தென்னாப்பிரிக்காவின் தென்கோடியில், தங்கமென மலர்ந்த இனம், பசுமையால் புனைந்த வனம், காற்றின் அலைகளும், களிறுபோல் விரிந்து பரந்த மலைச்சரிவுகளும், மண் வாசனையால் நெஞ்சைத் துளைக்கும் பசுமை மலைகளின் வாசல் வழியாகப் பளிங்குப் போல ஓடும் சுனைகளோடும், வானளாவும் மரங்களின் நிழலோடும் வாழும் பழங்குடியாம் ஜூலு!
ஆளுமைத் தன்மைக்கும் பாரம்பரியத்திற்கும் அச்சாரமாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை முறையை எழுதிடப் பேரவா…
ஜூலு பழங்குடி அறிமுகம்:
ஜூலு பழங்குடி என்பது தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பழங்குடிகளில் ஒன்றாகும். ஜூலு மக்கள், நுகுனி (Nguni) இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முதலில் மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குப் பாண்டு குடியேற்றக் (கி.மு. 2000–கி.பி. 500) காலத்தில் குடிபெயர்ந்தனர். அவர்கள் தெற்குப் பாண்டுவின் ஒரு கிளையினர். அத்துடன், ஸ்வாசி (Swazi), சோசா (Xhosa) ஆகியோருடனும் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
முதன்மையாகக் குவாசுலு-நடால் மாகாணத்தில் வசித்தாலும், கவுதெங் (Gauteng), ம்புமலங்கா (Mpumalanga), கிழக்கு கேப் போன்ற பிற பகுதிகளிலும் சிறிய அளவில் பரவிக் காணப்படுகின்றனர். 2024ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ஜூலு இன மக்கள் சுமார் 1.1 கோடி (11 மில்லியன்) பேர் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது; இது தென்னாப்பிரிக்க மக்கள்தொகையில் ஏறத்தாழ 19% ஆகும். இவர்கள் நெடுங்காலப் பாரம்பரியத்துடனும் வீரத்துடனும் அறியப்பட்டவர்கள். தங்களை “வானத்தின் மக்கள்” என்றழைத்துக் கொள்வதில் மிகுந்த கர்வம் கொள்வர்.
ஜூலு இன மக்களின் வரலாறு:
ஜூலு பழங்குடியினர் முதலில் சிறிய இனக்குழுக்களாகவே இருந்தனர். ஆனால், 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், அவர்கள் வலுப்பெற்றனர். இந்த வலிமைக்குப் பின்புலமாக இருந்தவர் ஷாகா ஜூலு (Shaka Zulu, 1787–1828). அவரது தந்தை சென்சங்ககோனா (Senzangakhona) இறந்த பிறகு, 1816-இல், ஷாகா 1,500 பேர் கொண்ட ஜூலுப் படையை வழிநடத்தத் தொடங்கினார். அவரது ஆட்சியில் 50,000 பேர் கொண்ட ஒரு பெரும் படை உருவானது. அவர் உருவாக்கிய ‘இக்வா’ (Iklwa) என்ற குறுகிய, கூர்மையான குத்தீட்டம் (short stabbing spear) வலிமையான அமைப்பைக் கொண்டிருந்தது. போர்க்களத்தில் இவர் கையாண்ட படை வியூகங்கள் அவரை ஒரு வலிமை வாய்ந்த தலைவராகப் பறைசாற்றின.
ஷாகா ஜூலு ஒரு தீவிரமான போர்த் தந்திர நிபுணர். இவர் தனது சிறு சமூகத்தை மிகப்பெரிய மற்றும் அச்சுறுத்தும் இராணுவ சக்தியாக மாற்றினார். அவர் “காளைக்கொம்பு வியூகம்” (Bull Horn formation) போன்ற புதிய போர் உத்திகளை உருவாக்கி, இராணுவத்தில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வீரர்களுக்கான கடுமையான பயிற்சியையும் அறிமுகப்படுத்தினார். சிறிய இனக்குழுக்களைப் படிப்படியாக வென்று, ஜூலு பேரரசை (1816–1897) நிறுவினார். ஷாகாவின் ஆட்சிக்காலத்தில், பல வேறுபட்ட இனக்குழுக்கள் இடம்பெயர்தல், போர், பலவீனம் ஆகியவற்றால் பெரும் சிக்கல்களைச் சந்தித்தன.
இந்தக் காலகட்டம் “ம்ஃபெகானே” (Mfecane, 1815–1840, பாண்டு மொழியில் “அழிப்பு” அல்லது “சிதறல்”) என அழைக்கப்படுகிறது. இத்தகைய இரும்பு மனிதர், தனது சகோதரர்களால் 1828-இல் கொல்லப்பட்டார். டிங்கான் (Dingane, 1795–1840) என்ற அவரது சகோதரர் ஆட்சியைத் தொடர்ந்தாலும், அவர் திறமையற்றவராக இருந்தார். அதன்பிறகு, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தென்னாப்பிரிக்காவில் விரிவடைய, ஜூலு பேரரசுக்கும் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கும் இடையே ஆங்கிலோ-ஜூலு போர் (Anglo-Zulu War, 1879) நடந்தது. இந்தப் போரில் ஜூலுக்கள் இசாந்த்லவானா (Isandlwana) போரில் பிரிட்டிஷாரைத் தோற்கடித்தாலும், உலுண்டி (Ulundi) போரில் தோல்வியடைந்தனர். இறுதியில், 1897-இல், ஜூலு பேரரசு முற்றிலுமாக வீழ்ந்தது.
ஜூலுவின் சமூகக் கட்டமைப்பு:
ஜூலு சமூக அமைப்பு பல படிநிலைகளைக் கொண்டது. இவர்களின் சமூக அமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும், மரபுசார்ந்ததாகவும், தென்னாப்பிரிக்காவின் பழங்குடிச் சட்டத்தின்படி (Recognition of Customary Marriages Act, 1998) மதிக்கப்படும் ஒன்றாகவும் உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பங்கு உண்டு.
குடும்ப அமைப்பு:
குடும்பம் (Umndeni) என்பது சமூகத்தின் அடிப்படை அலகாகும். இது தந்தைவழிச் சமூக முறையாகும் (Patrilineal system); அதாவது, குடும்ப வம்சம் தந்தையின் வழியாகத் தொடரும். தந்தை (Ubaba) குடும்பத் தலைவர்; அவர் அனைவருக்கும் தலைவராகவும் தீர்ப்பளிப்பவராகவும் இருப்பார். இவர்கள் “கிளான்” (Isibongo) எனும் குல அமைப்பில் வாழ்கின்றனர். ஒரு கிளான் என்பது ஒரே முன்னோரைப் பகிர்ந்துகொள்ளும் மக்களைக் குறிக்கும். ஒவ்வொரு கிளானுக்கும் ஒரு பெயர் இருக்கும்; இது பெரும்பாலும் முன்னோரின் பெயரைக் குறிக்கும். ஒரே கிளானைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்துகொள்ளக்கூடாது (இது தடைசெய்யப்பட்டு மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது). இதேபோன்ற அமைப்பு முறை தமிழ்நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களிடமும் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
தலைமை மற்றும் அரசியல் அமைப்பு:
ராஜா – இங்கோஸி (Inkosi / King)
ஜூலு சமூகத்தின் முக்கியத் தலைவராக “இங்கோஸி என்குலு” (Inkosi Enkhulu) எனப்படும் ராஜா இருக்கிறார். இவர் ஒரு பேரரசரைப்போல், அனைத்துக் கிளான்களையும் மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் அதிகாரத்தை வகிக்கிறார். இவர் அரசியல், போர், சமய நிகழ்வுகள், நீதித்துறை உள்ளிட்ட பல அம்சங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர். இவரது அதிகாரம், தந்தைக்குப் பின் மூத்த மகன் (Primogeniture) என்ற வாரிசுரிமை முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போதைய ஜூலு ராஜா மிஸுசுலு காஸ்வெலித்தினி (Misuzulu kaZwelithini, பிறப்பு: 1974) ஆவார்.
கிளான் தலைவர்கள் (குலத்தலைவர்கள்):
ஒவ்வொரு கிளானுக்கும் (குலக்குழு) ஒரு தலைவர் இருப்பார். இவர்களும் இங்கோஸி (Inkosi) என்றே அழைக்கப்படுவர் (ஆனால் பேரரசருக்குக் கீழ்ப்படிபவர்கள்). இவர்கள் தங்கள் கிளானுக்குள் உள்ள பிரச்சனைகள், திருமண விவகாரங்கள், சொத்துப் பிரிவினைகள் போன்றவற்றைத் தீர்க்கும் பொறுப்பில் இருப்பர்.
ஆலோசகர் – இந்துனா (Induna):
இவர்கள் அரசர் அல்லது கிளான் தலைவருக்கான ஆலோசகர்களாகவும் தூதர்களாகவும் செயல்படுவர். சமூக நிகழ்வுகள், விவாதங்கள், தீர்ப்பு வழங்கல் போன்றவற்றில் இந்துனாக்கள் மக்களுக்கும் அரசர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவார்கள். சில நேரங்களில் இவர்கள் சிறிய பகுதிகளை நிர்வகிக்கவும் அதிகாரம் பெற்றிருப்பர்.
நீதித் தீர்ப்பு முறைகள்:
நீதியும் அரசாட்சியும் மரபுகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு தேவையெனில், மக்கள் முதலில் தங்கள் கிளான் தலைவர் அல்லது இந்துனாவை அணுகுவார்கள். கடுமையான வழக்குகளும் உயர்நிலைக் குற்றங்களும் இங்கோஸி என்குலு (பேரரசர்) வரை எடுத்துச் செல்லப்படும்.
ஜூலு சமூகத்தில், 80% வழக்குகள் கிளான் தலைவர்களால் தீர்க்கப்படுகின்றன; மேலும், 15% மட்டுமே ராஜாவின் நீதிமன்றத்தை அடைகின்றன (தென்னாப்பிரிக்க மானுடவியல் ஆய்வுகள், 2020).
இராணுவ அமைப்பு:
ராஜா அல்லது தலைவர்கள், போர் நேரங்களில் இராணுவங்களை வழிநடத்துவார்கள். “இம்பி” எனப்படும் போராளிகள் குழுவினர் இருந்தனர். போராளிகள் வயது அடிப்படையில் பிரிக்கப்படுவர்; மேலும், ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர்கள் (இந்துனா) நியமிக்கப்படுவார்கள். ஷாகா ஜூலுவின் ஆட்சிக் காலத்தில், இந்த இராணுவ அமைப்பு மிகுந்த ஒழுக்கத்துடன் செயல்பட்டது.
ஷாகா ஜூலுவின் இராணுவம் 50,000 வீரர்களைக் கொண்டிருந்தது; இது 19ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய படையாகக் கருதப்பட்டது (பிரிட்டிஷ் இராணுவ ஆவணங்கள், 1824).
மூத்தோர் சபை (ஆலோசனை சபை):
சில முக்கியத் தீர்வுகள், நம்பிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மூத்தோர் சபையில் விவாதிக்கப்படும். ராஜா அல்லது இங்கோஸி, மூத்த ஆலோசகர்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்பார். இங்கு ராஜா முதல் குடிமக்கள் வரை ஒவ்வொருவருக்கும் தங்கள் பங்கு, பொறுப்பு, மரியாதை என்ற மூன்றும் மிக முக்கியமானவை. இது இன்றுவரை ஜூலு சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்டும் முக்கியக் காரணமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.
ஜூலு மூத்தோர் சபையில் 12-15 உறுப்பினர்கள் இருப்பர்; இவர்களில் 30% பெண்கள் பங்கேற்கின்றனர் (தென்னாப்பிரிக்கப் பாரம்பரியச் சட்டம், 2018).
உணவுப் பழக்கங்களும் வாழ்க்கை முறையும்:
முக்கியமாக அரிசி மற்றும் சோள மாவால் தயாரிக்கப்படும் ‘புடு’ (Phutu) என்ற உணவை உட்கொள்கிறார்கள். இது நம்மூர் உப்புமாவைப் போல இருக்கும். அதேபோல், ‘அமர்ஹியு’ (Amarhewu) என்ற புளித்த சோளப் பானத்தையும் அருந்துவர்.
புட்டுவில் 70% கார்போஹைட்ரேட்டும் 15% புரதமும் உள்ளது; இது விவசாயிகளுக்கு ஆற்றலைத் தரும் (உலக சுகாதார அமைப்பு, 2021).
மாமிச உணவுகளாக கோழி, மாடு, ஆடு ஆகியவற்றின் இறைச்சி முக்கியமாக உண்ணப்படுகின்றது. பெரிய விழாக்களின்போது மட்டும் மாடு அல்லது ஆடு பலியிடப்பட்டு மாமிசம் தயாரிக்கப்படுகிறது.
ஒரு ஜூலு குடும்பம் ஆண்டுக்குச் சராசரியாக 2 மாடுகளைப் பலியிடுகிறது (தென்னாப்பிரிக்க வேளாண்மை அறிக்கை, 2019).
இவர்கள் அசைவ விரும்பிகள் மட்டும்தானா? அதுதான் இல்லை. சைவப் பிரியர்களும்தான்! இயற்கையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கிழங்குகள், அவரை வகைக் காய்கள், கிழங்கு வகைகள், பச்சிலைகள் போன்றவற்றையும், பசு மாட்டுப் பால், தயிர் போன்றவற்றையும் அன்றாட உணவின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளனர்.
வசிக்கும் இடம்:
மரமும் புல்லும் பயன்படுத்திக் கட்டப்பட்ட ‘தேன்கூடு குடில்கள்’ (Beehive huts) என்ற சுற்று வடிவக் கூடுகள் போன்ற வீடுகளில் வாழ்கின்றனர்.
இந்தக் குடில்கள் 5-7 மீட்டர் விட்டம் கொண்டவை; மேலும், 100 ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கக்கூடியவை (தென்னாப்பிரிக்கக் கட்டிடக்கலை ஆய்வு, 2017).
சிறு வயதில் கால்நடைகளை மேய்ப்பர். வயது வந்தவுடன் இராணுவப் பயிற்சியிலும் சமூகப் பாதுகாப்பிலும் ஈடுபடுவர். தற்போது சிலர் நகரப் பகுதிகளில் வேலைக்குச் செல்வது அதிகரித்துள்ளது.
45% ஜூலு இளைஞர்கள் இப்போது நகர்ப்புறங்களில் வேலை செய்கின்றனர் (தென்னாப்பிரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2022).
இவர்கள் அணியும் பாரம்பரிய ஆடைகள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, ஆண்கள் தோல் ஆடைகளை அணிகின்றனர். ஜூலு ஆண்கள் தங்கள் தோல் ஆடைகளை விற்பதற்குத் தடை உள்ளது; இது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் சட்டம் (குவாசுலு-நடால் மாகாணச் சட்டம், 2015).
பெண்கள் மணிமாலை, வண்ணமிகு ஆடைகள் அணிவது வழக்கம். சமூக வழிபாடுகள், சடங்குகள், கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றில் பெண்கள் ஆடல் பாடல் மூலம் பங்கேற்பது வழக்கமாக இருந்தாலும், வீட்டு வேலைகள், உணவு தயாரித்தல், குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றிலும் ஈடுபடுவர். வயதில் மூத்த பெண்கள் சமூக ஆலோசனைகளிலும் மதிப்பிற்குரியவர்களாக விளங்குகின்றனர்.
திருமண அமைப்பு:
திருமணம் என்பது குடும்பங்கள், கிளான்கள் மற்றும் சமூக உறவுகளை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை வீட்டார், மணமகளின் குடும்பத்திற்கு மாடுகளையோ அல்லது பொருளாதார மதிப்பிலான பரிசையோ அளிக்க வேண்டும். லோபோலோ (மணப்பரிசு) முறைப்படி, சட்டப்படி 11 மாடுகள் அல்லது அதற்கு இணையான பணம் செலுத்த வேண்டும் (தென்னாப்பிரிக்கத் திருமணச் சட்டம், 1998).
இது மணமகளின் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் ஒரு வழியாகவும் சமூக ஒப்பந்தமாகவும் கருதப்படுகிறது. திருமண விழா ஒரு பெரும் சமூக நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. பாட்டும், நடனமும், பாரம்பரிய உடைகளும், உணவுகளும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மணமக்கள் சிறப்பு ஆடை அணிவர்; குறிப்பாக, மணமகள் நகை அணிவதும் தலைமுடி அலங்காரம் செய்வதும் நாகரிகத்தின் உச்சமென எண்ணுவர்.
ஒரு ஜூலு திருமண விழாவிற்குச் சராசரியாக 3,000–5,000 ராண்டுகள் (தென்னாப்பிரிக்க நாணயம்) செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது (தென்னாப்பிரிக்கக் கலாச்சார ஆய்வு, 2021).
திருமணம் என்பது இரு குடும்பங்களையும் சமூக ரீதியாக இணைக்கும் ஓர் உறவாகப் பார்க்கப்படுகிறது. திருமண உறவுகள் மூலம் கிளான்களும் குடும்பங்களும் ஒன்றிணைவதும், திருமண முறைகள் பாரம்பரியத்தை மதித்து, குடும்ப உறவுகளை வலுப்படுத்தி, சமூக ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும் அமைந்துள்ளன.
ஜூலு மக்கள் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய இனக்குழுவினர் ஆவர். இவர்களின் மொழியான இசிசூலுவை (isiZulu) 12 மில்லியன் மக்கள் பேசுகின்றனர் (உலக மொழிக் கணக்கெடுப்பு, 2023).
பண்பாட்டு ஒழுக்கநெறி:
இந்த மக்களின் பண்பாட்டு ஒழுக்கநெறியானது, தங்கள் மரபுகளை மதித்தல், மற்றவர்களுக்கு மரியாதை செய்தல், சமுதாய ஒற்றுமையைப் பராமரித்தல் என்பனவற்றில் வெளிப்படுகிறது. ஒவ்வொரு செயலும் ஓர் ஆழ்ந்த வாழ்க்கை தத்துவத்தையும் ஆன்மிக உணர்வுகளையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜூலு சமூகத்தில் 92% மக்கள் தங்கள் பாரம்பரிய மரபுகளை இன்றும் பின்பற்றுகின்றனர் (தென்னாப்பிரிக்கக் கலாச்சார ஆய்வு, 2023).
மூத்தவர்கள் அனைவரும் இவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்கள். அவர்களிடம் பேசும்போது வாய்மொழியாலும் உடல்மொழியாலும் பணிவுடன் நடந்துகொள்வது அவசியம். கைகளைக் கூப்பி வணங்குவது மரியாதையின் ஒரு வடிவம்.
ஜூலுப் பொதுச் சட்டத்தின்படி, மூத்தவரை மதிக்காதவர் குழுவிலிருந்து வெளியேற்றப்படலாம் (குவாசுலு-நடால் மாகாணச் சட்டம், 2008).
யாரையும் நேரடியாக “நீ” என்று அழைப்பது தவிர்க்கப்படுகிறது. பெயரை மரியாதையுடன் சேர்த்தே அழைப்பது வழக்கம். “சவுபோனா” (Sawubona – வணக்கம்) என்ற சொல்லை அனைவரிடமும் பயன்படுத்திப் பேச்சைத் துவங்க வேண்டும். ஒருவருடன் பேசி முடித்தவுடன் “கியபோங்கா” (Ngiyabonga – நன்றி) எனச் சொல்ல வேண்டும்.
“சவுபோனா” என்பதன் நேரடிப் பொருள் “நான் உன்னைப் பார்க்கிறேன்” என்பதாகும்; இது ஆழமான மனிதத் தொடர்பை வெளிப்படுத்துகிறது (ஆப்பிரிக்க மொழியியல் ஆய்வு, 2020).
முதலில் மூத்தோருக்கே உணவு பரிமாற வேண்டும். உணவைப் பகிர்வது ஒற்றுமைக்கும் மரியாதைக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
ஜூலு குடும்பங்களில் 78% பேர் ஒரே பாத்திரத்திலிருந்து உண்ணும் பழக்கத்தை இன்னும் பின்பற்றுகின்றனர் (யுனெஸ்கோ கலாச்சார அறிக்கை, 2021).
அமாசி போன்ற பானங்களைக் குடும்பத்தினருடன் மட்டுமே பகிர வேண்டும்; ஏனெனில், அது மரபுப் பெருமையாகும். மற்றவர் வீட்டில் நுழைவதற்கு முன் அனுமதி கோர வேண்டும். மற்றவர் உடமைகளைத் தொடும் முன் அவர்களின் அனுமதியைப் பெறுவது அடிப்படை விதி என்பர். அனுமதியின்றிப் பிறர் வீட்டில் நுழைவது 50 ராண்ட் அபராதத்திற்குரிய குற்றமாகும் (ஜூலு பழங்குடிச் சட்டம், 1996).
பண்டிகைகள், வழிபாடுகள், ஊர்வலங்கள் போன்ற நிகழ்வுகளில் மன்னிப்பும் நன்றியும் முக்கியமானவை. பீர், விலங்கு பலி போன்றவை வழிபாட்டில் பயன்படுத்தப்படும். இது நம்ம ஊர் கருப்பசாமிக்குப் படையலிடுவது போன்றதாகும். இதில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு 12 முக்கிய விழாக்களில் விலங்கு பலி கொடுக்கப்படுகிறது; இதில் 60% ஆடுகள் பயன்படுத்தப்படுகின்றன (தென்னாப்பிரிக்க மானுடவியல் ஆய்விதழ், 2022). விருந்தினர் வந்தால், அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று, சிறப்பு உணவளித்து, இடமளிப்பது அடிப்படையான கடமையாகக் கருதுவர்.
ஒரு ஜூலு குடும்பம் தங்கள் வருமானத்தில் 15% விருந்தோம்பலுக்காக ஒதுக்குகிறது (தென்னாப்பிரிக்கச் சமூக ஆய்வு, 2019). சங்கோமா (Sangoma) என்ற பாரம்பரிய வைத்தியர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தை வகிக்கின்றனர். அவர்கள் நோய்கள், தீய சக்திகள் போன்றவற்றிலிருந்து விடுதலையும், முன்னோர் வழிகாட்டுதல்கள் குறித்த தீர்வுகளையும் வழங்குகின்றனர். தென்னாப்பிரிக்காவில் 40% மக்கள் இன்னும் சங்கோமா மருத்துவத்தை நம்புகின்றனர் (உலக சுகாதார அமைப்பு, 2023).
“உபுண்டு” (Ubuntu) – “நான் இருக்கிறேன், ஏனெனில் நாம் இருக்கிறோம்” – என்ற வாழ்க்கைநிலையைக் கொண்டுள்ளதால்தான் என்னவோ, இந்தச் சமூகம் ஒற்றுமையின் அடிப்படை அழகு மாறாமல் இருக்கிறது.
உபுண்டு தத்துவம் 2011-இல் ஐக்கிய நாடுகள் சபையால் உலக அமைதிக்கான தத்துவமாக அங்கீகரிக்கப்பட்டது (UNESCO, 2011).
பாரம்பரியத்தையும் நவீன கலாச்சாரத்தையும் ஏற்கும் போது எதிர்கொள்ளும் சவால்கள்:
நவீனத் தொழில்நுட்பங்களும் கலாச்சாரங்களும் பரவியதைத் தொடர்ந்து, பழங்குடியினரின் பாரம்பரியக் கலைகள், உடைகள், மரபுகள் மற்றும் வாழ்க்கைமுறைகள் மறைவடையத் தொடங்குகின்றன. இளம் தலைமுறை புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதால், பழைய மரபுகள் புறக்கணிக்கப்படுகின்றன. 18-35 வயது ஜூலு இளைஞர்களில் 65% பேர் நகர்ப்புற வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கின்றனர் (தென்னாப்பிரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2023).
மொழிப் பயன்பாடு குறைதல்:
ஜூலு மொழி பழங்குடியினரின் அடையாளமாக இருந்தாலும், இன்றைய தலைமுறையினர் ஆங்கிலம் மற்றும் பிற நவீன மொழிகளையே அதிகமாகப் பேசுகின்றனர். இதனால், தாய்மொழியின் பயன்பாடு குறைந்து, அது முழுமையாக மறைந்துவிடும் ஆபத்துள்ளது.
1996-இல் 95% ஆக இருந்த ஜூலு மொழி பேசுவோரின் எண்ணிக்கை, 2023-இல் 78% ஆகக் குறைந்துள்ளது (தென்னாப்பிரிக்க மொழிக் கணக்கெடுப்பு, 2023).
கல்வி மற்றும் அறிவுசார் நிலையில் பின்னடைவு:
நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான அறிமுகமும் பயிற்சியும் குறைவாக உள்ளதால், இம்மக்கள் நவீன சூழலைப் புரிந்துகொள்வதில் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களில் பின்னடைவு ஏற்படுகிறது.
ஜூலு சமூகத்தில் உயர்கல்வி பெறுவோர் விகிதம் 22% மட்டுமே; இது தேசிய சராசரியான 45%ஐ விடக் குறைவு (தென்னாப்பிரிக்கக் கல்வி அமைச்சகம், 2023). ஜூலு பாரம்பரியத்தைப் பாதுகாக்க 2020-இல் 50 மில்லியன் ராண்ட் நிதி ஒதுக்கப்பட்டது (தென்னாப்பிரிக்கக் கலாச்சார அமைச்சகம்).
வாழ்வாதார மாற்றம்:
முன்பு கால்நடை வளர்ப்பு, வேட்டை, மற்றும் இயற்கை வளம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மக்கள், இப்போது தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளுக்குத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. இது பலருக்கு வாழ்வாதாரத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, உலகளவில் 2023-இல் 40% பழங்குடியினர் தொழில்நுட்பத் திறன்கள் இல்லாமையால் வேலையின்மையை எதிர்கொண்டனர் (ஐ.நா. வளர்ச்சித் திட்டம்).
அடையாளக் குழப்பம்:
நவீன கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறை இரண்டிற்கும் மத்தியில் சிலர் மனதளவில் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். “நாம் யார்?” என்ற அடையாளம் குறித்த கேள்விகள் எழுவதால், கலாச்சார மாறுதல்கள் மனரீதியான பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.
ஆஸ்திரேலியாவில் 2019-இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 65% பழங்குடி இளைஞர்கள் கலாச்சார அடையாள இழப்பால் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகத் தெரிவித்தனர்.
தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கும் ஜூலு சமூகத்திற்கும் இடையிலான முரண்பாடுகள்:
தற்போது, தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கும் ஜூலு சமூகத்திற்கும் இடையில் சில முக்கியமான முரண்பாடுகள் நிலவுகின்றன. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி (1948–1994) நடைமுறையில் இருந்த காலத்தில், அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்களில் ஜூலு மக்கள் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.
இந்தக் காலகட்டத்தில், 20,000-க்கும் மேற்பட்ட ஜூலு மக்கள் இனப்பாகுபாட்டுக் கொடுமைகளால் உயிரிழந்தனர்.
இன்காதா சுதந்திரக் கட்சி (IFP) என்ற கட்சி, ஜூலு சமூக உரிமைகள் மற்றும் மொழிப் பாதுகாப்பிற்காக 1975-இல் தொடங்கப்பட்டது. இதன் தலைவர் மங்கோசுத்து புதெலேசி, நிறவெறி ஆட்சியை (Apartheid) எதிர்த்த ஒரு முக்கியமான தலைவர் ஆவார். அவர் 1994-இல் நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில், நெல்சன் மண்டேலாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்றார்.
ஜூலு மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களைத் திரும்பப் பெற, நில உரிமை மன்றம் போன்ற சட்ட வழிகளில் போராடி வருகின்றனர். 2022-இல் தென்னாப்பிரிக்காவில் 30% நில உரிமை கோரிக்கைகள் ஜூலு மக்களால் முன்வைக்கப்பட்டன.
ஜூலு மக்களும் சமூக அமைப்புகளும், தங்கள் பாரம்பரிய நில உரிமைகளைச் சட்ட ரீதியாகப் பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். இருப்பினும், ஜூலு சமூகத்தில் பாரம்பரியத் தலைமைக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையே மோதல் காணப்படுகிறது. முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, பாரம்பரியத் தலைமை மற்றும் சமூக ஆதரவைப் பயன்படுத்தி, அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தார். இது, அரசாங்கத்தின் அதிகாரத்துடன் நேரடி மோதலை ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக, 2023ஆம் ஆண்டு டிசம்பரில், அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கினார். இந்தக் கட்சி, 2024 பொதுத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. ஜூமாவின் இந்த நடவடிக்கை, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் எம்கே என்கிற கட்சி ஆகியவற்றுக்கிடையே கடும் அரசியல் போட்டியை உருவாக்கியது. ஜூமா, ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, தற்போதைய அதிபர் சிரில் ரமபோசாவின் தலைமையை எதிர்த்தார்.
ஜூலு பழங்குடியினர், தங்கள் பாரம்பரியம், உரிமைகள் மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்கள் நிலம், மொழி, பண்பாடு மற்றும் அரசியல் உரிமைகளை மீட்டெடுக்கக் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், இந்த நவீன உலகில் அவர்களின் போராட்டம் என்பது வெறும் எதிர்ப்பு மட்டுமல்ல; மாறாக, அது ஒரு உணர்வுப் போராட்டம், ஒரு அடையாளக் காப்பாற்றல், மற்றும் நீதி கேட்கும் குரல் ஆகும்.
தற்போதைய தென்னாப்பிரிக்க அரசாங்கம், ஜூலு சமூகத்துடனான முரண்பாடுகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் அரசியல் மற்றும் பாரம்பரிய உரிமைகளைக் காக்க முன்வர வேண்டும். ஏனெனில், பழங்குடிகள்தாம் இயற்கையின் மொழியைப் புரிந்துகொள்ளும் மழலைகள் ஆவர்.
– தீபா ஜெயபாலன்
(தொடரும்…)
மிக அருமையான தகவல்கள் அடங்கிய சுவாரசியமான கட்டுரை.
உபுண்டு கான்செப்ட் ஏற்கெனவே கேள்விப்பட்டு இருக்கிறேன் மற்ற அனைத்து விஷயங்களும் புதியவை!!!!
பழங்குடிகளை பற்றி படிக்கும்போது வியப்பாக
உள்ளது, அருமையான தகவல்கள், கட்டுரையாளருக்கு வாழ்த்துகள் 😍💐