்யாகு வழியாக இந்திய எல்லை வரை கொடூர வெறியர்கள் ஊடுருவி இருப்பது போலவே தோன்றுகிறது. இவர்களை இனியும் மக்கள் விரட்டவில்லை என்றால் பிறகு இந்திய மக்கள் முழுவதும் அடிமை வாழ்வையே வாழ வேண்டியருக்கும். உ. பி போல் ஏன் அதை விட அதிக கொடூரம் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் பேரழிவை ஊடகங்கள் என்கிற பெயரில் இருக்கும் கார்பரேட் ஊதுகுழல்கள் வெளியே சொல்லாமல் இருப்பது கேடுகெட்ட அயோக்கியத்தனமின்றி வேறில்லை. அய்யோ நெஞ்சம் பதறுகிறதே😡😡😡.
இவ்வளவு கொடூரத்தை தோலுரித்துக் காட்டிய சுசித்ரா அவர்களுக்கும், தமிழில் மொழிப்பெயர்த்துக் கொடுத்த இ. பா. சிந்தன் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏